சேரமன்னர் வரலாறு/11. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன் சிக்கற்பள்ளியில் துஞ்சிய காலத்தில் சேரவரசு கொங்கு நாட்டில் பரத்திருந்தது. அதற்குக் கொங்கு வஞ்சியென்னும் பேரூர் தலைநகராக விளங்கியதும் இடைக்காலத்தே கொங்கு வஞ்சி தஞ்சையிலிருந்து அரசாண்ட சோழர் கைப்பட்ட போது இராசராசபுரம் என்று பெயர் பெற்று இந் நாளில் தாராபுரம் என மருவிற்றென்பதும் முன்பே கூறப்பட்டன.
அக் காலத்தே கொங்கு நாட்டின் வடக்கில் புன்னாடும், எருமை நாடும்[1], கிழக்கில் தொண்டை நாடும் சோழ நாடும், தெற்கிலும் மேற்கிலும் சேர நாடும்
எல்லையாக விளங்கின. கோயம்புத்தூர்ப் பகுதி மீகொங்கு நாடு என்றும், குளித்தலையும் அதன் தென்மேற்குப் பகுதியும் கீழ் கொங்கு நாடென்றும், சேலம் பகுதி வடகொங்கு நாடு என்றும்[2] வழங்கின. பின்பு மைசூர் நாடும் அதனைச் சேர்ந்த கோலார் நாடும் சேலம் மாவட்டத்தின் வடபகுதியும் சேர்ந்து கங்க நாடெனப் பெயர் பெற்றன[3] , சேலம் பகுதியின் எஞ்சிய பகுதி முற்றும் கொங்கு நாடாகவே விளங்கிற்று. நாமக்கல்லிலுள்ள பழமையான கல்வெட்டொன்று அது வடகொங்கு நாட்டைச் சேர்ந்ததெனக் குறிக்கின்றது [4] .
இக் கொங்கு நாடு முற்றும் காடும் மேடும் நிறைந்து முல்லை வளமே சிறந்திருந்ததனால், இங்கே வாழ்ந்தவர் பெரும்பாலும் ஆடு மாடு மேய்க்கும் ஆயராகவே இருந்தனர். இது பற்றியே சான்றோர் கொங்கு நாட்டவரை “ஆகெழு கொங்கர்'’ எனச் சிறப்பித்துக் கூறினர்.
கொங்கு நாட்டின் வடக்கில் இருந்த புன்னாடு, முதற்கண் கங்கவேந்தர் ஆட்சிக்குள்ளாகிக் கங்க நாடானபோது, எருமை நாட்டில் எருமையூரரும் கொங்கு நாட்டில் அதியமான்களும் ஆட்சி செலுத்தினர். அதியமான்கள் இருந்தவூர் தகடூர் எனச் சங்க காலத்தில் வழங்கிற்று; இப்போது, அது தருமபுரியென வழங்குகிறது. எருமையது நாடு எருமை
நாடென்றும், தகடூரைத் தலைநகராகக் கொண்டது தகடூர் நாடென்றும் பெயர் பெற்று விளங்கின.[5]
தகடூர் நாட்டுக்குத் தெற்கில் காவிரியின் கீழ்க் கரைக்கும் கொல்லி மலைக்கும் இடையிலிருந்து கொல்லிக்கூற்றம் என்றும், காவிரியின் மேலைப் பகுதி குறும்பு நாடு என்னும் நிலவின. கொல்லிக் கூற்றத்தின் தெற்கில் மேற்குக் கிழக்காக ஓடும் காவிரி யாற்றின் வடகரையில் கீழ்ப்பகுதி மழநாடு எனப்பட்டது. இப்போது அது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி லால்குடி வட்டங்களாக விளங்குகிறது. கீழ்க் கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நாடும் உடுமலைப் பேட்டையின் ஒரு பகுதியும் பொறை நாடாகும்; எஞ்சிய பகுதியும் பழனி வட்டமும் வையாவி நாடு எனப்பட்டன; இடைக்காலத்தில் வையாவி நாடு வைகாவி நாடு என மருவி வழங்கினமை கல்வெட்டுகளால்[6] தெரிகிறது. பல்லடம் தாராபுரம் வட்டங்களின் ஒரு பகுதி குறும்பு நாட்டிலும் ஒரு பகுதி கீழ்க் கொங்கு நாட்டிலும், ஒரு பகுதி பொறை நாடு வையாவி நாடுகளிலும் இருந்தன. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் காலத்தே, வாகைப் பெருந்துறையில் நன்னனோடு செய்த போரின் விளைவாகக் கொங்கு நாட்டின் குறும்பு நாட்டுப் பகுதி முற்றும் சேரர்க் குரியதாயிற்று. வடக்கில் தகடூர் நாட்டுக்கும் சேரர் கொங்கு நாடான குறும்பு நாட்டுக்கும் எல்லையாகப் பூவானியாறு விளங்கிற்று. கீழ் கொங்கு நாட்டுக் கருவூர், கருவூரான வஞ்சி என்றும் கருவுரென்றும் கல்வெட்டுகளில் பெயர் குறிக்கப் படுகிறது. கருவூரும், முசிறியும் சேரநாட்டு மேலைக் கடற்கரையில் உள்ள ஊர்களின் பெயர்கள்; கொங்கு நாட்டைச் சேரவரசின்கீழ்க் கொண்டதற்கு அறிகுறி யாகச் சேரர் இப் பெயர்களைப் புகுத்தினராதல் வேண்டும். அதியமான்களுடைய கல்வெட்டுகள் வடார்க்காடு மாவட்டத்திலும் தென்னார்காடு மாவட்டத்திலும் காணப்படுகின்றன. திருநாவுக்கரசர் சூலைநோய் நீங்கிச் சைவரான இடமாகிய திருவதிகை, அதியரைய மங்கை எனப்படுவதால், அதற்கும் இவ்வதி யர்க்கும் தொடர்புண்டு என எண்ண இடமேற்படுகிறது.
