சேரமன்னர் வரலாறு/10. செல்வக்கடுங்கோ வாழியாதன்

விக்கிமூலம் இலிருந்து

10. செல்வக் கடுங்கோ வாழியாதன்

பொறை நாடு என்பது, மலையாள மாவட்டத்தில் உள்ள பொன்னானி, பாலைக்காடு, வைநாடு, வள்ளுவ நாடு, குறும்பர் நாடு, கோழிக்கோடு, ஏர் நாடு ஆகிய வட்டங்களைத் தன்கண் கொண்டது. பொன்னானி வட்டத்தில் உள்ள இரும்பொறை நல்லூர், வடக்கில் குறும்பர் நாடு முதல் தெற்கில் பொன்னானி வட்டம் வரையில் பொறை நாடு பரந்திருந்தமைக்குச் சான்று பகர்கிறது. மேலும், இந் நாடு கிழக்கிற் கொங்கு நாட்டில் பூவானியாறு வரையிற் பரந்திருந்தது. பவானிக் கருகில் காவிரியோடு கலக்கும் பூவானி யாறும், அவினாசி வட்டத்திலுள்ள இரும்பொறை யென்னும் ஊரும் பொறை நாட்டின் பரப்புக்கு வரம்பு காட்டுகின்றன.

இப் பொறை நாட்டில், குறும்பர் நாட்டுப் பகுதியில், மாந்தரம் என்றொரு மலைமுடியும் அதனை யடுத்து மாந்தரம் என்றோர் மூதூரும் உண்டு. அவ் வூரைத் தலைநகராகக் கொண்டு வேந்தர் சிலர் ஆண்டு ‘ வந்தனர். அவர்களும் பொறை நாட்டரசர்களேயாதலால், மாந்தரன் என்றும், மாந்தரம் பொறையன் என்றும், மாந்தரம் சேரல் இரும்பொறை என்றும் சான்றோர்களால் அவர்கள் வழங்கப்பெற்றனர். மாந்தரம் மாந்தை எனவும் வழங்கிற்று[1]. தொண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் இரும் பொறை என வழங்கப்பெற்றனர். வள்ளுவ நாட்டுப் பகுதியில் இருந்த ஒரு கிளையினர் கடுங்கோ எனப்பட்டனர். இவர்களின் வேறாகக் குட்டுவர், குடக்கோ என இரு கிளை யுண்டென்பது முன்பே கூறப்பட்டது. இவற்றோடு தொடர்புடைமை தோன்றக் குடக்கோச் சேரமான், குட்டுவன் சேரல் இரும்பொறை என்றும், மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்றும் பிறவாறும் கூறிக் கொள்வது மரபு.

இவ் வேந்தர்கள், இமயவரம்பன் நெடுஞ்சேராதன் காலத்துக்கு முன்பிருந்தே , சேர நாட்டில் இருந்து வரும் தொன்மையுடையராவர், மாந்தரஞ்சேரர்களுள் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்பவன் மிக்க பழையோனாகக் காணப்படுகின்றான். செங்குட்டுவன் காலத்தில் விளங்கிய பரணர் என்னும் சான்றோரால், இம் மாந்தரம் பொறையன் இறந்த காலத்தில் வைத்துக் குறிக்கப்படும் கின்றான்; அதுவே இதற்குப் போதிய சான்றாகிறது.

இந்த மாந்தரன், உயர்ந்தோர் பரவும் ஒள்ளிய குணம் படைத்தவன். அப் பகுதியில், அவன் காலத்தில் விளங்கிய வேந்தருள், அவனே மேலோனாகக் கருதப் பட்டான். நிறையருந் தானையும் பெருங்கொடை வன்மையும் அவன்பால் சிறந்து விளங்கின. இவனைப் பாடிச் சென்ற இரவலர் பெரும் பொருளும் பெரு மகிழ்ச்சியும் கொண்டே திரும்புவர். ‘மந்திரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற, குறையோர் கொள்கலம் போல உவ இனி வாழி நெஞ்சே[2]’ என்று பரணர் பாராட்டிக் கூறுகின்றனர். இவனது ஆட்சியில், மழை வளம் தப்பாவாறு நாளும் கோளும் உரிய விடத்தில் நின்றன. நாட்டில் எவ்வகை அச்சமும் மக்கட்கு ஏற்படவில்லை; எல்லோரும் இன்பமாக வாழ்ந்தனர். மாந்தரன் தனக்குரிய கல்வி முற்றும் குறைவறக் கற்று உயர்ந்தான். பகைவர் வலியைக் கடந்த வாள் வேந்தர் பலர், அவனுக்கு அடங்கி, அருங்கலங் களையும் களிறுகளையும் திறையாகத் தந்து அவன் ஆணைவழி நின்றனர். நடுநிலை திறம்பாத செங் கோன்மையால் அவன் கெடாத புகழ் பெற்று விளங்கினான். அவனது புகழ் விசும்பு முற்றும் பரந்திருந்தது. அவனுடைய வாளாற்றலைப் பகைவர் நன்கு தெரிந்தனர். அவனை அறக்கடவுள் துணையாய் நின்று வாழ்த்தியது. அதனால், அவனை “அறன் வாழ்த்த நன்கு ஆண்ட விறல் மாந்தரன்[3]” என்று சான்றோர் பரவினர்.

மாந்தரம் பொறையன் கடுங்கோவின் அரசியற் செயல்கள், இவற்றின் வேறாக நூல்களில் ஒன்றும் காணப்படவில். அதற்குப்பின், ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் சேரமானாய் விளக்க முற்றான். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முதலியோர் காலத்தில் கொங்கு நாட்டில் வடக்கே பூவானி யாறு வரையும், கிழக்கே கொங்கு வஞ்சி (தாராபுரம்) வரையும் பரவியிருந்த பொறை நாட்டைக் கீழ்க் கொங்கு நாட்டுக் கருவூர் வரையில் பரப்பிய முதற் சேரமான் இந்த ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையாவன். அக் காலத்தே, அப் பகுதியையும் காவிரிக்கு வடகரை யிருந்தனர். கோப்பெருஞ் சேரல் அச் சோழ வேந்தருடன் ஒள்ளிய வாட்போர் செய்து கீழ்க் கொங்கு நாட்டையும் அதற்கு நேரே காவிரியின் வடகரையில் கொல்லிமலை விச்சி (பச்சை) மலைவரையில் இருந்த மழநாட்டையும் வென்று மேம்பட்டான். பின்னர்ச் சோழரோடு உறவு கொண்டு கருவூர்க்கு அண்மையில் ஓடும் ஆண் பொருநை யாற்றை வரம்பறுத்து அதன் கரையிலிருந்த ஊரின் பழம் பெயரை மாற்றிக் கருவூர் என்ற பெயரையும், அந் நகர்க்கு நேர் வடகரையில் விளங்கிய மழநாட்டுப் பேரூரின் பெயரை மாற்றி முசிறியென்ற பெயரையும் இட்டு, இவை தன் சேரநாட்டிற் குரியவை என இன்றுகாறும் விளங்குமாறு செய்தான். இடைக்காலக் கல்வெட்டுகள் பலவும், கருவூரைக் கருவூரான வஞ்சிமா நகரம்[4] என்றும், அமராவதி யென்று இப்போது மருவி வழக்கும் ஆற்றை ஆன்பொருநை[5] என்றும் கூறுகின்றன. இச் செயல்களால் இவ் வேந் தனைச் சான்றோர் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருச் சேரல் இரும்பொறை என வழங்கலுற்றனர். கருவூரும் முசிறியும் சேர நாட்டின் கடற்கரைப் பெரு நகரங்கள் என்று முன்பே கூறினோம்; அவற்றின் நினைவாகவே, காவிரிக்கரையில் கருவூரும் முசிறியும் பெயர்பெற்றன.

அக் காலத்தே, நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் பெருமான் ஒருவர் இருந்தார். அவர் ஒருவகை நோய்வாய்ப்பட்டு உடல் நலம் குன்றி மிகவும் மெலிந்திருந்தார். அவரைக் கண்ட அறிஞர் சிலர், “சான்றீர், நீர் சென்று கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறையைக் காண்பீ ராயின், நமது உடம்பைப் பெறுகுவீர்” என மொழிந்தனர் அரசன் பார்வையும் ஒருவகை மருந்தாம் என்பது மேனாட்டவர்க்கும் உடன்பாடு. அரசர் பார்வையால் நோய் நீங்கப்பெற்ற செய்தி கிரேக்க நாட்டு வரலாறுகளிலும் உண்டு.

அவர்கள் சொல்லிய வண்ணமே, அப் புலவர் பெருமானும் கருவூர் அடைந்து வேந்தனைக் கண்டு தம் நோய் நீங்கப்பெற்றார்; சின்னாட்களில் தமது பண்டைய உடல் நிலையையும் எய்தினார். வேந்தருடைய பார்வை நலத்தை வியந்து, “மானினம் போல் யானையினம் பெருகியுள்ள கானகநாடன் நீதானோ? நீயாயின்[6] நீ செய்த உதவிக்கு ஒன்று கூறுவேன்; அரசாளும் செல்வம் ஒருவர் பெறுதற்கு அரியது; அரசு செய்தற்கண் அருளும் அன்பும் இல்லாத செயல்கள் உண்டாதல் இயல்பு. ஆனால், அவற்றைச் செய்வோர் நிரயத் துன்பம் எய்துவர்; நீ அவர்களோடு கூடுதல் ஆகாது. நின் அரசியற் றோற்றம் என்போல்வார்க்கு மருந்தாய் நலஞ் செய்வது ஆகையால், நீ தீயரோடு கூடாமல், அரசு காவலைக் ‘குழவி கொள்பவரின் ஓம்புமதி’ என்று இனிய சொற்களால் எடுத்துரைத்தார்.

