உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு/31 முதல் 40 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


1. களிற்றியானை நிரை

[தொகு]

பாடல்:31 (நெருப்பெனச்)

[தொகு]
நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம்
புலங்கடை மடங்க தெறுதலின், ஞொள்கி,
"நிலம்புடை பெயர்வது அன்றுகொல், இன்று?" என
மன்உயிர் மடிந்த மழைமாறு அமையத்து,
இலைஇல ஓங்கிய நிலைஉயர் யாஅத்து 5
மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில்இட,
நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை அடூஉக் கழிந்தன்ன
புண்உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 10
கண்உமிழ் கழுகின் கானம் நீந்திச்,
'சென்றார்' என்பு இலர் -தோழி!- வென்றியொடு
வில்இலைத்து உண்ணும் வல்ஆண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே. 15

பாடல்:32 (நெருநலெல்லை)

[தொகு]
நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச்,
சிறுதினைப் படுகிளி கடீஇயர், பன்மாண் 5
குளிர்கொள் தட்டை மதன்இல புடையாச்
'சூரர மகளிரின் நின்ற நீமற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
இகுபெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர்உற்ற என் 10
உள்அவன் அறிதல் அஞ்சி, உள்இல்
கடிய கூடு, கைபிணி விடாஅ
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என்உரத் தகைமையின் பெயர்த்து, பிறிதுஎன்வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே; அல்லாந்து, 15
இனம்தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை- தோழி! நாம் சென்மோ,
சாய்இறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசு இன் றாதலும் அறியான், ஏசற்று,
என்குறைப் புறனிலை முயலும்
அங்க ணாளனை நகுகம், யாமே! 21

பாடல்: 33 (வினைநன்றா)

[தொகு]
வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி,
மனைமாண் கற்பின் வாணுதல் ஒழியக்,
கவைமுறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்றுஓங்கு உயர்சினை இருந்த வன்பறை,
வீளைப் பருந்தின் கோள்வல் சேவல் 5
வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும்
இளிதேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவண்
மலர்பாடு ஆன்ற, மைஎழில், மழைக்கண்
தெளியா நோக்கம் உள்ளினை, உளிவாய் 10
வெம்பரல் அதர குன்றுபல நீந்தி,
யாமே எமியம்ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் - முனாஅது
வெல்போர் வானவன் கொல்லி மீமிசை,
நுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பணைத் தோள், 15
வரிஅணி அல்குல், வால்எயிற் றோள்வயிற்
பிரியாய் ஆயின் நன்றுமற் றில்ல.
அன்றுநம் அறியாய் ஆயினும், இன்றுநம்
செய்வினை ஆற்றுற விலங்கின்
எய்துவை அல்லையோ, பிறர்நகு பொருளோ? 20

பாடல்:34 (சிறுகரும்)

[தொகு]
சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
கண்ணியின் மலரும் தண்நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல் இரலை
செறிஇலைப் பதவின் செங்கோல் மென்குரல் 5
மறிஆடு மருங்கின் மடப்பிணை அருத்தித்,
தெள்அறல் தழீஇய வார்மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்;
செல்க, தேரே - நல்வலம் பெறுந!- 10
பசைகொல் மெல்விரல், பெருந்தோள், புலைத்தி
துறைவிட் டன்ன தூமயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,
செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி,
'இன்றுவரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, 15
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண்நலம் பெறவே! 18

பாடல்: 35 (ஈன்றுபுறந்)

[தொகு]
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்-
தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்
முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த 5
வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;
நடுகல் பீலி சூட்டித்; துடிப்படுத்துத்,
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்குஅருங் கவலைய புலவுநாறு அருஞ்சுரம் 10
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும், அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத், தன்
மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல-
துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்துறை, 15
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறிஇருங் கதுப்பின்என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! 18

பாடல் தரும் செய்தி

[தொகு]

அம்மூவனார் பாலைத்திணையில் பாடிய பாடல் இது. தன்னை விட்டுவிட்டுத் தன் காதலனுடன் சென்ற மகளை அவள் செல்லும் வழியிலுள்ள தெய்வங்கள் அவளது காதலன் நெஞ்சு அவளுக்குத் துணையாகும்படி காப்பாற்றவேண்டும் என்று அவளைப் பெற்ற தாய் வேண்டும் பாடல் இது.

பெற்றெடுத்துப் பேணிய என்னை நினைக்கவில்லை. கோட்டைக் கதவுகளை உடைய இந்த நகரமே புலம்புகிறது. அவள் சென்ற ஊர் யாருக்கும் தெரியாத தேயம்.

