அகநானூறு/191 முதல் 200 முடிய
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
2. மணிமிடை பவளம்
[தொகு]191 அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ
எரிஇதழ் அலரியொடு இடைப்பட விரைஇ,
வண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணி,
தோல்புதை சிரற்றுஅடிக், கோலுடை உமணர்
ஊர்கண் டன்ன ஆரம் வாங்கி, 5
அருஞ்சுரம் இவர்ந்த அசைவுஇல் நோன்தாள்
திருந்துபகட்டு இயம்பும் கொடுமணி, புரிந்துஅவர்
மடிவிடு வீளையொடு, கடிதுஎதிர் ஓடி,
ஓமைஅம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள்இடை, 10
அரும்பொருள் நசைஇப், பிரிந்துஉறை வல்லி
சென்று: வினை எண்ணுதி ஆயின், நன்று,
உரைத்திசின் வாழி - என் நெஞ்சே!- நிரைமுகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
அறல்என விரிந்த உறல்இன் சாயல் 15
ஒலிஇருங் கூந்தல் தேறும்' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே? 17
192 மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல்
பொன்நேர் வண்ணம் கொண்டன்று: அன்னோ?
யாங்குஆ குவள்கொல் தானே? விசும்பின்
எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச்,
செவ்வாய்ச், சிறுகிளி சிதைய வாங்கி, 5
பொறைமெலிந் திட்ட புன்புறப் பெருங்குரல்
வளைசிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
வந்து அளிக்குவை எனினே மால்வரை
மைபடு விடரகம் துழைஇ, ஒய்யென 10
அருவிதந்த, அரவுஉமிழ், திருமணி
பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக் குறுத்தலின்
இரவும் இழந்தனள்: அளியள்- உரவுப்பெயல்
உருமிறை கொண்ட உயர்சிமைப்
பெருமலை நாட - நின் மலர்ந்த மார்பே. 15
193 கானுயர் மருங்கில் கவலை அல்லது,
வானம் வேண்டா வில்லேர் உழவர்
பெருநாள் வேட்டம், கிளைஎழ வாய்த்த
பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப்,
பொறித்த போலும் வால்நிற எருத்தின்: 5
அணிந்த போலும் செஞ்செவி, எருவை:
குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து
அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்தடி
கொல்பசி முதுநரி வல்சி ஆகும் 10
சுரன்நமக்கு எளிய மன்னே; நல்மனைப்
பன்மாண் தங்கிய சாயல், இன்மொழி,
முருந்தேர் முறுவல், இளையோள்
பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே. 14
194 பேர்உறை தலைஇய பெரும்புலர் வகைறை,
ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
புறமாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்,
வித்திய மருங்கின் விதைபல நாறி, 5
இரலைநல் மானினம் பரந்தவை போலக்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்குபறை சீரின் இரங்க வாங்கி,
களைகால் கழீஇய பெரும்புன வரகின்
கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட, 10
குடுமி நெற்றி நெடுமாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்லிலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும் 15
கார்மன் இதுவால் - தோழி !- 'போர்மிகக்
கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட, கடும்பரி,
விரிஉளை, நல்மான் கடைஇ
வருதும்' என்று, அவர் தெளித்த போழ்தே. 19
195 'அருஞ்சுரம் இறந்தஎன் பெருத்தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்' எனத் தாயே
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனைமணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து, இனிது அயரும் என்ப: யானும், 5
மான்பிணை நோக்கின் மடநல் லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்
இன்னகை முறுவல் ஏழையைப் பல்நாள்,
கூந்தல் வாரி: நுசுப்புஇவர்ந்து, ஓம்பிய
நலம்புனை உதவியோ உடையன் மன்னே: 10
அஃது அறி கிற்பினோ நன்றுமன் தில்ல,
அறுவை தோயும் ஒருபெருங் குடுமி,
சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல்,
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
கூறுக மாதோ, நின் கழங்கின் திட்பம்; 15
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
ஆனாது துயருமெம் கண்இனிது படீஇயர்
எம்மனை முந்துறத் தருமோ?
தன்மனை உய்க்குமோ? யாதவன் குறிப்பே? 19
196 நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து,
நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல்
துடிக்கண் கொழுங்குறை நொடுத்து, உண்டுஆடி
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகலிலை, அமலைவெஞ் சோறு 5
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
தொடுகலம்: குறுக வாரல் - தந்தை
கண்கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்போகிய, 10
கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின்நலத் தகுவியை முயங்கிய மார்பே! 13
197 மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூநெகிழ் அணையின் சாஅய தோளும்
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொன்னலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
இனையல் - வாழி; தோழி !- முனை எழ 5
முன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின்,
மறமிகு தானைக், கண்ணன் எழினி
தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும்,
நீடலர் யாழநின் நிரைவளை நெகிழத்-
தோள்தாழ்வு இருளிய குவைஇருங் கூந்தல் 10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன்தலைப் புதல்வன் ஊர்புஇழிந் தாங்கு,
கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு
இனம்சால் வேழம், கன்றுஊர்பு இழிதரப்,
பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீந்தி, 15
ஒள்ளிணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம்
வினைவலி யுறூஉம் நெஞ்சமொடு
இனையர்ஆகி, நம் பிரிந்திசி னோரே. 18
198 'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக்
கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது,
நயந்துநாம் விட்ட நல்மொழி நம்பி,
அரைநாள் யாமத்து விழுமழை கரந்து,
கார்விரை கமழும் கூந்தல், தூவினை 5
நுண்நூல் ஆகம் பொருந்தினன், வெற்பின்
இளமழை சூழ்ந்த மடமயில் போல,
வண்டுவழிப் படரத், தண்மலர் மேய்ந்து,
வில்வகுப் புற்ற நல்வாங்கு குடைச்சூல்
அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, 10
துஞ்சுஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
அம்மா அரிவையோ அல்லள்: தெனாஅது
ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பிற்,
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன், 15
ஏர்மலர் நிறைசுனை உறையும்
சூர்மகள் மாதோ என்னும்- என் நெஞ்சே! 17
199 கரைபாய் வெண்திரை கடுப்பப், பலஉடன்,
நிரைகால் ஒற்றலின், கல்சேர்பு உதிரும்
வரைசேர் மராஅத்து ஊர்மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர்நசைக்கு அலமரச்,
சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல் 5
அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத்,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம்தின் ஊசித் திரள்நுதி அன்ன,
திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்:
வளிமுனைப் பூளையன் ஒய்யென்று அலறிய 10
கெடுமான் இனநிரை தரீஇய கலையே
கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்கும்
கடல்போற் கானம் பிற்படப், 'பிறர்போல்
செல்வேம்ஆயின், எம் செலவுநன்று' என்னும்
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, 15
நீ செலற்கு உரியை - நெஞ்சே!- வேய்போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந்தோள் அரிவை ஒழியக், குடாஅது,
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய, 20
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்,
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம்பெரிது பெறினும், வாரலென் யானே. 24
200 நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில்,
புலால்அம் சேரிப், புல்வேய் குரம்பை,
ஊர்என உணராச் சிறுமையொடு, நீர்உடுத்து,
இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம்
ஒருநாள் உறைந்திசி னோர்க்கும், வழிநாள், 5
தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி
வந்தனை சென்மோ - வளைமேய் பரப்ப!-
பொம்மற் படுதிரை கம்மென உடைதரும்
மரன்ஓங்கு ஒருசிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல்உற, 10
நல்தேர் பூட்டலும் உரியீர்: அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும்
எம்வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.- 14