சேரமன்னர் வரலாறு/5. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
குடநாட்டில் மாந்தை யென்பது அந் நாளில் தலைநகரமாக விளங்கிற்று. குடக்கோக்கள் அதன்கண் இருந்து அரசுபுரிந்தனர். மாந்தைநகர் இப்போது மாதையென்ற பெயருடன் கண்ணனூர்க்கு வடமேற்கில் 13½ கல் அளவில் இருந்து தனது முதுமையைத் தோற்றுவித்துக் கொண்டுளது; பழையங்காடியென்னும் புகைவண்டி நிலையம் இதன் ஒரு பகுதி ; இங்குள்ள பழங்கோயில் இதன் தொன்மையைக் காட்டுகிறது; இது பற்றி நிலவும் பழைய மலையாளப் பாட்டொன்று, இதன் கண் பண்டை நாளில் கோட்டையும் அரண்களும் இருந்த குறிப்பைத் தெரிவிக்கிறது[1]. இந் நகரைப் பண்டைச் சான்றோர், “நன்னகர் மாந்தை[2]” “துறை கெழு மாந்தை”, “கடல்கெழு மாந்தை[3]” என்றெல்லாம் பாராட்டி யுரைப்பர்.
பெருஞ்சோற்றுதியன் குட்டநாட்டு வஞ்சிநகர்க் கண் இருந்து ஆட்சி செய்கையில் நெடுஞ்சேரலாதன் மாந்தை நகர்க்கண் இருந்து நாடு காவல் புரிந்து வந்தான். உதியன் இறந்தபின் தான் சேரமானாய் முடிசூட்டிக் கொண்டு மாந்தை நகரிலேயே தங்கினான்; தன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனை வஞ்சி நகர்க் கண்ணே நாடு காவல் செய்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தான்.
நெடுஞ்சேரலாதன் இளமையில் முரஞ்சியூர் முடிநாகனார் பால் கல்வி பயின்றவன். அவரும் பிறருமாகிய சான்றோர் வேந்தர்களை வாழ்த்தும்போது “பொதியமும் இமயமும் போல நிலைபெறுக” என வாழ்த்துவது மரபாக இருத்தமை அவனுக்குத் தெரிந்திருந்தது. நெடுஞ்சேரலாதன் அதன் கருத்தை ஆராய்ந்தான். தென்பொதியத்து வேளிர் சேரவேந்தர்க்கு மகட்கொடை புரியும் முறைமையினராதலால், அவரது பொதியத்துக்கும் சேரர்கட்கும் தொடர்புண்டு என்பது இனிது விளங்கிற்று. பொதியம் போல வட விமயமும் சேரவரசரோடு தொடர்புற வேண்டும் என்பது அச் சான்றோர் கருத்தாதலைக் கண்டான். சேர நாட்டின் தென்பகுதியை வென்று ஞாயிறு தன் கடலில் தோன்றித் தன் கடலிலே குளிக்கும் என்று சான்றோர் பரவும் பாராட்டினைத் தன் தந்தை உதியஞ்சேரல் பெற்றான்; அதற்கு முன்னோருள் ஒருவன் பாரதப் போரில் பெருஞ்சோற்று விழாவினைச் செய்துகாட்டிச் சிறப் புற்றான்; அவருள் வேறொருவன் குடநாட்டிற்குக் கிழக்கில் சுவர்போல் வானளாவி நிற்கும் பாயல் மலையின் வடக்கில் விளங்கும் வானமலையைத் தனக்குரியதாக்கி வானவன் என்ற சிறப்பும் வானி யாற்றையும் வானமலையையும் வடக்கில் வரம்பறுத்து வானவரம்பன் என்ற சிறப்பும் பெற்றான்; ஆகவே சான்றோர் விழைந்தவண்ணம் இமயத்தைத் தன் புகழ்க்கு எல்லையாக்குதல் வேண்டும் என்று நெடுஞ் சேரலாதன் நெஞ்சில் வேட்கைகொண்டான்.
நெடுஞ்சேரலாதன் முடிசூடிக்கொண்ட போது வேந்தர் எழுவர் முடிப்பொன்னாற்செய்த பொன்னாரம் ஒன்று வழிவழியாக வரும் முறைப்படி அவன் மார்பிலும் அணியப் பெற்றது. அதன் கருத்தை உணர்த்த வந்த சான்றோர், ‘தம்மவர் அல்லாத பிற வேந்தரை வென்றால், அவர் முடிப்பொன் கொண்டு கழல் செய்து கொள்வது தமிழரசர் மரபு[4]; ஒரு காலத்தே சேர நாடு எட்டுச் சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது; மன்னர் எண்மரும் தனித்து நிற்பின் பகைவர் தம்மை வெல்லற்கு எளிதாம் என எண்ணித் தம்மில் ஒன்றுபட்டு ஒருவர் முடிவேந்தராக ஏனையோர் அவர்க்குத் துணைவராய்ப் பிரிவின்றி ஒழுகுதல் வேண்டும் என்று உறுதிசெய்து கொண்டனர் என்றும் ‘அவ் வொற்றுமைக் குறிப்புத் தோன்ற ஏனை எழுவர் முடிப்பொன்னால் ஆரம் செய்து மார்பில் அணியாகப் பூண்டனர்’ என்றும் எடுத்துரைத்தனர். இதைக் கருத்துட்கொண்டே எண்மரும் கூடியிருந்து ஆராயும் அரசியற்குழு எண்பேராயம் எனப்பட்டது; பின்பு நாளடைவில் எண்பேராயம் வேறு வகையில் இயலுவதாயிற்று. இவ்வாறே பாண்டிநாடு ஐம் பெரும் நாடுகளாகப் பிரிந்திருந்தது, பின்பு ஐம் பெருந்தலைவரும் தம்மில் ஒருவராய் இயைந்ததனால் பாண்டியர் பஞ்சவர்[5] எனப்பட்டனர்; இக் குறிப்புத் தோன்றவே ஐம்பெருங் குழு என்னும் அரசியலாராய்ச்சிக் குழு தமிழ் வேந்தர் அரசியலில் இடம் பெறுவதாயிற்று. சேரரினும் பாண்டிர் பழையராதலின், அவரால் உளதாகிய ஐம்பெருங் குழு முன்வைத்தும், எண்பேராயம் பின் வைத்தும் சான்றோ ராற் குறிக்கப்படுகின்றன. சேரநாட்டு எண்பகுதிகளும் குட்டநாடு, பொறைநாடு, குகட நாடு, கொண்கான நாடு, வான நாடு, பாயல் நாடு, கடுங்கோநாடு[6], பூழி நாடு என்பன. பாண்டிய நாட்டு ஐம் பகுதிகளும், மதுரை, மோகூர், கொற்கை, திருநெல்வேலி (பழையன் கோட்டை[7]), கருவை என்ற ஊர்களைத் தலைமையாகக் கொண்டவை.
இவற்றை எல்லாம் கருத்தூன்றி நோக்கிய நெடுஞ் சேரலாதனுக்கு, இமயம் சென்று அதனை எல்லை யாக்கிக் கோடற்கு எழுந்த வண்ணம் பேரூக்கத்தால் உந்தப் படுவதாயிற்று. எண்பேராயத்தை ஒருங்கு கூட்டித் தன் எண்ணத்தைத் தெரிவித்தான். எல்லோரும் அவன் கருத்தைப் பாராட்டினர்; ஏனைச் சோழ பாண்டி யர்க்குத் திருமுகம் போக்கி அவர் கருத்தை அறிய முயன்றான். அந் நாளில் சோழ பாண்டியர்கள், தமிழர் என்ற இனவொருமையால் கருத்தொருமித்து இமயத்தைத் தமிழ்க்கு வரம்பாகச் செய்யும் சேரமான் முயற்சியை வாழ்த்தித் தங்கள் நாட்டினின்றும் இரு பெரும் படைகளை விடுத்துத் துணை செய்தனர். இமயச் செலவுக்கெனச் சேரநாட்டிலும் பெரும்படைதிரண்டது. யானை, குதிரை, தேர் என்ற படைவகைகளும் வில் வேல்வாள் முதலியன் ஏந்தும் படைவகைகளும் அணியணியாய் இமயம் நோக்கிப் புறப்பட்டன. இவ்வாறு எழுந்த சேரப்படையுடன் சோழப்படையும் பாண்டிப்படையும் கலந்து கீழ்க்கடலும் தென்கடலும் மேலைக் கடலும் ஒன்று கூடி இமயம் நோக்கி யெழுந்ததுபோல நிரந்து செல்லலுற்றன.
