உள்ளடக்கத்துக்குச் செல்

சேரமன்னர் வரலாறு/1. சேரநாடு

விக்கிமூலம் இலிருந்து
திருச்சிற்றம்பலம்.


சேர மன்னர் வரலாறு


1. சேர நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே நின்று

நித்தம் தவஞ்செய் குமரியெல்லை-வட

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு- பாரதியார்

பண்டை நாளைத் தமிழகம், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் என்பவராற் சிறப்பித்துக் கூறப்படுவது. வடவேங்கட மலைத்தொடர் வடக்கே வட பெண்ணை யாற்றங்கரை வரையில் தொடர்ந்து தமிழகத்துக்கு வடவெல்லையாய் நிற்பது. தென்குமரி யென்பது தென்கோடியிலுள்ள குமரிமலையாகிய தென்னெல்லை. கிழக்கிலும் மேற்கிலும் கடலாதலால் அவை குறிக்கப்படவில்லை.

பண்டை நாளில் இத் தமிழகம் சேர சோழ பாண்டியரென்ற மூவேந்தருக்கு உரியதாய், முறையே, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்று பெரும் பிரிவுற்று விளங்கிற்று. பண்டைத் தமிழாசிரியன்மாரும் “பொதுமை சுட்டிய மூவருலகம்[1]” என்றும், “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு[2]” என்றும் கூறியுள்ளனர். வடக்கே வேங்கடம் முதல் தெற்கே புதுக்கோட்டைக்கு அண்மையிலோடும் வெள்ளாறு வரையிற் சோழ நாடும், வெள்ளாற்றுக்கும் தென்குமரிக்கும் இடைப்பகுதி பாண்டிய நாடும், மேலைக் கடலுக்கும் மேலை மலைத் தொடருக்கும் இடையிலுள்ள நிலப்பகுதி சேர நாடு மாகும் ஆயினும், ஏனைச் சோழ பாண்டிய நாடுகளைப் போலாது தனது மொழியும் பண்பாடும் தொன்மை வரலாறும் இழந்து, முற்றிலும் வேறு நாடாகக் காட்சி யளிக்கும் வகையில், சேர நாடு தமிழ் நலம்குன்றி விட்டமையின், அதன் பண்டைய எல்லை நன்கு ஆராய்ந்தல்லது வரையறுத்துக் கூற முடியாத நிலையில் உளது.

இங்கே பண்டை நாள் என வழங்குவது கடைச்சங்க காலமாகும். அக் காலத்தே சேர நாடு செந்தமிழ் நலம் சிறந்து தமிழ் கூறும் நல்லுலகமாக விளங்கிற்று. சங்ககால நூல்களை நன்கு பயின்றால் அன்றிச் சேர நாட்டின் பண்டைநாளை நிலையினை அறிவது அரிது; அது பற்றியே சோழர்களைப்பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் வரலாற்று நூல்கள் (History) உண்டானது போலச் சேர நாட்டுக்கு வரலாறொன்றும் தோன்றவில்லை. சேர நாடு பிற்காலத்தே கேரள நாடென வழங்கத் தலைப்பட்டது. அதன்பின், கேரளோற்பத்தி, கேரளமான்மியம் என்ற வரலாற்றுப் போலிகள் உண்டாயின. சேர நாடென்பது கேரள நாடானதற்கு முந்திய நிலையாதலால், அதன் தொன்மைநிலை அறிதற்குச் சேர மன்னர்களையும் சேரநாட்டு மக்களையும் பற்றிக் கூறும் சங்க இலக்கியங்கள் சான்றாகின்றன.

இச் சங்க இலக்கியங்கள் பலவும் தொகைநூல்களாதலால், இவற்றில் சேர நாட்டின் வடக்கும் தெற்குமாகிய எல்லைகள் இவையென வரையறுத்தறிதற்குரிய குறிப்புகள் விளக்கமாக இல்லை. ஆயினும், தென் கன்னடம் மாவட்டத்திலுள்ள குதிரை மலையும், ஏழில் மலையும், குடகு நாட்டிலுள்ள நறவுக்கல் பெட்டா மலையும். நீலகிரியிலுள்ள உம்பற் காடும், மலையாள மாவட்டத்திலுள்ள வயநாட்டுப் (Wynad) பாயல் மலையும், குறும்பர் நாடு தாலூகாவிலுள்ள தொண்டியும், கொச்சி நாட்டிலுள்ள கருவூர்ப்பட்டினமும், திருவஞ்சைக்களமும் கொடுங்கோளூரும், பேரியாறும் பிறவும் சேரர்க்குரியவாகக் கூறப்படுகின்றன. மேலை மலைத் தொடரின் தென்கோடியில் நிற்கும் பொதியிலும் தென்குமரியும் பாண்டியர்க் குரியவாகக் குறிக்கப் படுகின்றன.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மேலைக் கடற்கரைப் பகுதிக்கு வந்து சென்ற யவன அறிஞரான தாலமியென்பவரது குறிப்பால், அப்போது சேர நாட்டுக்கு வடக்கில் வானவாறும் (Honawar), கிழக்கில் மலையும், தெற்கில் கொல்லத்து ஆறும், மேற்கில் கடலும் எல்லைகளாக இருந்தன என ஆராய்ச்சியாளர்[3] உரைக்கின்றனர். வானவாறென்பது வட கன்னட நாட்டின் தென்கோடியில் இருக்கும் கடற்கரையூர்; வட கன்னடத்தையும் தென் கன்னடத்தையும் எல்லையாய் நின்று பிரிக்கும் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் வட கரையிலேயே இருக்கிறது. அந்த ஆற்றுக்கும் வானவாறென்பது பெயர். வானவாறு தோன்றும் இடம் வானவாசி நாட்டைச் சேர்ந்தது. அதனால் சேர நாட்டின் வடக்கில் வானவாசி நாடு உளது என்றற்குப் போதிய இடமுண்டாகிறது.

