சிலம்பின் கதை/கட்டுரை காதை

விக்கிமூலம் இலிருந்து

23. விதிப்பயன் எனல்
(கட்டுரை காதை)

மதுரைத் தெய்வம்

மதுரை நகர் ஒரு மங்கை வடிவம் கொண்டு கண்ணகியின் பின்புறம் வந்து நின்றது. சடைமுடி தரித்திருந்தாள். சிவனைப்போல் பிறை தரித்திருந்தாள். குவளை மலர் போன்ற கண்கள்; ஒளிபடைத்த முகத்தினள், கடைவாயில் பல் வளைந்து வெளிப்பட்டுத் தோன்றியது; பவள வாயள்; முத்துப் போன்ற பற்கள்; இடப்பக்கம் கருப்பு: வலப்புறம் சிவப்புப் பொன்னிறம் பெற்றிருந்தாள். உமைபாகன் வடிவம் அவளுடையது. இடக்கையில் தாமரைமலர் வலக்கையில் கொடுவாள்; வலக்காலில் வீரக்கழல், இடக்காலில் கால்சிலம்பு, பாண்டியனின் குல முதல்வி அவள். அவள் வருத்தத்துடன் கண்ணகி முன் நிற்க அஞ்சிப் பின் தொடர்ந்தாள்.

“நங்கையே! என் குறை கேட்பாயாக!” என்று அம் மங்கை விளித்துப் பேசினாள். வாட்டமுற்ற நங்கை கண்ணகி வலப்பக்கமாகத் திரும்பிக் “கோட்டமுற்றுக் கேட்ட நீ யார்? ஏன் என்பின் வருகிறாய்? என் துயரம் முழுதும் நீ அறிவாயோ!” என்று கேட்டாள்.

“துயரம் அறிந்தே உன்னைத் தொடர்கிறேன்; மதுரைப்பெண் யான், கட்டுரை கூற வந்திருக்கிறேன். உன் கணவனுக்காக இரங்குகின்றேன் என் அரசனுக்கு வந்தது தீ விதி; அது போல் உன் கணவனுக்கும் ஒரு தீ வினை வந்தது. இருவருக்கும் கேடுகள் நேர்ந்தன; அவர்கள் செய்த தீ வினைகளின் விளைவே இவை யாகும்.”

பொற்கைப் பாண்டியன்

“மறை ஒலி கேட்குமே யன்றி மணிநா அறை ஒலி இம் மதுரை நகரில் இதுவரை கேட்டது இல்லை. அடி தொழுது வணங்குவர் அல்லாமல், குடி பழித்துத் தூற்றுங் கொடுங்கோலனாகத் திகழ்ந்தது இல்லை. இளமை காரணமாகக் கட்டுக் கடங்காது மனத்தை அலையவிட்டவர் அல்லர் பாண்டியர்கள்; பாண்டி மன்னர்கள் தொடர்ந்து நன்மைகளைச் செய்து வந்தவர்கள்; ஒழுக்க உயர்வு மிக்க குடி அது”.

“பாண்டியர்கள் நெறி தவறாதவர்கள்; மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள்; அத்தகைய மரபு அது”,

“அவர்களுள் ஒருவன் தவறு செய்யச் சூழ்நிலை இடம் தந்தது. காவல் காக்கும் வேந்தன் ஆவல் காரணமாகக் கீரந்தை என்பானின் மனைவி உள்ளே தனித்து இருக்க அவ் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான். நள்ளிரவு; காவல் செய்வது அரசன் கடமை'தவறி விட்டான்.”

“பார்ப்பணி அவள் உள் இருந்து, மன்னவன் காவல் காக்கும்; கவலை கொள்ளாதே என்று கணவன் சொல்லிப் போன சொற்களை அவன் செவி சுடும் வண்ணம் வாய்விட்டுக் கூவிக் குரல் எழுப்பினாள்."

