சேரமன்னர் வரலாறு/2. சேரநாட்டின் தொன்மை

விக்கிமூலம் இலிருந்து

2. சேரநாட்டின் தொன்மை

சேர நாட்டின் தொன்மை நிலையை யுணர்வதற்குப் பண்டைநாளைச் சங்கத்தொகை நூல்கள் ஓரளவு துணை செய்கின்றன. இந் நூல்கள் பலவும் சான்றோர் பலர் அவ்வப்போது பாடிய பாட்டுகளின் தொகை யாதலால், அவற்றால் சேர வேந்தர்களையும் சேர நாட்டுக் குறுநிலத் தலைவர்களையும் முறைப் படுத்திக் காண்பதற்குப் போதிய வாயில் இல்லை. அவற்றைப் பாடிய சான்றோரும் சேர நாட்டின் இயற்கை நிலையினையும் மக்கள் வாழ்க்கை முறையினையும் வரலாற்று முறையில் வைத்துக் கூறினாரில்லை. ஆயினும், இந்நூல்களால் சேர நாட்டு மலைகளிற் சிலவும் யாறுகளிற் சிலவும் ஊர்களிற் சிலவும் தெரிகின்றன. இந் நூல்களிலும் பதிற்றுப்பத்தும் புறநானூறும், சேர வேந்தர்களையும் சேர நாட்டையும் சில பல பாட்டு களில் சிறந்தெடுத்துக் கூறுகின்றன. சங்கத் தொகை நூல்களை நோக்கின் அவற்றுள் பல சேர மன்னரின் ஆதரவில் தொகுக்கப்பெற்றமை தெரிகிறது. ஏனையவை ஆங்காங்குச் சிற்சில குறிப்புகளையே வழங்குகின்றன.

இச் சங்கத் தொகை நூல்களை அடுத்துப் பின்னர்த் தோன்றிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சேர நாட்டைப்பற்றிச் சிறிது விரியக் கூறுகின்றன. இவ்விரண்டன் ஆசிரியர்களும் சேர நாட்டவராதலால் அவர் கூறுவன நமது ஆராய்ச்சிக்குத் துணையாகின்றன. ஆயினும்! அவை கிறித்துவுக்குப் பிற்பட்ட காலத்தன. கிறித்து பிறப்பதற்கு முன்னைய காலத்தேயே நம் தென் தமிழ்நாடு சிறந்து விளங்கியதாகலின், அக் காலத்து நிலையை விளக்குதற்கு இந்த இரு நூல்களும் நிரம்புவனவாகா. ஆகவே, சிறித்துவுக்கு முற்பட்ட காலத்து வரலாற்றுக் குறிப்புகள் கிடைப்பின் அவற்றை ஆராய வேண்டியது கடனாகிறது.

கிறித்துவுக்கு முன் தோன்றிய நூல்கள் தொல் காப்பியமும் சங்கத் தொகை நூற்களிற் காணப்படும் பாட்டுகளுட் சிலவுமேயாம். தொல்காப்பிய நூலின் நோக்கம் வரலாறு கூறுவதன்று; ஆயினும் அதன் பொருளிலக்கணப் பகுதி தமிழ் கூறும் நல்லுகத்து மக்களுடைய வாழ்க்கைக் கூறுகளைத் தொகுத்தும் விரித்தும் கூறுகின்றது. அந்நிலையில் அது சேர மன்னருடைய அடையாளப்பூ’ அவர்க்குச் செந்தமிழ் நாட்டின்பாலுள்ள உரிமை. முதலியவற்றைக் குறிப்பதோடு நின்றுவிடுகிறது.

இந் நூற்றொகுதிகளைக் காண்போமாயின், சங்க காலத்தில், ஏனைச் சோழ பாண்டிய நாடுகளைவிடச் சேர நாடு வடவாரியர் கூட்டுறவை மிகுதியாகப் பெற்றிருப்பது தெரிகிறது. அதனால், சேரர்களைப் பற்றிய குறிப்புகள் வடநூல்களில் காணப்படுதற்கு இடமுண்டு. வட நூல்களில் இருக்கு வேதமும் தைத்திரீயமும் வியாச பாரதமும் சேரர்களைச் சேரர் என்றே குறிக்கின்றன[1]. மேலும் இருக்கு வேதத்தின்கண் “ப்ரஜா: திஸ்ரோ அத்யாயம் அயூஹ்”[2] என்பதற்குப் பொருளுரைக்கும் தைத்திரீய ஆரண்யகம், “யாவைத்தா இமாஹ் பர்ஜா: திஸ்ரோ அத்யாயம் ஆயம்தானி இமானி வாயாம்ஸி வங்கவாகதா: சேரபாதா:[3] என்று உரைத்தது. இதற்கு உரைகூறிய சாயனாசாரியர், வாயாம்ஸி யென்றது பறவைகளென்றும், வங்கவாகதா என்றது மரஞ்செடிகளென்றும், சேரபாதா: என்றது பாம்புகளென்றும் உரைத்தார். ஆனந்த தீர்த்தரென்பார் இம் மூன்றும் முறையே பிசாசர், இராக்கதர், அசுரர் என்ற மூவரையும் குறிக்குமென்றார். கீத் (Keith) என்னும் மேனாட்டறிஞர் வங்கவாகதர் சேரபாதர் என்பன வங்கர்களையும் மகதர்களையும் சேரர்களையும் குறிக்குமென்றார். இவற்றை ஆராய்ந்து கண்ட ஆராய்ச்சியாளர், கீத்தென்பார் கூறுவதே இடத்துக்கும் இயைபுக்கும் பொருத்தமாகவுளது என்று எடுத்துரைக்கின்றனர்.[4] இராமாயணத்தில்[5] கீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்கு வழிதுறைகளை வகுத்துரைத்த சுக்கிரீவன் தென்னாட்டு இயல்பு கூறுங்கால் சோழ சேர பாண்டிய நாடுகளைக் குறித்துச் சொல்லுகின்றான். மகாபாரதத்தில் யுதிட்டிரன் இராய சூய யாகம் செய்தபோது சோழ சேர பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசர்[6] கூறுகின்றார். இவ்வாற்றால் வேதகாலத்திலும் இதிகாச காலத்திலும் வட நாட்டு வடவருக்குத் தென்னாட்டுச் சேர சோழ பாண்டியர் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாய் விளங்குகின்றது.

