அகநானூறு/141 முதல் 150 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


2.மணிமிடை பவளம்[தொகு]

பாடல் 141 (அம்மவாழி)[தொகு]

அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்
கனவுங் கங்குல்தோ றினிய: நனவும்
புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
உலகுதொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி 5
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்,
தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ 15
கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்குமடல் இராது: 20
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்லிசை வெறுக்கை தருமார், பல்பொறிப்
புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை 25
நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக்,
கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத்,
தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே. 29

பாடல் 142 (இலமலரன்ன)[தொகு]

இலமலர் அன்ன அம்செந் நாவிற்
புலம்மீக் கூறும் புரையோர் ஏத்தப்,
பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்
நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்-
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற 5
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவஇனி - வாழிய, நெஞ்சே!- காதலி
முறையின் வழா அது ஆற்றிப் பெற்ற
கறையடி யானை நன்னன் பாழி,
ஊட்டரு மரபின் அஞ்சு வரு பேய்எக் 10
கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்றுஉவந்து
ஒள்வாள் அமலை ஞாட்பிற்,
பலர் அறி வுறுதல் அஞ்சிப், பைப்பய, 15
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
குறை அறல் அன்ன இரும்பல் கூந்தல்,
இடனில் சிறுபுறத்து இழையொடு துயல்வரக்,
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து. 20
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயல்எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள - முயங்கினள்:
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே. 26

பாடல் 143 (செய்வினைப்)[தொகு]

செய்வினைப் பிரிதல் எண்ணிக், கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்,
நீடுசினை வறிய வாக, ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கெழுபு 5
முளிஅரிற் பிறந்த வளிவளர் கூர்எரிச்
சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும்
'வெம்மலை அருஞ்சுரம் நீந்தி - ஐய!
சேறும்' என்ற சிறுசொற்கு... இவட்கே,
வசைஇல் வெம்போர் வானவன் மறவன் 10
நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல் பிட்டன்
மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
அகல்அறை நெடுஞ்சுனை, துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போலக்,
கண்பனி கலுழ்ந்தன; நோகோ யானே. 16

பாடல் 144 (வருதுமென்ற)[தொகு]

"வருதும்" என்ற நாளும் பொய்த்தன;
அரியேர் உண்கண் நீரும் நில்லா;
தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை
வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை
பெய்வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், 5
அருள்கண் மாறலோ மாறுக- அந்தில்
அறன்அஞ் சலரே!- ஆயிழை! நமர்' எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
பனிபடு நறுந்தார் குழைய, நம்மொடு,
துனிதீர் முயக்கம் பெற்றோள் போல 10
உவக்குநள்- வாழிய, நெஞ்சே!- விசும்பின்
ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்,
பார்வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி 15
மானடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப,
அமரோர்த்து, அட்ட செல்வம்
தமர்விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. 19

பாடல் 145 (வேர்முழுது)[தொகு]

வேர்முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன்தலை ஓதி
வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன்காட்டு 5
ஆளில் அத்தத்து, அளியள் அவனொடு-
வாள்வரி பொருத புண்கூர் யானை
புகர்சிதை முகத்த குருதி வார,
உயர்சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும்
'அருஞ்சுரம் இறந்தனள்' என்ப- பெருஞ்சீர் 10
அன்னி குறுக்கைப் பறந்தலைத், திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னை போலக்,
கடுநவைப் படீஇயர் மாதோ - களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், 15
துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக்,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பாற்
சிறுபல் கூந்தற் போதுபிடித்து அருளாது,
எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம், 20
'எனக்குஉரித்து' என்னாள், நின்ற என்
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே! 22

பாடல் 146 (வலிமிகுமுன்பின்)[தொகு]

வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி
மடக்கண் எருமை மாண்நாகு தழீஇ,
படப்பை நண்ணிப், பழனத்து அல்கும்
கலிமகிழ் ஊரன் ஒலிமணி நெடுந்தேர் 5
ஒள்ளிமழை மகளிர் சேரிப், பல்நாள்
இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை
யார்கொல் அனியள் தானே- எம்போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி
வளிபொரத் துயல்வரும் தளிபொழி மலரின் 10
கண்பனி ஆகத்து உறைப்பக், கண் பசந்து
ஆயமும் அயலும் மருளத்,
தாயோம்பு ஆய்நலம் வேண்டா தோளோ? 13

பாடல் 147 (ஓங்குமலைச்)[தொகு]

ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்னை
ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
துறுகல் விடரளைப் பிணவுபசி கூர்ந்தெனப், 5
பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
நெறிபடு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந் திசினால் யானே; பல புலந்து, 10
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சா அய்,
தோளும் தொல்கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்துபிறிது இன்மையின், இருந்துவினை இலனே! 14


பாடல் 148 (பனைத்திரள்)[தொகு]

பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கைச்
கொலைச்சினந் தவிரா மதனுடை முன்பின்,
வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு யானை
தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி:
உறுபுலி உரறக் குத்தி; விறல்கடிந்து, 5
சிறுதினைப் பெரும்புனம் வவ்வும் நாட!
கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது, களம் பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை 10
பெரிதால் அம்ம இவட்கே: அதனால்
மாலை வருதல் வேண்டும் - சோலை
முளைமேய் பெருங்களிறு வழங்கும்
மலைமுதல் அடுக்கத்த சிறுகல் ஆறே. 14

பாடல் 149 (சிறுபுன்முதலை)[தொகு]

சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19

பாடல் 150 (பின்னுவிட)[தொகு]

பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்
கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி,
'எல்லினை பெரிது' எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, 5
அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்,
கனைத்த நெய்தற் கண்போன் மாமலர்
நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,
மாலை மணியிதழ் கூம்பக் காலைக் 10
கள்நாறு காவியொடு தண்ணென் மலருங்
கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து;
வாரார் கொல்? எனப் பருவரும்-
தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே! 14
அகநானூறு
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/141_முதல்_150_முடிய&oldid=512514" இலிருந்து மீள்விக்கப்பட்டது