சேரமன்னர் வரலாறு/3. சேரர்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3. சேரர்கள்

சேர நாட்டில் வாழ்ந்த மக்கள் சேர நாட்டுச் செந்தமிழ் மக்களாவர். பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் வாழ்ந்த மக்களைத் தமிழர் என்பது மரபாதலின், அம் மரபின்படியே சேர நாட்டவர் செந்தமிழ் மக்களாகின்றனர், பாண்டி நாட்டுத் தமிழர்க்குப் பாண்டியரும், சோழ நாட்டுத் தமிழர்க்குச் சோழரும் வேந்தராயினது போலச் சேரநாட்டுத் தமிழ்மக்கட்குச் சேரர் வேந்தராவர். இந்நாட்டுக்குக் கிழக்கெல்லையாகச் சுவர்போல் தொடர்ந்து நிற்கும் மலை மேலைமலைத்தொடர். இது தெற்கே பொதியமலை முதல் வடக்கே தபதியாற்றங்கரை வரையில் நிற்கிறது. இந்நெடுமலைத்தொடர் வடவர்களால் சஃயாத்திரி யென்று பெயர் கூறப்படுகிறது; சஃயம் - தொடர்பு; அத்திரி - மலை. இத் தொடரைக் குடவரையெனவும், சேர நாட்டவரைக் குடவர் எனவும் பொதுவாகக் கூறுவது தமிழ்நாட்டார் வழக்கம். முதல் இராசராசனுடைய கல்வெட்டுகள் சேர நாட்டைக் குடமலை நாடு[1] எனக் கூறுவது காணலாம், சேக்கிழாரடிகள், “மாவீற்றிருந்த பெருஞ் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாடு” என்று, சேர மன்னர்களைப் “பாவீற்றிருந்த பல்புகழார்[2]” என்றும் பாராட்டிக் கூறுவர்.

இச் சேர மன்னர் மலைநாட்டில் வாழ்ந்தமையின் மலைகளிலும் மலைச்சரிவுகளிலும் மண்டியிருந்த பெருங் காடுகளில் வேட்டம் புரிவதையே தொடக் கத்தில் மேற்கொண்டிருந்தனர்; அதனால் இவர் களுடைய கொடியில் வில்லே பொறிக்கப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் பனை மரங்கள் காடுபோல் செறிந்திருந்தன; அதனால், அவர்கள் தமக்கு அடை யாள மாலையாகப் பனந்தோட்டால் மாலை தொடுத்து அணிந்து கொண்டனர். இன்றும் சேர நாட்டு வடபகுதிக் கடற்கரையில் பனைகள் மல்கியிருப்பது கண்கூடு. தொல்காப்பியனாரும் இச் சேரரது பனந்தோட்டு மாலையை அவர்கட்குச் சிறப்பாக எடுத்தோதுவர்.[3]

இச் சேர நாடு மேலைக் கடலைச் சார்ந்து கிடத்தலின்’ சேரர்கள் கடலிற் கலஞ் செலுத்துதலிலும் சிறந்திருந்தனர். கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே மேலையுலகத்து சால்டியா நாட்டுக்கு இந்நாட்டுத் தேக்கு மரங்கள் மரக்கலங்களில் கொண்டு போகப்பட்டன. பெட்ரோலியசு என்னும் மேனாட்டறிஞர் இந்நாட்டினின்றும் சென்ற ஆடை வகைகளை மிகவும் பாராட்டிப் பேசியிருக்கின்றார்; இந்நாட்டிலிருந்து மேலை நாடுகட்கு ஆண்டுதோறும் 4,86,679 பவுன் மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதியாயின என்று எழுதியுள்ளார். அந் நாளில் கடலகத்தே செல்லும் வணிகரின் கலங்களைத் தாக்கிக் கொள்ளை கொள்வதும், கடற்கரையில் வாழ்ந்த மக்கட்கு இன்னல் புரிவதும் தொழிலாகக் கொண்டு திரிந்த யாதர் (yats) கடம்பர் முதலாயினாரைக் கடலகத்தே எதிர்த்தழித்து மிக்க வென்றி எய்திய வகையால், இச் சேர மன்னர்கள் கடல் வாணிகம் செய்வார்க்கு நல்ல அரண் செய்து வாழ்ந்தனர். அதனால், அந் நாளில் சேர நாட்டுக் கலங்களைக் கண்டாலே பிறநாட்டுக் கலங்கள் கடலில் உரிமையுடன் இயங்குதற்கு அஞ்சின. “சினமிகு தானை வானவன் குடகடல், பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிறர் கலம் செல்கலாது[4]” எனச் சான்றோர் உரைப்பது ஈண்டு நினைவு கூரத் தகுவது.

இச் சேரமன்னர்கட்குச் சங்க நூல்கள் மிகப் பல சிறப்புப் பெயர்களை வழங்குகின்றன. ஒருகால் அவை குடிப்பெயரோ எனவும் பிறிதொருகால் இயற் பெயரோ எனவும் ஆராய்ச்சியாளர்க்குப் பெருமயக்கம் எய்தியதுண்டு. ஏனைச் சோழ பாண்டியர்களின் வரலாறு போல இவரது வரலாறு எளிதிற் காணவியலாமல் இருப்பதற்கு இந்நிலையும் ஓர் ஏதுவாகும். அப்பெயர்களுள், வான வரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ , பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை என்பன சிறப்புடையனவாம். சேரலர், சேரல், சேரமான் என்பன பொதுப்பெயர்.