இப்போது, சேர நாட்டின்கண் அதன் தொன்மை கூறும் வகையில் வரலாற்று நூல்கள் இரண்டு நிலவுகின்றன. அவை கேரள மான்மியம் கேரளோற்பத்தி என்பனவாம். அவற்றுள் மான்மியம் வடமொழியிலும் கேரளோற்பத்தி மலையாள மொழியிலும் உள்ளன. இவை காலத்தில் மிகவும் பிற்பட்டனவாயினும், இன்று இவை நாட்டு வரலாறாகக் கூறப்படுவது பற்றி ஈண்டு ஆராயும் தகுதி பெறுகின்றன. இவற்றுள் கேரளோற் பத்தியை எழுதியவர் துஞ்சத்து இராமாநுசன் எனப்படுகின்றார்.

வேந்தர் குலத்தை வேரறுத்து வந்த பரசுராமன் புதிதாக நாடொன்றும் படைக்க விரும்பித் தன் தவ வண்மையாற் கடலிலிருந்து மலையாள நாட்டை வெளிப்படுத்தி அதன்கண் பிராமணர்களை வாழச் செய்தான்[7]; அவர்கட்குச் சில காலத்துக்குப் பின் நாகர்களால் பெருந் துன்பமுண்டாயிற்று. அதனால் அவர்கள் அனைவரும் அந் நாட்டினின்றும் போய் விட்டனர். பின்னர்ப் பரசுராமன் வடக்கில் உள்ள ஆரிய நாட்டில் அறுபத்து நான்கு ஊர்களில் வாழ்ந்த பிராமணர்களைக் கொணர்ந்து குடியேற்றினான்; நாகர்களின் இடுக்கண் நீங்க நாக வழிபடும் நாகர்கட்குக் கோயில்களும் ஏற்படுத்தினான். அச் செயல்களால் நாகர் துன்பம் குறைந்தது; அதனை யறிந்த பழைய பிராமணர்கள் தங்களைப் பழந் துளுவரென்றும் துளு பிராமணர்களென்றும் கூறிக்கொண்டு திரும்பி வந்தனர். பரசுராமன் அவர்கட்கு நாகரது இடுக்கண் பற்றறத் தொலையும் பொருட்டு மந்திரங்கள் கற்பித்துக் கோயில் களிற் பணிபுரியுமாறு ஏற்பாடு செய்தான். மருமக்கள் தாய முறையை முதற்கண் ஏற்படுத்தியவனும் பரசுராமனே என்பர்.

சில காலத்துக்குப் பின் அப் பிராமணர்கட் கிடையே மனப்புழுக்கமும் பூசலுமுண்டாக, நான்கு பேரூரில் வாழ்ந்த பிராமணர்களை வருவித்து ஊர்க்கொருவராக நால்வரைத் தேர்ந்து அவர்களை அரசியலை நடத்துமாறு பரசுராமன் ஏற்படுத்திச் சென்றான். நால்வருள் ஒருவன் தலைவனாதல் வேண்டும் மெனவும், அவனும் மூன்று ஆண்டுக்கு மேல் தலைமை தாங்குதல் கூடாதெந்றும் அவர்கள் தங்களுக்குள் வகைமை செய்து கொண்டனர். அரசியலுக்கு ஆறிலொன்று கடமையாக வரையறுக்கப்பட்டது.

காலம் செல்லச் செல்ல வேலியே பயிரை மேயத் தலைப்பட்ட தென்றாற்போல் இத் தலைவர்கள் மக்கட்கு இன்னல் விளைக்கலுற்றனர். இக் கொடுமை நீங்க வேண்டி அந்தப் பிராமணர்கள் தங்கட்கு அரசியல் தலைவனாகிறவன் தங்கள் நாட்டவனாக இருத்தல் கூடாதென்று துணிந்தனர். கோபுரம் என்னும் இடத்திலிருந்து ஒருவனைத் தேர்ந்து கேய பெருமாள் என்று சிறப்புப் பெயர் நல்கித் தங்கட்குப் பன்னிரண்டாண்டு வேந்தனாக இருக்குமாறு ஏற்பாடு செய்தனர். அவனுக்கு முடிசூட்டும் போது சேரமான் பெருமாள் என்று பெயர் கூறப்படும். கேய பெருமாட்டுப் பின் சோழன் பெருமாளும் அவற்குப்பின் பாண்டி நாட்டுக் குலசேகரனான பாண்டிப் பெருமாளும் ஆட்சி செய்தனர்.

கேய பெருமாள் கொடுங்கோளூரிலிருந்து பன்னிரண்டாண்டு ஆட்சி செய்தான்; தலையூரில் கோட்டை யொன்றையும் அவன் கட்டினான். பின் வந்த சோழப் பெருமாள் பத்தாண்டு இரு திங்களும் இருந்துவிட்டுப் பழையபடியே சோழநாடு சென்று சேர்ந்தான்; அவன் சோழக்கரையில் கோட்டை யொன்றைக் கட்டினான். பாண்டிப் பெருமாள் பரம்பா என்னுமிடத்தே முடி சூட்டிக்கொண்டு ஒன்பதாண்டு அரசு புரிந்துவிட்டுப் பாண்டு நாடு சென்றான். அவற்குப்பின் சோழப் பெருமாள் ஒருவன் வந்து பன்னிரண்டாண்டும் பாண்டிப் பெருமாள் ஒருவன் பன்னிரண்டாண்டும் ஆட்சி செய்து விட்டு நீங்கினர். இதற்கிடையே கலியுகம் பிறந்து பல ஆண்டுகள் கழிந்தன. கலியின் கொடுமை எழுவது கண்ட கேரள நாட்டு வேதியர்கள் “பூருவ தேசத்துப் பாணப் பெருமாள் என்ற ஒருவனைக் கொணர்ந்து கேரள நாட்டுக்கு வேந்தனாக்கினர். அவ் வேந்தன் புத்த சமயத்தை மேற்கொண்டான். புத்தர் கட்கும் வைதிக வேதியர்கட்கும் சமயச் சொற் போர் நடந்தது; முடிவில் புத்தர்கள் தோற்றனர்; வேந்தன் வைதிக சமயத்தை மேற்கொண்டு புத்தர்களை நாட்டினின்று வெருட்டிவிட்டான்; எனினும், நான்கு ஆண்டுகட்குப் பின் அவன் மெக்காவுக்குச் சென்றொழிந்தான்.

