உள்ளடக்கத்துக்குச் செல்

சேரமன்னர் வரலாறு/15. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

விக்கிமூலம் இலிருந்து

15. சேரமான் மாந்தரஞ்சேரல்

இரும்பொறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, யானைக் கட்சேய் மாந்தரனுக்குப் பின்பு அரசு கட்டில் ஏறிய சேர வேந்தனாவன். இவனது இயற்பெயர் காணப்படாமையால், இவன் யானைக்கட்சேய் மாந்தரனும் இவனும் ஒருவரே என்றும் கருதிவிட்டனர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் யானைக்கட்சேய் மாந்தரனும், இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் காலத்தில் இந்தச் சேரமான் மாந்தரனும் இருந்தமையின், இருவரும் வேறு வேறு ஆதலேயன்றி, நெடுஞ்செழியனுக்குப் பின்னர் விளங்கிய இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலத்தவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறை யானைக்கட் சேய்க்குப் பின்னோ னாதலையும் தெளியவுணர வேண்டும். இம்மாந்தரஞ்சேரல் ஆட்சி நிகழும் போது, திருமுனைப்பாடி நாட்டுத் திருக்கோவலூரில் தேர்வண் மலையன் என்ற குறுநிலத் தலைவன் ஆட்சி செய்து கொண்டு வந்தான்.

மாந்தரஞ்சேரலுடைய ஆட்சி கொங்கு நாடெங்கும் பரந்து கிழக்கிற் சோழ நாட்டைத் தனக்கு எல்லையாகக் கொண்டிருந்தது. சோழ வேந்தருட் சிலர், காலம் வாய்க்கும்போது நமது நாட்டை யடுத்திருக்கும். கொங்கு நாட்டைக் கைப்பற்றுவதும் உண்டு. இவ்வகையில் கொங்குநாடு சோழர்க்கும் சேரர்க்கும் கைம்மாறுவது வழக்கம். இன்றும் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் சோழர் கல்வெட்டுகள் பல இருத்தலை நாம் காணலாம். பிற்காலத்தே கொங்குச் சோழர் என்றே ஒரு குடியினர் இருந்து கொங்கு நாட்டை ஆண்டு வந்தது வரலாற்றாராய்ச்சியாளர் நன்கறிந்தது. இதனால், மாந்தரஞ் சேரலுக்கும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் எக் காரணத்தாலோ பகைமையுண்டாயிற்று. இருவரும் போர் செய்தற்கும் சமைந்து விட்டனர்.

அந்நாளில் திருக்கோவலூரிலிருந்து மலையமான் நாட்டை ஆண்டு வந்த தேர்வண்மலையன் என்பான் அடல் வன்மையும் படை வன்மையும் மிக்கு ஏனை முடிவேந்தர் மூவரும் நன்கு மதிக்குமாறு விளங்கி னான். இவன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணைவனாயிருந்தான். ஆயினும் அவனுக்குச் சேரரும் பாண்டியரும் பகைவரல்லர். பெருநற்கிள்ளி மாந்தரனோடு போர் செய்யச் சமைந்த காலையில் தேர்வண் மலையன் அவனுக்குத் துணை செய்ய வேண்டியவனானான். மலாடரும் சோழரும் சேர்ந்து சேரர் படையொடு கடும்போர் உடற்றினர். சோழர் வலிகுன்றுமிடங்களில் மலாடர் துணை புரிந்து வெற்றி சோழர்கட்கே எய்து வித்தனர். முடிவில் சேரலர் பின்னிட்டு நீங்க வேண்டியவராயினர். வெற்றிப்புகழ் நிறைந்து மலையமான் தன் நாடு திரும்பி வந்தான். அவனது சீர்த்தி நாடெங்கும் பரந்தது. சான்றோர் பலர், மலையன் சிறப்பைப் பாடித் தேரும் களிறும் பிறவும் பரிசிலாகப் பெற்றுச் சென்றனர். வடம் வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் என்னும் சான்றோர், மலையனைக் கண்டு, “வேந்தே, சோழர்க்கும் மாந்தரனுக்கும் நடந்த போரில் வெற்றிபெற்ற சோழன் நமக்கு வெற்றி எய்துவித்தவன் இவன் அன்றோ , இவற்கு நம் நன்றியுரியது எனப் பாராட்டுகின்றான்; அது பெறாது நீங்கிய சேரமானும், வல்வேல் மலையன் துணை செய்யாதிருந்தால், நன்கு வாய்த்த இப் போரை வெல்வது நமக்கு எளிதாகும்; இவ் வகையால் இருபெரு வேந்தரும் ஒருங்கு பரவ ஒரு நீ ஆயினை, பெரும்[1],” என்று பாராட்டினர்.

