அகநானூறு/71 முதல் 80 முடிய
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
1. களிற்றியானை நிரை
[தொகு]பாடல்:71 (நிறைந்தோர்)
[தொகு]நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன்இன் மையின் பற்றுவிட்டு, ஒரூஉம்
நயன்இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப்பூ நீத்துச், சினைப்பூப் படர,
மைஇல் மான்இனம் மருளப், பையென 5
வெந்துஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல்இரு வானம் அம்மஞ்சு ஈனப்,
பகல்ஆற்றுப் படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, 10
ஆர்அஞர் உறுநர் அருநிறம் சுட்டிச்
கூர்எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள்அற இயற்றிய அழல்காண் மண்டிலத்து
உள்ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் - பெரிது அழிந்து, 15
இதுகொல் - வாழி, தோழி! என் உயிர்
விலங்குவெங் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளின் துறக்கும் பொழுதே? 18
பாடல்:72 (இருள்கிழிப்பது)
[தொகு]- இருள்கிழிப் பதுபோல் மின்னி, வானம்
- துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்,
- மின்னி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
- பொன்எறி பிதிரிற் சுடர வாங்கிக்,
- குரும்பி, கெண்டும் பெருங்கை ஏற்றை 5
- இரும்புசெய் கொல்எனத் தோன்றும் ஆங்கண்,
- ஆறே அருமர பினவே; யாறே
- சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
- கழைமாய் நீத்தம் கல்பொருது இரங்க,
- 'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து, 10
- ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
- ஈர்உயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய,
- இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
- நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
- மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும் 15
- வாள்நடந் தன்ன வழக்கு அருங் கவலை,
- உள்ளுநர் உட்கும் கல்அடர்ச் சிறுநெறி,
- அருள்புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
- வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
- நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் 20
- ஆனா அரும்படர் செய்த
- யானே, தோழி, தவறுஉடை யேனே! 22
பாடல்: 73 (பின்னொடு)
[தொகு]- பின்னொடு முடித்த மண்ணா முச்சி
- நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ;
- வெருகுஇருள் நோக்கி யன்ன கதிர் விடுபு
- ஒருகாழ் முத்தம் இடைமுலை விளங்க,
- அணங்குறு கற்பொடு மடம்கொளச் சாஅய், 5
- நின்நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
- 'என்ஆகுவள்கொல், அளியள் தான்?' என,
- என்அழிபு இரங்கும் நின்னொடு யானும்
- ஆறுஅன்று என்னா வேறுஅல் காட்சி
- இருவேம் நம்படர் தீர வருவது 10
- காணிய வம்மோ - காதல்அம் தோழி!
- கொடிபிணங்கு அரில இருள்கொள் நாகம்
- மடிபதம் பார்க்கும், வயமான் துப்பின்,
- ஏனல்அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
- பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி 15
- விடுபொறிச் சுடரின் மின்னி அவர்
- சென்ற தேஎத்து நின்றதால் மழையே. 17
பாடல்:74 (வினைநலம்)
[தொகு]- வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,
- போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத்,
- தண்பெயல் பொழிந்த பைதுறு காலை,
- குருதி உருவின் ஒண்செம் மூதாய்
- பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப், 5
- பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ
- வெண்களர் அரிமணல் நன்பல் தாஅய்,
- வண்டுபோது அவிழ்க்கும் தண்கமழ் புறவில்,
- கருங்கோட்டு இரலைக் காமர் மடப்பிணை
- மருண்டமான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து 10
- "திண்தேர் வலவ! கடவு' எனக் கடைஇ,
- இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
- வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும்
- நின்வலித்து அமைகுவென் மன்னோ - அல்கல்
- புன்கண் மாலையொடு பொருந்திக், கொடுங்கோற் 15
- கல்லாக் கோவலர் ஊதும்
- வல்வாய் சிறுகுழல் வருத்தாக் காலே! 17
பாடல்: 75 (அருளன்று)
[தொகு]- "அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
- பொருள்" என வலித்த பொருள்அல் காட்சியின்
- மைந்துமலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
- எரிசினம் தவழ்ந்த இருங்கடற்று அடைமுதல்
- கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை, 5
- அடுபுலி முன்பின், தொடுகழல் மறவர்
- தொன்றுஇயல் சிறுகுடி மன்றுநிழற் படுக்கும்
- அண்ணல் நெடுவரை, ஆம்அறப் புலர்ந்த
- கல்நெறிப் படர்குவர் ஆயின் - நல்நுதல்,
- செயிர்தீர் கொள்கை, சில்மொழி துவர்வாய், 10
- அவிர்தொடிய முன்கை, ஆய்இழை, மகளிர்
- ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து,
- ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
- சென்றுபடு விறற்கவின் உள்ளி, என்றும்
- இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும், 15
- தருநரும் உளரோ, இவ் உலகத் தான்?, என-
- மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
- அம்மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