பின்பு துளுவன் பெருமாள் என்றொருவன் வட நாட்டினின்றும் போந்து கேரள நாட்டு அரசை மேற் கொண்டான்; தனது ஆட்சிக்குட்பட்ட நாட்டுக்கு துளு நாடு என்று பெயரிட்டான்; அத் துளுவன் ஆறாண்டு ஆட்சி செய்துவிட்டு இறந்தான். அவனை யடுத்து இந்திரப் பெருமாள் என்பவன் வேந்தனாகிக் கொடுங்கோளூரிலிருந்து பன்னீராண்டு ஆட்சி புரிந்துவிட்டுப் “பூருவ தேசம்” போய்ச் சேர்ந்தான். அவற்குப்பின் ஆரிய புரத்து ஆரியப் பெருமாள் என்பவன்

வேந்தனானான். அவன் கேரள நாட்டை ஐந்து ஆண்டுகளே ஆட்சி செய்தான். அவன் தான் கேரள நாட்டை “துளுராஜ்யம், கூபக ராஜ்யம், கேரள ராஜ்யம், மூஷிக ராஜ்யம்” என நான்காக வகுத்த முதலரசன். அவனுக்குப் பின் கந்தன் பெருமாள் என்பவன் “பூருவ தேசத்திலிருந்து வந்து நான்காண்டுகள் ஆட்சி செய்தான். கைநெற்றி யென்னுமிடத்தே அவன் ஒரு கோட்டையைக் கட்டினான். கோட்டிப் பெருமாள் ஓராண்டும், மாடப் பெருமாள் பதினோராண்டும், அவன் தம்பி ஏழிப் பெருமாள் பன்னீராண்டும் ஆட்சி செய்தனர். பின்பு கொம்பன் பெருமாள் தோன்றித் தான் இருந்த மூன்றரை யாண்டு நெய்த்தரா ஆற்றங்கரையில் ஒரு குடிலில் இருந்தொழிந்தான். விசயன் பெருமாள் விசயன் கொல்லம் என்ற கோட்டையையமைத்துப் பன்னீராண்டு ஆட்சி செய்தான். அரனுக்குப் பின் வந்த வல்லப் பெருமாள் சிவலிங்கமொன்று கண்டு நெய்த்தர ஆற்றங்கரையில் அதற்கொரு கோயிலும் கோட்டையும் கட்டிப் பதினோராண்டிருந்தான். அரிச்சந்திர பெருமாள் பரளி மலையில் ஒரு கோட்டையை யமைத்து, அங்கே, தான் தனித்திருந்து ஒருவரும் அறியா வகையில் மறைந்து போனான். அவனையடுத்து வந்த மல்லன் பெருமாள் பன்னிரண்டாண்டு ஆட்சி செய்தான்.

இப் பெருமாட்குப் பின் வந்த வேந்தன், பாண்டிப் பெருமாளான குலசேகரப் பெருமாள் எனப்படுவன். இவன் வெளிநாட்டிலிருந்து வேத ஆசிரியர் இருவரைக் கொணர்ந்து திருக்கண்ணபுரம் என்னுமிடத்தே கல்லூரி யொன்று நிறுவி வேதியர்கட்குக் கல்வி வழங்கினான். அவன் பதினெட்டியாண்டு அரசுபுரிந்திருந்து திருவஞ்சைக்களத்தினின்றும் உடலோடே துறக்கம் புகுந்தான்.

இந் நிகழ்ச்சிக்குப் பின் கேரளநாடு அரசர்களின்றிக் குடியரசாய் நெடுங்காலம் இருந்து வந்தது. ஊராட்சியையும் நாட்டாட்சியையும் “பருடையார் மூல பருடையார்” என்னும் மக்கட் கூட்டத்தார் ஆட்சி செய்து வந்தனர். ஒருகால் இவர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாகவே, ஆனைகுண்டி கிருஷ்ண ராயரை வேண்டித் தமக்கோர் அரசனை நல்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர், ஒரு “க்ஷத்திரியனை”ச் சேரமான் பெருமாளாய் ஆட்சி செய்யுமாறு அனுப்பினார். அவன் பன்னிரண்டாண்டு இனிய ஆட்சி செய்ததனால், மேலும் இரு முறை அவனே சேரமான் பெருமாளாய் ஆட்சி நடத்தும் அமைதி பெற்றான். அந்த நாளில் கிருஷராயர் மலையாள நாட்டின் மேற் போர் தொடுக்கலுற்றார். அதனை யறிந்த சேரமான், அவரோடு பொருது முதற்கண் தோல்வி யெய்தினும் மறுமுறை வெற்றி பெற்றான். பின்பு சங்கராச்சாரியர் தோன்றிக் கேரள நாட்டு வரலாற்றை யெழுதியதோடு பிராமணர்களுக்கு ஒழுக்க நெறிகள் பல ஏற்படுத்தி நல்வழிப் படுத்தினார். முடிவில் இச் சேரமானும் மெக்காவுக்குப் போனான் என்று கேரளோற்பத்தி கூறுகிறது.

இக்காலத்தே கேரள நாட்டின் புறத்தில் பாண்டி நாடும் கொங்கு நாடும் துளுநாடும் வயநாடும் புன்னாடும் இருந்தன. இச் சேரமான் கேரளத்தை பதினெட்டுச் சிறு நாடுகளாக வகுத்து ஆட்சி செய்தான். மெக்காவுக்குப் போன போது கோயிக்கோட்டு வேந்தனான சாமொரின் பால் தன் உடைவாளைத் தந்து விட்டுப் போனானென்றும், அங்கே (மெக்காவில்) அவன் இறத்தற்கு முன் அரபியர் தலைவனொருவனை மலையாள நாட்டுக்கு அனுப்பினானென்றும் அவன் வந்து மலையாள நாட்டில் இசுலாம் சமயத்தைப் பரப்பினானென்றும் கேரளோற்பத்தி கிளந்துரைக்கின்றது.

