சேரமன்னர் வரலாறு/4. பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்

விக்கிமூலம் இலிருந்து

4. பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்

குட்டநாட்டு வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்ட வேந்தர்களுள் மிகவும் பழையோனாக இவ்வுதியன் சேரலாதன் காணப்படு கின்றன. புறநானூறு இவனைப் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்று குறிக்கின்றது. சேரலாதன் என்பதைப் பொதுவாகக் கொண்டு, பெருஞ்சேரலாதன், நெடுஞ்சேர லாதன் என்று பெயர் தாங்கியோர் பலர் உள்ளனர். அது நோக்க, சேரலாதன் என்பது சேர வேந்தர் குடிப்பெயர் என்று தெளியக் காணப்படும். சேரல் ஆதன் என்பது சேர வேந்தனான ஆதன் என்று பொருள்படுகிறது. படவே, சேரலாதன் என்ற பெயருடையோர், சேரமான் ஆதன் என்பான் வழி வந்தவர் என்பது இனிது விளங்கும். இச் சேர மானும் உதியன் சேரலாதன் எனப்படுவதால் இவன் ஆதன் வழி வந்தவன் என்பது பெறப்படும் அந்த ஆதனைப்பற்றி இதுகாறும் ஒன்றும் தெரிந்திலது. ஆதன் அவினி யென்றொரு சேரமான் ஐங்குறு நூற்றிற் காணப்படுகின்றான். அந்த அவினியும் ஆதன் வழிவந் தோனாகத் தெரியினும், அவ்வாதன் சேரமானாகிய ஆதன் அல்லன் என்பது அவன் சேரல் ஆதன் எனப் படாமையால் விளங்குகிறது.

இச் சேரலாதன் பெருஞ்சோற்றுதியன் எனப் புறநானூற்றைத் தொகுத்த சான்றோரால் குறிக்கப் படுவன், மாமூலனார் முதலிய சங்கச் சான்றோர் உதியஞ்சேரல் என்றும் உதியன் என்றும் வழங்கு கின்றனர். இவன் காலத்தே குட்டநாட்டுக்குத் தெற்கில் வேளிர் பலர் வாழ்ந்தனர். அவர் வாழ்ந்த நாடு வேணாடு எனப்படும். மேனாட்டு யவனர் குறிப்புகள், கொல்லத்துக்குத் தென் பகுதியில் ஆய்வேள் வழியினர் ஆட்சி செய்தனர் என்றே குறிக்கின்றன. பிற்காலத்து வேள்விக்குடிச் செப்பேடும்[1] இந் நாட்டு வேளிரை ஆய்வேள் என்று குறிக்கின்றது. இப் பகுதியிலிருந்து இனிய அரசு புரிந்த திருவிதாங்கூர் வேந்தர்கள் தம்மை வேணாட்டடிகள் என்பதும் இக் கருத்தை வற்புறுத்தும். இவ் வேணாட்டின் தெற்கெல்லை தெக்கலை எனவும், வடக்கெல்லை வக்கலை எனவும் இப்போது வழங்குகின்றன. இக் கருத்தை அறியாமையால் சிலர்[2] வேணாடு என்பது வானவனாடு என்பதன் திரிபாகக் கூறுகின்றனர்.

இவ் உதியன் காலத்தில் வேணாட்டில் வெளியன் என்னும் வேளிர் தலைவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய மகள் வேண்மாள் என்பவளை உதியன் மணந்து கொண்டான்; இத் திருமணத்தின் பயனாக உதியஞ்சேரலுக்கு மக்கள் இருவர் தோன்றினர். முன்ன வனுக்கு நெடுஞ்சேரலாதன் என்றும் பின்னவனுக்குக் குட்டுவன் என்றும் பெயரிட்டான். இருவரும் அரசர்க்கு வேண்டப்படும் கலைப்லவும் இளமையிலேயே நன்கு பயின்று வந்தனர்.

