சேரமன்னர் வரலாறு/14. யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
(Upload an image to replace this placeholder.)
போலச் சிறு முயற்சி செய்து பெரும்பயன் விளைத்துக் கொள்ளும் சிறப்புடையன் என்பது போலும் கருத்துப்பட வரும் பெயரால், இவன், யானைக் கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று சிறப்பிக்கப்படுவானாயினன். இவனைப் பாடிய சான்றோர்களும் “வேழ நோக்கின் விறல்வேஞ் சேய்[1]” என்று பாராட்டிக் கூறுகின்றனர். இச் சேரமானுக்கு மாந்தரன் குடியோடு தொடர்புண்டு என்பது இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனப்படுவதால் தெரிகிறது.
திருவிதாங்கூர் நாட்டு ஆனைமுடிப் பகுதியில் ஆனக்கஞ்சிறு என்பதும், மலையாள மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளுவ நாடு வட்டத்திலுள்ள வெள்ளாத்திரி நாட்டுப் பகுதியில் இருக்கும் ஆனக்கன் குன்னு என்பதும் யானைக்கண் சிறை என்றும், யானைக்கண் குன்று என்றும் பொருள் தருவன. இரை இரண்டுக்கும் இடையிலுள்ள பகுதி பொறை நாடாதலால், இவை யானைக் கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் பெயரையும் புகழையும் நினைவு கூர்விக்கின்றன. இக் குறிப்புகளையன்றி, இவ் வேந்தர் பெருமானுடைய பெற்றோர் மக்கள் முதலியோரைப் பற்றிய குறிப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை.
யானைக்கண் சேயினது ஆட்சிக் காலத்தில் சேர நாடு மிக்க சிறப்புற்று விளங்கிற்று. தொண்டி நகரம் தலைநகரமாக இருந்தது. மக்கள் செல்வக் குறைபாடின்றி
இனிது வாழ்ந்தனர். இவன் காத்த நாடு புத்தேள் உலகம் போல்வது[2] எனச் சான்றோர் புகழும் பொற்புடையதாய் விளங்கிற்று. இவன் நாட்டு மக்கட்குச் சோறு சமைக்கும் தீயின் வெம்மையும், ஞாயிற்றின் வெம்மையுமே யன்றிக் கோல் வெம்மையோ பகைவர் செய்யும் வெம்மையோ ஒன்றும் தெரியாது. அவர்கள் நாட்டில் வானவில் வளைந்து தோன்றுவதுண்டேயன்றிக் கொலை குறிக்கும் வில் வளைந்து தோன்றுவது கிடையாது; படை வகையில், நிலத்தைக் கலப்பை கொண்டு உழுங்கால் காணப்படும் படையல்லது பகைவர் அணி கொண்டு திரண்டுவரும் படைவகை காணப்படுவதில்லை. அவனது நாட்டில் சூல் கொண்ட மகளிருள் சிலர் மண்ணை உண்பது கண்டதுண்டேயன்றிப் பகை வேந்தர் போந்து கவர்ந்துண்ணக் கண்டதில்லை.[3]
இவனது ஆட்சியில் சேரர் குடியில் தோன்றிய தலைவர் பலர், நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து நாடு காவல் புரிந்தனர். சேர நாட்டின் எல்லை தெற்கே தென்பாண்டி நாடு வரையிலும் கிழக்கிற் கொங்குநாடு முற்றும் பரவியிருந்தது. வட கொங்கு நாட்டுக் கொல்லிக் கூற்றமும், தெற்கில் தென்பாண்டி நாட்டுக்கும் குட்ட நாட்டுக்கும் இடையிற் கிடந்த வேணாடும் சேர நாட்டிற்குள் அடங்கியிருந்தன.
