அகநானூறு/241 முதல் 250 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


2. மணிமிடை பவளம்[தொகு]


241 'துனிஇன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம, அவர்' என முனியாது
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
நமர்மன்- வாழி, தோழி!- உயர்மிசை 5
மூங்கில் இளமுளை திரங்கக், காம்பின்
கழைநரல் வியலகம் வெம்ப, மழைமறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலைப்
பேஎய் வெண்தேர்ப் பெயல்செத்து ஓடி,
தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை 10
புலம்பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்குதலை
விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
வட்டக் கழங்கின் தாஅய்த், துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும்
நல்மர மருங்கின் மலைஇறந் தோரே! 16

242 அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது
மணிமருள் கலவத்து உறைப்ப, அணிமிக்கு
அவிர்பொறி மஞ்ஜை ஆடும் சோலைப்,
பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம், 5
செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்புதர வந்தமை அறியாள், 'நுண்கேழ்
முறிபுரை எழில்நலத்து என்மகள் துயர்மருங்கு
அறிதல் வேண்டும்' எனப், பல்பிரப்பு இரீஇ
அறியா வேலற் றரீஇ, அன்னை 10
வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
மறிஉயிர் வழங்கா அளவை, சென்றுயாம்
செலவரத் துணிந்த, சேண்விளங்கு, எல்வளை
நெகிழ்ந்த முன்கை, நேர்இறைப் பணைத்தோள்,
நல்எழில் அழிவின் தொல்கவின் பெறீஇய, 15
முகிழ்த்து வரல் இளமுலை மூழ்கப், பல்ஊழ்
முயங்கல் இயைவன் மன்னோ-தோழி!-
நறைகால் யாத்த நளிர்முகைச் சிலம்பில்
பெருமலை விடரகம் நீடிய சிறுயிலைச்
சாந்த மென்சினை தீண்டி, மேலது 20
பிரசம் தூங்கும் சேண்சிமை,
வரையக வெற்பன் மணந்த மார்பே! 22

243 அவரை ஆய்மலர் உதிரத், துவரின்
வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப
இறங்குபோது அவிழ்ந்த ஈர்ம்புதல் பகன்றைக்
கறங்குநுண் துவலையின் ஊருழை அணியப்,
பெயல்நீர் புதுவரல் தவிரச், சினைநேர்பு 5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி
நெல்ஒலி பாசவல் துழைஇக், கல்லெனக்
கடிதுவந்து இறுத்த கண்இல், வாடை!
'நெடிதுவந் தனை' என நில்லாது ஏங்கிப்
பலபுலந்து உறையும் துணைஇல் வாழ்க்கை 10
நம்வலத்து அன்மை கூறி, அவர்நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
பனிவார் கண்ணேம் ஆகி, இனிஅது
நமக்கே எவ்வம் ஆகின்று;
அனைத்தால் தோழி! நம் தொல்வினைப் பயனே! 15

244 "பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
பகலுறை முதுமரம் புலம்பப் போகி,
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை 5
வண்டினம் தவிர்க்கும் தண்பதக் காலை
வரினும், வாரார் ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?" எனத்தன்
பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப,
'அருந்துயர் உடையள் அவள்' என விரும்பிப் 10
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல்லார் புரவி, வல்விரைந்து, பூட்டி,
நெடுந்தேர் ஊர்மதி, வலவ!-
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே! 14

245 'உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார்
நன்றுபுரி காட்சியர் சென்றனர், அவர்' என
மனைவலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின், நீங்கி
மழைபெயன் மறந்த கழைதிரங்கு இயவில் 5
செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை
வல்வில் இளையர் தலைவர், எல்லுற,
வரிகிளர் பணைத்தோள், வயிறணி திதலை,
அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பில்,
மகிழ்நொடை பெறாஅ ராகி, நனைகவுள் 10
கான யானை வெண்கோடு சுட்டி,
மன்றுஓடு புதல்வன் புன்தலை நீவும்
அருமுனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
நிழல்படக் கவின்ற நீள்அரை இலவத்து
அழல் அகைந் தன்ன அலங்குசினை ஒண்பூக் 1 5
குழல்இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும்பொறை உணங்கும் ததர்வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்
கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம்மா அரிவை ஒழிய,
சென்மோ- நெஞ்சம்!- வாரலென் யானே. 21