இனி, மேலைக் கடற்கரை நாட்டுச் சேரரது ஆட்சி , கொங்குநாடு முழுதும் பரந்து தகடூர் நாட்டை நெருங்குவது கண்டனர் தகடூர் நாட்டு அதியமான்கள். அக் காலத்தே, ஆவியர், ஓவியர், மலையமான் என்பாரைப் போல, அதியர் என்னும் குடியில் தோன்றிப் புகழ் பொருள் படை ஆண்மை முதலிய வற்றின் சிறப்பால், அவர்கள் புலவர் பாடும் புகழ் படைத்து விளங்கினர். ஒளவையார்க்கு நெல்லிக்கனி வழங்கி நெடும் புகழ் பெற்று நெடுமான் அஞ்சி, இந்த அதியர் குடியில் தோன்றிய பெருந்தகையாவன். இக் குடியில் தோன்றிய தலைவர்கள் கி.பி. பத்துப் பன்னிரண்டாம் நூற்றாண்டினும் ஆங்காங்கு இருந்திருக் கின்றனர். பிற்காலத்தே சோழர்க்குத் துணையாய் இருந்து கன்னட வேந்தரோடும் பல்லவ சேர மன்னர்க்குத் துணையாய்ச் சோழ பாண்டியரோடும் பிறரோடும் பொருது மேன்மை எய்தியிருக்கின்றனர். சேரமான் பெருஞ் சேரலிரும் பொறை காலத்தில் அதியமான் எழினியென்பான் தகடூரிலிருந்து தகடூர் நாட்டை ஆண்டு வந்தான்.
சேர நாட்டரசு தனது தகடூர் நாடு வரையில் பரந்திருந்தது , அதியமான் எழினிக்கு மன அமைதியைத் தரவில்லை. அதனால், சோழ பாண்டிய முடிவேந்தர் சிறந்த நிலையில் இல்லாதிருந்தமையால், சேர மன்னர் கொங்குநாடு முழுதும் கொண்டு தமிழகம் எங்கும் சேர வரசினையே நிலைபெறச் செய்ய முயல்கின்றனர் என்று எழினி எண்ணினான். ஆங்காங்குத் தனக்குக் கீழ் தன் ஆணைவழி அரசு புரிந்த வேளிர் தலைவரையும் பிற ஆயர் தலைவரையும் ஒருங்கே கூட்டிச் சேரரைக் கொங்கு நாட்டினின்றும் போக்கிவிட வேண்டும் என அவர்களோடு ஆராய்ச்சி செய்தான். எழினி செய்த சூழ்ச்சிக்குத் துணையாய் வந்த தலைவர்களுள் கழுவுள் என்னும் ஆயர் தலைவனும் ஒருவனாவான்.
முன்பு ஒருகால், அக் கழுவுள், காமூர் என்னும் ஊரிடத்தே இருந்து கொண்டு, தென் கொங்கு நாட்டில் வாழ்ந்த குறுநில தலைவர்களான வேளிர்களின் நாட்டில் புகுந்து குறும்பு செய்தான். முசிறிப் பகுதியில் லிருக்கும் திருக்காம்பூர் அந் நாளில் காமூர் என வழங்கிற்று. அவனது குறும்பு கண்டு சினந்த வேளிர்கள் பதினால்வர் ஒருங்குகூடி அவனது காரை முற்றி நின்று கடும்போர் புரிந்தனர். கழுவுள் அவர் முன் நிற்கலாற்றாது ஓடி விட்டான். அவனது காமூரும் தீக்கிரையாயிற்று[7]. தோற்றோடிய கழுவுன் கொல்லிக் கூற்றத்துக்கு வடக்கில் தகடூர் நாட்டை அடுத்துள்ள நாட்டில் தங்கித் தன் கீழ் வாழ்ந்த ஆயர்கட்குக் காவல் புரிந்து வந்தான்.
அப்போது, தனக்கு அணிமையிலுள்ள அதிய மான்கள் சொல்லுமாறு, சேரர் வருகையைத் தடுக்காவிடின், அவரது பகைமை தோன்றித் தனக்கும் தன் கீழ் வாழ்வார்கக்கும் கேடு செய்யுமென எண்ணிக் கொல்லிக் கூற்றத்துத் தென் பகுதியிலும் காவிரியின் மேலைக் கரையிலுள்ள குறும்பு நாட்டிலும் புகுந்து குறும்பு செய்தான். அதியமான்களின் ஆதரவில் வாழ்ந்த வேளிர் சிலர் கழுவுளுக்குத் துணை புரிந்தனர்.
இந் நிலையில், செல்வக்கடுங்கோ வாழியாதன் பாண்டி நாட்டில் போர் புரிந்து சிக்கற்பள்ளியில் இறந்த செய்தி நாட்டிற் பரவிற்று. அற்றம் நோக்கியிருந்த கழுவுள் அச் சமயத்தை நெகிழவிடாமல் வேளிர் சிலர் துணை செய்யக் கொல்லிக்கூற்றம் முற்றும் தனதாக்கிக் கொண்டு காவிரியின் வடகரைப் பகுதியில் தனக்கு ஓர் இருக்கை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வரலானான்.
ஆயர் தலைவனான கழுவுள், கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றிக் கொண்ட செய்தி, கொங்கு வஞ்சியாகிய நகர்க்கண் இருந்த சேரர் தலைவன் அறிந்து, செல்வக் கடுங்கோவுக்குப்பின் சேரமானாய் அரசு கட்டில் ஏறிய பெருஞ்சோல் இரும்பொறைக்குத் தெரிவித்தான். உடனே, இரும்பொறை, பெரும்படை யொன்றைத் திரட்டிக் கொண்டு கொங்கு நாட்டுக் கொல்லிக் கூற்றத்துட் புகுந்தான். பெரும்படை போந்து தங்கியிருப்பதை உணராது கழுவுள் தன் அரணிடத்தே இருந்தான். படைப் பெருமை கண்ட வேளிருட் பலர் சேரமான் பக்கல் சேர்ந்து கொண்டனர்.
