சேரமன்னர் வரலாறு/13. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

13. சேரமான் பாலை பாடிய

பெருங்கடுங்கோ மலையாள மாவட்டத்து, இப்போது வயனாடு எனப்படும் பகுதிக்குப் பண்டைக்காலத்திலும் இடைக் காலத்திலும் பாயல் நாடு என்று பெயர் வழங்கினமை சங்க நூல்களும்[1] கல்வெட்டுகளும்[2] குறிக்கின்றன. அப் பகுதியிலுள்ள குடமலைத் தொடர்க்குப் பாயல் மலை என்பது பெயர். மலையாளத்துக் குறும்பர் நாடு வட்டத்தின் ஒரு பகுதிக்கும் பாயல் நாடு என்றே இன்றும் பெயர் வழங்குகிறது.

இப் பாயல் நாட்டின் வேறொரு பகுதிக்குக் கடுங்கோ நாடு என்பது பெயர். வள்ளுவ நாடு மாவட்டத்ததில் இன்றும் கடுங்கோவூர், கடுங்கோபுரம் எனப் பெயர் தாங்கிய ஊர்கள் இருக்கின்றன. அந்நாட்டிலிருந்து அரசு புரிந்தவர் கடுங்கோ எனப்படுவர். அந்நாடு செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திலோ அவற்கு முன்னோ இப்பெயரை எழுதியிருக்கலாம். இந்நிலையில் தென்பாண்டி நாட்டில், கொற்கை, ஆற்றூர் முதலிய ஊர்கள் இருக்கும் பகுதிக்குக் குடநாடு என்றும் கடுங்கோ மண்டலம்[3] என்றும் பெயர் உண்டு; குடநாட்டுப் பிரமதேயம் கடுங்கோ மங்கலமான உலகுய்ய வந்த பாண்டியச் சதுர்வேதிமங்கலம் எனவரும் ஆற்றூர்க் கல்வெட்டொன்றும்[4] ஈண்டு நினைவு கூரத்தக்கது. வேள்விக்குடிச் செப்பேட்டில்[5] காணப்படும் பாண்டி வேந்தர் நிரலில் முன்னோனாக வரும் கடுங்கோவின் பெயரால் இத்தென்பாண்டி நாட்டுப் பகுதி இவ்வாறு கடுங்கோ மண்டலம் எனப்படுவ தாயிற்று. ஈங்கு நாம் காணும் கடுங்கோ, பொறை நாட்டுச் சேர வேந்தராவர். தென்பாண்டி நாட்டில் காணப்படும் கடுங்கோ பாண்டியனாவன். தென்பாண்டி நாட்டுப் பகுதிக்குக் கடுங்கோ மண்டலம் என்பதோடு குடநாடு என்ற பெயரும் இருப்பது நோக்கின், பாண்டியனான கடுங்கோ, இப்பொறை நாட்டுக் கடுங்கோ வழியினனாக லாம் என்றும், அவனுடைய முன்னோர் தமது நாட்டை நினைவு கூர்தற் பொருட்டு இத் தென் பாண்டி நாட்டுப் பகுதியைக் குடநாடு என்று வழங்கியிருக்கலாம் என்றும், கடுங்கோவுக்குப் பின் குடநாடு கடுங்கோ மண்டலமாகி யிருக்கலாம் என்றும், எனவே, பொறை நாட்டுக் கடுங் கோக்களுக்கும் தென்பாண்டி நாட்டுக் குடநாட்டுப் பகுதியை யாண்ட கடுங்கோவுக்கும் தொடர்பு இருந் திருக்கலாம் என்றும் நினைத்தற்குப் போதிய இடம் உண்டாகிறது. இவ்வாறே நாவரசர் காலத்தில் தென்குமரிப் பகுதி கொங்கு நாடு[6] எனப் பெயர் எய்திய தற்கும் காரணம் இல்லாது போதற்கு இடனில்லை என அறியலாம்.

இது நிற்க, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பன இக் கடுங்கோ நாட்டு வேந்தர் பெயராதலை அறிய வேண்டும். பாலை பாடிய பெருங்கடுங்கோ நன்னனது ஏழில் மலை நாட்டைப் பாராட்டிப் பாடுகின்றார். கொண்கான நாடு பொன்வளமுடையது என்றும், அந் நாடு நன்னனுக்கு உரியது என்றும், அந் நாட்டில் ஏழில்மலை சிறந்ததொரு மலை என்றும், பெறுதற்கரிய பேறுகளுள் அவ் வெழில் மலை சிறந்தது என்றும் கூறுகின்றார். இதனால், இவர் நன்னன் வாழ்ந்த காலத்தவர் என்பது பெறப்படும். ஆயினும் இந்த நன்னன் வேறு. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் காலத்தில் வாழ்ந்த நன்னன் வேறு.

