அகநானூறு/271 முதல் 280 முடிய
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
2. மணிமிடை பவளம்
[தொகு]271 பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்
சிறுபுன் பெடையொடு சேண்புலம் போகி,
அரிமணல் இயவில் பரல்தேர்ந்து உண்டு,
வரிமரல் வாடிய வறன்நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கின் கோட்சுரம் நீந்தி, 5
நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
பல்காய் அஞ்சினை அகவும் அத்தம்
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்றுதரும்
நிலைஅரும் பொருட்பிணி நினைந்தனிர் எனினே, 10
வல்வதாக, நும் செய்வினை! இவட்கே,
களிமலி கள்ளின் நல்தேர் அவியன்
ஆடியல் இளமழை சூடித் தோன்றும்
பழம்தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண்ணிடை புரையும் நெடுமென் பணைத்தோள், 15
திருந்துகோல் ஆய்தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ , பிரிந்துறை நாட்டே? 17
272 இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவுநாறு புகர்நுதல் கழுவக், கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு
அஞ்சுவரு விடர்முகை ஆர்இருள் அகற்றிய,
மின்ஒளிர் எஃகம் செல்நெறி விளக்கத், 5
தனியன் வந்து, பனிஅலை முனியான்
நீர்இழி மருங்கின் ஆர்இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசைவளி பகரத்
துறுகல் நண்ணிய கறிஇவர் படப்பைக் 10
குறிஇறைக் குரம்பைநம் மனைவயின் புகுதரும்,
மெய்ம்மலி உவகையன்; அந்நிலை கண்டு,
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந்தினை நீரொடு தூஉய்,
நெடுவேள் பரவும், அன்னை, அன்னோ! 15
என்ஆ வதுகொல் தானே - பொன்னென
மலர்ந்த வேங்கை அலங்குசினை பொலிய
மணிநிற மஞ்ஜை அகவும்
அணிமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே? 19
273 விசும்பு விசைத்துஎறிந்த கூதளங் கோதையிற்,
பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்பப்,
புலம்புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்,
நலம்கவர் பசலை நலியவும், நந்துயர் 5
அறியார் கொல்லோ தாமே? அறியினும்,
நம்மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ?
யாங்கென உணர்கோ, யானே?- வீங்குபு
தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு 10
முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை,
ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம் 15
நிலவரை எல்லாம் நிழற்றி,
அலர்அரும்பு ஊழ்ப்பவும், வாரா தோரே. 17
274 இருவிசும்பு அதிர முழங்கி, அரநலிந்து,
இகுபெயல் அழிதுளி தலைஇ, வானம்
பருவஞ் செய்த பானாட் கங்குல்,
ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
கடைகோல் சிறுதீ அடைய மாட்டித், 5
திண்கால் உறியன், பானையன், அதளன்,
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்,
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்,
மடிவிடு வீளை, கடிதுசென்று இசைப்பத்,
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ 10
முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும்
தண்ணறும் புறவி னதுவே - நறுமலர்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே. 14
275 ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்திக்,
குடைஅடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலைப், பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வளமனைக் கிழத்தி!
'பிதிர்வை நீரை வெண்நீறு ஆக;' என, 5
யாம்தற் கழறுங் காலைத், தான்தன்
மழலை இன்சொல், கழறல் இன்றி,
இன்உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்குஇவண் இராஅள்,
ஏதி லாளன் காதல் நம்பித், 10
திரளரை இருப்பைத் தொள்ளை வான்பூக்
குருளை எண்கின் இருங்கிளை கவரும்
வெம்மலை அருஞ்சுரம், நம்இவண் ஒழிய,
இருநிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
நெருநைப் போகிய பெருமடத் தகுவி 15
ஐதுஅகல் அல்குல் தழையணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என்மகள்
செம்புடைச் சிறுவிரல் வரித்த
வண்டலும் காண்டீரோ, கண்உடை யீரே? 19
276 நீளிரும் பொய்கை இரைவேட்டு எழுந்த
வாளை வெண்போத்து உணீஇய, நாரைதன்
அடிஅறி வுறுதல் அஞ்சிப், பைப்பயக்
கடிஇலம் புகூஉம் கள்வன் போலச்,
சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு 5
ஆவதுஆக! இனிநாண் உண்டோ ?
