உள்ளடக்கத்துக்குச் செல்

சேரமன்னர் வரலாறு/12. குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை

விக்கிமூலம் இலிருந்து

12. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின், சேரமான், குடக்கோ சேரல் இரும்பொறை என்பான் சேரநாட்டு அரசனாக விளங்கினான். அவன் மிக்க செல்வமும் சிறப்பும் உடையனாயினும், தன்னை நாடிவரும் பரிசிலர்க்கு அவர் தம் வரிசை அறிந்து நல்கும் கொடை நலம் இலனாயினான்.

இப்போது பொன்னானி வட்டம் இருக்கும் பகுதியில் பெருங்குன்னூர் என்றோர் ஊருளது. அதற்கு அந்நாளில் பெருங்குன்றூர் என்று பெயர் வழங்கிற்று. அவ்வூரில் நல்லிசைச் சான்றோர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், பிற்காலத்தே பெருங்குன்றூரைத் தமக்குக் காணியாட்சியாகப் பெற்றுக் கிழார் என வேந்தரால் சிறப்பு நல்கப் பெற்றதனால் பெருங்குன்றூர் கிழார் எனச் சான்றோர்களால் குறிக்கப் பெறுவார். ராயினர். குடக்கோச்சேரல் இரும்பொறை காலத்தில். அவர் நல்லிசைப் புலமை பெற்று விளங்கினாராயினும், கிழாராகவில்லை; அவர் எளிய நிலையிலேயே இருந்துவந்தார்.

அவர், ஒருகால், குடக்கோச் சேரல் இரும் பொறையைக் கண்டு தனது புலமைநலம் தோன்ற இனிய பாட்டைப் பாடினார். அவன் பெரிதும் மகிழ்ந்து அவர்க்கு உண்டியும் உடையும் தந்து பரிசில் வேறே நல்காது காலம் நீட்டித்தான். புலவரது உள்ளம் வறுமையின் கொடுமையை நினைத்து பெருவாட்டம் உற்றது. அவர் குடக்கோவை நோக்கி, “அரசே, உலக மக்களைப் புரத்தற்குரிய நினது உயர்ச்சியைக் கருதாமல், அன்பு கண்மாறி அறம் நினையாதிருக்கின்றாய். உன்னைப் போலும் வேந்தர் பலரும் அப் பெற்றியராய் விடின், என்னைப் போலும் பரிசிலர் இவ்வுலகிற் பறிக்கமாட்டார்கள் என்றார். குடக்கோ: (முறுவலித்து) வறுமையுற்றபோது நும் மனைவியும் நும்மை வேண்டாள்; ஆகவே, நீர் இப்போது போவதால் பயன் என்னை?

பெருங்குன்: வேந்தே, என் மனையுறையும் காதலி வறுமைத்துயர் வாட்டும் போதும் தன் கடமை தவறாள். இதுகாறும் அவள் இறந்திருக்க வேண்டும்.

குடக்கோ: அப்படியாயின், வருந்த வேண்டாவே.

பெருங்: இறவாமல் இருந்தால்?

குடக்கோ: (நகைத்து) இருந்தால், இதுவரை இருந்ததுபோல் இருக்கத்தானே போகிறாள்!

பெருங்: இறவாதிருப்பாளாயின், என்னை நினையாதிராள்; நினைக்கும் போதெல்லாம் “கூற்றமோ அறமில்லாதது; இழைத்த நாள் நோக்கி உயிர்களைக் கவர்வது அதற்கு அறம்; அந்த அறத்தைக் கைவிட்டு என் கணவன் உயிரை யுண்டதோ, என்னவோ? அவர் இன்னும் வந்திலரே!” என்று நினைத்து வருந்துவாள். அவளது இடுக்களைத் தீர்த்தற்காகவேனும் யான் போதல் வேண்டும்.

குடக்கோ: அப்படியாயின், நீவிர் போய் வரலாம்.

பெருங்: (திகைப்பும் சினமும் கொண்டு) வேந்தே , நின்தானை சென்று பகைவர் அரணை முற்றிய போது, அரண் காக்கும் பகைவர் செயலற்றுப் போவர், அவ்வாறே யான் யெலற்றுச் செல்கின்றேன். நினது தானைபோல என்னை வறுமைத் துயர் முற்றிக் கொண்டு நிற்கிறது, அந்தத் துயரை முந்துறுத்தே செல்கின்றேன்[1].

குடக்கோ : (முறுவலித்து) நும்மை முற்றியிருக்கும் வறுமைத் துன்பத்துக்கு என் தானை தக்க உவமமாகாது, அஃது என் வயம் இருப்பது.

இதனைக் கேட்டதும் பெருங்குன்றூர்கிழார், “சேரமான் கொடாதொழிகுவனல்லன்; சில நாள்கள் தன்பால் இருக்க வேண்டும்” என்று கருதுகின்றான் போலும் என நினைத்தார். அவ்வாறே சின்னாள்கள் இருந்து மறுபடியும் ஒருநாள் இரும்பொறையைக் கண்டார். அவனோடு அளவளாவிப் பரிசிலர்க்குப் பரிசில் கொடாது மறுத்த செல்வர் சிலரைக் குறித்துக் கூறித் தனக்கு விடை நல்குமாறு வேண்டினார். அப்போதும் அவன் பரிசில் ஒன்றும் நல்கும் குறிப் புடையனாகத் தோன்றவில்லை. புலவர்க்கு அது காணவே ஒருபால் அவலமும், ஒருபால் வெகுளியும் உண்டாயின. தம்முடைய கண்களைப் பரக்க விழித்து வேந்தனை நோக்கினார். “புகழுடைய வேந்தே, உன்னைக் கண்டு பரிசில் பெற வந்த யான் ஒரு பரிசிலனே; ஆயினும் யான் ஓர் ஓங்கு நிலைப் பரிசிலன், பரிசிலரை யேற்று அவர்க்கு உரிய பரிசில் கொடாது மறுத்த பிற செல்வருடைய கொடுமைகளைச் சொன்னால், நீ வள்ளன்மையுடையை யாதலால், மனம் இரங்கிப் பெரும் பரிசில் நல்குவாய் என எண்ணியே அவற்றை நினக்கு மொழிந்தேன். எனினும், நீ உன் கருத்தையே முடித்துக் கொண்டாய். முன்னாள் கையில் உள்ளது போலக் காட்டி, மறுநாள் அது பொய்பட நின்ற உனது நிலைக்கு நீ சிறிதும் நாணுகின்றாயில்லை. நீ கேட்டு நாணுமாறு நின் புகழெல்லாம் நான் பலபட என் செந்நாவால் பாடினேன்; யான் பாடப் பாடப் பாடுபுகழ் பெற்றாய்; நல்லது; வணக்கம்; சென்று வருகிறேன்” என்று கை தொழுது சென்றார். அப்போது, அவன் “புலவீர், ஒன்றும் மனத்திற் கொள்ளலாகாது; சென்று வருக” என்றான். அந் நிலையினும் அவர், “வேந்தே , என் புதல்வனொடு வாடி வதங்கியிருக்கும் என் மனைவியையே நினைத்துக் கொண்டு செல்கின்றேன்; ஆதலால், நின் கொடுமையை நினைப்பதற்கு என் நெஞ்சில் இடமில்லை, காண்[2]” என்று சொல்லி விட்டுச் சென்றார். அது கண்டும் இரும்பொறையின் மனம் கற்பொறையாகவே இருந்தொழிந்தது.