பெருங்கடுங்கோவின் பாட்டுகளில் வரும் அரிய உவமங்களும் கருப்பொருள்களும் கருத்துகளும் இவரது பரந்த பெரும் புலமையை விளக்குவனவாகும். இவரது நுண்மாண் நுழைபுலப்பெருமையை ஒருவன் இனிதெடுத்துக் கூற விரும்பின், அஃது ஒன்றே ஒரு தனித்த பெரு நூலாகும் பெருமையுடையது, கருத்து களின் பொருட்கவினும், அவற்றை வெளிப்படுத்தும் சொல்வழக்கும், இயற்கைக் காட்சிகளைப் படிப்போர் மனக்கிழியிற் பொறிக்கும் சொல்வளமும், உலகிய லறிவும், உயரிய நோக்கங்கலும் படிக்குந்தோறும் வற்றாத இன்பம் சுரப்பவையாம். அரசரிற் பிறந்து அரசரில் வளர்ந்து அரசு முறைக்குரிய கலை பலவும் கற்றுத் துறைபோகிய இப் பெருங்கடுங் கோவின் பெருமை நம் தமிழ்மொழிக்கே சிறப்பாக விளங்குகிறது. “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப்படும் கலித்தொகையைக் கோத்த நல்லந்துவனார், பிற ஆசிரியர் எவரும் வைக்காதொழிந்த பாலைத் திணைப்பாட்டை முதற்கண் வைத்து முறை செய்து கோத்ததற்குக் காரணம் அப் பாட்டை இப் பெருங்கடுங்கோ பாடியது பற்றியே எனின் ஒரு சிறிதும் அது மிகையாகாது.

வெயில் தெறுதலால் வெம்மை மிகுந்து வெம்பிய அருஞ்சுரத்தைக் கூறக் கருதும் பெருங்கடுங்கோ, கோல் கோடிய வேந்தன் கொலையஞ்சா வினையாளரைக் கொண்டு அறநெறியைக் கை விட்டுக் குடிகள் வயிறு அலைத்துக் கூக்குரலிட்டு அழ அழப் பொருள் கவர்ந்து கொள்வானாயின், அவனது நாடு எவ்வாறு பொலி வழிந்து கெடுமோ, அவ்வாறே உயரிய மரங்கள் உலறிப் பொலிவின்றி யிருக்கின்றன[7] என்று கூறுகின்றார். காதலனைப் பிரிந்துறையும் கற்புடைய மகளொருத்தி யின் வருத்தத்தை, “ஆள்பவர் கலக்குற அலைவுற்ற நாடு போல், பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ[8]” என்றும், அந் நிலையில் இளவேனில் காலம் வர அதனைக் காணும் தோழி அவ் வேனிலை வெறுத்து, பேதையை அமைச்சனாகவுடைய பீடிலா மன்னன் ஒருவனுடைய நாட்டில் பகையரசர் எளிதில் வந்து புகுவதுபோல இளவேனில் வந்தது[9] என்றும் கூறுவன அவரது அரசியலுணர்வை வெளியிடுகின்றன.