வேந்தன், அவர் மனம் மகிழத் தக்க வகையில் மிக்க பரிசில்களை வழங்கினான். அவர் அவற்றை ஏற்றுக் கொண்டாராயினும், அவற்றின் பாற் பற்றுக்கொள்ளாது ஏனைப் பரிசிலர்க்கு வழங்கினார். அந் நிலையில், அவர் நோயுற்று வந்தபோது வேந்தனைக் காண வொண்ணாத படி இடை நின்று தடுத்த சான்றோர் சிலர் அவரை அணுகித் தமது தவற்றைக் கூறித் தம்மை அருளுமாறு அவரை வேண்டினர். அருளும் அன்பும் இல்லாத தீயோர் நிரயங் கொள்வர் என அவர் மொழிந்தது அவர்கள் உள்ளத்தை அலைத்தது. அவரும் அருள் சுரந்து, சான்றோர்களே, நரைத்துத் திரைத்து முதுமை எய்தியும், உயிர் வாழ்வதற்குப் பண்பும் பயனுமாகிய அன்பும் அறமும் கொள்ளாது நிரயம் புகுதற்குச் சமைந்தீர்; நாளைக் கணிச்சி யேந்திக் கொண்டு காவலன் பற்றுங்கால் நம்முடைய பயனில் வாழ்வை நினைந்து வருந்துவீர்கள். அதற்குப் பாதுகாவலாக இதனைச் செய்ம்மின்; முதுமை மிக்கதனால், நும்பால் செய் லாற்றும் வலியில்லை; அதனால், நல்லதே செய்யுமின்; நுமக்கு அஃது இயலாதாயின் அல்லது செய்தலைக் கைவிடுமின்; அதுதான் எல்லாரும் உவப்பது; அன்றியும், நல்லது செய்தோர் எய்தும் நலத்தைப் பெறும் நல்வழியுமாகும்[7]” என்றார். எல்லாரும் அவரை வழிபட்டு வாழ்த்தி வழிவிட்டனர்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பின்னர்க் குட்டுவர் குடியில் தக்கவர் இலராயினர். செங்குட்டுவன் மகனான குட்டுவன் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அரசு வீற்றிருக்கும்போதே மகப்பேற்றின்றி

இறந்தான். செங்குட்டுவனுக்கு உடன் பிறந்த இளவலான குட்டுவன் இளங்கோ அரசு துறந்து குணவாயிற் கோட்டத்தே இருந்து தண்டமிழ் ஆசானான சாத்தனார் உரைத்த கோவலன் கண்ணகிகளின் வரலாறு கேட்டுத் தமிழகம் முழுவதும் சென்று ஆங்காங்குள்ள இயற்கை நலங்களை நேரிற் கண்டு சிலப்பதிகாரம் என்ற நூலைச் செய்து தமிழகத்துக்கு அளித்துவிட்டு மறைந்தார். இவ்வாறு குட்டுவர் குடி வழியற்றுப் போகவே, பொறையர் குடியிற் சிறந்து விளங்கிய கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்குப்பின் அந்துவஞ்சேரல் இரும்பொறை யென்பான் சேரவரசுக்கு உரியனானான்.

அந்துவன், நுண்ணிய நூல்பல கற்றும் கேட்டும் சான்றோர் பரவும் நல்லிசைப் புலமை சிறந்து விளங்கி னான். திருப்பரங்குன்றத்து முருகன்பால் அவனுக்கு அன்பு மிகுந்தது. ஒருகால், அவன் திருப்பரங்குன்றம் போந்து முருகனை வழிபட்டு அவரது பரங்குன்றைத் தமிழ்நலம் கனியப் பாடினன். “முருகன் சூர் முதல் தடிந்த சுடர் நெடுவேல் ஏந்துபவன்; பரங்குன்றம் அம் முருக வேட்கேயுரியது; சந்தன மரங்கள் செறிந்து நறுமணம் கமழ்வது; அதன்கண் உள்ள இனிய உள்ள இனிய சுனைகளிற் பூத்திருக்கும் செங்கழுநீர், மகளிர் விருபித் தங்கள் கருங்குழலில் சூடிக்கொள்ளும் கவின் மிகுந்தது. இவ்வாறு மணம் கமழும் மரங்களாலும் சுனைப் பூக்களாலும் தண்ணிதாய் விளங்கும் தண்பரங்குன்றம், அந்துவன் பாடிய செந்தமிழ் நலமுடையது” என்று மருதன் இளநாகனார் என்று சான்றோர் விதந்து கூறியிருக்கின்றார்[8].

அந்துவனது நல்லிசைப் புலமையை வியந்தே பதிற்றுப்பத்து ஏழாம் பதிகம், “நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று சிறப்பித்துரைக்கின்றது.

வேணாட்டில், ஒரு தந்தை என்ற பெயர் பெற்று அந்நாளில் வேளிர் தலைவன் ஒருவன் விளங்குகினான். அவனுக்குப் பொறையன்தேவி என்றொரு மகள் இருந்தாள். அவளை அந்துவன் மணந்துகொண்டு இனிதிருக்கையில், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற மகனைப் பெற்றான். அந்துவன் அரச வாழ்வு பெற்றும், புலவர் கூட்டத்தைப் பெரிதும் விரும்பி யொழுகினான். தமிழகத்தில் வாழ்ந்த சான்றோர் பலரும் அவன்பால் சென்று புலமை நலம் நுகர்ந்தும் நுகர்வித்தும் பரிசில் பெற்று மகிழ்ந்தனர்.

அந் நாளில், சேர நாட்டில் தெற்கில், தென்பாண்டி நாட்டில் உள்ள பொதியமலை, சான்றோர் பரவும் சால்புற்று விளங்கிற்று. அதனடியில் ஆய்குடி என்ற ஓர் ஊருண்டு. அஃது இப்போது தென்காசிப் பகுதியைச் சேர்ந்த செங்கோட்டை வட்டத்தில் ஆய்குடி என்ற அப் பெயர் திரியாமல் இருந்து வருகிறது. அவ்வூரைத் தலைமையாகக் கொண்டு அப் பகுதியை வேள் ஆய் என்ற வேளிர் தலைவன் ஆட்சி செய்து வந்தான். அவனை ஆய் அண்டிரன் என்றும் சான்றோர் வழங்குவர். அவன் இரவலர் வேண்டுவன ஈத்து இறவாப் புகழ் படைத்து விளங்கினான். அவன்பால் பெரு நட்புற்று ஒழுகிய தமிழ்ச் சான்றோருள் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் தலைசிறந்தவர். அவர் அடிக்கடி ஆய் அண்டிரனைக் கண்டு அவன் புகழ் நலங்களை இனிய பாட்டுக்களாற் பாடி இன்புறுத்தியும் இன்புற்றும் வந்தார். மோசியாருடைய புலமைவளம் தமிழ் வேந்தர் மூவருக்கும் நன்கு தெரிந்திருந்தது.

முடமோசியார் ஆய்குடியல் இருந்து வருகையில் அந்துவஞ்சேரலைக் காண விரும்பி அவனது வஞ்சி நகர்க்குச் சென்றார். அவருடைய வரவு கண்ட சேரமான், அவரை அன்போடு வரவேற்றுச் சிறப்பித் தான். அப்போது, சேரமானுக்கும் சோழ வேந்தனான முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளிக்கும் எக் காரணத் தாலோ பகைமையுண்டாயிற்று. ஆதலால், சோழன் தன் பெரும் படையுடன் போந்து வஞ்சி நகர்ப் புறத்தே முற்றியிருந்தான். சேரருடைய வஞ்சியும் அதற்கு வடக்கில் கடற்கரையில் உள்ள கருவூரும் சேரர் பெரும்படையின் திண்ணிய காவலில் இருந்தன. வஞ்சிநகர்ப் புறத்தே, இரு படைகளின் செயல் வகைகளை இனிது காணத்தக்க வகையில் உயர்ந்த மாடங்கள் அமைந்த அரண்மனை யொன்று இருந்தது. அதற்கு வேண்மாடம் என்பது பெயர். மகட்கொடை வகையால் நெருங்கிய தொடர் புற்றிருந்த வேளிர் தலைவர்களால் அம் மாடம் நெடுங்காலத்துக்கு முன்பே அமைக்கப்பெற்றது. வேணாட்டு அரசரும் அரசியற் சுற்றத்தாரும் வரின், அவர்கள் தங்குதற்கென அது நிறுவப்பெற்றது. கண்ணகியார்க்குக் கோயில் எடுத்துக் கடவுன்மங்கலம் செய்தபோது, செங்குட்டுவன் கனக விசயர் என்ற வடவேந்தர்களைச் சிறைவீடு செய்து அரசர்க்குரிய சிறப்புடன் இருக்கச் செய்தது இந்த வேண்மாடத்தேதான். இவ் வேண்மாடத்தே இருந்து போர் நிகழ்ச்சியை நோக்கியிருந்த அந்துவன், வேணாட்டிலிருந்து வந்த முடமோசியாரைத் தன்னோடே இருத்தி விருந்தாற்றினான். மேலும், அவர் சோழ நாட்டில் தோன்றிய சான்றோரதலால், அவரைக்கொண்டு சோழருடைய சிறப்பியல்புகளை அவன் அறிந்து கொள்ளுதற்கு அவரது வருகையும் உடனுறைவும் சிறந்து விளங்கின. இருவரும் வேண்மாடத்தில் இருந்து, வடமேற்கில் கடற்கரையில் படைக்கடல் காவல் புரிய விளங்கும் கருவூர் நிலையும், வஞ்சி முற்றத்தை வளைத்து நின்று காக்கும் வஞ்சிப் படை நிலையும், வடக்கிற் சேய்மையில் முற்றியிருக்கும் சோழர் பெரும்படை நிலையும் நன்கு தோன்றக் கண்டிருந்தனர். வஞ்சிமாநகர்க்குக் கண்காணும் எல்லையில் இருந்து காட்சியளித்து கருவூர், இப்போது கருவூர்ப் பட்டினமென வழங்குகிறது. மேனாட்டு யவனர்களின் குறிப்புகளில் இவ்வூர்க் குறிப்பும் உள்ளதனால், இதன் தொன்மை நன்கு தெரியப்படும்.