பெருங்குன்றூர் கிழார் தனது பெருங்குன்றூர் அடைந்து சின்னான் இருந்துவிட்டுக் கொங்குநாடு கடந்து சோழ நாட்டுக்குச் சென்றார். அங்கே உறையூரின்கண் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி என்பவன் ஆட்சி செய்துவந்தான். சான்றோர் வரவுகண்ட சென்னியும் மிக்க அன்போடு வரவேற்று உரிய சிறப்புக்களைச் செய்தான். “வறுமை என்பது எத்தகைய அறிஞரது அறிவையும் கெடுத்துவிடும்; விருந்து கண்டு அஞ்சும் திருந்தா வாழ்வும் அதனால் உண்டாவது. யான் வறுமையுற்று வாடுகின்றேன்; அவ் வாட்டத்தை உடனே களைந்தருள வேண்டும்[3]” என்று தனது கருத்தைச் சோழ வேந்தனுக்குப் பெருங்குன்றூர் கிழார் எடுத்துரைத்தார். புலவர்க்குப் புக்கிலாய் விளங்கும் சோழர் பெருமான், அவர் கருத்தை முன்னமே அறிந்து பெரும் பரிசில் நல்கிவிடுத்தான். சான்றோரும் அவனை மனமார வாழ்த்திவிட்டுத் திரும்பி வரலானார்.

திரும்பி வருங்கால், அவர் கீழ்க் கொங்கு நாடு நடந்து வையாவி நாட்டு வழியாகத் தனது பொறை நாட்டுக்கு வரவேண்டியவராயினார். அதற்குக் காரணமும் உண்டு. கையாவி நாட்டில் பொதினி (பழனி) மலைக்கு அடியில் உள்ள ஆவிகுடியில் இருந்து பெரும் பேகன் என்ற ஆவியர் பெருமகன் பெரு வள்ளன்மை கொண்டு விளங்கினான். அவன் முல்லைக்குத் தேர் ஈத்த வேள் பாரி போல, மயிலுக்குப் போர்வை அளித்த வள்ளியோன். அவற்குக் கண்ணகி யென்பாள் கோப்பெருந்தேவியாவாள். அவள் வான்தரு கற்பும் மான மாண்பும் உடைய பெருமக்கள். அந்த வையாவி நாட்டில் நல்லூர் ஒன்றில் பெரு வனப்புடைய பரத்தை யொருத்தி வாழ்ந்தாள். அவன்பால் பெரும் பேகனுக்கு நட்புண்டாயிற்று. அதனால், அவன் கண்ணகியைப் பிரிந்து பரத்தையின் கூட்டத்தையே பன்னாளும் விரும்பி ஒழுகினான். அவனது புறத் தொழுக்கம் ஆவியர் பெருங்குடிக்கு மாசு தருவது கண்ட கண்ணகி, தனித்ததொரு பெருமனையில் இருந்து வருந்துவாளாயினள். இச் செய்தி பெருங்குன்றூர் கிழார்க்குத் தெரிந்தது. அவள் காரணமாகப் பேகனைக் காண்டல் வேண்டுமென்று நினைத்து, வையாவி நாட்டை அடைந்து கண்ணகியின் மனநிலையை உணர்ந்தார், பின்பு பெரும் பேகனைக் கண்டார். சான்றோர் சால்பறிந்து பேணும் தக்கோனாகிய பேகன், அவரை வரவேற்று அவர்க்குப் பெரும் பொருளைப் பரிசில் நல்கினான்.

பெருங்குன்றூர் கிழார் முதலிய அந் நாளைச் சான்றோர், வெறும் பொருட்காகப் பாடித் திரியும் வாணிகப் பரிசிலரல்லர். அவர் பேகனை யடைந்தது பரிசில் குறித்தன்று; அதனால், அவர், “வள்ளால், யான் வேண்டும் பரிசில் ஈதன்று” என்றார். தனது புறத் தொழுக்கம் அவர்க்குத் தெரியாது என எண்ணிய பெரும் பேகன் வியப்புற்று நோக்கினான். “ஆவியர் கோவே, காடுமலைகளைக் கடந்து நேற்று இவ்வூர் வந்த யான் ஓரிடத்தே தனித்துறையும் நங்கையார் மாசறக் கழுவிய மணிபோல் விளங்குமாறு தன் குழலை நெய்விட்டு ஒப்பனை செய்து புதுமலர் சூடி மகிழச் செய்தல் வேண்டும். அதனைச் செய்விக்கும் உரிமை யுடையவன் நீயே; நீ அதனைச் செய்வதொன்றே யான் நின்பால் பெற விரும்பும் பரிசில்; வேறு ஒன்றும் இல்லை[4]” என்ற கருத்தமைந்த பாட்டை இசை நலம் விளங்க யாழிலிட்டுச் செவ்வழிப் பண்ணிற் சிறக்கப் பாடினர். வையாவிக் கோவாகிய பெரும் பேகன் முதற்கண் தன் தவற்றுக்கு நாணி அவர்க்கு உரிய பரிசில் நல்கிவிடுத்தான். சான்றோரும் பின்பு தனது பெருங்குன்றூர் வந்து சேர்ந்தார்.

பெருங்குன்றூர் கிழார் சோழநாடு சென்று திரும்பி வருவதற்குள், பொறை நாட்டில் சேரமான் குடக் கோச்சேரல் இரும்பொறை இறந்தான். அவன் தம்பி குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழான் மகள் வேண்மாள் அந்துவஞ்செள்ளை என்பவன்பால் பிறந்த மகனான குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை சேரமானாய் அரசுகட்டில் ஏறினான். மூத்தவனான சேரல் இரும்பொறை இறக்கு முன்பே குட்டுவன் இரும்பொறை இறந்துபோனமையின், இளஞ்சேரல் இரும்பொறை அரசுக்குரியவனானான்..

இளஞ்சேரல் இரும்பொறை அரசுகட்டிலேறிய சின்னாட்கெல்லாம், காவிரியில் வடகரையில் உள்ள கொங்கு நாட்டில், அதன் கிழக்கில் இருந்த விச்சி மலைக் குரிய விக்சிக்கோவும் சோழ பாண்டிய அரசிளஞ் செல்வர்களும் இரும்பொறையின் இளமையை இகழ்ந்து குறும்பு செய்தனர். கீழ்க் கொங்கு நாட்டிலிருந்த கொங்கரும் பொறையரும் பெருந் திரளாக இளஞ்சேரல் பக்கல் நின்று கடும் போர் புரிந்ததனால், இரு வேந்தரும் விச்சிக் கோவும் தோற்றோடினர். இரும்பொறையும் வெற்றி வீறு கொண்டு திரும்பினான்.