உள்ள பொருள் செலவாகித் தொலைந்தமையால் இரப்பவரும், அறவே ஒன்றும் இல்லாது வறுமையால் இரப்பவரும், வேண்டுமளவு பொருளில்லாமையால் இரப்பவரும் என இரப்போருள் பல் வேறு வகையினர் உண்டு. இப் பெற்றியோர்க்குச் சிறிதளவேனும் ஈத்தொழிவது சிறப்பு; ஒன்றும் ஈயாமை இழிவு[10] என்பது இக் கடுங்கோ கூறும் அறிவுரை. நிலைபேறில்லாத செல்வப் பொருளை உயிர்க்கு உறுதுணையாகும் நிலையுடைய பொருள் என உணர்வது மயக்கவுணர்வு. பொருளில்லார்க்குக் காதலர் யாது செய்வர் என்று ஏதிலார் கூறுவர்; அவர் சொல் கொள்ளத் தகுவதன்று. செம்மை நெறியிலன்றிப் பொருள் செய்பவர்க்கு அஃது இருமையும் பகை செய்யும்[11]. வளமை எக் காலத்தும் செய்து கொள்ளப்படும் எளிமையுடையது; இளமையோ கழிந்தபின் பெறல் அரிது[12]; இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்பு பெயர்பு மறையும்[13]; ஒருவர்பால் கடன் கேட்குங்கால் கடன் வாங்குவோர் முகம் இருக்கும் இயல்பு வேறு; அக் கடனைத் திரும்பத் தருங்கால் அவர் முகம் இருக்கும் இயல்பு வேறு; இவ்வாறு முகம் வேறுபடுவது முற்காலத்தும் இவ்வுலகில் இயற்கை; இப்போது அது புதுவதாக இல்லை[14]. கண்ணிற் கண்ட போது சிறப்புச் செய்து புகழ்பல கூறி, நீங்கியவழி அச் சிறப்புச் செய்யப்பட்டோருடைய பழியை எடுத்துத் தூற்றுவதும், செல்வமுடையாரைச் சேர்ந்திருந்து, அவரது செல்வத்தைக் கூடியிருந்து உண்டு அது குறைந்தபோது அவர்கள் உதவாதொழிவதும், நட்புக் காலத்தில் ஒருவருடைய மறை (இரகிசயம்) எல்லாம் அறிந்து கொண்டு, பிரிந்த காலத்தில் அவற்றை எடுத்துப் பிறரெல்லாம் அறிய வுரைப்பதும் தீச்செயல்களாகும்[15]; முன்பு தமக்கு ஓர் உதவியைதச் செய்து தம்மை உயர்த்த முயன்ற ஒருவர் தாழ்வெய்துவராயின், இயன்ற அளவு முயன்று கூடிய தொன்றைச் செய்வரே பீடுடையோ ராவர்[16]; ஆடவர்க்கு உழைப்பே உயிர்; மனையுறையும் மகளிர்க்கு அவ்வாடவர் உயிர்[17]; தம்பால் உள்ள பொருளைச் சிதைப்பவர் உயிரோடிருப்பவர் எனப் படார் : இல்லாதாருடைய வாழ்க்கை இரத்தலினும் இளிவந்தது[18]; ஒருவர்க்கு அறத்தின் நீங்காத வாழ்க்கையும், பிறன்மனை முன் சென்று உதவி நாடி நில்லாத செல்வமும் உண்டாவது பொருளால்தான் ஆகும்[19]; நீர்சூழ்ந்த நிலவுலக முற்றும் அதன்கண் வாழ்வோடு அனைவர்க்கும் பொது என்பதன்றி தனக்கே சிறப்புரிமை யென்ன அமைந்தபோதும், ஒருவன்பால் செல்வம் கனவுபோல் நீங்கி மறையும்[20]; தன்னை விரும்பி ஈட்டிக் கொண்டவரைத் தான் பிரியுங்கால், கொண்ட காலத்துக்கு மாறாகப் பிறர் கண்டு எள்ளி நகையாடுமாறு நீங்குவது செல்வத்தின் இயல்பு; நிலையில்லாத அதனை ஒருவர் விரும்ப லாகாது, ஒரு பயனும் நோக்காது தன்னையுடைய அரசன் ஆக்கம் பெற வேண்டும் என முயலும் சான்றோன் ஒருவனை, அவ்வரசன் கண்ணோட்டம் இன்றிக் கொல்வானாயின், அவனது அரசு நிலை பெறாது ஒழிவது போலச் செல்வமும் நில்லாது நீங்கும்; அதனை ஒருவர் விரும்பலாகாது என்பன போல்வன பெருங்கடுங்கோவின் அரசியலறிவும் உலகியலறிவும் இப் பெற்றியவை என நாம் நன்கறிதற்குச் சான்றா கின்றன.