இப்போது திருவாங்கூர் நாட்டிலுள்ளதும், பண்டை நாளில் குட்டநாட்டைச் சேர்ந்திருந்ததுமான அம்பலப் புழை வட்டத்தில், குறுங்கோழியூர் என்றோர் ஊர் இருந்தது. அஃது இப்போது கோழிமுக்கு என வழங்குகிறது. குறுங்கோழியூர் எனவே பெருங்கோழியூர் என்றோர் ஊரும் இருக்கவேண்டுமே என நினைவு எழும்; பெருங்கோழியூர் இப்போது பெருங்கோளூர் என்ற பெயருடன் புதுக்கோட்டைப் பகுதியில் உளது. அதற்குப் பண்டை நாளில் பெருங்கோழியூர் எனப் பெயர் வழங்கிற்றென அவ்வூர்க் கல்வெட்டொன்று[4] கூறுகிறது. சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை அரசுபுரிந்த நாளில் இக் குறுங் கோழியூரில் நல்லிசைப்புலமை வாய்ந்த சான்றோர் ஒருவர் வாழ்ந்தார். சேயினது ஆட்சி நலத்தால் மக்கள் இன்ப அன்பு கலந்து அறவாழ்வு வாழ்வது கண்டு அவர் பெருமகிழ்வு கொண்டார். வேந்தனுடைய அறிவும் அருளும் பெருங் கண்ணோட்டமும் அப்புலவர் பெருமானுக்குப் பேருவகை தந்தன. பகைமையும் வறுமையும் இன்றி, நாட்டவர் மழையும் வயல் வளமும் பெருகப் பெற்றுச் செம்மாந்திருந்தனர். போர் இல்லாமையால், கடியரண்களில் அம்பும் வேலும் வாளுமாகிய படைகள் செயலற்றுக் கிடந்தன. வேத்தவையில் அறக் கடவுள் இன்பவோலக்கம் பெற்றிருந்தது. புதுப்புள் வரினும், பழம்புள் போகினும், நாட்டு மக்கள் அச்சம் சிறிதுமின்றி அமைந்திருந்தனர். குறுங்கோழியூர்ச் சான்றோர் இவற்றைக் கண்டு இன்புற்று வருகையில் நாட்டவர் உள்ளத்தில் அச்சம் ஒன்று நிலவக் கண்டார். அவர்க்கு வியப்புண்டாயிற்று. உண்மையாய் ஆராய்ந்தபோது, மக்கட்கு வேந்தன்பால் உண்டான அன்பு மிகுதியால், “அவனுக்கு எங்கே இடையூறு உண்டாகிவிடுமோ?” என்ற அச்சம் அவர்களது உள்ளத்தில் நிலவின்மை தெரிந்தது. அதனால், அவர் வேந்தன்பால் சென்று தாம் கண்ட காட்சிகளைத் தொகுத்து இனிய பாட்டொன்றில்[5] தொடுத்துப் பாடினார். அப் பாட்டின்கண், சேரமான் யானைக்கண் சேயினுடைய அளப்பரிய வலிநிலையை வியந்து, “வேந்தே , கடலும் நிலமும் காற்றும் வழங்கும் திசையும் ஆகாயமுமாகிய இவற்றின் அகலம் ஆழம் உயர்வு முதலிய கூறுகளை அளந்தறிவது என்பது அரியதொரு செயல் ; முயன்றால் அதனையும் செய்து முடிக்கலாம்; ஆனால், உனது வலி நிலையை அளந்தறிவது மிகவும் அரிது” என்று பாடினர் வேந்தன் முறுவலித்தான்; அரசியற் சுற்றத்தார் அளவுகடந்த மகிழ்ச்சி எய்தினர்.