முடிவேந்தர்க்கு மகட்கொடை வழங்கும் முறைமை தமிழகத்தே வேளிர்பால் இருந்தமையின், அவ் வேளிர்களைத் தங்கள் நாட்டை யடுத்துள்ள பகுதிகளில் இருந்து வருமாறு செய்வது பண்டை வேந்தர் மரபு. பாண்டி நாட்டை அடுத்துள்ள பறம்புநாட்டிலும், சோழ நாட்டை அடுத்துள்ள கொல்லி நாட்டிலும், தொண்டை நாட்டை அடுத்துள்ள மலையமான் நாட்டிலும், பிறவிடங்களிலும் வேளிர்கள் இருந்து வந்தமை சங்க இலக்கியம் பயில்வோர் நன்கறிந்தது இவ்வாறே சேரமன்னர்கள் தெற்கில் ஒரு வேணாடு கொண்டது போல் வடக்கில் வானவாசி நாட்டிடையே ஒரு வேணாட்டைக் கொண்டனர். அவ் வேணாடு இடைக்காலத்தே வேளகமாயிருந்து இப்போது பெல்காம் (Belgaum) என வழங்குகிறது. மேலும், மகட் கொடை வழங்கும் வேளிர் தங்கள் நாட்டை அடுத்திருந்து, தமிழ் வேந்தர்க்கு ஒரு சிறந்த அரணாகவும் விளங்கிற்று. “பெண்ணைக் கொடுத்தோமோ கண்ணைக் கொடுத்தோமோ” என்பது தமிழரிடை நிலவும் பழ மொழி. மகட்கொடை புரிந்த வேளிர் தம் மகளது வாழ்வு குறித்து அவர்களை மணந்து கொண்ட முடி வேந்தர்க்குத் தக்க பெருந்துணைவராய் இருந்தனர்.

மகட்கோள் முறையால் வேணாட்டவரோடும், வானவாசி, நாட்டவரோடும் வரம்பறுத்துக் கொண்ட வகையால், வானவாசிகளோடு முரண் கெடுத்து இனிய அரசுமுறை நடத்திவந்த சேரவேந்தர்க்குத் தாம் வாழ்ந்த நாட்டிடம் “சிறிது” என்ற உணர்வு தோன்றி அவர்கள் உள்ளத்தை அலைத்துக்கொண்டிருந்தது. உதியஞ்சேரல் காலத்தில் தென்பாண்டி நாட்டையாண்ட வேந்தர் செவ்விய அரசுபுரியும் திறமிலராக இருந்தனர். வேணாட்டு வேளிர்கள் தனக்குரியராய் இருந்தமையின், அவர் நாட்டுக்குத் தெற்கிலுள்ள தென்பாண்டி நாட்டைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற வேட்கை சேரமானுக்கு உண்டாயிற்று. அதனை நிறைவேற்றிக் கோடற்குரிய செவ்வி தோன்றியதும் உதியஞ்சேரல் தென்குமரியைச் சூழ்ந்திருந்த தென்பாண்டி நாட்டை வென்று தென்கடற் கொடியைத் தன்னாட்டுக்கு எல்லையாகக் கொண்டான். அந் நாட்டுக் கீழ் கடற்கரையும் சேரர்க்குரிய தாயிற்று. இதனால் சான்றோர் இவனை, “நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்[3]” என்று பாராட்டினர். இச் செய்தியை நினைவிற் கொண்டே பின் பொருகால் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடப் புக்குந்த கபிலர், “இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, ஒடுங்காவுள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதன்[4]” என்று பாடினர். இதனால் உதியனது புகழ் தமிழகம் முழுவதும் பரவிற்று. பல இடங்களில் ஊர்கள் நிறுவப் பெற்றன. நாட்டில் செல்வப் பெருக்கும் நல்வாழ்வும் சிறந்தன. இச் சிறப்புப் பற்றி நாட்டில் உதியம் பேருர், உதியஞ்சேரி என்ற பெயருடைய ஊர்கள் உண்டாயின. அவற்றுட் சில இன்றும் நின்று உதியஞ் சேரலின் உயிர்ப் புகழை நினைப்பித்துக் கொண்டிருக்கின்றன.

பண்டைத் தமிழ் வேந்தர் முத்தமிழையும் வளர்ப்பது தமது கடனாகக் கொண்டவர். அம் மூன்றும் இயல், இசை, கூத்து என்பன. கூத்து கூத்தர்பாலும், இசை, பாணர் பொருநர் முதலியோர் பாலும், இயல் புலவர் பாலும் வளர்ந்தன. இவற்றால் நாட்டு மக்களுடைய உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றும் பண்பட்டன. அதனால் கூத்தர்க்கு வேண்டுவன நல்கிக் கூத்தையும், பாணர்க்குக் கொடை வழங்கி இசையையும், புலவர்க்குப் பரிசில் கொடுத்து இயலையும் வளர்த்தனர். இதனை ஏனைச் சோழபாண்டியர் செய்தது போலவே சேரமானாகிய உதியஞ் சேரலும் செய்தான்; ஆயினும், போர்த்துறையில் மிக்க ஈடுபாடுடையனாதலால், இசை வாணரை வரவேற்றுப் போர்மறவரிடையே இனிய குழலிசையை இசைக்குமாறு புதியதோர் ஏற்பாட் டினைச் செய்தான். மறவரது மறப்பண்பையும், இசை, தனது நலத்தால் மாற்றிவிடும் என்பது உணர்ந்து, அதனால் மறம் வாடாத நிலையுண்டதால் வேண்டி உதியன் இச் செயலைச் செய்தான் இதனை நுணுகிக் கண்ட இளங்கீரனார் என்னும் சான்றோர், “உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பில், இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும், ஆம்பலங் குழல்”[5] என எடுத்து ஓதுகின்றார்.

