உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு/231 முதல் 240 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


2. மணிமிடை பவளம்

[தொகு]


231 'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
இல்லிருந்து அமைவோர்க்கு இல்' என்று எண்ணி,
நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணைஇடத் தொலைந்தோர், 5
படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்,
கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை
வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருக
வருவர் - வாழி; தோழி!- பொருவர் 10
செல்சமம் கடந்த செல்லா நல்லிசை,
விசும்பிவர் வெண்குடைப், பசும்பூட் பாண்டியன்
பாடுபெறு சிறப்பின் கூடல் அன்னநின்
ஆடுவண்டு அரற்றும் முச்சித்
தோடுஆர் கூந்தல் மரீஇ யோரே. 15

232 காண்இனி- வாழி, தோழி!- பானாள்,
மழைமுழங்கு அரவம் கேட்ட, கழைதின்,
மாஅல் யானை புலிசெத்து வெரீஇ,
இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெருங்கல் நாடன் கேண்மை, இனியே, 5
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
மன்ற வேங்கை மணநாட் பூத்த
மணிஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை வரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும் 10
ஆர்கலி விழவுக் களம்கடுப்ப, நாளும்,
விரவுப்பூம் பலியொடு விரைஇ! அன்னை
கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
'முருகு' என வேலன் தரூஉம்
பருவ மாகப் பயந்தன்றால், நமக்கே! 15

233 அலமரல் மழைக்கண் மல்குபனி வார, நின்
அலர்முலை நனைய, அழாஅல்- தோழி!-
எரிகவர்பு உண்ட கரிபுறப் பெருநிலப்
பீடுகெழு மருங்கின் ஓடுமழை துறந்தென,
ஊனில் யானை உயங்கும் வேனில், 5
மறப்படைக் குதிரை, மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல்
கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்கு, 10
குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த
சுரன்இறந்து அகன்றனர் ஆயினும், மிகநனி
மடங்கா உள்ளமொடு மதிமயக் குறாஅ,
பொருள்வயின் நீடலோ இலர் - நின்
இருள்ஐங் கூந்தல் இன்துயில் மறந்தே! 15
234 கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை,
நுண்ணயிர் பரந்த தண்ணய மருங்கின்,
நிரைபறை அன்னத்து அன்ன, விரைபரிப்
புல்உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
வள்புஒருங்கு அமையப் பற்றி, முள்கிய 5
பல்கதிர் ஆழி மெல்வழி அறுப்பக்,
கால்என மருள, ஏறி, நூல்இயல்
கண்நோக்கு ஒழிக்கும் பண்ணமை நெடுந்தேர்
வல்விரைந்து ஊர்மதி!- நல்வலம் பெறுந!
ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை 10
ஏறுபுணர் உவகைய ஊறுஇல உகள,
அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
முல்லை நறுமலர்த் தாதுநயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலைப்
புறவுஅடைந் திருந்த உறைவுஇன் நல்ஊர், 15
கழிபடர் உழந்த பனிவார் உண்கண்
நல்நிறம் பரந்த பசலையள்
மின்நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே. 18

235 அம்ம- வாழி, தோழி!- பொருள் புரிந்து
உள்ளார் கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ?-
பயன்நிலம் குழைய வீசிப், பெயல் முனிந்து,
விண்டு முன்னிய கொண்டல் மாமழை 5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய்இதழ்த் தோன்றி
சுடர்கொள் அகலின் சுருங்குபிணி அவிழச்
சுரிமுகிழ் முசுண்டைப் பொதிஅவிழ் வான்பூ
விசும்புஅணி மீனின் பசும்புல் அணியக், 10
களவன் மண்அளைச் செறிய, அகல்வயல்
கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ
மாரிஅம் குருகின் ஈரிய குரங்க,
நனிகடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றிப்,
பனிகடி கொண்ட பண்பில் வாடை 15
மருளின் மாலையொடு அருள்இன்றி நலிய,
'நுதல்இறை கொண்ட அயல்அறி பசலையொடு
தொன்னலம் சிதையச் சாஅய்'
என்னள்கொல் அளியள்?' என்னா தோரே. 19