இவ்வாறு சில ஆண்டுகள் கழிதலும், கொங்கு நாட்டில் பகைவர் சிலர் தோன்றி நாட்டவர்க்கு அல்லல் விளைத்தனர். அங்கிருந்து நாடு காவல் புரிந்த சேர மன்னர், அப் பகைவரை ஒடுக்கும் திறமிலராயினர். நாட்டின் பகுதிகள் பல சீரழிந்தன. குடிகள் பலர் மிக்க துன்புற்றனர். இச் செய்தி சேரமானுக்குத் தெரிந்தது. அவன் தக்கதொரு படை கொண்டு சென்று குறும்பு செய்த பகைவரை ஒடுக்கினான். கொங்கு நாட்டுத் தலைவர் பலரும் சேரமான் பக்கல் நின்று அரும் போர் உடற்றி அப் பகுதிகளிற் புகுந்து அரம்பு செய்து பகையிருளை அகற்றினர். பகைவரால் அழிவுற்ற பகுதிகளைச் சேரமான் சீர்செய்து துளங்குகுடி திருத்தி வளம் பெருகச் செய்தான். மக்கட்கு வாழ்வு இன்பமாயிற்று. நீர்வளத்துக்குரிய பகுதிகளில் நெல்லும் கரும்பும் நெடும்பயன் விளைவித்தன. மலைபடு பொருளும் காடுபடு பொருளும் பெருகின. அச்சத்துக்கும் அவலத்துக்கும் இடமின்றிப் போகவே எம் மருங்கும் இன்பமே பெருகி நின்றது. அந் நிலை விளங்கக் கண்ட சான்றோர், “மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடு, புத்தேள் உலகத் தற்று” எனப் புகழ்வாராயினர். இப் புகழ் தமிழகமெங்கும் தமிழ்த் தென்றல் போலப் பரவித் தழைத்தது. “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்னுமாறு எங்கும் சோற்றுவளம் பெருகிற்று.
இந் நிலையில் சேரமான் கொங்கு நாட்டில் தான் தங்கியிருந்த பாசறைக் கண்ணே பெருஞ்சோற்று விழா நடத்தினான். சேர நாட்டின் பகுதிகள் பலவற்றினின்றும் சான்றோர் பலர் வந்து குழுமினர். அவர்கட்கு வேண்டுவன பலவும் கொல்லி நாட்டுத் தலைவர்களே மிக்க அன்போடு செய்தனர். யானைகளும் தேர்களும் அணி அணியாகத் திரண்டு வந்து நின்றன. பாடி வந்த பாணர் கூத்தர் முதலிய பரிசிலர் பலர்க்கும் அவர்கள் பகை வேந்தர்பால் திறையாகப் பெற்ற செல்வங்களைப் பெருக நல்கினர். ஒருகால் தம்மைப் பாடிய அவர் நா, பிறர்பால் எப்போதும் சென்று பாடாவண்ணம் மிக்க பொருளை நல்கினர்.
சேரமானுடைய புகழ்ச் செய்தி குறுங்கோழியூர் கிழாருக்குச் சென்று சேர்ந்தது; அவரைக் கண்ட சான்றோர் “இரும்பொறை ஓம்பிய நாடு புத்தேளிர் வாழும் பொன்னுலகு போல்வது” என்று பாராட்டிக் கூறினர். உளங்கொள்ளலாகாத பேருவகை நிரம்பிய அச் சான்றோர் சேரமான் பாசறையிருக்கும் திருவோலக் கத்துக்கு வந்து சேர்ந்தார். வேந்தன் அவரை அன்புடன் வரவேற்றுச் சிறப்பித்தான். கொல்லி நாட்டு வேந்தர் சூழ வீற்றிருந்த வேந்தனது காட்சி அவர்க்கு மிக்க இன்பம் செய்தது.