அந் நாளில் கொண்கானத்துக்கும் வடவிமயத் துக்கும் இடையிற் கிடந்த நாடு ஆரியகம் என்ற பெயர் பெற்று விளங்கிற்று. அந் நாளிற் போந்த மேலைநாட்டு யவனர் குறிப்புகளும் அப் பகுதியை ஆரியகம் (Ariake) என்றே குறித்துள்ளன. ஆங்கு வாழ்ந்த சதகன்னரும் மோரியருமாகிய ஆரிய மன்னர் தமிழ்ப்படையின் வரவுகண்டு இறும்பூதெய்தினர். படையின் பெருமை அறியாது பகை கொண்டு எதிர்த்த வேந்தர் சிலர் வலி தொலைந்து ஒடுங்கினர்; பலர் பணிந்து திறைதந்து நண்பராயினர் நெடுஞ்சேரலாதன் நினைந்தது நினைந்தவாறே நிறைவேறியது பற்றி மனம் மகிழ்ந்து இமயத்தில் தன் விற்பொறியைப் பொறித்துவிட்டுத் திரும்பினான். ஆரிய நாட்டினர் கொடுத்த பொன்னும் பொருளும் பொற்பாவைகளும் இமயச் செல்வின் ஊதியமாகச் சேர நாடு வந்து சேர்ந்தன. சேரமான், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற நெடும் புகழால் சிறப்புற்றான். தன்னொடு போந்த தானைத் தலைவர் கட்கும் துணைவர் கட்கும் பரிசிலர்க்கும் தக்க வரிசை களைச் செய்து மகிழ்வித்ததோடு சோழ பாண்டியப் படைத் தலைவர்கட்கும் உரிய சிறப்புகளைச் செய்து இன்புறுத்தினான்.
இமயவரம்பனான நெடுஞ்சேரலாதன் இமயத் துக்குச் சென்றிருந்த காலையில், நாட்டின் ஆட்சி முறையில் மக்கள் எய்திய நலந் தீங்குகளை நேரிற் கண்டறியும் கருத்தால், அவன் நாட்டின் பல பகுதி கட்கும் செல்ல வேண்டியவனானான். காடு கொன்று நாடாக்குதலும், குடிபுறந்தருவோரும் பகடு புறந்தரு வோருமாகிய நாட்டு மக்கட்கு வேண்டும் நலங்களைப் புரிதலும், அந் நாளைய வேந்தன் பணியாதலின், அதுபற்றி அவன் அடிக்கடி தெற்கிலும் கிழக்கிலும் உள்ள நாடுகட்குச் சென்று வந்தான். இஃது இவ்வாறிருக்க -
கொண்கான நாட்டுக் கடற்கரையில் தீவுகள் பல இருந்தன. அவற்றுள் கடம்பர் என்போர் வாழ்ந்து வந்தனர்; அத் தீவுகளுள் கூபகத் தீவு என்பது ஏனைய பலவற்றினும் சிறிது பெரிது. அக் கடம்பர்கள் அதனைத் தலைமை இடமாகக் கொண்டு தெற்கிலுள்ள தீவுகள் பலவற்றிலும் பரவி வாழ்ந்து வந்தனர். இன்றைய வட கன்னடம் மாவட்டத்தைச் சேர இருக்கும் கோவா என்னும் தீவு அந் நாளில் கூவகத் தீவம் என்ற பெயர் பெற்று நிலவியது[8]; தெற்கில் தென் கன்னட மாவட்டத்தைச் சேர்ந்திருக்கும் கடம்பத் தீவு (Kaamat Island) கடம்பர் கட்கு முதல் இடமாகும். கடம்ப மரத்தைக் காவல் மரமாகப் பேணி வந்தமையின் அவர்கள் கடம்பர்கள் என வழங்கப்பட்டனர். கடலில் கலஞ் செலுத்துவதும் மீன்பிடிப்பதும் அவர்கள் மேற் கொண்டிருந்த தொழில். கடம்ப வேந்தர் சிலருடைய செப்பேடுகளில் மீன்கள் பொறிக்கப்பட்டிருப்பதும், கோவாத் தீவில் பழங்கோவா என்ற பகுதியிற் காணப்படும் வீரக்கல் ஒன்றில் கடற்படை யொன்று நாவாய் ஏறிப் போருடற்றும் ஓர் இனிய காட்சி பொறிக்கப்பட்டிருப்பதும்[9] அவர்களுடைய பண்டை நாளைத் தொழில் வகையை நன்கு தெரிவிக்கின்றன. சங்க காலத்தேயே தோற்றமளிக்கும் இக் கடம்பர்கள் இடைக்காலத்தில் கொண்கானம், கருநாடகம், கலிங்கம் என்ற இந்த நாடுகளில் அரசு நிலையிட்டு வாழ்ந்து, கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இடையில் பெருவிளக்கம் பெற்றுத் திகழ்ந்த விசயநகர வேந்தரது ஆட்சியில் மறைந்தொழிந்தனர்.[10] இவர்களுடைய கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் வட கன்னடம், தென் கன்னடம், குடகு, மைசூர், ஆந்திர நாடு என்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
கடம்பர்கள் கடம்ப மரத்தைக் காவல்மரமாக ஓம்பிக் கடலகத்தே வாழ்ந்தனர் எனச் சங்க இலக்கியங்கள் குறித்துக் காட்டவும், இக் கடம்பர்களுடைய இடைக்காலச் செப்பேடுகளும் பிறவும் பெளராணிக முறையில் அவர்கட்குத் தொன்மை கூறுகின்றன. பம்பாய் மாகாணத்துப் பெல்காம் பகுதியிற் கிடைத் துள்ள கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுச் செப்டேடொன்று, வேதியர் குலத்தில் அரிதிபுத்திர கோத்திரத்தில் பிறந்த இருடிகள் மூவருள் மாணவியர் என்பார் ஒருவரெனவும், அவர், “வேதாத்தியயனமும் சாதுர்மாஸ்ய ஹோமங்களும் யாகங்களும்” செய்து வந்தார் எனவும், அவரது மனையில் கடம்பமரம் ஒன்று -வளர்ந்திருத்தது எனவும், அதனைப் பேணிப் புறந்தந்து வந்த சிறப்பால் அவர் வழிவந்தோர் கடம்பர் எனப்படுவாராயினர் எனவும்[11] கூறுகிறது, ஒருகால் சிவபெருமான் திரிபுரமெரித்துப்போந்து தமது நெற்றி வியர்வையை வழித்து ஒரு கடம்ப மரத்தின் அடியில் சிந்தினர் என்றும், அத்துளிகளிலிருந்து திரிலோசக் கடம்பன் என்பான் தோன்றினான் என்றும் இசில கல்வெட்டுகள் செப்புகின்றன[12]; நந்த வேந்தருள் ஒருவன் மகப்பேறின்றிக் கயிலை மலையில் தவஞ்செய்தான் எனவும், அப்போது வானவர்கள் அவன் கையில் கடம்ப மலர்களைச் சொரிந்து வாழ்த்தினர் எனவும், வானில் வானொலி தோன்றி அதற்கு மக்கள் இருவர் தோன்றுவர் என்றதாக, அவ்வாறு தோன்றிய இருவர் வழிவந்தோர் கடம்பராயினர் எனவும் வேறுசில விளம்புகின்றன.[13] களிறொன்று மாலை சூட்டிக் கரிகாலனை சோழனாக்கிற்று என்று பழமொழி யென்னும் நூல் கூறுவது போலத் திரிலோசனைக் கடம்பன் கடம்ப வேந்தனானான் என்றொரு வரலாறும் உரைக்கப் படுகிறது.[14]