விச்சிமலையென்பது இப்போது திருச்சிராப்பள்ளி வட்டத்தில் பச்சைமலை என வழங்குவதாகும். இம் மலையில் வாழும் மலையாளிகள் அதனைப் பச்சிமலை என்று கூறுவதும், அம் மலையின் கிழக்கே அதன் அடியில் விச்சியூர் என்று ஓர் ஊர் இருப்பதும், விச்சி நாட்டதெனப் பரணர் கூறும் குறும்பூர்[5]” அப் பகுதியில் இருப்பதும் இம் முடிவு வற்புறுத்துகின்றன.

விச்சியும் வேந்தரும் தோற்று வீழ்ந்த காலத்தில் பொற்கலன்கள் பல சேரமானுக்குக் கிடைத்தன. அவற்றை அவன் சிறு சிறு கட்டிகளாக உருக்கித் தானை மறவர்க்கும் பரணர் முதலிய பரிசிலர்க்கும் இரவ லர்க்கும் வழங்கினான். கொல்லிமலையில் உள்ள இருள்வாசிப் பூவையும் பசும்பிடியை (மனோரஞ்சி தத்தையும் தன் மனைவி விரும்பிச் சூடிக் கொள்ளக் கண்டு இன்புற்றான்.[6]

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை தன் நகர்க்கு வந்ததும் பெரியதொரு வெற்றி விழாச் செய்தான். அக்காலை, குறுநிலத் தலைவரும் வேந்தரும் செல்வரும் வந்திருந்தனர். பாணர், விறலியர், பொருநர், கூத்தர் முதலிய பரிசிலர் பலரும் வந்து வேந்தனை மகிழ்வித்துப் பரிசில் பெற்றனர். பெருங்குன்றூர் கிழார், “இரும்பொறையைக் கண்டு, கடம்பு முதல் தடித்த நெடுஞ்சேரலாதன், அயிரை பரவிய பல்யானைச் செல்கெழுகுட்டுவன், நன்னனை வென்ற நார்முடிச் சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், கொங்கு புறம் பெற்ற செல்வக் கடுங்கோ வாழியாதன், கழுவுளை வென்ற பெருஞ்சேரல் இரும்பொறை என்ற இவர்கள் வழிவந்த நீ, பாசறைக் கண் கவணைப் பொறியும் கள்ளுணவும் உடைய கொங்கர்க்கும், தொண்டியைத் தலைநகராகவுடைய பொறையர்க்கும் தலைவன்; அயிரை மலையிலிருந்து இழிந்து வரும் பேரியாறு போல, நின்பால் வரும் இரவலர் பலர்க்கும் ஈயக் குறையாத பெருஞ் செல்வம் மேன்மேலும் பெருக, அரண்மனைக்கண் மகளிர் நடுவண் ஞாயிறு போலப் பன்னாள் விளங்குவாயாக; நின் விளக்கம் காணவே யான் இங்கு வந்தேன்[7]” என்று தேனொழுகும் செஞ்செற் கவியினைப் பாடினர். கேட்டோர் பலரும் பேரின்பத்தால் கிளர்ச்சியுற்றனர். வேந்தனும், அவர்க்கு அவர் வாழும் பெருங்குன்றூரையே இறையிலி முற்றூட்டாகத் தந்து பெருங்குன்றூர் கிழார் என்ற சிறப்பும் அளித்து இன்புற்றான். அது முதல் அவர் பெருங்குன்றூர் கிழார் எனச் சான்றோரால் பெரிதும் பேசப்படுவாராயினர். அதன் விளைவாக அவரது இயற்பெயர் மறைந்து போயிற்று. இன்றும் நாம் பெருங்குன்றூர் கிழார் எனவே நூல்கள் கூறக் காண்கின்றோம்.

இளஞ்சேரல் இரும்பொறை அரசுபுரிந்த நாளில் விச்சிக்கோவொடு பொருத இளஞ்சேட்சென்னி இறக்கவும், உறையூரில் கோப்பெருஞ்சோழன் வேந்தாகி அரசு வீற்றிருந்தான். பாண்டி நாட்டு மதுரையில் பாண்டியன் அறிவுடை நம்பி அரசு செலுத்தினான். தென்பாண்டி நாட்டுத் தண்ணான் பொருதைக் கரையிலுள்ள பழையன் கோட்டையில்[8] இளம் பழையன் மாறன் என்பான் குறுநிலத் தலைவனாய் விளங்கினான். விச்சிக்கோவுடன் கூடிக் கொங்குநாட்டில் இரும்பொறையோடு போர் தொடுத்துத் தோற்று ஓடியவர்கள், இளஞ்சேட் சென்னியும் அறிவுடை நம்பியும் தூண்டி விடுத்த அரசிளஞ் செல்வராவர்; அப்போர் நிகழ்ந்த சின்னாட்கெல்லாம் இளஞ்சேட்சென்னி இறந்தானாக, பாண்டி நாட்டில் அறிவுடைநம்பி மாத்திரம் மதுரையில் இருந்து வந்தான்.

அறிவுடை நம்பி தன் பெயருக்கேற்ப நல்ல அறிவுடையனே; ஆயினும், குடிகளிடம் வரி வாங்குவதில் அவன் தன் அரசியற் சுற்றத்துக்கே முழுவுரிமை வைத்தான். அதனால், நாடு யானை புக்க புலம் போலப் பெருங்கேட்டுக்கு உள்ளாயிற்று. அவன் சுற்றத்தாரோ புலவர் பாலும் பிறர்பாலும் பொழுது நோக்குச் செலுத்தி, வரிசையறிந்து ஆற்றும் செயல் திறம் இல்லாதவர்[9]. அதனால் பிசிராந்தையார் முதலிய சான்றோர் தக்காங்கு வேண்டும் அரசியல் நெறிகளை அவனுக்கு அறிவுறுத்தினர். ஆயினும், அச் சான்றோர் உள்ளத்தைப் பிணிக்கும் செங்கோன்மை இல்லை யாயிற்று. அவர் தமது அன்பெல்லாம் உறையூர்ச் சோழனான கோப்பெருஞ் சோழன்பாலே செலுத்தி வாழ்ந்தார்.

பாண்டியனுடைய “வரிசை யறியாக் கல்லென்” சுற்றத்தாருள் இளம்பழையன் மாறனும் ஒருவன். அவன் பழையன் கோட்டையிலிருந்து தான் வேட்டபடி நாட்டை ஆட்சி செய்து வந்தான். அவனுக்குக் கொங்கு நாட்டுப் போரில் உண்டான வீழ்ச்சி சேரமான்பால் பகைமையுணர்வை உண்டாக்கிவிட்டது. பழையனுக்குத் தானைத் தலைவனாகவும் அறிவுத் துணைவனாகவும் வித்தை என்ற பெயரையுடைய தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பாண்டிய நாட்டில் இப்போது திருப்புத்தூர் வட்டம் என வழங்கும் பகுதியில் பிறந்தவன்; அவனது வித்தையூர் இப்போது வித்தியூரென விளங்குகிறது. அவன் தொடக்கத்தில் பாண்டிநாட்டு மோகூரிலிருந்து ஆட்சி செய்த பழையன் என்னும் குறுநிலத் தலைவனுக்கு நண்பனாயிருந்து அவன் வழியினனாகிய இளம் பழையனுக்குத் துணையாய் வந்திருந்தான்.