“தான் செய்த தவறு உணர்ந்து மன்னன் தன் அவையில் தானே தனக்குத் தீர்ப்பு வழங்கிக் கொண்டான். அவையில் தன் கையை வெட்டிக் குறைத்துக் கொண்டான். பொற்கை ஒன்றைப் பொய்க்கையாக வைத்துக் கொண் டான். ஒரு காலத்தில் இந்திரன் மீது படைஎடுத்து அவன் முடியைக் களைந்த மாமன்னன் அவன் வெற்றி தேடிய அந்தக் கை இப்பொழுது வெறுமை நிலை உற்றது. தவறு செய்தால் பாண்டியர்கள் தம்மைத் திருத்திக் கொள்வார்கள்; இது மரபு வழி நிகழ்ச்சி”

பாண்டியன் நெடுஞ்செழியன்

“அத்தகைய மரபில் வந்தவன் பாண்டியன் நெடுஞ் செழியன் அவனும் ஒரு முறை அவசரப்பட்டுத் தவறான தீர்ப்பை வழங்கிவிட்டான். அது தவறு என்று தெரிந்ததும் தன்னைத் திருத்திக் கொண்டான்; தவறு செய்தது அவன் எதிர்பாராதது; உடனே அதை உணர்ந்து திருத்திக் கொன்டான்."

“அதன் வரலாறு இது : புகார் நகரத்தில் பராசரன் என்னும் கற்ற அந்தணன் சேர நாட்டுக்குச் சென்று சேர அரசனைப் பாடிப் பரிசல்கள் பெற்று வந்தான்; வழியில் பாண்டி நாட்டில் மறையவர் வாழும் ஊர் தங்கால் என்பது; அவ்வூரில் அரச மரத்தை உடைய மன்றத்தில் தங்கினான். அங்கே அவன் தன் பொதிகளை எடுத்துவைத்து விட்டுச் சற்று இளைப்பாறினான்.”

“அவ்வூர்ச் சிறுவர்கள் அவனை வந்து சூழ்ந்து கொண்டனர். அச்சிறுவர்களை நோக்கித் தன்னோடு சேர்ந்து வேதம் ஒதினால் அவர்களுக்குப் பரிசு தருவதாகக் கூறினான். அவர்களுள் வார்த்திகன் என்பான் மகன் தக்கிணன் என்பான் மிகத் தெளிவாக அம் மந்திரங்களை உச்சரித்துக் கூறினான். அவனைப் பாராட்டிப் பொன் நாண் ஒன்றினையும், அணிகலன்கள் சிலவும், கைவளையும், தோடும், இவற்றோடு பண்டப் பொதிகை ஒன்றும் அளித்துப் பாராட்டித் தன் ஊர் திரும்பினான்.”

“இக் குடும்பத்து மாந்தர் வளமுடன் அணிகள் பூண்டு நடமாடுவதைக் கண்ட அரசின் காவலர் இவன் எங்கிருந்தோ களவாடிவிட்டான் என்று வார்த்திகனைச் சிறையிட்டனர். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பாள் அவ்வூர்க் கொற்றவை கோயில் முன் நின்று முறையிட்டாள்; அக் கோயில் கதவு மூடிக் கொண்டது. இதனை வேந்தன் கேட்டுத் தன் ஆட்சியில் எங்கோ கேடு நிகழ்ந்து விட்டது என்று யூகித்து அறிந்து விசாரித்தான் செய்தி அறிந்து விசாரித்து அவ் அந்தணனை விடுதலை செய்தான்.”

“தான் செய்த தவறு அதற்கு மன்னிப்புக் கேட்டு அவன் மன மகிழத் தங்கால் என்னும் ஊரில் கழனி களையும், வயலூரில் உள்ள வயல்களையும் இறையிலி நிலங்களாகத் தானம் செய்தான். மூடியிருந்த கோயில் கதவுகள் பழையபடி திறந்து கொண்டன. அரசன் பெரு மகிழ்வு கொண்டான்.”

