அகநானூறு/11 முதல் 20 முடிய

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


1.களிற்றியானை நிரை[தொகு]

பாடல்:11 (வானமூர்ந்த)[தொகு]

வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி, 5
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம் 10
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து
அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே! 15

பாடல்:12 (யாயேகண்ணினும்)[தொகு]

யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன்உரப் பொறாஅன்; 'சீறுடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி! என்னும்;'
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; 5
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் 10
புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும்
நல்வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே 14

பாடல்: 13 (தண்கடற்)[தொகு]

தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத்
தெறல் அருமரபின் கடவுட் பேணிக்
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் 5
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் -
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,
வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்- 10
பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்விது ஆயினும்- தெற்குஏர்பு,
கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்,
சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட 15
மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை,
கவவுஇன் புறாமைக் கழிக- வள வயல்,
அழல்நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
நிரம்புஅகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப், 20
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை,
இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த
வெண்குருகு நரல, வீசும்
நுண்பல் துவலைய தண்பனி நாளே! 24

பாடல்: 14 (அரக்கத்தன்ன)[தொகு]

'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி,
காயாஞ் செம்மல் தாஅய், பலஉடன்
ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம்காட்டு ஆர்இடை, மடப்பிணை தழீஇத், 5
திரி மருப்பு இரலை புல்அருந்து உகள,
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்
பதவு மேயல் அருந்து மதவுநடை நல்ஆன்
வீங்குமாண் செருத்தல், தீம்பால் பிலிற்ற 10
கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்கு ஆகுவம் கொல்? பாண!" என்ற
மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக் 15
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து,
அவர்திறம் செல்வேன் கண்டனென், யானே-
விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக்
கார்மழை முழக்குஇசை கடுக்கும்,
முனைநல் ஊரன், புனைநெடுந் தேரே! 21

பாடல்: 15 (எம்வெங்காமம்)[தொகு]

எம்வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, 5
வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல-
தோழி மாரும் யானும் புலம்பச்,
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் 10
பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச்
செறிந்த காப்புஇகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க,
கொன்றை யம்சினைக் குழற்பழம் கொழுதி, 15
வன்கை எண்கின் வயநிரை பரக்கும்-
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்,
குன்ற வேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற- ஆறே! 19

பாடல்: 16 (நாயுடை)[தொகு]

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் 5
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே,
கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை,
'வருக மாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து 10
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசுஇல் குறுமகள்!' எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என யான்தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம்கிளையா, 15
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ- மகிழ்ந!- வானத்து
அணங்குஅருங் கடவுள் அன்னோள், நின்
மகன்தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே! 19

பாடல்:17 (வளங்கெழு)[தொகு]

வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
'உயங்கின்று, அன்னை! என்மெய்' என்று அசைஇ,
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
முயங்கினள் வதியும் மன்னே! இனியே, 5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி,
நொதும லாளன் நெஞ்சுஅறப் பெற்றஎன்
சிறுமுதுக் குறைவி சிலம்புஆர் சீறுடி
வல்லகொல், செல்லத் தாமே- கல்லென- 10
ஊர்எழுந் தன்ன உருகெழு செலவின்,
நீர்இல் அத்தத்து ஆர்இடை, மடுத்த,
கொடுங்கோல் உமணர், பகடுதெழி தெள்விளி
நெடும்பெருங் குன்றத்து இமிழ்கொள இயம்பும்,
கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல், 15
பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்,
நீள்அரை இலவத்து ஊழ்கழி பல்மலர்,
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
நெய்உமிழ் சுடரின் கால்பொரச் சில்கி, 20
வைகுறு மீனின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே! 22

பாடல்:18 (நீர்நிறங்)[தொகு]

நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து
பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்று,
கராஅம் துஞ்சும் கல்உயர் மறிசுழி,
மராஅ யானை மதம்தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்- 5
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ?- ஓங்கல் வெற்ப!-
ஒருநாள் விழுமம் உறினும், வழிநாள்,
வாழ்குவள் அல்லள், என் தோழி; யாவதும் 10
ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர்
நீடுஇன்று ஆக இழுக்குவர், அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும், எம் படப்பைக்
கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரை,
பழம்தூங்கு நளிப்பிற் காந்தள்அம் பொதும்பில், 15
பகல்நீ வரினும் புணர்குவை - அகல்மலை
வாங்குஅமைக் கண்இடை கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தடமென் தோளே. 18

பாடல்:19(அன்றவண்)[தொகு]

அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே;வந்துநனி
வருந்தினை- வாழி, என் நெஞ்சே!- பருந்து இருந்து
உயாவிளி பயிற்றும், யாஉயர் நனந்தலை,
உருள்துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம், 5
எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின்நின்று,
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது,
செல்இனி; சிறக்க நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி; எம்மே - நறவின்
சேயிதழ் அனைய ஆகிக், குவளை 10
மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கதழ்ந்துவீழ், அவிர்அறல்
வெய்ய உகுதர, வெரீஇப், பையென,
சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை 15
பூவீழ் கொடியின் புல்லெனப் போகி;
அடர்செய் ஆய்அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! 19

பாடல்: 20 (பெருநீர்)[தொகு]

பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழுமீன் உணங்கற் படுபுள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் 5
தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக்,
கொண்டல் இடுமணல் குரவை முனையின்
வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
பல்பூங் கானல் அல்கினம் வருதல் 10
கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர்,
கொடிதுஅறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
கடிகொண் டனளே- தோழி:- பெருந்துறை,
எல்லையும் இரவும் என்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண்பரி,
நிலவு மணல் கொட்கும்ஓர் தேர் உண்டு எனவே! 16