மெக்கா நாட்டில் கடல் வாணிகம் செய்து பெருஞ்செல்வம் ஈட்டிய ஒருவன், கோயிக்கோட்டில் தங்கினான் என்றும், பின்பு புண்டோகோன் என்பான் காலத்தில் வெளிநாட்டிலிருந்து கோயமானொருவன் போந்து சாமொரினுக்குப் பெருந்துணை செய்தா னென்றும் அவன் பெயரால் அந் நகர் கோயிக்கோடு என்று பெயரெய்துவதாயிற்றென்றும் அதே நூல் கூறுகிறது.

இந்த நாட்டுக்குக் கேரளம் என்ற பெயர் வந்ததற்குக் காரணம் கூறப் புகுந்த இந்தக் கேரளோற்பத்தி, மலையாள நாட்டு வேதியர்கள் ஒருகால் சோழ மண்டலம் சென்று தங்கட்கொரு வேந்தன் வேண்டு மென ஒருவனை வேந்தனாகக் கொணர்ந்தன ரென்றும், அவனுக்குக் கேரளன் என்ற பெயரென்றும், அவன் தனது ஆட்சியைச் செவ்வே நடத்திவிட்டுச் சென்ற தனால் அவனது நினைவுக் குறியாக மலையாள நாடு கேரள நாடு என்று பெயரெய்திற்ரென்றும் பொய் புனைந்து கூறுகிறது. கேரள மான்மியம் என்னும் வடமொழி நூலும் கேரளோற்பத்தி கூறியதையே சிறிது வகுத்தும் விரித்தும் உரைக்கின்றதேயன்றிப் புதுவதாக ஒன்றும் கூறவில்லை. இதன் இடையிடையே வேதியர் கட்கு உள்ள சிறப்பும் நாட்டு வாழ்க்கையில் அவர்கட் கிருந்த உரிமையும் செல்வாக்கும் நன்கு விரித்துக் கூறப்படுகின்றன. இவற்றையெல்லாம் நன்கு ஆராயந் மேனாட்டு ஆங்கிலேயரான வில்லியம் லோகன் (William Logan), உண்மைக்கு மாறாகப் பொய் நிறைந்த கதை செறிந்த இந் நூல்களை இந் நாட்டு வேதியர்கள் தங்கள் நலமே பெரிதும் பாதுகாக்கப்பட்டு நிலை பெறும் பொருட்டு வெறிதே புனைந்துரையாக அமைத்துக் கொண்ட புளுகு மூட்டையென மனம் வெதும்பிக் கூறியிருக்கின்றார்[8]. வடநாட்டு அசோக மன்னனுடைய கல்வெட்டுகளும், “சோள பளய சத்தியபுத்திர கேரளபுத்திர தம்பபானி” என்று குறிக்கின்றன. இதனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சேரநாடு கேரள நாடென வடவரால் வழங்கப் பெற்றதென்பது விளங்குகிறது

அக் காலத்தில் மேலை நாட்டிலிருந்து கிரேக்கர்களும் யவனர்களும் பாபிலோனிய நாட்டுக் கோசியர்களும் பிறரும் மேலைக் கடலில் கலஞ் செலுத்தி வரலாயினர். எகிப்து நாட்டு வேந்தர்கீழ் வாழ்ந்த போனீசியர்களே முதற்கண் அரபிக் கடலில் கலஞ் செலுத்தி நாடு காணும் நாட்டம் கொண்டனர். அவருடைய முயற்சி முற்றும் வாணிகம் செய்து பொருளீட்டுவதிலே கழிந்தமையின் அவர்களது குறிப்புகள் கிடைப்பது அரிதாய் விட்டது. கி.மு. ஐந்து ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் முற்போந்து கடலகலம் காண முயன்றனர். அவர்கள் தொடக்கத்தில் மத்தியதரைக் கலையும் கருங்கடலையும் அகலங் கண்டனர். அந் நாளில் அலச்சாந்தர் விடுத்த கிரேக் கர்கள் வட இந்தியாவின் மேலைப் பகுதியான சிந்து நதி பாயும் நாட்டைக் கண்டு கொண்டு திரும்பினர். அவர்கட்குத் தலைவரான நியார்க்கஸ் (Nearchus) தரை வழியாகச் சிந்து நதிக்கும் யூபரடீசு டைகரீசு ஆற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பகுதியில் வழி கண்டான்; அது முதல் நமது இந்திய நாட்டின் செல்வநிலை கிரேக்கர் உள்ளத்தில் மதிப்புண்டுபண்ணிற்று. அலச்சாந்தர் உள்ளத்தில் மதிப்புண்டுபண்ணிற்று. அலச்சாந்தருக்குப் பின் செல்யூக்சு நிகேட்டர் விடுத்த மெக்சு தனிசு என்பார், கங்கை நாட்டுப் பாடலிபுரத்தில் (Palibothra) சந்திரகுப்த வேந்தன்பால் தங்கித் தாம் அந் நாளிற் கேள்வியுற்ற செய்திகளைக் குறித்து வைத்தார். அக் குறிப்பினுள் தென் தமிழ் நாட்டு வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றுள் சேர்மா (Chermae) என்பது சேரமான்களையும், நறா (Narae) என்பது சேர நாட்டு வட பகுதியான குடநாட்டு நறவூரையும் குறிப்பனவாம்.[9]