தொடக்கத்தில், காவிரிக் கரையில் இருந்து கொண்டே சேரரது படை வெட்சிப் போரைத் தொடங் கிற்று. ஆயர் தலைவர் சிலர் கரந்தை சூடிப் பொருது சேரரது பெருமை கண்டதும் அஞ்சித் தம்பால் இருந்த ஏனை ஆனிரைகளையும் கொணர்ந்து தந்து, “வேந்தே, எங்கட்கு இவற்றின் வேறாகச் செல்வமும் வாழ்வும் இல்லை; எங்களைக் காப்பது நின்கடன்'’ என்று சொல்லி அடி பணிந்தனர். வெட்சி வீரரான சேரர் படைத் தலைவர், அவர்களுடைய நிலைமையைக் காடு அருள் மிகுந்து, தாம் கவர்ந்து கொண்ட ஆனிரைகளையும் அவர்கட்கு அளித்து இனிது வாழுமாறு விடுத்து வடக்கு நோக்கிச் சென்றனர். கொல்லிக் கூற்றத்தின் இடையே அகழும் மதிலும் நன்கமைந்த ஓரிடத்தே கழுவுள் இருந்து வந்தான். ஆயர் தலைவர்கள் சேரமான் பால் புகல். அடைந்ததையும், அவர்கட்கு முன்பே தனக்குத் துணை செய்ய வந்த வேளிர்கள் தன்னின் நீங்கிச் சேரரொடு சேர்ந்து கொண்டதையும் அவன் அறிந்தான். முன்பு, அக் கொங்கு நாட்டில் வாழ்ந்த வேளிர்கள் தன்னொடு பகைத்துத் தனது காமூரைத் தீக்கிரையாக்கி அழித்த செய்தியை நினைத்தான்; “பழம்பகை நட்பாகாது” என்னும் பழமொழியின் உண்மை அவனுக்கு நன்கு தோன்றிற்று. கொல்லிக் கூற்றத்துக்கு வடக்கில் வாழும் அதியமான்களுக்கு அறிவித்து அவர்களது துணையைப் பெறக் கருதினான். ஒருகால் அவர்களும் வேளிரது. தொடர்புடையராதலால் தன்னைக் கைவிடுவதும் செய்வர் என்ற எண்ணம் அவற்குண்டாயிற்று. முடிவில் தனக்குரிய துணைவரை ஆராய்ந்தான். தானும் தன் கீழ் வாழும் ஆயர்கள் செய்தது போலச் சேரமானைப் புகலடைந்து அவனது தாணிழல் வாழ்வு பெறுவதே தக்கது எனத் துணிந்தான்.
வடக்கில் அதியரும் ஏனைப் பகுதிகளில் வேளிரும் போற்றத் தனிப் பெருமையுடன் அரசு செலுத்தி வந்த தன் வாழ்வையும், அவர்கள் அறியத் தான் சேரரைப் புகலடைந்தால் உண்டாகும் தாழ்வையும், அதியரும் வேளிரும் தன்னை இகழ்வர் என எழுந்த நாணமும் கழுவுளைப் பெரிதும் வருத்தின. அதனால், அவன் மேன்மேலும் வந்து கொண்டிருக்கும் சேரர் படைப் பெருமையைத் தடுத்தற்கான செயல் ஒன்றையும் செய்ய இயலாதவனானான். சேரர் படையும் போந்து அவனிருந்த நகரைச் சூழ்ந்து கொண்டது. கழுவுளின் கருத்தறியாத தலைவர் சிலர், கொட்டி வருந்தும் குளவிக் கூட்டைக் கெடுத்து, அவைகள் பறந்து போந்து கொட்டத் தொடங்கியதும் மூலைக்கொருவராய்ச் சிதறியோடும் இளஞ்சிறார்களைப் போல, முற்றி யிருக்கும் சேரர் படைக்குச் சினமூட்டி விட்டு, அது சீறியெழக் கண்டு வலியிழந்து சிதறினர். உயிரிழந்தவர் போக, எஞ்சினோர் ‘உய்ந்தோம் உய்ந்தோம்’ என ஓடி ஒளிந்து கொண்டனர். முடிவில், சேரர் படை கழுவுள் இருந்த ஊரைத் துவைத் தழிக்கலுற்றது; புகையும் எழுந்து அரண்மனையைச் சூழ்ந்து கவிந்து கொண்டது. சேரர் தலைவர் அம் மதிலைக் கைப்பற்றிக் கொண்டனர். அன்றிரவு விடியற் காலத்தே ஒருவர் கண்ணிலும் படாமல் கழுவுள் தான் ஒருவனுமே தனியனாய் வந்து இரும்பொறையின் இணையடி தாழ்ந்து புகல் அடைந்தான். அவனுடைய மான வுணர்வையும் கட்டாண்மையையும் கண்ட இரும்பொறை அருள் சுரந்து அவனைத் தனக்கு உரியனாக்கிக் கொண்டு முன் போல இருக்கச் செய்தான். ஆயர்களும் அவனுடைய தலைமையில் இருந்து வருவாராயினர். அன்றியும், ஆயருட் சிலர், பொறையனது தலைமையின் கீழ் அவற்குத் ‘துணைவராய்ப் பல போர்களில் நெறியும் வெற்றியும் காட்டித் தந்தனர். தோற்றோர் தந்த யானைகளையும் அருங்கலங்களையும் திறையாகப் பெற்றுக் கொண்டு இரும்பொறை வேறு பகைவரை நாடி மேற்செல்வானாயினன்.