“நாட்டில் பெருவிழா எடுத்தான்; சிறைக்கதவுகளைத் திறந்து விட்டான். இறைப்பொருள் தராதவரை ஒறுக்காமல். அவர்களுக்கு விடுதலை தந்தான். புதிய சட்டம் ஒன்று தீட்டி அதனை வெளிப்படுத்தினான். பிறர் தந்த பொருள் அது படுபொருள் எனப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட வர்க்கே அது உரியது என்றான். மற்றும் மண்ணில் கிடைப்பது எடு பொருள் எனப்பட்டது. புதையல் எடுப்போருக்கு அது உரியது ஆகும் என்றான். இவ்வறு படுபொருளும் எடுபொருளும் அரசுக்கு உரிமை இல்லை என்று அறிவித்துவிட்டான். கொள்வார்க்கே உரியது என்று அறிவித்தான். செய்த தவற்றைத் திருத்திக் கொண்டான். இவ்வாறு தன்னைத் திருத்திக் கொண்டது வேறு யாரும் இல்லை; இதே பாண்டியன் நெடுஞ்செழியன் தான்; இப் பொழுது திருத்த முடியாத தவற்றினைச் செய்து விட்டான். விதி ஆற்றல் மிக்கது.”

“அதற்குக் காரணம் இவ்வாறு நடக்க வேண்டும் என்று விதி வகுக்கப் பட்டுவிட்டது. ஆடி மாதம் நிறை யிருள் நாளில் எட்டாம் நாளில் வெள்ளிக்கிழமை அன்று இந்நகர் அழிய வேண்டும் என்று விதி ஏற்பட்டு விட்டது: அதையாரும் மாற்றமுடியாது நிமித்திகர்கள் முன் கூட்டி உரைத்து இருக்கின்றனர்”

“அதன்படிதான் இவை நடைபெறுகின்றன. மதுரை மாநகர் மட்டுமன்று; அதன் அரசும் கேடு உறும் என்று ஏடுகள் கூறி விட்டன. இது நகர் அழிவுக்கும் அதன் அரசு வீழ்ச்சிக்கும் காரணம் ஆகும்” என்று அத் தெய்வம் விளக்கம் தந்தது.

கோவலன் கதை

“மற்றும் கோவலன் ஏன் காவலனால் வெட்டுண்டான்? அதற்கும் ஒரு காரணம் உள்ளது. சோலைகள் மிக்கது கலிங்க நாடு; அதைச் சார்ந்தவை சிங்கபுரம், கபிலபுரம் என்னும் நகர்கள் ஆகும். சிங்கபுரத்தை வசுவும், மற்றையதைக் குமரனும் ஆண்டு வந்தனர். இருவரும் ஒரு குலத்து மன்னர்; தாயபாகம் குறித்து முரண்பாடு ஏற்பட அது போராகக் கிளைத்தது: இருநாட்டவரும் பிரிந்து இயங்கினர்; போர் முனையாகிய இடைவெளிப் பரப்பு ஆறு காவதம் கொண்டது. கபிலபுரத்து ஊர்வாசி சங்கமன் என்பவன் பிழைப்பு நடத்தச் சிங்கபுரம் சென்று சிறுகடை ஒன்று வைத்தான். மாறுவேடம் ஆண்டு தன்னை மறைத்துக்கொண்டு அணிகலன்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து கொண்டிருந்தான். அவனுடன் அவன் காதலியும் உடன் சென்றிருந்தாள்.

