அகநானூறு/221 முதல் 230 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


2. மணிமிடை பவளம்[தொகு]

221 நனைவிளை நறவின் தேறல் மாந்திப்,
புனைவினை நல்லில் தருமணல் குவைஇப்,
'பொம்மல் ஓதி எம்மகள் மணன்' என,
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேயிலை வெள்வேல்- 5
மதிஉடம் பட்ட மைஅணற் காளை
வாங்குசினை மலிந்த திரளரை மராஅத்துத்
தேம்பாய் மெல்லிணர் தளிரொடு கொண்டு, நின்
தண்நறு முச்சி புனைய, அவனொடு
கழைகவின் போகிய மழைஉயர் நனந்தலை, 10
களிற்றிரை பிழைத்தலின் கயவாய் வேங்கை
காய்சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
இரும்பிடி இரியும் சோலை
அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென், யானே. 14

222 வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக்
கான நாடன் இறீஇய நோய்க்கு, என்
மேனி ஆய்நலம் தொலைதலின், மொழிவென்;
முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்,
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும். 5
ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன்நயந்து உரைஇத்,
தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ, மதிமருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டிப் 10
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர்
சென்மோ - வாழி, தோழி - பல்நாள்
உரவுரும் ஏறொடு மயங்கி,
இரவுப்பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே. 15

223 'பிரிதல் வல்லியர்; இது, நத் துறந்தோர்
மறந்தும் அமைகுவர் கொல்?' என்று எண்ணி,
ஆழல் - வாழி, தோழி!- கேழல்
வளைமருப்பு உறழும் உளைநெடும் பெருங்காய்
நனைமுதிர் முருக்கின் சினைசேர் பொங்கல், 5
காய்சினக் கடுவளி எடுத்தலின் வெங்காட்டு
அழல்பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழலில் ஓமை நீரில் நீளிடை,
இறந்தனர் ஆயினும், காதலர் நம்வயின்
மறந்து கண்படுதல் யாவது - புறம் தாழ் 10
அம்பணை நெடுந்தோள் தங்கித், தும்பி
அரியினம் கடுக்கும் சுரிவணர் ஐம்பால்
நுண்கேழ் அடங்க வாரிப் பையுள் கெட,
நன்முகை அதிரல் போதொடு குவளைத்
தண்நறுங் கமழ்தொடை வேய்ந்த, நின்
மண்ஆர் கூந்தல் மரீஇய துயிலே? 16

224 செல்க, பாக! எல்லின்று பொழுதே- வல்லோன் அடங்குகயிறு அமைப்பக், கொல்லன்
விசைத்துவாங்கு துருத்தியின் வெய்ய உயிராக்,
கொடுநுகத்து யாத்த தலைய, கடுநடைக்,
கால்கடுப்பு அன்ன கடுஞ்செலல் இவுளி, 5
பால்கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
வால்வெண் தெவிட்டல் வழிவார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறிச்,
சாந்துபுலர் அகலம் மறுப்பக் காண்தகப்
புதுநலம் பெற்ற வெய்துநீங்கு புறவில், 10
தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள்,
ஐதுணங்கு வல்சி பெய்துமுறுக்கு உறுத்த
திரிமரக் குரலிசைப் கடுப்ப, வரிமணல்
அலங்குகதிர் திகிரி ஆழி போழ,
வரும்கொல்- தோழி!- நம் இன்உயிர்த் துணைஎனச், 15
சில்கோல் எல்வளை ஒடுக்கிப் பல்கால்
அருங்கடி வியனகர் நோக்கி,
வருந்துமால் அளியள் திருந்திழை தானே. 18

225 அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளைப்,
புதலிவர் ஆடுஅமைத் தும்பி குயின்ற 5
அகலா அந்துளை கோடை முகத்தலின்
நீர்க்கியங்கு இனநிரைப் பின்றை, வார்கோல்
ஆய்க்குழல் பாணியின் ஐதுவந்து இசைக்கும்,
தேக்கமல் சோலைக் கடறேங்கு அருஞ்சுரத்து,
யாத்த தூணித் தலைதிறந் தவைபோல், 10
பூத்த இருப்பைக் குழைபொதி குவிஇணர்
கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர,
மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொல்லோ- நெஞ்சே!- பூப்புனை
புயலென ஒலிவரும் தாழிருங் கூந்தல், 15
செறிதொடி முன்கை நம் காதலி
அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே? 17