அந்துவனும் முடமோசியாரும் படை நிலைகளை நோக்கியிருக்கையில், சோழர் படையில் பெருங்களிறு ஒன்றின்மேல் தலைவன் ஒருவன் இருந்து படையணியை நோக்கித் திரிவதையும், அவ் யானையைச் சூழப் பரிக்கோற்காரரும் வேல் வீரரும் செல்வதையும் இருவரும் கண்டனர். சிறிது போதிற்கெல்லாம் படையில் பெருங் கிளர்ச்சி தோன்றிற்று. யானைமேல் இருந்த தலைவன் அதனை அடக்க முயன்றும் அஃது அடங்காது ஒரு நெறியின்றி ஓடத்தலைப்பட்டது. சூழ்வரும் பரிக்கோற்காரும் படைவீரரும், மிகைசெய்த வழித் தன்னைக் கொல்வர் என எண்ணாது, களிறு மதங்கொண்டு திரிவது இருவர்க்கும் புலனாயிற்று. இதனை அறிந்த கருவூர்ப்படை, மத களிற்றின் வரவு போர் குறித்ததாகலாம் எனக் கருதி மேல்வரும் களிற்றையும் உடன் வரும் படைவீரரையும் தாக்குதற்கு அணிகொண்டு நிற்பதாயிற்று. சோழர் தலைவனுடைய யானை மதஞ் செருக்கிக் கருவூர் எல்லையை நோக்கிச் சென்றமை அந்துவனுக்குத் தெரிந்தது. சோழர் படை, கருதாது அலமருவதும், கருவூர்ப் படை, இரை வரவு காணும் புலிக்கணம் போல் போர் குறித்து நிற்பதும் அந்துவன் - சேரலுக்குத் தெரிந்தன. இதற்குள், யானை மேல் உள்ள தலைவனுடைய தோற்றம் சிறிது புலனாயிற்று. முடமோசியாரை நோக்கி, “இதோ களிற்றின் மேல் கருவூரிடம் செல்வோன் யாவனாகலாம்” என வினவினன். மோசியார், மனம் வருந்திக் களிற்றின் மேல் செல்பவன் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி; அக் களிறு, “முந்நீர் வழங்கும் நாவாய் போலவும், பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் படைக்கடல் நடுவேயுளது ; சுறாமீன் கூட்டம் போல வாள் வீரர் மொய்த்திருப்பதை அறியாது மைந்து பட்டது; அவன் நோயிலனாகிப் பெயர்கதில் அம்ம[9]” என்று மொழிந்தனர்.

அரசன்பால் உளதாகிய இயற்கை யன்பால் உள்ளம் கலங்கி அவலித்து உரைத்த மோசியாரின் மொழிகள் சேரமான் மனத்தைக் கலக்கி விட்டன. உடனே அவன் யானைமேல் இருப்பான் தனக்குப் பகைவன் என்பதை மறந்தான்; தன் நகர்க்கண் அவன் வந்து முற்றியிருப்பதையும் மறந்தான். காற்றினும் கடுகச் சென்று களிற்றின் பாய்ந்து அதன் செருக்கை அடக்கிச் சோழனை உய்வித்து மீண்டான். சேரமான் வந்ததும், களிற்றை அடக்கியதும், சோழ வேந்தனை உய்வித்து மீண்டதும் இருபடைத் தலைவர்களையும் மருள் வைத்தான். முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி சேரமானுடைய அறந்திறம்பா மறமாண்பை வியந்து பகைமை யொழிந்து நட்பால் பிணிப்புண்டான். இச் செயலால் “மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த, நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று சான்றோர் பாராட்டினர். “மடியா உள்ளம்” என்றும், “மாற்றோர்ப் பிணித்த” என்றும் நின்ற சொற்குறிப்புகள் இவ் வரலாற்றை அகத்தே கொண்டிருப்பதே நோக்கத் தக்கது. படைமறவர், “அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை” என்பதை உணர்ந்து இன்பமெய்தினர். இச் செயல் தழிஞ்சித் துறையாய்த் தமிழ் மறவர்க்குப் பொதுப்பண்பாய் இருந்தமையின், இந் நிகழ்ச்சி சிறப்பான விளக்கம் பெறவில்லை. ஏனை நாட்டவரிடையே இது நிகழ்ந் திருப்பின், நாடெங்கும் இவ் வரலாறு பரப்பப் பெற் றிருக்கும். இடைக் காலத்தே தமிழர் மறந்து அறிவு அறைபோகி அடிமை யிருளில் வீழ்ந்தமையால் இது

போலவும் புகழ்க் கூறுகள் பலவற்றை அறியா தொழிந்தனர்.

அந்துவஞ் சேரலுக்குப் பொறையன்தேவிபால் ஒரு மகன் பிறந்து செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற பெயருடன் விளங்கினான். அவன் இளமை முதலே சான்றோரிடையே பழகிப் பயின்றான். அதனால், உயர்ந்தோரிடத்துப் பணிவும், நண்பரிடத்தில் அன்பும் கொண்டு, அவர் மனம் வருந்தாவாறு அஞ்சித் தன்னைக் காத்தொழுகும் நற்பண்பும், காதல் மகளிர்க் கல்லது தன் மார்பு காட்டாத மறமும், நிலம் பெயரினும் சொல் பெயராத வாய்மையும் இயல்பாகக் கொண்டிருந்தான். பெரியோரைத் துணை கொண்டு அவர் உவக்குமாறு வணங்கும் மென்மையும், எத்தகைய பெரியராயினும் பகைவரைக் கண்டு அஞ்சி வணங்கி வாழ்வதைக் கனவிலும் கருதாத ஆண்மையும் அவன் குணஞ்செயல் களில் மிக்குத் தோன்றின. பகைமையுள்ளத்தால் மாற்றவர் கூறும் புறஞ்சொற்களைச் சிறிதும் கேளாத அவனது பொறைக்குணம் சான்றோர் பாடும் சால்பு மிகுந்து விளங்கிற்று.

பண்டை நாளில், தங்கள் நாட்டிலும் குடியிலும் தோன்றி, அறநெறியிலும் மற்ற நெறியிலும் சான்றாண்மை குன்றாது ஒழுகிப் புகழ் கொண்டு உயர்ந்து விண்ணுலகு அடைந்தவர்களை நினைந்து பாராட்டி விழா அயர்வது தமிழ் வேந்தர் இயல்பு அன்றோ ? அது சேர வேந்தர்பால் சிறந்து திகழ்ந்தது. அக் காலை, தம் முன்னோர்களுடைய புகழ் பொருந்திய வரலாற்றைப் புலவர் பாடக் கேட்டு மகிழ்வதும், பாணர் பாட்டில் இசைக்கக் கூத்தர் நாடகமாடிக் காட்டக் கண்டு இன்புறுவதும் வழக்கம். அதனைச் செய்தால் துறக்கத்தில் வாழும் அச் சான்றோர் மகிழ்வர் என்பது கருத்து. இக் கருத்தே பற்றிச் செல்வக்கடுங்கோ இவற்றை மிகுதியாகச் செய்து சிறந்தான். போர்களில் வெற்றி பெறும்போதெல்லாம் களவேள்விகள் செய்து போர்க் கடவுளாகிய கொற்ற வையை மகிழ்வித்தான்.

முதியவர்களாகிய தாய் தந்தையர்க்கும் சான் றோர்க்கும் தம் மக்களைத் தொண்டுசெய்ய விடுவது பண்டையோர் நெறிகளுள் ஒன்றன்றோ! அவர்கள் மெய்வன்மையொடு வாழ்ந்த காலத்தில் செய்த நன்றியை நினைந்து இவ்வாறு செய்வது கடன் என்றும், இஃது உலகிற் பிறந்தவுடனே அமையும் கடனாதல் பற்றித் தொல்சுடன் என்றும் தமிழ்ச் சான்றோர் கருதினர். முனிவர்களாகிய முது சான்றோர்க்கு அரசிளஞ் சிறுவர்களைத் தொண்டு செய்ய விடுத்த செய்திகள் பலவற்றைப் புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. இம் முறையை மேற்கொண்டு நம் செல்வக் கடுங்கோ தன்னுடைய சிறுவர்களை முதியோர்களுக்குத் தொண்டு செய்ய விடுத்துத் தன் தொல்கடனை இறுத்தான். சான்றோரும், “இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்[10]” என்று இச் செல்வக் கடுங்கோவைப் பாராட்டியுள்ளனர். இவனுக்கு, முன்னோனாகிய செங்குட்டுவன் தன் மகன் குட்டுவன் சேரலைப் பரணர்க்குத் தொண்டு செய்ய விடுத்த செய்தியை ஐந்தாம்பத்தின் பதிகம் கூறிற்று.