இனி, எழு கொங்கணத்துக்கும் கேரள நாட்டுக்கும் கோகரணம் எல்லை என்று சிலர் கூறுவர். வேறு சிலர், கொங்கணம் ஏழனையும் தன்னகப்படுத்தி வடக்கிற் சூரத்து வரையில் சேர நாடு பரவியிருந்தது என்பர்[4]. கொங்கணம் ஏழாவன: கிராத நாடு, விராத நாடு, மராட்ட நாடு, கொங்கண நாடு, கூபக நாடு, ஐவ நாடு, துளு நாடு என்பன. அவற்றுள் கொங்கணம் சங்க இலக்கியங்களில் கொண்கானம் என வழங்கும்; அஃதாவது, தென் கன்னட மாவட்டத்தின் பெரும் பகுதியெனக் கொள்க. கொண்கானம் வேறு, கொங்கு நாடு வேறு. கொண்கான மென்பது மேலே மலைத் தொடர்க்கு மேற்கில் கடல் சார்ந்து மலைக்கும் கடலுக்கும் இடையிற் கிடப்பது. கொங்கு நாடு மேலே மலைத் தொடர்க்குக் கிழக்கில் உள்ள உண்ணாட்டுப் பகுதி. ஐவ நாடென்பது நாக நாடெனவும் வழங்கும்; அஃது இப்போதுள்ள குடகு நாட்டின் ஒரு பகுதி; அந் நாட்டிலுள்ள சோமவாரப்பேட்டை யென்னும் ஊர்க்குப் பழம் பெயர் நாகரூர் என்பது[5]. வட கன்னட மாவட்டத்தையும் ஐவ நாடு என்பர். அப்பகுதியில் தோன்றி மைசூர் நாட்டிலோடு நாக நதியின் பெயர் இதனை வற்புறுத்துகிறது. மணிமேகலை ஆசிரியர், “நக்க சாரணர் நாகர்வாழ் மலைப்பக்கம்[6]” என்று குறிப்பது இந்த நாக நாடாகலாம் என அறிஞர் சிலர் கருதுகின்றனர்.

இவ்வாற்றால் சேர நாட்டின் வடவெல்லை இன்றைய வட கன்னட நாட்டகத்தும் பரவியிருந்த தென்பது தெரிகிறது.

மேனாட்டறிஞரான பிளினி (Pliny) என்பாரது குறிப்பை ஆராயுங்கால், சேர நாட்டின் தென் னெல்லை இப்போதுள்ள கொல்லமும் கோட்டாற்றுக் கரையும் (Kottarakkara) எனத் தெரிகிறது. மேலும், திருவிதாங்கூரின் : தென் பகுதி முற்றும் பாண்டிய நாடாகவே இருந்ததென்றும் விளங்குகிறது. பெரிப்புளூஸ் நூலாசிரியர் குறிப்பும் இம் முடிபையே வற்புறுத்துகிறது.

இங்கே காட்டிய மேனாட்டறிஞர் குறிப்புகள் இப்போதைக்கு 1800 ஆண்டுகட்கு முற்பட்டன. அந் நாளில் விளங்கிய தமிழ்ச் சேர நாட்டின் தென் னெல்லை கொல்லத்தோடு நின்ற தென்பது தெளிவாம். அந்த அறிஞர்கள் குறிக்கும் தொண்டி, முசிறி முதலியன சேரர்களைப் பாடிய சங்க இலக்கியங்களிலும் காணப்படுவன. இவ்வாறே வட கன்னட நாட்டில் வழங்கும் செய்திகளால் பண்டைநாளைச் சேர நாடு கோகரணத்துக்கு வடக்கேயும் பரந்திருந்தமை தெளிவாய்த் தெரிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோரணத்தைப் பாடிய திருப்பதிகத்தால்[7] அஃது அவர் காலத்தே தமிழ் நலம் பெற்று விளங்கியதென்று தெரிகிறது. வட கன்னட நாட்டு ஹோனவார் பகுதியில் ஹோனவாருக்குத் தெற்கே 25கல் தொலைவில் இருக்கும் பாட்கல் (Bhatkal) என்னும் ஊரில் இருக்கும் கோயில்களில் இரண்டு தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன[8]. இக் குறிப்புகளால் சேர நாட்டின் வடவெல்லை வட கன்னடத்துக் கோகரணம் வரையில் பரவியிருந்ததென்ற கொள்கை மேற்கொள்ளத் தக்கதாகின்றது.

பிற்காலத்தே சேரநாட்டுக்கு எல்லை பலவகை யாகக் கூறப்படுவதாயிற்று. வடக்கிற் பழநாட்டுக்கும் கிழக்கிற் செங்கோட்டுக்கும், மேற்கிற் கோயிக் கோட்டுக்கும், தெற்கிற் கடற்கோட்டிக்கும் இடையில் கிடந்த சேர நாடு என்பது காவதம் பரப்புடையதென்பது ஒருவகை; எண்பது காவதப் பரப்புடைய சேரநாட்டுக்கு வடக்கிற் பழனியும் கிழக்கில் தென்காசியும் மேற்கில் கோயிக்கோடும் தெற்கிற் கடற்கோடியும் எல்லை யென்பது மற்றொரு வகை[9]; வடக்கிற் பழனியும் கிழக்கிற் பேரூரும் தெற்கிலும் மேற்கிலும் கடலும் எல்லையாகக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் என்பது காவதப் பரப்புடையது சேரநாடு எனக் கூறுவது வேறொருவகை[10]. பழனிக்குப் பண்டை நாளைப் பெயர் பொதினி[11] என்பது; ஆவி நன்குடி யென்பதும் ஒன்று[12]; எனவே, பழனியை எல்லையாகக் கூறும் கூற்றிரண்டும் பிற்காலத்தன என்பது தானே விளங்கும். மலையாளம் மாவட்டத்தில் குறும்பர் நாடு தாலூகாவைச் சேர்ந்த ஒரு பகுதிக்குப் பழநாடு என்று பெயர் உண்டு. அதன் வடவெல்லை வடகரை யென்றும் அதனருகே வந்து கடலில் கலக்கும் ஆறு சேரவாறு என்றும் பெயர் பெறும். வடகரை யென்னும் ஊர் படகரா (Badakara) என்றும், அந்த ஆறு தோன்றும் இடத்தருளேயுள்ள ஊர் சேரபுரம் என்றும் இப்போது வழங்குகின்றன. இதனால் ஒரு காலத்திற் சேர நாடு வடக்கிற் பழநாட்டோடு நின்றமை தெரிகிறது. இதற்கு வடக்கில் கோகர்ணத்தையும் பின்பு ஹோன வாற்றையும் எல்லையாகக் கொண்டு கொண்கான நாடு விளங்கிற்று.