இவர்கள், தொடக்கத்தில் கொண்கானத்திலும், வானவாசியிலும், குடகு நாட்டிலும், கருநாடகப் பகுதியிலும், இறுதியில் ஆந்திர நாட்டிலும் அரசு புரிந்திருக்கின்றனர் அன்றோ? இவர்களது வரலாறு கண்டோர், இவர்களைக் கோவாக் கடம்பர், வான வாசிக் கடம்பர் பாயல் நாட்டுக் கடம்பர், கலிங்கக் கடம்பர் எனப் பலவகையாகப் பிரித்துக் கொண்டு கூறுகின்றனர். குடகுநாட்டு வேந்தரைப் பாயல் நாட்டுக் கடம்பர் என்பர்; அக் குடகு நாட்டுக்குப் பண்டைப் பெயர் பாயல் நாடு என்பதாகும். ஏழில்மலைக்கும் கோகரணத்துக்கும் இடையில், மேலைக் கடற்கரைப் பகுதியாக இருக்கும் கொண்கானத்தின் வட பகுதியைப் பங்களநாடு என்பராகலின், அங்கு வாழ்ந்த பங்கள் வேந்தர் பங்களக் கடம்பர் எனப்பட்டனர்[15]. இக் கடம்பர்கள் மிக்க சிறப்புடன் வாழ்ந்த காலம் கி.பி. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகள்; இவர்களது ஆட்சியும் இடைக்காலச் சோழவேந்தர் ஆட்சிபோல மிக்க சிறப்பாகவே இருந்திருக்கிறது.[16]
இக் கடம்பர்கள் தொடக்கத்தில் வட கன்னட நாட்டுக் கோவாத் தீவு முதல் தென் கன்னட நாட்டுக் கடம்பத் தீவு ஈறாகவுள்ள தீவுகளில் இருந்துகொண்டு, கடற்குறும்பு செய்வதும், கரையிலுள்ள நாட்டில் நுழைந்து அரம்பு செய்வதும் மேற்கொண்டிருந்தனர். அவரது குறும்பைப் பொறாத நாட்டு மக்கள் இமயவரம்பன் பால் முறையிட்டனர். இவன் தக்கதொரு கடற்படை கொண்டு கடம்பர் வாழ்ந்த தீவுக்குட் சென்று அவர்களைக் கடுமையாகத் தாக்கி வென்றான். அவர்களது காவல் மரமான கடம்பையும் வெட்டி வீழ்த்தித் தங்கள் தமிழ் முறைப்படியே முரசு செய்து கொண்டு வந்தான். பணிந்தொடுங்கிய கடம்பர்கள் சேர நாட்டு எல்லையில் இருந்த தீவுகளின் நீங்கி வட பகுதியிலுள்ள தீவுகட்குச் சென்று ஒடுங்கினர். மேனாட்டு யவனர்கள் குறிக்கும் கடற் குறும்பர்கள் இக் கடம்பர்களே யாவர்.
கடற்குறும்பு செய்த கடம்பரை வென்ற வெற்றி யினை இமயவரம்பன் தன் மாந்தை நகர்க்கண் சிறப்புடன் விழாக் கொண்டாடினான். சேரநாட்டிற் பல பகுதிகளினின்றும் வேந்தர்களும் தலைவர்களும் சான்றோர்களும் வந்து கூடியிருந்தனர். விழாவிறுதியில் இமயவரம்பன் எழில்மிக்க யானையொன்றின் மேல் திருவுலாச் செய்தான். அக் காட்சியினை அங்கு வந்திருந்த சான்றோரும் கண்ணனார் கண் குளிரக் கண்டார்; அவர் கருத்தில் முருகவேள் கடலகத்தே மா மரத்தைக் காவன் மரமாகக் கொண்டிருந்த சூரன் முதலியோரை வென்று விழாச் செய்த நிகழ்ச்சி தோன்றிற்று. அதன் பயனாக அவர் இமயவரம்பனை அழகிய பாட்டொன்றால் சிறப்பித்தார்.
“மாக் கடல் நடுவில் இருக்கை அமைத்துக் கொண்டு அதன்கண் மாமரம் ஒன்றைக் காவன் மரமாகப் போற்றி வந்த அவுணர்கள், தீமை செய்தது பற்றி, கடல் நடுவண் சென்று அவர் தம் அரண்களை அழித்து அம் மாமரத்தையும் தடிந்து ஊர்களைத் தீக்கிரையாக்கி வாகைசூடி வந்த முருகவேள், தான் பெற்ற வெற்றிக் குறியாகப் பிணிமுகம் என்னும் யானைமேல் இவர்ந்து உலாவந்தாற் போல, கடம்பரது அரணை அழித்து அவர் பலராய் மொழிந்து காத்த கடம்பரத்தைத் தடிந்து அதனாற் போர்முரசு செய்து போந்த சேரலாதனே! தென் குமரிக்கும் வட இமயத் துக்கும் இடைநிலத்து வேந்தர் மறம்கெடக் கடந்து யானையூர்ந்து சிறக்கும் நின் செல்வச் சிறப்பைக் கண்டு யாங்கள் பெருமகிழ்ச்சி எய்துகின்றோம்.[17]
“நீ வென்ற கடம்பர் எளியவரல்லர்; தம்மை நேர் நின்று எதிர்க்கும் வயவர் தோற்று வீழ, வாட்போர் செய்து அவரது நாட்டைக் கவர்ந்து கொள்ளும் ஆற்றல் மிக வுடையவர்; அத்தகைய ஆற்றலமைந்த தானை யொடு வந்து எதிர்த்த அவர்களைக் கெடுத்து வலியழித்து அவரது கடம்பினையும் வேரொடு தொலைத்து, வீழ்த்திய நின் வீறுபாட்டினைக் கேட்ட ஏனைத் திசைகளில் வாழும் வேந்தர்கள், அடல்மிக்க அரியேறு உலவுவது தெரிந்த பிற விலங்குகள், அஞ்சி அலமருவது போல, இரவும் பகலும் கண்ணுறக்கம் இன்றிக் கலங்கஞர் எய்தியிருக்கின்றனர். இதனை நேரிற் கண்டு வியப்பு மிகுந்த என் சுற்றத்தார், காடு பல கடந்து தம்மை வருத்தும் வறுமைக் துயரையும் நினையாது, என்னோடு போந்து நீ தந்த சோறும் கள்ளும் நல்லுடையும் பெற்று, இத் திருவோலக்கத்தைச் சூழ்ந்திருக்கின்றனர்; இது காண்டற்கு மிக்க இன்பமாக இருக்கிறது[18]” என்று பாடினர்.
இவ்வாறு திருவுலாப் போந்து வீற்றிருந்த வேந்த தனைச் சூழவிருக்கும் சான்றோரும் அரசியற் சுற்றத் தாரும் கேட்டு இன்புறுமாறு, கண்ணனார் பாடிய பாட்டு வேந்தனுக்கு பேருவகையளித்தது. இப் பாட்டின் கண் சேரலாதனுடைய படைமறவரது மனை வாழ்க்கையை உள்ளுறையால் உவகை மிகக் கண்ணனார் கூறியது, அவரது புலமை நலத்தை உயர்த்திக் காட்டிற்று. அப் பாட்டின்கண், களிற்றினம் மதஞ் சிறந்து மறலுங்கால் அவற்றின் மதநீரை மொய்க்கும் வண்டினங்களை, உடன் வரும் கன்றீன்ற பிடியானைகள் பசுங்குளவித் தழை கொண்டு ஓப்புகின்றன; களிற்றினம் படை மறவரையும், கன்றீன்ற பிடிகள் புதல்வரோடு பொலியும் மறமகளிரையும், குளவித்தழை கொண்டு ஓப்புவது வேண்டுவன நல்கி இரவலரை ஓம்புவதையும் சுட்டி, நாட்டவரது வாழ்க்கை நலத்தை வேந்தன் நன்கறியச் செய்து உவகை பெருகுவித்தது. சேரலாதன், அவரது புலமை நலத்தை வியந்து அவரைத் தன் திருவோலக்கத்து நல்லிசைப் புலமைச் சான்றோராக மேற்கொண்டு சிறப்பித்தான். கண்ணனார் மாந்தை நகர்க்கண் இருந்து வரலானார்.
