நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவனே நல்வழி காட்டுவாயாக!
பெருமானார் அவர்கள், தளபதியாக காலிதை முதல் பகுதி சேனையுடன் தாயிபுக்கு அனுப்பியிருந்தார்கள். பெருமானார் அவர்கள் அங்கு வந்ததும் கோட்டையை முற்றுகையிடத் தொடங்கினார்கள்.
கோட்டையைத் தாக்கக் கூடிய கருவிகளை முஸ்லிம்கள் உபயோகித்தார்கள். ஆனால், கோட்டையில் இருந்தவர்கள் நெருப்பில் காய வைத்த இரும்புக் கம்பிகளை முஸ்லிம்கள் மீது எய்து கொண்டிருந்தார்கள். அதனால் முஸ்லிம்கள் பின் வாங்கும்படி நேரிட்டது. முஸ்லிம்களில் பலர் காயப்பட்டார்கள். முற்றுகை இருபது நாள் வரை நீடித்தது.
தாயிப் நகரத்தை வெற்றி கொள்ள இயலவில்லை. நெளபல் என்பவரை அழைத்துப் பெருமானார் அவர்கள் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கையைப் பற்றி ஆலோசித்தார்கள்.
“குள்ள நரியானது அதனுடைய குழிக்குள்ளே நுழைந்து கொண்டது. முயற்சி எடுத்தால், அதைப் பிடித்துவிடலாம். விட்டு விட்டாலும் அதனால் பாதகம் இல்லை” என்றார் நெளபல்.
அந்நியர்களின் தீங்கிலிருந்து இஸ்லாத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே பெருமானார் அவர்களின் நோக்கம். ஆகையால் முற்றுகையை நீக்கித் திரும்பி விட்டார்கள்.
திரும்பும் போது, தகீப் கூட்டத்தாரைப் பெருமானார் அவர்கள் சபிக்க வேண்டும் என்பதாக முஸ்லிம்களில் சிலர் வேண்டிக் கொண்டார்கள்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன், அதே இடத்தில்தான் பெருமானார் அவர்களை, தாயிப்வாசிகள் கல்லால் அடித்துக் காயம் உண்டாகச் செய்தார்கள்.
இப்பொழுது அவர்களைச் சபிக்கும்படி வேண்டிக் கொண்ட போது, பெருமானார் அவர்கள், “ஆண்டவனே, தகீப் கூட்டத்தாருக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! அவர்களை என்னிடம் வரும்படி செய்!" என ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டார்கள்.
பெருமானார் அவர்களின் வேண்டுதல் வீண் போகவில்லை.
சிறிது காலத்துக்குப் பிறகு, தகீப் கூட்டத்தார் பெருமானார் அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள்.