உதியனது சேரநாடு கிழக்கில் கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. அப் பகுதியில் குழுமூர் என்பது ஓரூர்; இப்போது உடுமலைப்பேட்டை தாலூகாவில் அது குழுமம் என்ற பெயருடன் இருக்கிறது. ஒருகால் அப் பகுதியில் கடும் போர் உடற்றி வென்றி எய்திய உதியஞ் சேரல் தன்னோடு போர்க்களம் புகுந்து பகைவரொடு போருடற்றித் துறக்கம் பெற்ற சான்றோர் பொருட்டுப் பெருஞ்சோற்று விழாவொன்றைச் செய்தான்.[6] இதனைப் “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை[7] என்று தொல்காப்பியர் கூறுவதனால், இது தமிழ் மக்களிடையே தொன்றுதொட்டு வரும் மரபு என்பது தெளியப்படும். பாரதப் போர் நிகழ்ந்த காலத்தே சேரநாட்டு வேந்தரும் அதன் கட் கலந்து கொண்டனர். அதற்கு வியாசர் எழுதிய பாரதமே சான்று பகருகிறது. அப் போர் முடிவில் பாண்டவர்களையும் எஞ்சி நின்ற கெளரவர்களையும் ஒருங்கு கூட்டி அரும் போர் செய்து துறக்கம் எய்தியோர்க்காகப் பெருஞ்சோற்று விழா செய்தல் வேண்டும் என அப் போர்க்குச் சென்றிருந்த சேரவேந்தன் வற்புறுத்திப் “பெருஞ்சோற்று நிலை” யொன்றை நடத்தினான். அவன் வழிவந்தோனாதலால், உதியஞ்சேரல் குழுமூர்க்கண் பெருஞ்சோற்றுவிழா நிகழ்த்தியதை, வியந்து பாட வந்த முடிநாகனார் என்ற சான்றோர், இவனுடைய முன்னோன் செயலை இவன் மேலேற்றி,

“அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்[8]

என்று பாடினர் என்பர். இந்த முடிநாகனார், சேரநாட்டு ஊர்களுள் ஒன்றான முரஞ்சியூர் என்னும் ஊரினர்; இப்போது அது முரிஞ்யூர் என வழங்குகிறது; கொச்சி வேந்தர் குடும்பக் கிளைகளான மூத்ததாய் வழி , இளைய தாய்வழி முரிஞ்யூர்த் தாய்வழி, சாலியூர்த் தாய்வழி, பள்ளிவிருத்தித் தாய்வழி[9] எனப்படும் கிளைகளுள் முரிஞ்யூர்த் தாய்வழிக்குரிய ஊராக இருப்பது கருதத் தக்கது. இவ்வூரினரான முடிநாகனார்க்கு வேந்தர் குடிவரவு நன்கு தெரிந்திருத்தற்கு வாய்ப்புண்மையால், அவர் இதனை நினைத்து நம் உதியனை இவ்வாறு சிறப்பித்துப் பாடினார் என்பர்.

இப் பிண்ணடம் மேய பெருஞ் சோற்றுநிலை யென்னும் புறத்துறையை மேற்கொண்டு புலவர் பாடும் புகழுண்டாகச் செய்தோர் இவ் உதியஞ்சேரற்குப் பின் வந்தோருள் பிறர் எவரும் இல்லாமையால், பிற்காலச் சான்றோர் நம் உதியஞ்சேரலை, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்று சிறப்பித்துக் கூறுவாராயினர்.

புறநானூற்றுப் பழைய உரைகாரர்,[10] இம் முடிநாகனார் பாட்டின் உரையில் “பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோன்” இப்பெருஞ்சோற்றுதியற்கு முன்னோன் என்றும், முன்னோன் செய்கை இவ்வுதியஞ்சேரல்மேல் ஏற்றிக் கூறப்படுகிறதென்றும் கூறாமையால், இதனைக் கண்டோர், இச்சேரலாதன் பாரத காலத்தவன் என்றும், பாரத வீரர்கட்குப் பெருஞ்சோறு அளித்தவன் இவனே என்றும், இவனது இச்செயலைப் பாராட்டிப் பாடும் இம்முடிநாகனாரும் பாரதகாலத்தவர் என்றும் கருதி உரைப்பாராயினர். இச்சான்றோரது பெயர் தலைச்சங்கப் நிரலுட் காணப் படுவதால், தலைச்சங்க காலம் பாரத காலத்தோடு ஒப்புநோக்கும் தொன்மையுடையது என்பது பற்றி, பெருஞ்சோற்றுதியனைப் பாரதகாலத்தவன் என்று துணிதற்கு ஏற்ற வாய்ப்பு உண்டாவதாயிற்று இமய வரம்பன் தந்தையாகிய (நாம் மேற்கொண்டுரைக்கும்) உதியஞ்சேரல் பாரதகாலத்தவனாதற்கு இன்யின்மையால், பெருஞ்சோற்றுதியன் வேறு, இமயவரம்பன் தந்தையான உதியஞ்சேரல் வேறு[11] என்றும், “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை , முதியர்ப் பேணிய உதியஞ்சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை[12]“ என மாமூலனார் கூறுவது பாரதப்போரில் நிகழ்ந்தது என்றும் திரு.மு. இராகவையங்கார் கூறுவர்.

பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனே பாரதகாலத் தவன் என்னும் கூற்றை மேற்கொண்டு ஆராயலுற்ற அறிஞர் வேறு கூறுவர்: “கோதுமை உண்ணும் கூட்டத் தவரான பாண்டவ கெளரவர்கட்கு நெற்சோறுண்டு தென்னாட்டுப்பகுதிகள் ஒன்றில் வாழும் வேந்த னொருவன் சோறு கொடுத்தான் என்பது சிறிதும் ஒவ்வாவுரை; கெளரவர் இறந்தது குறித்துச் செய்த விழாவில் பேரெண்ணினரான மக்கட்கு இவ்வுதியன் பெருஞ்சோறளித்தான் என்று கொள்வதே பொருத்த மானது; இவ்விழா, பாரத வீரர்கட்குச் சிரார்த்தமாகவோ பாரதக் கதையை நடித்த நாடகத்தின் இறுதி விழாவாகவோ இருத்தல் வேண்டும்.

“சேரநாடு நெடுங்காலமாகக் கதகளி யென்னும் கூத்துக்குப் பெயர்போனது; பாட்டும் உரையுமின்றி அவிநயத்தால் உள்ளக்கருத்தை யுணர்த்துவது இதன் இயல்பு; இத்தகைய கதகளி யொன்றின் இறுதி விழாவாக இப்பெருஞ்சோறளிக்கப்பட்டதாம். இது போலும் கூத்துகள் தமிழ் நாட்டில் நடைபெறுவது வழக்கம்; செயற்கரும் செயல் செய்த வீரர் வரலாறுகளை நடித்துக் காட்டும் இக்கூத்துவகை தமிழ்நாட்டின் தொன்மை வழக்காதலின் இவற்றைப் பட்டவர்குறி என்றும் கூறுவ துண்டு. இதனைக் கம்ப சேவை என்றும், கம்பக்கூத் தென்றும், இக் கூத்தாடுபவரைக் கம்பஞ்சேய்மாக்கள் என்றும் கூறுவர். அக்கம்ப சேவையிற் கலந்தாடும் உழவர்கட்கு, உடையோர் பெருஞ்சோறளித்துப் பெருமை செய்வர்.

“பண்டைத் தமிழ் வேந்தர்களின் புகழ்வினை மாண்புகளை வாய்த்தவிடத்து உவமமாகவும் பொரு ளாகவும் பாடிய நல்லிசைச் சான்றோருள், இளங் கீரனார் பாட்டும்[13] மாமூலனார் பாட்டும்[14] இச்சேரலாதனுடைய போர் வன்மையையும் கொடைச் சிறப்பையும் உணர்த்தி நிற்கின்றன. இத்தகைய செம்மல் பாரதப் போரில் குருட்சேத்திரத்தில் பாரத வீரர்கட்குச் சோறு போடும் பணியில் தலைமை தாங்கினான் என்பது உண்மைக்குப் பொருத்தமாக இல்லை” என்பது அவர்கள் உரை[15].

வேறு சிலர், இக்கருத்தே உடையராயினும், உதியஞ்சேரலாதன் தன்னுடைய முன்னோருள் சிலர் பாரதப் போரில் இறந்தாராக, அவர்கட்குச் செய்த ஆண்டு விழாவில் இப்பெருஞ்சோற்றை நல்கி யிருக்க வேண்டும் என[16] உரைக்கின்றனர்.

பெருஞ்சோற்றுதியன் வரலாற்றை முடிக்குமுன் இவ்வுரைகளைப் பற்றிச் சில கூறுவது கடனாகின்றது. “பெருஞ்சோறு” என்பதற்குச் சிலர் நெற்சோறு என்று பொருள் எனக் கருதிக் கொண்டு, பாண்டவ கெளரவர்கள் கோதுமை, உண்பர் என்றும், சேரமான் நெற்சோறு கொடுத்தான் என்றும் உரைக்கின்றனர். பெருஞ்சோறு என்பது நெற்சோறாகத்தான் இருக்க வேண்டும் என்பதன்று; வரகுச் சோறு, கம்பஞ்சோறு, தினைச்சோறு, கோதுமைச் சோறு என வழங்குவ துண்மையின் பெருஞ்சோறு என்றது ஈண்டுப் பேருணவு என்னும் பொருளதாம் என அறிதல் வேண்டும்.