இக் கண்ணனார் சேர நாட்டுச் சான்றோருள் ஒருவர். இவரது ஊர் குமட்டூர் என்பது. இப்போது மலையாளம் மாவட்டத்தில் ஏர் நாடு எனப்படும் வட்டத்தின் ஒரு பகுதி இராம குடநாடு என இடைக் காலத்தே வழங்கிற்று. அதன்கண் உள்ள ஊர்களுள் ஒன்று இக் குமட்டூர்; இஃது உமட்டூர் எனவும் வழங்கும். உமட்டுதல் குமட்டுதல் என்றும், குமட்டுதல் உமட்டுதல் என்றும் மாறி வழங்குவது போல, உமட்டூர் குமட்டூர் என்றும் வழங்கியது. ஏனைச் சங்க நூல்கள் உமட்டூர் என்று குறிப்பது கல்வெட்டிலும் பதிற்றுப்பத்து ஏட்டிலும் குமட்டூர் என்றும் காணப்படுகிறது. இராம நாடு, பிராமியெழுத்துக் கல்வெட்டுக்களில் யோமி நாடு எனக் குறிக்கப்படுகிறது[19].
இமயவரம்பன் கண்ணனாரது புலமை நலம் கண்டு தனது திருவோலக்கத்தில் இருந்து வருமாறு பணித்து அவரைத் தன் மனம் விரும்பிய துணைவராகக் கொண் டான். அவரும் அவன்பால் அமைந்திருந்த குண நலங்களை அறிந்து இன்புற்றார். இமயவரம்பனான செயலால், நெடுஞ்சேரலாதனது புகழ் நாடெங்கும் பரவிற்று. கடற் குறும் பெருந்து கடம்பரை வெருட்டி யோட்டி அடக்கிய நிகழ்ச்சியால் கடல் வாணிகம் சிறந்தது. நாட்டு மக்களிடையே செல்வம் மிகுந்த நல்வாழ்வு நிலவிற்று.
இமயவரம்பன் புகழ், கொண்கானத்தின் வட பகுதியில் வாழ்ந்த ஆரிய வேந்தர் சிலர்க்குப் பொறாமையை உண்டுபண்ணிற்று. கடலகத்துத் தீவுகளில் வாழ்ந்த கடம்பருட் சிலர் நாட்டில் புகுந்து சேரமானுக்கு மாறாக ஆரிய வேந்தரொடு கலந்து பகை சூழலுற்றனர். அந் நாளில் யவன நாட்டவர் கலங்களிற் போந்து வாணிகம் செய்தமையின், அவருட் சிலரொடு நட்புக் கொண்டு, இமயவரம்பனுக்கு மாறாகப் போர் தொடுக்குமாறு அக் கடம்பர்கள் அவர்களைத் தூண்டினர். உண்மை அறியாத யவனர், ஆரியரும் கடம்பரும் செய்த துணை பெற்று இமயவரம்பனோடு போரிட்டனர். போர் கடுமையாக நடந்தது. சேரர்படை கடலிற் கலஞ் செலுத்திப் பொருவதிலும் சிறந்திருந் தமையால் யவனர் நிலத்தில் கால்வைத்தற்கு வழியின்றிச் சீரழிந்தனர். அவருட் பலர் சிறைபட்டனர்; நேர்மையும் பணிவும் அமைந்த சொற்செயல்களால் நெடுஞ்சேர லாதன் அருட்கு இலக்காகாத பகைவர் கடுந் தண்டத்துக்கு உள்ளாயினர். மிக்க குற்றம் செய்தவரைக் கைப்பற்றி அவர் தம் இருகைகளையும் முதுகின் புறத்தே சேர்த்துக் கட்டித் தலையில் நெய் பூசித் தன் நகரவர் காண நெடுஞ்சேரலாதன் கொண்டுவந்தான். மற்றை யோர், பொன்னும் வயிரமுமாகிய மணிகளைக் கொணர்ந்து கொடுத்துச் சேரலாதனது அருளைப் பெற்றனர். அவன் அவற்றைப் படை மறவர்க்கும் தானைத் தலைவர்க்கும் துணைவர்க்கும் பரிசிலர்க்குமே நல்கினான். இதனைப் “பேரிசை மரபின் ஆரியர் வணக்கி , நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய் தலைப்பெய்து கையிற் கொளீஇ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு, பெருவிறல் மூதூர்த் தந்து பிறர்க்குதவி” என்று பதிற்றுப் பத்தின் பதிகம் கூறுகிறது. மாமூலனார் என்னும் சான்றோர், “நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார், பணிநிறைதந்த பாடுசால் நன்கலம், பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல், ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவன் நிலந்தினத் துறந்த நிதியம்[20]” என்று இசைக்கின்றனர்.
இவ்வண்ணம் இமயவரம்பன், ஆரியர் கடம்பர் யவனர் என்போருடைய புறப்பகை கடிவதில் பெரிதும் ஈடுபட்டிருந்ததனால், உண்ணாட்டில் வாழ்ந்த குறுநில வேந்தர் சிலர், அவனது பொருமுரண் இயல்பு நோக்காது, திரை செலுத்துவதைக் கைவிட்டுப் பகைத்து அவன் சீற்றத்துக்கு உள்ளாயினர். அவனும் அவரது செருக்கடக்கி உட்பகையைப் போக்கக் கருதி அவர்தம் நாட்டின் மேற் படை கொண்டு சென்றான். பகைத்த வேந்தருடைய மதிலும் காவற்காடும் அழிந்தன, நிரை நிரையாகச் சென்ற அவனது படைவெள்ளம் பகைவர் படை வலியைச் சிதைத்து அவரது செல்வத்தைச் சூறையாடிற்று. படைமறவர் அந் நாடுகளில் தங்கிப் பகைவர் வாழ்ந்த பகுதிகளைத் தீக்கிரையாக்கினர்; தீப் பரவாத இடங்களை உருவறக் கெடுத்தனர். பாழ்பட்ட இடங்களில் வேளையும் பீர்க்குமாகிய கொடிகள் வளர்ந்து படரலுற்றன. நீரின்றிப் புலர்ந்து கெட்ட புலங்களில் காந்தள் முளைத்து வளர்ந்து மலர்ந்தன. செல்வர் வாழ்ந்த இடங்களில் வன்கண்மை மிக்க மறவர் குடிபுகுந்தனர்; பனையோலை வேய்ந்த குடில்கள் பலப்பல உண்டாயின[21].