அக் காலத்தில் சோழநாட்டில் கும்பகோணத்துக்கு அண்மையில் காவிரியிலிருந்து அரிசிலாறு பிரியும், இடத்தில் அரிசிலூர் என்றோர் ஊரிருந்தது. அஃது இப்போது மறைந்து போயிற்று. ஆயினும், அஃது இருந்ததென்பதைக் குடந்தைக் கீழ்க்கோட்டத்துக் கல்வெட்டொன்று[8] காட்டி நிற்கிறது. அவ்வூரில் அரிசில்கிழார் என்றொரு சான்றோர் அந் நாளில் சிறந்து விளங்கினார். கபிலரினும் ஆண்டில் இளையராயினும், சான்றோரினத்தில் அவர் தாமும் ஒருவராகக் கருதப் படும் தகுதி வாய்ந்திருந்தார். அதனால், அவருக்கு நம் தமிழகத்தில் மிக்க சிறப்புண்டாகியிருந்தது. சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் புலவர் பாடும் புகழ் பெறத் தக்க முடிவேந்தர் இல்லாமையால், தகுதி நிறைந்திருந்த சேர வேந்தரைக் காண அவர் சோழ நாட்டினின்றும் புறப்பட்டார். அப்போது, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டிற் பாசறையிட்டிருந்தான். அரிசில் கிழார் காவிரிக் கரை வழியே மழநாடு கடந்து கொங்கு நாட்டில் கொல்லிக் கூற்றத்தில் இரும்பொறை தங்கியிருக்கும் பாசறைக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே சேரமானைக் காண்பதற்கு இரவலரும் பரிசிலரும் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இரும் பொறையின் போர்ச் சிறப்பையும் வள்ளன்மையையும் அரிசில் கிழார்க்கு எடுத்துரைத்தனர். அவரும் அதற்கு முன்பே அவனுடைய குணநலங்களைக் கேள்வி யுற்றிருந்தார். சேர நாட்டு உழவர், உழுத படைச்சாலிலே அரிய மணிகளைப் பெறுவர் என்றொரு சிறப்பு அக் காலத்தில் தமிழகமெங்கும் பரவியிருந்தது. அது பற்றியே கபிலரும், “செம்பரல் முரம்பின் இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு[9]” எனப் பாடினர். இதனை அரிசில்கிழாரும் அறிந்திருந்தார். பாசறைத் திருவோலக்கத்தில் தன்னை வந்து காணும் இரவலர் பலர்க்கும் பகைவர்பாற் பெற்ற குதிரைகளை இரும்பொறை வரைவின்றி வழங்குகின்றான் என்பதும், அவனுடைய தானை மறவர் போர்வினையில் துறை போகியவர் என்பதும் அவர்க்குத் தெரிந்திருந்தன. அவர்கள் தமது நாட்டு வணிகர் கடல் கடந்து வாணிகம் செய்து வரும் கலங்கள் கரைக்கு வந்ததும், அவற்றை அவ்வப்போது பழுது பார்த்துச் செம்மை செய்து கொள்வது போல, போரிற் புண்பட்டு வரும் யானை களின் புண்ணை ஆற்றிப் பின்பு அவற்றைச் செய்வினை சிறப்புறச் செய்யும் விறனுடையன வாக்கி இரவலர்க்கு வழங்கினர். சேர நாட்டு உழவர் பகன்றைப் பூவால் தொடுத்த கண்ணி யணிந்த சில ஏர்களைக் கொண்டு பலவிதை வித்திப் பயன்பெறும் பாங்குடையர் என்று அரிசில் கிழார் சான்றோர் பால் கேட்டறிந்திருந்தார். பொறையனது பாசறையை நெருங்க நெருங்க, தாம் கேள்வியுற்றவையெல்லாம் அரிசிலார் உள்ளத்தில் ஓர் அழகிய பாட்டாய் உருக்கொண்டன. வேந்தன் அவரது வருகை அறிந்ததும், அவரை எதிர்கொண்டு வரவேற்று இருக்கை தந்து மகிழ்வித்தான். சான்றோராகிய கிழாரும் தனது மனத்தில் உருவாகியிருந்த பாட்டைச் சொல்லி இறுதியில், “இரப்போர்க்கு ஈதல் தண்டா மாசிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்தனென்[10]” என்றார். வேந்தன் இன்புற்று அவரைத் தன்னோடே இருக்குமாறு வேண்டினான்.
பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிக் கூற்றத்தில் இருந்த கழுவுளது குறும்பை அடக்கி அவன் தன்னைப் பணிந்து தனக்கு உரியனாமாறு செய்து கொண்டதையும், வேளிருட் சிலர் சேரமானைச் சேர்ந்து கொண்டதையும், தகடூர் நாட்டு வேந்தனான அதியமான் எழினி அறிந்தான். மேற்கே கொண்கான நாட்டுக்கும் கிழக்கே தொண்டை நாட்டுக்கும் இடையில் தனியரசு செலுத்தி வந்த அவனுக்குச் சேரவரசின் பரப்புப் பகைமை யுணர்வை எழுப்பிற்று. ஆகவே, அவன் ஆங்காங்கு வாழ்ந்த குறுநிலத் தலைவர்களை ஒன்று கூட்டி இரும்பொறையை வென்று வெருட்டுதற்கு உரியவற்றைச் சூழ்வானாயினன்.
அதியமான் எழினியின் குடிவரவும் காவற் சிறப்பும் கொடை வளமும் அரசில்கிழார் நன்கறிந்தன. அவன்பால் அவர்க்குப் பெருமதிப்புண்டு. சேரமானுடைய படைப் பெருமையைத் தான் நேரிற் கண்டிருந்தமையால், அதியமான் செயல் அவனுக்குக் கேடு தரும் என்பதை உணர்ந்து, அவன்பால் சென்று எடுத்தோதிப் போர் நிகழா வகையில் தடை செய்ய வேண்டும் என அரிசில்கிழார் எண்ணி, இரும்பொறையால் விடை பெற்றுக் கொண்டு தகடூர்க்குச் சென்றார். அதியமானையும், அவனுடைய தானைத் தலைவர்களையும், துணை நின்ற குறுநிலத் தலைவர் களையும் நேரிற் கண்டு, சேரனுடைய படைவலி, வினைவலி, துணைவலி முதலிய பல வலி வகைகளை எடுத்தோதினார். கழுவுள் தலைமடங்கி ஆயருடன் சேரமான்பால் புகல் அடைந்ததை இகழ்ந்து பேசினரே யன்றி, அவர்கள் அரிசில் கிழார் கூறியதை மனங் கொள்ளவில்லை. அதனால், அவர் அவர்களது மடமைக்குப் பெரிதும் மனம் கவன்று சேரமான் பக்கலே. வந்து சேர்ந்தார். அவரது முயற்சி பயன்படாமையை வேந்தன் குறிப்பாய் உணர்ந்து கொண்டு வேறு வகையிற் சொல்லாடி இன்புற்றான். அவனோடு இருக்கையில் அரிசில்கிழார் சேரனுடைய போர்ச் சுற்றத்தாரைக் கண்டார். அவர்கள் செல்வக் கடுங்கோவின் காலத்தேயே நல்ல பயிற்சியும் ஆற்றலும் கொண்டு விளங்கினவர். அவர்கள் கூறுவனவற்றையும் இரும் பொறை அவர்கட்கு அளிக்கும் நன்மதிப்பையும் காணக் காண அரிசில் கிழார்க்கு அவன்பால் உளதாகிய நற்கருத்து உயர்ந்தது. அத் தானை வீரரிடத்தே பேர் அறிவும் அறமும் சிறந்து விளங்கின. பல வகைகளில் சேரமானுடைய பண்பும் செயலும் அவர்களுடைய பண்பையும் செயலையும் ஒத்திருந்தன. தகடூர் நாட்டுத் தலைவர்கள், சேரரின் அறிவு ஆண்மை படை முதலியவற்றை அறிந்தொழுகுதற்கு ஏற்ற வய்ப்புகள் பல இருந்தும், தம்முடைய மடமையால் கெடுவது அரிசில் கிழாரது புலமைக் கண்ணுக்குப் புலனாயிற்று.