செல்வக் கடுங்கோ அரசு கட்டில் ஏறிய சில ஆண்டுகட்குப் பின், சேர நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த சதகன்னர வேந்தன், வேறொரு வடநாட்டு வேந்தனைத் துணையாகக் கொண்டு தமிழ் நாட்டிற் புகுந்து குறும்பு செய்தான். இது கடுங்கோவுக்குத் தெரிந்தது. இச் செய்தியைச் சோழ பாண்டியர்கட்கு அறிவித்து, இச் செயலைப் பொருள் செய்யாது விடின், “பொதுமை சுட்டிய மூவருலகம்[11]” எனப்படும் தமிழகம் சிறப்புழியும் என்பதையும் அறிவுறுத்தினான். சின்னாட் கெல்லாம் சோழ பாண்டியர் விடுத்த பெரும்படைகள், வஞ்சி நகரிலிருந்து வடநாடு நோக்கிப் புறப்பட்டன. செல்வந் கடுங்கோ, நால்வகைத் தமிழ்ப் படையும் உடன் வரச் சேர வாறு[12] கடந்து வானவாசி நாட்டுட் புகுந்து சத கன்னர்க்குரிய நகரமொன்றை முற்றுகை செய்தான்.

தமிழ்ப்படை செறித்து முற்றியிருந்த இடம், பகைவரைத் தாக்கற்கு எளிதாயும் அப் பகைவர் முற்போந்து பொருதற்கு ஏலாததாயும் இருந்தது. பகைவரை எறிதற்கேற்ற இடங்கண்ட பின்னல்லது தமிழர் போர்வினை தொடங்கார். இதனை இடனறிதல் என்ற பகுதியில் திருவள்ளுவர் கூறுவது கொண்டு தெளியலாம். பகைவேந்தர் இருவரும் வேறு வேறு இடங்களிலிருந்து எயில் காத்து நின்றனர். நின்ற ஒவ்வொரு நாளும் தமிழ்ப்படை வந்து செறிந்த வண்ணம் இருந்தது. இவ்வாறு உழிஞை சூடிய தமிழ்ப் படையைச் செலுத்திக் குன்றுகளைத் தகர்க்கும் இடிபோற் சீறிப் பகைவர் அரண்களைக் கொள்ளுதற்குச் செல்வக் கடுங்கோ செவ்வி நோக்கி இருந்தானாக, வடவேந்தர் இருவரும் இரவோடு இரவாய்த் தம்பால் இருந்த பொருள்களையெல்லாம் கைவிட்டு ஓடி விட்டனர். செருச் செய்தற்கு மிக்குநின்ற தமிழ்ப்படை அப் பொருள்களை மிகைபடக் கவர்ந்து கொண்டு வாகை சூடித் திரும்பிற்று. இதுபற்றி, அத் தானை, “ஒருமுற்று இருவர் ஒட்டிய ஒள்வாள் செருமிகு தானை[13]” என்று கபிலர் முதலிய சான்றோர் பாடும் சால்பு பெற்றது. முற்றிய நகர்க்கண் இருந்த பகைவீரர் பலர், மனம் மாறிச் சேரமானை அடைந்து, “வேந்தே, யாம் இனிதின் கருத்தின்படியே ஒழுகுவோம்; எம்மை ஏற்றருள்க” எனப் புகலடைந்தனர். கடுங்கோவும் அவர்கள் பால் கண்ணோடி அன்பாற் பிணிந்து அவர்கள் செய்த சூளுறவை ஏற்றுக் கொண்டான். அவர்களும் வாய்மை தப்பாது ஒழுகி மறமாண்பு பெற்றனர்.

வடபுலத்துப் பகைவர்கள் அவ்வப்போது புகுந்து செய்த அரம்புகளால் சீரழிந்த இடங்களில், பல உயர்குடியினர் தளர்ந்து சூட்ட நாட்டிலும் பொறை நாட்டிலும் குடிபுகுந்து வருந்தினர். அவர்கள் பால் அருள் பெருகிய சேரமான், நாட்டில் அவர்கள் இனிது வாழ்தற்கென ஊர்களை ஏற்படுத்தி, அவர்கட்கு அந் நிலையை உண்டுபண்ணிப் பகைவர்கள் இருந்த இடம் தெரியாதபடிப் பொருது அவர்களை வேரோடும் கெடுத்தான். இச் செயலை இவனைப்பற்றிக் கூறும் பதிகம், “நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி வெருவரு தானைகொடு செருப் பல கடந்து” சிறப்புற்றான் எனப் பாராட்டிக் கூறுகின்றது.

செல்வக்கடுக்கோ வாழியாதன், இவ்வாறு போர்த் துறையில் மேன்மை எய்தியதற்கு இவனது படைப் பெருமையே சிறந்த காரணமாகும். யானைப் படையிலுள்ள வீரர்கள், அவற்றின் பிடரியிலிருந்து கழுத்துக் கயிற்றிடைத் தொடுத்த தம் காலால் தம்முடைய குறிப்பை யுணர்த்தித் தாம் கருதிய வினையை முடித்துக் கொள்ளும் சால்புடையராவர் குதிரை மறவர் தம் காலடியில் அணிந்த இருப்பு விளிம்பால் தமது கருத்தைக் குதிரைகட்கு உணர்த்திப் போர்க்களத்தில் பகைவர் இருக்குமிடம் தெரிந்து செலுத்தி வெறி கொள்ளும் திறல் வாய்ந்தவர். வேலேந்தும் வீரர் கல்லொடு பொருது பயின்ற வலிய தோளையுடையர். அவர்களும் பனங்குருத்துகளோடு குவளைப்பூ விரவித் தொடுத்த கண்ணி சூடி மதம் செருக்கித் திகழ்வர்[14] போர் யானைகளின் மேல் வானளாவ உயர்ந்திருக்கும் கொடிகள், மலையினின்று வீழும் அருவி போலக் காட்சி நல்கும். அவற்றின் முதுகின் மேல் கட்டப்பெற்றிருக்கும் முரசுகள், காற்றால் அலைப்புண்ட கடல் போல் முழக்கம் செய்யும். போர்க்களத்திற் பகைவர்மேற் பாய்ந்தோட உயர்ந்த குதிரைப் படையும், எறிந்து சிதைந்த வேலேந்தும் வேற்படையும், பன்முறையும் போர் செய்து பயின்ற வீரர் திரளுமே பகைவர் படைக்கடலைக் கலக்கி மலைபோற் பிணங்கள் குவியப் பொருது அழிக்கும் பொற்பு வாய்ந்தன எனப் புலவர் பாடிப் புகழ்ந்துள்ளார்.

உழிஞைப் போர் செய்யுங்கால், கடுங்கோவின் படைமறவர், “இந்த மதிலை எறிந்த பின்னன்றி உணவு கொள்வதில்லை” என வஞ்சினங் கூறி அச் சொல் தப்பா வண்ணம் நாள் பல கழியினும் உண்ணாமேயிருந்து பொரும் பெரிய மனவெழுச்சியுடையர். இவ்வாறே பகைவர் உறையும் ஊர்களையும் நாடுகளையும் கைக் கொண்டாலன்றி உறங்கோம் என உறுதி கொண்டு பன்னாள் உறக்கத்தையும் விட்டொழுகுவர். படைத் தலைவர்களின் உடம்பை நோக்கின், அது போர்ப்புண் வடு நிறைந்து இறைச்சி விற்பார் இறைச்சியை வெட்டுதற்குக் கீழே வைத்துக் கொள்ளும் அடிமணை போலக் காணப்படும்; அவ் வடு தோன்றாதபடி நறிய சந்தனம் பூசிக்கொள்வது அவரது மரபு.

இனி, அறத்துறையிலும் இச் சேரமான் சிறந்து விளங்கினான். மறத்துறையில் களவேள்வி செய்தது போல், அறத்துறையில் அந்தணர் பலரைக் கொண்டு மறை வேள்விகள் பல செய்தான். திருமால் பால் பேரன்பு கொண்டு அவனைத் தன் மனத்தின்கண் வைத்து வழிபட்டான். திருமால் கோயில் வழிப்பாட்டுக்கென ஒகத்தூர் என்னும் நெல்வளம் சிறந்த ஊரை இறையிலி முற்றூட்டாக நல்கினான். இவன் அறநூல் வல்ல அந்தணர்களுக்குப் பெரும் பொருளை நீர்வார்த்துக் கொடுப்பான்; அந் நீர் ஆறாகப் பெருகியோடி அரண்மனை முற்றத்தைச் சேறாக்கிவிடும்; அம் முற்றத் திற்குள் அந்தணரும் பரிசிலரும் இரவலரும் எளிதில் புகுதல் கூடுமேயன்றிப் பகைவர் கனவினும் புகமுடியாது என்று புலவர்கள் புகழ்ந்து கூறுகின்றனர்.