இந்நிலை உண்டாகக் கண்ட பகைவேந்தர் தாம் செய்த தவற்றை யுணர்ந்து இமயவரம்பனது அருளைப் பெறற்கு முயன்றனர். அவன் அவர்களை ஒறுப்பதே கருதி யொழுகினான். மறத்துறையால் எய்தும் புகழ் அறச்செய்கையாற்றான் நிலை பெறும் என்பதை மறந்து, இமயவரம்பன் மறமே நினைத்து ஒழுகுவது நன்றன்று எனக் கண்டார் கண்ணனார். சேரலாதனைக் கண்டு, “வேந்தே, நின் வலி அறியாது பொருது கெட்ட வேந்தர் நாடு எய்திய அழிவும் கண்டேன்; பின்னர் நீ காக்கும் நாட்டையும் கண்டேன்; நினது நாடு மலைபடு பொருளும் கடல்படு பொருளும் ஆறுபடு பொருளும் பெருகவுடையது; ஊர்களில் விழாக்கள் மிகுந்துள்ளன ; மூதூர்த் தெருக்களில் கொடி நுடங்கும் கடைகள் மலிந்துள்ளன ; நின் வயவர் பரிசிலர்க்குச் செல்வமும் யானைகளும் பரிசில் நல்குகின்றனர்; நெடுஞ்சேரலாதன் நீடு வாழ்க என்ற வாழ்த்து அவர் வாயில் மலர்ந்த வண்ணம் இருக்கிறது; பகையால் விளையும் வெய்துறவு அறியாத மக்கள் இன்ப வாழ்வில் திளைக்கின்றனர்; அறவோர் பலர் ஒன்று மொழிந்து அடங்கிய கொள்கையும் துறக்கம் விரும்பும் வேட்கையும் கொண்டு அறம் புரிகின்றனர்; நீ காத்தலால் அவரவரும் விரும்பியன விரும்பியவாறு பெற்று இனிது உறைகின்றனர்; நாட்டில் நோயில்லை; கள்ளுண்டு களிக்கும் இயவர், இவ்வுலகத்தோர் பொருட்டு நீ ‘வாழியர்’ என நின்னை நினைத்து இசைப்பது கண்டேன்[22]” என்று மொழிந்து “இத்தகைய இன்ப வாழ்வு இச் சேர நாடு முற்றும் நிலவச் செய்க” என்று வேண்டினர்.
இதுகேட்ட சேரலாதன், அவரை வியந்து நோக்கினான். அக் குறிப்பறிந்த கண்ணனார், “வேந்தே, மன்னுயிர்க்கு ஈதலில் குன்றாத கைவண்மையும், பெருவலியும், உயர்ந்தோர்க்கு உறுதுணையாகும் சிறப்பும் உடையனாய், நீ திருமால் போலக் குன்றாத வலி படைத்திருக்கின்றாய். நின் பண்பு பலவும் நினது நாட்டில் விளங்கித் தோன்றக் கண்டதனால், நின் துப்பெதிர்ந்து அழிந்த பகைவர் நாட்டையும் கண்டு வருவேனாயினேன்” என்று செப்பினார்.
தன்னைப் பகைத்துத் தன்ன தொடு பொருதழிந்த வேந்தர் பொருட்டுக் கண்ணனார் இவ்வாறு கூறு கின்றார் என்பதை நெடுஞ்சேரலாதன் நன்குணர்ந்து கொண்டு, “சான்றீர், யாம் புறப்பகை கடியும் செயலில் ஈடுபட்டிருக்குங்கால் நாட்டிற்குள் பகைமை புரிந்த இவ் வேந்தர் செயல் பொறுக்கலாகாக் குற்றமாவது நீவிர் அறியாததன்று; அவர்க்கு அருள் செய்து புகலளிப்பது பகைப் பயிரை நீர் பாய்ச்சி வளர்ப்பது போலாம்” என மொழிந்தான். “வேந்தர் அறியாமையாற் செய்த குற்றத்துக்கு அவரது நாட்டு மக்கள் பெருந் துன்பம் உழப்பதே ஈண்டுக் கருதத் தக்கது’ என்பாராய், “பண்பு புன்செய்க் கொல்லைகளாய் இருந்தவை நாட்டு மக்களால் நீர் வளம் பொருந்திய வயல்களாயின; காட்டுப்பன்றி உழும் புனங்கள் வளவிய வயல்களாகச் சிறந்தன; அவ் வயல்களில் கரும்பின் பாத்தியிற் பூத்த நெய்தலை எருமையினம் மேய்ந்து இன்புற்றன; மகளிர் துணங்கை யாடும் மன்றுகளும், முதுபசு மேயும் பசும்புற்றரைகளும், தென்னையும் மருதும் நிற்கும் தோட்டங்களும், வண்டு மொய்க்கும் பொய்கைகளும் எம்மருங்கும் காட்சியளித்தன. அதனால் சான்றோர் பாட்டெல்லாம் அந் நலங்களையே பொருளாகக் கொண்டு விளங்கின. இப்போது நின் தானை சென்று தாக்கிய பின், அவை ‘கூற்று அடூஉ நின்ற யாக்கை போலப் பொலிவு அழிந்து கெட்டன; கரும்பு நின்ற வயல்களில் கருவேலும் உடைமரங்களும் நிற்கலாயின், ஊர் மன்றங்கள் நெருஞ்சி படர்ந்த காடுகளாயின; காண்போர் கையற்று வருந்தும் பாழ்நிலமாகியது காண மக்கட்கு நின்பால் அச்சம் பெருகிவிட்டது[23]” என்று இயம்பினார்.
இதனைக் கேட்ட வேந்தன் உள்ளத்தில் அருள் உணர்வு தோற்றிற்று. போருண்டாயின் இத்தகைய விளைவு இயல்பு என்பது ஒருபால் விளங்கினும், ஒருபால் அருளறம் அவன் உள்ளத்தில் நிரம்பிற்று. மக்களது வருத்தம் நினைக்க அவன் நெஞ்சு நெகிழத் தொடங்கிற்று. கண்ணனார், “வேந்தே, நீ காக்கும் நாட்டில் காடுகளில் முனிவர் உறைகின்றனர்; முல்லைக் கொல்லைகளில் மள்ளரும் மகளிரும் இனிது வாழ்கின்றனர்; மக்கள் வழங்கும் பெருவழிகள் காவல் சிறந்துள்ளன; குடிபுறந் தருபவரும் பகடு புறந் தருபவரும் இனிதே இருக்கின்றனர்; கோல் வழுவாமையால் மக்களிடையே நோயும் பசியுமில்லை; மழை இனிது பெய்கிறது[24]” என்று பாடி அவனை இன்புறுத்தினார்.
இவ்வாறு கண்ணனார் உரையால் அருள் நிறைந்த உள்ளமுடையனான இமயவரம்பன், தன்னைப் பணிந்து திறை கொடுத்துப் புகல்வேண்டிய வேந்தர்களை அன்பு செய்து ஆதரித்தான். அவனது அச் செயல் அவனுடைய தானைத் தலைவர் பாலும் தானை மறவர்பாலும் சென்று படர்ந்தது. ஒருகால், கண்ணனார் நெடுஞ்சேரலாத னுடைய பாடியிருக்கையொன்றிற்குச் சென்றிருந்தார். அப்போது பகைவருடைய தானை, போர்க்குச் சமைந்து நின்றது. அந் நிலையில், சேரலாதனுடைய தானை மறவரது ஏவல்வழி நின்ற இவர், “பகைவரை நோக்கி, அரணம் காணாது அலமந்து வருந்தும் உலகீர், உங்கட்கு இனி இனிய நீழலாவது எம் வேந்தனது வெண்குடை நீழலே; இதன்கண் விரைந்து வம்மின்” என்று இசைத்தனர். அதுகண்ட குமட்டூர்க் கண்ணனார்க்கு இறும்பூது பெரிதாயிற்று. நெடுஞ்சேரலாதனைக் கண்டார்; அவனோ பெரும் தவறு செய்த பகைவராயினும் அவர்கள் பணிந்து வருவரேல் பேரருள் செய்தான். உடனே அவரது உள்ளத்தில் அழகியதொரு பாட்டு உருப்பட்டு வெளிவந்தது. “வேந்தே, நீ கடல் கடந்து சென்று, பகைவர் தங்கிக் குறும்பு செய்த தீவுக்குட் புகுந்து, அவரது காவல் மரமான கடம்பினைந் தடிந்து, அம் மரத்தால் செய்து போந்த முரசுக்குப் பலிக்கடன் ஆற்றும் இயவர், ‘அரணம் காணாது வருந்தும் உலகீர் , எம்முடைய வேந்தனது வெண்குடை நீழலே உமக்கு நல்ல அரணாவது’ என அறைந்து அதனைப் பரவுகின்றனர்; பாடினி பாடுகின்றாள்; பகைவர் பெரிய தப்பு செய்யினும் அவர்கள் பணிந்து போந்து திறை பகர்வரேல் ஏற்றுக் கொண்டு அவர்கள்பால் செல்லும் சினத்தை நீக்கி, நீ சீரிய அருள் செய்கின்றாய்; நின் அருட்கு ஒப்பதும் உயர்ந்ததும் நினைக்குங்கால் நின் அருளல்லது பிறிது யாதும் இல்லை[25]” என்ற கருத்தை அப் பாட்டுத் தன்னகத்துக் கொண்டு விளங்குவ தாயிற்று.