சில நாள்களுக்கெல்லாம் தகடூர் நாட்டுத் தலைவர்களுக்கும் சேரமானுக்கும் போருண்டாயிற்று, சேரர்படை, அதிபர் தலைவர்கள் இருந்த ஊர்களைச் சூழ்ந்த சூறையாடலுற்றது. சேரர் படை புகுந்த விட மெலாம் தீயும் புகையும் மிக்கொழுந்தன. ஒரே காலத்தில் பல இடங்களில் தீ எழுந்தது. எங்கும் தீயும் புகையும் சேரக் கண்ட அரிசில் கிழாரது நெஞ்சம் நீராய் உருகிற்று. அத் தீக்குக் காரணமாய் நின்ற பகை வேந்தரின் பெரு மடமையை நினைந்து ஒருபால் சினமும், ஊழிக் காலத்தில் உலகில் பரவும் திணியிருளைப் போக்குதற்கு ஞாயிறுகள் பல தோன்றுவதுபோலச் சேரர் படை கொளுவும் நெருப்புப் பரந்தெழுவதும், அக் காலத்தில் பரவும் பிரளய வெள்ளத்தை வற்றச் செய்யும் வடவைத் தீப்போல இத் தீயழல் வெறுப்புவதும் காண ஒருபால் வியப்பும் அரிசில்கிழார் உள்ளத்தில் உண்டாயின. சேரமானை நோக்கி, “இகல்பெருமையின் படைகோள் அஞ்சார் சூழாது துணிதல் அல்லது வறிதுடன் நாடு காவல் எதிரார் கறுத்தோர்[11]” என்று பாடினர். சிறிது போதில் தானைத்தலைவர் சிலர் கைப்பற்றப்பட்டுச் சேரமான்முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் சேரமானுடைய படைப் பெருமையை அறிந்து, “ஆ, இதனை அறியாமலன்றோ கெட்டோம்” என எண்ணும் குறிப்பு அவர் முகத்தில் நிலவிற்று. அதனை நோக்காது சேரமான் சினம் மிகுவது கண்டார் அரிசில்கிழார். அவர், “வேந்தே, உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி அறிந்தனை அருளாயாயின், யார் இவண், நெடுந்தகை, வாழுமோரே[12]” என்று பாடி அவருட் சிலரை உய்வித்தார்.
பின்னர், ஒருநாள் தகடூர் வேந்தனான எழினியும் வேளிர் சிலரும் தம்மிற் கூடிப் பொருவது சூழ்கின்றனர் எனச் சேரமானுடைய ஒற்றர் போந்து உரைத்தனர். சேரர் படை செய்யும் போர் வினையால் நீர்வளமும் நிலவளமும் பொருந்திய பகுதிகள் அழிவுற்றுப் புன்செய்க் கரம்பையாய்ப் பாழ்படுவதும், மக்கள் செந்நெல் பெறாது வறுமையுற்று வாடி வருந்துவதும் கண்டிருந்தமையால், தாமாகிலும் அதியமான்பால் தூது சென்று போரைக் கைவிடுவித்துச் சேரமானோடு அவனை நண்பனாக்க முயறல் வேண்டும் என நினைத்தார். இதனை வெளிப்படக் கூறலாகாமை கண்டு, “வேந்தே, நீயோ இரும்புலியைக் கொன்று பெருங்களிற்றைத் தாக்கி அழிக்கும் அரிமாவை ஒப்பாய்; நின்னோடு பகைத்துப் போர் செய்யக் கருதும் தகடூர் நாட்டு வேந்தரும் வேளிரும் பிறரும் வந்து அடிபணிந்து நின் ஆணைவழி நிற்கும் முடிவு கொள்ளாராயின், ‘தத்தம் பாடல் சான்ற வைப்பின் நாடுடன் ஆனாதல் யாவணது?[13]” என்றார்.
அவரது குறிப்பறிந்த சேரமான் இரும்பொறை அவரை நோக்கி, “சான்றீர், தகடூர் வேந்தனான எழினியும் அவன் துணை வரும் தம்மையும் தங்கள் தலைமை யையுமே நோக்கிச் செருக்கால் அறிவு மழுங்கி இருக்கின்றனர், அவரைத் தெருட்ட வல்லவர் யாவர்? ஒருவரும் இலர்” என்றான், அவன் கூறியது உண்மையே எனத் தேர்ந்தாராயினும், தாம் ஒருமுறை முயல்வது நன்று என்று அரிசில்கிழார் நினைத்து அவன்பால் விடை பெற்றுச் சென்றார். அதியமான் எழினியின் குடிச்சிறப்பும், நெடுமான் அஞ்சி போல் அவன் நல்லறிவும் சான்றோர் புகழும் சான்றாண்மையும் உடையனாதலும், அவரை சூழ்ந்திருக்கும் தீநெறித் துணைவர்களால் அவன் சேரனது படைப் பெருமை நோக்காது தன்னை வியந்து தருக்கியிருப்பதும் அவர் நெஞ்சை அலைத்தன.
அரிசில்கிழார் தகடூர்க்குச் சென்று கொண்டிருக் கையில் வழியில், தலைவர் சிலர் அவரைக் கண்டனர். அவர்கள் கொல்லிக் கூற்றத்தைக் கடந்து சேரர்படை நிலையைக் கண்டு வருவது அறிந்து அவர் வாயிலாகச் சேரர் படையின் பெருமையை அறிய விரும்பினர். அவர்களுடைய ஒற்றர்களை வழிப்போக்கர் உருவில் அவரெதிரே விடுத்தனர். அவர்கட்கு விடை கூறுவாராய், அரசில்கிழார், “வழிப்போக்கர்களே , சேரமானுடைய படையின் தொகை யாது என்று கேட்கின்றீர்கள். பகையரசர்களைக் களத்தே கொன்று அவர் படைகளை வீற்றுவீற்றோடத் துரத்தி, இறந்து வீழ்ந்த பிணத்தின் மேல் தேராழி உருண்டு ஓடப் பொரும் சேரமானுடைய தேர்களையும் குதிரைகளையும் மற்றவர்களையும் எண்ணுதல் முடியாது; ஆதலால், நான் அவற்றை எண்ணவில்லை; ஆனால், ஒன்று கொங்கருக்கு உரியனவாய் நாற்றிசையும் பரந்து மேயும் ஆனிரைகள் போல யானை நிரைகளை அவன் தானையின்கட் காண்கின்றேன்[14]” என்று இசைத்தார்.
