உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு/301 முதல் 310 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


3. நித்திலக்கோவை

[தொகு]

பாடல்:301 (வறனுறு)

[தொகு]
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்
படர்மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறுநனி ஆன்றிகம் என்றி- தோழி-
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு 5
நீர்வாழ் முதலை ஆவித் தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
ஊர்இஃது என்னாஅர் ஊறில் வாழ்க்கை
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
பாடுஇன் தெண்கிணை கறங்கங் காண்வரக் 10
குவிஇணர் எருக்கின் ததர்பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி யாவிரைக் கிளர்பூங் கோதை
வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச் 15
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக்
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மாணச் சீர் அமைத்து
சில்லரி கறங்கும் சிறுபல் லியத்தொடு 20
பல்லூர் பெயர்வனர் ஆடி ஒல்லெனத்
தலைப்புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்றலை மன்றங் காணின் வழிநாள்
அழுங்கன் மூதூர்க்கு இன்னா தாகும்; 25
அதுவே மறுவினம் மாலை யதனால்
காதலர் செய்த காதல்
நீடின்று மறத்தல் கூடுமோ, மற்றே? 28

பாடல்: 302 (சிலம்பிற்)

[தொகு]
சிலம்பிற் போகிய செம்முக வாழை
அலங்கல் அம்தோடு அசைவளி யுறுதொறும்
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
நல்வரை நாடனொடு அருவி ஆடியும்
பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும் 5
நறுவீ வேங்கை இனவண் டார்க்கும்
வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும்
அரிய போலும்- காதல்அம் தோழி!-
இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்பென கவினிய பெருங்குரல் ஏனல் 10
கிளிபட விளைந்தமை யறிந்தும் 'செல்க' என
நம்மவண் விடுநள் போலாள் கைம்மிகச்
சில்சுணங் கணிந்த செறிந்துவீங் கிளமுலை
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு
பல்கால் நோக்கும்- அறனில் யாயே. 15

பாடல்: 303 (இடைபிறர்)

[தொகு]
இடைபிறர் அறிதல் அஞ்சி மறைகரந்து
பேஎய் கண்ட கனவிற பன்மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்
மறமிகு தானைப் பசும்பூண் பொறையன்
கார்புகன் றெடுத்த சூர்புகல் நனந்தலை 5
மாஇருங் கொல்லி யுச்சித் தாஅய்த்
ததைந்துசெல் அருவியின் அலர்எழப் பிரிந்தோர்
புலம்கந் தாக இரவலர் செலினே
வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின் 10
நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்பின் வாகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு
வருவாஎன்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்! 15
ஐயந் தெளியரோ நீயே பலவுடன்
வறன்மரம் பொருந்திய சிள்வீ டுமணர்
கணநிரை மணியின் ஆர்க்கும் சுரனிறந்து
அழிநீர் மீன்பெயர்ந் தாங்கவர்
வழிநடைச் சேறல் வலித்திசின் யானே. 20

பாடல்:304 (இருவிசும்பு)

[தொகு]
இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை
நீர்செறி நுங்கின் கண்சிதர்ந் தவைபோல்
சூர்ப்பனி பன்ன தண்வரல் ஆலியொடு
பரூஉப்பெயல் அழிதுளி தலைஇ வான்நவின்று
குரூஉத்துளி பொழிந்த பெரும்புலா வைகறை 5
செய்துவிட் டன்ன செந்நில மருங்கிற்
செறித்துநிறுத் தன்ன தெள்ளறல் பருகிச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச் 10
சுரும்புமிர்பு ஊதப் பிடவுத்தளை அவிழ
அரும்பொறி மஞ்ஜை ஆல வரிமணல்
மணிமிடை பவளம் போல அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவும்
ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்பப் 15
புலனணி கொண்ட காரெதிர் காலை
'ஏந்துகோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறுபுலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர்நம் அருளா தோரன
நந்நோய் தன்வயின் அறியாள்
எந்நொந்து புலக்குங்கொல் மாஅ யோளே? 21

பாடல் 305 (பகலினும்)