இக் கடுங்கோவுக்கு இசையிலும் கூத்திலும் மிக்க ஈடுபாடு உண்டு. நகர்ப்புறத்திலிருக்கும் புறஞ்சிறைத் தெருவில் வருவது தெரியினும், கூத்தர்களை அன்போடு வருவித்து அவர்களுக்குச் செய்யப்பட்ட தேர்களையும் குதிரைகளையும் அழகுற அணிந்து நல்குவது வழக்கம்.

இத்தகைய செயல்களால், அறவேள்விகளை முன்னிருந்து செய்து முடிக்கும் வேதியர் தலைவனிலும் செல்வக் கடுங்கோவின் அறநூலுணர்வு மிக்கிருந்தது. அதற்கேற்ப அவனது உள்ளமும் வளம் பெற்றிருந்தது. அதனால் அவனது புகழ் தமிழகம் முழுவதும் நன்கு பரவியிருந்தது. நல்லொளி நிகழும் பண்பும் செய்கையும் முடையோர் எங்கே இருக்கின்றனரோ அங்கே நல்லிசைச் சான்றோர் நயந்து சென்று சேர்வது இயல்பு. அதனால் தமிழகத்தில் மேன்மையுற்றிருந்த அந்தணரும் சான்றோரும் கடுங்கோவை நாடி வருவாராயினர்.

அந் நாளில் குடநாட்டில் குன்றின் கட்பாலி என்ற ஊர் ஒன்று இருந்தது. இப்போது அது கோழிக் கோட்டுப் பகுதியில் பாலிக்குன்னு என்ற பெயருடன் விளங்குகிறது அவ்வூரில் ஆதனார் என்னும் நல்லிசைச் சான்றோர் வாழ்ந்தார். அவரைக் குன்றின்கட் பாலி ஆதனார் என அக் காலத்தார் வழங்கினர். பிற்காலத்தே குன்றின்கட் பாலி என்பது குண்டுகட்பாலியென ஏடுகளில் திரிந்து வழங்குவதாயிற்று. அப் பகுதி தமிழ் நலம் குறைந்து கேரளமான காலையில் பாலிக்குன்னு எனச் சிதைந்தது.

பாலியாதனார் வஞ்சி நகர்க்கண் இருந்து அரசு புரிந்து, சான்றோர் பரவும் தோன்றலாய் விளங்குவது தெரிந்து, செல்வக்கடுங்கோ வாழியாதனைக் காணச் சென்றார். இடையில் அரசியற்றலைவர் சிலரைக் கண்டார். அவர்கள் இவர் குடநாட்டவர் எனத் தெரிந்து இவரைத் தொடக்கத்தே வேந்தனிடம் நேரிற் செல்லாவாறு தடுத்தனர். வடவருள் ஒருவராய்க் குடநாட்டவர் போல உருக்கொண்டு வந்திருக் கின்றாரோ என அவர்கள் ஐயுற்றனர். ஆதனார், செல்வக்கடுங்கோவின் மறமாண்பையும் அறவுணர்வை யும் கொடைச் சிறப்பையும் உடன் வந்த கிணைப் பொருநன் இயக்கிய பறையிசைக் கேற்பப் பாடினர். அதன்கண், கடுங்கோவை, “எங்கோன்” என்று பேரன்போடு பாராட்டி, “பகை மன்னர் பணிந்து திறையாகக் கொடுத்த செல்வத்தை நகைப்புல வாணராகிய பரிசிலர்க்கும் இரவலர்க்கும் ஈந்து அவர் நல்குரவை அகற்றி மிகவும் விளங்குக” என்று பாடினர். அது கேட்டதும் அவர்கள் தாம் ஏந்திய குடையைப் பணிந்து அவர்க்கு வணக்கம் செய்து வேந்தனிடம் விடுத்தனர். விடுத்தனர்.

செல்வக் கடுங்கோ, ஆதனாரை அன்போடு வடவேற்று அவர் பாடியவற்றைக் கேட்டு மிக்க உவகை கொண்டு குன்று போலும் களிறும், கொய்யுளை அணிந்த குதிரையும், ஆனிரையும், நெல்லம் பிறவம் நிரம்பத் தந்து மகிழ்வித்தான். அவன் செயலைக் கண்ட ஆதனார் வியப்பு மிகுந்து, “பூழியர் பெருமகனான எங்கள் செல்வக் கடுங்கோ , வஞ்சி நகரின் புறநிலை அலைக்கும் பொருநை யாற்று மணலினும், அங்குள்ள ஊர்கள் பலவற்றினும் விளையும் நென்மணியினும் பல்லூழி வாழி[15]” என்று வாழ்த்திய பாட்டொன்றைப் பாடி அவன்பால் விடை பெற்றுச் சென்றார்.

அக் காலத்தே, பாண்டி நாட்டின் வடபகுதியில் உற்ற பறம்பு நாட்டின் தலைவனான வேள்பாரிக்கு உயிர்த் தோழராக விளங்கிய கபிலர் என்னும் சான்றோர், அப் பாரி இறந்ததனால், அவனுடைய மகளிர் இருவரையும் மணஞ்செய்து தர வேண்டிய கடமையைத் தான் ஏற்றுக் கொண்டு, பாரி மகளிரை. மணந்து கொள்ளுமாறு சில வேந்தர்களை வேண்டினர். அவர்கள் மறுக்கவே, கபிலர், அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு திருக்கோவலூர்க்குச் சென்று பார்ப்பாரிடையே அவர்களை அடைக்கலப்படுத்தி அரசிளஞ் செம்மல்களை நாடிச் சென்றார். பார்ப் பார்க்கும் அவர்களுடைய பொருட்கும் யாரும் தீங்கும் செய்வது இல்லையாதலால், கபிலர் பாரி மகளிரை அவரிடம் அடைக்கலப்படுத்தினார்.

அப்போழ்து, அவர் சேரநாட்டு வேந்தனான செல்வக் கடுங்கோ, வாழியாதன் சிறப்பைச் சான்றோர் சிலர் எடுத்தோதக் கேட்டு, அவனது சேர நாடு அடைந்தார். அந் நாளில் வாழ்ந்த நல்லிசைச் சான்றோருள், “செறுத்த செய்யுள் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன், இன்று உளனாயின் நன்றுமன்[16]” என வேந்தராலும், உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்[17]” என்று சான்றோர் களாலும், “பொய்யா நாவிற் கபிலன்[18]” என நல்லிசைப் புலமை மெல்லியலாராலும் புகழ்ந்தோதப்படும் பெருஞ் சிறப்புற்று விளங்கியவர் கபிலர்.

கபிலர் சேர நாட்டுக்குப் புறப்பட்ட போது, செல்வக் கடுங்கோ வஞ்சி நகரில் இல்லை; நாட்டில் சிற்றரசர் சிலரிடையே நிகழ்ந்த போர்வினை குறித்துச் சென்று பாசறையில் தங்கியிருந்தான். கபிலர் சென்றடைந்த போது போர் முடிந்துவிட்டது. பொருத வேந்தர் கடுங்கோவைப் பணிந்து திறை நல்கினர். போர் வினையில் புகழ்பெற்ற தானை மறவரும் போர்க்களம் பாடும் பொருநர், பாணர், கூத்தர், புலவர் முதலிய பரிசிலர் பலரும் வேந்தன்பால் பரிசில் பெற்றனர். அவனது அத் திருவோலக்கத்துக்குக் கபிலர் வந்து சேர்ந்தார். அவரது வருகை கேட்ட சேரமான் மகிழ்ச்சி மீதூர்ந்து, காலின் ஏழடி முன் சென்று வரவேற்று, அன்பும் இனிமையும் கலந்த சொல்லாடி மகிழ்ந்தான்.

பின்னர், அவன் வேள்பாரியின் புகழையும் மறைவையும் கபிலர்க்கு உண்டாகிய பிரிவுத் துன்பத்தையும் பிறவற்றையும் பற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு, “சான்றீர், வேள்பாரி இருந்திருப்பானாயின், எங்கள் நாட்டுக்கு உங்கள் வருகை உண்டாகாதன்றோ?" என்றொரு சொல்லைத் தன் உண்மையன்பு விளங்க இனிது எடுத்துரைத்தான். வேந்தராயினும் வினைவல் ராயினும் யாவராயினும் சான்றோர் பரவும் சால்புடைய ராயின், அவரைக் கண்டு பாடிப் புகழ்வது, நல்விசை விளைக்கும் சொல்லேருழவர் இயல்பு என்பதை மறந்து சேரமான் கூறியது கபிலர்க்கு வியப்பைத் தந்தது ஆயினும், அதனை அவ்வாறே கூறாமல், இளையனான செல்வக் கடுங்கோவின் செம்மலுள்ளம் மகிழ்வும், தமது கருத்து விளங்கவும் உரைக்கத் தொடங்கி, முகத்திற் புன்னகை தவழ, “வேந்தே, எங்கள் தலைவனான வேள்பாரி விண்ணுலகம் அடைந்தான்; என்னைக் காத்தளிக்க வேண்டும் என யான் குறையிரந்து வந்தே னில்லை. ‘ஈத்தற்கு இரங்கான், ஈயுந்தோறும் இன்பமே கொள்வன்; அவ்வகையிலும் பெருவள்ளன்மையே உடையன் எனச் சான்றோர் நின்னைப் பற்றிக் கூறினர்; அந்த நல்லிசையே, என்னை ஈர்த்துக் கொணர்ந்து, நின்னால் கொன்று குவிக்கப்பட்ட களிறுகளின் புலால் நாறும் இப் பாசறைத் திருவோலக்கத்திற் சேர்த்துளது; அதனால்தான் யான் வந்துளேன்[19] என்ற கருத்தமைந்த விடையொன்றைப் பாட்டுருவில் கூறினர். அதன் சொன்னலமும் பொருணலமும் செல்வக் கடுங்கோவின் உள்ளத்தைக் கபிலர்பால் பிணிந்து விட்டன; தன்னோடே இருக்குமாறு வேண்டி அவரைத் தன் வஞ்சி நகர்க்கு அழைத்துச் சென்றான்.