இளம்பழையனும் வித்தையும் இரும்பொறையோடு போர் தொடுக்கக் கருதி நல்லதொரு சூழ்ச்சி செய்தர். கோப்பெருஞ்சோழனுக்கு மக்கள் சிலர் உண்டு. அவர்கள் தெளிந்த அறிவும் தகுந்த வினைத் திட்பமும் இல்லாதவர். அவர்களை மெல்ல நண்பராக்கித் தமக்குத் துணைபுரியுமாறு அவர்கள் உள்ளத்தைக் கலைத்தனர். அவர்கள் ஒருவாறு உடன்பட்டுக் கோப்பெருஞ்சோழனைக் கலந்தனர். கோப்பெருஞ்சோழன் சான்றோர் சூழவிருக்கும் சால்பும் மானவுணர்வும் மலிந்தவன. அவற்குப் பொத்தியார் என்பவர் அறிவுடை அமைச்சராய் விளங்கினார்; அவர் வேந்தற்கு உற்றுழி உயிர் கொடுக்கும் பேரன்புடையவர். மக்கள் கூறுவது கேட்ட கோப்பெருஞ்சோழன், இரும்பொறையின் ஆற்றலையும், படைவலி துணைவலி முதலிய வலிவகைகளையும் சீர் தூக்கி இரும்பொறையோடு பொருவது தற்செயலாகாது; உயர்ந்த நோக்கமும் சிறந்த செய்கையும் உடையவரே உயர்வர்; அவர்கட்கு இம்மையிற் புகழும் மறுமையில் வீடுபேறும் உண்டாகும்; அவ்விரண்டும் இல்லையென்றாலும், இம்மையிற் புகழுண்டாதல் ஒருதலை[10] என வற்புறுத்தி அவர்கள் கூறிய கருத்தை மறுத்தான். தன் மக்கட்கு அவன் கூறிய நல்லறம் இனிதாகத் தோன்றவில்லை. பழையன் மாறனது சூழ்ச்சி வலைப்பட்ட அவர்களது உள்ளம் தந்தையின் கூற்றையும் புறக்கணித்தது. அவர்களும் பாண்டிநாடு வந்து பழையன் முயற்சிக்குத் துணையாய் வேண்டுவன செய்யத் தலைப்பட்டனர்.

பாண்டி நாட்டுத் தென்காசிப் பகுதியில் கல்லாக நாடு என்பது ஒரு பகுதி[11]. அப் பகுதி அரிய காவற்காடு அமைந்து சீர்த்த பாதுகாப்புடைய இடமாகும். அப் பகுதியில் அவர்கள் ஐந்து இடங்களில் வலிய எயில்களை அமைத்துக் கொண்டு சேர நாட்டவரைப் போர்க் கிழுத்தனர். இளஞ்சேரல் இரும்பொறை, பொறையரும் குட்டுவரும் பூழியரும் கலந்து பெருகிய பெரும் படையுடன் வந்து கங்கைப் பகுதியில் பாசறை யிட்டான்.

கோப்பெருஞ்சோழன் மக்களும் பழையன் மாறனும் கல்லக நாட்டில் அமைத்திருந்த எயில்களைச் செவ்வையாகக் காத்து நின்றனர். போர்க்குரிய செவ்வி எய்தியதும் போர் தொடங்கிற்று. சேரமான் ஒவ்வொரு எயிலாக முற்றி நின்று பொரத் தலைப்பட்டான். அதனால் அவனுடைய பாசறை இருக்கைக் காலம் நீட்டிப்பதாயிற்று. அவனது பிரிவு மிக நீண்டது கண்ட இரும்பொறையின் கோப்பெருந்தேவிக்கு ஆற்றாமை பெரிதாயிற்று. அதனைக் குறிப்பால் உணர்ந்த பெருங் குன்றூர் கிழார் இரும்பொறை பாசறையிட்டிருக்கும் இடத்துக்கு வந்தார். அப்போது பகைவர் எயிலொன்று முற்றப்பட்டிருந்தது.

பாசறைக்கண் களிற்றியானைகள் மதம் மிக்கு மறலின; போர் எதிராது எயில் காத்தல் ஒன்றே செய்தனர். யானை மறவர், மதம்பட்ட களிறுகளைப் பிடியானைகளைக் கொண்டு சேர்த்து மதம் தெளி வித்தனர். அவ்வாறு செய்தும், பல களிறுகள் மதம் குன்றாமல் மைந்துற்றன. குதிரைகள் போர்க் கோலம் செய்யப் பெற்றுப் பகைவர் போர் தொடுக்காமையால் கனைத்துக் கொண்டிருந்தன. கொடியுயர்த்திய தேர்கள் நிரல்பட நின்று நிகழ்ந்தன. கிடுகு தாங்கும் வாள் வீரரும் வேல் வீரரும் போர் நிகழாமை கண்டு, தாம் ஏந்திய படை விளங்க வேந்தனது ஆணையை எதிர்நோக்கி ஆரவாரித்து நின்றனர். இவ் வண்ணமே நாள்கள் பல கழிந்தன.

பாசறை யிருக்கைக்குப் பெருங்குன்றூர் கிழார் வந்தது வேந்தனுக்குப் பெரு வியப்பை உண்டு பண்ணிற்று. வினைமுற்றி வெற்றி பெறுங்காலையில், பரணர் முதலியோர் போந்து வேந்தனைப் புகழ்ந்து பாடி இன்புறுத்துவது முறை. அம் முறையன்றி, வினை நிகழ்ச்சிக் கண் வருவது வேந்தற்கு வியப்பாயிற்று. அதனை உணர்ந்த சான்றோரான கிழார், “வேந்தே, போர் நிகழாமையால் நின் படை முழுதும் போர் வெறி மிகுந்து மைந்துற்றிருக்கிறது; பகைவர் தாமும் போர் எதிர்கின்றிலர்; நாள்கள் பல கழிகின்றன; ஆதலாற்றான், யான் நின்னைக் காணப் பாடி வந்தேன்[12]” என்றார். வேந்தன் தன் மகிழ்ச்சியைத் தன் இனிய முறுவலாற் புலப்படுத்தினான். சான்றோர் அவனோடே தங்கினர்.