226 உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;
நாணிலை மன்ற- யாணர் ஊர!-
அகலுள் ஆங்கண் அம்பகை மடிவைக்,
குறுந்தொடி, மகளிர் குரூஉப்புனல் முனையின்,
பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக் 5
கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஓப்பும்,
வல்வில் எறுழ்த்தோள் பரதவர் கோமான்,
பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை,
நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்,
விடியல் வந்த பெருநீர்க் காவிரி, 10
தொடிஅணி முன்கை நீ வெய் யோளொடு
முன்நாள் ஆடிய கவ்வை இந்நாள்,
வலிமிகும் முன்பின் பாணனொடு மலிதார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி, 15
போரடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. 17

227 'நுதல்பசந் தன்றே; தோள்சா யினவே;
திதலை அல்குல் வரியும் வாடின;
என்ஆ குவள்கொல் இவள்?' எனப் பல்மாண்
நீர்மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
இனையல்- வாழி, தோழி!- நனை கவுள் 5
காய்சினம் சிறந்த வாய்புகு கடாத் தொடு
முன்னிலை பொறாஅது முரணிப், பொன்னிணர்ப்
புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப,
முதல்பாய்ந் திட்ட முழுவலி ஒருத்தல்
செந்நிலப் படுநீறு ஆடிச், செருமலைந்து, 10
களம்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பலஇறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
நோய்இல ராக, நம் காதலர்!- வாய்வாள்,
தமிழ் அகப் படுத்த இமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெருநாள் இருக்கை, 15
தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்
கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்.
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, 20
எல்லுமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே! 22

228 பிரசப் பல்கிளை ஆர்ப்பக், கல்லென
வரைஇழி அருவிஆரம் தீண்டித்
தண்என நனைக்கும் நளிர்மலைச் சிலம்பில்,
கண்என மலர்ந்த மாஇதழ்க் குவளைக்
கல்முகை நெடுஞ்சுனை நம்மொடு ஆடிப், 5
பகலே இனிதுடன் கழிப்பி, இரவே
செல்வர் ஆயினும், நன்றுமன் தில்ல-
வான்கண் விரிந்த பகல்மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர்ஆற்று,
ஓங்கல் மிசைய வேங்கை ஒள்வீப் 10
புலிப்பொறி கடுப்பத் தோன்றலின், கயவாய்
இரும்பிடி இரியும் சோலைப்
பெருங்கல் யாணர்த்தம் சிறுகுடி யானே. 13
229 பகல்செய் பல்கதிர்ப் பருதியம் செல்வன்
அகல்வாய் வானத்து ஆழ் போழ்ந்தென,
நீர்அற வறந்த நிரம்பா நீளிடைக்
கயந்தலைக் குழவிக் கவிஉகிர் மடப்பிடி
குளகுமறுத்து உயங்கிய மருங்குல் பலவுடன் 5
பாழூர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகி,
பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள்
நம்இன்று ஆயினும் முடிக, வல்லெனப்,
பெருந்துனி மேவல்!- நல்கூர் குறுமகள்!- 10
நோய்மலிந்து உகுத்த நொசிவரல் சில்நீர்
பல்லிதழ் மழைக்கண் பாவை மாய்ப்பப்,
பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி
நல்மா மேனி தொலைதல் நோக்கி,
இனையல் என்றி; தோழி! சினைய 15
பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கின
போதவிழ் அலரி கொழுதித், தாது அருந்து
அம்தளிர் மா அத்து அலங்கல் மீமிசைச்,
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன்இள வேனிலும் வாரார்.
'இன்னே வருதும்' எனத்தெளித் தோரே. 21

230 'உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறுகரு நெய்தற் கண்போல் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின் வைஎயிற்று,
மைஈர்ஓதி, வாள் நுதல் குறுமகள்! 5
விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த
புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு,
மனைபுறந் தருதி ஆயின், எனையதூஉம்,
இம்மனைக் கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ , மாத ராய்?' எனக் 5
கடும்பரி நல்மான், கொடிஞ்சி நெடுந்தேர்
கைவல் பாகன் பையென இயக்க,
யாம்தற் குறுகினமாக ஏந்தெழில்
அரிவேய் உண்கண் பனிவரல் ஒடுக்கிச்
சிறிய இறைஞ்சினள், தலையே-
பெரிய எவ்வம் யாமிவண் உறவே! 16

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/221_முதல்_230_முடிய&oldid=480930" இலிருந்து மீள்விக்கப்பட்டது