பின்னர் எகிப்து நாட்டை யாண்ட தாலமிகள் செங்கடல் வழியாக இந்திய நாட்டுக்கு வழி கண்டனர். அவர்கட்குப் பின் யவனர் தோன்றி நம் இந்திய நாட்டோடு வாணிகம் செய்யத் தோன்றி நம் இந்திய நாட்டோடு வாணிகம் செய்யத் தலைப்பட்டனர். அவர்களில் இப்பாலசு (Hippalus) என்னும் கிரேக்கன் நம் நாட்டில் அடிக்கும் தென்மேற்குப் பருவக்காற்று நிலையையும் வடகிழக்குப் பருவக் காற்று நிலையையும் கண்டு உரைத்தான். அதன்பின் யவன வாணிகம் பெரிதும் வளம் பெற அவர்களிடையே நடைபெறுவதாயிற்று; அப் பருவக் காற்றுகளையும் அவர்கள் இப்பலசு என்றே வழங்கினர் என்பர். யவனர்கட்குப் பல்லாண்டு முன்பிருந்தே அரபிக்கடலில் அரபியரும் இந்தியரும் கலம் செலுத்தி வாணிகம் செய்து வந்தனராதலால், அவர்கள் இப் பருவக் காற்றை அறியாதிருந்தனரென நினைத்தற்குச் சிறிதும் இடமில்லை; கி.மு. ஆறாம் நூற்றாண்டில் (கி.மு. 556-539) ஆட்சி புரிந்த சால்டிய வேந்தன் நபோனிதாசு காலத்தேயே இந்தியரது கடல் வாணிகம் சிறந்து விளங்கிற்று; சிலர் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டு மேலைக் கடற்கரைக்கும் மேனாட்டுக்கும் இடையே பெரு வாணிகம் நடைபெற்று என்று கூறுகின்றனர்[10]. இக் கடற் காற்றின் இயல்பறிந்து பண்டைத் தமிழ் மக்கள் கடலிற் கலஞ் செலுத்தி மேம்பட்ட செயலைப் புறப்பாட்டு[11] எடுத்துக் கூறுவது ஈண்டு நினைவு கூரத் தக்கது.

இக் காலத்தே மேனாட்டுக்குத் தென் தமிழ் நாட்டினின்று தூதொன்று சென்று யவன வேந்தரான அகஸ்டஸ் என்பாரது தொடர்பு பெற்றுச் சுபெயின் நாட்டுக்குச் சென்றது. இத் தூது தென் பாண்டி நாட்டு வேந்தனொருவன் விடுத்ததென்பர்; வட நாட்டுப் பேரரசு என்னும் வேந்தன் விடுத்தது என்பாரும் உளராயினும் அவர் கூற்று வலியுடையதாக இல்லை.

இவ்வாறு, மேலை நாட்டவர்க்கும் தென் தமிழ் நாட்டவர்க்கும் இடையே வாணிகம் மிகுதிப்பட்ட தனால் யவன நாட்டினின்று தமிழ் நாட்டுக்கு வரும் மரக்கல மாக்கட்கென யவன நாட்டில் நூல்கள் எழுந்தன. அவற்றுள் எரித்திரையன் கடற் செலவு, மத்தியதரைக் கடற் செலவு என்று பெயரிய இரு நூல்கள் உண்டாயின. ஒன்று ஆசிய நாட்டுக் கடற் செலவையும் மற்றொன்று ஆப்பிரிக்க நாட்டுக் கடற் செலவையும் கூறுவன[12]. இவை கி.மு. முதல் நூற்றாண்டில் தோன்றின் என்பது அறிஞர் கொள்கை. இக்காலத்துக்கு முன்பே தென் தமிழ் நாட்டவர் சிலர் ஐரோப்பாவைச் சுற்றிச் சென்று வட கடலில் சர்மனி நாட்டருகில் உடைகலப் பட்டொழிந்தனர் என்றொரு செய்தி அவருடைய நூல்களிற் காணப்படுகிறது என அறிஞர்கள் உரைக்கின்றனர்[13]. கி.பி. முதல் நூற்றாண்டில் பிளினி (Pliny) என்பார் மேலைக் கடற் செலவுப்பற்றி நூலொன்றை எழுதியுள்ளனர். அதன்கண் இக் கடற் செல்வு சார்பான செய்திகள் பல விரிவாக உரைக்கப்பட்டுள்ளன.

கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பெட்ரோனியு (Petronius) என்பவர், அந் நாளைய யவனச் செல்வ மகளிரின் பெருமித வாழ்வைக் கடிந்து நூலொன்றை எழுதியிருக்கிறார். அதன்கண் நம் தமிழ் நாட்டிலிருந்து யவனர்கள் கொண்டுசென்ற மெல்லிய ஆடையை உடுக்குமாற்றால் யவன மகளிர் தங்கள் உடல் முற்றும் புறத்தே தெரியுமாறு காட்டிப் பொலிவிழக் கின்றனர் என்றும், அவ்வாடைகள் காற்றலாகியவை, முகிலால் ஆகியவை, ஆவியால் ஆகியவை என்றும் குறித்திருக்கின்றார். “புகைமுகந் தன்ன மாசில் தூவுடை” என்றும், “ஆவியந் துகில்” என்றும் வரும் சங்கநூல் கூற்றுகள் அவர் கூறுவனவற்றை வற்புறுத்துகின்றன.

எகிப்து நாட்டு ஓ செலிசு துறையினின்று (Ocelis) புறப்படும் காலம் தென்மேற்குப் பருவக் காற்றைத் துணைக்கொண்டு நாற்பது நாள்களில் முசிறித் துறையை அடையும்; அத் துறையில் கடற்கொள்ளைக் கூட்டத் தினர் உளர்; அவர்கள் நித்திரியாசு (Nitrias) என்ற இடத்தில் உறைபவர். முசிறித் துறை வணிகப்பொருள் மிகுதியாக உடையதன்று; கலம் நிற்கும் இடத்துக்கும் முசிறித் துறைக்கும் நெடுந்தூரம் இருக்கிறது. ஏற்றற்குரிய பொருளைச் சிறு சிறு படகுகளில் கொணர வேண்டும். இப் பகுதிக்குரிய வேந்தன் கேளோபோத்திராசு (Caelobothras) இம் முசிறித் துறையினும், நியாசிந்தி (Neacyndi) நாட்டிலுள்ள பாரேசு (Barace) துறை சிறந்து விளங்குகிறது. அதற்குரிய வேந்தனான பாண்டியோன் (Pandion), உள்நாட்டில் மதுரையென்னும் நகர்க்கண் (Modora) இருக்கின்றான்; பாரேசு துறைக்குக் கோட்ட நாராவிலிருந்து மிளகுப் பொதிகள் வருகின்றன என இவ்வாறு பிளினி என்பார் எழுதியுள்ளார்[14].