“வென்றி நல்வேல் வான வரம்பன் [5]
“வான வரம்பனை நீயோ பெரும்[6]
“தேனிமிர் நறுந்தார் வானவன்[7]
“பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் [8]
“வெல்போர் வானவன் கொல்லிக் குடவரைகள் [9]
“வசையில் வெம்போர் வானவன் [10]
“சினமிகு தானை வானவன் [11]
“மாண்வினை நெடுந்தேர் வானவன் [12]
“வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் [13]

என வருவன வானவன், வானவரம்பன் என்ற பெயர்கள் பண்டை நாளைச் சான்றோர்களால் பெரிதும் விதந்து கூறப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.

இந்த வானவன் என்ற பெயர் பொருளாக ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், “இதுவரை வானவர் என்ற பெயரால் பண்டை இவ்வமிசம் தெய்வ சம்பந்தம் பெற்ற தென்பது மட்டில் தெளிவாகும்[14]” என்பர். வானவரென்ற பெயர் சீன நாட்டவர்க்கு இன்றும் வழங்கி வருவதால், சேரர், ஆதியில் சீன தேசத்திலிருந்து வந்தவர் எனத் திரு. கனகசபைப் பிள்ளையவர்கள் கூறுகின்றார். வானவரம்பன் என்பது வானவர் அன்பன் என்ற இரு சொற்களாலாகிய ஒரு தொடரென்றும், அது திரிந்து வானவரம்பன் என வழங்குவதாயிற்றென்றும், இது, “தேவானாம் பிரியா” என அசோக மன்னனுக்கு வழங்கும் சிறப்புப் போல்வதென்றும் சிலர் கருது கின்றனர். வானம் என்பது கடலுக்கொரு பெயரென்றும், அதனால் வானவரம்பன் என்றது கடலை எல்லையாக உடையவன் என்று பொருள்படும் என்றும் வேறு சிலர் கூறுவர். மற்றும் சிலர் வானமும் நிலமும் தொடும் இடத்தை எல்லையாக வுடையவன் வானவரம்பன் என்பர். பிற்கால மலையாள நாட்டு அறிஞர்கள் வானவரம்பன் என்பதைப் பாணவன்மன் எனத் திரித்துக் கொள்வர். இங்கே கூறிய பொருள்களுள் “தேவானாம் பிரியா” என்ற தொடர் “தடித்த முட்டாள்” என்னும் பொருள் படத் துறவிகளை வைதுரைக்கும் வைதிக மொழியுமாகலின்[15], வசை மொழியைச் சேரர் தமக்குச் சிறப்புப் பெயராகக் கொண்டனர் என்பது பொருந்தாது என்பர் கே.ஜி. சேஷையர் அவர்கள். ஏனையவற்றின் பொருந்தாமையை ஈண்டு விரிக்க வேண்டுவதில்லை. இனி, வானவன் என்பது வான மலையை யுடையவன் என்றும், வானவரம்பன் என்பது வானமலையை வரம்பாக வுடையவன் என்றும் நேரே பொருள்படுவது காணலாம்.

சேர நாட்டுக்கு வட பகுதியில் ஏழில் மலையைத் தன்கண் கொண்டிருந்த நாட்டைக் கொண்கான நாடு என்று தமிழ் மக்கள் வழங்கினர். ஏழில் மலையைச் சொல்லத் தெரியாத பிற மக்கள் அதனை எலிமலை யென்று வழங்கினதும், இன்றும் அவ்வாறே வழங்குவதும் அவர்கள் அந்த எலி நாட்டை வடமொழிப்படுத்து மூசிக நாடு என்று பெயர் கொண்டதும் முன்பே கூறப்பட்டன. அதற்கு வடக்கிலுள்ள நாட்டுக்கு வானவாசி நாடு என்பது பெயர். மேலைக் கடற்கரை நாடுகளை முறைப்படுத் துரைத்த வியாச பாரதம், “திராவிடர் கேரள: ப்ராச்யா மூசிகா வானவாசிகா:[16]” என்று கூறுவது போதிய சான்றாகும். ஏழில் மலையைச் சூழ்ந்த நாட்டுக்கு மூசிக நாடென்று பெயர் வழங்கினமை “மூஷிக வம்சம்” என்ற நூலால்[17] தெரிகிறது. இதனால், மூசிக நாடெனப்படும் கொண்கான நாட்டுக்கு வடக்கில் வானவாசி நாடு இருப்பது தெளிய விளங்குகிறது வானவாசி என்பது கல்வெட்டுகளில்[18] வானவாசி யென்றும் குறிக்கப்படுகிறது படவே, சேர நாட்டின் வடக்கில் அதனை யடுத்து எல்லையாக இருந்தது வானவாசி நாடாயிற்று.

