சிலம்பின் கதை/குன்றக் குரவை
24. குன்றவர் குரவையாடுதல்
(குன்றக் குரவை)
அருவி ஆடுதல்
குருவி ஒட்டினர்; கிளிகளை விரட்டினர்; மலைக்குச் சென்று தங்கினர் அருவி ஆடினர் சுனை குடைந்தனர். அலை உற்று வந்தவர்கள் அவர்கள் வேங்கை மரத்து நறு நிழலில் கண்ணகியைக் கண்டனர். அவர்களுக்குக் கண்ணகி வள்ளி யாகிய தெய்வம் போலக் காட்சி அளித்தாள். மனம் நடுங்க முலையிழந்து வந்து நின்றாள். அவளைக் கண்டு “நீவீர் யார்?” என்று கேட்டனர்.
அதைக் கேட்டு அவள் சினக்கவில்லை. “மதுரையையும், அதன் மன்னனையும் தீ வினை வந்து அழித்தது. அந்தச் சுழற்சியில் கணவனை அங்கு இழந்து விட்ட தீ வினை யாட்டி யான்” என்று கூறினாள். அவர்கள் அவளைக் கரங்கூப்பி வணங்கினர். அவ்வாறு அவள் நின்ற நிலையில் வானவர் மலர் மழை பொழிந்தவராய் அவர்கள் கண்டு நிற்கக் கண்ணகியை அழைத்துக் கொண்டு சென்றனர். கோவலனும் உடன் வந்திருந்தான். அவனோடு இவளும் சென்றாள். இவளைப் போல் மாபெருந் தெய்வம் நம் குலத்தில் இல்லை. இந்த மாநிலத்தில் இல்லை” என்று அறிவித்தனர்.
“சிறுகுடியிரே! சிறுகுடியிரே! இவளை வழிபடும் தெய்வமாகக் கொள்ளுங்கள். இவள் வேங்கை நறுநிழலில் நமக்குத் தெய்வமாகக் காட்சி அளித்து உள்ளாள். அதனால் இவளுக்கு வழிபாடு இயற்றுங்கள்; அனைவரும் ஒன்று கூடுவோம்” என்றனர்.
“தொண்டகப் பறையைத் தொடுங்கள்; சிறுபறை அறையுங்கள்; கொம்புகளை முழக்குங்கள்: மணி ஒலி ஒலிக்கச் செய்யுங்கள்; குறிஞ்சிப்பண் பாடுங்கள்; நறும் புகை காட்டுங்கள்; பூ இட்டு வழிபாடு செய்யுங்கள்; அவள் புகழைப் பாடுங்கள்; பரவுதலைச் செய்யுங்கள்; பல்வகை மலர்களைத் தூவுங்கள் ஒரு முலை இழந்த நங்கை இவள் நம் பெருமலை தொடர்ந்து வளம் சுரக்க அருள் செய்வாள்” என்று கூறினர்.
அனைவரையும் ஒன்று திரட்டி, “மலை அருவி ஆடுவோம். வாருங்கள். இது இங்கு வந்த புதுப்புனல் ஆகும்; இது பொன் துகளை வாரிக் கொண்டு வருகிறது: இது நம் தலைவன் மலையாகும்: அவனோடு நாம் புலவி கொள்வதற்குக் காரணமே இல்லை. எனினும் நம்மைத் தவிர்த்து மற்றவர்கள் இதில் வந்து நீராடினால் நம் நெஞ்சு நோகும், வேதனைப்படும்; அதைப் பொறுக்க மாட்டோம்” என்றனர்.
தெய்வத் திருப்பாடல்
நீராடி முடித்த பின் தோழியர் தம் தலைவியை நோக்கி “நீராடினோம் நாம்; இனி நாம் செய்யத் தக்கது யாது?” என்று வினவினர்.
“கடலில் சூரபதுமனைக் கொன்ற வேலவன் ஆகிய முருகனைப் பாடுவோம்; அவனை வைத்துக் குரவைக் கூத்து ஆடி அவனைச் சிறப்பித்துப் பாடுவோம்” என்றனர். முருகனைச் சிறப்பித்துப் பாடினர்.
