உள்ளடக்கத்துக்குச் செல்

நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிரிகளின் வீழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

78. எதிரிகளின் வீழ்ச்சி

குறைஷிகளின் படைத்தலைவன் உத்பாவும், அபூஜஹீலும், சண்டையில் வீழ்ச்சியடைந்தனர். அதனால் குறைஷிகள் மனம் கலங்கி, அணியில் குழப்பம் மேலிட்டு, நிலை பெயர்ந்து தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டு விட்டு ஓடி விட்டனர்.

அவர்களுடைய ஆயுதங்களை எல்லாம் முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

போரின் முடிவில் பார்த்தபோது, முஸ்லிம்களிடையே பதினான்கு பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் ஆறு பேர் முஹாஜிரீன்கள், எட்டுப் பேர் அன்சாரிகள்.

குறைஷிகளின் பக்கம் எழுபது பேர் கொல்லப் பட்டதோடு, எழுபது பேர் வரை சிறை பிடிக்கப்பட்டிருந்தனர்.

கொல்லப்பட்ட எழுபது பேரில், குறைஷிகளின் முக்கியத் தலைவர்கள் எல்லோரும் இருந்தனர்.

சிறை பிடிக்கப்பட்டவர்கள் மதீனாவுக்குக் கொண்டு போகப்பட்டனர்.

அவர்களில், அலி அவர்களின் சகோதரர் அகீலும், பெருமானார் அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் அவர்களும், பெருமானார் அவர்களின் மருமகன் அபுல் ஆஸூம் இருந்தனர்.

ஆயிரம் போர் வீரர்களும், நூறு குதிரைப் படையும் உணவும், ஆயுதங்களும் தயங்காமல் வழங்குவதற்குப் பல செல்வந்தர்களும், குறைஷிகளின் பக்கம் இருந்தும் கூட, போதிய ஆயுதங்கள் இன்றி, இரண்டு குதிரை வீரர்கள், 313 பேர் அடங்கிய முஸ்லிம் படையானது அவர்களைத் தோற்கடித்து, வெற்றி பெறுவதற்கு ஆண்டவனுடைய பேரருளே காரணமாகும்.

கைது செய்யப்பட்டவர்களைப் பெருமானார் அவர்கள் மிகவும் அன்புடன் நடத்தி வந்தார்கள். அவர்களை இருவர் நால்வராகத் தோழர்களிடம் பிரித்து அனுப்பி, நல்ல முறையில் அவர்களை நடத்தும்படி சொல்லியிருந்தார்கள்.

கைதிகளுக்கு உடுப்பதற்கு உடை இல்லாமல் இருந்தது. பெருமானார் அவர்கள் கட்டளையிட்டவுடன் தோழர்கள், அனைவரும் தங்களுடைய உடைகளைக் கொடுத்தனர்.

பின்னர் கைதிகளை என்ன செய்வது என நபி பெருமானார் தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.

எல்லோரும் உறவினர்களாகவும், நெருங்கியவர்களாகவும் இருப்பதால், "மீட்சித் தொகையைப் பெற்றுக் கொண்டு விட்டு விடலாம்” என அபூபக்கர் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.  ஆனால் உமர் அவர்கள், “இஸ்லாத்தைப் பற்றிய அளவில், நண்பன், பகைவன், அந்நியன், நெருங்கியவன், உறவினன் என்ற வேறுபாட்டுக்கு இடமில்லை. அதனால் கைதிகள் எல்லோரையும் கொன்று விட வேண்டும்; ஒவ்வொருவரும் அவரவர்களுடைய நெருங்கிய உறவினரைத் தங்கள் கையாலேயே வெட்ட வேண்டும்” என்று சொன்னார்கள்.

இறுதியில், அபூபக்கர் அவர்களின் கருத்துப்படியே, கைதிகளிடமிருந்து தலைக்கு நாலாயிரம் நாணயம் வீதம் வாங்கிக் கொண்டு அவர்கள் விடப்பட்டனர்.

எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் பத்துப் பிள்ளைகளுக்கு எழுதக் கற்றுக் கொடுத்தால், விட்டு விடுவதாக உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே சிலர் கல்வி போதித்தும் விடுதலையானார்கள்.