வானவாசி நாட்டை கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு, முன்பிருந்தே ஆட்சிபுரிந்தவர் கடம்பர் எனப்படுவர். அவர்களது வான்வாசி நாட்டில் இப்போதுள்ள கோவா (Goa) பகுதியும் அடங்கியிருந்தது. கோவா என்பது கூபகம் என்ற பழம்பெயரின் திரிபு. அப் பகுதியில் கடம்பர்களுடைய கல்வெட்டுகள் இப்போதும் காணப்படுகின்றன. அந் நாட்டில் வானியாறு என்றோர் ஆறும் ஓடுகிறது. அது கிழக்கில் நிற்கும் மலைமுகட்டில் தோன்றி மேற்கே ஓடிச் சில கால்வாய்களாய்ப் பிரிந்து மேலைக் கடலில் சென்று சேர்கிறது. இப்போது வட கன்னடம் மாவட்டத்தில் மேலைக்கடற்கரையிலுள்ள ஹோனவார் (Honawar) என்னும் மூதூர் அந்த ஆற்றின் ஒருகால் கடலொடு கலக்குமிடத்தே இருக்கிறது. அந்தக் காலும் ஹோனவாறென்ற பெயர் கொண்டு நிலவுகிறது. அதனுடைய பழம் பெயர் வானவாறு என அங்கே வாழும் முகமதிய முதுவர்கள் கூறுகின்றனர். மலை முகட்டில் தோன்றிக் கடலோடு கலக்குங்காறும் அதன் பெயர் வானியாறே தான்; இப்போது அந்த ஆறு கடல் சேர்ந்த பகுதியில் பல கால்களாய்ப் பிரியுங்காறும் சாராவதியென்ற பெயர் கொண்டிருக்கிறது. ஜோக் கென்னும் ஊரருகே[19] இந்தச் சாராவதி 850 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து மேலைக் கடல் நோக்கி ஓடுகிறது. தோற்றமுதல் முடிவுவரை வானியாறாக இருந்தது இடையில் சேரவாறு என்ற பெயர் பெற்று, பின்னர் அது திரிந்து சாராவதியாய் விட்டது. திருவையாறு திருவாடி யென்றாகித் திருவாதியானது. காண்போர் சேரவாறு சாராவதியானது கண்டு வியப்பெய்தார்.

தெற்கே பொன்வானிபோல வடக்கில் இந்த வானியாறு இருப்பதை நோக்கின் பண்டை நாளில் சேரநாட்டுக்கு வடவெல்லையாக இந்த வானியாறு விளங்கிற்றென்பது இனிது விளங்கும். இதற்கு வடக்கில் வேளகமும் வடகிழக்கில் வானவாசி நாடும் இருந்தன. இதனை ஆண்ட கடம்பர்கள் சேர நாட்டிற்கு குறும்பு செய்து ஒழுகினமை சங்க இலக்கியங்களால் தெரிகிறது ஒருகால் அவர்கள் சேரர்க்குரிய கொண்கான நாட்டுட் புகுந்து குறும்பு செய்து அப் பகுதியைத் தமது வானவாசி நாட்டோடு சேர்த்துக்கொள்ள முயன்றார்கள். நாடோறும் அவர்களது குறும்பு பெருகக்கண்ட சேர வேந்தர் பெரும் படையுடன் சென்று கடம்பர்களைத் தாக்கி வென்று வானியாற்றின் வடக்கிற் சென்று ஒடுங்குமாறு செய்தநர். இவ் வகையால் கடம்பர்கள் மீள மீளப் போர் தொடுக்கா வண்ணம், சேரர் கடம்பரோடு ஒன்றுகூடி வானவாற்றை வரம்பு செய்து கொண்டனர். வானியாறு சேரருக்கு உரியதானமையின், அதுவே பின்பு சேரவாறாயிற்று; அச் சேரவாறே சாராவதியென் முன்பே கூறினோம். மேலை வானமா மலைத் தொடருக்கு உரிமையும், அதனைத் தன் நாட்டுக்கு எல்லையுமாகக் கொண்டமையின், சேர மன்னன் வானவரம்பனானான் என்பது உண்டு. சங்கத் தொகைநூல் பாடிய ஆசிரியர்கள் காலத்துக்குப் பல்லாண்டுகட்கு முன்னர் இது நிகழ்ந்து மருவின்மை யால், வானவன் என்றும் வானவரம்பன் என்றும் சேர மன்னர்களைத் தாம் பாடிய பாட்டுகளில் அவர்கள் சிறப்பித்துப் பாடினார்கள்.

சேர நாட்டை யாண்ட மன்னர்கள் தங்கள் நாட்டைக் குட்டநாடென்றும் குடநாடென்றும் பிரித்து ஒரு காலத்தே ஆட்சி நடத்தினர். வட பகுதியில் குட நாட்டின் பகுதியாய் வானவாசி நாட்டை அடுத்திருந்த கொண்கான நாட்டைச் சேரர் குடிக்குரிய நன்னன் மரபினர் ஆட்சி புரிந்தனர். கொண்கான நாட்டின் கிழக்கில் உள்ள புன்னாடும் அந் நன்னன் மரபினர் ஆட்சியிலேயே இருந்தது. புன்னாட்டின் தெற்கில் - குட நாட்டுக்குக் கிழக்கில் இருந்த நாடு சேரர் குடியில் தோன்றிய வேளிர் தலைவரான அதியமான்கள் ஆட்சியில் இருந்தது; அதற்குப் பின்னர்த் தகடூர் நாடு எனப் பெயர் வழங்கலாயிற்று.