[தொகு]
பகலினும் அகலா தாகி யாமம்
தவலில் நீத்தமொடு ஐயெனக் கழியத்
தளிமழை பொழிந்த தண்வரல் வாடையொடு
பனிமீக் கூரும் பைதற் பானாள்
பருகு வன்ன காதலொடு திருகி 5
மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
அருளி லாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யானெவன் உளனே- தோழி!- தானே 10
பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய்
ஒரு தனி அன்றில் உயவுக்குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனைஎரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே? 16

பாடல்: 306 (பெரும்பெயர்)

[தொகு]
பெரும்பெயர் மகிழ்ந! பேணா தகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட
ஆர்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயற் 5
கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்றுநின் செம்மல்? மாண்ட
மதியேர் ஒள்நுதல் வயங்கிழை ஒருத்தி- 10
இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்ணறுங் கமழ்தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினள்- சிறுதுனி செய்தெம்
மணன்மலி மறுகின் இறந்திசி னோளே. 15

பாடல்: 307 (சிறுநுதல்)

[தொகு]
'சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்
பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப்
பெயல்உறு மலரின் கண்பனி வார
ஈங்கிவள் உழக்கும்' என்னாது வினைநயந்து 5
நீங்கல் ஒல்லுமோ- ஐய!- வேங்கை
அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
மையலம் கடாஅஞ் செருக்கி மதஞ்சிறந்து
இயங்குநர்ச் செருக்கும் எய்படு நனந்தலைப்
பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் 10
புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே? 15

பாடல்:308 (உழுவையொடு)

[தொகு]
உழுவையொ டுழந்த உயங்குநடை ஒருத்தல்
நெடுவகிர் விழுப்புண் கழாஅக் கங்குல்
ஆலி அழிதுளி பொழிந்த வைகறை
வால்வெள் அருவிப் புனல்மலிந் தொழுகலின்
இலங்குமலை புதைய வெண்மழை கவைஇக் 5
கலஞ்சுடு புகையிற் றோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல்வரின்
தொலையா வேலின் வண்மகிழ் எந்தை
களிறணந் தெய்தாக் கன்முகை இதணத்துச்
சிறுதினைப் படுகிளி எம்மொடு ஓப்பி 10
மல்ல லறைய மலிர்சுனைக் குவளை
தேம்பாய் ஒண்பூ நறும்பல அடைச்சிய
கூந்தல் மெல்லணைத் துஞ்சிப் பொழுதுபடக்
காவலர்க் கரந்து கடிபுனம் துழைஇய
பெருங்களிற்று ஒருத்தலின் பெயர்குவை
கருங்கோற் குறிஞ்சிநும் உறைவி னூர்க்கே. 16

பாடல்:309 (வயவாள்)

[தொகு]
வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப் 5
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியின் தாஅம்
காடுமிக நெடிய என்னார் கோடியர்
பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் 10
திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு
நாஞ்செலின் எவனோ- தோழி!- காம்பின்
விளைகழை உடைந்த கவண்விசைக் கடிஇடிக்
கனைசுடர் அமையத்து வழங்கல் செல்லாது
இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம் 15
தண்பெரும் படாஅர் வெரூஉம்
குன்றுவிலங் கியவினவர் சென்ற நாட்டே? 17

பாடல்:310 (கடுந்தேர்)

[தொகு]
கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழுதகு மெய்யை அழிவுமுந் துறுத்துப்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்
குவளை யுண்கண் கலுழ நின்மாட்டு 5
இவளும் பெரும்பே துற்றனள் ஓரும்
தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்டக்
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெருமடம் உடையரோ சிறிதே; அதனால்
குன்றின் தோன்றும் குவவுமணற் சேர்ப்ப! 10
இன்றிவண் விரும்பா தீமோ! சென்றப்
பூவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக்
கூஉம்கண் ணஃதே தெய்ய- ஆங்கண்
உப்பொய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப்படு பேடை இரியக் குரைத்தெழுந்து 15
உருமிசைப் புணரி யுடைதரும்
பெருநீர் வேலிஎம் சிறுநல் ஊரே. 17
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/301_முதல்_310_முடிய&oldid=480938" இலிருந்து மீள்விக்கப்பட்டது