“சிங்கபுரத்து அரசு ஆட்சியைச் சார்ந்த பணியாளனாகக் கோவலன் பழைய பிறப்பில் அரச தொழில் செய்து கொண்டிருந்தான். 'ஒற்றன் இவன்' என்று சங்கமனைப் பற்றிக் கொணர்ந்து தண்டனைக்கு உள்ளாக்கினன் அதனால் அவன் கொலைக் களப்பட்டான். அதற்குக் காரணம் மதப்பற்றுதான். பரதன் என்ற பெயரோடு வாழ்ந்த கோவலன் கொல்லா விரதம் உடையவன். சங்கமன் அதில் விலக்குப் பெற்றவன் என்பதால் அவன்பால் வெறுப்புக் கொண்டு அவனைக் காட்டிக் கொடுத்தான். மதப்பற்று மனித நேயத்தைக் குலைத்தது; கொலைக்குக் காரணம் ஆகியது”

“கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நீலி என்பாள் அழுது துடித்தாள் அரசன் முன்சென்று முறையிட்டாள். வணிகர்பால் தன் வழக்கை உரைத்தாள். ஊரவரை நோக்கி உரைசெய்தாள். சேரிகளில் சென்று தன் குறையைக் கூறினாள் அலறினாள் மன்றுகளிலும் தெருக் களிலும் சென்று கன்று எனக் கதறினாள். நாள்கள் பதினான்கு இவ்வாறு அலைந்து திரிந்தாள்; மனம் குலைந்து கணவனை அடையும் நாள் இது என இறுதியில் மலை ஒன்று ஏறி உயிர் விட்டாள். வானவர் நாட்டைத் தன் கணவனோடு சென்று அடைந்தாள்.”

“யாம் அடைந்த இந்தத் துயரததை இதற்குக் காரணமாக இருந்தோர் அடைவாராக” என்று சாபமிட்டு மறைந்தாள். அந்தச் சாபம்தான் இப்பொழுது வந்து சேர்ந்தது. அதன் விளைவுதான் இவ் இழப்புகள்” என்று கட்டுரை உரைத்தது மதுராபதி.

“முற்பிறப்பில் செய்த தீ வினைகள் வந்து உருத்தும் போது தவறு செய்தவர்கள் தப்ப முடியாது; அனுப வித்துத்தான் தீர வேண்டும். இதைப்போல் நீயும் நாள்கள் பதினான்கு கடந்தபின் கோவலனை வானோர் வடிவில் காண முடியும். மனித வடிவில் காண முடியாது” என்று மதுரை மாதெய்வம் மாபெரும் பத்தினியின் பழம்பிறப்புச் செய்திகளை எடுத்துக் கூறி அவளைத் தணிவித்தது. மதுரை நகர் எரியினின்று தப்பியது.

இறுதி அவலம்

கருத்துறக் கணவனைக் கண்டால் அல்லது நிற்பது இல்லை என்று கொற்றவை கோயில் வாயில் முன் தன் கைவளையல்களை உடைத்து எறிந்தாள். “கிழக்கில் கணவனோடு இந்நகருக்கு வந்தேன், மேற்குவழியாகத் தனியே வெளியேறுகின்றேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மதுரை விட்டு வெளியேறினாள். இரண்டு நிலைகளை ஒருங்குவைத்து ஒப்பிட்டு அவல நிலையை எடுத்துக் கூறினாள்.

அதன் பின் அவள் எங்கும் தாழ்த்தவில்லை. இரவும் பகலும் தொடர்ந்து நடந்தாள். பள்ளம் மேடு இதனை அவள் கருதவில்லை. அசுரரை அழித்த அறுமுகவேள் குடிகொண்டிருந்த திருச்செங்கோடு எனப்படும் நெடுவேள் குன்றத்தை அடைந்தாள். பூக்கள் மிக்க வேங்கை மர நிழலில் நாள்கள் பதினான்கு சென்றபின் கணவனைக் கூடினாள். வானவர் வந்து வழிக்கொண்டனர்; மலர்மாரி பொழிந்து அவளை வாழ்த்தினர். கோவலன் தன்னோடு வான ஊர்தி ஏறி உயர் வாழ்வினை அடைந்தாள்.

“அவள் கணவனைத் தொழுதாள்; தெய்வத்தைத் தொழாதாள். அத்தகைய கற்பினை உடைய பொற் பினாளைத் தெய்வம் வழிபடுகிறது” என்பதை இவள் வாழ்வு எடுத்துக் காட்டியது.