நெடுஞ்சேரலாதன் போர் பல செய்து வெற்றி மிகுந்து புகழ் பரவ வீற்றிருந்தமை அறிந்து, பாணர் பொருநர் கூத்தர் முதலிய பரிசிலர் கூட்டம் அவனது நகர் நோக்கி வெள்ளம் போல் வந்தது. சேரலாதனும் அவர்கட்குப் பெருவளம் நல்கிச் சிறப்பித்தான். ஒருகால், கண்ணனார், பாணர் முதலியோருடைய கூட்டத்துக்கு இடையே சென்று அவரது மன நிலையைக் கண்டார். அவர்பால் கடும்பற்றுள்ளம் சிறிது தோன்றியிருந்தது; உள்ள பொருள் செலவாய்விடின் மேலே பெறுவது அரிது என்ற உணர்வு சிலருடைய நெஞ்சில் நிலவுவதை அவர் கண்டார். அவர்கட்கு இமயவரம்பனது வள்ளன்மையை எடுத்துணர்த்த வேண்டிய இன்றி யமையாமை பிறந்தது. விறலியரை நோக்கி, “விறலியரே, பற்றுள்ளம் கொள்ளாது வருவோர்க்கு வரையாது கொடுமின்; நிரம்பச் சமைமின்; உணவேயன்றி வேறு பிற பொருள்களையும் நெடுஞ்சேரலாதன் முட்டின்றி நல்குவான்; ஆதலால், பிற கலன்களையும் பிற இரவலர்க்கு வழங்குமின்; பெற்றது குறையுமென அஞ்சாது நல்குமின்; சேரலாதன் மிகுதியாகத் தருவன்; நீர் பொய்ப்பினும் சேரலாதன் கொடை பொய்யாது; ஆகவே, நன்றாக உண்மின்; அடுமின்; எல்லோர்க்கும் கொடுமின்[26]” என்று தெருட்டி ஊக்கினர். அப்போது, அக் கூட்டத்தில் இருந்த ஒருவர், கண்ணனாரை நோக்கி, “இமயவரம்பனது கொடைநலம் அறிந்தோர் போலக் கூறும் நீரும் எம்மனோர் போலப் பரிசிலர் எனக் காணுகின்றீர்; நுமது அரசன் யாவன், கூறுவிரோ?'’ என்று கேட்டார். அதற்கு விடை கூறலுற்ற கண்ண னாரது உள்ளம் பெருமகிழ்வு கொண்டது. சேரலாதனது சிறப்பை எடுத்துரைத்தற் கேற்ற வாய்ப்புக் கிடைத்தது பற்றி அவர் பெருமிதம் எய்தினார்.
“நுமக்குக் கோவாவான் யார் என வினவு கின்றீர்கள்; எங்கள் வேந்தன், கடலகம் புகுந்து, அங்குள்ள தீவினுள் வாழ்ந்த திறல் மிகுந்திருந்த கடம்பரது கடம்பினை வேரோடு தடிந்து புகழ் மேம்பட்ட நெடுஞ்சேரலாதன்; பகைப்புலத்தே பகைவர் தமது சூழ்ச்சியால் செய்யும் எத்தகைய வினையையும் அவர்கட்கு வாய்க்குமாறு இன்றிக் கருவிலேயே கெடுத்து வெற்றிமிகும் வினைத்திறம் வாய்ந்தவன்; உட்பகை செய்யும் ஒட்டார் முன்னும் பொய் கூறாத வாய்மை யுடையவன்; தன்னைக் காணும் பகைவர் உள்ளத்து ஊக்கம் கெடுமாறு பெருமிதத்துடன் நடந்து, அவரது நாட்டை வென்று தன்னைப் பாடும் பரிசிலர்க்கு நல்கும் பண்பினன்; குதிரைகளையும் பிறவற்றையும் பெருக வழங்கும் கொடைநலம் உடையவன்; மிளையும் கிடங்கும் மதிலும் ஞாயிலுமுடைய பகைவர் பலருடைய நகரங்களை அழித்துத் தீக்கு இரையாக்கிய அவன், தன்பால் வருவோர், வல்லுநாராயினும், மாட்டாராயினும், யாவராயினும் நிரம்ப நல்கும் நீர்மை யுடையவன்; மழைமுகில் தான் பெய்யுமிடத்துத் தப்புமாயினும், சேரலாதன், பசித்து இரக்கும் இரவலர்க்கு வயிறு பசி கூர ஈயும் சிறுமையுடையவனல்லன்; அப் பெற்றியோனை நல்கிய அவனுடைய தாய் வயிறு மாசிலள் ஆகுக[27]” என்று இனிமையாகப் பாடினர். அச் சொற்களைக் கேட்ட பரிசிலர் பேரின்பம் எய்தினர். ஒற்றர் வாயிலாக வேந்தன் கண்ணனார் பாடிய பாட்டைக் கேட்டு அவர்பால் பேரன்பு கொண்டான்.
சேரலாதன் ஆட்சி நலத்தால் நாட்டில் வளவிய ஊர்கள் பல உண்டாயின. மக்கள் செல்வ வாழ்வு நடத்திச் சிறப்பெய்தினர். சான்றோர் பலர், அவனது ஆட்சி நலத்தை வியந்து போந்து அவனை வாழ்த்தினர். பொருளும் இன்பமும் அறநெறியிற் பெருகி நிற்கும் அரசினைக் கீழ்மக்களும் விரும்புவரெனின், சான்றோர் போந்து பாராட்டுவதில் வியப்பில்லையன்றோ!
நெடுஞ்சேரலாதனொடு நெருங்கிய நட்பாற் பிணிப் புண்டிருந்த கண்ணனார் அவனுடைய ஆட்சியால் நலம் எய்திய நாடு முற்றும் கண்டு மகிழ்ந்தார். அவன் தன்னொடு பகைத்து மாறுபாடு கொண்ட வேந்தர் நாட்டிற் படையெடுத்துச் சென்று, அவர்களை வென்றடங்கி, அவன் நாட்டைப் பாழ் செய்வதையும் அவர் அறியாமலில்லை. போர்ப்புகழ் பெறுவதில் மகிழ்ந்து மைந்துற்று ஒழுகும் வேந்தர் உள்ளத்து மறவேட்கையை மாற்றி நாட்டு மக்கட்கு இன்பம் பெருக்கும் செயல்களில் ஈடுபடச் செய்வதை, அவ்வேந்தர்க்குச் சுற்றமாய்த் துணைபுரிந்த அந்நாளைச் சான்றோர் தமது கடமையாக மேற்கொண்டிருந்தனர். கண்ணனார் தமது கடமையை மறந்தார் இல்லை. காலம் வாய்க்குந் தோறும் நெடுஞ்சேரலாதனுக்குப் போரால் விளையும் கேட்டினை எடுத்துக்காட்டியே வந்தார். செய்த போர்களிலெல்லாம் இமயவரம்பன் வெற்றியும் பெருஞ்செல்வமும் பெற்றதனால், அவனது மனம் மறப் புகழையே நாடிநின்றது. மறவுணர்வை மாற்றுதற்கு அவர் எடுத்துரைத்த அறவுரைகள் கருதிய பயனைக் கருதிய அளவில் விளைக்கவில்லை . முடிவில், அவன் கருத்தை இன்பத் துறையில் செலுத்துவது ஓரளவு அவன் நெஞ்சில் நிலவும் மறவுணர்வை மாற்றும் எனக் கண்ணனார் எண்ணினார்.