இனி, அவர்கள் கூறுமாறு பாண்டவ கெளரவர் செய்து கொண்ட போரைத் “தென்னாட்டில் ஒரு மூலையில் வாழும் ஒரு தமிழ் வேந்தன் பாராட்டி, அப்போரில் இறந்தோர் பொருட்டுப் பெருஞ்சோற்று விழாவைத் தன்னாட்டில் செய்தற்கு ஒரு தொடர்பும் இல்லை; அந்நாளில் வடவாரியர்க்கும் தென் தமிழர்க்கும் சிறந்த நட்புரிமை இருந்ததாக எண்ணு தற்கும் இடமில்லை ; வடவாரியர் பிணங்கியதும் அவரைத் தென்னாட்டுத் தமிழர் “அலறத்தாக்கி[17]” வென்றதுமே சங்க இலக்கியங்களுள் பேசப்படுகின்றன. “பேரிசை மரபின் ஆரியர் வணக்கி[18]” “ஆரிய வண்ணலை வீட்டி[19]” “ஆரியவரசர் கடும்பகை மாக்களைக் கொன்று[20]” என்றெல்லாம் சங்கநூல்கள் கூறுவதைக் காணும் கின்றோம். அதுவே அவர் பொருட்டுச் சேரலாதன் விழாச் செய்திருக்கலாம் என அவர்கள் கூறுவது பொருந்தாது என்பது தெளிவாகிறது.

இனி, தென்னாட்டு ஊர்களில் பாரதம் படிப்பதும்[21] குறித்துத் தென்னாட்டுச் செல்வர்கள் பாரத விருத்தியென[22] நிவந்தங்கள் விடுவதும் இடைக்காலத்தும் பிற்காலத்தும் நடந்தன. சங்ககாலத்தே இந்நிகழ்ச்சிகள் நடந்தன என்று கொள்வதற்குச் சங்க நூல்களில் ஆதரவு சிறிதும் இல்லை.

இனி, சாக்கைக் கூத்து வகையில் அவிநயக் கூத்தின் விளைவாக நிலவும் கதகளி என்னும் கூத்தில் இறுதி விழாவாக இப் பெருஞ்சோறு அளிக்கப்பட்டது என்ற கருத்துக் கதகளியின் வரலாறு நோக்காது எழுந்ததாகும். சங்ககாலச் சேரவரசு மறைந்தபின், வடநாட்டார் அதனுட் புகுந்து அதனைக் கேரள நாடாக மாற்றிய போது ஆங்காங்குத் தோன்றிய சிற்றரசர்களுள் கொட்டாரக்கரைச் சிற்றரசரொருவர் இக் கதகளிக் கூத்தை முதற்கண் ஏற்படுத்தினார்[23]; இச் சிற்றரசர் பெருஞ்சோற்றுதியனுக்குப் பன்னூறாண்டு பிற்பட்டவர்; பிற்பட்ட காலத்துத் தோன்றிய ஒருவகைக் கூத்தைப் பெருஞ்சோற்றுதியன் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறுவது ஆராய்ச்சி நெறிக்கு அறமாக இல்லை.

பிற்காலத்தில் தோன்றிய பாரதக் கூத்தின் அடியாகத் தோன்றியவை கம்ப சேவை, கம்பக் கூத்து முதலியனவாதலால் இவற்றைக் காட்டிப் பெருஞ் சோற்றுதியன் பெருஞ்சோறளித்த நிகழ்ச்சியை மறுப்பது பொருத்தமாக இல்லை.

இத்துணையும் கூறியதனால், பெருஞ்சோற் றுதியன் கொங்கு நாட்டில் தான் பெற்ற வெற்றி குறித்துச் செய்த விழாவில் மேற்கொண்டு மகிழ்ந்து ஆற்றிய பெருஞ்சோற்றுநிலை என்னும் புறத்துறைச் செயல், அவனுக்கே சிறப்பாய் அமைந்தமையின், அவன் பெருஞ்சோற்றுதியன் எனச் சிறப்பிக்கப் பெற்றான் என்பதும், அதனைப் பாராட்ட வந்த முடிநாகனார் ஒப்புமை பற்றி முன்னோன் ஒருவன் செயலை இவன்மேல் ஏற்றிக் கூறினார் என்பதும் தெளியப்படும்.

