அகநானூறு/281 முதல் 290 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


2. மணிமிடை பவளம்[தொகு]

281 செய்வது தெரிந்திசின்- தோழி! அல்கலும்,
அகலுள் ஆண்மை அச்சறக் கூறிய
சொல்பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்குஇயல் மடமயில் ஒழித்த பீலி
வான்போழ் வல்வில் சுற்றி, நோன்சிலை 5
அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்
கனைகுரல் இசைக்கும் விரைசெல் கடுங்கணை
முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து, 10
எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறைஇறந்து, அவரோ சென்றனர்
பறையறைந் தன்ன அலர்நமக்கு ஒழித்தே. 13

282 பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
செறிமடை அம்பின், வல்வில், கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு,
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்,
கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப, 5
வைந்நுதி வால்மருப்பு ஒடிய உக்க
தெண்நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறைமரம் ஆக, நறைநார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 10
இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர்வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி,
யாயும், 'அவனே என்னும்; யாமும், 15
'வல்லே வருக, வரைந்த நாள்; 'என,
நல்இறை மெல்விரல் கூப்பி,
இல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே! 18

283 நன்னெடுங் கதுப்பொடு பெருந்தோள் நீவிய!
நின்னிவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
செலவுதலைக் கொண்ட பெருவிதுப்பு உறுவி
பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச்,
சில்உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் 5
திரிவயின், தெவுட்டும் சேண்புலக் குடிஞைப்
பைதன் மென்குரல் ஐதுவந்து இசைத்தொறும்,
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும்என் னாமைக், கரிமரம்
கண்அகை இளங்குழை கால்முதற் கவினி, 10
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்கப்,
பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப்,
புல்நுகும்பு எடுத்த நல்நெடுங் கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன,
வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப, 15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. 17

284 சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
குறுவிழிக் கண்ண கூரல்அம் குறுமுயல்
முடந்தை வரகின் வீங்குபீள் அருந்துபு,
குடந்தைஅம் செவிய கோட்பவர் ஒடுங்கி,
இன்துயில் எழுந்து, துணையொடு போகி, 5
முன்றில் சிறுநிறை நீர்கண்டு உண்ணும்
புன்புலம் தழீஇய பொறைமுதற் சிறுகுடித்,
தினைகள் உண்ட தெறிகோல் மறவர்,
விதைத்த வில்லர், வேட்டம் போகி,
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் 10
காமர் புறவி னதுவே- காமம்
நம்மினும் தான்தலை மயங்கிய
அம்மா அரிவை உறைவின் ஊரே. 13

285 'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்
அழிபடர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்துசேண் அகல, வைஎயிற்று
ஊன்நகைப் பிணவின் உறுபசி களைஇயர்,
காடுதேர் மடப்பிணை அலறக் கலையின் 5
ஓடுகுறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில்புலந்து இளைக்கும் வெம்மைய, பயில்வரி
இரும்புலி வேங்கைக் கருந்தோல் அன்ன
கல்எடுத்து எறிந்த பல்கிழி உடுக்கை
உலறுகுடை வம்பலர் உயர்மரம் ஏறி, 10
ஏறுவேட்டு எழுந்த இனம்தீர் எருவை
ஆடுசெவி நோக்கும் அத்தம், பணைத்தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே, காதலர்
வாராய், தோழி! முயங்குகம் பலவே. 15

286 வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை,
வள்ளி நுண்இடை வயின்வயின் நுடங்க,
மீன்சினை அன்ன வெண்மணல் குவைஇக்,
காஞ்சி நீழல், தமர்வளம் பாடி,
ஊர்க்குறு மகளிர் குறுவழி, விறந்த 5
வராஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை உறங்கும் தண்துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆகமீட்டு ஆங்கு,
அறனும் பொருளும் வழாமை நாடி, 10
தற்றகவு உடைமை நோக்கி, மற்றதன்
பின்ஆ கும்மே, முன்னியது முடித்தல்;
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன 15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய்யாண்டு உளதோ, இவ்வுலகத் தானே? 17

287 தொடிஅணி முன்கைத் தொகுவிரல் குவைஇப்,
படிவ நெஞ்சமொடு பகல்துணை ஆக,
நோம்கொல்? அளியள் தானே!- தூங்குநிலை,
மரைஏறு சொறிந்த மாத்தட் கந்தின்
சுரைஇவர் பொதியில் அம்குடிச் சீறூர் 5
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒருதனி நெடுவீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய்மழை நனந்தலைக்,
கணைக்கால் அம்பிணை ஏறுபுறம் நக்க, 10
ஒல்குநிலை யாஅத்து ஓங்குசினை பயந்த
அல்குறு வரிநிழல் அசையினம் நோக்க,
அரம்புவந்து அலைக்கும் மாலை,
நிரம்பா நீள்இடை வருந்துதும் யாமே. 14

288 சென்மதி; சிறக்க; நின் உள்ளம்! நின்மலை
ஆரம் நீவிய அம்பகட்டு மார்பினை,
சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ
முருகுமுரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல், 5
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
கனிமுதிர் அடுக்கத்துஎம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை; நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடிஇருங் குன்றத்து,
இட்டுஆறு இரங்கும் விட்டுஒளிர் அருவி 20
அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்குபசி களைஇயர்,
பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும்,
நனிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து,
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் 25
கொங்தொடு உதிர்த்த கதுப்பின்,
அம்தீம் கிளவித் தந்தை காப்பே! 27

289 சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயவின்,
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும் 5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென்பிணி வீங்கிய கைசிறிது
அவிழினும், உயவும் ஆய்மடத் தகுவி;
சேண்உறை புலம்பின் நாள்முறை இழைத்த
திண்சுவர் நோக்கி, நினைந்து கண்பனி, 10
நெகிழ்நூல் முத்தின், முகிழ்முலைத் தெறிப்ப,
மைஅற விரிந்த படைஅமை சேக்கை
ஐமென் தூவி அணைசேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன்அழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி; 15
'நல்ல கூறு' என நடுங்கிப்
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? 17

290 குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை
இருஞ்சேற்று அள்ளல் நாட்புலம் போகிய
கொழுமீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர்,
நுண்ஞாண் அவ்வலைச் சேவல் பட்டென,
அல்குறு பொழுதின் மெல்குஇரை மிசையாது, 5
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம்கண் பெண்ணை அன்புற நரலும்
சிறுபல் தொல்குடிப் பெருநீர்ச் சேர்ப்பன்
கழிசேர் புன்னை அழிபூங் கானல்,
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் 10
மணவா முன்னும் எவனோ, தோழி?
வெண்கோட்டு யானை விறற்போர்க் குட்டுவன்
தென்திரைப் பரப்பின் தொண்டி முன்துறைச்,
கரும்புஉண மலர்ந்த பெருந்தண் நெய்தல்
மணிஏர் மாண்நலம் ஒரீஇப்,
பொன்நேர் வண்ணம் கொண்டஎன் கண்ணே? 16

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/281_முதல்_290_முடிய&oldid=480936" இலிருந்து மீள்விக்கப்பட்டது