- பல்காசு நிரைத்த, கோடுஏந்து, அல்குல்;
- மெல்இயல் குறுமகள்!- புலந்துபல கூறி 20
- ஆனா நோலை ஆக, யானே
- பிரியச் சூழ்தலும் உண்டோ ,
- அரிதுபெறு சிறப்பின் நின்வயி னானே?" 23
பாடல்:76 (மண்கனை)
[தொகு]- மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்,
- தண்துறை ஊரன் எம்சேரி வந்தென
- இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
- நல்கலம் ஈயும் நாள்மகிழ் இருக்கை
- அவைபுகு பொருநர் பறையின், ஆனாது, 5
- கழறுப என்ப, அவன் பெண்டிர்; அந்தில்
- கச்சினன், கழலினன், தேம்தார் மார்பினன்
- வகைஅமைப் பொலிந்த, வனப்பு அமை தெரியல்,
- சுரியல்அம் பொருநனைக் காண்டிரோ?' என,
- ஆதி மந்தி பேதுற்று இனைய, 10
- சிறைபறைந்து உறைஇச் செங்குணக்கு ஒழுகும்
- அம்தண் காவிரி போல,
- கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின், யானே! 13
பாடல்: 77 (நன்னுதல்)
[தொகு]- 'நல்நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
- துன்அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
- பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
- சூழ்ந்திசின் - வாழிய நெஞ்சு!- வெய்துற
- இடிஉமிழ் வானம் நீங்கி, யாங்கணும் 5
- குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்,
- கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்,
- பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்,
- உயிர்திறம் பெயர, நல்அமர்க் கடந்த
- தறுக ணாளர் குடர் தரீஇத் தெறுவச், 10
- செஞ்செவி எருவை, அஞ்சுவர இருக்கும்
- கல்அதர்க் கவலை போகின், சீறூர்ப்
- புல்அரை இத்திப் புகர்படு நீழல்
- எல்வளி அலைக்கும், இருள்கூர் மாலை,
- வானவன் மறவன், வணங்குவில் தடக்கை, 15
- ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன்
- பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
- திருந்துஇலை எஃகம் போல,
- அருந்துயர் தரும், இவள் பனிவார் கண்ணே! 19
பாடல்: 78 (நனந்தலை)
[தொகு]- 'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
- இனம்தலைத் தரூஉம் எறுழ்கிளர் முன்பின்,
- வரிஞிமிறு ஆர்க்கும், வாய்புகு கடாஅத்துப்
- பொறிநுதற் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல்
- இரும்பிணர்த் தடக்கையில், ஏமுறத் தழுவ, 5
- கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்,
- தேம்பிழி நறவின் குறவர் முன்றில்
- முந்தூழ் ஆய்மலர் உதிரக், காந்தள்
- நீடுஇதழ் நெடுந்துடுப்பு ஒசியத், தண்ணென
- வாடை தூக்கும் வருபனி அற்சிரம், 10
- நம்இல் புலம்பின், நம் ஊர்த் தமியர்
- என்ஆ குவர்கொல் அளியர் தாம்?' என
- எம்விட்டு அகன்ற சின்னாள், சிறிதும்,
- உள்ளியும் அறிதிரோ - ஓங்குமலை நாட!
- உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்இசை 15
- வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
- செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
- தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
- யாண்டுபல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
- ஆள்இடூஉக் கடந்து, வாள்அமர் உழக்கி, 20
- ஏந்துகோட்டு யானை வேந்தர்ஓட்டிய
- நெடும்பரிப் புரவிக் கைவண் பாரி
- தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
- தேம்கமழ் புதுமலர் நாறும் - இவள் நுதலோ? 24
பாடல்: 79 (தோட்பதன்)
[தொகு]- தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
- கனைபொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து
- கல்லுறுத்து இயற்றிய வல்உயர்ப் படுவில்,
- பார்உடை மருங்கின் ஊறல் மண்டிய
- வன்புலம் துமியப் போகிக், கொங்கர் 5
- படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
- சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்
- அகல்இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
- நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
- 'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர 10
- வருந்தினை - வாழி என் நெஞ்சே!- இருஞ்சிறை
- வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை,
- ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்
- கொடுவில் எயினர் கோட்சுரம் படர
- நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள்இடை, 15
- கல்பிறங்கு அத்தம் போகி
- நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே! 17
பாடல்: 80 (கொடுந்தாள்)
[தொகு]- கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
- இருங்கழி இட்டுச்சுரம் நீந்தி, இரவின்
- வந்தோய் மன்ற - தண்கடற் சேர்ப்ப !-
- நினக்குஎவன் அரியமோ, யாமே? எந்தை
- புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5
- பல்மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்
- முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
- ஒண்பன் மலரக் கவட்டுஇலை அடும்பின்
- செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப
- இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ, 10
- மின்இலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன்
- தண்நறும் பைந்தாது உறைக்கும்
- புன்னைஅம் கானல், பகல்வந் தீமே! 13