இவ்வாறிருக்கையில், நெடுஞ்சேரலாதன், ஒருகால் வேந்தன் ஒருவனுடன் போர் தொடுத்து அவன் நாட்டிற் பாசறை யிட்டிருந்தான். அந் நிலையில் ஒருநாள் கண்ணனார் அவனுடைய பாடிவீட்டிற்குச் சென்றார். வேந்தன் அவர் வரவு கண்டு மகிழ்ந்தானாயினும், அவனுடைய குறிப்பு அவர் வந்த வரவின் கருத்தை அறிய விழைந்தது. ‘வேந்தே, நீ மேற்கொண்டிருக்கும் வினை, நினக்கு வருத்தம் பயக்கும் அத்துணைக் கொடுமையுடையதென அஞ்சி யான் வந்தேனில்லை; மலைபோல் உயர்ந்த புறமதிலும், அகன்ற இடைமதிலும், கணைய மரங்கள் நான்று கொண்டிருக்கும் உயரிய வாயிலும் உடைய இப் பாசறை யிடத்தே நீ நெடிது தங்கிவிட்டாய்; அதனால் நின்னைக் காண்பது விரும்பி வருவேனாயினேன்'’ என்றார். சேரலாதன் நெஞ்சு மகிழ்ந்து அவரது அன்பை வியந்து பாராட்டினான். அக்காலையில் அன்பரது அன்பு பற்றிய பேச்சொன்று உண்டாயிற்று. “அன்பால் பிணிப்புண்ட ஆண் மக்களாகிய என் போல்வார்க்கே நின் பிரிவு ஆற்றாமையை விளைவிக்குமாயின், நின்னையின்றி அமையாத நின் காதலியின் ஆற்றாமை எத்துணை மிகுதியாக இருக்கும் என்பதை எண்ணுதல் வேண்டும்” என்றார்.
அவரது சொல்வலையில் சிக்கிய இமயவரம்பன் மனக் கண்ணில், அவனுடைய காதலியான தேவியின் அன்புருவம் காட்சியளித்தது; ஒருசில சொற்களால் அவன் தன் மனைவியின் குணநலங்களைச் சொன் னான். அச் சொற்களையே கண்ணனாரும் கொண் டெடுத்து, “சேரவேந்தே, நின் தேவியானவள் ஆறிய கற்பும் அடங்கிய சாயலும் உடையவள்; நீ கூறுமாறு ஊடற் காலத்தும் இனிய மொழிகளையே மொழியும் இயல்பினள்; சிவந்த வாயும் அமர்த்த கண்ணும் அசைந்த நடையும் சுடர்விட்டுத் திகழும் திருநுதலும் உடைய நின் தேவி நின்னை நினைத்தற் குரியன்; நின் மார்பு மகளிர்க்கு இனிய பாயலாம் பான்மை யுடையது; நீயோ அதனை அவர்கட்கு நல்குதலும், நல்காது பிரிதலும் கொண்டு உறைகின்றாய்; இக் காலத்தில் நின் மார்பை நின் தேவியார்க்கு நல்காயாயின், அவள் பாயல் பெறாமையால் உளதாகும் வருத்தத்தின் நீங்கி உய்தல் கூடுமோ?"[28] என்று இனிமை மிகக் கூறினார். இமயவரம்பன் கருத்துத் தன் காதலி மேற் சென்றது. அவன் மேற்கொண்ட வினையை விரைந்து முடித்துத் தன் நகர் வந்து சேர்ந்தான்.
சில பல நாட்கள் கழிந்தன. சேர நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன் சேரலாதன் சினந்து போர் தொடுத்தற்குரிய குற்றத்தைச் செய்தான். போர் தொடங்கிற்று. பகைத்த வேந்தன் தோற்றோடினான்; அவன் நாட்டில் வாழ்ந்த மக்களுள் பலர், போரினது கடுமை கண்டஞ்சி நாட்டை விட்டு யோடின; நிலங்கள் உழுவாரின்றிப் பாழ்ப்பட்டன. அந் நிலையைக் கண்ட கண்ணனார் சேரலாதன் தங்கியிருந்த பாசறைக்குச் சென்றார்.
அங்கே பல வகைப் படைகளும் தத்தமக்குரிய வினைகட்கு வேண்டுவனவற்றை முற்படச் செம்மை செய்து கொண்டிருந்தன. கூளிப்படை, பின்னே வரவிருக்கும் தூசிப்படை முதலிய வயவர் படைக்கு வழி செய்து நின்றது; வயவர் படைக்கருவிகளை வடித்துத் தீட்டி நெய் பூசிச் செம்மை செய்து கொண்டிருந்தனர்; இயவர் முரசுக்குப் பலியிட்டுப் போர் முழக்கம் செய்திருந்தனர்; கண்ணனார் இச்செயல்களை எடுத்தோதி, “நின் கூளியரும் வயவரும் இயவரும் சான்றோரும் போர்க்குச் சமைந்திருக்க நீயும் போரையே விரும்பியிருக்கின்றாய்; நின் போர்வினையால் நாடுகள் அழிந்து பாழ்படுகின்றன; நாடுகளில் மக்கள் இனிதிருந்து வாழ்தற்கு ஏற்ற வாய்ப்புப் போர்வினையால் கெடுகிறது; அதனால் நாட்டின் பகுதிகள் பலவும் அழிவுறுகின்றன. போர் நிகழ்தற்கு முன் அந் நாட்டு நீர்நிலைகளில் தாமரை மலர், நெல்வயல்களில் நெய்தல் பூப்ப, நெற்பயிர் வளமும் வளர்ந்து விளைந்தன; நெல்லரிவோர் குயம் நெற்றாளை அரிய மாட்டாது வாய்மடங்கின ; கரும்பின் எந்திரம் கரும்பின் முதிர்வால் பத்தல் சிதைந்து வருந்தின; அந் நிலையைக் கண்டோர் இப்போது கை பிசைந்து புடைத்து வருந்த, போர்வினையால் அழிந்து மாட்சி இழந்தன; இவற்றை நீ எண்ணுதல் வேண்டும். இந் நிலையில் கணவனை இழந்த மகளிர் கையற்று வருந்தும் காட்சி நெஞ்சிற் பல நினைவுகளை எழுப்பு கின்றது. நின் திருநகர்க்கண் உறையும் நின் காதலி, போர்த்துறை மேற்கொண்டு பாசறை யிருப்பிலே நீ கிடத்தலால், நின்னைக் கனவின்கண் கண்டு இன்புறுவது ஒன்றைத் தவிர வேறு இன்பம் காணாது வருந்தி உறைகின்றாள்; அவளை நினையாது இருப்பது முறையன்று” என்று சொல்லி, நெடுஞ்சேரலாதன் உள்ளத்தெழுந்த மறவேட்கையை மாற்றினார். இவ்வகையால் அவனது உள்ளத்தை அறத் துறையில் ஒன்றுவித்து நாட்டில் அமைதி நிலவச் செய்து மக்களது வாழ்வில் நிலைத்த இன்பம் செய்யும் புலமைப்பணியில் கண்ணனார் பெரிதும் உழைத்துப் பயன் கண்டார். அவரது புலமை நலம் கண்டு வியந்த வேந்தன் அவர்க்கு மிக்க சிறப்புகளைச் செய்தான். அந் நாட்டில் இன்றும் புகழ்மிக்கு விளங்கும் கண்ணனூர் அன்று இவர் பெயரால் ஏற்பட்டிருக்குமோ என நினைத்தற்கு இடமுண்டாகிறது. இடைக் காலத்தே இது சிறைக்கல் பகுதியை ஆண்ட வேந்தரது தலைநகரமாய் விளங்கிற்று. மேலும், அவன் உம்பற்காடு என்ற பகுதியில் ஐஞ்ஞுறு ஊர்களைக் கண்ணனார்க்குப் பிரமதாயம் கொடுத்தான். உம்பற்காடு என்பது இப்போது நீலகிரிப் பகுதியில் நும்பலக்காடு என்ற பெயர்க் கொண்டு நிலவுகிறது. இஃது, இப்போது வயனோடு என வழங்கும் பண்டைய பாயல் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து, ஆங்கிலேய ருடைய ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் சேர்க்கப்பெற்றது.[29] திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்த வைக்கம் என்ற நகரத்தில் உம்பற்காட்டு வீடு என ஒரு வீடு இருந்து உம்பற்காட்டின் பழமையை உணர்த்தி நிற்கிறது[30].