இவரது உள்ளமுற்றும் அறவுணர்வுகளே நிரம்பிக் கிடத்தலால், சொல்லும் சொற்றோறும் அறமே கூறு கின்றார். அவரது செயல்வகைப்பட்ட கட்பார்வையும் அவ்வாறே அறம் கனிந்திருப்பது நாம் அறியற்பாலது. வெவ்விய சுரத்தின்கண் செல்பவர்க்கு நீர்வேட்கை உண்டாவது இயல்பு. சுரத்தின்கண் நீர்நிலைகள் இரா. சுரங்களில் கள்ளி காரை முதலிய செடிகளும், நெல்லி, பாலை முதலிய மரங்களும் இருக்கும். நிலமும் சிறுசிறு கற்கள் பரந்த முரம்பாகும். வேனிற்காலத்தில் நெல்லி மரங்கள் காய்ப்பது இயற்கை. சுரத்துவழிச் செல்வோர் வேனில் வெப்பத்தால் விடாய்கொண்டபோது நெல்லிக் காயைத் தின்பர். அஃது இனிய நீரூறி வேட்கை தணிவிக்கும். அதனாலே, சுரத்தில் அமைந்த பெரு வழிகள், இருமருங்கும் வரிசையாக அம் மரங்களைக் கொண்டிருக்கின்றன. நெடுஞ்சுரத்தின் வழிச்செல் வோர்க்கு இனிய காயைத் தந்து வேனில் வேட்கை தணிவிக்கும் சிறப்புக் கண்ட நம் கடுங்கோ , “அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்[21]” என்பாராயின், அவரை நடமாடும் அறக்கோயில் என்பதன்றி வேறு யாது கூறலாம்?[22]

இயற்கையழகில் அவரது உள்ளம் தோய்வது காண்மின்: வேனிலில் ஒரு பால் முருக்க மரத்தின் செம்முகைகள் வீழ்ந்து சிதறிக் கிடக்கின்றன; கோங்கு, அதிரல், பாதிரி முதலியன மலர்ந்து கிளைகளில் மலர்களைத் தாங்கி நிற்கின்றன; எங்கும் வண்டினம் தேனுண்டு முரலுகின்றன. இவற்றைக் காணும் கடுங்கோவின் உள்ளம் அக் காட்சியில் ஈடுபடுகிறது.

மராமலர் கொண்டு மனைமுழுதும் கோலஞ் செய்து முருகவேளை வழிபடும் செல்வர் மனை யொன்றின் உருவம் மனக் கண்ணில் தோன்றுகிறது. உடனே, பெருங்கடுங்கோ தமது தமிழ் கமழும் மனங் கனிந்து “மராஅ மலரோடு விராய் அய்ப் பராஅம், அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே கானம் - நயவரும் அம்ம[23]” என்று பாடுகின்றார். மரங்களின் இடையே யிருந்து குயில்கள் கூவுகின்றன. அவற்றின் இன்னிசைக் குரல் அவரது செவியகம் நிறைந்து இன்பம் செய்கிறது. அதன் ஓசை அவர்க்கு ஒரு புதுப்பொருள் தருகிறது. பிரிவு கருதிய காதலர்க்குப் பிரியாதிருக்குமாறு பேசும் பெண்மகள் ஒருத்திக்கு இக் காட்சி எழுப்பும் உணர்வை எண்ணுகிறார். அந் நங்கை, “குரா மரங்கள் அரும்பு தொடுக்கின்றன; ஆகவே இது முன்பனிக் காலம் ; பின்னர் வருவது பின்பனிக் காலம்; அது பிரிந்தார்க்குத் துன்பம் தருவது; ஆதலால், கூடியுறையும் காதலர்களே, நீவிர் பிரியாதிருந்து கூடுமின்” என்று கூறுவதாக நினைக்கின்றார். “பின்பனி - அமையம் வருமென முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே, புணர்ந்தீர் புணர்மினோ என இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும், இன்ப வேனிலும் வந்தன்று[24]” என்று அக் குயில் கூறுவதாகப் பாடுகின்றார்.