“ஒங்கிய நடையும், மணிகிடந்து மாறி மாறி ஒலிக்கும் மருங்கும், உயர்ந்தொளிரும் மருப்பும், செறல் நோக்கும், பிறை நுதலும் கொண்டு, மதம் பொழியும் மலைபோல நின் யானைகள் கந்தணைந்து அசைந்து விளங்குகின்றன. வெண்மதிபோலும் கொற்றக்குடை நீழலில் வாழும் வாள் மறவர் பக்கத்தே நின்று காவல் புரிகின்றனர். ஒருபால் நெல் வயலும், ஒருபால் கரும்பு வயலும் விளைந்து விழாக் களம் போல இனிய காட்சி நல்குகின்றன. நெல் குற்றுவோர் பாடும் வள்ளைப் பாட்டும், பனங்கண்ணி சூடிய மறச் சான்றோர் பாடும் வெறிக்குரவைப் பாட்டும் இசைக்கின்றன. இவ்வகை யால் கடல் போல் முழங்கும் பாசறையில் தங்கிய வேந்தே, நின்னைச் சூழவிருக்கும் வேந்தர் கொல்லி நாட்டுக் கோவேந்தராவர். பகைப்புலத்தில் தாம் வென்று பெற்ற திறைப் பொருளைத் தம்மைச் சேர்ந்தோர்க்கும் அவர் சுற்றத்தார்க்கும் அளித்து உதவும் வண்மையுடையர். அவர்கட்குத் தலைவனாக நீ விளங்குகின்றாய்; யானைக் கண்ணையுடைய சேயே! நின் வரம்பிலாச் செல்வம் பல்லாண்டு வாழ்க. பாடி வந்தோரது நா பிறர்பாற் சென்று பாடாதவாறு நல்கும் வண்மையும் ஆற்றலும் உடைய எம் அரசே, மாந்தரஞ்சேரல் ஓம்பிய நாடு புத்தேளுலகத் தற்று எனச் சான்றோர் சாற்றக் கேட்டு நின்னைக் காண வந்தேன்; வந்த யான் அவர் கூற்று முற்றும் உண்மையாதல் கண்டு உள்ளம் உவகை மிகுகின்றேன். வேற்று நாட்டிடத்தே தங்கியிருக்கும் நின் தானையால் நாடுகாவற்குரிய செயல் வகைகளை மடியாது செய்து எங்கும் சோறுண்டாக வளஞ் செய்கின்றனை, நீ நீடுவாழ்க[6]” என்று பாடி யாவரையும் மகிழ்வித்தனர் பாட்டின் நலங்கண்டு மகிழ்ந்த வேந்தன் அவரைக் குறுங்கோழியூர்க்குக் கிழார் என்று சிறப்பித்தான். சின்னாள்களில் சேரமான் தொண்டிக்குச் சென்றார். சான்றோர் குறுங்கோழியூர் சென்று சேர்ந்தார்.
பின்னர், யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை தொண்டி நகர்க்கண் இருந்து வருகையில், பாண்டி நாட்டில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டி வேந்தனாகும் உரிமை எய்தினான். அவ்வரசு கட்டிலுக்குப் பாண்டியர் குடியிற் பிறந்த வேறு சிலரும் முயற்சி செய்தனர். அவர்கட்குத் துணையாகத் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் என்ற குறுநிலத் தலைவரும், சேரர் குடிச் செல்வரும், சோழர் குடிச் செல்வரும் சேர்ந்து போருடற்றினர். அப் போர் தலையாலங்கானம்[7] என்னு மிடத்தே நடந்தது. அப் போரில் பகைவர் எழுவரையும் வென்று நெடுஞ்செழியன் புகழ் மிகுந்தான். அவன் புகழைக் குடபுலவியனார், இடைக்குன்றூர்க்கிழார் முதலிய பலரும் பாடித் தமிழகமெங்கும் பரப்பினர்.