இங்கே கண்ட பழநாடு பிற்காலத்தே ஓர் அரச குடும்பத்தினர் ஆட்சியிலிருந்தது; அவர்கள் பின்னர்க் கிழக்கில் மைசூர் நாட்டையடைந்து, அங்கே அஸ்ஸன் மாவட்டத்தில் மஞ்சரபாது தாலூகாவைச் சேர்ந்த அயிகூர் என்னுமிடத்தேயிருந்து இறுதியில் மைசூர் வேந்தர்க்கு அடங்கி யொடுங்கினர்[13]. இந்தப் பழநாட்டு வேந்தர் தம்மை நாயக்க மன்னர் என்பதனால் அவரது தோற்றவொடுக்கங்கள் பண்டை நாளைச் சேர நாட்டைக் காண்டற்குத் துணையாகாமையால் அதனை இம்மட்டில் நிறுத்தி மேலே செல்வாம்.

இனி, “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்[14]” என வரும் தொல்காப்பிய நூற்பாவொன்றுக்கு உரை கண்ட தொல்லாசிரியர்கள், அப் பன்னிரண்டையும், பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டிய நாடு, குட்ட நாடு, குட் நாடு, கற்கா நாடு, பண்ணி நாடு, அருவா நாடு, அருவாவடதலை, சீத நாடு, பூழி நாடு, மலாடு என்று குறிக்கின்றனர். பிற்காலத்தறிஞர் பொங்கர் நாடு ஒளி நாடு என்ற இரண்டையும் விலக்கி, வேணாடு, புன்னாடு என்ற இரண்டையும் பெய்து கூறுவர். இவற்றுள் தென்பாண்டி, குட்டம், குடம் என்பன நன்கு தெரிகின்றன. தொண்டை நாட்டின் தென்பகுதியின் கடல் சார்ந்த நிலம் அருவா நாடெனக் கல்வெட்டுக்களால் குறிக்கப்படுவதால், அருவா நாடும் அருவா வடதலையும் தொண்டை நாட்டைக் குறிக்கின்றமை பெறப்படும். கற்கா நாடென்பது இந் நாளைக்கு குடகு நாட்டைக் குறிக்கிறதென்பது அந்த நாட்டு நூல் வழக்கால் இனிது தெரிகிறது. திண்டுக்கல்லுக்கு மேற்கிலுள்ள பண்ணிமலை பன்றிமலை யென்று பெயர் வழங்கினும் அப் பகுதியைப் பண்ணிநாடெனக் கொள்ளலாம். இப்போது, தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் என்ற ஊர்களிருக்கும் நாட்டுக்குச் சிலர் பூழி நாடெனப் பெயர் கூறுவராயினும், அங்குள்ள கல்வெட்டுகள் அப் பகுதியை அளநாடு எனக் குறிக்கின்றன[15]. இனி, மலபார் மாவட்டத்தில் பொன்னானி தாலூகாவின் தென் பகுதி இன்றும் பூழி நாடு எனப்படுகிறது[16]. மலாடென்பது திருக்கோயில் லூர் தாலூகாவின் மேலைப் பகுதியென்று கல்வெட்டுக் களால் தெரிகிறது. காவிரி பாயும் நீர் நாடு சீதநாடு எனப்பட்டதெனக் கொள்ளினும், பொங்கர் நாடு, ஒளி நாடு என்பன இவையெனத் தெரியவில்லை. ஆனால், பொங்கர் நாட்டைத் தெய்வச்சிலையார் வையையாற்றின் தென்கிழக்கிலுள்ள பகுதி யென்பர். வேணாடென்பது, மேனாட்டு யவனர் குறிப்புகளால் தெற்கெல்லை (தெக்கலை)க்கும் வடக்கெல்லை (வக்கலை)க்கும் இடைப் பகுதி யென்று அறிகின்றோம். புனனாடென்பதைத் புன்னாடெனக் கொள்ளின், அது, கொங்கு நாட்டின் வட பகுதியிலுள்ள நாட்டைக் குறிப்பதாம்; அப் பகுதி புன்னாடென்றே அங்குள்ள கன்னட நூல்களில் குறிக்கப் பெறுகிறது.[17]

இவ் வகையில் தமிழ் மக்களும் தமிழ் நூல்களும் மேனாட்டறிஞர்களும் கூறுவனவற்றைக் கொண்டு நோக்கின், மேலைக் கடற்கரைப் பகுதி, தென்பாண்டி நாடு , வேணாடு, குட்ட நாடு, குட நாடு, பூழி நாடு, கற்கா நாடு என்ற ஆறு நாடுகளாக விளங்கியிருந்ததாம். கற்காநாடு கொண்கான நாடெனவும் வழங்குதலால், இவற்றை வடக்கிலிருந்து முறையே கொண்கான நாடு, குடநாடு, குட்டநாடு, வேணாடு, தென் பாண்டி நாடு, (குட்ட நாட்டைச் சேர்ந்திருப்பதாகக் கூறப்படும்) பூழிநாடு என்ற ஆறுமாகக் கோடல் வேண்டும்.

இனி, இப் பகுதிகளைத் தனித் தனியே எல்லை கண்டு தெளியுமுன், இந் நாட்டின் வழங்கும் நூல்களைக் காண்பது முறை. கொண்கான நாடு கன்னட மொழி

(Upload an image to replace this placeholder.)

வழங்கும் நிலமாகவும், வேணாடும் குட்டநாடும் குடநாடும் மலையாள மொழி வழங்கும் நிலமாகவும் மாறிவிட்டன. தென்பாண்டி நாட்டுப்பகுதி மலையாள வேந்தர் அரசியற் கீழ் அகப்பட்டிருந்து இப்போது தமிழக அரசில் பண்டு போல் சேர்ந்துவிட்டது. ஏனைப் பகுதி முற்றும் இப்போது கேரள நாடு என்ற பெயர் தாங்கி நிலவுகிறது. இப் பகுதியின் தொன்மை கூறுவனவாகக் கேரளாற்பத்தி கேரள மான்மியம் என்ற இரு நூல்கள் உள்ளன. இவற்றின் அடிப்படை இக்கேரள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஒரு கூறு என்பதை மறந்து நிற்கிறது; கேரளரென்பது சேரலர் என்ற தமிழ் மொழியின் சிதைவென்பதை யறியாது தனித் தோற்ற மென்னும் மயக்கத்தில் இவை முளைத்து உருவாகி இருக்கின்றன.