பிளினியினுடைய குறிப்புகளால் கி.பி. முதல் நூற்றாண்டில் சேர நாடு தென் கொல்லம் வரையில் பரந்திருந்தமையும் அதன் தென் பகுதி தென்பாண்டி நாடென்பதும் தெளிவாய் விளங்குகின்றன. இவ் வகையில் பெரிப்புளுசு நூலாசிரியர் கூறுவனவும் ஒத்திருக்கின்றன. ஆயினம், முசிறித்துறை செல்வத்தாற் சிறப்புடைய மாநகரம் என்றும், வடநாடுகளிலிருந்தும் எகிப்து நாட்டிலிருந்தும் எப்போதும் கலங்கள் இத் துறைக்கு வருவதும் போவதுமாக உள்ளன என்றும் பெரிப்புளுசு நூலாசிரியர் கூறுகின்றார்[15]. அவர் கூற்று, “சேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும்[16]” என்ற சங்கநூற் கூற்றால் வலியுறுகிறது.

கி.பி. 126-61ல் வாழ்ந்த தாலமி (Ptolemy) என்பார் எழுதியுள்ள குறிப்பில் சேர வேந்தர் கேரள போத்திராசு (Carelabothras) என்றும், அவர்களது தலைநகர் கரவரா (Karoura) என்றும் குறிக்கப்படுவது காண்கின்றோம்[17]. இது கருவூர் என்பதன் திரிபு. இக் கருவூர் இப்போது வஞ்சி நகர்க்கு வடக்கில் எட்டுக் கல் அளவில் கடற்கரையில் உளது.

கி.பி. 226 அளவில் எழுதப்பட்டதெனப்படும் பியூதிங்கள் தொகை நூல் (Peutingar Tables), முசிறியில் யவனர் இருக்கை யொன்று இருந்த தெனவும், அங்கே அகஃடசுக்குக் கோயிலொன்று இருந்ததாகவும், அதனை யவனப்படை யிரண்டு இருந்து காத்தவந்தன எனவும் கூறுகிறது; ஆனால் முசிறி நகரைக் குறிக்கும் சங்கப் பாட்டுகள் இச் செய்தி குறித்து ஒன்றும் கூறவில்லை. இவற்றை நோக்குவோர் முசிறியில் யவனர் அகஃடசுக்குக் கோயிலெடுத்த காலம் சங்கத்தொகை நூல்கள் தோன்றிய காலத்துக்குப் பின்னதாம் என்பதைத் தெளிவாகக் காண்பர். ஆகவே, சங்கத் தொகை நூல்கள் பலவும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டன என்பது தேற்றமாம்.

இச் சங்க இலக்கியங்கள் யாவும் சேர நாட்டைச் சேர நாடென்றும், அந் நாட்டு வேந்தர்களைச் சேரர் என்றும் சேரலரென்றும் தெளிவாகக் கூறுகின்றன பிற்காலத்துத் தமிழ் நூல்களும் அந் நெறியில் வழுவியது இல்லை. வடநாட்டு வடமொழி நூல்களுள் வேதங்களும் இதிகாசங்களும் சேரர்களைச் சேரரென்றே குறிப்பதை முன்பே கண்டோம். செல்யூக்சு நிகேடர் காலத்து மெகஃதனிசு என்பார் கங்கைக்கரைப் பாடலிபுரத்திலிருந்து எழுதிய குறிப்பும் சேரர்களைச் சேரமான்கள் என்றே குறித்துள்ளது. ஆனால் அசோக மன்னனுடைய கல்வெட்டுகள் சேரலர்களைக் கேரளபுரத்திரர் என்று கூறுகின்றன; ஆயினும் அத் தொடர் சேரல புத்திரர் என்று படிக்குமாறும் அமைந்திருக்கிறது. மற்று,  அவற்றைப் படித்த அறிஞர் பலரும் கேரள புத்திர ரென்றே படித்து வந்திருக்கின்றனர். பிற்கால வடநூற் பயிற்சியால் அசோகன் கல்வெட்டுகளைப் படித்தோர் கேரள புத்திரர் என்று கருதிவிட்டிருக்கலாம். இடைக் காலச் சோழவேந்தர் கல்வெட்டுகள்[18] சேர வேந்தர்களைக் கேரளர் என்று கூறுவதைப் படித்த பயிற்சியால் அசோகன் கல்வெட்டுகளைக் கேளர புத்திரரென அவர்கள் மாறிப் படித்தற்கு இடமுண்டாயிற்றெனவும் கருதலாம். இடைக்காலக் கல்வெட்டுகளை நோக்குமிடத்துக் கேரளர் என்ற வழக்குக் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பே தோன்றியிருப்பது தெரிகிறது[19]. ஆனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டினரான திருஞான சம்பந்தர் முதலியோர் திருப்பதிகங்களுள் சேரர், சேரலர் என்ற பெயர்கள் காணப்படுகின்றனவேயன்றிக் கேரளர் என்ற சொல்வழக்குக் காணப்படவில்லை. இதனை நினையுங்கால் கேரளர் என்ற வழக்காறு சோழ பாண்டிய நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்தான் உண்டாயிற்றென்பது விளங்குகிறது.

சேரலர் என்பது கேரளர் என மாறி வழங்கும் முறை வடநாட்டில் நெடுங்காலத்துக்கு முன்பே தோன்றி விட்டது. அசோகன் கல்வெட்டில் காணப்படுவது கேரளர் என்பதேயாயின் இரண்டாயிரமாண்டுகட்கு முன்பே வடவர் சேரலர் என்னும் தமிழ்ச் சொல்லைக் கேரளர் எனத் திரித்துக் கொண்டனர் என்று அறியலாம். ஆனால், மேனாட்டுக் கிரேக்க யவனர்கள், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் சேரர்களைச் சேர ரென்றும் சேரமான்களென்றும் வழங்கி வந்திருக்கின்றனர்.