சேரர் குடித் தலைவனொருவன் பாண்டியனொடு பொருது அழிந்த செய்தியைச் சேரமான் கேள்வி யுற்றான். அத் தோல்வி சேரர்குடிக்கு மாசு தருவது கண்டு யானைக்கண்சேய் நெடுஞ்செழியன் பால் பகைமை கொண்டான். அவனது பகைமை பாண்டியனுக்கும் தெரிந்தது. இருவருடைய படைகளும் ஓரிடத்தே கை கலந்து பொருதன. சேரர் படையினும் பாண்டிப் படை வலியும் தொகையும் மிகுந்திருந்தமையின், சேரர் படை உடைந்தோடலுற்றது. அதனால், பாண்டியர் படை சேரமானை வளைந்து பற்றிக் கொண்டது. நெடுஞ்செழியன் சேரமானைப் பற்றிச் சிறையிட்டான். இச் செய்தி சேர நாட்டுக்குத் தெரிந்தது. அந் நாட்டுச் சான்றோர் எய்திய துன்பத்துக்கு அளவில்லை. சேர நாடு முழுதும் பெருங் கவலைக் கடலுள் ஆழ்ந்தது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஓரிடத்தே நல்ல அரணமைந்த சிறைக்கூடம் அமைத்து அதன்கண் சேரமானை இருப்பித்தான். அவ்வரண்களைச் சூழ ஆழ்ந்த அகழியொன்று வெட்டி அதன் உண்மை தோன்றாதபடி மேலே மெல்லிய கழிகளைப் பரப்பி மணல் கொண்டு மூடிக் காண்பார்க்கு நிலம் போலக் காட்சி நல்கச் செய்திருந்தான். இச் சூழ்ச்சியைச் சேரமான் எவ் வண்ணமோ தெரிந்து கொண்டான். சேரமான் ஒற்றர்கள், காண்பார் ஐயுறாத வகையிற் போந்து வேந்தனுடைய நலம் அறிந்து அவற்கு வேண்டும் உதவிகளைச் செய்து வந்தனர்.
பாண்டியன் செய்தது போன்ற செயலைப் பூழி நாட்டவர் யானைகளைப் பற்றுதற்காகச் செய்வது வழக்கம். சேர நாட்டுச் சான்றோர் புகுந்து வேந்தன் இருப்பதை உணர்ந்துகொள்ள முயன்றால், அவர்களை அகழியில் அகப்படுத்திக் கொள்ளுதற்கும், சேரமான் தப்பியோட முயன்றால் அவன் அகப்பட்டு வீழ்தற்கு மாக இச் சூழ்ச்சியைப் பாண்டியன் செய்திருந்தான். சேரமான் யானைக்கட்சேய், அதனைத் தெரிந்து கொண்டு பாண்டியர் சூழ்ச்சி பாழ்படுமாறு சீர்த்த முயற்சிகள் செய்தான்; தான் இருந்த சிறைக் கோட்டத்துக்குப் பாண்டியர் வந்து போதற் பொருட்டுச் செய்திருந்த கள்ள வழியை அறிந்து அதன் வாயிலாகக் காவலர் அயர்ந்திருந்த அற்றம் பார்த்து வெளிப் போந்தான். உடனே அவனுடைய வாள் மறவர் அவ் வழியைத் தூர்த்துவிட்டனர். சிறைக்கோட்டத்தைச் சூழ்ந்திருந்த பாண்டிப் படைமறவர் பற்பன்னூற்றுவர் அகழகியை மறைத்திருந்த நிலத்திற் பாய்ந்தனர். அஃது அவரனைவரையும் அகழியில் தள்ளி வீழ்த்திற்று.
சிறிது போதிற்குள் சேரர் படை போந்து அகழியை அழித்து அரணைச் சிதைத்துச் சிறைக்கோட்டத்தைத் தீக்கிரையாக்கிற்று. உயிருய்ந்த பாண்டி மறவர் சிலர், வையை யாற்று வழியே மதுரைக்குச் சென்று நெடுஞ்செழியனுக்கு உரைத்தனர். சேரமான் பாண்டி நாட்டினின்றும் நீங்கி நேரிமலை வழியாகக் குட்டநாடு சென்று சேர்ந்தான். இவ்வரலாற்றை அப்பகுதியில் வாழும் முதுவர்கள் திரித்தும் புனைந்தும் வழங்குகின்றனர் எனத் திரு. பி. ஆர். அரங்கநாத புஞ்சா அவர்கள் கூறுகின்றார்கள். இது கேரள மான்மியத்தில் வேறுபடக் கூறப்படுகிறது; இவற்றில் சேரமான் யானைக்கட்சேயின் பெயரும் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரும் குறிக்கப்படவில்லை; ஆயினும் இந் நிகழ்ச்சி மட்டில் விளக்கமாகிறது.