பாலைத்திணை பாடுவதில் வல்லவராகிய நம் புலவர் பெருந்தகை, இக் காட்சி யின்பங்களை நுகர்தற் கெனத் தலைமைக் குணங்களே நிறைந்து இளமை நலம் கனிந்து விளங்கும் தலைமகன் ஒருவனையும் தலைமகள் ஒருத்தியையும் கொணர்ந்து நிறுத்தி, அவர்ளிடையே நிகழும் பேச்சுகளை எடுத்தோதுகின்றார். தலை மகளோடு கூடியுறையும் தலைமகன் கடமை காரணமாகப் பிரியக் கருதுகின்றான்; தன் பிரிவை மெல்லத் தன் காதலிக்கு உணர்த்தலுற்று, “அன்பே, நின்னுடைய மனையகத்தே நின்னைத் தனிப்ப நிறுத்தி யான் பிரிந்திருப்பது என்பது இயலாது; அவ்வாறு ஒன்று இயலுமாயின், அதனால் என் மனைக்கு இரவலர் வாராத நாள்கள் பல உண்டாகுக[25]” என்று இயம்பு கின்றான். பிறிதொருகால் அவன் பிரியவேண்டுவது இன்றியமையாதாகிறது; பிரியக் கருதுகிறான்; பிரிவுக் குறிப்பைத் தோழி அறிகிறாள்; அவள், “தலைவரே, இளமைச் செவ்வியும் காதல் வாழ்வும் ஒருங்கு பெற்றவர்க்கு அவற்றினும் செல்வம் சிறந்ததாகத் தோன்றுமோ?’ செல்வம் இல்லாமையால் ஒருவரது ஆடையை மற்றவர் கூறு செய்து உடுக்கும் அத்துணைக் கொடிய வறுமை உண்டாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை[26]” என்று சொல்லுகிறாள். மடங்கா உள்ளமுடைய தலைமகன் பிரிவையே நினைவானாயினன். அவனை நோக்கி, “ஐயா, நீவிர் சென்று வருக; சென்றிருக்குங்கால் இங்கிருந்து வருவோரைக் காண்பீர். கண்டால் எம்மைப்பற்றி அவரைக் கேட்கலாகாது” என்றாள். அவன் குறுநகை செய்து, “என்?” என்றான்; “கேட்டால், நீ மேற்கொண்ட வினை தடைப்படும்; எடுத்த வினை முடியாமை கண்டு மக்கள் நின்னை இகழ்வர்; நினது தலைமை அதனால் சிதையும்” என்பது தோன்ற,

“செல்; இனி, சென்று நீ செய்யும் வினைமுற்றி,
‘அன்பற மாறி யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ?’ என்று வருவாரை
எம்திறம் யாதும் வினவல்; வினவின்,
பகலின் விளங்கும் நின் செம்மல் சிதையத்
தவலரும் செய்வினை முற்றாமல், ஆண்டு, ஓர்
அவலம் படுதலும் உண்டு”

என்று கூறுகின்றாள்[27]. காளை யுள்ளத்தில் கவலையும் கலக்கமும் கஞலுகின்றன; கையறவு படுகின்றான்.

சின்னாட்குப்பின், தன் காதலிபால் தனது பிரிவுக் குறிப்பைத் தெரிவிக்கின்றான். அவள் தன் மகனைக் கையில் ஏந்திக் கொண்டு நிற்கிறாள். மகனுடைய தலை எண்ணையிட்டு நீவிப் பூச்சூடி வனப்புடன் விளங்கு கிறது. “பிரிவது அறத்தாறு அன்று'’ எனச் சொல்லித் தன் காதலனைச் செலவு விலக்க நினைத்தாள். துயர் மீதூர்ந்து நா எழாவாறு தடுத்தொழிந்தது. ஆயினும், அவள், தனது கருத்தைக் கண்ணாலும் முகத்தாலும் காட்டினாள். அவளது அப்போதைய நிலை அவனுடைய மனக் கிழியில் நன்கு பதிந்து விட்டது. அவள், தன் மகன் தலையில் சூடிய பூவை மோந்து உயிர்த்தாள். அதன் வெப்ப மிகுதியால் பூவும் நிறம் மாறி வதங்கிவிட்டது. அதனை நினைந்து தான் செல்வது தவிர்ந்ததாக அவன் கூறியதனைப் பெருங் கடுங்கோ அப் பாட்டொன்றில் சொல்லோவியம் செய்கின்றார், காண்மின்;

“பரல் முரம்பாகிய பயமில் கானம்
இறப்ப எண்ணுதிராயின் அறத்தாறு
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஒவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றிப்
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினன் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே[28]

என்று வருவது அப் பாட்டு.

அவருடைய பாட்டுகளில் முன்னர்க் காட்டிய அறங்களே யன்றி, மூவெயில் முருக்கிய முக்கட் செல்வனும், அரக்கு மனையில் அகப்பட்டு வருந்தும் பாண்டவரும், அவரை விரகிற் கொண்டேகும் வீமனும், மீனக் கொடியுடைய காமனும் பிறரும் காட்சி தருகின்றனர். கான மரங்கள் ஞானம் நல்குகின்றன. கான்யாற்றின் கரை மரங்கள் தீதிலான் செல்வத்தைச் சிறப்பிக்கின்றன. இளவேனிலில் மரங்களும் கொம்பும் கிளையும் கொடியும் புதலும், உணர்ந்தோர் ஈகை, நல்லவர் நுடக்கம், ஆன்றவர் அடக்கம் முதலிய நற் காட்சிகளை[29] மனக் கண்ணிற் காட்டுகின்றன. இயற்கைக் கவிஞர் என ஏனை. நாட்டுப் புலவர்களை ஏத்தித் திரியும் அறிஞர் அவரை அறிந்திலரே! என்னே அவரது இயல்பிருந்தவாறு!