கேரளோற்பத்தி, கேரள மான்மியம் என்ற இவ்விரு நூல்களும் கேரள நாட்டை நான்காக வகுத்துத் துளுநாடு, கூபகநாடு, கேரளநாடு , மூசிக நாடு என்று கூறுகின்றன. கோகரணம் முதல் பெரும்புழையாறு வரையில் உள்ளது குளுநாடு; பெரும்புழையாறு என்பது ஏழில்மலைப் பகுதியில் ஓடும் பழையனூராறாக இருக்கலாம் என்பர். பெரும்புழையாறு முதல் புதுப்பட்டினம் வரையில் உள்ளது கூபக நாடு என்றும், புதுப்பட்டினத்திலிருந்து கன்னெற்றி வரையில் உள்ளது கேரள நாடென்றும், கன்னெற்றிக்கும் தென்குமரிக்கும் இடையில் கிடப்பது மூசிக நாடென்றும் கூறப்படு கின்றன. மூசிக நாடு கூசல நாடெனவும் பெயர் கூறப்படும். கன்னெற்றி யென்பது தென்கொல்லமா மென இராபர்ட்டு சூவெல் கூறுகின்றார்[18] . இவை பெரும்பாலும் நூல் வழக்கமாய் நின்றெழிந்தனவே யன்றி, இடைக்காலச் சோழ பாண்டிய கொங்கு கன்னட வேந்தர் காலத்தும் நடைமுறையில் இருந்ததில்லை; இச் செய்தி இந் நாட்டுக் கல்வெட்டுகளால் விளங்குகிறது[19]. இவற்றுள் துளு நாடென்பது கோசர்கள் வாழும் நாடு[20] என்று மாமூலனாரால் அகநானூற்றிற் குறிக்கப்பெறுகிறது. வானவாற்றுக்கு அண்மையில் இருக்கும் பாழி நகரம் வேளிர்க்குரியதெனப் பரணர் கூறுகின்றார்[21]. இப்பாழிநகர் இப்போது பாட்கல் (பாழிக்கல்) என வழங்குவதால், கொண்கானத்தின் வடக்கில் இருந்த நாடு வேளரிது வேளகம் (Belgaum) என்னும் வேணாடு என்பது இனிது காணப்படும். பிற்காலத்தே வேணாட்டின் வட பகுதி வேளகமென்றும் தென்பகுதி வானவாசி யென்றும் வழங்கலாயின. கொண்கான நாட்டிலுள்ள ஏழில்மலை பிற்காலத்தே எலிமலை யெனக் குழறிக் கூறப்படுகிறது. இக்குழறுபடையை அடிப்படையாகக் கொண்டு கேரள நாட்டு வடமொழியாளர் மூசிக நாடு என்று ஏழில் மலைப் பகுதிக்குப் பெயர் வழங்கியிருக்கின்றனர்[22].

இனி, இடைக்காலத்தும் பிற்காலத்தும் வாழ்ந்த திருவிதாங்கூர் வேந்தர்கள் தம்மை வேணாட்டடிகள் என்று கூறிக் கொள்வதை அவர் தம் கல்வெட்டுகள்[23] வேணாடென்பது வானவநாடு[24] என்பதன் திரிபு எனக் கூறுகின்றனர். திருவிதாங்கூர் உள்ள பகுதியை மேனாட்டு யவனர் ஆய் (Ave) நாடென்றதும், ஆய் என்பான் தமிழில் வேளிருளொருவன் என்பதும், எனவே, அப் பகுதி வேணாடமென்பதும் அறியாமை யால், கேரள வரலாறுடையார் இவ்வாறு கூறலாயினர் எனக் கொள்ளல் வேண்டும்.

மேலைக் கடற்கரைப் பகுதியான சேர நாட்டின் வடக்கிற் பகுதி கொண்கான நாடு. அதன் தெற்கில் உள்ளது குடநாடு; அதனையடுத்து நிற்கும் தென்பகுதி குட்டநாடு; அதன் தெற்கு வேணாடு என்பது முன்னர்க் காணப்பட்டது, சேர நாட்டு வடகரைக்கும் கோகரணத் துக்கும் இடை நின்ற நாடு, கொண்கான நாடு; இது துளுநாடென்றும் வழங்கியதுண்டு. பொன்வானி யாற்றுக்கும் வடகரைச் சேரவாற்றுக்கும் இடையில் லுள்ளது குட நாடு; பொன்வானி இந் நாளில் பொன்னானியென வழங்குகிறது. கொல்லத்துக்கும் பொன்வானிக்கும் இடையில் உள்ளதாகிய நாடு குட்ட நாடாகும். இதனையே சுருங்க நோக்குங்கால் திருவாங்கூர் நாட்டுக் கோட்டையம் பகுதிக்கும் வடக்கில் மலையாளம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டையம் பகுதிக்கும் இடையே இரண்டையும் தன்னுள் அகப்படுத்தி நிற்கும் நிலப்பகுதி குட்ட நாடென்பது இனிது விளங்கும். திருவிதாங்கூர் நாட்டுக் கோட்டயம். பகுதியலுள்ள அம்பலப்புழை, கருநாகப் பள்ளி, செங்குணான்சேரி, மூவாத்துப்புழை என்ற தாலூகாக்கள் அடங்கிய பகுதி அந் நாட்டவரால் குட்ட நாடென்று வழங்குகிறது; மலையாள மாவட்டத்தி லுள்ள பொன்னானி தாலூகாவின் தென்பகுதி குட்ட நாடென அப்பகுதியில் வாழும் மக்களால் பெயர் கூறப்படுகிறது. இதனால் குட்டநாட்டின் பரப்புத் தெளிவாகத் தோன்றுகிறது. பொன்னானி தாலூகாவுக்கு வடக்கிலுள்ள ஏர்நாடு தாலூகா அந்நாட்டவரால் இராம நாடென்று குறிக்கப்படுகிறது; இதன் பழம் பெயர் ஓமய நாடு[25] என்பது. இடைக்காலச் சோழ வேந்தர்களின் கல்வெட்டுகள்[26]. இதனை இராம குடநாடு என்று குறிக்கின்றன. இந் நாட்டுக்கும் இதற்கு வடக்கிலுள்ள குறும்பர் நாடு தாலுகாவுக்கும் கிழக்கிலுள்ள குடகு நாட்டவர் தம்மைக் குடவர் என்றும், தம்முடைய நாட்டைக் குட நாடென்றும்[27] கூறுகின்றனர். முன்னே கண்ட குடநாட்டின் வடக்கில் நிற்கும் ஏழிற்குன்றம் - கொண்கான நாட்டது என்றும், அது நன்னன் என்ற வேந்தனுக்குரியதென்றும்[28] அந் நன்னனை நன்னன், உதியன்[29] என்றும் சங்கச் சான்றோர் கூறுதலால், கொண்கான நாடு சேரர்க்குரிய குடநாட்டதென்பது தெளியப்படும்.