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்,
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் 10
தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
மார்புகடி கொள்ளேன் ஆயின், ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்,
பரந்து வெளிப்படாது ஆகி,
வருந்துக தில்ல, யாய் ஓம்பிய நலனே! 15
277 தண்கதிர் மண்டிலம் அவிர்அறச் சாஅய்ப்
பகலழி தோற்றம் போலப், பையென
நுதல்ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவலில் உள்ளமொடு எஃகுதுணை ஆகக்,
கடையல குரலம் வாள்வரி உழுவை 5
பேழ்வாய்ப் பிணவின் விழுப்பசி நோனாது
இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉமயிர்ச்,
சிறுகண், பன்றி வருதிறம் பார்க்கும்
அத்தம்ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
பொத்துடை மரத்த புகர்படு நீழல், 10
ஆறுசெல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம்இல், வெஞ்சுரம் இறந்தோர் நம்வயின்
வாராஅளவை- ஆயிழை!- கூர்வாய்
அழல்அகைந் தன்ன காமர் துதைமயிர்
மனைஉறை கோழி மறனுடைச் சேவல் 15
போர்எரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் எண்குரல் மாந்தி,
சிதர்சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
வாரார் தோழி! நம் காத லோரே. 20
278 குணகடல் முகந்த கொள்ளை வானம்
பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத் தனைய ஆகி, வலன்ஏர்பு
கோல்நிமிர் கொடியின் வசிபட மின்னி,
உரும்உரறு அதிர்குரல் தலைஇப், பானாள், 5
பெருமலை மீமிசை முற்றின ஆயின்,
வாள்இலங்கு அருவி தாஅய், நாளை
இருவெதிர் அம்கழை ஒசியத் தீண்டி
வருவது மாதோ, வண்பரி உந்தி,
நனிபெரும் பரப்பின் நம்ஊர் முன்துறைப், 10
பனிபொரு மழைக்கண் சிவந்த, பானாள்
முனிபடர் அகல மூழ்குவம் கொல்லோ!
மணிமருள் மேனி ஆய்நலம் தொலைய,
தணிவுஅருந் துயரம் செய்தோன்
அணிகிளர் நெடுவரை ஆடிய நீரே? 15
279 'நட்டோ ர் இன்மையும், கேளிர் துன்பமும்,
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ
ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல
பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென்முலை முற்றம் கடவா தோர்' என, 5
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம்சுடு கூர்எரி
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
கடறுஉழந்து இவணம் ஆகப், படர்உழந்து
யாங்குஆ குவள்கொல் தானே - தீம்தொடை 10
விளரி நரம்பின் நயவரு சீறுயாழ்
மலிபூம் பொங்கர் மகிழ்குரற் குயிலொடு
புணர்துயில் எடுப்பும் புனல்தெளி காலையும்,
நம்முடை மதுகையள் ஆகி, அணிநடை
அன்னமாண் பெடையின் மென்மெல இயலிக், 15
கையறு நெஞ்சினள், அடைதரும்
மைஈர் ஓதி மாஅ யோளே? 17
280 பொன் அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்,
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும், 5
பெறல்அருங் குரையள் ஆயின், அறம்தெரிந்து,
நாம்உறை தேஎம் மரூஉப்பெயர்ந்து, அவனொடு
இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம் பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், 10
தருகுவன் கொல்லோ தானே - விரிதிரைக்
கண்திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும்
கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே? . 14
281 செய்வது தெரிந்திசின்- தோழி! அல்கலும்,
அகலுள் ஆண்மை அச்சறக் கூறிய
சொல்பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்குஇயல் மடமயில் ஒழித்த பீலி
வான்போழ் வல்வில் சுற்றி, நோன்சிலை 5
அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்
கனைகுரல் இசைக்கும் விரைசெல் கடுங்கணை
முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து, 10
எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறைஇறந்து, அவரோ சென்றனர்
பறையறைந் தன்ன அலர்நமக்கு ஒழித்தே. 13
282 பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
செறிமடை அம்பின், வல்வில், கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு,
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்,
கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப, 5
வைந்நுதி வால்மருப்பு ஒடிய உக்க
தெண்நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறைமரம் ஆக, நறைநார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 10
இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர்வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி,
யாயும், 'அவனே என்னும்; யாமும், 15
'வல்லே வருக, வரைந்த நாள்; 'என,
நல்இறை மெல்விரல் கூப்பி,
இல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே! 18
283 நன்னெடுங் கதுப்பொடு பெருந்தோள் நீவிய!