“ஆறுமுகத்தினன், பன்னிரு கையினன் முருகவேள்: இவன் வேல் ஏந்தி நின்றான்; மயில் மீது ஏறிச் சென்று அயில் வேல் தாங்கிக் கடலில் சூரபதுமனைக் கொன்றான்; அவுணர்களை அழித்தான்; அவன் தன் வேலைக் கொண்டு கிரவுஞ்ச மலையைப் பிளந்தான்” எனப்பாடினர். அடுத்து அகப் பொருள் துறை அமைய அவர்கள் பாடத் தொடங்கினர்.
“தலைவன் தந்த நோய் இதை அறியாத தாய் பூசாரியைக் கொண்டு வெறியாட்டு நடத்துகிறாள். இது நகைக்கத் தக்கது ஆகும். கோயில் பூசை செய்யும் பூசாரி வருவானாம். அவன் வழிபாடு செய்ய முருகன் வரு வானாம். அவன் நம் நோயைத் தீர்ப்பானாம். இது மடமையன்றோ! அப்படி வந்தால் அந்த முருகன் ஒன்றும் அறியாதவனே ஆவான். எல்லாம் விளையாட்டாக முடியும். சிரிப்புத்தான் வருகிறது சிந்தித்துப் பார்த்தால்” என்றனர்.
“வேலைத் தாங்கிய வேலவன் ஆகிய முருகன் வந்தால் எம் குறமகள் தான் விரும்பிய காதலனை மணக்க அருள் செய்க என்று வேண்டுவோம். அவள் விரும்பும் தலைவனையே அவள் மணக்க அருள் செய்க! மாறுபட்டு அயலவனைக் கொண்டு வந்து நிறுத்துவர்; அதனைத் தவிர்க்க! என்றும் வேண்டுவோம்” என்றனர்.
“அவர்கள் பாடலைக் கேட்டு அவ்வழியே மலை நாடனாகிய தலைவன் வந்தான் எனவும் அவனைச் சந்தித்து அவன் திருவடியைத் தொழுது வணங்கித் தலைவி இவ்வாறு கூறத் தொடங்கினாள்” எனவும் பாடினர்.
“கடம்பைப் பூச்சூடிக் கொண்டு கையில் வேல் ஏந்தி இவலுரில் நீ வந்தாலும் உன்னை இவ்வூரார் முருகன் என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். உனக்கு ஆறுமுகங்கள் இல்லை; ஏறிவர மயில் இல்லை; பக்கத்திலே வள்ளி இல்லை; தோள்கள் பன்னிரண்டு இல்லை; அதனால் உன்னை முருகன் என்று கருதமாட்டார்கள். நீ தலைவி யைத் தேடி வந்த தலைவன் என்று எளிதில் அறிந்து கொள்வர். அதனால் ஊரில் அலர்தான் எழும்; மலர்த்தார் மார்ப! விரைவில் மணம் செய்துகொள்க” என்று கூறினேன் என்றாள் தலைவி. “அவனும் விரைவில் மணம் செய்து கொள்ள வரலாம்; அந்த நம்பிக்கை உள்ளது” என்று மற்றவரும் சேர்ந்து பாடினர்.
“கண்ணகி தெய்வத்தைப் பாடினால் அவள் காட்சி தருவாள். வந்தால் மண அணி வாய்க்க என்று அத் தெய்வத்தை வேண்டுவோம்” என்று அப்பெண்கள் பாடினர்.
“வானக வாழ்க்கையைப் பெற்றுவிட்ட அத்தெய்வம் கானகத்தில் நறுவேங்கை நிழலில் நின்று காட்சி தந்தாள். அத்தெய்வம் உறுதியாக வந்து அருள் செய்வாள். தலைவனைத் தலைவி மணம் செய்யும் இனிய காட்சியை இவ்வூர் காணப் போகிறது. இது பெருமை மிக்க காட்சி யாகும். இதுவரை முருகனை வழிபட்ட யாம் இனிக் கண்ணகியைத் தெய்வமாக ஏற்போம்; வழிபடுவோம்” என்று கூறிப் பாடினர். குரவைக் கூத்துப் பாடல்களைக் கேட்டு நம் காதலர் வந்தார் எனவும் பாடினர். மற்றும் சேரனின் வெற்றியைப் பாடி அவன் வாழ்க என்று வாழ்த்தினர்.