பின்பு அவர் தகடூரை அடைந்து அதியமான் எழினியைக் கண்டு, அவர்களுடைய படைவலியையும் சேரனுடைய வலியையும் எடுத்துக்காட்டி இரண் டினையும் சீர்த்தூக்கித் தக்கது செய்யுமாறு தெரிவித்தார். உடனிருந்த தலைவர்களும் பிறரும் எழினியின் உள்ளத்தை மாற்றிப் போர் செய்தற்கே அவனைத் தூண்டினர். எழினியின் உள்ளமும் அவர் வழியே நின்றது. அது காணவே அரிசில் கிழார்க்கு மனச் சோர்வு பிறந்தது. தகடூரை விட்டுச் சேரமான் பாசறை யிட்டிருக்கும் இடம் வந்து சேர்ந்தனர். அவரது வாட்டம் கண்ட சேரமான், அரிசில் கிழாரது மனம் புண்ணுறு மாறு அவரை எழினி முதலியோர் இகழ்ந்து பேசினர் போலும் எனக் கருதி, நிகழ்ந்ததும் முற்றும் கூறுமாறு வேண்டினான். அப்போது; அவர், “வேந்தே, கொடை மடத்துக்கும் படைமடம் படாமைக்கும் எல்லையாக இருப்பவன் நீ; ஆதலால், இவ்விரண்டினும் பிறருக்கு எடுத்துக் காட்டாக இலங்குபவன் நீயே யாவாய். மேலும் நீ இப்போது பொறை நாட்டுக்கும் பூழி நாட்டுக்கும் கொல்லிக் கூற்றத்துக்கும் தலைவனாகியதனால், காவிரியின் இருகரையும் நினக்கு உரியவாயின; ஆகவே நீ “காவிரி மண்டிய சேய்விரி வனப்பின் புகா அர்ச் செல்வன்” ஆயினை. மேலும் இப்போது, பூழியர் மெய்ம்மறை, கொல்லிப் பொருநன், கொடித்தேர்ப் பொறையன் என்றற்கு அமைந்தனை; யான் சென்று அதியமானைக் கண்டு உனது இந்த அமைதியையும், உன்னுடைய வளம் ஆண்மை கைவண்மை முதலியன மாந்தர் அளவிறந்தன என்பதையும் விரித்து உரைத்தேன்; ஒரு நாளைக்குப் பல நாள் சென்று எடுத்துக் கூறினேன்; அவர்கள் கேட்கவில்லை. பின்னர், அந் நாட்டுச் சான்றோர் சிலரைக் கொண்டு சொல் வித்தேன். அதுவும் பயன் தரவில்லை. இவ்வாற்றால், என் மனம் கலங்கி மருண்டதும், அவர்கட்கு நல்லறிவு வழங்கும் திறம் யாது என எண்ணி வருந்தியதுமே இம் முயற்சியால் யான் பெற்ற பயனாயின[15] என்று சொல்லி வருந்தினார்.
இவற்றைக் கேட்டதும் பெருஞ்சொல் இரும் பொறையின் மனத்தில் சினத்தே கிளர்த்தெழுந்தது; இன்றிருந்து நாளை மறையும் வேந்தரினும், என்றும் பொன்றாது புகழுடம்பு பெற்று உலகம் உள்ளளவும் நின்று நிலவும் சான்றோரைத் தெளியாத வேந்தர் நிலத்திற்கே பொறை எனக் கருதினான்; தன் தானைத் தலைவரை நோக்கி, உடனே தகடூரை முற்றி உழிஞைப் போர் உடற்றுமாறு பணித்தான். கடல் கிளர்ந்தது போல அவனது பெரும் படை கிளர்ந்து சென்று தகடூரைச் சூழ்ந்து கொண்டது. அதியமான் எழினியும் அவற்குத் துணை நின்ற தலைவர்களும் போரெதிர்த்தனர். அப் போரில் மிகப் பல படைமறவர் மாண்டனர், களிறுகள் வீழ்ந்தன; குதிரைகள் இறந்தன; வேளிரும். வேந்தரும் பிறரும் வெந்திட்டு வெருண்டோடினர்; தகடூர் படை கண்டு பொடியாயிற்று. அதியமான் தன் தனியாண்மை விளங்க நின்று அருஞ்சமம் புரிந்தான். அறிஞர் அறிவு கொல்வார்க்கு அரண் ஏது? சேரமான் செலுத்திய படைக்கு ஆற்றாது முடிவில் எழினி தன் அகன்ற மார்பை வீரமகட்கு நலகி மறவர் புகும் வானுலகை அடைந்தான். அவனது தகடூரும் தீக்கிரை யாயிற்று. உய்ந்த வீரர் சிலர் சேரமான் அருள் நாடிப் புகலடைந்தனர். வெற்றிமிகு விளங்கிய பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை எனச் சான்றோர் பரவும் சால்பு எய்தினான்.
எழினியின் வீழ்ச்சி கேட்ட வேளிர் சிலர், சிதறியோடிய மறவரை ஒருங்கு திரட்டி வந்து போரெதிர்த்தனர். ஒருபால் முரசு முழங்க ஒருபால் போர்க் களிறுகள் அணிகொண்டு நிற்க, போர் எதிர்ந்து நிற்கும் பகைவர் படைமுன், சேராது படை மறவர் வில்லும் அம்பும் ஏந்தி இங்குமங்கும் உலாவி, ‘'எம் வேந்தனான சேரலன், நும்மை ஏற்றுப் புரந்தருளுதற்கு இசைந்துள்ளான்; நுமக்குரிய திறையினைப் பணிந்து தந்து உய்தி பெறுமின்” என வெளிப்படையாக எடுத்து மொழிந்தனர். சேரர் படையின் சிறப்பினைக் கண்ட பலர், சேரமானிடத்தில் புகலடைந்து திரையிட்டு அவனது அருளிப்பாடு பெற்றனர். அவ்வாறு செய்யாதார் பொருதழிந்து புறந்தந்தோடினர். அவர் தம் மதிற்றலையில் நின்ற கொடிகள் இறங்கின. சேரமா னுடைய விற்கொடி சேணுயர்ந்து சிறந்தது[16] சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் புகழ் தமிழகமெங்கும் பரந்தது.