தெற்கே கோட்டாற்றுக்கரை கொல்லம் என்ற பகுதியை எல்லையாகக் கொண்ட குட்ட நாட்டில் குட்டுவரும், குடநாட்டில் குடக்கோக்களும் இருந்து சேர வரசைச் சிறப்பித்தனர். குட்ட நாட்டுக்கு வஞ்சி நகரும், குடநாட்டுக்குத் தொண்டியும் சிறந்த தலைநகரங்களாகும். ஒரு குடியில் தோன்றிய இருவருள் முன்னவன் குட்ட நாட்டிலும் பின்னவன் குட நாட்டிலும் இருந்து அரசியற்றுவன். குட்ட நாட்டு வேந்தன் குட்டுவர் தலை வனாகவும், குட நாட்டு வேந்தன் குடவர் கோவாகவும் விளங்குவர்.

சில பல ஆண்டுகட்குப் பின்னர் அரசிளங் சிறுவர்கட்கு ஆட்சி நல்குதல் வேண்டிக் குட்ட நாட்டின் வட பகுதியையும் குடநாட்டின் தென் பகுதியையும் ஒன்றாய் இணைத்துப் பொறை நாடு எனத் தொகுத்துத் தொண்டியை அதற்குத் தலைநகராக்கினர். இவ்வாறே கொச்சி நாட்டின் வடகீழ்ப் பகுதி பூழிநாடு எனப் பிரிந்து இயலுவதாயிற்று. இந் நாடுகளில் இருந்து ஆட்சி புரிவோருள் முன்னோன் எவனோ அவனே முடிசூடும் உரிமையுடைய சேரமானாவன். பிற்காலத்தே பொறை நாட்டின் கிழக்கில் கொங்கு நாட்டை யடுத்த பகுதியைக் கடுங்கோ நாடு எனப் பிரிந்து ஆட்சி செய்தனர். அவ் வேந்தர் கடுங்கோ எனப்பட்டனர். இவ்வாற்றால் சேரநாடு, பண்டை நாளில், குட்டநாடு, பொறைநாடு, குடநாடு, கடுங்கோ நாடு எனப் பிரிந்திருந்தமை பெறப்படுகிறது. வேந்தரும் அது பற்றியே, “பல்குட்டுவர் வெல்கோவே[20]” “தெறலருந்தானைப் பொறையன்[21]” “குடக்கோ நெடுஞ்சேரலாதன், பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று பெயர் கூறப்படுவராயினர். இவ்வாறு வேறு வேறாகக் கூறப் படினும், சேரமான் ஒருவனே ஒருகால் சேரல் என்றும், வானவன் என்றும், குட்டுவன் என்றும், இரும்பொறை என்றும் கூறப்படுவன். இதனால் இவர்கள் அனைவரும் சேரர் குடிக்குரியோர் என்பது துணிபாம். “குடபுலம் காவலர் மருமான், ஒன்னார் வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த, எழவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்[22]” என்றாற்போல் வருவன பல உண்டு. இவற்றைக் கொண்டு இவர்கள் வேறு வேறு குடியினர் என மயங்கிவிடுதலாகாது. அது பின்னர் வரும் வரலாற்றால் இனிது விளங்கும்.

பண்டை நாளைத் தமிழ் வேந்தர் அரசெய்திய முறை ஒரு தனிச் சிறப்பு உடையதாகும். ஒரு வேந்தனுக்கு மூவர் புதல்வர்களெனின் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக முடிசூடிக் கொள்வர். முன்னவன் முடிவேந்தனாக ஏனை இருவரும் நாட்டின் இருவேறு பகுதிகளில் சிற்றரசராய் முடிவேந்தற்குத் துணைபுரிவர். இம் மூவரும் முடிசூடியிருந்த பின்பே, இவர் மக்களுள் மூத்தவன் எவனோ அவன் முடிவேந்தனாவன். இம் முறை இடைக்காலச் சோழ வேந்தரிடத்தும் இருந்திருக்கிறது. முதற் பராந்தகனுக்கு இராசாதித்தன், கண்டராதித்தன் அரிஞ்சயன், உத்தமசீலி என மக்கள் நால்வர் உண்டு. அவர்களுள் இராசாதித்தன், பராந்தகன் இருக்கும் போதே இறந்தான். அதனால் பராந்தகனுக்குப் பின் கண்டராதித்தன் சோழவேந்தனாய் முடிசூடிக் கொண்டான். அவனுக்குப்பின் அரிஞ்சயன் முடிவேந்தனானான். அவனுக்கு முன்பே உத்தமசீலி மறைந்து போனான். கண்டராதித்தனுக்கு உத்தம சோழன் என்றொரு மகனும் அரிஞ்சயனுக்குச் சுந்தரசோழன் என்றொரு மகனும் இருந்தனர். அவ்விருவருள், சுந்தரசோழன் மூத்தவனாதலால் முதலில் அவனும், அவற்குப் பின் உத்தம சோழனும் முடிவேந்தராயினர். உத்தம சோழனுக்குப்பின் அவன் மக்களுள் மூத்தவனான ஆதித்த கரிகாலன் தந்தையிருக்கும் போதே இறந்தமையின், இளையோனான முதல் இராசராசன் சோழர் முடிவேந்தனாய்த் திகழ்ந்தான். இதே முறைதான் பண்டை நாளைத் தமிழ்வேந்தர் அரசுரிமை முறையாக இருந்தது. ஆகவே, தந்தைக்குப்பின் அவனுடைய மூத்த மகன்; அவற்குப்பின் அவனுடைய மூத்தமகன் என வரும் அரசியல் தாயமுறை (Prinogeniture) தமிழ் நாட்டுக்குரியதன்று என அறியலாம்.