வஞ்சிமா நகர்க்கண் இருந்து வருங்கால், செல்வக் கடுங்கோ , வடவேந்தர் இருவரை ஒரு முற்றுகையில் தமிழ்ப்படை செறித்து வென்றதும், அவர்களாற் கைவிடப்பட்ட தானை மறவரை ஆட்கொண்டதும் சான்றோர் சொல்லக் கபிலர் கேட்டுக் கடுங்கோவின் பெருந்தன்மையைப் பாராட்டி, “வேந்தே, நீ கண்டனையேம் என்று புகலடந்த மறவரை உங்கள் சேரர் குடிக்குரிய முறைமையுடன் ஆண்டாய்; அதனால், உலகத்துச் சான்றோர் செய்த நல்லறம் நிலைபெறும் என்பது மெய்யானால், நீ வெள்ளம் என்னும் எண் பலவாகிய ஊழிகள் வாழ்வாயாக[20]” என வாழ்த்தினார்.

ஒரு நாள், செல்வக்கடுங்கோ, கபிலரோடு சொல்லாடி யிருக்கையில் அவருடைய கையை அன்போடு பற்றினான். அது பூப்போல் மென்மையாக இருந்தது. அவனுக்கு அது புதுமையாக இருக்கவே, அவன் கபிலரை நோக்கி, ‘நும்முடைய கை மென்மையாக இருக்கிறதே, என் கை அவ்வாறு இல்லையே!” என்று வியந்தான். அவன் “நின்னுடைய” என்னாமல் “நும்முடைய கை” எனப் பன்மையிற் கூறியதனால், அது தன்னையும் தன்னையொத்த பிற புலவரையும் குறித்ததாகக் கொண்டு, “வேந்தே, நின்னைப் பாடுவோர் கைகள் நாடோறும் ஊன்துவையும் கறிசோறும் உண்டு வருந்துதல் அல்லது பிறிது தொழில் அறியா; ஆதலால் ‘நன்றும் மெல்லிய பெரும்’ என்றும், களிறுகளைச் செலுத்தும் தோட்டி தாங்கவும், குதிரைகளின் கடுவிசை தாங்கவும், வில்லிடைத் தொடுத்து அம்பு செலுத்தவும், பரிசிலர்க்கு அரும்பொருளை அள்ளி வழங்கவும் வேண்டியிருப்பதால், ‘வலியவாகும் நின் தாள்தோய் தடக்கை[21]’ என்றும் அழகு திகழப் பாடினார். உவகை மிகுதியால், கடுங்கோ உள்ளம் நாணி உடல் பூரித்தான்.

செல்வக் கடுங்கோ அரசியற் பணியில் ஈடுபட்ட டிருக்குங்கால் கபிலர் சேர நாட்டைச் சுற்றிப் பார்த்து வந்தார். அந் நாட்டின் மலைவளமும் பிறவளங்களும் அவர்க்கு மிக்க இன்பத்தைச் செய்தன. கடலிலிருந்து எடுக்கப் பெற்ற முத்துகளைப் பந்தர் என்னும் ஊரினர்[22] தூய்மை செய்து மேன்மை யுறுவித்தனர்; கொடுமணம்[23] என்னும் ஊரிலிருந்து அரிய கலங்கள் செய்யப் பெற்று வந்தன. காட்டு முரம்பு நிலப் பகுதியில் முல்லையும் பிடவமும் பூத்து அழகிய காட்சி நல்கின. முல்லைப் பூவின் தேனையுண்டு பிடவத்தைச் சூழ்ந்து முரலும் வண்டினம், சேர நாட்டு மறவர் அணியும் பனந் தோட்டுக் கண்ணியில் விரவப்படும் வாகைப் பூவின் துய்போலத் தோன்றின. அங்கு வாழ்பவர் அந் நிலத்தை உழுத சாலின்கண் மணிகள் பல கிடைக்கப் பெற்றனர்.[24] நெல்விளையும் வயற் பகுதியில் வாழ்ந்தோர் வயலில் நெல் விளைந்த போது, நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் நெல்லைத் தொகுத்து வயற்புறத்தே நிற்கும் காஞ்சி மரங்களின் நீழலிற் குவித்துக் கள் விற்பார்க்குக் கொடுத்து அதனை வாங்கியுண்பர். களிமயக்குற்ற சிலர் தம் தலையிற் சூடிய ஆம்பற் கண்ணியை மொய்க்கும் வண்டுகளை ஓப்பி மகிழ்வர்[25] இப் பகுதிகளை ஆளும் சிற்றரசர், சில காலங்களில் தமது வலியையும் கடுங்கோலின் பெறாவலியையும் ஆராய்ந்து போர் தொடுப்பதும், அதனால் அந் நாடுகள் வளன் அழிவதும் கபிலர் நினைவை வருத்தின. அவர் கடுங்கோவை வேண்டி, “வேந்தே , நின் பகைவர் பணிந்து திறைதருவா ராயின், அதனை யேற்றுப் போரை நிறுத்துக; அவர் நாடுகள் செல்வ வளத்தால் புலவர் பாடும் புகழ்பெற்று விளங்கும்[26]“ என்று இயம்பினர்.

செல்வக்கடுங்கோ ஆட்சி புரிந்து வருகையில் சோழ பாண்டிய நாட்டுத் தலைவர்களிற் சிலர் கொங்கு நாட்டில் வஞ்சி சூடிப் போர் செய்தனர். பொறை நாட்டிற்குத் தென் கிழக்கிலுள்ள பகுதிகளில் அவர்கள் முன்னேறி வந்தனர். சேரர் படைத் தலைவர்களும் சிற்றரசர்களும் அவர்களை அப் பகுதிகளில் புகுதல் கூடாது என விலக்கினர். அவர்கள் அவ்வுரைகளைக் கேளாது இப் பகுதி தமிழ் வேந்தர் மூவருக்கும் பொதுமையானது ; சேரர்க்கே சிறப்பாக உரியது எனல் கூடாது என மறுத்துப் போருடற்றினர். இச் செய்தி செல்வக் கடுங்கோவுக்குத் தெரிவிக்கப்பட்டது இது சோழ பாண்டியர்க்கும் பொது என்ற அச் சொல்லைக் கேட்கப் போறாது தனது பெரும் படையைத் திரட்டிச் சென்று எதிர்த்து வந்த வேந்தரை முறையே பொருத வென்றி எய்தினான். மேலும், தன் நாட்டவர்க்கு வாழிடம் சிறிது என்று சொல்லி முன்னையினும் விரிவான நிலப்பகுதியைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டான். பின்பு அங்கே பாசறை நிறுவி, அந் நாட்டில் போர்வினையால் கெட்ட குடிகளைத் திருத்திப் பொறை நாட்டினும் பூழி நாட்டினும் போதிய இடமின்றி வருந்திய நன்மக்களைக் குடியேற்றிச் செவ்விய காவல் முறைகளை நன்கு வகுத்திருந்தான். சின்னாட்குப்பின் வினை முடிந்ததும் வேந்தன் மீளாமை கண்ட கபிலர், கொங்கு நாட்டில் அவன் தங்கியிருந்த பாசறைக்கு வந்து சேர்ந்தார். அவரோடு வேறு சில சான்றோரும் வந்தனர். அவர்களைச் சேரமான் அன்போடு வரவேற்று இன்புற்றான். பின்பு நாட்டின் நலமறிவான் போல அச் சான்றோரை நோக்கினான். அவர்களும் அக் குறிப்பறிந்து, நாட்டின் நல மிகுதியை எடுத்து விளம்பினர். மகிழ்ச்சி மீதூர நம் செல்வக் கடுங்கடுங்கே; கபிலரை நோக்கினான்; அவர், “பகைவரால் கெட்ட குடிகளை நல்வாழ்வு பெறுவித்த வேந்தே, தான்வாழ ஏனோர் தன் போல் வாழ்க என்ற அசையாக் கொள்கையுடையை நீ; நின்னைப் போலவே நின் முன்னோரும் இருந்தமையால், இனிய ஆட்சியைச் செய்தனர்; நிலம் நற்பயன் விளைவித்தது; வெயிலின் வெம்மை தணியுமாறு மழை தப்பாது பெய்தது; அதற்கேற்ப வெள்ளிமீன் உரிய கோளிலே நின்றது; நாற்றிசையிலும் நாடு நந்தா வளம் சிறந்து விளங்கிற்று[27] என்று பாடிப் பாராட்டினர். அப் பாட்டைக் கேட்ட வேந்தரும் சான்றோரும் பிறரும் அவர் கூறியதை உடன்பட்டு உவகையுற்றனர்.