நிற்க, திருவாங்கூர் நாட்டில் நெய்யாற்றங்கரை வட்டத்தில் விளங்கில் என்றோர் ஊர் உண்டு. இடைக்காலத்தே விளம்பில் எனத் திரித்து, இப்போது அது விளப்பில் என வழங்குகிறது. பண்டை நாளில் அது வேணாடு என்ற பகுதியில் மாவண் கடலன் என்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாய்[2] இருந்தது. அக் காலத்தில் அது செல்வங் கொழிக்கும் சிறப்புடைய வூராகவும் விளங்கிற்று. உயர்ந்தோங்கு பெருமனைகளில் வனப்பு மிக்க மகளிர் வாழ்ந்தனர். அவர்கள் தமது மனைத் தெற்றிக்கண் இருந்து தம்முடைய கைவளை யொலிப்ப விளையாடுவது இனிய காட்சி நல்கும். இவ் வேணாட்டிற்குத் தெற்கில் தென்பாண்டி நாடு எல்லையாக இருந்தது. மாந்தரன் சோழரொடு பொருது தோற்றாடி வந்தது. தென்பாண்டி நாட்டவர் வேணாட்டிற் புகுந்து அலைப்பதற்கு இடந்தந்தது. மாந்தரன் போதிய வலியிலன் என அவர்கள் தவறாக எண்ணி வேணாட்டவர்க்குத் தொல்லை விளைவித்தனர். அதனால் விளங்கியில் வாழ்ந்த மக்கள் பெரு விழுமம் எய்தினர். இச்செய்தி மாந்தரனுக்குத் தெரிந்தது. உடனே, அவன், பெரும் படையொன்று கொணர்ந்து விளங்கிலர் எய்திய விழுமம் போக்கி இன்பவாழ்வு எய்தச் செய்தான்.

மாந்தரன் விளங்கிலில் தங்கி யிருக்கையில் அவனைச் சான்றோர் பலர் பாராட்டிப் பாடிப் பரிசில் பெற்றுச் சென்றனர். அப் பகுதியில் பொருந்தில் என்னும் ஊரில் வாழ்ந்த இளங்கீரனார் என்னும் சான்றோர் மாந்தரனைக் கண்டார். மாந்தரனுக்குச் செந்தமிழ் வல்ல சான்றோபால் பேரன்புண்டு; அதனால் அவன் பொருந்தில் இளங்கீரனாரை அன்புடன் வரவேற்று இன்புற்றான்.

மாந்தரனுக்குப் பண்டைப் புலவர் நிரலில் ஒருவராய் நிலவிய கபிலருடைய பாட்டில் பெரிதும் ஈடுபாடு உண்டு. ஓய்வுக் காலங்களில் அவர் பாட்டைப் படித்து மகிழ்வது அவனுக்கு வழக்கம். இளங்கீரனார் அவனுக்குத் தாம் பாடிய பாட்டுகளிற் சிலவற்றைப் பாடிக் காட்டினார்.

பொருள் கருதிப் பண்டைப் புலவர் நிரலில் ஒருவராய் நிலவிய கபிலருடைய பாட்டில் பெரிதும் ஈடுபாடு உண்டு. ஓய்வுக் காலங்களில் அவர் பாட்டைப் படித்து மகிழ்வது அவனுக்கு வழக்கம். இளங்கீரனார் அவனுக்குத் தாம் பாடிய பாட்டுகளிற் சிலவற்றைப் பாடிக் காட்டினார்.