இவ்வாறே தெற்கில் வக்கலைக்கும், வடக்கில் கோகரணத்துக்கும் இடையில் குட்டம் குடம் என இரு பெரும் பகுதியாகத் தோன்றும் சேர நாட்டுக்குத் தெற்கில் வேணாடும், வடக்கில் கொண்கான நாடும் எல்லை களாய் விளங்கின. இந்தச் சேர நாட்டை ஏனைத் தமிழ் நாட்டினின்றும். பிரித்து வைப்பது மேற்கு மலைத் தொடர். மேற்கு மலைத்தொடர் என்பது மேனாட்டவர் குறித்த வெஸ்டர்ன் காட்சு (Western Ghats) என்ற பெயரின் மொழிபெயர்ப்பு; வடவர் இதனை சஃயாத்திரி என மொழிபெயர்த்து வழங்குவர்; இதன் பழமையான தமிழ்ப் பெயர் வானமலை என்பது.

தெற்கிற் பொதியின் மலையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் இம் மலைத் தொடர், பம்பாய் மாகாணத்து தபதி நதிக்கரை வரையில் தொடர்ந்து நிற்கிறது. இதன் நீளம் 1000கல். வட கன்னட மாவட்டத்தில் இரு சிறு பிளவுகளும், இடையில் மலையாள மாவட்டத்தில் ஒரு பெரும் பிளவும், நாகர்கோயிற் பகுதியில் ஒரு சிறு பிளவும் இம் மலைத் தொடரில் உள்ளன. இவற்றுள் மலையாள மாவட்டத் திலுள்ள பிளவுபோல ஏனைய பிளவுகள் இடைக் காலத்தில் மக்கட் போக்கு வரவுக்குப் பெருந்துணை செய்யவில்லை. இப் பெரும் பிளவைப் பாலைக் காட்டுக் கணவாய் என்பது வழக்கம். இப் பிளவின் வடபகுதி வடமலைத் தொடரெனவும், தென்பகுதி தென்மலைத் தொடரெனவும் வழங்கும். இப் பிளவின் இடையகலம் இருபது கல். சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வழியாக மேலைக் கடற்கரைக்குச் செல்லும் இருப்புப் பாதையும் பெருவழியும் (Highway) இப் பிளவினூடே செல்கின்றன. இப் பிளவில் பாரதப் புழை யென்ற பெயர் தாங்கி வரும் ஆறு, பொன்வானி யாற்றோடு கலந்து மேற்கே ஓடி மேலைக் கடலிற் சென்று சேர்கிறது. இப் பிளவின் கீழைவாயிலாகப் பாலைக்காடு நிற்கிறது.

இப் பிரிவின் வடமலைத் தொடர்களிற் காணப்படும் ஏழிழ்மலையும், குதிரை மலையும், தென்மலைப் பகுதியில் பொதியமும் நாஞ்சில் மலையும், அயிரை மலையும், நேரி மலையும் பிறவும் புலவர் பாடும் புகழ்பெற்றன.

சேர நாட்டின் வட பகுதியான குடநாட்டு மலைகளுள் ஏழில்மலை 855 அடி உயரமுள்ளது. இது நிற்கும் பகுதி கொண்கான மென்று முன்பே கூறப் பட்டது. இதுவே கொங்கண மென்றும் இங்கே வாழும் கொண்கர்கள் கொண்கானிகள் என்றும் வழங்கப் படுவது நாளடைவில் உண்டான சிதைவு. பண்டை நாளைத் தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்த இசைக் கருவிகளுள் ஏழில் என்பது ஒன்று; அது போலும் தோற்றத்தை இம் மலையும் கொண்டிருந்தமையின் பண்டையோர் இதனை ஏழில்மலை யென்றனர். இவ்வாறே குதிரைமுகம் போலக் காட்சியளிக்கும் மலைமுடியைக் குதிரைமலை யென்றும் வழங்கினர்[30]. இவ் வெழில் மலைக்குக் கிழக்கில் தோன்றும் குன்றுகளில் ஒன்று நீலகிரி எனப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்றபோது தங்கினதும் இவ்விடத்தேயாம்; இதற்கு இங்குள்ள செங்கோட்டூர் இனிய சான்று பகருகிறது. அக்காலை, அவன்பால் கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் வந்து தமது கூத்தால் அவனை மகிழ்வித்துப் பரிசில் பெற்று இன்புற்றனரென்று இளங்கோவடிகள்[31] இயம்புகின்றார். மேலை

(Upload an image to replace this placeholder.)

நாட்டினின்று வாசுகோடகாமா வந்தபோது, அவன் துணைவர், மேனாட்டுக் கடல்வணிகர்க்கு முதற்கண் இப் பகுதியில் காட்சி தருவது இவ் வேழில் நெடுவரையே என்று கூறினர்[32].