இவ்வாறே சேர மன்னருள் உதியஞ்சேரலாதன் என்பானுக்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என மக்கள் இருவர் உண்டு. இமயவரம்பன் சேரமானாய் முடிசூடியிருந்த பின், அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேரமானாய் முடிசூடிக் கொண்டான் அவற்குப்பின் இமயவரம்பன் மக்களுள் மூத்தவனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் அவன் பின் செங்குட்டுவனும் அவற்குப்பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் சேர நாட்டு முடிவேந்தராய் விளங்கினர்.

பின்னர், அரசர் குடியிற் பிறந்த அரசிளஞ் சிறுவர் கட்கு அரசாளும் திறம் நல்கவேண்டி நாட்டைச் சிறு சிறு நாடுகளாக வகுத்து ஆளும் முறையுண்டாயிற்று; அதன் பயனாக ஏனை நாடுகளைப்போலச் சேர நாடு சிறுசிறு நாடுகளாகப் பிரிய வேண்டி வந்தது. இது பற்றியே ஒரு நாழிகை தொலைக்குள் ஒன்பது நாடுகளைக் கடந்தாக வேண்டும் என்ற கருத்துடைய பழமொழி யொன்று இன்றும் மலையாள நாட்டில் வழங்குகிறது: இடைக் காலத்தில் சேர நாடு பதினெட்டுச் சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தமைக்கும் இதுவே காரணம்.

சோழ நாட்டுக்கு உறையூரும் பாண்டி நாட்டுக்கு மதுரையும் போலச் சேர நாட்டிற்கு வஞ்சி மாநகர் தலைநகரமாகும். பாண்டி நாட்டுக்குக் கொற்கையும் சோழ நாட்டிற்குக் காவிரிப்பூம்பட்டினமும் போலச் சேரநாட்டுக்கு முசிறியும் தொண்டியும் கடற்கரை நகரங்களாக விளங்கின. காவிரி கடலோடு கலக்கு மிடத்தே காவிரிப்பூம்பட்டினமும், தண்ணான் பொருநை கடலோடு கூடுமிடத்தே கொற்கையும் போலப் பெரியாற்றின் கிளையாகிய சுள்ளியாறு கடலோடு கூடுமிடத்தே முசிறி நகர் இருந்தது. இதனை மேனாட்டு யவனர்களான பெரிபுளுசு ஆசிரியரும் பிளினியென்பாரும் தங்கள் குறிப்பில் குறித்திருக் கின்றனர். இந் நகரின் பகுதியாய் இதற்குக் கிழக்கில் இருந்தது வஞ்சிநகர்; வஞ்சிக்கு வடமேற்கிலும் முசிறிக்கு நேர் வடக்கிலும் ஏழு எட்டுக் கல் தொலைவில் கருவூர் நகரம் இருந்தது.

தொண்டி நகர் குட நாட்டில் கடற்கரையில் இருந்ததொரு நகரம். குட்ட நாட்டுக்கு வஞ்சிபோலக் குடநாட்டுக்குத் தொண்டி சிறந்து நின்றது. குடநாடு பொறை நாடு என்றும் குடநாடு என்றும் பிரிந்தபோது தொண்டி பொறை நாட்டில் அடங்கிற்று. இப்போது அது சிற்றூராய்க் குறும்பொறை நாடு வட்டத்தில் உளது. குடநாட்டுக்கு நறவூர் என்றோர் ஊர் தலைநகராய் விளங்கிற்று; இப்போது அது குடநாட்டில் நறவுக்கல் பெட்டாவில் உள்ளது.

தொண்டிநகர் கடற்கரையில் இருந்தமையின் யவனர்கட்கு அது நன்கு தெரிந்திருந்தது. இது மிக்க சிறப்புடைய ஊர் என்று பெரிபுளுசு என்னும் நூல் கூறுகிறது[23]. சங்கத் தொகைநூற் பாட்டுகளும் இதனைப் பல்வகையாலும் பாராட்டிக் கூறுகின்றன. இவற்றின் வேறாக மாந்தை, மரந்தை என நகரங்கள் சில கூறப்படுகின்றன. அவற்றின் நலங்கள் வருமிடங்களில் ஆங்காங்கே விளக்கப்படும்.