கபிலர் வாழ்ந்த காலத்தில், சோழ பாண்டிய நாடுகளில் சிற்றரசர்களும் குறுநிலத் தலைவர்களும் சிறந்திருந்தனரே யன்றி, முடிவேந்தர் எவரும் புலவர் பாடும் புகழ் கொண்டு விளங்கவில்லை. இந் நிலையைக் கபிலர் பாடிய பாட்டுகளைக் காண்போர் நன்கு காணலாம். இந் நிலையால் நாட்டில் வாழ்ந்த பாணர், கூத்தர், பொருநர், புலவர் முதலிய பலரும் செல்வக் கடுங்கோவின் திருவோலக்கம் நோக்கி வருவாராயினர். அவர்கட்கு ஏற்ற வரிசையறிந்து வரையா வள்ளன்மை செய்த கடுங்கோவின் புகழ்க்கு எதிரே அச் சோழ பாண்டியர் பெயரும் பிற செல்வர் சிறப்பும் விளங்கித் தோன்றவில்லை. இதனைப் புலமைக் கண்கொண்டு நோக்கிய கபிலர், வேந்தனை நோக்கி, “சேரலர் பெரும் , விசும்பின்கண் ஞாயிறு தோன்றி ஒளிருங்கால், அங்குள்ள விண்மீன்கள் ஒளியிழந்து அஞ் ஞாயிற்றின் ஒளியில் ஒடுங்கிவிடுகின்றன; அதுபோலவே, நின்புகழ் ஒளியில் ஏனைவேந்தர் அனைவரும் ஒளியிழந்து ஒடுங்கிவிட்டனர்; பரிசிலர் கூட்டம் நின்னை நோக்கி வந்த வண்ணம் இருக்கிறது; அதே நிலையில் அக் கூட்டத்திடையே நின்பால் வந்தபின் பசியும் இல்லை; பசியுடையோரைக் காண்பதும் அரிது; அம் மகிழ்ச்சி யாலன்றோ நின்னை இப் பாசறை இடத்தே காண வந்தேன்[28]” என்று பாடி அவனை மகிழ்வித்தார். வந்தோர் பலருக்கும் விடை கொடுத்த கடுங்கோ - கபிலரை மட்டும் தன்னோடே இருத்திக் கொண்டான். இருந்து வருகையில் ஒருநாள், தான் வந்த வினைத் திறத்தைக் கூறலுற்று, “சான்றீர், என் நாட்டவர்க்குக் கடலும் மலையும் காடும் நின்று போதிய இடம் நல்காமையால், சிறிதாயிருக்கும் அதனை விரிவு செய்தல் வேண்டி இந் நாட்டிற்கு வந்தேன்; இங்கே இடம் பெற்றிருந்த வேந்தர் இந் நிலம் எல்லோர்க்கும் பொது என்று சொல்லிப் போர் தொடுத்தனர். அது பொறாது இவ் வினையை மேற்கொண்டு வருவது கடனாயிற்று” என்று சொல்லி வினைக்கு ஆவன செய்யலுற்றான். கபிலர் வினை வேண்டுமிடத்து அறிவு உதவி வந்தார். இரண்டொரு நாட்குப்பின் ஒரு நாள் வெயில் வெம்மை மிகுதியாக இருந்தது. அதனைப் பொறாமல் கபிலர் வெதும்புவதைக் கடுங்கோ கண்டு விளையாட்டாகச் “சான்றீர், இவ் வெயில் என்னைப் போல் வெம்மை செய்கிறதன்றோ ?'’ என்றான். “வேந்தே, இந்த ஞாயிறு நின்னைப் போல்வது என்றற்கு என் நா இசையாது; இதன் பால் பல குறைகள் உண்டு” என்று சொல்லி, ஞாயிற்றை நோக்கி, “இடம் சிறிது என்ற ஊக்கத்தாலும், போகம் வேண்டியும், நிலம் எல்லார்க்கும் பொது என்னும் சொல் வலியுடையார்க்கு ஏலாது என் கொள்கையாலும் அறப்போர் புரியும் தானையை யுடைய எங்கள் சேரர் பெருமானை, ஏ, ஞாயிற்றே! நீ எவ்வாறு ஒத்தல் கூடும்? நீ பொழுது வரையறுக்கின்றாய், புறங்காட்டி மறைகின்றாய்; நாடோறும் பொழுது தோறும் மாறி மாறி வருவாய்; மாலைப் போதில் மலையில் ஒளிப்பாய்; சேரமான் பால் பொழுது வரையறுத்தல், புறங்காட்டி இறத்தல் முதலிய குற்றம் சிறிதும் இல்லையல்லவா? அவ்வாறு இருக்கவும் நீ நாணமின்றி, ‘பகல் விளங்குதியால் பல்கதிர் விரித்தே[29]”, என்று உள்ளுதோறும் இன்பம் ஊறும் தெள்ளிய தமிழ்ப்பாட்டைப் பாடினார்.

பின் பொருநாள், கபிலர் தானைமறவர் சிலரைக் கண்டார். அவரோடு அளவளாவியதில், வினைமுடியும் வரை அவ் வினைமேல் நின் அவரது நினைப்பு அது முடிந்ததும், தத்தம் மனை மேல் படர்ந்திருந்தமை தெரிந்தது. அவர், செல்வக்கடுங்கோவைக் கண்டு, “வேந்தே , நின் தானை மறவரைக் கண்டேன். பகைவர் மதிலை அழித்தல்லது உணவு கொள்வதில்லை என வஞ்சினம் கூறி, அது முடியுங்காறும் உண்ணாதேயிருந்து முடிந்த பின்பே உண்டொழுகும் உரவோராக இருக்கின்றனர்; பகைவர் ஊரைக் கொண்டன்றி மீள்வதில்லை என உறுதி கொண்டிருந்த அவர்கள், அவ்வூர்களைக் கைக்கொண்டு மகிழ்கின்றனர்; அதனோடமை யாது, வேறு செய்வினை யாது என் வினைமேல் நினைவுறுகின்றனர். ‘இவர்கட்குத் தம் மனைவாழ்வில் நினைவு செல்லாதோ?’ என்ற ஐயம் என் நெஞ்சில் எழத் தொடங்கிற்று. பகைவர் களிறுகளைக் கொன்று அவற்றின் கோடுகளைக் கைக்கொண்டு மனையடைந்து, பின்னர் அவற்றைக் கள்ளுக்கு விற்றுண்டு. உத்தரகுருவில் வாழும் உயர்ந்தோரைப் போல் அச்சம் அறியாத இன்ப வாழ்வில் இனிது இருக்கற்பாலர். நின் பிரிவை ஆற்றாமல் வருந்தி, வினைமுற்றி மீண்டு நீ வந்து கூடும் நாளைச் சுவரில் எழுதி விரல் சிவந்து வழிமேல் விழி வைத்திருக்கும் அணங்கெழில் அரிவையர் மனத்தைப் பிணிப்பது நின் மார்பே. நின் தாணிழலில் வாழும் வீரர் மார்பும் அப் பெற்றியது தானே” என்று கருத்து அமையக் கூறினர்[30]. அவர் கருத்தை அறிந்த வேந்தன் தன் நகர்க்குத் திரும்பினான். வாகை சூடிச் சிறக்கும் அவன் தானையும் மகிழ்ச்சியுடன் மீண்டது.

செல்வக் கடுங்கோ வஞ்சிநகர்க்கண் இருக்கையில் வேனிற் காலம் வந்தது. சேரவேந்தர்க்குரிய முறைப்படி, வேந்தன் மலைவளம் விரும்பிப் பேரியாற்றங் கரையில் நிற்கும் நேரி மலைக்கு அரசியற் சுற்றம் சூழ்வரச் சென்றான். சேர வேந்தர் தங்கிய அவ்விடம் இப்போது நேரிமங்கலம் என்ற பெயருடன் இருக்கிறதென்பது நினைவுகூரத் தக்கது. மலைவாணர், இனியவும் அரியவு மாகிய பொருள்களைக் கொணர்ந்து தந்து சேரவரசனை மகிழ்வித்தனர் அங்கே அவனது திருவோலக்கத்துக்குக் கபிலரும் வந்து சேர்ந்தார்.

கடுங்கோவின் திருவோலக்கத்தில் ஒருபால் அரசியற் சுற்றத்தார் இருந்தனர்; ஒருபால், தானைத் தலைவர், ‘எந்தக் கணத்திலும் மக்கள் இறப்பது உண்மை; அதனால், புகழ் நிற்கப் பொருது இறப்பதே வாழ்க்கையின் பயன்’ என எண்ணும் காஞ்சியுணர்வு பெற்றுக் காட்சி நல்கினர். ஒருசார் விற்படைத் தலைவர், ஒருபுடை நண்புடைய வேந்தர் இருப்பக் கடுங்கோவின் அருகில் மலர்ந்த கண்ணும் பெருத்த தோளும் கொண்டு, கடவுட் கற்பும் நறுமணங் கமழும் நெற்றியும் விளங்க, வேளாவிக் கோமான் பதுமன் கூத்தும் நவிற்றிப் பரிசில் பெற்று மகிழ்ந்தனர். இவற்றைக் கண்ட கபிலர், “பூண் அணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப, நின் நாண்மகிழ் இருக்கை இனிது கண்டிரும்[31]” என்று பாடினர்.