மேனாட்டவர் முதற்கண் அப் பகுதிக்கு வந்த போது, அங்கே துளுவும் கன்னடமும் கலந்து தமிழ் தனது செந்நிலை வழுவி வந்த காலமாகும். அதனால் அவர்கள் ஏழில்மலை யென்னாது எலிமலை யென்றும், அங்கே எலிகள் மிக நிறைந்திருந்தன என்றும் தவறு கூறியிருக் கின்றனர். அது கேட்ட அம் மேனாட்டவர் தம் குறிப்பில் ஏழில்மலையை எலிமலை யென்றே குறித்துள்ளனர். இன்றும் அஃது ஆங்கிலத்தில் எலிமலை யென்றே வழங்குகிறது. பின்வந்த கொரீஇயா (Correa) என்பவர் அங்கு வாழ்ந்தவருள் கற்றோர் சிலரை யுசாவினாராக, அவர்க்கு அவர்கள் ஏழில்மலையைச் சப்த சயிலம் என்று வடமொழிப்படுத்துக் கூறினர். ஆயினும், அது பெருவழக்கில் இல்லை. அவர்க்குப் பின்னே வந்த மார்க்கோ போலோ , ஏழில்மலை நாட்டை எலிமலை நாடென்றும், இபன்பாதுதா, இலி யென்றும் குறித் துள்ளனர். கேரளாத்திரி வேந்தர்களின் அரண்மனை யொன்று ஏளி கோயிலகம் என்ற பெயரால் இவ்வேழில் மலையின் வடபுறத்தடியில் உளது. இதனடியில் இதன்கண் ஒழுகும் அருவிகள் கூடிச்செல்லும் சிற்றாறு நலம் சிறந்து சென்று கடலோடு கலக்கின்றது. அக் கலப்பால் உப்புக்கரிக்கும் கரிய நீரில் முதலையின் பேரினங்கள் வாழ்கின்றன; அவற்றால் அங்கு வாழும் மக்கட்கும் விலங்குகட்கும் உயிர்கேடு உண்டாவது இயல்பு.

தென் கன்னட மாவட்டத்துக்கும் மைசூர் நாட்டுக்கும் எல்லையாய் நிற்கும் மலைத்தொடரில் உள்ள முடிகளுள் ஒன்று குதிரை மலை யென்பது. இதன் உயரம் 6215 அடி : இதனை இப்போது சஞ்ச பருவதம் (சம்ச பருவதம்) என வடமொழியாளர் வழங்குவராயினும், பண்டைத் தமிழகத்துக்கு உரியதென உரிமை காட்டும், தமிழ்ப் பெயரைக் கைவிடாது அங்கு வாழும் பொது மக்கள் குதிரை மூக்கு மலை (Gudramukh) என்றே வழங்குகின்றார்கள். இதன் மேற் பொழியும் மழைநீர் ஒருபால் கிருட்டினையாற்றையும் ஒருபால் காவிரி யாற்றையும் அடைகிறது. கடலிலிருந்து காண்போர்க்கு இது குதிரை முகம் போல் காட்சியளித்தலால் இப் பெயர் பெறுவதாயிற்று.[33]

தென்னம் பொருப்பு எனப்படும் தென்மலைத் தொடர் 200கல் நீளமுள்ளது; இது கொங்கு நாட்டிற்கும் பாண்டி நாட்டிற்கும் மேலெல்லையாய் நிற்கிறது. இதன்கட் காணப்படும் முடிகளுள் திருவிதாங்கூர் நாட்டுக் கோட்டையம் பகுதியில் நேரிமலையும் அயிரைமலையும் பேரியாற்றின் கரையில் நிற்கின்றன. கொச்சி நாட்டை அடுத்து வடகீழ்ப் பகுதியில் நிற்கும் நெல்லியம்பதி மலைகளுள் பாதகிரி என்பது ஒன்று; இதனை மிதியாமலா என்றும் மியான்முடி யென்றும் கூறுவர். இதன் உயரம் 5200 அடி. இதன் அடியிலுள்ள நாட்டவர், குறு முனிவர் பொதிய மலைக்கு வந்தபோது அவருடைய செருப்படி அழுந்தியதனால் அம் முடி செருப்புப் போலாயிற்றென்றும், இது சித்தர் வாழிட மாதலால் யாரும் இதன் மேல் கால் வைத்து ஏறக் கூடா தென்பது பற்றி மிதியாமலையென இதற்குப் பெயரெய் திற்றென்றும் உரைக்கின்றனர். செருப்பென்பதன் பொதுமை நீக்கி மலையைச் சிறப்பாக உணர்த்தல் வேண்டிச் சங்கச் சான்றோர், “மிதியல் செருப்பு” என்றும், அது பூழி நாட்டுக்குரியதென்பது தோன்ற “மிதியல் செருப்பின் பூழியர்[34]” என்றும் இசைத்துள்ளனர்.

இச் சேரநாட்டு மேற்கு மலைத் தொடரில் தோன்றி இழிந்தோடும் ஆறுகள் பல. அவற்றுள், தமிழ்ச் சான்றோர் பரவும் புகழமைந்த பேராறுகளுள் காவிரியும் வையையும் தண்ணான் பொருநையும் பேரி யாறும் சிறப்புடையனவாம். இவற்றுட் காவிரியாறு, சேரரது குட நாட்டில் தோன்றித் தன்னைப்போல் தோன்றிவரும் ஏனைச் சிற்றாறுகளோடு கூடிக் கொங்கு நாடு கடந்து சோழ நாட்டிற் பாய்ந்து கடலிற் கலக்கும் சிறப்புடையது. இதனால் சோழநாடே பெரும்பயன் எய்துவது பற்றி, இது சோழர்க்குரியதாய் நிலவுகிறது; சோழ நாட்டுச் சோழ வேந்தரைப் பாடும் சான்றோர் காவிரிக்குச் சொன் மாலை சூட்டிச் சிறப்பிக்கின்றனர்; பாண்டியரது பாண்டி நாட்டு வையை யாறும் தென் மலையாளப் பொருப்பிலே தோன்றிப் பாண்டி நாட்டிற் படர்ந்து பயன்பட்டுக் கடலிற் கலந்து விடுகிறது. பாண்டி வேந்தரைப் பரவும் பாவலர் பலரும் இவ் வையை யாற்றை வான்புகழ் வயங்கப் பாடியுள்ளனர். தண்ணான் பொருநை, பொதியிலுக் கண்மைக் குன்றில் தோன்றித் தென்பாண்டி நாட்டிற் சிறந்து பரவித் தென்கடலிற் சென்று சேர்கிறது.

செந்தமிழ் நாட்டிற் சிறப்புடைய ஆறுகட்குத் தோற்றுவாயாய் விளங்குவது சேர நாடாயினும், அந்த நாட்டிலே தோன்றி அந் நாட்டிலேயே படர்ந்தோடி அந் நாட்டு மேலைக் கடலிற் கலக்கும் பெருமையாற் பிறங்குவது பேரி யாறாகும். இதுபற்றியே, சிலப்பதிகாரம் பாடிய சேரர் இளங்கோ சோழநாட்டுப் புகார்க் காண்டத்தில் காவிரியாற்றையும், மதுரைக் காண்டத்தில் வையை யாற்றையும் பாடிச் சேரர்க்குரிய வஞ்சிக் காண்டத்தில் பேரியாற்றைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கின்றார்.