திருவிதாங்கூர் நாட்டு எட்டுமானூர், அம்பலப் புழை, செங்கணாசேரி, கோட்டயம் என்ற பகுதிகளும், கொச்சி நாட்டுப் பகுதியும், பொன்னானி தாலூகாவின் குட்ட நாட்டுப்பகுதியும் ஒன்றுசேர்ந்த பகுதி குட்டநாடு என இப்போதும் வழங்குகிறது. இதன் வடக்கில் பொறை நாடும், கிழக்கில் பூழிநாடு கொங்கு நாடுகளும், தெற்கில் தென்பாண்டி நாடும், மேற்கில் கடலும் எல்லைகள் . இந்த நாட்டில் பெரியாறும், அதன் கிளைகளான பொருநை சுள்ளி யென்ற ஆறுகளும், பொன்வானி யாறும், வேறு பல சிற்றாறுகளும் பாய்தலால் இந்நாடு நல்ல நீர் நிலவளம் சிறந்துளது. இது தெற்கிலுள்ள நாஞ்சினாடு போல மிக்க நெல் விளையும் நீர்மையுடையது. திருவிதாங்கூர் அரசுக்குட்பட்ட குட்ட நாட்டுப் பகுதி மட்டில் இரு நூறாயிரம் ஏக்கர் நிலம் நெல் பயிரிடத்தக்க வகையில் அமைந்துள்ளது என்பர்.[24] அண்மையில் நிற்கும் மலைமுடிகளிற் பெய்யும் மழை நீர் இழிந்து விரைந்தோடி வந்து கடலில் மண்டுங்கால் கடற்கரை உடைந்து குட்டங்கள் (காயல் என இக் காலத்தில் வழங்கும் கானற் பொய்கைகள்) பல பல்கியிருப்பது பற்றி இந் நாடு குட்டநாடு எனப் பண்டை நாளைச் சான்றோர்களால் பெயர் வழங்கப்பட்ட தென்னலாம். இங்குள்ள குட்டங் களில் பல ஆழ்ந்து அகன்று சிறுசிறு மரக்கலங்களும் நாவாய்களும் இனிது இயங்குதற் கேற்ப அமைந்துள்ளது. இங்கே வாழ்ந்த மக்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களும், மலைபடு பொருள்களும், காடுபடு பொருள்களும், கடல்படு பொருள்களும் பெருகக் கிடைத்தமையால் அவர்கள் கடற்கப்பாலுள்ள நாட்டவரோடு பெருவாணிகம் செய்து சிறந்தனர். அதனால் மேனாட்டு யவனரும் கீழைநாட்டுச் சீனரும் பிறரு இந் நாட்டில் போக்குவரவு புரிந்தனர். அரபியா, ஆப்பிரிக்கா என்ற நாட்டுக் கடற்கரையில் குட்ட நாட்டுத் தமிழ்மக்கள் சிலர் குடியேறி இருந்தனர் என்று மேனாட்டவருடைய பழஞ்சுவடிகள் கூறுகின்றன. இவ்வாறு பெருங்கடல் கடந்து சென்று அரிய வாணிகம் செய்த பெருந்துணிவுடைய மக்கள் தென்கடற்கரை நாட்டுத் தென் தமிழரல்லது வடவாரியரல்லர் எனக் கென்னடி (Mr. Kennady) என்பார் கூறியிருப்பது ஈண்டு அறிஞர்கள் நினைவு கூரத் தக்கதோர் உண்மை.

இக் குட்ட நாட்டுக்குத் தலைநகரம், சேர நாட்டுக்குப் பொதுவாகத் தலைநகரமெனக் குறிக்கப் பெற்ற வஞ்சிமா நகரமாகும். கடற்கரையை ஒட்டித் தொடர்ந்து விளங்கும் காயற்குட்டத்தின் கீழ்க்கரையில் இந் நகரம் இருந்திருக்கிறது. இக் குட்டம், கொச்சி, கொடுங்கோளூர், சேர்த்துவாய் என்ற மூன்றிடங்களில் கடலொடு கலந்து கொள்ளுகிறது. கொங்குங்கோளூர் என்பது வஞ்சிநகர்க்கு இடைக்காலத்து உண்டாகி வழங்கிய பெயர். மலைநாட்டுக் கொடுங்கோளூர்[25] என்று கல்வெட்டுகள் கூறுவது காண்க. அதன் ஒருபகுதியான வஞ்சிக்களம், அஞ்சைக்களம்[26] என்றும், வஞ்சிக்குள[27] மென்றும் வழங்குவதாயிற்று. இதனால் வஞ்சிநகர் கடற்கரைத் துறைமுகமாகவும் விளங்கியது காணலாம். வஞ்சி முற்றத்தேயிருக்கும் காயல் கடலொடு கூடும் கூடல் வாயின் தென்கரையில் முசிறியும், வடகரையில் ஆறு ஏழு கல் தொலையில் கருவூரும் இருந்தன. கருவூர் இப்போது கருவூர்ப் பட்டினமென வழங்குகிறது. இவற்றின் இடையே காயலின் கீழ்ப் பகுதியில் பேரி யாற்றின் கிளைகளுள் ஒன்றான சுள்ளியாறு வந்து . கலக்கின்றது. தென்மேற்கில் முசிறி நகரும் வடமேற்கில் கருவூரும் தன்கண் அடங்க இடையிற் கிடந்த காயற் குட்டத்தை நாவாய்க்குளமாக (Harbour)க் கொண்டு வஞ்சி மாநகர் விரிந்த பண்புடன் விளங்கினமை இதனால் இனிது பெறப்படும். இது பற்றியே சான்றோர், ஏனை உறையூர் மதுரை என்ற நகர்களோடு ஒப்பவைத்து இவ் வஞ்சி நகரைச் சிறப்பித்து, “சேரலர்... வளங்கெழு முசிறி[28]” எனவும், “பொலந்தார்க் குட்டுவன் முழங்கு கடல் முழுவின் முசிறி[29]” எனவும் பாடியுள்ளனர். மேலை நாட்டு யவனருடைய கலங்கள் நேரே வருங்கால் முதற்கண் முசிறித் துறைக்கு வரும் என்றும், அத் துறையில் கலங்கள் கடலில் மிக்க தொலையில் நிற்கும் என்றும், பொருள்கள் சிறுசிறு நாவாய் வழியாக ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுமென்றும் பிளினி யென்பார் கூறுகின்றார்[30].