சேரமானை யுள்ளிட்ட எல்லோரும் இன்புற்றிருக் கையில் சான்றோராகிய அரிசில் கிழாரது மனம் மட்டில் பெரு வருத்தம் கொண்டது. அதியர்குடி புலவர் பாடும் புகழ் பெற்ற பெருங்குடி; அதன்கண் தோன்றி வந்த வேந்தர் அனைவரும் கைவண்மை சிறந்தவர். கற்றோர் பரவும் கல்வியும், செற்றோரும் புகழும் மற மாண்பும் அதியர் குடிக்குச் சிறப்பியல்பு. அது வழியெஞ்சிக் கெடலாகாது என்பது அரிசில் கிழார் முதலிய சான்றோர் கருத்து. அது பற்றியே அவர் பன்முறையும் எழினிபால் தூது சென்று சேரமானுக்கு அவனை நண்பனாக்கித் தகடூர் அரசு நிலைபெறச் செய்ய வேண்டும் என முயன்றார். அவருக்கு எழினியின் வீழ்ச்சி பெரு வருத்தத்தை விளைவித்தது. எழினியை வீழ்த்தியது தமிழ் வள்ளன்மையையே வீழ்த்தியதாக எண்ணினார். அவனைப் போரிடத் தூண்டிப் பொன்றுவித்த தலைவர் எவரும் உயிருய்த்து சேரமான் ஆணை வழி நிற்பது கண்டார். அதனால், அவர்களை நோவாமல், கூற்றுவனை நொந்து, “அறமில்லாத கூற்றமே, வீழ்குடி யுழவன் ஒருவன் வித்தற்குரிய விதையை உண்டு கெடுவது போல, எழினியின் இன்னுயிரை உண்டு பேரிழப்புக்கு உள்ளாயினாய். அவனுயிரை உண்ணுவ யாயின், எத்துணையோ பகையுயிர்களை அவனது போர்க்களத்தே பெருக உண்டு வயிறு நிரம்பியிருப்பாய்; அவனது ஆட்சியில் கன்றோடு கூடிய ஆனிரைகள் காட்டிடத்தே பகையச்சமின்றி வேண்டுமிடத்தே தங்கும்; அவன் நாட்டிற்குப் புதியராய் வருவோர் கள்வந்து அச்சமின்றித் தாம் விரும்பிய இடத்தே தங்குவர்; நெல் முதலிய பொருட் குவைகள் காவல் வேண்டாதிருந்தன; இவ்வாறு நாட்டில் அகமும் புறமுமாகிய இருவகைப் பகையும் கடிந்து செங் கோன்மை வழுவாமல் நடந்தது; அவனுடைய போர்ச்செயல் பொய்யாத நலம் பொருந்தியது; அதனால் அவனைச் சான்றோர் அனைவரும் புகழ்ந்து பாடினர். அத்தகையோன் போரில் இறந்ததனால், ஈன்ற தாயை இழந்த இளங்குழவி போல அவனுடைய சுற்றத்தாரும் இளைஞர்களும் ஆங்காங்கு நின்று அழுது புலம்புகின்றனர். ஏனை மக்கள் கடும்பசி வருத்தக் கலங்கிக் கையற்று வாடுகின்றனர்[17]” என்று பாடி வருந்தினார்.
பின்பு, பெருஞ்சேரல் இரும்பொறை, அறம்பிழை யாது பொருது புண்ணுற்று விண்புகுந்த சான்றோர்க்குச் செய்யும் சிறப்பனைத்தும் தானே முன்னின்று அதியமான எழினிக்குச் செய்து, அவற்குப் பின் அரசுக் கட்டில் ஏறுதற்கு உரியானைத் தேர்ந்து அவனைத் தகடூர் நாட்டுக்கு அதியமானாக்கினான். அப் போரால் அழிந்த குடிகளை நிலைநிறுத்தி நாட்டில் நல்லரசும் நல்வாழ்வும் அமையச் செய்து தனது நாடு திரும்பினான்.
வஞ்சி நகரம் அடைந்த இரும்பொறை, தான் சென்றவிடமெல்லாம் தனக்கு வெற்றியே எய்தியது குறித்துத் தங்கள் குடிக்குரிய குல தெய்வமாகிய அயிரை மலையில் உறையும் கொற்றவைக்குப் பெரியதொரு விழாச் செய்தான். யானைக் கோடுகளால் கட்டில் ஒன்று செய்து அதன் மேல் அக் கொற்றவையை எழுந் தருளுவித்தனர். அந்த யானைக் கோடுகளும் சேரமானுடைய ஆணைவழி வராத பகை வேந்தர் யானைகளைப் பற்றி அவை கதறக் கதற அறுத்துக் கொள்ளப்பட்டவை, பிறகு, அக் கொற்றவைக்குப் பலியிடுங்கால், வழிபாடு இயற்றும் மறவர் தம் மார்பிற் புண்ணிலிருந்து ஒழுகும் குருதியைப் பிடித்துத் தெளிப்பர். அதனைக் கண்டிருந்த அரிசில் கிழார் பெருவியப்புற்று, “வேந்தே, போரில் நீ நின் உயிரைப் பொருளாகக் கருதுகின்றாயில்லை . இரவலர் நடுவண் இருந்து கொடை வழங்குவதிலும் நீ குறைபடுவதில்லை. அறிவு ஆண்மைகளிற் பெரியராகிய சான்றோரைப் பேணத் தமராகக் கொள்வதிலும் தலைசிறந்து விளங்குகின்றாய்; இத்தகைய குணஞ்செயல்களால் எல்லாப் புகழும் நின்பாலே எய்தியுள்ளன; இக் கொற்றவை எழுந்தருளியிருக்கும் இந்த அயிரை மலை போல நின் புகழ்கள் கெடாது நிலை பெறுக[18]” என்று வாழ்த்தினார்.