புலமைமிக்க சான்றோர் உடனிருப்பது சூழ்ச்சித் துணையாதலை நன்கு அறிந்தவன் சேரமான்; அதனால் அவன் அவரைத் தன்னோடே இருத்திக் கொண்டான். இரண்டொரு நாட்குப்பின் ஒருபால் போர் தொடங்கிற்று. சேரன் படைமிக்க பெருமிதத்துடன் சென்றது. அவனே அதனை முன்னின்று நடத்தினான். அவனுடைய போருடையும் பெருமித நடையும் பெருங்குன்றூர் கிழார்க்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தன. பாசறை யிடத்திருந்த பார்வல் இருக்கைக்கண் இருந்து அவர் போர்வினையைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், வேந்தன் வெற்றி விளங்கத் திரும்பி வந்தான். கண்ட புலவர் பெருந்தகை , “யானைத் தொகுதியும் கொடி அசையச் செல்லும் தேர்நிரையும், குதிரைப் பத்தியும் ஏனை மறவர் திரளும் ஆகிய நின் தானை அணிகொண்டு செல்லும் செலவு காண்போர்க்கு மிக்க இன்பத்தையே தருகிறது. ஆனால், ஒன்று, இனிது சென்று நன்கு போர் உடற்றியவழி மிக்க அருங்கலங்களை நல்குவது போர்வினை; ஆயினும், நின்னை நேர்பட்டுப் பொருது வீழ்கின்ற பகைவர் கண்கட்கு அச்சத்தையும் அவலத்தையும் அன்றோ அது தருகிறது [13]” என்று இனிய இசையோடு பாடினார். “போர்ச் செலவுக்கு அவ்வியல்பு இல்லையாயின், அது நன்மையும் தீமையுமாகிய பயன்களை விளைக்காதன்றோ?” என வேந்தன் கூறினன். சான்றோரும் “ஆமாம்” எனத் தலையசைத் தனர். “இதுபற்றியே. அறிவுடையோர் போர்வினையைத் தவிர்த்தற்கு எப்போதும் முயன்று கொண்டிருக்கின்றனர்” எனச் சேரமான் கூறி முடித்தான்.

மறுபடியும், ஒருபால் போர் தொடங்கிற்று; சேரமான் படை மறவர்களுள், பூழியர் யானைகளைத் தொழில் பயிற்றுவதில் கை தேர்ந்தவர், அவர்களுடைய யானைகள் மழைமுகிலின் முழக்கங் கேட்டாலுமே அதனைப் போர் முரசின் வெம் முழக்கம் எனக் கருதி வெனில் கட்டை அறுத்துக் கொண்டு வெளிவரும் வீறுடையவை. அவைகள் ஒருபால் அணி வகுத்துச் சென்றன. குதிரைப்படை, கடலலை போல் வரிசை வரிசையாய் வந்தன. வேல் வாள் வில் முதலிய படை ஏந்தும் மறவர் போர் தொடங்கினர். சிறிது போதிற் கெல்லாம் பகைவர் படை உடைந்து ஓடலுற்றது.

கோப்பெருஞ்சோழன் மக்களும் பழையன் மாறனும் அந் நிலையிலேயே அடிபணிந்து சேரமானது அருளும் நட்பும் பெற்றிருக்கலாம். அது செய்யாது, செருக்கொன்றே சீர்த்த துணையாகப் பற்றிக் கொண்டு கடும்போர் உடற்றினர். மண்டிச் சென்று பொருதற்குரிய தண்ணுமை முழக்கம் கேட்டதுமே, சேரர் படை மறவர் பகைவரது படையகத்துட் புகுந்து எண்ணிறந்த மறவர்கயுைம் களிறுகளையும் குதிரைகளையும் கொன்று குவித்தனர். தேர்கள் சிதறுண்டு காற்றிற் பறந்தன. பகைவர் படைத்திரள், எதிர்க்கும் வலியின்றி ஈடழியக் கண்டதும், நெடிது பெய்யாதிருந்து, பின்பு மழை நன்கு பெய்தவிடத்துப் புள்ளினம் ஆரவாரிப்பது போல, இரும்பொறையது பாசறையில் மறவர் பேராரவாரம் செய்தனர்[14]. பழையன் மாறன், இந் நிலையில் தான் உயிர் உய்வது அரிது என அஞ்சி, மேலும் தானை கொணர்வ தாகச் சோழர்கட்குச் சொல்லிவிட்டு ஓடிவிட்டான். சோழர்களும் தாம் இருந்த எயிலின் கண் இருந்து மானத்தோடு போர் செய்யக் கருதித் தோற்றோடிய பழையன் வரவை எதிர்நோக்கியிருந்தனர்.

பாசறையில் இருந்த களிறுகள் போர்க்கருத்தோடு இங்குமங்கும் உலாவின; குதிரைகள் வீரரைச் சுமந்து கொண்டு பகைவர் வரவு நோக்கித் திரிந்து கொண்டிருந்தன. தேர்கள் தம் வீரர் குறிப்பின்படி இயங்கின. இரவுப் போதினும், தோளில் தொடி விளங்கப் போரில் மடிந்து புகழ் நிறுவும் வேட்கை கொண்டு அரிய வஞ்சினம் கூறிக் காவல் புரிந்தனர் காவல் மறவர்[15].

இவ் வகையில் நாள்கள் சில சென்றன. இரவிலும் பகலிலும் ஒற்றர் கூறுவனவற்றை எண்ணிப் பகைவர் களை வேரோடு தொலைக்கவும் அவரது நாட்டை அழிக்கவும் வேண்டிய குறிப்பிலேயே இரும்பொறையின் உள்ளம் ஈடுபட்டது. அதனால், அவனது மனம் வெவ்விய சினத் தீயால் வெந்து கரிந்து அருள் என்பதே இல்லையாமாறு புலர்ந்து விடுமோ என்று பெருங் குன்றூர் கிழார் அஞ்சினார். ஒருகால், அவன் மகிழ்ந் திருக்கும் செவ்வி கண்டு, அவரோடு சொல்லாடலுற்று, “வேந்தே, முன்பு விச்சிக்கோவும் வேந்தர் இருவரும் கூடிச் செய்த கொங்கு நாட்டுப் போரில் பகைவர்பாற் பெற்ற பொற்கலங்களை உருக்கிக் கட்டிகளாக்கி இரவலர்க்கும் பரிசிலர்க்கும் வரைவின்றி நல்கினை. அங்குள்ள கொல்லிமலைப் பகுதி மணம் மிகுந்த இருள்வாசிப்பூவும் பசும்பிடியும் சிறக்கவுடையது. நின் தேவி அவற்றைத் தன் கூந்தலில் விருப்பத்தோடு சூடிக்கொள்வாள். அக் கூந்தல், தன்பால் மொய்க்கும் வண்டினத்தின் நிறம் விளங்கித் தோன்றாவாறு விளங்குவது; கூந்தற்கேற்ற ஒளிதிகழும் நுதலும், அழகுமிகும் அணிகளும், குழையளவும் நீண்டு ஒளிரும் கண்களும், பெருந்தகைமைக்கு இடமெனக் கட்டும் மென்மொழியும், அருளொளி பரப்பும் திருமுகமும் பிரிவின்கண் மறக்கத் தகுவனவல்ல; நீ பிரிந்திருப்பதால் நாளும் கண்ணுறக்கமின்றி முகம் வாடி நுதல் ஒளி மழுங்கி இருக்குமாதலின், ஒரு நாளைக்கு நீ நின் தேவியைக் காண்பது குறித்துத் தேரேறுவாயாயின், தேவியும் பிரிவுத்துயர் நிங்கித் தெளிவு பெறுதல் கூடும். பன்னாட்களாய்க் கண்ணுறக்கமின்றி அடைமதிற்பட்டு அமைந்திருக்கும் அரசரும் சிறிது கண்ணுறங்குவர்; பின்னர் அவரும் போரெதிர்வர்; நீயும் வெல்போர் உடற்றி வீறு பெறுவாய்[16]” என்றார். மனம் மாறிய வேந்தன் அவ்வாறே வஞ்சிநகர் சென்றன்.