ஏனைக் காவிரியையும் வையையும் போலப் பேரி யாற்றைப் பற்றித் தமிழ் மாணவர் நன்கறியும் வாய்ப்பு இலராதலால், அவர் பொருட்டு அதன் தோற்ற வொடுக்கத்தைக் கூறுதும்: மேலை மலைத் தொடரின் தென்மலைப் பகுதியில் சிவகிரிக் காட்டின் இடையே யுள்ள ஏரியினின்றும் வழிந்தோடுவது பேரியாறு. தொடக்கத்தில் பேரியாறு வடக்கு நோக்கி 10கல் அளவு சென்று முல்லை யாற்றோடு கூடிக்கொண்டு, மேற் சென்று, இரண்டு பெருமுடிகட்கிடையே அவற்றின் அடியைக் குடைந்து செல்லுகிறது. அவ்விடத்தே சென்னை யரசியலார் 1200 அடி நீளமும் 160 அடி உயரமுமுள்ள அணை யொன்று கட்டித் தேக்கி அதன் பெருக்கின் பெரும் பகுதியை வையை யாற்றிற் கலக்கும் சிற்றாறொன்றில் திருப்பிவிட்டனர். அவ்வணையின் கீழ்ச் செல்லும் பேரியாறு, மலைப்பிளவுகளின் வழியாய் மேலைக் கடற்கரைப் பக்கம் இறங்கத் தலைப்பட்டுச் சிறிது சென்றதும், அங்கே வந்து சேரும் பெருந்துறை யாற்றோடு கூடுகிறது; பின்பு அவ்விடத்தினின்றும் இறங்கி வருகையில் சிறுதாணி யெனப்படும் சிற்றாறு வந்து சேருகிறது. சிறிது தூரம் சென்றதும், முதற்கண் குடவாறு வந்து கூடப்பெற்றுச் சிறிது சென்றதும், கொடை வள்ளலான குமணனுக்குரிய முதிர மலையில் தோன்றிவரும் முதிரப்புழையாற்றை வரவேற்றுத் தழீஇக் கொண்டு வட மேற்கு மூலையாகச் சென்று கோகரணிப் பாறை யென்னுமிடத்தே நூறடி யாழத்திற் குதித்து எட்டுக் கல் தொலையில் வீழ்ந்து கிடக்கும் பெரும் பாறையின் அடியிலுள்ள முழைஞ்சினுட் புகுந்து மறைந்து நெடிது சென்று தலை காட்டுகிறது. நீர் மிகப் பெருகி வருங்காலத்தில் அப் பாறைமேல் வழிந்தோடுவது பேரியாற்றுக்கு இயல்பு. இவ் வண்ணம் வெளிப்பட்டு வரும் பேரியாறு வரவர வாயகன்று ஆழம் சிறந்து காட்டு மரங்களைச் சுமந்து செல்லும் பெருக் குடையதாகி, நேரிமங்கலத் தருகில் தேவி யாற்றோடும் அதற்குப் பின் எட்டுக் கல் தொலையில் இடியாறெனப் படும் இடைமலை யாற்றோடும் கூடி 1200 அடி அகலமுடையதாய் இயங்குகிறது. அவ்வளவில் பல குன்றுகட்கிடையே வளைந்தும் நெளிந்தும் செல்லும் இப் பேரியாறு ஆலப்புழையை நெருங்கியதும் இரு

கிளையாய்ப் பிரிகிறது. ஒரு கிளை ஆலப்புழையின் வடமேற்கில் சென்று அங்குள்ள காயலில் விழுகிறது; மற்றொன்று தெற்கில் வந்து பல கிளைகளாகப் பிரிந்து வீரப்புழைக் காயலிலும் திருப்பொருநைத் துறைக் காயலிலும் வீழ்ந்து விடுகிறது. வீரப்புழை வீரப்பொலி யெனவும் திருப்பொருநைத் துறை திருப்புனித்துறா எனவும் சிதைந்து வழங்குகின்றன. இதன் நீளம் 142 கல் என்று கணக்கிட்டுள்ளனர்[35].

கடலளவுக்கு 2800 அடி உயரத்தில் மலை முகட்டில் தோன்றி 60 கல் அளவு மலையிடையே நெளிந்து வளைந்து தவழ்ந்து தாவித் துள்ளிப் பரந்துவரும் பேரியாறு, அடர்ந்து படர்ந்து செறிந்து தழைத்து நிற்கும் பசுங்கானத்தால் திருமால் போல் இனிய காட்சி நல்கும். மேற்குமலைக் குவட்டில் அவன் மார்பிற் கிடந்து மிளிரும் முத்துமாலைபோல இனிய காட்சி நல்குகிறது. அதன் இரு கரையிலும் கோங்கமும் வேங்கையும் கொன்றையும் நாகமும் திலகமும் சந்தனமுமாகிய மரங்கள் வானளாவ ஓங்கி நிற்கின்றன. அவற்றின் பூக்களும் பசுந்தழைகளும் ஆற்றில் உதிர்ந்து அதன் நீரைப் புறத்தே தோன்றாதபடி மறைத்து விடுகின்றன. இவ்வியல்பை இளங்கோவடிகள்,

“கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை
நாகம் திலகம் நறுங்கா ழாரம்
உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து
மதுகரம் திமிறொடு வண்டினம் பாட
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாறு[36]

என எடுத்தோதுகின்றார்.