நின்னிவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
செலவுதலைக் கொண்ட பெருவிதுப்பு உறுவி
பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச்,
சில்உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் 5
திரிவயின், தெவுட்டும் சேண்புலக் குடிஞைப்
பைதன் மென்குரல் ஐதுவந்து இசைத்தொறும்,
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும்என் னாமைக், கரிமரம்
கண்அகை இளங்குழை கால்முதற் கவினி, 10
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்கப்,
பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப்,
புல்நுகும்பு எடுத்த நல்நெடுங் கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன,
வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப, 15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. 17
284 சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
குறுவிழிக் கண்ண கூரல்அம் குறுமுயல்
முடந்தை வரகின் வீங்குபீள் அருந்துபு,
குடந்தைஅம் செவிய கோட்பவர் ஒடுங்கி,
இன்துயில் எழுந்து, துணையொடு போகி, 5
முன்றில் சிறுநிறை நீர்கண்டு உண்ணும்
புன்புலம் தழீஇய பொறைமுதற் சிறுகுடித்,
தினைகள் உண்ட தெறிகோல் மறவர்,
விதைத்த வில்லர், வேட்டம் போகி,
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் 10
காமர் புறவி னதுவே- காமம்
நம்மினும் தான்தலை மயங்கிய
அம்மா அரிவை உறைவின் ஊரே. 13
285 'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்
அழிபடர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்துசேண் அகல, வைஎயிற்று
ஊன்நகைப் பிணவின் உறுபசி களைஇயர்,
காடுதேர் மடப்பிணை அலறக் கலையின் 5
ஓடுகுறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில்புலந்து இளைக்கும் வெம்மைய, பயில்வரி
இரும்புலி வேங்கைக் கருந்தோல் அன்ன
கல்எடுத்து எறிந்த பல்கிழி உடுக்கை
உலறுகுடை வம்பலர் உயர்மரம் ஏறி, 10
ஏறுவேட்டு எழுந்த இனம்தீர் எருவை
ஆடுசெவி நோக்கும் அத்தம், பணைத்தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே, காதலர்
வாராய், தோழி! முயங்குகம் பலவே. 15
286 வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை,
வள்ளி நுண்இடை வயின்வயின் நுடங்க,
மீன்சினை அன்ன வெண்மணல் குவைஇக்,
காஞ்சி நீழல், தமர்வளம் பாடி,
ஊர்க்குறு மகளிர் குறுவழி, விறந்த 5
வராஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை உறங்கும் தண்துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆகமீட்டு ஆங்கு,
அறனும் பொருளும் வழாமை நாடி, 10
தற்றகவு உடைமை நோக்கி, மற்றதன்
பின்ஆ கும்மே, முன்னியது முடித்தல்;
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன 15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய்யாண்டு உளதோ, இவ்வுலகத் தானே? 17
287 தொடிஅணி முன்கைத் தொகுவிரல் குவைஇப்,
படிவ நெஞ்சமொடு பகல்துணை ஆக,
நோம்கொல்? அளியள் தானே!- தூங்குநிலை,
மரைஏறு சொறிந்த மாத்தட் கந்தின்
சுரைஇவர் பொதியில் அம்குடிச் சீறூர் 5
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒருதனி நெடுவீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய்மழை நனந்தலைக்,
கணைக்கால் அம்பிணை ஏறுபுறம் நக்க, 10
ஒல்குநிலை யாஅத்து ஓங்குசினை பயந்த
அல்குறு வரிநிழல் அசையினம் நோக்க,
அரம்புவந்து அலைக்கும் மாலை,
நிரம்பா நீள்இடை வருந்துதும் யாமே. 14
288 சென்மதி; சிறக்க; நின் உள்ளம்! நின்மலை
ஆரம் நீவிய அம்பகட்டு மார்பினை,
சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ
முருகுமுரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல், 5
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
கனிமுதிர் அடுக்கத்துஎம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை; நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடிஇருங் குன்றத்து,
இட்டுஆறு இரங்கும் விட்டுஒளிர் அருவி 20
அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்குபசி களைஇயர்,
பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும்,
நனிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து,
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் 25
கொங்தொடு உதிர்த்த கதுப்பின்,
அம்தீம் கிளவித் தந்தை காப்பே! 27
289 சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயவின்,
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும் 5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென்பிணி வீங்கிய கைசிறிது
அவிழினும், உயவும் ஆய்மடத் தகுவி;
சேண்உறை புலம்பின் நாள்முறை இழைத்த
திண்சுவர் நோக்கி, நினைந்து கண்பனி, 10
நெகிழ்நூல் முத்தின், முகிழ்முலைத் தெறிப்ப,
மைஅற விரிந்த படைஅமை சேக்கை
ஐமென் தூவி அணைசேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன்அழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி; 15
'நல்ல கூறு' என நடுங்கிப்
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? 17
290 குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை
இருஞ்சேற்று அள்ளல் நாட்புலம் போகிய
கொழுமீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர்,
நுண்ஞாண் அவ்வலைச் சேவல் பட்டென,
அல்குறு பொழுதின் மெல்குஇரை மிசையாது, 5
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம்கண் பெண்ணை அன்புற நரலும்
சிறுபல் தொல்குடிப் பெருநீர்ச் சேர்ப்பன்
கழிசேர் புன்னை அழிபூங் கானல்,
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் 10
மணவா முன்னும் எவனோ, தோழி?
வெண்கோட்டு யானை விறற்போர்க் குட்டுவன்
தென்திரைப் பரப்பின் தொண்டி முன்துறைச்,
கரும்புஉண மலர்ந்த பெருந்தண் நெய்தல்
மணிஏர் மாண்நலம் ஒரீஇப்,
பொன்நேர் வண்ணம் கொண்டஎன் கண்ணே? 16