சின்னாட்கெல்லாம் சேரமான் வந்து சேர்ந்தான் அவனுடைய செலவும் வரவும் பிறர் எவரும் அறியா வகையில் நடந்தன. இவ்வாறே பழையன் மாறனும் துணைப்படை யொன்று கொணர்ந்தான். போரும் கடிதில் தொடங்கிற்று. முற்றியிருந்த எயில்கள் பலவும் சேரர் படை வெள்ளத்தின் முன் நிற்க மாட்டாது சீரழிந்தன. புதுப்படையும் பழம் படையும் கலந்து நின்ற பகைவர்படை வலியிழந்து கெட்டது. எஞ்சியவற்றுள் சோழர்படை எதிரே காட்சியளித்தது; சேரமான், ‘சென்னியர் பெருமானை என்முன் கொணர்ந்து நிறுத்துக” என ஆணையிட்டான் கோபெருஞ்சோழன் மக்கள், பழையன் மாறனுக்கு துணை வந்திருப்பது சேரமானுக்கு மிக்க சினத்தை உண்டாக்கிற்று. இச் செய்தியைத் தானைத் தலைவர்கள் படை மறவர்க்குத் தெரிவித்த ஓசை, சோழருடைய படை மறவர் செவிப்புலம் புகுந்தது. சோழன் மக்கள் மானமிழந்து இருந்தவிடம் தெரியாதபடி ஓடிவிட்டனர். சோழர் படைமறவர் தாம் ஏந்திய வேல்களைக் களத்தே எறிந்துவிட்டு ஓடினர். அவர்கட்குத் தக்கது சொல்லித் தேற்றிச் சந்து செய்விக்கக் கருதிய பெருங்குன்றூர் கிழார் திரும்பி வந்து, “வேந்தே, நீ நின் தானைக்கிட்ட ஆணை கேட்டதும், சோழர் படையை எறிந்து விட்டு ஓடிய வேல்களை எண்ணினேன். ஒன்று நினைவுற்கு வந்தது. பண்டொரு நாள் நின் முன்னோர், தன் மேல் நின்று காணின் நாடு முழுதையும் நன்கு காணத்தக்க உயர்ச்சி பொருந்திய குன்றின்கண் உள்ள நறவூரின் கண்ணே இருந்தனர். அவரது நாண்மகிழ் இருக்கையாகிய திருவோலக்கத்தைக் கபிலர் என்னும் சான்றோர், இன்றும் கண்ணிற் காண்பது போல அழகுறப் பாடியுள்ளனர்; அவருக்குக் கொங்கு நாட்டுக்குன்றேறி நின்று கண்ணிற் பட்ட ஊர்களையெல்லாம் கொடுத்தனர். அன்று கபிலன் பெற்ற ஊர்களினும் சோழர் எறிந்த வேல்கள் பலவாகும்[17]” என்று பாடினர். இரும்பொறை அவர்க்குப் பன்னாறாயிரம் காணம் பொன்னும் நிலமும் தந்து மகிழ்வித்தான்.

இனி அஞ்சியோடினும், சேரமான் தன்னை இனிது இருக்கவிடான் என்று நினைத்து மனங்கலங்கிய இளம் பழையன் மாறன், பெருஞ் செல்வங்களையும் பெறற்கரிய கலங்களையும் திறை தந்து பணிந்து புகலடைந்தான். அவற்றைப் பெற்றுக் கொண்டு பழையனுக்குப் புகல் அளித்த சேரமான் இளஞ்சேர் விரும்பொறை, அவற்றைத் தன் வஞ்சி நகர்க்குக் கொணர்ந்து பரிசிலர்க்கும் இரவலர்க்கும் எல்லார்க்கும் வரைவின்றி வழங்கினான். பழையன் மாறனும் அவன் ஆணைவழி நின்று ஒழுகலானான்.

தன் கருத்துக்கு மாறாகப் பழையனோடு கூடிச் சென்று, சேரமானுடன் பொருது, தோற்றோடி வந்த மக்கள் செயல் தன் புகழ்க்கு மாசு தரக் கண்டான் கோப்பெருஞ் சோழன். அவனுக்கு அவர்கள் மேல் அடங்காச் சினமுண்டாயிற்று. அவர்களும் கோப்பெருஞ் சோழனது மான மாண்பை உணராது அவனையே எதிர்த்து நின்றனர். சோழர் குடிக்குரிய பெரும் புகழைக் கொன்ற அவர்களைக் கொல்வதே கருமம் என அவன் தானைபண்ணிப் போர்க் கெழுந்தான். உடனே, அங்கிருந்த புல்லாற்றார் எயிற்றியனார் என்னும் நல்லிசைச் சான்றோர், அவனது பெருஞ் சினத்தைத் தணித்து அறநெறியை எடுத் துரைத்தனர். சோழனும் மானவுணர்வும் மறமாண்பும் இல்லாத மக்களொடு உயிர் வாழ்வதை விட, அறம் நோற்று வடக்கிருந்தொழிதல் நன்று எனத் தேர்ந்து உறையூர்க்கு வடக்கில் காவிரியாற்றின் இடைக்குறையில் தங்கி வடக்கிருந்து உயிர் துறந்தான். எயிற்றியனாரது புல்லூற்றூர் இடைக்காலத்தில், பில்லாறு என மருவி, “இராசராச வளநாட்டுப் பாச்சில் கூற்றத்துப் பில்லாறு[18]” என நிலவி இப்போது மறைந்து போயிற்று. திருவெள்ளறை, கண்ணனூர் முதலியவை இப் பாச்சில் கூற்றத்தைச் சேர்த்தவை.

இது நிற்க, பின் பொருகால், கொங்கு நாட்டின் வடபகுதியான குறும்பு நாட்டுப் பூவானி யாற்றின் கரைப்பகுதியில் வாழ்ந்த குறுநிலத் தலைவர்கள் சேரமானுக்கு மாறாகக் குறும்பு செய்வாராயினர். இந் நாளில் பவானி என வழங்கும் பெயர், பண்டை நாளில் வானியென்றே வழங்கிற்று; இதற்குக் கோபி செட்டியானையும் வட்டத்தில் வானியாற்றின் கரையில் உள்ள வானிப்புத்தூரே சான்று பகருகிறது. இடைக் காலத்தில் இதற்குப் பூவானி என்றும், அதனால் இதனைச் சார்ந்த நாட்டுக்குப் பூவானி நாடு என்றும் பெயர் வழங்குவதாயிற்று. சீவில்லிபுத்தூர்ப் பகுதியில் குடமலையில் தோன்றிவரும் சிற்றாறு மட்டில் பூவானி என்ற பெயர் திரியாது இன்றும் நிலவி வருகிறது.

