அகநானூறு/341 முதல் 350 முடிய
Appearance
< அகநானூறு
அகநானூறு பக்கங்கள்
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
3.நித்திலக் கோவை
[தொகு]பாடல்:341 (உய்தகைஇன்றால்)
[தொகு]- உய்தகை இன்றால்- தோழி- பைபயக்
- கோங்கும் கொய்குழை உற்றன குயிலும்
- தேம்பாய் மாஅத்து ஓங்குசினை விளிக்கும்
- நாடுஆர் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைக்
- கழைஅழி நீத்தம் சாஅய வழிநாள் 5
- மழைகழிந் தன்ன மாக்கால் மயங்குஅறல்
- பதவுமேயல் அருந்து துளங்குஇமில் நல்லேறு
- மதவுடை நாகொடு அசைவீடப் பருகி
- குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்லிணர்ப்
- பொன்தகை நுண்தாது உறைப்பத் தொக்குஉடன் 10
- குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும்
- யாணர் வேனில்மன் இது-
- மாண்நலம் நுகரும் துணையுடை யோர்க்கே. 13
பாடல்:342 (ஒறுப்பஓவலை)
[தொகு]- ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
- புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்குயான்
- கிளைஞன் அல்லனோ- நெஞ்சே- தெனாஅது
- வெல்போர்க் கவுரியர் நல்நாட்டு உள்ளதை
- மண்கொள் புற்றத்து அருப்புஉழை திறப்பின் 5
- ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
- ஏவல் இளையர் தலைவன் மேவார்
- அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்துபடப்
- பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கை
- கெடாஅ நல்இசைத் தென்னன் தொடாஅ 10
- நீர்இழி மருங்கில் கல்லளைக் கரந்தஅவ்
- வரையர மகளிரின் அரியள்
- அவ்வரி அல்குல் அணையாக் காலே! 13
பாடல்:343 (வாங்கமை)
[தொகு]- வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள்
- சில்சுணங்கு அணிந்த பல்பூண் மென்முலை
- நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து
- மரம்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
- புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் 5
- கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
- கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்துஅவ்
- ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
- கண்பொரி கவலைய கானத்து ஆங்கண்
- நனந்தலை யாஅத்து அம்தளிர்ப் பெருஞ்சினை 10
- இல்போல் நீழல் செல்வெயில் ஒழிமார்
- நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
- புறம்நிறை பண்டத்துப் பொறைஅசாஅக் களைந்த
- பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணை ஆகி
- உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்துநின்று 15
- உள்ளினை- வாழிஎன் நெஞ்சே- கள்ளின்
- மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
- சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
- பன்மாண் பேதையின் பிரிந்தநீயே. 19
பாடல்:344 (வளமழை)
[தொகு]- வளமழை பொழிந்த வால்நிறக் களரி
- உளர்தரு தண்வளி உறுதொறும் நிலவெனத்
- தொகுமுகை விரிந்த முடககாற் பிடவின்
- வைஏர் வால்எயிற்று ஒள்நுதல் மகளிர்
- கைமாண் தோணி கடுப்பப் பையென 5
- மயிலினம் பயிலும் மரம்பயில் கானம்
- எல்லிடை உறாஅ அளவை வல்லே
- கழல்ஒளி நாவின் தெண்மணி கறங்க
- நிழல்ஒலிப் பன்ன நிமிர்பரிப் புரவி
- வயக்குஉறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து 10
- இயக்குமதி- வாழியோ கையுடை வலவ!