பெருஞ்சோற்றுதியன் வேறு, இமயவரம்பன் தந்தையான உதியஞ்சேரல் வேறு என்றதற்குக் காரணம் உண்டு. இமயவரம்பன் தந்தையை, “மன்னிய பெரும் புகழ் மறுவில் வாய்மொழி, இன்னிசை முரசின் உதியஞ் சேரல் என்று பதிற்றுப்பத்தின் இரண்டாம் பதிகம் - கூறுகிறதேயன்றி, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்று கூறவில்லை. பழந்தமிழ் வேந்தரின் வரலாறுகளை ஆங்காங்குப் பெய்து கூறும் இயல்பினரான மாமூலனார் பாட்டு, “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை[24]” என்று பொதுப்படக் கூறுவதனால், பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்த குறிப்பு மாமூலனார்க்கு இல்லையென்பது விளங்குகிறது.

“இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப”, தென் பாண்டிக் குமரிப்பகுதியையும் கொங்கு நாட்டுப் பகுதியையும் வென்று “நாடுகண்[25] அகற்றிய செயலால் பெரும்புகழ் பெற்ற குறிப்பை “மன்னிய பெரும்புகழ்” என்று பதிகம் கூறிற்று. முடிநாகனாரும், “நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின், குடகடற் குளிக்கும் யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந” என்பதனால் நாடு கண்ணகற்றிய திறமே கூறினாராயிற்று. இவ்வாறே, போர்க்களத்தில் இயவரைக் கொண்டு இவ்வாறே, போர்க்களத்தில் இயவரைக் கொண்டு ஆம் பலங்குழலை இயம்புமாறு செய்தான் உதியஞ்சேரல் என

இளங்கீரனார் கூறிய குறிப்பே “இன்னிசை முரசின் உதியஞ்சேரல்” என்ற பதிகக் கூற்றிலும் காணப்படுகிறது. இதனால், இமயவரம்பன் தந்தையான உதியஞ் சேரல் வேறு, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் வேறு என்பது காணப்படும்.

கொங்கு நாட்டிலும் தென்பாட்டி நாட்டிலும் உதியஞ்சேரல் செய்த போர்ச்செயல்களையும், அக் காலத்தே தனக்குத் தீங்கு செய்ய முயன்ற பகைவர், பின்பு புகலடைந்தபோது அவர்கள் பகைத்துச் செய்த வற்றை நினையாது பொறை மேற்கொண்டு ஒழுகியதும், தன்னை வெல்வது கருதிப் பகைவர் செய்த சூழ்ச்சிகளை . முன்னறிந்து, அவை அவர்கட்குப் பயன்படாவாறு, தான் முன்னே தகுவன சூழ்ந்து வெற்றி பெற்றதும், எதிர் நின்று பொருபவர் எத்தனை முயன்றும் கடைபோக நிற்கமாட்டாது கெடுமாறு மோதும் உதியனது வலியும், பொறுக்கலாகாத குற்றம் செய்தாரைத் தமது குற்றம் உணர்ந்து திருந்தி அமையுமளவாகத் தெறும் தெறலும், தன்பால் அன்புடையார்க்குத் தண்ணியனாய்ச் செய்யும் அருளும் முடிநாகனார் நேரே கண்டன. நிலவுலகத்து வாழும் மக்கட்கு இறைவனாய்த் திகழும் வேந்தன், உலகத்தின் கூறுகளான நிலம் ஐந்தன் இயல்புகளையும் உடையனாதல் வேண்டும்; மக்கள் உடல் நிலை பெறுதற்கு முதலிய ஐந்தும் ஆதாரமாவதுபோல, உயிர் வாழ்வுக்கு அரசனது ஐவகை இயல்பும் ஆதாரமாம் என்பது அரசியலின் அடிப்படை; இவ்வைந்தன் இயல்பும் உதியன் பால் காணப்பட்டமையின், “வேந்தே, நீ பொறையும் சூழ்ச்சியும் வலியுமாகிய எல்லாம் உடையனாய் இருக்கின்றாய்; நாட்டின் பரப்புச் சிறிது என்று கருதி மேலைக் கடற்கும் கீழைக்கடற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியை வென்று கொண்டாய்; அதனால் நாளும் ஞாயிறு நின் கடலிலே தோன்றி நின் கடலிலே மறைகிறது; நாடு பரப்புவதிலே கருத்தைச் செலுத்தும் வேந்தன், பரப்புமிகுதற்கேற்ப நாட்டின் வருவாயையும் நாடோறும் பெருகச் செய்தல் அரசியற்கு இன்றியமையாது என்ற கருத்தையும் நீ மறந்தவனில்லை என்பது நன்கு தெரிகிறது” என்று பாராட்டிக் கூறினார்.