நடுகல்

[தொகு]

மழவர் மணி கட்டிய கடிகை வேலைக் கையில் வைத்துக்கொண்டு ஆனிரைகளை மீட்டுவருவர். அப்போது வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அந்த மறவனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். சுற்றிலும் கல் அடுக்கி அதனைப் பதுக்கை ஆக்குவர். இந்த நடுகற்களுக்கு 'வல்லாண் பதுக்கைக் கடவுள்' என்று பெயர். நடுகல்லோடு சேர்த்து மயிற்பீலிகளைக் கட்டுவர். உடுக்கு அடிப்பர். தோப்பி என்னும் கள் வைத்துப் படைப்பர். உயிரினங்களைப் பலியிடுவர். இந்தப் பதுக்கைக் கோயில்கள் வழிப்பாதைகள் கூடுமிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட நடுகல் நெய்வத்தைத் தாய் வழிபட்டாள்.

வரலாறு

[தொகு]

பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கோவல் (=கோவலூர், திருக்கோயிலூர்) அரசன் காரி. இந்தப் பெண்ணையாற்று மணல் படிவு போல் சென்ற தலைவியின் கூந்தல் இருந்ததாம்.

பாடல்:36 (பகுவாய்)

[தொகு]
பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
கொடுவாய் இரும்பின் கோள்இரை துற்றி,
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் 5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறுஇடு கதச்சேப் போல மதம்மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக்கேழ் ஊர
வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத்
திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில், 10
நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே,
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினம்கெழு திதியன், 15
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
நார்அரி நறவின் எருமை யூரன்,
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் 20
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரைசெலக்,
கொன்று களம்வேட்ட ஞான்றை,
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! 23

பாடல்: 37(மறந்தவண்)

[தொகு]
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலிமகிழ் உழவர்
பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டித் 5
தொழிற் செருக்கு அனந்தர்வீட, எழில்தகை
வளியொடு சினைஇய வண்தளிர் மாஅத்துக்
கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப்
புளிப்பதன் அமைந்த புதுக்குட மலிர்நிறை
வெயில்வெரிந் நிறுத்த பயில்இதழ்ப் பசுங்குடைக், 10
கயமண்டு பகட்டின் பருகிக், காண்வரக்
கொள்ளொடு பயறுபால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை
வாங்குகை தடுத்த பின்றை ஓங்கிய,
பருதிஅம் குப்பை சுற்றிப், பகல்செல, 15
மருத மரநிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண்நலம் நுகரும் துணைஉடை யோர்க்கே! 18

பாடல்: 38 (விரியிணர்)

[தொகு]
விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்,
தெரிஇதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்,
அம்சிலை இடவதுஆக, வெஞ் செலற்
கணைவலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி;
வருதல் வாய்வது வான்தோய் வெற்பன், 5
வந்தனன் ஆயின், அம்தளிர்ச் செயலைத்
தாழ்வுஇல் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்புஉடன்
ஆடா மையின் கலுழ்புஇல தேறி,
நீடுஇதழ் தலயிய கவின்பெறு நீலம் 10
கண்என மலர்ந்த சுனையும், வண்பறை
மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்
குலவுப்பொறை யிறுத்த கோல்தலை மருவி
கொய்துஒழி புனமும், நோக்கி; நெடிதுநினைந்து,
பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ.தேங்கு - 15
'அவ்வெள் அருவிசூடிய உயர்வரைக்
கூஉம் கணஃது எம்ஊர், என
ஆங்குஅதை அறிவுறல் மறந்திசின், யானே, 18


பாடல்:39 (ஒழித்தது)

[தொகு]
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?" என, யாழநின்
முள்எயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல ; நின்
ஆய்நலம் மறப்பெனோ மற்றே? சேண்இகந்து 5
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி, நெடுநிலை
முளிபுன் மீமிசை வளிசுழற் றுறாஅக்
காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்,
அதர்கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு 10
மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
இனம்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு,
ஞான்று தோன்று அவிர்சுடர் மான்றால் பட்டெனக்,
கள்படர்ஓதி! நிற்படர்ந்து உள்ளி,
அருஞ்செலவு ஆற்றா ஆர்இடை, ஞெரேரெனப் 15
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென,
இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு,
'இன்னகை! இனையம் ஆகவும், எம்வயின்
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழநின் 20
கோடுஏந்து புருவமொடு குவவுநுதல் நீவி,
நறுங்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
வறுங்கை காட்டிய வாய்அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின், புலத்தியால் எம்மே! 25

பாடல்: 40 (கானல்மாலை)

[தொகு]
கானல், மாலைக் கழிப்பூக் கூம்ப,
நீல்நிறப் பெருங்கடல் பாடுஎழுந்து ஒலிப்ப
மீன்ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
குவைஇரும் புன்னைக் குடம்பை சேர,
அசைவண்டு ஆர்க்கும் அல்குறு காலைத், 5
தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
துயரம் செய்துநம் அருளார் ஆயினும்-
அறா அ லியரோ அவருடைக் கேண்மை! 10
அளிஇன் மையின் அவண்உறை முனைஇ,
வாரற்க தில்ல - தோழி! - கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை 15
அகமடல் சேக்கும் துறைவன்
இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே! 17
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/31_முதல்_40_முடிய&oldid=480940" இலிருந்து மீள்விக்கப்பட்டது