வேத காலத்துக்குப் பின் வந்த வடமொழியாளர் தாங்கள் புதியவாகக் காணும் நாடு நகரங்களின் பெயரையும் ஆறுகள் ஊர்கள் முதலியவற்றின் பெயரையும் மக்களினத்தின் பெயரையும் தாங்கள் கலந்து வழங்கும் வகையில் மூன்று நெறிகளை மேற் கொண்டனர். முதலாவது, தாம் எதிர்ப்படும் பெயர் களைத் தம்முடைய மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வது. பாண்டி நாட்டுக் கூடல் வாயிலைக் கடாபுரமென வான்மீகியார் மொழிபெயர்த்துரைப் பதையும், பின் வந்தோர் அந் நெறியே பின்பற்றி நாடு நகரங்களின் பெயர்களையும் ஆறு குளங்களின் பெயர்களையும் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதையும் தமிழுலகம் நன்கறிந்திருக்கிறது. தமிழகத்து மேலைமலைத் தொடரைச் சஃயாத்திரி யென்பதும், தொண்டை நாட்டுப் பாலியாற்றை க்ஷிர நதியென்பதும், நடு நாட்டு முதுகுன்றத்தை விருத்தாசல் மென்பதும் மதுரைத் திருவாலயாய் அங்கயற் கண்ணியை மீனாக்ஷி யென்பதும் போதிய சான்றுகளாகும். மற்றொன்று எதிர்ப்படும் பிறமொழிச் சொற்களைத் தங்கள் மொழி நடைக்கேற்பத் திரித்துக்கொள்வது. இதற்குத் தென்றமிழ் நாட்டு முத்துகளை முத்தம் என்பதும், பவளத்தைப் பிரவாள மென்பதும், சோழனைச் சோடனென்பதும் ஏற்ற சான்றுகளாம். வேறொன்று, தம் மொழிநடைக்கு ஒத்தவற்றை ஒரு திரிபுமின்றி ஏற்றுக்கொள்வது. அம் முறையில் மணி, மீன், நீர் என்பவற்றை வட மொழியில் ஏற்றுக் கொண்டுள்ளனர். பண்டைநாளைத் தொல்காப்பியரும், மொழி நடைக்கேற்ற எழுத்தால் பிறமொழிச் சொற்களை ஏற்றல் வேண்டும்; வேறு படுப்பது நேர்மையன்று என்பதற்காகவே, “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே[20]” என்று தமிழ்மக்கட்கு வழி வகுத்துரைத்தார். இந்தச் சீரிய முறையை வடவர்க்கு வடமொழி யாசிரியர் வகுத்துரைக்கவில்லை போலும். நேர்மை திறம்பாத நெறிமேற்கொண்ட மேனாட்டு மொழியாளர்களும் கட்டுமரம் (Kattamaram), மிளகு தண்ணி (Molak tanni) இஞ்சி (Ginger) அரிசி (Rice) தோகை (Tugi), தேக்கு (Teak) முதலியவற்றைத் தங்கள் மொழி நடைக்கேற்பத் திருத்தி மேற்கொண்டனர். இவ்வாற்றால் வடவர் கூட்டுறவு பெற்ற சேர நாட்டவர் தம்மைக் கேரளரென்றும், தங்கள் நாட்டைக் கேரள நாடென்றும் வடவர் வழங்கியவாறே[21] வழங்குவாராயினர். இன்றும், தென்னாட்டவருள், தமிழரொழியப் பிறரனைவரும் தங்களை வடவரிட்ட பெயராலே வழங்குவது குறிக்கத்தக்கது.

இனி, சேர நாட்டுச் சேரலர், தம்மைக் கேரளரென வழங்கத் தலைப்பட்ட காலம் தமிழ் மொழி சிதைந்து மலையாளமாக மாறி காலம்; சேரநாடென்றும் குடமலை நாடென்றும் வழங்கிய காலம்; அந் நாட்டில் செந்தமிழ் மொழி சிதையாது நிலவிய காலம். இடைக்காலத்தில் சேரநாட்டுப் பகுதிகளில் தோன்றிய தமிழ்க்கல்வெட்டுகளை நோக்கின், அப் பகுதியிலுள்ள மக்களும் ஊர்களும் தூய செந்தமிழ்ப் பெயர் தாங்கி யிருப்பதைக் காணலாம். பரோலா என்னுமிடத்துக் கல்வெட்டு[22] அவ்வூரைப் புலவேர் வாயில் எனவும், திருவன்னூரிலுள்ள கல்வெட்டு[23] அவ்வூரைத் திரு முன்னூரெனவும், இருஞாலக்குடாவிலுள்ள கல்வெட்டு[24] அதனை இருஞாலக்கூடல் எனவும், கடலுண்டி என்னுமிடத்துக் கல்வெட்டு[25] அவ்வூரைத் திருமண்ணு ரெனவும் வழங்குவது போதிய சான்றாகும். மேலைக் கடற்கரை நாட்டு வட கன்னடம் மாவட்டத்திலுள்ள பாட்கல் (Baktal) என்னுமிடத்துக் கல்வெட்டு அதனைப் பாழிக்கல் என்பதும், ஜோக் (Joag) என்னுமிடத்துப் பிற்காலக் கல்வெட்டு, அதனைத் தோக்கா என்பதும், நோக்கத் தக்கன.

சேர நாடு செந்தமிழ் மொழி வழங்கும் திருநாடாக விளங்கிய காலத்து வேந்தர்களே நாம் காணலுறும் சேர மன்னர்கள். கேரளோற்பத்தி கேரள மான்மியம் என்ற இரண்டு நூல்களும் மிகவும் பிற்பட்ட காலத்த வரான விசயநகர வேந்தர்களைப் பற்றியும் கூறுவதனால் இவை காலத்தால் மிகமிகப் பிற்பட்டவையென்பது சொல்லாமலே விளங்கும். இவற்றைக் கொண்டு பண்டை நாளைச் சேர நாட்டைக் காண்பதற்கு வழி யில்லை. இவற்றுள், சங்க காலத்துக்கும் விசயநகர வேந்தர் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்து நிகழ்ச்சிகளுட் சில இவை கூறும் வரலாற்றுள் மறைந்திருக்கலாம்.