சேரமான் தன் நாடு சென்று சேர்ந்த செய்தி தெரிவதற்குள் பாண்டியன் அவனைத் தேடிப்பற்றிக் கொணருமாறு செய்த முயற்சிகள் பயன்படவில்லை. படை மறவருட் சிலர் சேர நாட்டு மலைக் காடுகளில் தேடிச் சென்று சேரர் வாட்படைக்கும் வேற்படைக்கும் இரையாயினர். சேரமான் யானைக்கண்சேய் தனது குட்டநாடு கடந்து பொறை நாட்டுத் தொண்டி நகரையடைந்து முன்பு போல் அரசு கட்டிலில் விளக்கமுற்றான்.
யானைகளை அகப்படுப்போர், அவை வரும் வழியில் மிக்க ஆழமான குழிகளை வெட்டி மெல்லிய கழிகளை அவற்றின் மேல் பரப்பி மண்ணைக் கொட்டி இயற்கை நிலம்போலத் தோன்றவிடுவார். அவ் வழியே வரும் யானைகள் அக் குழிகளில் வீழ்ந்துவிடின் பழகிய யானைகளைக் கொண்டு இவற்றைப் பிணித்துக் கொள்வர். வரும் யானைகளுள் சில இச் சூழ்ச்சியை அறிந்து கொள்ளுதலுமுண்டு; வலி மிக்கவை அக்குழியில் வீழ்ந்து கரையைத் தம் மருப்பினால் இடித்தழித்துக் கொண்டு வெளியேறுவதும் செய்யும். சேரமான், இச்சூழ்ச்சி முழுதும் நன்கு கண்டு கொண்ட கொல்களிறு போலப் பாண்டியர் செய்த சூழ்ச்சியைச் சிதைத்துப் போந்தமை பற்றி “யானைக் கண் சேய் மாந்தரன்” என்று சிறப்பிக்கப்படும் தகுதி பெற்றான் என்றற்கும் தக்க இடமுண்டாகிறது. சேர நாட்டுச் சான்றோரும் அக்கருத்து விளங்கவே இவனைப் பாடியிருக்கின்றனர்.
சேரமான், தொண்டி நகர்க்கண் சிறப்புறுவது நன்கறிந்த குறுங்கோழியூர் கிழார் ஒருகால் அவன்பாற் சென்றார். அவன் பாண்டியன் நெடுஞ்செழியனது பிணிப்பினின்றும் நீங்கிப் போந்த செய்தியைப் பாராட்டுதற்குப் பொருட்டுச் சேர நாட்டின் பல பகுதியிலிருந்தும் வேந்தரும் சான்றோரும் பிறரும் வந்து அவனது திருவோலக்கத்திற் கூடியிருந்தனர். அப்போது, குறுங்கோழியூர்கிழார், சேரமான் சிறை தப்பிப் போந்த செயலை, யானையொன்று படுகுழியில் வீழ்ந்து தன் பிரிவெண்ணி வருந்திய ஏனைக் களிறும் பிடியுமாகிய தன் இனம் மகிழப் போந்து கூடிய செய்தியை உவமமாக நிறுத்தி,
- “மாப்பயம்பின் பொறை போற்றாது
- நீடுகுழி அகப்பட்ட
- பீடுடைய எறுழ்முன்பின்
- கோடு முற்றிய கொல்களிறு
- நிலைகலங்கக் குழிதொன்று
- கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
- நீபட்ட அருமுன்பின்
- பெருந்தளர்ச்சி பலர்உவப்ப
வந்த சேர்ந்ததனை; வேந்தே, இதனை அறியும் நின் பகைவர் இனி நினக்குப் பணி செய்யத் தொடங்குவரே யன்றிப் பகை செய்யக் கனவிலும் நினையார்; நின் முன்னோர்,
- “கொடிது கடிந்து கோல் திருத்திப்
- படுவது உண்டு பகலாற்றி
- இனிது உருண்ட சுடர் நேமி
- முழுதாண்டோர்[8]
என்று பாராட்டிப் பாடினார். இந்த அழகிய நெடும் பாட்டைக் கேட்டு வேந்தனும் வேத்தியம் சுற்றத்தாரும் மிக்க மகிழ்ச்சி யெய்தினர். வேந்தன் கிழார்க்கு மிக்க பொருளைப் பரிசில் நல்கிச் சிறப்பித்தான்.