ஒருபால் பெருமலையும் ஒரு பால் பெருங்கடலும் நிற்க, இடையில் பெருங்காடு படர்ந்து கொடு விலங்கும் கடுவரற் காட்டாறுகளும் மிக்குள்ள நாட்டைச் சீர் செய்து மக்கள் குடியிருந்து வாழ்வதற்கு ஏற்பச் செம்மைப்படுத்திய பண்டைச் சேர நாட்டு மக்களுடைய தொன்மை வரலாறு எண்ண முடியாத சிறப்பினதாகும். காடு கொன்று நாடாக்கி விளைபொருளும் கடல் வாணிகமும் பெருகுதற்கண் அம் மக்கள் கழித்த யாண்டுகள் எண்ணிறந்த பலவாம். நாட்டு மக்களது . நல்வாழ்வுக் கென அரசு காவலும் செங்கோன்மையும் வேண்டப்படுதலின், அத்துறையில் நெடுங்கால வளவில் அம் மக்கள் பெரும் பணி செய்திருத்தல் வேண்டும்.

நம் நாட்டில் பழமையான நூல்கள் எல்லா வற்றினும் மிகப்பழமை வாய்ந்தவை யெனப்படும் நூல்களில் இந் நாட்டுச் சேரமன்னர் குறிக்கப் பெறுவதால், இவர்களது முதல் தோற்றம் வரலாற் றெல்லைக்கு அப்பாற்பட்டது என்பது சொல்லாமலே விளங்கும்.

சோழநாடு சோழவளநாடு என்றும், பாண்டிநாடு பாண்டி வளநாடென்றும் வழங்கியதுண்டு; அவற்றைப் போலவே, சேரநாடு சேரவளநாடு என்றும் தொடக் கத்தில் வழங்கிப் பின்பு சேரலர் நாடு என மருவிற்று; சேரரும் சேரலர் என்றும் சேரல் என்றும் கூறப்படுவாராயினர். கடல் சேர்ந்த நிலத்தைச் சேர்ப் பென்றும், அந் நிலத்துத் தலைவர்களைச் சேர்ப்ப ரென்றும் கூறுவது தமிழ் நூல் வழக்கு. அவ் வழியே நோக்கின் சேரநாடும் தொடக்கத்தில் சேர்ப்பு நாடென் விளங்கிப் பின் சேர நாடெனத் திரிந்துவிட்டது. சேர்ப்பர் சேரராயினர்[31] சேரலர் என்ற பழம் பெயர் பிறநாட்டு மக்களால் கேரளர் என வழங்கப்பட்டது; அதனால் சேரலர் நாடு அவர்களால் கேரள நாடாகக் கூறப்படுவதாயிற்று.

இடைக்காலத்தே தோன்றிய கல்வெட்டுகள் பலவும் சேரநாட்டை மலைநாடு எனவும் மலை மண்டலம் எனவும் குறிக்கின்றன. அது வழியே நோக்கின், மலைநாடு, மலைவள நாடு எனவும் மலைப்பால் நாடெனவும் கூறப்படும் இயையு பெறுவதாயிற்று. அப் பெயர்கள் பின்னர் வேற்று மொழியாளரால் மலையாளம் என்றும் மலபார் என்றும் சிதைந்து வழங்கப்படுவவாயின. ஆதலால், அந் நாட்டவர் மலையாளிகளாயினர்; அவரது மொழி மலையாளமாயிற்று[32].