246 பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
கதிர்மூக்கு ஆரல் களவன் ஆக,
நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலிநீர் அகல்வாய் யாணர் ஊர!
போதுஆர் கூந்தல் நீவெய் யோளொடு 5
தாதுஆர் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு
ஆடினை என்ப நெருநை; அலரே
காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்,
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் .246-10

இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப்,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய்வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. 14

247 மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை
நன்மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருளிலர்- வாழி, தோழி!- பொருள்புரிந்து,
இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை
கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின் 5
பெருஞ்செம் புற்றின் இருந்தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகைபட
முனைபாழ் பட்ட ஆங்கண், ஆள்பார்த்துக்
கொலைவல் யானை சுரம்கடி கொள்ளும்
ஊறுபடு கவலைய ஆறுபல நீந்திப் 10
படுமுடை நசைஇய பறைநெடுங் கழுத்தின்,
பாறுகிளை சேக்கும் சேண்சிமைக்
கோடுயர் பிறங்கல் மலைஇறந் தோரே. 13

248 நகைநீ கோளாய்- தோழி!- அல்கல்
வயநாய் எறிந்து, வன்பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கிக், கிளையொடு
நான்முலைப் பிணவல் சொலியக், கான் ஒழிந்து,
அரும்புழை முடுக்கர் ஆள்குறித்து நின்ற 5
தறுகட் பன்றி நோக்கிக், கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடைசெலல் முன்பின்தன் படைசெலச் செல்லாது,
அருவழி விலக்கும்எம் பெருவிறல் போலும்' என,
எய்யாது பெயரும் குன்ற நாடன் 10
செறிஅரில் துடக்கலின், பரீஇப் புரிஅவிழ்ந்து,
ஏந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை,
ஏற்றுஇமில் கயிற்றின், எழில்வந்து துயல்வர
இல்வந்து நின்றோற் கண்டனள் அன்னை;
வல்லே என்முகம் நோக்கி.
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந் தோளே! 16

249 அம்ம- வாழி, தோழி!- பல்நாள்
இவ்ஊர் அம்பல் எவனோ? வள்வார்
விசிபிணித்து யாத்த அரிகோல் தெண்கிணை
இன்குரல் அகவுநர் இரப்பின் நாடொறும்
பொன்கோட்டுச் செறித்துப், பொலந்தார் பூட்டிச், 5
சாந்தம் புதைத்த ஏந்துதுவங்கு எழிலிமில்
ஏறுமுந் துறுத்துச், சால்பதம் குவைஇ,
நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்பூண்
பல்வேல் முசுண்டை வேம்பி அன்னஎன்
நல்லெழில் இளநலம் தொலையினம், நல்கார்- 10
பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத்,
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகுஆ வீழ்த்துத், திற்றி தின்ற
புலவுக்களம் துழைஇய துகள்வாய்க் கோடை
நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த 15
வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து,
வேறுவேறு கவலைய ஆறுபரிந்து, அலறி,
உழைமான் இனநிரை ஓடும்
கழைமாய் பிறங்கல் மலைஇறந் தோரே. 19

250 எவன்கொல்?- வாழி, தோழி!- மயங்குபிசிர்
மல்குதிரை உழந்த ஒல்குநிலைப் புன்னை
வண்டிமிர் இணர நுண்தாது வரிப்ப
மணம்கமழ் இளமணல் எக்கர்க் காண்வரக்,
கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக், 5
கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித்,
தாரன், கண்ணியன், சேரவந்து, ஒருவன்,
வரிமனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு
அரும்படர் எவ்வமொடு பெருந்தோள் சாஅய் 10
அவ்வலைப் பரதவர் கானல்ஞ் சிறுகுடி
செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறைவளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது, கங்கு லானே! 14

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/241_முதல்_250_முடிய&oldid=480932" இலிருந்து மீள்விக்கப்பட்டது