மலையாள மாவட்டத்தில் பாலைக்காடு பகுதியைச் சேர்ந்த நடுவட்டம் பகுதியில் கூடலூர் என்றோர் ஊர் உண்டு. அவ்வூரில் நல்லிசைப் புலமைமிக்க சான்றோர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் யானைக்கண் சேய் மாந்தரனுடைய முன்னோர்களாலே நன்கு சிறப்பிக்கப் பெற்றுக் கூடலூர் கிழார் என விளங்கியிருந்தனர். யானைக்கண் சேய் இளையனாய் இருந்த காலத்தில் அவர்பால் அவன் கல்வி பயின்றான். அவன் வேண்டுகோட்கு இசைந்தே கூடலூர் கிழார் ஐங்குறுநூறு என்னும் தொகை நூலைத் தொகுத்தார். அத்தொகைநூலின் இறுதியில் இந்நூல் தொகுத்தார். “புலத்துறைமுற்றிய கூடலூர் கிழார்” என்றும், தொகுப்பித்தான், “கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை” என்றும் பண்டைச் சான்றோர் குறித்திருக்கின்றனர். இவர் மாந்தர்க்குரிய மாந்தை நகரத்தைக் குறுந்தொகைப் பாட்டொன்றில்[9] குறித்துள்ளார். தலைமகனோடு கூடி இல்வாழ்க்கை புரியும் தலைமகள், அவற்கு முளிதயிரைப் பிசைந்து புளிக்குழம்பு செய்து உண்பித்தலும், அவன் “இனிது” எனச் சொல்லிக் கொண்டு உண்பதும், அது கண்டு அவளது ஒண்ணுதல் முகம் “நுண்ணிதின் மகிழ்ந்ததும்[10]“ படிப்போர் நாவில் நீருறுமாறு பாடியவர் இக் கூடலூர் கிழாரேயாவர். அத்தலைமகள் களவுக் காலத்தில் தலைமகன் விரைந்து வரைந்து கொள்ளாது ஒழுகியது பற்றி மேனி வேறுபட்டாள்; அதற்குரிய ஏது நிகழ்ச்சியையுணராத அவளுடைய தாயார் வெறியெடுக்கலுற்றது கண்டு, தோழி, தலைமகன் ஒருகால் தலைமகள் இருந்த புனத்துக்குப் போந்து “பெருந்தழை உதவி” யதும், பின்பு “மாலை சூட்டியதும்” அறியாது, இவ்வூரவர் வெறி நினைந்து ஏமுறுகின்றனர்[11] என அறத்தொடு நிற்பதாக இக் கூடலூர்கிழார் பாடிய பாட்டுத் தமிழறிஞர் நன்கறிந்தது.