இச் சேர நாட்டுப் பகுதியில் குட்ட நாடே ஏனைப் பொறைநாடு, பூழிநாடு, குடநாடு முதலியவற்றை நோக்க மிக்க வளம் பொருந்தியது என்பது நாடறிந்த செய்தி. நிலவளம் மிக்க இடத்தே மக்கள் உடல் வளமும் அறிவு வளமும் பெருசிச் சிறப்பர் என்பது நிலநூன் முடிபு. அதனால் தொடக்கத்தில் சேரவரசு குட்ட நாட்டில் தான் உருக்கொண்டு சிறந்ததென்பது தெளிவாம். சேர வேந்தர்க்கு உரியதெனப் பேசப்படும் வஞ்சிநகர் இக் குட்ட நாட்டில் இருப்பதே இதற்குப் போதிய சான்று. ஆகவே, சேர வேந்தருட் பழையோர் குட்ட நாட்டவர் என்று அறியலாம். மலையாளம் மாவட்டத்திலுள்ள ஏர்நாடு தாலூகாவில் சேர நாடு என்ற பெயருடைய சிறுநாடு ஒன்று காணப்படுகிறது. இது குட்ட நாட்டை அடுத்து வடக்கில் கடற்கரையைச் சார்ந்திருப்பதால், குட்டநாட்டுச் சேரர் தாங்கள் நாட்டை விரிவு செய்த போது தொடக்கத்தில் கொண்டது இப் பகுதி யென்பதும், குறும்பர் நாடு தாலூகாவிலுள்ள வடகரை யென்னும் நகரையும், அதனருகே ஓடிக் கடலோடு கலக்கும் சேர வாற்றையும், சேரபுரம் என்னும் பேரூரையும் காணுங்கால், சேர நாடு பின்பு இவ் வடகரை வரையிற் பரவிற்றென்பது, முடிவில், வட கன்னடம் மாவட்டத்திலுள்ள வானியாறும் சேரவாறும் இன்றுகாறும் நின்று விளங்குவதால், சேரநாடு முடிவாகப் பரந்து நின்றது அப்பகுதி வரையில் என்பதும் உய்த்துணரப்படும். இத்துணைப் பரப்புக்கும் தோற்றுவாய் குட்டநாடு என்பது நினைவு கூரத்தக்கது.

இவ்வாறு சேரநாடு படிப்படியாகப் பரந்து பெருகியது காட்டும் குறிப்புகள் ஊர்ப் பெயராகவும் ஆறுகளின் பெயராகவும், மலை குன்றுகளின் பெயராகவுமே உள்ளன. வரலாறு கூறும் கருத்துடைய நூல்களும் பாட்டுகளும் நமக்குக் கிடைக்காமையின், இப் பெயர்களை ஆராய வேண்டிய நிலைமை யுண்டாகிறது. கிடைத்துள்ள சங்கத் தொகை நூற் பாட்டு களில் இலைமறை காய் போல் காணப்படும் சொற் குறிப்புகளும் ஓரளவு துணை செய்கின்றன. அவ் வகையில் சேர மன்னர் சிலர் பதிற்றுப்பத்திலும் புறநானூற்றிலும் பிற தொகை நூல்களிலும் காணப் படுகின்றனர். அவருள் உதியஞ்சேரல் என்பவனும் அவன் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல் யானைச் செல்கெழு குட்டுவனும் அவர் வழிவந் தோரும் முதற்கண் காணப்படுகின்றனர். அவர்களை முறையே காண்போம்.


 1. பிற்காலச் சோழர்** பக், 103,
 2. திருத்தொண் கழறிற் 1. *
 3. தொல். பொ. 60*
 4. புறம் 126.
 5. ஷை 126
 6. அகம். 45.
 7. புறம். 2.
 8. அகம். 381.
 9. அகம். 309.
 10. அகம். 213.
 11. அகம். 77.
 12. புறம். 126.
 13. அகம். 159.
 14. மு. இராகவையங்கார்: சேரன் செங்குட்டுவன்.
 15. Madras Discourses of Sri Sankaracharya P. 147, 163.
 16. பாரதம்: பீஷ்ம் பருவம். ix. 58
 17. T.A.S. Vol. i p. 87-113.
 18. Bom. Gezet. kanaras, part-ii p. 77
 19. “தோகைக்காவின் துளுநாடு” (அகம். 15) என்ற விடத்துக் காணப்படும் தோகைக்கா என்பதே இப்பகுதிக்குப் பழம் பெயர். இது தோக்கா என மருவிப் பின்பு ஜோக் என்ற பெயருடன் இப்போது வழங்குகிறதென்பது அறிஞர்கள் காணவேண்டியதொன்று.
 20. மதுரை, 105,
 21. நற். 18.
 22. சிறுபாண். 47.
 23. M Crindles Translation P. 53.
 24. Travancore State Manual Vol iv. p. 699 700.
 25. A. R. No 313. of 1906.
 26. சுந். தேவா
 27. S.I.I. Vol V. No. 528.
 28. அகம். 149.
 29. புறம். 343.
 30. Nagam Iyer T. V. C. Manual Vol.i.op. 291.
 31. சேர்ப்புத்தலை சேர்த்தலை எனவும், சேர்ப்புவாய் சேர்த்துவாய் எனவும் வழங்குவது காண்க.
 32. இதனை நினையாமையால் கால்டுவெல் முதலியோர் வேறு கூறினர்.