இவ்வாறு இமயவரம்பனுடைய பேரன்பைப் பெற்றுக் கண்ணனார் சிறப்புடன் இருந்து வருகையில், அவர்க்குத் தமது ஊர்க்குச் செல்லவேண்டும் என்ற விருப்பமுண்டாயிற்று; வேந்தனிடத்தில் தமது கருத்தைக் குறிப்பாய்த் தெரிவித்தார். இப்போது சேரலாதனுக்கு முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டு நடைபெற்றுக் கொண் டிருந்தது. கண்ணனார்க்கும் முதுமை நெருங்கிற்று. இமயவரம்பன் அவரது விருப்பத்தைப் பாராட்டித் தன் ஆட்சியில் அடங்கிய உம்பற்காட்டின் தென்பகுதியான தென்னாட்டு வருவாயில் ஒரு பாகத்தை அவர் பெறுமாறு திருவோலை எழுதித் தந்து சிறப்பித்தான்; அச் சிறப்பின் நினைவுக் குறியாகச் சிறப்புடைய ஊரொன்றைக் கண்ணன் பட்டோலை என்று மக்கள் வழங்கத் தலைப்பட்டனர். இப்போதும் குடநாட்டின் தென் பகுதியில், பாலைக்காட்டு வட்டத்தைச் சேர்ந்த தென்மலைப்புறம் என்ற பகுதியில் இந்தக் கண்ணன் பட்டோலை என்ற ஊர் இருந்து வருகிறது.
இச் சிறப்புப் பெற்ற கண்ணனார்க்கு இமய வரம்பன் பால் உண்டான அன்புக்கு எல்லையில்லை. அவனை வாயார வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் அவர்க்கு உண்டாயிற்று. “சேரலாதனே, நிலமும் நீரும் வளியும் விசும்பும் போல், நீயும் அளப்பரிய பண்புகள் கொண்டவன்; தீயும் ஞாயிறும் திங்களும் பிற கோள் களும் போல ஒளியுடையவன்; பாரதப் போரில் பாரத வீரர்கட்குத் துணை செய்து உயர்ந்த அக்குரன் போன்ற கைவண்மை உன்பால் உளது; நீயோ போரில் பகைவர் பீடழித்த முன்பன்; மாற்றலாகாதது எனப்படும் கூற்றையும் மாற்றவல்ல ஆற்றல் உனக்கு உண்டு. நீ சான்றோர்க்கு மெய்ம்மறை : வானுறையும் மகளிர் நலத்தால் நிகர்ப்பது குறித்துத் தம்மில் இகலும் பெருநலம் படைத்த நங்கைக்குக் கணவன் ; களிறு பூட்டிப் பகைப்புலத்தை உழும் அயில்வான் உழவன்; பாடினியைப் புரக்கும் வேந்தன். நின் முன்னோர் இவ்வுலகு முழுதும் ஆண்ட பெருமையுடையார்; அவர்களைப் போல நீயும் பெரும்புகழ் பெற்று வாழ்வாயாக[31]” என வாழ்த்தினார்.
சின்னட்குப் பின் நெடுஞ்சேரலாதன் அவர்க்குப் பொன்னும் பொருளும் நிரம்ப நல்கித் தானே காலின் ஏழடிப் பின் சென்று வழிவிட, கண்ணனார் தமது குமட்டூர்க்குச் சென்றார். அரசியற் சுற்றத்தாரும் அவர் செய்த தொண்டினைப் பாராட்டி அவரை மனம் குளிர்ந்து வாழ்த்தினர்.
குமட்டூர்க்குப் போந்த கண்ணனாரை ஏனைச் சான்றோர் கண்டு அளவளாவி இன்புற்றனர். உம்பற்காட்டு வேதியரும் தென்னாட்டுச் செல்வர்களும் அவரைச் சிறப்புடன் வரவேற்றனர். கண்ணனார் தம்முடைய நாட்டில் இனிது உறைவாராயினர்.
- ↑ K.P.P. Menon’s History of Kerala Vol. i.p. 15.
- ↑ அகம். 127.
- ↑ நற். 35. 395.
- ↑ சோழன்குள் முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடலுற்ற ஆவூர் மூலங்கிழார், “நீயே, பிறரோம்புறு மறமன்னெயில் ஓம்பாது கடந்தட்டு அவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடி பொலியக் கழல் தைஇய வல்லாளனை” (புறம் 40) என்பது காண்க.
- ↑ “செருமாண் பஞ்சவர்” - புறம். 58.
- ↑ சங்ககாலத்துக்கு முன்னர் வான நாடு கொண்கானத்திலும், பின்னர்க் கடுங்கோ நாடு, வள்ளுவ நாடு கொங்கு நாடுகளிலும் சேர்ந்து விட்டன.
- ↑ இப் பழையன்கோட்டை நாளடைவில் பளையன் கோட்டையாகிப் பாளையங்கோட்டை என மருவிற்று.
- ↑ Journal of the Bombay Branch of the Royal Asiatic Society: Vol. xi p. 283. L. Rice’s Mysore Vol. ip. 300
- ↑ Ep. Indica Vol xiii. p. 309.
- ↑ Rice Mysore Vol. i.p. 299, 300.
- ↑ Ep.Car. part1. Shikarpur Taluk No. 176.
- ↑ George M.Moracs; The Kadamba Kula. p.8.
- ↑ J.B.B.R.A.S. vol ix p.243.
- ↑ Bom.Gazet.Kanara, Part ii p.78.
- ↑ இப் பங்களரைச் சிலப்பதிகாரம் “கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர், பங்களர் கங்கர் பல்வேறு கட்டியர்” (25:156-7) என்று குறிப்பது ஈண்டுக் குறிக்கத் தகுவது. இது செய்யுளாகலின் வைப்புமுறை மாறியிருக்கிறது.
- ↑ Bom. Gazetteer, Kanara, Part ii. p. 78.
- ↑ பதிற். 11.
- ↑ பதிற். 12.
- ↑ “யோமிநாட்டுக் குமட்டூர்ப் பிறந்தான் காவுதி ஈதனுக்குச் சித்துப் போசில் இளையார் செய்த அதிட்டானம்” - சித்தன்னவாசல் கல்வெட்டுக்கள். Also vide Proceedings and transactions of the 3rd Oriental Conferance, Madras. p. 280 and 296.
- ↑ அகம். 127.
- ↑ பதிற். 15.
- ↑ பதிற். 15.
- ↑ பதிற். 13.
- ↑ ஷ 13.
- ↑ பதிற். 17.
- ↑ பதிற். 18.
- ↑ பதிற். 20.
- ↑ பதிற். 16
- ↑ Malabar Series: Wynad. p.5.
- ↑ Cera kings by K.G. Sesha Iyer p. 14.
- ↑ பதிற். 14.