இவர், வயது மிகவும் முதிர்ந்திருந்ததனால் குறுங்கோழியூர் கிழார் போலச் சேரமானை அடிக்கடிச் சென்று பாடும் வாய்ப்பு இலரானார். இவர் வானநூற் புலமையிலும் சிறந்தவர். ஒரு நாள் இரவு விண்ணிலே ஒரு மீன் விழக் கண்டார். அதன் பயனாக நாட்டில் வேந்தனுக்குத் தீங்குண்டாகும் என்பது வான நூல் முடிபு. ஏழு நாள்களில் அது நிகழும் என்ற அச்சத்தால் தாமும் வேறு சில சான்றோரும் கூடி ஒவ்வொரு நாளையும் கழித்தனர். அவர் எண்ணியவாறே மீன் வீழ்ந்த ஏழாம் நாளன்று யானைக்கட்சேய் உயிர் துறந்தான். அது கண்டு பெருந்துயர் உழந்த புலவர் பெருமானான கூடலூர் கிழார்,
- “ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே, அதுகண்டு,
- யாமும் பிறரும் பல்வேறு இரவலர்,
- பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன்
- நோயிலனாயின் நன்றுமன் தில்லென
- அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
- அஞ்சினம் ஏழுநாள் வந்தன்று இன்றே”
என்று சொல்லி, “யானைகள் நிலத்தே கை வைத்து உறங்குகின்றன; முரசம் கண் கிழிந்து உருளுகின்றது; கொற்ற வெண்குடை கால்பந்து வீழ்கிறது; குதிரைகள் ஓய்ந்து நிற்கின்றன[12];” இத் தீக் குறிகளின் இடையே வேந்தன் “மேலோர் உலகம் எய்தினன்” என்று புலம்பினர். இவ் வேந்தன், “பகைவரைப் பணிக்கும் பேராற்றலும், பரிசிலர்க்கும் இரவலர்க்கும் அளவின்றி நல்கும் ஈகையும், மணிவரை போலும் மேனியும் உடையன்; மகளிர்க்கு உறுதுணையாகி மாண்புற்றவன்;
இன்று தன் துணைவரையும் மறந்தான் கொல்லோ” என அவர் வருந்திக் கூறுவன நெஞ்சையுருக்கும் நீர்மை யுடையவாகும்.
இறுதியாக ஒன்றி கூறுதும்: இந்த யானைக்கண் சேய் மாந்தரன், சேரன் செங்குட்டுவனுக்கு மகன் என்று திரு. கனகசபைப் பிள்ளையவர்கள் கூறினாராக, அவரைப் பின்தொடர்ந்து டாக்டர் திரு. எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களும், திரு. பானர்ஜி அவர்களும்[13] கூறியுள்ளனர். இவர்கள் கூற்றுக்கு ஓர் ஆதரவும் கிடையாது. தமிழ்நாட்டு வரலாறு எழுதிய ஆராய்ச்சியாசிரியர் சிலர் தமிழ் நூல்களை ஆழ்ந்து நோக்காது தாம் தாம் நினைந்தவாறே தவறான முடிபுகள் கொண்டு ஆங்கிலத்தில் எழுதி வரலாற்றுலகில் புகுத்தியிருக்கின்றனர். இவ்வாறே திரு. கே.ஜி. சேஷையரவர்கள் சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுகின்றார்[14]. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் சோழ நாட்டில் இராயசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் பாண்டி நாட்டில் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழிதியும் ஆட்சி செய்தனர். சேரமான் யானைக்கட்சேய் காலத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சி செய்தான்; ஆகவே சேரமான்கள் இருவரும் வேறு வேறு காலத்தவர் என்பது தெளிவாம். இவையெல்லாம் நோக்காது தமிழ்வேந்தர் ஆட்சி நலங்களும் கொள்கையுயர்வுகளும் தவறாகவே பரப்பப் பெறுகின்றன. அதனால் ஏனை நாட்டவர் உண்மை அறிய மாட்டாது இருளில் விடப்படுகின்றனர்.