தொன்மையுடைய பொருளே பெருமையுடையது என்றொரு கொள்கை இடைக்காலத்தே அறிஞர் சிலருடைய கருத்தில் உண்டாயிற்று. அதனால் பல நூல்களைப் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டவையென்றும் கூறும் செயல் தோன்றிற்று; அவ்வாறே சிலர் எழுதியும் வைத்தனர். உண்மையிலேயே தொன்மையும் பெருமையுமுடைய நூல்களைக் கண்டு சிலர் மனம் பொறாது, அவற்றின் தொன்மையைக் குறைத்தால் பெருமை குறையுமென்று மனப்பால் குடித்துத் தவறும் குழறுபடையும் நிறைந்த கருத்துகளால் தாம் வேண்டியவாறு எழுதலாயினர். தன் பெயர் நிலை பெறுவது விழைந்து தயனா தேவி கோயிலைத் தீயிட்டுக் கொளுத்திய யவனன்போலப் பழமையான சில தமிழ் நூற்களைக் காலத்தால் பிற்பட்டன என்று கூறிவிடின் அவை பெருமை குன்றிவிடும் என்று தம்முடைய செல்வாக்கையும் பதவியையும் துணையாகக் கொண்டு ஆராய்ச்சி யென்ற பெயரால் சொல்வலையிட்டுத் திரையிட முயன்றோரும் முயல்வோரும் உண்டு. இவ்வாறன்றி, காய்தல் உவத்தல் இன்றி, நடுவுநிலை திறம்பாது பண்டை நாளை நிலையினைக் காண்பது இப்போது மிக இன்றியமையாததாகிறது.

மேலும், இடைக்காலத்தில் இருந்து ஆராய்ச்சி நிகழ்த்தியோரினும், இக் காலத்து ஆராய்ச்சியாளருக்குக் கருவிகள் விரிவாகக் கிடைத்துள்ளன. நிலவுலகத்தில் ஆங்காங்கு வாழும் மக்களுடைய தொன்மையும் வரலாறும் வழக்காறும் அறிந்து கொள்ளத்தக்க வகையில் நூல்கள் வந்துள்ளன. இலக்கிய நூல்கட்குத் துணை யாகப் பல்லாயிரக் கணக்கில் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியுரை களும் பெருகக் கிடைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் உண்மையெனக் காணப்பட்ட வொன்று பிறிதொரு காலத்தில் தவறுபடுவதும், தவறெனக் கருதியதொன்று உண்மையாவதும், ஒருகாலத்தில் எல்லையென வரம்பிட்ட ஒன்று பிறிதொரு காலத்தல் மாறுவதும், புது வரம்பொன்று காணப்படுவதும் ஆராய்ச்சி நெறியில் இயற்கையாய்விட்டன. அதனால், ஆராய்ச்சியாளர் உண்மையைக் கடைப்பிடித்துத் தமக்குக் கிடைக்கும் கருவிகளைக் கொண்டு அச்சம் இன்றித் தமது ஆராய்ச் சியை நிகழ்த்தத் தலைப்பட்டுவிட்டனர், அறிவியல் நெறியிலேயே வரம்பறுக்கப்பட்ட உண்மைகள் பல போலியாய் ஒழிகின்றன எனின், வரலாற்றாராய்ச்சிக்கு வேறு கூறுவது மிகையன்றோ!

இந் நெறியே நின்று நோக்கும்போது, மேனாட்டு யவனர்களும் வடநாட்டு வட நூல்களும் கூறுவனவற்றால், சேரரது தொன்மை வேதகாலத்தேயே விளங்கி யிருந்தமை தெளிவாயிற்று. சங்க இலக்கியங்களுள் சேரர்கள் சார்பாக நிற்கும் பாட்டுகளிற் காணப்படும். ஊர்களும் நிகழ்ச்சிகளும் சிரேக்க யவனர் குறிப்புக் களிலும் ஒப்பக் காணப்பெறுகின்றன. அக் குறிப்புக்களின் காலம் கி.பி. முதலிரண்டு நூற்றாண்டில் நிலைபெறுகிறது. அவற்றுட் சில, சங்க இலக்கியங்களில் காணப்படாத குறிப்புகளை உணர்த்துமாற்றால், காலத்தால் சங்கவிலக்கியங்கட்குப் பிற்படுகின்றன. படவே, சங்க இலக்கியங்கள் கி.பி. முதல் நூற்றாண்டிற்குப் பிற்பட்டனவல்ல என்பது உறுதியாகிறது. கே.ஜி. சேஷையர் முதலியோர் சேர வேந்தர்களைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடிய இருந்தனரென்று கூறுகின்றனர்; அவர் கூறுவன வேறு வகையால் நிறுவப் பட்டமையால், சங்க இலக்கியங்களில் கீழெல்லை கி.பி. முதல் நூற்றாண்டென்று கொள்வதே தக்கது.


  1. P.T.S: Iyengar’s History of the Tamils P. 29, 328;
  2. R.V. vii. 101: 14;
  3. Tit. Arany. ii. 1.1.
  4. P.T.S.Iyengar’s History of the Tamils. P. 29, 328;
  5. R.C. Dutt’s Ramayanam ;
  6. வியா, பாரதம்: ii: 34 1271; V. 22: 656.
  7. பரசுராமன் நாடுபெற்ற இச் செய்தியைச் சேக்கிழாரும் மலைநாட்டைக் கூறுமிடத்து, “பாசுபெறு மாதவ முனிவன் பரசுராமன் பெறு நாடு” (விறன்மிண்டர். 1.) என்று குறிப்பது ஈண்டு நினைவு கூரத் தக்கது. இன்றும் அந் நாட்டு வேதியர் சங்கல்பம் கூறுமிடத்து, “பரசுராம க்ஷேத்ரே” என்று சொல்வது வழக்கமாகவுளது.
  8. W. Logan’s Malabar Manual. P. 246.
  9. W. Woodburn Hyde’s Ancient Greek Mariners. P. 206
  10. T.V.C. Manual (Nagam Iyer) Vol. i. P 238;
  11. புறம். 66.
  12. W. Woodburn Hyde’s Ancient Greek Mariners P. 215-32, 209-14;
  13. W. L. Malabar P. 252
  14. W. Logan’s Malabar P. 256.
  15. Ibid P. 254.
  16. அகம். 149.
  17. Ibid P. 253. M Crindler’s Translation of the periplus of the Erythraen Sea 53-6.
  18. Inscriptions of Sri. Vira Rajendra (Rajakersari Varman) S.I.I. Vol. ii. No. 20;
  19. Velvikudi grant, Ep. Indi. Vol. xvii. No. 16
  20. தொல், சொல், எச்ச:5;
  21. காத்தியாயனர், பதஞ்சலி முதலியோர் கேரளரென வழங்கியுள்ளனர்.
  22. S.I.I. Vol v. No. 788.
  23. Ibid. No. 784.
  24. M. EP, A. R. No 358 of 1927.
  25. S.III. Vol v. 782