நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/சொன்னபடியே நடந்தது
பெருமானார் அவர்கள் தங்களைச் சேர்ந்தவர்களுடன், அருகில் இருந்த குன்றின் மீது ஏறினார்கள்.
அதைக் கண்ட அபூஸூப்யான் தம்முடைய படைகளையும், அந்தக் குன்றின் அருகில் கொண்டு செல்ல முயன்றார். ஆனால் உமர் அவர்களும், வேறு சில தோழர்களும் கற்களை எறிந்து கொண்டிருந்ததால், அவர்களால் முன்னேறிச் செல்ல இயலவில்லை.
ஆனால், குறைஷிப் படையிலுள்ள உபை இப்னு கலப் என்பவர், பெருமானாரின் அருகில் வந்து விட்டார். அவர் பத்ருப் போரின் போது, முஸ்லிம்களிடம் சிறைப்பட்டு, மீட்புத் தொகை கொடுத்து விடுதலையானவர். அப்போது விடுதலையாகிப் போகும் சமயம் பெருமானார் அவர்களிடம் “நல்ல தீனி கொடுத்து வளர்க்கப்பட்ட குதிரை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதன்மீது ஏறி வந்து உம்மை நான் கொல்வேன்” என்று கூறிச் சென்றவர்.
பெருமானார் அவர்கள் “இல்லை, ஆண்டவனுடைய நாட்டம் இருந்தால், நீ என்னுடைய கையினால் கொல்லப்படுவாய்” என்று அப்போது சொல்லி இருந்தார்கள்.
அத்தகைய உபை இப்னு கலப், பெருமானார் அவர்களை நெருங்கி வருவதைக் கண்ட தோழர்கள் அவரைத் தாக்குவதற்கு முன்னே சென்றனர்.
ஆனால், அவர்களிடம் பெருமானார், “நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்; அவர் என்னிடம் வரட்டும்” என்று கூறி, அருகில் நின்ற தோழரிடமிருந்து ஈட்டியை வாங்கி, முன்னே சென்று அவரைக் குறி வைத்து வீசினார்கள். அந்த ஈட்டி அவருடைய உடலில் பட்டதும் விலா எலும்பு முறிந்து விட்டது. குதிரையின் மீது இருந்தபடியே தள்ளாடிக் கூச்சலிட்டுக் கதறிக் கொண்டு குறைஷிகள் இருக்கும் இடத்துக்கு ஓடினார்.
அவருடைய ஒலத்தைக் கேட்ட தோழர்கள், “தோழரே, காயம் அவ்வளவு பலமாக இல்லையே?” என்று கேட்டனர்.
“எனக்கு இருக்கும் வேதனையை இங்குள்ள எல்லோரும் பங்கிட்டுக் கொள்வார்களானால், எல்லோருமே மடிந்து போவார்கள். முஹம்மது தம்முடைய கையினாலே என்னைக் கொன்று விடுவதாக முன்னரே சொல்லியிருந்தார். அவருடைய எச்சிலை என்மீது உமிழ்ந்தாலும், ஆண்டவன் சத்தியமாக நான் தப்பிக்க இயலாது” என்று சொன்னார்.
அவர் மக்காவுக்குத் திரும்பிப்போகும் வழியில் மாண்டு விட்டார்.