இச் சேரநாட்டு மலைத்தொடரிற் பாலைக்காட்டுக் கணவாயின் வடக்கிலுள்ள வடமலைத் தொடரிலும் தெற்கில் ஆனைமலை முதலாகவுள்ள தென்மலைத் தொடரிலும் ஆறுகள் பல உண்டாகின்றன. அவற்றுள், வடமலைத் தொடர் 800 கல் நீளமுடையது. அதன்கண் தோன்றும் சிறப்புடைய ஆறுகளை வானி யென்றும், தென்மலைத் தொடரில் தோன்றும் சிறப்புடைய ஆறுகளைப் பொருநை யென்றும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் பெயரிட்டிருக்கின்றனர். தென் கன்னடம் மாவட்டத்திற்கும் வட கன்னடம் மாவட்டத்திற்கும் எல்லையாய்க் கிழக்கு மேற்காக ஓடிக் கடலில் கலக்கும் ஆறு வானியாறு எனப்படும்; இப்போது அது கன்னடரால் ஹோனவாறு என்றும் சாராவதி யென்றும் சிதைக்கப் பெற்றுள்ளது. ஹோனவாறு, இன்று சாராவதி யாறு கடலோடு கலக்கும் இடத்து நகரத்துக்குப் பெயரளவாய் நின்றுவிட்டது. ஆறு மாத்திரம், சேர, வாறென நின்று பின்பு சாராவதியாகி விட்டது. இவ் வடமலைத் தொடரின் தென்னிறுதியில் தோன்றும் பொன்வானி பாலைக் காட்டுக் கருகில் பாரதப் புழையுடன் கூடி, மேலைக் கடலில் பொன்வானி நகர்க் கன்மையில் கடலோடு கலக்கின்றது. இப் பொன்வானி இப்போது பொன்னானி எனச் சிதைந்து வழங்குகிறது. வடமலைத் தொடரில் தோன்றிக் கிழக்கில் மைசூர் நாட்டில் ஓடிக் காவிரியோடு கலக்கும் ஆறு கீழ்ப்பூவானி யென்றும் உதகமண்டலத்தில் தோன்றிக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓடிக் காவிரியோடு கலக்கும் ஆறு பூவானி யென்றும் பண்டைச் சான்றோரால் வழங்கப் பெற்றன. இப்போது அவை கெப்பானி (Kebbani) என்றும் பவானி யென்றும் மருவி நிலவுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் தாலூகாவில் இப் பூவானி யாற்றின் கரையில் பூவானி என்று பெயர் தாங்கிய ஊரொன்றிருப்பதும், அப் பகுதியை இடைக்காலக் கல்வெட்டுகள் பூவானி நாடெனக் குறிப்பதும் இம் முடிபுக்குச் சான்று பகர்கின்றன. கோயம்புத்தூர்க்கு உண்ணுநீர் நல்கும் ஆற்றுக்குச் சிறுவானி என்று பெயர்.

இவ் வடமலைத் தொடரில் தோன்றும் ஆறுகள் பலவும் வானியென்று பெயர் பெறுவதை நோக்கின், இம் மலைத் தொடர் வானமலை என்ற பெயர் கொண்டு ஒருகாலத்தே நிலவியிருந்த தென்பது நன்கு தெரிகிறது. இம் மலையின் வட பகுதியில் வானியாற்றின் கிழக்கில் உள்ள நாட்டுக்கு வானவாசி யென்று பெயர் கூறப்படுகிறது. அங்குள்ள அசோகன் கல்வெட்டுகள்[37] அதனை வானவாசி என்கின்றன. வாசி யென்பது பாசியென்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவு. பாசி, கிழக்கு என்னும் பொருளது; ஆகவே, வானவாசி வான மலைக்கும் கிழக்கிலுள்ளது என்றும், பொருள் படுமாறு காணலாம். இவ் வடமலையின் தென்பகுதி பாயல் மலையென வழங்குமாயினும் பொதுவாக மேற்கில் கொண்கானத்துக்கும் கிழக்கில் வான வாசிக்கும் இடை நிற்கும் மலைநாடு, வான நாடென வழங்கின்மை தேற்றம்.

தென்மலைப் பகுதியில் தோன்றும் பேரியாற்றின் கிளையைப் பொருநை என்றும், அது கடலோடு கலக்குமிடத்திலுள்ள ஊர்க்குத் திருப்பொருநைத்துறை யென்றும், கிழக்கில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாராபுரம் வழியாக ஓடிக் காவிரியோடு கலக்கும் ஆற்றுக்கு ஆன்பொருநையென்றும், திருநெல்வேலி வழியாக ஓடிக் கடலோடு கலக்கும் ஆற்றைத் தண்ணான் பொருநை யென்றும் பண்டையோர் பெயரிட்டுள்ளனர். அவற்றுள் திருப்பொருநைத்துறை திருப்புனித்துறா வானாற்போல், ஆன்பொருநை ஆம்பிராவதி யென்றும், அமராவதி யென்றும், தண்ணான் பொருநை தாம்பிரபரணி யென்றும் இப்போது மருவின் வாயினும், இப் பெயரளவே நோக்கின் பண்டைச் சேர நாட்டின் வட பகுதி வானவாசி நாடுவரையில் பரந்திருந்தமை இனிது தெளியப்படும்.


  1. புறம். 357
  2. தொல். செய். 78
  3. William Logan’s Malabar. P. 254
  4. Wilke’s south of India. P. 1-15.2. Buchana’s Mysore and canara Vol.iii. P. 348. Bombay Gazetteer Vol, XV, Partii. P.75.
  5. Imperial gazetteer: Mysore and coorg. P. 331.
  6. மணி. xvi 15-16.
  7. திருஞான: 337-2
  8. Bombay Graze:. Kanara part II P. 266-71
  9. பெருந்தொகை 2091
  10. W.L. Mala. p. 255
  11. அகம், 61
  12. முருகு. 176.
  13. L. Rice: Mysore Vol. ii p361 and Vol i p 419
  14. தொல். சொல். தெய்வச் . 295
  15. M. Ep. A.R. No 428 of 1907
  16. Malabar Manual Volip. 647, 666.
  17. Heritage of Karnataka P. 10
  18. Archeological Survey of South India Vol. ii P. 196.
  19. T.A.S. Vol. ii. p. 106.
  20. அகம், 15.
  21. ஷை 258
  22. T.A.S 11 பக். 87-113.
  23. A.R. No 39-41 of 1936-7.
  24. K.P.P. Menon’s History of Kerala Vol. ii P.5.
  25. T.A.S. Vol. iii. P. 198-9
  26. M.Ep. A.R. No. 532 of 1930
  27. Imp. Gezet of India: Mysore and coorge P. 273.
  28. நற் 391.
  29. அகம் 258
  30. Imp. Gezet of Madras. Vol ii p. 395-6.
  31. சிலப் xxvI-106
  32. W. Logan’s Malabar P.7.
  33. Imp. Gezet. Mysore & Coorg P. 233 & 109
  34. பதிற் 21.
  35. 1.Nagam Iyer’s Travancore Manual Vol i P. 17-3.
  36. சிலப் 25: 17-22.
  37. L. Rice Mysore Voi i. P, 191.