வாழ்ந்து முடிவில் பாணரும் கூத்தரும் பொருநரும் பிறரும் போந்து பெருவளம் நல்கப் பெற்றனர். ஊர் பெற்றவரும், யானை பெற்றவரும், குதிரை தேர் முதலியன பெற்றவரும் பலர். அதனைக் கண்டு மகிழ்ச்சி மீதூர்ந்த அரிசில் கிழார், விறலி யொருத்தியைப் பெருஞ்சேரல் இரும்பொறை பால் ஆற்றுப்படுக்கும் கருத்துடைய பாட்டு ஒன்றைப் பாடினார். அதன்கண், “தாமரையும் நெய்தலும் அரிந்து கொண்டு மகளிர் முல்லை நிலத்திற் புகுந்து கிளிகடி பாட்டைப் பாடும் வளஞ் சிறந்தது சேரமான் நாடு; பல்வகை வளம் நிறைந்த அந் நாட்டு ஊர்களைப் போர்வல்ல ஆடவரே காவல் புரிவர்; பேரூர்களைச் சூழ வில்வீரர் காக்கும் வளவிய காவற் காடுகள் உண்டு; அந் நாட்டில் எங்கும் பரந்து இனம் பெருகி மேயும் ஆடுகளைப் போலக் குதிரை களையும், ஆனிரைகளைப் போல் யானைகளையும் உடைய பெருஞ்சேரல் இரும்பொறையின் குன்று அதோ தோன்றும் குன்றின் பின்னே நிற்பது; அவன்பாற் சென்றால் அதனைப் பெறலாம் [19]“ என்று பாடினர்.
ஒருகால், இரும்பொறை தன் மக்கட்கு அறிவுரை வழங்கினான்; அரசிளஞ் சிறுவர்கள் கல்வியறிவு பெறுவதும் மெய்வலி பெறுவதும் அவர் தம் கோற்கீழ் வாழும் மக்கட்கு நலஞ் செய்தற் பொருட்டு என்றும், அக் கருத்தாலேயே சிறுவர்களைத் தான் பெற்று வளரப்பதாகவும் அறிவுறுத்தினான்; அவன் மக்களுடைய எண்ணமும் சொல்லும் செயலுமாகிய எல்லாம் அக் கருத்தைப் பின் பற்றி நிற்கக் கண்டு அரிசல் கிழார் பெருவியப்புற்றார். பின் பொருகால், உயர்நிலை யுலகம் புகுந்த சான்றோர் இன்புறுதற்கென வேள்வியொன்று செய்தான். வேள்வித் தொழில் வல்ல சான்றோர் பலர் அவ் வேள்விக்கு வந்திருந்தனர். வேள்வியும் மிக்க சிறப்பாக நடந்தேறியது. வேள்வி முடிவில் வந்திருந்த பலர்க்கும் பெரும் பொருள்கள் பரிசில் வழங்கப் பெற்றன. அவ் வேள்விக் காலத்தில், அரிசில் கிழார் உடனிருந்து, பாட்டாலும் உரையாலும் அரசனது புகழ் பெருக்கத்தக்க செயல் வகைகளைச் செய்தார். அதனால் மகிழ்ச்சி மிகுந்து, பெருஞ்சேரல் இரும்பொறை கோயிலாளுடன் புறம்போந்து நின்று, “கோயிலில் உள்ளவெல்லாம் கொள்க” என்று சொன்னான்; அதனால் அரிசில் கிழார்க்கு உண்டான வியப்புக்கு அளவில்லை; அவர் அப்படியே மருண்டு போய் விட்டார்.
சிறிது தெளிவுற்று வேந்தனை நோக்கினார்; “வேந்தே என் மனத்தில் ஒரு குறையுளது; அதனை நிறைவித்தல் வேண்டும்” எனக் குறையிரந்து நின்றார். அவர் கருத்தறியாத வேந்தன், ஒன்பது நூறாயிரம் பொன்னையும் தனது அரசு கட்டிலையும் நல்கினான். அரிசில் கிழார், அப் பொன்னைப் பெற்றுக்கொண்டு, வேந்தனைப் பணிந்து “அரசே, நீயே இக் கட்டில் மேல் இருந்து அரசாளுதல் வேண்டும்; இக் கோயிலும் இதன் கண் உள்ளனவும் யாவும் நீயே ஏற்றுக் கொளல் வேண்டும்; இதுவே யான் நின்பால் இரந்து கேட்டுக் கொள்வது” என்றார் வேந்தனும் அவரது மன மாண்பைப் பாராட்டி மகிழ்ந்தான்.
இஃது இங்ஙனமாக, அவன் செய்த வேள்வியை முன்னின்று நடத்திய சான்றோர் நரைத்து முதிர்ந்த ஒரு வேதியராவர். அவர்க்கும் இரும்பொறை, அரிசில் கிழார்க்குச் செய்தது போன்ற பெருஞ்சிறப்பினைச் செய்தான். தான் எய்தியிருக்கும் முதுமைக் கேற்ப அவர்க்கு மண்பொன் முதலியவற்றில் ஆசை அவியாது பேராசையாய்ப் பெருகி அவர் உள்ளத்திற் குடிகொண்டு இருப்பது தெரிந்தது. “இளமை இறந்த பின்னரும், அதற்குரிய நினையும் செயலும் அவர்பால் தீரா திருப்பது, மக்களொடு துவன்றி அறம் புரியும் சுற்றத்தோடு நிரம்பியுள்ள சான்றோர்க்குச் சால்பாகாது; ஆதலின் நீவிர் துறவு மேற்கொண்டு காடு சென்று தவம் புரிதல் தக்கது” என அறிவுறுத்தி அவரைத் துறவு மேற்கொள்ளச் செய்தான். இவ்வாறு அறம் புரிந்து மேன்மையுற்ற பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழி யாண்டு அரசு வீற்றிருந்தான் எனப் பதிகம் கூறுகிறது
- ↑ எருமை நாடு எறாமையூரைத் தலைநகரமாகக் கொண்ட நாடு, எருமை வடமொழியில் மகிஷம் எனப்படும்; மகிஷவூர் பின்பு மைசூர் எனச் சிதைந்து விட்டது.
- ↑ A.R. No.227 of 1927-8.
- ↑ Mysore Gazetteer Vol.I.p.334.
- ↑ A.R. No.7 of 1906.
- ↑ A.R. No. 235 of 1926-8,
- ↑ S.I.I. Vol. V. No. 285, 287
- ↑ அகம். 135.
- ↑ A.R. No. 255 of 1911.
- ↑ பதிற். 66.
- ↑ பதிற். 76.
- ↑ பதிற். 72.
- ↑ பதிற். 71.
- ↑ பதிற். 72.
- ↑ பதிற். 77.
- ↑ பதிற். 73.
- ↑ பதிற். 80.
- ↑ புறம். 230.
- ↑ பதிற். 79.
- ↑ பதிற். 78.