இதோ, கோங்கமரஞ் செறிந்த காடு தோன்றுகிறது; கார்த்திகை விளக்கீடு கடுங்கோவின் நினைவுக்கு வருகிறது. அதனைத் தமிழ்மகள் ஒருத்திக்குக் காட்டுவார் போன்று, “கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை, அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள், செல்சுடர் நெடுங்கொடி போலப், பல்பூங்கோங்கம் அணிந்த காடே[30]” என்று இசைக்கின்றார். கார்த்திகை விளக்கீடு காட்சிக்கு இனிது என்பதை, இடைக்காலத்தில் இருந்த திருஞானசம்பந்தரும், “தொல் கார்த்திகை நாள், தளத்தேந்திள (முல்லைத்) தையலார் கொண்டாடும், விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்[31]” என்று பாடியுள்ளார்; - கார்த்திகையைக் கைவிட்டுத் தீபாவளியைத் தீவளியாக்கி இருளிரவில் தோசை தின்றுழலும் இக்காலத் தமிழர்களுக்கு இதன் அழகு எங்ஙனம் தெரியப் போகிறது?

இவருடைய பாட்டுகளில் ஈடுபட்டுப் பேரின்பம் துய்த்த நற்றிணையுரைகாரரான திரு. நாராயணசாமி ஐயர்[32]. “தலைமகளைத் தலைமகன் காண்பது, தான் வழிபடு தெய்வத்தைக் கண்ணெதிரில் வரப்பெற்றாற் போன்றது என்று கூறுகின்றார்; இதில் தலைமகளை இனிது கூறி நடத்திச் செல்வது வியக்கத் தக்கது” என்றும் “பிரிவு உணர்த்தியவழித் தோழி நாம் முன்பு வந்த கொடிய சுரம் இப்பொழுதும் என் கண்ணெதிரே உள்ளது போலச் சுழலா நிற்கும் என இறும்பூதுபடக் கூறுகின்றார்” என்றும், “பிரிவுண்மை அறிந்த தலைவி தலைவனை மயக்கும் தன்மையுடைய கோலத்தோடு வந்து அவன் மீது சாய்ந்து முயங்கி வருந்துவதாக இவர் கூறியது நீத்தாரை விழைவிக்கும் திறந்ததாகும்” என்றும், “பிரிவோர் பழியுடையரல்லர்; அவரைப் பிணிக்க அறியாத தோள்களே தவறுடையன எனத் தலைவி கூறுவதாக அமிழ்தம் பொழியா நிற்பர்” என்றும் கூறி மகிழ்ச்சி கொள்வர்.

“இரவலர் வரா வைகல் பல ஆகுக” என்றாற் போலும் சொற்றொடர்களால் பெருங்கடுங்கோ ஈகையிலும் சிறந்து விளங்கினார் என்பது தெளிவாகிறது. மேலும், பெருஞ்செல்வமும், செல்வத்துக்கேற்ற புலமைச் செல்வமும், கொடை நலமும் சிறக்கப் பெற்ற இச் சேரமான் தன்னை நாடி வந்த பரிசிலரை நன்கு சிறப்பித்திருப்பர் என்பது சொல்லாமலே விளங்குவ தொன்றன்றோ!


 1. புறம் 398.
 2. Coorg. Ins. Vol. 1. Introduction P.3.
 3. A.R. No. 391 of 1930.
 4. A.R. No. 468 of 1930.
 5. Epi. Indi. Vol. xvii. No. 16
 6. திருநாவுக். 213: 2.
 7. கலி. 10.
 8. கலி. 5.
 9. கலி. 27.
 10. கலி. 1.
 11. கலி. 14.
 12. கலி. 14
 13. கலி. 21
 14. கலி. 22
 15. கலி. 25
 16. கலி. 34
 17. குறுந். 15.
 18. குறுந். 283.
 19. அகம். 155.
 20. அகம். 379.
 21. கலி. 8.
 22. அகம். 379.
 23. அகம். 99.
 24. நற். 224.
 25. குறுந். 137.
 26. கலி. 18.
 27. கலி. 19.
 28. அகம். 5.
 29. கலி. 32.
 30. நற். 202.
 31. ஞானசம். திருமயிலை. 3.
 32. நற். பாடினோர். பக்.55.