- பயப்புறு படர்அட வருந்திய
- நயப்புஇன் காதலி நகைமுகம் பெறவே. 13
பாடல்:345 (விசும்புதுளி)
[தொகு]- 'விசும்புதளி பொழிந்து வெம்மை நீங்கித்
- தண்பதம் படுதல் செல்கெனப் பன்மாண்
- நாம்செல விழைந்தன மாக' ஓங்குபுகழ்க்
- கான்அமர் செல்வி அருளலின் வெண்கால்
- பல்படைப் புரவி எய்திய தொல்லிசை 5
- நுணங்குநுண் பனுவற் புலவன் பாடிய
- இனமழை தவழும் ஏழில் குன்றத்துக்
- கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
- ஐதுஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
- சின்னாள் கழிக! என்று முன்னாள் 10
- நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
- திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார்
- மாமுறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப
- உறைகழிந்து உலந்த பின்றைப் பொறைய
- சிறுவெள் அருவித் துவலையின் மலர்ந்த 15
- கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூச்
- செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்பக்
- காடுகவின் பெறுக- தோழி- ஆடுவளிக்கு
- ஒல்குநிலை இற்றி ஒருதனி நெடுவீழ்
- கல்கண் சீக்கும் அத்தம்
- அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே. 21
பாடல்:346 (நகைநன்று)
[தொகு]- நகைநன்று அம்ம தானே- இறைமிசை
- மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன
- கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்
- வெள்ளி வெண்தோடு அன்ன கயல்குறித்துக்
- கள்ளார் உவகைக் கலிமகிழ் உழவர் 5
- காஞ்சிஅம் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை
- மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து
- பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
- வருத்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
- மீதுஅழி கடுநீர் நோக்கிப் பைப்பயப் 10
- பார்வல் இருக்கும் பயம்கேழ் ஊர-
- யாம்அது பேணின்றோ இலமே- நீ நின்
- பண்ணமை நல்யாழ்ப் பாணனொடு விசிபிணி
- மண்ணார் முழவின் கண்ணதிர்ந்து இயம்ப
- மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி 15
- எம்மனை வாரா யாகி முன்னாள்
- நும்மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
- குறுந்தொடி மடந்தை உவந்தனள்- நெடுந்தேர்
- இழையணி யானைப் பழையன் மாறன்
- மாடமலி மறுகின் கூடல் ஆங்கண் 20
- வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த
- கிள்ளி வளவன் நல்அமர் சாஅய்க்
- கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி
- ஏதின் மன்னர் ஊர்கொளக்
- கோதை மார்பன் உவகையிற் பெரிதே. 25
பாடல்:347 (தோளும்தொல்கவின்)
[தொகு]- தோளும் தொல்கவின் தொலைய நாளும்
- நலங்கவர் பசலை நல்கின்று நலியச்
- சால்பெருந் தானைச் சேர லாதன்
- மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
- பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன 5
- கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
- அம்பல் மூதூர் அலர்நமக்கு ஒழியச்
- சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே
- வாய்க்கதில்- வாழி தோழி- வாயாது
- மழைகரந்து ஒளித்த கழைதிரங்கு அடுக்கத்து 10
- ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென குவவுஅடி
- வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்
- கன்றொழித்து ஒடிய புன்தலை மடப்பிடி
- கைதலை வைத்த மையல் விதுப்பொடு
- கெடுமகப் பெண்டிரின் தேரும்
- நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே! 16
பாடல்:348 (என்ஆவதுகொல்)
[தொகு]- என்ஆ வதுகொல் தானே- முன்றில்
- தேன்தேர் சுவைய திரள்அரை மாஅத்துக்
- கோடைக்கு ஊழ்த்த கமழ்நறுந் தீங்கனிப்
- பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச்சுளை அளைஇ
- இறாலொடு கலந்த வண்டுமூசு அரியல் 5
- நெடுங்கண் ஆடுஅமைப் பழுநிக் கடுந்திறல்
- பாப்புக்கடுப்பு அன்ன தோப்பி வான்கோட்டுக்
- கடவுள்ஓங்கு வரைக்கு ஓக்கிக் குறவர்
- முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி
- அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி 10
- யானை வவ்வின தினைஎன நோனாது
- இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச்
- சிலைஆய்ந்து திரிதரும் நாடன்
- நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே? 14
பாடல்:349 (அரம்போழ்)
[தொகு]- அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை
- வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய
- எவன்ஆய்ந் தனர்கொல்- தோழி! ஞெமன்
- தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
- உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே 5
- உரன்மலி உள்ளமொடு முனைபா ழாக
- அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
- சூழாது சுரக்கும் நன்னன் நல்நாட்டு
- எழிற் குன்றத்துக் கவாஅன் கேழ்கொளத்
- திருந்துஅரை நிவந்த கருங்கால் வேங்கை 10
- எரிமருள் கவளம் மாந்திக் களிறுதன்
- வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
- கல்லூர் பாம்பின் தோன்றும்
- சொல்பெயர் தேஎத்த சுரன்இறந் தோரே. 14
பாடல்:350 (கழியேசிறு)
[தொகு]- கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவிகூம்ப
- எறிதிரை ஓதம் தரல்ஆ னாதே
- துறையே, மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
- இருஞ்சேற்று ஈர்அளை அலவன் நீப்ப
- வழங்குநர் இன்மையின் பாடுஆன் றன்றே; 5
- கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
- வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது
- ஏந்துஎழில் மழைக்கண் இவள்குறை யாகச்
- சேந்தனை சென்மோ- பெருநீர்ச் சேர்ப்ப!-
- இலங்குஇரும் பரப்பின் எறிசுறா நீக்கி 10
- வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
- ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
- கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
- குவவுமணல் நெடுங்கோட்டு ஆங்கண்
- உவக்காண் தோன்றும்எம் சிறுநல் ஊரே! 15