உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு/391 முதல் 400 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


அகநானூறு[தொகு]

பாடல்:391 (பார்வல்வெருகின்)[தொகு]

பார்வல் வெருகின் கூர்எயிற்று அன்ன
வரிமென் முகைய நுண்கொடி அதிரல்
மல்ககல் வட்டியர் கொள்விடம் பெறாஅர்
விலைஞர் ஒழித்த தலைவேய் கான்மலர்
தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி 5
தண்ணறுங் கதுப்பிற் புணர்ந்தோர்- புனைந்தவென்
பொதிமாண் முச்சி காண்தொறும் பண்டைப்
பழவணி உள்ளப் படுமால்- தோழி!
இன்றொடு சில்நாள் வரினுஞ் சென்றுநனி
படாஅ வாகுமெம் கண்ணே கடாஅ 10
வான்மருப்பு அசைத்தல் செல்லாது யானைதன்
வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்
என்றூழ் வைப்பின் சுரனிறந் தோரே! 14

பாடல்:392 (தாழ்பெருந்தடக்கை)[தொகு]

தாழ்பெருந் தடக்கை தலைஇய கானத்து
வீழ்பிடி கெடுத்த வெண்கோட்டு யானை
உண்குளகு மறுத்த உயக்கத் தன்ன
பண்புடை யாக்கைச் சிதைவுநன்கு அறீஇப்
பின்னிலை முனியா னாகி நன்றும் 5
தாதுசெல் பாவை அன்ன தையல்
மாதர் மெல்லியல் மடநல் லோள்வயின்
தீதின் றாக நீபுணை புகுகென
என்னும் தண்டும் ஆயின் மற்றவன்
அழிதகப் பெயர்தல் நனிஇன் னாதே 10
ஒல்லினி வாழி தோழி!- கல்லெனக்
கணமழை பொழிந்த கான்படி இரவில்
தினைமேய் யானை இனனிரிந்து ஓடக்
கல்லுயர் கழுதில் சேணோன் எறிந்த
வல்வாய்க் கவணின் கடுவெடி ஒல்லென 15
மறப்புலி உரற வாரணம் கதற
நனவுறு கட்சியின் நன்மயில் ஆல
மலையுடன் வெரூஉம் மாக்கல் வெற்பன்
பிரியுநள் ஆகலே அரிதே அதாஅன்று
உரிதல் பண்பிற் பிரியுநன் ஆயின் 20
வினைதவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன்
முனைகொல் தானையொடு முன்வந்து இறுப்பத்
தன்வரம்பு ஆகிய மன்னெயில் இருக்கை
ஆற்றா மையின் பிடித்த வேல்வலித்
தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற 25
விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கிற்
கானமர் நன்னன் போல
யான்ஆ குவல்நின் நலம்தரு வேனே. 28

பாடல்:393 (கோடுயர்பிறங்கற்)[தொகு]

கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்தி
வேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய
முதைச்சுவற் கலித்த ஈர்இலை நெடுந்தோட்டுக்
கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி 5
கவட்டடிப் பொருத பல்சினை உதிர்வை
அகன்கண் பாறைச் செவ்வயின் தெறீஇ
வரியணி பணைத்தோள் வார்செவித் தன்னையர்
பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச்
சுழல்மரம் சொலித்த சுளகுஅலை வெண்காழ் 10
தொடிமாண் உலக்கை ஊழின் போக்கி
உரல்முகம் காட்டிய சுரைநிறை கொள்ளை
ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக்
களிபடு குழிசிக் கல்லடுப்பு ஏற்றி
இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற் 15
குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம்
மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும்
நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன்தூங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டவர் 20
நீடலர்- வாழி தோழி!- தோடுகொள்
உருகெழு மஞ்ஞை ஒலிசீர் ஏய்ப்பத்
தகரம் மண்ணிய தண்ணறு முச்சிப்
புகரில் குவளைப் போதொடு தெரிஇதழ்
வேனில் அதிரல் வேய்ந்தநின்
ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே. 26

பாடல்:394 (களவும்புளி்த்தன)[தொகு]

களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்
இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு
கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு 5
சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக
இளையர் அருந்தப் பின்றை, நீயும்
இடுமுள் வேலி முடக்காற் பந்தர்ப்
புதுக்கலத்து அன்ன செவ்வாய்ச் சிற்றிற்
புனையிருங் கதுப்பின்நின் மனையோள் அயரப் 10
பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ-
காடுறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
மடிவிடு வீளை வெரீஇக் குறுமுயல்
மன்ற இரும்புதல் ஒளிக்கும்
புன்புல வைப்பின்எம் சிறுநல் ஊரே. 16

பாடல்:395 (தண்கயம்)[தொகு]

தண்கயம் பயந்த வண்காற் குவளை
மாரி மாமலர் பெயற்குஏற் றன்ன
நீரொடு நிறைந்த பேரமர் மழைக்கண்
பனிவார் எவ்வம் தீர இனிவரின்
நன்றுமன்- வாழி தோழி!- தெறுகதிர் 5
ஈரம் நைத்த நீர்அறு நனந்தலை
அழல்மேய்ந்து உண்ட நிழன்மாய் இயவின்
வறன்மரத்து அன்ன கவைமருப்பு எழிற்கலை
இறல்அவிர்ந் தன்ன தேர்நசைஇ ஓடிப்
புறம்புவழிப் பட்ட உலமரல் உள்ளமொடு 10
மேய்பிணைப் பயிரும் மெலிந்தழி படர்குரல்
அருஞ்சுரம் செல்லுநர் ஆள்செத்து ஓர்க்கும்
திருந்தரை ஞெமைய பெரும்புனக் குன்றத்து
ஆடுகழை இருவெதிர் நரலும்
கோடுகாய் கடற்ற காடிறந் தோரே! 1 5