பொருள் கருதிப் பிரிந்தொழுகும் தலைமகன் நெஞ்சில், அவன் மேற்கொண்டு வினை முடிவில் அவனுடைய காதலியைப் பற்றிய காதல் நினைவுகள் தோன்றி வருத்தும் திறத்தை இரண்டு பாட்டுகளில் வைத்து அழகுறக் கீரனார் பாடியிருந்தார். வினை முடிந்தபின் தலைமகன் தன் மனைக்கு மீண்டு வருகின்றான். அப்போது, தான் திரும்பி வருதலைத் தன் காதலி கேட்பின் எத்துணை மகிழ்ச்சியெய்துவள் என நினைக்கின்றான்; நாடோறும் ஆழி இழைத்தும், குறித்த நாளை விரலிட்டு எண்ணியும், கண்ணீர் நனைப்ப அணைமேல் கிடந்த கன்னத்தை அங்கையில் தாங்கிக் கொண்டு பல்லி சொல்லும் சொல்லைக் கேட்டுத் துயர் மிக்கு உறையும் காதலியின் காட்சி அவன் மனக் கண்ணில் தோன்றி அலைக்கின்றது. பிரிவு நினைந்து பெருந்துயர் உழக்கும் அவளது நிலையைக் கண்டதும், அவனது நெஞ்சு அத் தலைவிபால் சென்று அவள் பின்னே நின்று அவளுடைய முதுகைத் தழுவித் தேற்றுவதாக நினைந்து, ‘இத்துணைப் பெருங்காதற் பணிபுரியும் நெஞ்சே, நீ, அன்று யான் பிரிந்த காலையில் என்னோடு வாராது அவளிடத்தே நின்று இருக்கலாமே; என்னோடு வந்தன்றோ பெருந்துன்பம் உழந்தாய்; இப்போது என் பின்னே வருவதை விட்டு முன்னதாகச் சென்று சேர விரும்பினை; அற்றாயின், செல்க; சென்று சேர்ந்தபின் அங்கே அகல் விளக்கைத் தூண்டிக் கொண்டு அதன் எதிரே நிற்கும் காதலியைக் கண்டு நலம் அளவளாவுங்கால் என்னை மறவாது நினைப்பாயாக’ என்று மொழிந்து முற்படச் செல்லும் உன் முயற்சி சிறப்புறுக” என அப் பாட்டில் வாழ்த்துகின்றான். அவற்றைக் கேட்டு இன்புற்ற மாந்தரன், “அந்நாளில் சிறந்த செய்யுட்களைப்பாடி மேன்மையுற்ற கபிலர், இன்று உளராயின் நன்றன்றோ“ என்று மொழிந்தான்.

வேந்தன் உரைத்த இச்சொற்களைக் கேட்டதும் இளங்கீரனார் திடுக்கிட்டார்; பலபட நினைந்து, “இவன் இது போது பாடுபவர்கள் கபிலர் போலும் புலமை யுடையரல்லர் என்று கருதுகின்றானோ? அன்றி, நம் பாட்டுகள் கபிலன் பாட்டுகளை நினைப்பிக்கின்றனவோ? வேந்தன் கருதுவது யாதோ? கபிலனை யொப்பவோ, மிகவோ, யாம் பாடுவோம் என்பதும் பொருந்தாது; ஒருகால் ஒப்பத் தோன்றினும் பழமைக்கே பெருமை காணும் உலகம் ஏலாதே” என்று நினைந்தார். “விளங்கில் என்னும் இவ்வூர்க்கு உற்ற இடுக்கண் களைந்த வேந்தே, கடுமான் பொறையனே, நின் புகழை யாங்கள் விரித்துப் பாடலுமின், விரிவிலடங்காது அது விரிந்து கொண்டே போகிறது; தொகுத்துக் கூறுவோ மெனின், அப்புகழ் முற்றும் அடங்காது எஞ்சி நிற்கிறது; அதனால் எமது புலமையுள்ளம் மயங்குகிறது. எம்மனோர்க்கு நின்புகழ் கைமுற்றுவதன்று. கபிலர் போல ஒளியுடையோர் பிறந்த இப் பரந்த உலகில் யாங்கள் பிறந்து விட்டோம்; இனி, அவர்களைப் போல ஒளியுடையராக மாட்டாமையால் இங்கே வாழேம் என்றாலும் கூடாது; ஆகவே, சிறிதும் தாழாது பொருள் செறிந்த செய்யுள் பாடும் தீவிய செந்நாவினையும், மிக்க கேள்வியறிவினையும் விளங்கிய புகழினையும் உடைய கபிலர் இன்று உளராயின் நன்று என்று கூறுகின்ற நீ மகிழப் பகைவரை வஞ்சியாது பொதுவெல்லும் நின் வென்றிக்கு ஒப்பப் பாடுவேன்[3]” என்று பாடினர். எண்ணாது உரைத்ததற்கு மாந்தரன் மனம் நொந்து கீரனார்க்கு வேண்டிய பரிசில்களைச் சிறப்ப நல்கி மகிழ்வித்தான். இளங்கீரனார் வேந்தன்பால் விடை பெற்றுக் கொண்டு தமது பொருந்திலுக்குச் சென்றார்.


  1. புறம். 125.
  2. அகம். 47.
  3. புறம். 51.