236 மணிமருள் மலர முள்ளி அமன்ற,
துணிநீர், இலஞ்சிக் கொண்ட பெருமீன்
அரிநிறக் கொழுங்குறை வௌவினர் மாந்தி,
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
இடைனில நெரிதரு நெடுங்கதிர்ப் பல்சூட்டுப் 5
பனிபடு சாய்ப்புறம் பரிப்பக், கழனிக்
கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ
மயங்குமழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன், நன்றும்
உய்ர்த்தனென்- வாழி, தோழி!- அல்கல் 10
அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்பக்,
கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியா மையின் அழிந்த நெஞ்சின்,
'ஏற்றுஇயல் எழில்நடைப் பொழிந்த மொய்ம்பின்,
தோட்டுஇருஞ் சுரியன் மணந்த பித்தை, 15
ஆட்டன் அத்தியை காணீரோ?' என
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
'கடல்கொண் டன்று' எனப், 'புனல் ஒளித் தன்று' எனக்
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
ஆதி மந்தி போல, ஏதம் சொல்லிப், பேதுபெரிது உறலே! 21

237 'புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ
நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப,
அரவுஎயிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்
தேன்இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்,
குயில்குரல் கற்ற வேனிலும் துயில்துறந்து 5
இன்னா கழியும் கங்குல்' என்றுநின்
நல்மா மேனி அணிநலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின்- ஆயிழை! கனைதிறல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென்தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு, 10
இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளைகழை பிழிந்த அம்தீஞ் சேற்றொடு,
பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல்பொரு புதவின்; உறந்தை எய்தினும்,
வினைபொரு ளாகத் தவிரலர்- கடைசிவந்து 15
ஐய அமர்த்த உண்கண்நின்
வைஏர் வால்எயிறு ஊறிய நீரே! 17

238 மான்றமை அறியா மரம்பயில் இடும்பின்,
ஈன்றுஇளைப் பட்ட வயவுப்பிணப் பசித்தென,
மடமான் வல்சி தரீஇய, நடுநாள்,
இருள்முகைச் சிலம்பின், இரைவேட்டு எழுந்த
பணைமருள் எருத்தின் பல்வரி இரும்போத்து, 5
மடக்கண் ஆமான் மாதிரத்து அலறத்,
தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி
இருங்கல் வியல்அறை சிவப்ப ஈர்க்கும்
பெருகல் நாட; பிரிதி ஆயின், 10
மருந்தும் உடையையோ மற்றே- இரப்போர்க்கு
இழை அணி நெடுந்தேர் களிறொடு என்றும்
மழைசுரந் தன்ன ஈகை, வண்மகிழ்க்,
கழல்தொடித் தடக்கைக், கலிமான், நள்ளி
நளிமுகை உடைந்த நறுங்கார் அடுக்கத்து, 15
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்
மென்பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண்கமழ் புதுமலர் நாறும்நறு நுதற்கே? 18

239 அளிதோ தானே; எவன்ஆ வதுகொல்!
மன்றும் தோன்றாது, மரனும் மாயும்-
'புலிஎன உலம்பும் செங்கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார்கோல் அம்பினர்
எல்ஊர் எறிந்து, பல்ஆத் தழீஇய 5
விளிபடு பூசல் வெஞ்சுரத்து இரட்டும்
வேறுபல் தேஅத்து ஆறுபல நீந்திப்
புள்ளித் தொய்யில், பொறிபடு சுணங்கின்,
ஒள்இழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை, யாம்இவண் ஒழிய, 10
ஈட்டுஅருங் குரைய பொருள்வயிற் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்? எனக்,
குறுநெடு புலவி கூறி, நம்மொடு
நெருநலும் தீம்பல மொழிந்த
சிறுநல் ஒருத்தி பெருநல் ஊரே! 15

240 செவ்வீ ஞாழற் கருங்கோட்டு இருஞ்சினைத்
தனிப்பார்ப்பு உள்ளிய தண்பறை நாரை
மணிப்பூ நெய்தல் மாக்கழி நிவப்ப,
இனிப்புலம் பின்றே கானலும், நளிகடல்
திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கில் 5
பன்மீன் கூட்டம் என்னையர் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
தேம்பாய் ஓதி திருநுதல் நீவிக், 10
கோங்குமுகைத் தன்ன குவிமுலை ஆகத்து,
இன்துயில் அமர்ந்தனை ஆயின், வண்டுபட
விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர்ப்,
பூவேய் புன்னை அம் தண்பொழில்,
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. 15

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/231_முதல்_240_முடிய&oldid=480931" இலிருந்து மீள்விக்கப்பட்டது