நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கவலையும் துக்கமும் பறந்து ஓடின
மதீனாவிலிருந்து பனு தீனார் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர், பெருமானாரைக் காண்பதற்காகப் போர் முனைக்கு வந்தார். வரும் வழியில், போர்முனையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சிலர், அந்தப் பெண்மணியைப் பார்த்து, "உம்முடய தந்தை போரில் உயிர் துறந்து விட்டார்” என்று கூறினர்.
அதற்கும் அந்தப் பெண்மணி, “நாம் எல்லோரும் ஆண்டவனிடம் இருந்தே வருகிறோம்; நிச்சயம் அவனிடமே மீண்டும் செல்வோம்” என்று கூறிவிட்டு, "பெருமானார் அவர்கள் எவ்வாறு உள்ளார்கள்?” என்று கேட்டார்.
அவர்கள், “உம்முடைய சகோதரரும் மரணம் அடைந்துவிட்டார்!” என்றனர் திரும்பி வந்து கொண்டிருந்தவர்கள்.
அதற்கும் முன் சொன்னவாறே கூறிவிட்டு, மீண்டும், “பெருமானார் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்?” என்று வினவினார் அந்தப் பெண்மணி.
மறுபடியும் அவர்கள், “உம்முடைய கணவரும் கொல்லப்பட்டார்” என்றனர்.
அப்பொழுதும் அப்பெண்மணி பெருமூச்செறிந்து “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என மீண்டும் கூறிவிட்டு, “பெருமானார் அவர்கள் எவ்வாறு இருக்கின்றனர்?” என்றே கேட்டார்,
“பெருமானார் அவர்கள் நலமாக இருக்கின்றார்கள்” என்ற சொற்களைக் கேட்டவுடன், அவருடைய கவலை பறந்தோடி விட்டது. போர் முனைக்கு வந்து பெருமானார் அவர்களின் திருமுகத்தைப் பார்த்ததும், தம்மை மறந்து, “தாங்கள் இருக்கும் போது எவ்வளவு துன்பங்கள் வந்த போதிலும் அவை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; நானும், என் தந்தையும், என் சகோதரரும், என் கணவரும் தங்களுக்கு அர்ப்பணமாகி விட்டோம். ஆண்டவனுடைய திருத்தூதரே! தங்களைப் பெற்றிருக்கும் போது கேவலம் நாங்கள் என்ன?” என்று கூறினார்.