இனி குறும்பு செய்தொழுகிய குறும்பர்களை அடக்குதற்குப் பெரும்படை யொன்று கொண்டு இரும்பொறை அப் பகுதிக்குச் சென்றான். சேரமான் ஓரிடத்தே பாசறையிட்டிருக்கையில், குறும்பர்கள் தம் படையுடன் போந்து போர் செய்தனர். சிறிது போதிற் கெல்லாம் சேரமான் பாசறையில் ஒரு பேராரவாரம் உண்டாயிற்று, பெருங்குன்றூர் கிழார் விரைந்து அங்கே சென்று அதற்குரிய காரணம் அறிந்து வந்தார். அவர், “வேந்தே, நின் அடிபணிந்து வாழும் திறமறியாது . பொருது நிற்கும் குறுநில மன்னர், களிற்றின் காற்கீழ்ப் பட்ட மூங்கில் முளைபோல அழிவது திண்ணம். போர் தொடங்குமாறு நின் தானைத் தலைவர் தண்ணுமை முழக்கினர்; உடனே மறவர் பலரும் பகைவரது படைக்குட் புகுந்து மறவர்கயுைம் களிறு முதலிய மரக்களையும் கொன்று குவித்தனர். அதுகண்டு பாசறையிலுள்ளார் பேராரவாரம் செய்தனர்; வேறொன்றும் இல்லை[19]” என்றார்.

போர் நடப்பதைப் பெருங்குன்றூர் கிழார் ஒருபால் இருந்து நோக்கினார். இரும்பொறையின் பெரும்படை மறவர் கடுஞ்சமர் புரிவதும், பகைமறவர் பலர் பலராக மடிந்து வீழ்வதும் கண்டார். அவர் நெஞ்சில் குறுநிலத்தவர்பால் இரக்கம் பிறந்தது. வேந்தனைக் கண்டு, “வேந்தே, யான் பகைப் படைத் தலைவரிடம் சென்று நினது படைமாண்பை எடுத்தோதி, அவர்கள் வந்து நின் திருவடியைப் பணிந்து அருள் பெறுமாறு செய்யக் கருதுகின்றேன்” எனச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்றார். கருதியவாறே, பகை மன்னர் களைக் கண்டு வேண்டுவனவற்றை எடுத்தோதினார். அவர்கள், “இரும்பொறையோ வெப்புடைய ஆண்டகை; பகைவரை அருளின்றிக் கொலை புரிபவன். அவனுடைய போர்க்களம் மறவரது குருதி தோய்ந்து நெடுநாள் காறும் புலால் நாறிக் கொண்டிருக்கும். அவன் அருளின்றிச் செய்தன பல” எனப் பெருங்குன்றூர் கிழாரது மனமும் மருளுமாறு மொழிந்தனர். அவர்கட்கு அவர், ‘தலைவர்களே, போர்க்களம் குருதிப் புலவு நாறப் பகைவரைக் கொன்றழிக்கும் வெந்திறல் தடக்கை வென்வேற் பொறையன் என்று பலரும் கூற, யானும் கேட்டு, அவனை வெப்புடைய ஆடவன் என்றே கருதினேன்; பின்பு, யான் அவனை நேரில் சென்று கண்டேன். தனது நல்லிசை இந் நிலவுலகில் நிலைபெற வேண்டும் என்ற ஆர்வமும், அதற்கேற்ப இல்லார்க்கு வேண்டுவன நல்கி அவரது இன்மைத் துயரைப் போக்குவதிற் பேருக்கமும் உடையனாதலைக் கண்டேன். அவன், தான் செய்யும் செய்வினையின் நலம் தீங்குகளை நாடிச் செய்யும் நயமுடையவன். பாணர் பொருநர் முதலிய பலரையும் பரிவோடு புரக்கும் பண்புடையவன்; சுருங்கச் சொன்னால், புனலிற் பாய்ந்து ஆடும் மகளிர் இட்ட காதணியாகிய குழை எத்துணை ஆழத்தில் வீழ்ந்தாலும் தன் தெளிவுடைமை யால் அவர்கள் எளிதில் கண்டெடுத்துக் கொள்ளத்தக்க வகையில் தெளிந்து காட்டும் வானியாற்று நீரினும், சேரமான் மிக்க தண்ணிய பண்புடையன்[20] என்று கூறித் தெருட்டினார். அவர்களும் அவர் சொல்லிய வண்ணமே இரும்பொறையால் புகலடைந்து அவ்வாறு அருள் பெற்று அவன் ஆனைவழி நிற்பாராயினர்.

இனி, குட்ட நாட்டின் தெற்கிலுள்ள வேணாட்டில் மரத்தை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு வேளிர்கள் ஆட்சி செய்து வந்தனர். இமயவரம்பன், செங்குட்டுவன் முதலிய பேரரசர் காலத்தில் சேரநாடு தென்பாண்டி நாடு முழுவதும் பரந்திருந்தமையின், மரத்தையோர் அவர்கட்குக் கீழ்ச் சிற்றரசர்களாய்த் திகழ்ந்தனர். இந்த மரத்தை நகர் மேனாட்டு யவன ஆசிரியர்களால் மருந்தை (Marunda) என்று குறிக்கப் படுகிறது. இப்போது நாஞ்சில் நாட்டுக் கல்குளம் வட்டத்தில் இருக்கும் மண்டக்காடு என்பது பண்டை நாளை மரத்தையாகவும் இருக்கலாம் என்று கருதுவோரும் உண்டு. ஒருகால் இம் மரத்தையோர் இளஞ்சேரல் இரும்பொறையால் பிணக்கம் கொண்டு வேறுபட்டனர். அவர்கட்கு அவன் சான்றோரைக் கொண்டு நல்லறிவு கொளுத்தித் தன் ஆணைவழி நிற்குமாறு பண்ணினான். அதனால் மரந்தையோர் பொருநன் என்ற சிறப்பை நம் இரும்பொறை பெற்றான்.

தான் சென்ற இடங்களிலெல்லாம் சீரிய வெற்றி பெற்றது குறித்துத் தன் முன்னோரைப் போலவே இரும்பொறையும் அயிரை மலைக்குச் சென்று கொற்றவையைப் பரவினான். குடவரும் குட்டுவரும் பொறையரும் பூழியரும் கொங்கரும் மரத்தையோரும் பிறரும் வந்திருந்தனர். பெருங்குன்றூர் கிழார், விறலி யொருத்தியை நோக்கி, “பொறையன், சந்தனமும் அகிலும் சுமந்து செல்லும் யாற்றில் ஓடும் வேழப் புணையினும் மிக்க அளியன்; அவன்பாற் செல்க; சென்றால் நல்ல அணிகலன்களைப் பெறுவாய்[21]” என்ற ஆற்றுப் படைப் பாட்டைப் பாடி இன்புறுத்தினார்.