தெற்கிலும் கிழக்கிலும் நாடு கண்ணகற்றியும் வருவாய் பெருக்கியும் உதியனது அரசியல் இயங்குவது கானும் வானவாசிகள், முன்னைச்சேரர் வரையறுத்த வரம்பு கடவாது அஞ்சியே ஒழுகினர்; வரம்பறுத்த வேந்தனது பார்வை வரம்பின் மேல் இருப்பது வானவாசிகட்குத் தெரிந்தவண்ணம் இருக்குமாறு உதியன் காவல் செய்தொழுகியது கண்டு முடிநாகனார் பெருவியப்புக் கொண்டார்; “வானவரம்பனை, நீயோ பெரும்” என்று பாராட்டினார்.

மேலும், அவர், “வானவரம்பரான பண்டையோர் போல இன்றும் நீ வானவரம்பனாய் விளங்குகின்றாய்; அதனால், பண்டு பாரதப் போரில் பெருஞ்சோற்றுநிலை என்னும் புறத்துறை முற்றிய நின் முன்னோரைப் போல இன்றும் அப் புறத்துறைச் செயலைச் செய்கின்றாய். இவ்வாறு சேரவரசு மேற்கொண்டு செய்தற்குரிய கடன்களைச் செவ்வனம் ஆற்றி விளங்குவதால், இனிக்கும் பால் இனிமை திரிந்து புளிக்குமாயினும், ஒளி திகழும் பகற்போது ஒளி திரிந்து இருளுமாயினும், நெறி நிற்கும் நான்மறைகள் நெறி திரியுமாயினும் நின்பால் அன்புடைய நின் சுற்றத்தாரோடு அன்புதிரியாது, புகழ்மிகுந்து, அருங்கடன் இறுக்கும் அந்தணர் உறையும் வடஇமயமும் தென் பொதியிலும் போல நிலைபெறு வாயாக” என்று வாழ்த்தினார்.

இதனால் மகிழ்ச்சி மிகுந்த உதியஞ்சேரல் முடிநாகனார்க்குப் பெருஞ்சிறப்புச் செய்தான். அவரும் ஏனைப் பரிசிலரும் பெருவளம் பெற்று இன்புற்றனர். முடிநாகனாரது முரஞ்சியூர் அவர்க்கே உரியதாயிற்று. அதுவே இப்போது முரிஞ்யூர் என மருவிநிலவுவதுடன் அது கொச்சி வேந்தர் குடியின்கண் தொடர் புற்றிருப்பதும் குறிக்கொண்டு அறியத்தக்கதொன்று.

இறுதியாக ஒன்று கூறுவதும்; இளங்கீரனார் என்னும் சான்றோர், ஒருகால் பெருஞ்சோற்றுதியானது போர்க்களத்துக்குச் சென்றார். அங்கே போர் முரசின் முழக்கத்தூடே ஆம்பங்குழலை இயவர் இசைத்தனர். கன்னெஞ்சையும் நீராய் உருக்கும் அக் குழலிசையால் போர் மறவரது நெஞ்சம் சிறிதும் பேதுறாது மறத்தீக் கொழுந்துவிட்டு எரிவது கண்டார். இனிய இசைக்கு உருகாத அளவில் மறவர் நெஞ்சம் மாறியிருந்தமையின், அம் மாற்றக் குறிப்பினைத் தக்கோரைக் கேட்டு உணர்ந்தார்.

முன்பு ஒருகால் சேரவேந்தர் வானவாசி நாட்டவரோடு போர் செய்யவேண்டியவராயினர். அவர்கள் சேரர்க்குரிய கொண்கானம் கடந்து குட நாட்டின் எல்லையிற் புகுந்து குறும்பு செய்து அலைத்தனர். அவர்களை வெருட்டுவது குறித்துச் சேரர்படை சென்று அவர்களைத் துரத்திற்று. கொண் கான நாட்டில் ஒருகால் அவர்கள் பாசறை அமைத்திருக்கையில், பகைவர் இன்னிசை இயவராய் வந்து குழலூதி மகிழ்வித்தனர். அக் குழலிசையில் சேரர்படையின் தலைவர் ஈடுபட்டு அருள்மேவிய உள்ளத்தராயினர். அதன் பயனாகச் சேரர் படை வானவாசிகட்குத் தோற்றோடிவதாயிற்று. அதனை அறிந்திருந்தமையின், உதியஞ்சேரல் போர்க்களத்தின் கண் இயவரைக் கொண்டு இம்மென இசைக்கும் ஆம்பலங்குழலை இசைக்கச் செய்து மறவர் மறம் இறைபோகாவண்ணம் அரண் செய்தான்.