சின்னாள்கள் கழித்தன. கபிலருக்குப் பாரி - மகளிரின் நினைவு வந்தது. மலையமான் நாட்டை நோக்கிச் செல்லும் கருத்துட் கொண்டார். தன் னிடத்தில் பேரன்பு செலுத்தும் கடுங்கோவுக்கு அதனை வெளிப்படக் கூறுதற்கு அஞ்சிக் குறிப்பாகத் தெரிவிக்க நினைத்தார். சேரமான் கொடைமடத்தை ஏனைச் சான்றோர்க்குத் தெரிவிப்பது போல, “சான்றீர், நீவிர் வேண்டுமாயின், செல்வக் கடுங்கோவைச் சென்று காண்மின்; அவன் பகைவர்பால் பெற்ற யானைகளை மிகைபட நல்குவான்; தன் நாட்டில் விளையும் நெல்லை, மரக்காலின் வாய் விரிந்து கெடுமளவு மிகப்பலமாக அளந்து தருவான்[32] என்ற கருத்து அடங்கிய பாட்டொன்றைப் பாடினர். பிறிதொருகால், பாணன் ஒருவனைச் செல்வக் கடுங்கோ, வாழியாதனிடத்தில் ஆற்றுப் படுக்கும் பொருளில், “பாணனே, எங்கள் பெருமானான செல்வக்கடுங்கோ, போர்ப்புகழ் படைத்த சான்றோர்க்குத் தலைவன், நேரி மலைக்கு உரியவன்; அம் மலையில் மலர்ந்திருக்கும் ‘காந்தட் பூவின் தேனையுண்ட வண்டு பறக்க இயலாது அங்கேயே சூழ்ந்து கிடக்கும். நீ அவன்பால் சென்றால், உனக்கும் உன் சுற்றத்தாருக்கும் கொடுமணம் என்ற ஊரில் செய்யப்படும் அரிய அணிகலங்களையும், பந்தர் என்னும் மூதூரிற் செய்யப்படும் முத்து மாலைகளையும் தரப் பெறுவாய்[33]” என்று பாடினர். இதன்கண் உண்ண லாகாத காந்தட் பூவின் தேனைப் படிந்துண்டதனால் வண்டினம் பறக்க இயலாது கெடுவது போலக் கடுங்கோவுக்கு உரியதாதலால் கைக் கொள்ளலாகாத நேரிமலையைக் கருதிப் போர் தொடுத்தமையால், பகை வேந்தர் கெட்டனர் என்ற கருத்துப் பொதுவாகவும், கடுங்கோவை அடைந்து அவன் தரும் கலங்களைப் பெறுவோர், தங்கள் நாட்டை மறந்து அவன் தாணிழலிலே கிடந்து வாழ்வர் என்று கருத்துச் சிறப்பாவும் உள்ஸ்ரீத்தப்பட்டிருப்பதைச் சேரமான் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டான்.

கடுங்கோவுடன் கபிலர் இருந்து வருகையில், சேர நாட்டின் வடக்கில் உள்ளது எனத் தாலமி முதலியோர் குறிக்கும் ஆரியக (Ariyake) நாட்டு[34] வேந்தனான பிரகத்தன் என்பான் கடுக்கோவின் நண்பனாதலால் அவனைக் காண வந்தான். அந்த ஆரியக வேந்தனுடன் இருந்து சின்னாள் பழகிய போது அவனுக்குத் தமிழரது அகப்பொருள் நெறியை அறிவுறுத்த வேண்டிய நிலைமை கபிலர்க்கு உண்டாயிற்று. அகப்பொருள் ஒழுக்கத்தைப் பண்டையோர் தமிழ் என்றே குறிப்பதுண்டு. “தள்ளாப் பொருள் இயல்பின் தண்மிழ்[35]” என்று பரிபாடல் குறிப்பது காண்க. அவன் பொருட்டுக் குறிஞ்சிப் பாட்டு எனப்படும் அழகிய பாட்டைப் பாடி அதன் வாயிலாகக் கபிலர் தமிழரது தமிழ் ஒழுக்கத்தின் தனி மாண்பை அவனுக்கு அறிவுறுத்தினார்.

ஒருகால், கடுங்கோ வாழியாதன் நேரிமலைக்கு வட கிழக்கில், பேரி யாற்றுக்கும் அயிரை யாற்றுக்கும் இடையில் வானளாவ உயர்ந்த கோடுகளும் மிகப் பல அருவிகளும் கொண்டு நிற்கும் அயிரை மலைக்குத் தன் சுற்றம் சூழச் சென்றான். அங்கே அவன் தங்கிய இடம் இப்போது தேவிகுளம் எனப்படுகிறது. அங்கே கொற்ற வைக்குக் கோயில் உண்டு. அதனைச் சேர வேந்தர் வழிபடுவது மரபு, அங்கே தங்கி இருக்கையில் கபிலர், வாழியாதனுடைய தானைச் சிறப்பும், அவனது தலைமைப் பண்பும் அரசமாதேவியின் நன்மாண்பும், பிறவும் முறைப்படத் தொகுத்தோதி, வானுலகம் கேட்குமாறு முழங்கும் அருவிகள் உச்சியினின்றும் இழியும் இந்த அயிரைமலை போல, “தொலையாதாக நீ வாழும் நாளே[36] என்று வாழ்த்தினார். அவ் வாழ்த்தின் கண், கடவுளர் கடன், உயர் நிலையுலகத்து ஐயர் கடன், முதியர் கடன் ஆகிய கடன் பலவும் இறுத்தது போல, எனக்குப் பரிசில் தந்து புரவக்கடன் ஆற்றுக என்ற குறிப்பையும் உள்ஸ்ரீத்திப் பாடினார். சின்னாட்குப்பின், வாழியாதன் கபிலருடன் கொங்கு நாட்டிற்குச் சென்றான். கபிலர்க்கு அவன்பால் விடைபெற்று மலையமான் நாட்டுத் திருக்கோவ லூர்க்குப் போக வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தது. சேரமானும் அவர் கருத்தை மதித்து, சிறுபுறம் என நூறாயிரம் காலம் பொன் கொடுத்து, நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான். இந் நன்றா என்னும் குன்று, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாணா என மருவி வழங்கிற்று. இந் நாளைப் பவானியை நாணா என்று கூறுகின்றனர். திருஞான சம்பந்தர் திருப்பதிகம் நாணாவைக் குன்றென்று கூறுகிறது. நன்றாவின் மேலிருந்து காட்டிய நாடு கொல்லிக் கூற்றமாகும். அங்குள்ள ஊர்களில் ஒன்று கபிலக் குறிச்சி எனப் பெயர் கொண்டு நிலவுவது இதற்குச் சான்று பகர்கிறது.

இது நிற்க, கடுங்கோவிடம் விடை பெற்றுக் கபிலர் சென்ற சின்னாட்குப்பின், சேரமான் வஞ்சிநகர் சென்று சேர்ந்தான், சில ஆண்டுகட்குப் பின், மதுரைக்கு வட கிழக்கில் வாழ்ந்த பாண்டி நாட்டுத் தலைவனொருவ னுக்கும் பாண்டி வேந்தனுக்கும் போர் உண்டாயிற்று. அப் போரில், பாண்டியனுக்குத் துணையாகச் செல்வக் கடுங்கோ ஒரு பெரும் படையுடன் பாண்டி நாடு அடைந்து சிக்கல் என்னும் இடத்தே பகை வேந்தனை எதிர்த்துப் போர் உடற்றினான். அப் போரில் பகைவர் எறிந்த வேற்படை ஒன்று செல்வக் கடுங்கோவின் மார்பிற்பட்டுப் பெரும் புண் செய்தது. அவனும் தன் அரிய உயிரைக் கொடுத்து என்றும் பொன்றாத பெரிய புகழைப் பெற்றான். அங்கேயே அவன் பள்ளிப் படுக்கப் பட்டதனால், பின் வந்த சான்றோர், அவனை, சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று சிறப்பித்தனர். அந்தச் சிக்கல் என்னும் இடம், இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோச மங்கைப் பகுதியில் உள்ளது.

சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு அரசு வீற்றிருந்தான். என்று பதிகம் கூறுகிறது.


  1. குறுந். 166.
  2. அகம். 142.
  3. பதிற். 90.
  4. A. R. No. 166 of 1936-7
  5. Ibid 335 of 1927 - 8
  6. யாரைக் கண்டால் யான் உடம்பு பெறலாம் எனச் சான்றோர், கூறினரோ அவன் நீயாயின என்பது குறிப்பு. புறம் 5.
  7. புறம். 195.
  8. அகம் 59.
  9. பறம். 17.
  10. பதிற். 70.
  11. புறம். 357,
  12. சேராறு - ஷிராவதி (Sharavadi)
  13. பதிற். 63.
  14. பதிற். 69.
  15. புறம். 387.
  16. புறம். 53.
  17. அகம். 78.
  18. புறம். 174.
  19. பதிற். 61.
  20. பதிற். 63.
  21. புறம், 14,
  22. பந்தர் இப்போது பொன்னாளி வட்டத்தல் பந்லூர் என்ற பெயருடன் இருக்கிறது.
  23. கொடுமணம் திருவாங்கூர் அரசில் குள்ளத்தூர் வட்டத்தில் உளது. பதிற் 67.
  24. பதிற் 66.
  25. பதிற். 62.
  26. பதிற். 62.
  27. பதிற். 59.
  28. பதிற். 64.
  29. புறம். 8.
  30. பதிற். 68.
  31. பதிற். 65.
  32. பதிற். 66.
  33. பதிற். 67.
  34. ஆரியகம், குட நாட்டின் வடக்கில் உள்ளது; ஆரியாவர்த்தத் இதனின் வேறு; அது இமயத்துக்கும் விந்தமலைக்கும் இடைப்பட்டது.
  35. பரி. 9:25.
  36. பதிற். 70.