சின்னாட்குப்பின், நம் குடக்கோ, அறவேள்வி யொன்று செய்தான். பல நாடுகளிலிருந்தும் சான்றோர் பலர் வந்திருந்தனர். அவ் வேள்வியை அவனுடைய அமைச்சருள் ஒருவனான மையூர் கிழான் என்பான் முன்னின்று நடத்தினான். இந்த மையூர் இப்போது தேவிகுளம் என்று பகுதியில் உளது. இங்கே பழங்காலக் கற்குகைகளும் வேறு சின்னங்களும் உண்டு. வேள்வி ஆசானாகிய புரோகிதன் முறையோடு சடங்குகளைச் செய்து வருகையில் தவறொன்றைச் செய்து விட்டான் மையூர்கிழான் அதனை எடுத்துக் காட்டினான். அது குறித்துச் சொற்போரும் ஆராய்ச்சியும் நடந்தன. மையூர் கிழான் கூறுவதே சிறந்ததாக முடிவாயினமையின் அவனையே வேள்வியாசனாய் இருந்து வேள்வியை முடிக்குமாறு வேந்தன் ஆணையிட்டான்.

அந் நிலையில் பெருங்குன்றூர் கிழாரும் வந்து சேர்ந்தார். அவர் வருகையை வேந்தன் வியப்போடு நோக்கினான். அவன் நோக்கத்தைப் பெருங்குன்றூர் கிழார் அறிந்து கொண்டு, “மாந்தரன் மருகனே, இனிய நீர் போலும் தண்மையும், அளப்பரும் பெருமையும், குறையாச் செல்வமும் கொண்டு, விண்மீன்களின் இடைவிளங்கும் திங்கள் போலச் சுற்றம் சூழ இருக்கின் றாய், நீயோ உரவோர் தலைவன்; கொங்கர்கோ; குட்டுவர் ஏறு, பூழியர்க்கு மெய்ம்மறை; மரந்தையோர் பொருநன்; பாசறை இருக்கும் வயவர்க்கு வேந்து; காஞ்சி மறவரான சான்றோர் பெருமகன்; ஓங்குபுகழ் கொண்ட உயர்ந்தோன். எல்லாவற்றிற்கும் மேலாக, நீ காவிரி நாடு போன்ற வண்மையும், கற்புறு பொற்பும், கலங்காத நல்லிசையுமுடைய நல்லாளுக்குக் கணவன்; நின்வாழ் நாள் வெள்ள வரம்பினவாக என உள்ளிக் காண வந்தேன்[22]” என்றார். அப் பாட்டின் நலம் கண்டு சான்றோர் பலரும் அவரது புலமையை வியந்த பாராட்டினர். வேந்தனும் அவர்க்கு மிக்க சிறப்புகளைச் செய்தான்.

பின்பு, அங்கு நடைபெற்ற வேள்வியில் புரோகிதன் தவறு செய்ததும் மையூர் கிழான் எடுத்துக் காட்டியதும் வேந்தன் முடிவு கூறியதும் சான்றோர்களால் பெருங் குன்றூர் கிழார் அறிந்தார். அவர், வேந்தனை நோக்கி, “பொறை வேந்தே, வேள்விச் சடங்குகட்குரிய விதிவிலக்குரைகளின் பொருள் காண்பதில் பண்டை ஆசிரியர்களின் வகுத்தறிவது நம்மனோர்க்கு அரிது; உண்மை காணவேண்டின் சதுக்கத் தேவரைக் கேட்பது தக்கது;

‘தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அல்லவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க் கரியாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்
காத நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூதசதுக்கத்தின்[23]

இயல்பு இது; இத் தெய்வம் காவிரிப்பூம்பட்டினத்தில் இருப்பது; பார்ப்பனி மருதியென்பாள் தன் குற்றத்தைத் தானே யறியாது யான் செய்த குற்றத்தை அறிகில்லேன்[24]’ என்று சதுக்கப் பூதரைக் கேட்டு உண்மை தெரிந்த வரலாறு நாடறிந்த தொன்று” என எடுத்துரைத்தார்.

அங்கிருந்த சான்றோரும் வேந்தரும் வஞ்சிநகர்க் கண் பூத சதுக்கம் அமைக்க வேண்டுமென வேந்தனை வேண்டிக் கொண்டனர். சின்னாட்களில் பூத சதுக்கம் அமைத்துச் சாந்தி விழாவும் செய்யப்பட்டது. விழாவின் இறுதியில் வந்திருந்த சான்றோர் பலரும் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை வாழ்த்தினர். பெருங்குன்றூர் கிழார், “மழை தப்பாது பொழிக, கானம் தழைக்க; மாவும் புள்ளும் வண்டினமும் பிறவும் இனம் பெருகப் புல்லும் இரையும் தேனும் இனிதுண்டு இன்புறுக; இவ்வாறு நன்பல வூழிகள் செல்க; கோல் செம்மையாலும், நாட்டவர் நாடோறும் தொழுதேத்தலாலும், உயர்ந்தோர் பரவுதலாலும் அரசுமுறை பிழையாது செருவிற் சிறந்து கற்புடைக் காதலியுடன் நோயின்றிப் பல்லாண்டு வேந்தன் வாழ்க[25]” என்று வாழ்த்தினர்.

இளஞ்சேரல் இரும்பொறை, “மருளில்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை, ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி,” “பெருங்குன்றூர் கிழார்க்கு எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு பன்னூயிரம் பாற்பட வகுத்துக் காவற்புறம் விட்டான்” என்று பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது.

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு அரசு வீற்றிருந்தான்.


  1. புறம். 210.
  2. புறம். 211.
  3. புறம். 266.
  4. புறம். 147.
  5. குறுந், 828, விச்சியூர், பின்பசிறுவிச்சியூர் ருெவிச்சியூர் என இரண்டாயிற்று; அவற்றுள் பெருவிச்சியூர் மறைந்துபோகச் சிறுவிச்சியூர் இப்போது சிராப்பள்ளி சென்னைப் பெருவழியில் சிறுவாச்சூர் என நிலவுகிறது.
  6. பதிற் 81.
  7. பதிற். 88.
  8. பழையன்கோட்டை பிற்காலத்தே பனையன் கோட்டையாய்ப் பாளையங்கோட்டையாய் மருவி விட்டது. தண்ணான் பொருகை தாம்பிரபரணியாய் விட்டது.
  9. புறம். 84.
  10. புறம். 214.
  11. A.R. No.614 of 1917.
  12. பதிற். 82.
  13. பதிற். 83.
  14. பதிற். 84.
  15. பதிற். 81.
  16. பதிற். 81.
  17. பதிற். 85.
  18. A.R. No. 126 of 1936-7.
  19. பதிற். 84.
  20. பதிற். 86.
  21. பதிற். 87.
  22. பதிற். 90.
  23. சிலப். v. 128-34.
  24. மணி. 22:54.
  25. பதிற். 89.