இதனைக் கேட்டறிந்த இளங்கீரனார், ஒருகால் தலைமகன் ஒருவன் தன் இனிய காதலியைப் பிரிந்து பொருள் கருதிப் பிரிந்து செல்வது பொருளாகப் பாட வேண்டியவராயினார். அத் தலைவன் ஒரு சுரத்திடையே சென்றுகொண்டிருக்கையில் தன் காதலியை நினைத்துக் கொண்டான். அவன் மனக் கண்ணில் காதலியின் திருமுகம் தோன்றியது. அவன் தன் பிரிவை உணர்த்தக் கேட்டதும், அவள் ஆற்றாமல் கண் கலுழ்ந்ததும், அதனை அவனுக்குத் தெரியாவாறு தன் கூந்தலால் அவள் மறைத்துக் கொண்டதும், அவளை அறியாமலே மெல்லிய அழுகைக்குரல் அவள் பால் தோன்றியதும் நினைவுக்கு வந்தன. அவற்றை அச் சான்றோர் அழகிய பாட்டாக எழுதினார். எழுதுங்கால், அவளுடைய ஏங்கு குரலை எடுத்துக்காட்ட நினைத்த அவருக்கு, உதியன் செய்த போர்க்களத்தே இயவர் எழுப்பும் ஆம்பற் குழலிசை உயர்ந்த உவமையாகத் தோன்றிற்று. “நெய்தல் உண்கண் பைதல் கூரப், பின்னிருங் கூந்தலின் மறையினள் பெரிதழிந்து, உதியனத் மண்டிய ஒலிதலை ஞாட்பின், இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும், ஆம்பலங் குழலின் ஏங்கிக் கலங்கஞர் உறுவோள்[26]” என்று பாடின. காதலியின் ஏக்கம் பொருள் மேற்சென்ற அக்காளையது உள்ளத்தை மாற்ற மாட்டாது ஒழிந்தது போல, இவரது ஆம்பற் குழலிசை உதியனுடைய மறவருள்ளத்தை மாற்றமாட்டா தொழிந்தது என்பது குறிப்பு.

செங்குட்டுவன் வடநாடு சென்றபோது, நீலகிரியில் தங்கியிருக்கையில் கொங்கணக் கூத்தரும் பிறரும் போந்து பாடிப் பரிசில் பெற்றதும்[27], ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வடநாட்டிற் பொருடற்றச் சென்றபோது கொண்கானநாட்டு விறலியர் போந்து இசையும் கூத்தும் நல்கக் காக்கைபாடினியார் போந்து அவன் உள்ளத்தை வினைமேற் செலுத்தியதும்[28], கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மேலைக் கடற்கரைக்குப் போந்த போர்ச்சுகீசியர் கோவா நாட்டினின்றும் கன்னட நாட்டினின்றும் வரும் அழகிய ஆடல் மகளிரின் கூட்டம் நயந்து அஞ்சு தீவுக்குப் போந்து தங்கியதும்[29] இக் கருத்துக்குமிக்க ஆதரவு தருகின்றன. இவ்வியல்பு இன்றும் அப்பகுதியில் மறையாமல் இருந்து வருகிறது. வானவாற் (Honawar)றிலிருந்து தோகைக்கா (Joag) என்ற ஊர்க்குச் செல்லும் வழியில் கொங்கணர் மனைகளில் தங்கின் இத்தகைய இசையின்பத்தை வழிச்செல்லும் நாம் பெறுகின்றோம்.


  1. EP. Indi. vol. xvii. No. 16. p. 303.
  2. k. P. P. Menon’s History of kerala. Vol ii.
  3. அகம் 65.
  4. புறம் 8.
  5. நற். 113.
  6. அகம். 168; 235.
  7. தொல். புறம். 8.
  8. புறம் 2.
  9. K.P.P. Menon’s History of Kerala Vol.i. p.480.
  10. புறம். 2.
  11. சேரவேந்தர் செய்யுட்கோவை. பக். ix.
  12. அகம். 235.
  13. நற். 113.
  14. அகம். 65.
  15. P.T. S. Ayengar’s History of the Tamils. p. 492-4.
  16. Chera kings of Sangam Period by K.G. Sesha Iyer p.7.
  17. அகம்.396.
  18. பதிற். ii.பதி.
  19. ஷை (மேலது) V. பதி.
  20. சிலப். கால்கோள். 211.
  21. A.R. No. 540 of 1922.
  22. Annual Report of Mad. Epigraphy for 1910. p.96.
  23. K.P.P. Menon’s History of Kerala Vol. in. p. 525.
  24. அகம். 233.
  25. நாடுகண் அகற்றுதலாவது நாட்டின் பரப்பிடத்தை மிகுதிப்படுத்துவது.
  26. நற். 113.
  27. சிலப்.26.85-127.
  28. பதிற். 51.
  29. Bom. Gazet. Kanara Part ii. p. 253.