பாடல்:396 (தொடுத்தேன்)[தொகு]

தொடுத்தேன் மகிழ்ந! செல்லல்- கொடித்தேர்ப்
பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகின் பாழி ஆங்கண்
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் 5
தன்னுயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது
தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்பநின்
மார்புதரு கல்லாய் பிறன் ஆயினையே 10
இனியான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனிவார் கண்ணள் பலபுலந்து உறையக்
கருந்திறல் அத்தி ஆடுஅணி நசைஇ
நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ 15
ஆரியர் அலறத் தாக்கிப் பேர்இசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி யன்னவென் னலம்தந்து சென்மே! 19

பாடல்:397 (என்மகள்பெரு)[தொகு]

என்மகள் பெருமடம் யான்பா ராட்டத்
தாய்தன் செம்மல் கண்டுகடன் இறுப்ப
முழவுமுகம் புலரா விழவுடை வியனகர்
மணனிடை யாகக் கொள்ளான் 'கல்பகக்
கணமழை துறந்த கான்மயங்கு அழுவம் 5
எளிய வாக ஏந்துகொடி பரந்த
பொறிவரி அல்குல் மாஅயோட்கு' எனத்
தணிந்த பருவம் செல்லான் படர்தரத்
துணிந்தோன் மன்ற துனைவெங் காளை
கடும்பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப் 10
போழ்புண் படுத்த பொரியரை ஓமைப்
பெரும்பொளிச் சேயரை நோக்கி ஊன்செத்துச்
கருங்கால் யாத்துப் பருந்துவந்து இறுக்கும்
சேண்உயர்ந்து ஓங்கிய வானுயர் நெடுங்கோட்டுக்
கோடை வெவ்வளிக்கு உலமரும்
புல்லிலை வெதிர நெல்விளை காடே. 16

பாடல்:398 (இழைநிலை)[தொகு]

'இழைநிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்
படர்மலி வருத்தமொடு பலபுலந்து அசைஇ
மென்தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல்பசந்து 5
இன்னேம் ஆகிய எம்மிவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழநின்
குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ? 10
கரைபொரு நீத்தம்! உரைஎனக் கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர்மலைப்
பன்மலர் போர்த்து நாணுமிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி
நயன்அறத் துறத்தல் வல்லி யோரோ! 15
நொதும லாளர் அதுகண் ணோடாது
அழற்சினை வேங்கை நிழல்தவிர்ந்து அசைஇ
மாரி புரந்தர நந்தி ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல்பூங் கானத்து அல்கி இன்றிவண் 20
சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ ?
குயவரி இரும்போத்துப் பொருதபுண் கூர்ந்து
உயங்குபிடி தழீஇய மதனழி யானை
வாங்கமைக் கழையின் நரலும் அவர்
ஓங்குமலை நாட்டின் வருஉ வோயே! 25

பாடல்:399 (சிமையகுரல)[தொகு]

சிமைய குரல சாந்துஅருந்தி இருளி
இமையக் கானம் நாறும் கூந்தல்
நந்நுதல் அரிவை! இன்னுறல் ஆகம்
பருகு வன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றியவண் நீடார்- 5
கடற்றடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடமை ஊறல் உண்ட
பாடின் தெண்மணி பயங்கெழு பெருநிரை
வாடுபுலம் புக்கெனக் கோடுதுவைத்து அகற்றி
ஒல்குநிலைக் கடுக்கை அல்குநிழல் அசைஇப் 10
பல்லான் கோவலர் கல்லாது ஊதும்
சிறுவெதிர்ந் தீங்குழற் புலம்புகொள் தெள்விளி
மையில் பளிங்கின் அன்ன தோற்றப்
பல்கோள் நெல்லிப் பைங்கால் அருந்தி
மெல்கிடு மடமரை ஓர்க்கும் அத்தம் 15
காய்கதிர் கடுகிய கவினழி பிறங்கல்
வேய்கண் உடைந்த சிமைய
வாய்படு மருங்கின் மலைஇறந் தோரே. .399-18

பாடல்:400 (நகைநன்று)[தொகு]

நகைநன்று அம்ம தானே 'அவனொடு
மனைஇறந்து அல்கினும் அல'ரென நயந்து
கானல் அல்கிய நம்களவு அகல
பல்புரிந்து இயறல் உற்ற நல்வினை
நூல்அமை பிறப்பின் நீல உத்திக் 5
கொய்ம்மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ்சோற்று ஆர்கை
நிரலியைந்து ஒன்றிய செலவின் செந்தினைக்
குரல்வார்ந் தன்ன குவவுத்தலை நந்நான்கு
வீங்குசுவல் மொசியத் தாங்குநுகம் தழீஇப் . 10
பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடைய வலவன் ஏவலின் இகுதுறைப்
புனல்பாய்ந் தன்ன வாமான் திண்தேர்க்
கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரிப்
பால்கண்ட டன்ன ஊதை வெண்மணற் 15
கால்கண்ட டன்ன வழிபடப் போகி
அயிர்ச்சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள்நீர் இட்டுச்சுரம் நீந்தித் துறைகெழு
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை
பூமலி இருங்கழித் துயல்வரும் அடையொடு 20
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங்கள் நாறப் பலவுடன்
பொதிஅவிழ் தண்மலர் கண்டும் நன்றும்
புதுவது ஆகின்று அம்ம- பழவிறல்
பாடுஎழுந்து இரங்கு முந்நீர் .
நீடிரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே! 26

அகநானூறு முற்றிற்று[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/391_முதல்_400_முடிய&oldid=480948" இலிருந்து மீள்விக்கப்பட்டது