அகநானூறு/01 முதல் 10 முடிய
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
1.களிற்றியானை நிரை
[தொகு]பாடல் 01 (கார்விரி கொன்றை)
[தொகு]கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்;
மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே ; மூவாய் 5
வேலும் உண்டு அத் தோலா தோற்கே;
ஊர்ந்தது ஏறே ; சேர்ந்தோள் உமையே-
செவ்வான் அன்ன மேனி, அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று,
எரியகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை, 10
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்,
வரிகிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ்கெழு மணிமிடற்று, அந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே. 15
வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி யாங்கண்,
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய 5
கல்போற் பிரியலம் என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ - தோழி!-சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார்-நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின், 10
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்கு சினை 15
நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலம் கடுவளி எடுப்ப, ஆருற்று,
உடைதிரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல்போல் தோன்றல - காடு இறந்தோரோ? 19
பாடல் 02 (கோழிலை)
[தொகு]
கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது 5
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய? 10
வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை; பைம்புதல் 15
வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன;
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே! 17
பாடல் 03 (இருங்கழி)
[தொகு]
இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடுவாய்ப் பேடைக்கு அல்கிரை தரீஇய
மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை- 5
வான்தோய் சிமைய விறல்வரைக் கவா அன்,
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி,
ஒண்செங் குருதி உவற்றியுண்டு அருந்துபு;
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை
கொள்ளை மாந்தரின்- ஆனாது கவரும் 10
புல்லிலை மராஅத்த அகன்சேண் அத்தம்,
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின்நின்று துரக்கும் நெஞ்சம்! நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா-
கவிரிதழ் அன்ன காண்பின் செவ்வாய், 15
அந்தீங் கிளவி, ஆயிழை மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே? 18
பாடல் 04 (முல்லைவைந்)
[தொகு]
முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மாஇரு மருப்பின்,
பரலவல் அடைய, இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் 5
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே, கவின்பெறு கானம்;
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்புஆர்த் தன்ன, வாங்குவள்பு அரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 10
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி,
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்,
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தட் 15
போதவிழ் அலரின் நாறும்-
ஆய்தொடி அரிவை!நின் மாணலம் படர்ந்தே. 17
பாடல் 05 (அளிநிலைபெறா)
[தொகு]
அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் 5
கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல்,
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலம் காட்டுப்,
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி,
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப, 10
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப்
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்.
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம் 15
இறப்ப எண்ணுதிர் ஆயின் - 'அறத்தாறு
அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந்து ஒற்றி 20
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம் 25
கண்டு கடிந்தனம், செலவே - ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே 28
பாடல் 06 (அரிபெய்)
[தொகு]
அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை,
அரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை,
இழையணி பணைத்தோள், ஐயை தந்தை,
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்- 5
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழைமாண் ஒள்ளிழை நீ வெய் யோளொடு,
வேழ வெண்புணை தழீஇப், பூழியர்
கயம்நாடு யானையின் முகனமர்ந் தாங்கு,
ஏந்தெழில் ஆகத்து பூந்தார் குழைய, 10
நெருநல் ஆடினை புனலே ; இன்று வந்து
'ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்,
மாசில் கற்பின், புதல்வன் தாய்' என,
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! 15
சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்து
அம்தூம்பு வள்ளை ஆய்கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்,
முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் 20
இளமை சென்று தவத்தொல் லஃதே;
இனிமைஎவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? . 22
பாடல் 07(முலைமுகஞ்)
[தொகு]
முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;
தலைமுடி சான்று; தண்தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; 5
பேதை அல்லை - மேதையம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து என,
ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி,
தன்சிதைவு அறிதல் அஞ்சி-இன்சிலை
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!- 10
வலைகாண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவில் வெள்வேல் விடலையொடு, என் மகள்
இச் சுரம் படர்தந் தோளே; ஆயிடை,
அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தென,
பிற்படு பூசலின் வழிவழி ஓடி 15
மெய்த்தலைப் படுதல் செல்லேன், இத்தலை,
நின்னொடு வினவல் கேளாய்;- பொன்னொடு
புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி,
ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்,
ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த 20
துய்த்தலை வெண்காழ் பெறூஉம்
கல்கெழு சிறுகுடிக் கானவன் மகளே. 22
பாடல் 08 (ஈயற்புற்றத்)
[தொகு]
ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றைக்
தூங்குதோல் துதிய வள்உகிர் கதுவலின்,
பாம்பு மதன்அழியும் பானாட் கங்குலும்,
அரிய அல்ல-மன் இகுளை! 'பெரிய 5
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றைப்
பலாவமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்,
படுகடுங் களிற்றின் வருத்தம் சொலியப் 10
பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
விண்தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது,
மின்னுவிடச் சிறிய ஒதுங்கி, மென்மெலத்
துளிதலைத் தலைஇய மணியேர் ஐம்பால் 15
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ
நெறிகெட விலங்கிய, நீயிர், இச் சுரம்
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. 18
பாடல் 09 (கொல்வினைப்)
[தொகு]
கொல்வினைப் பொலிந்த, கூர்ங்குறும் புழுகின்,
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அம்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
செய்படர் அன்ன செங்குழை அகந்தோறு,
இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் 5
உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்,
துப்பின் அன்ன செங்கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்க் 10
கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி, உரந்துரந்து,
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, 15
துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும், விரைந்துவல் எய்திப் பல்மாண்
ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக் 20
கைகவியாச் சென்று, கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ-
நாணொடு மிடைந்த கற்பின், வாணுதல்,
அம்தீம் கிளவிக் குறுமகள்
மென்தோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே? 26
பாடல் 10 (வான்கடற்)
[தொகு]
வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த,
முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை,
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழப் 5
பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்,
அரிது துற்றனையால். பெரும!- உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்- கொண்டலொடு
குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் 10
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி,
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே 13
இதில் உள்ள செய்தி
[தொகு]அம்மூவனார் என்னும் புலவர் பாடிய நெய்தல் திணைப் பாடல் இது. தலைவியை நல்கும்படி தலைவன் தோழியை வேண்டுகிறான். தோழி மறுக்கிறாள். தலைவன் விலகிச் செல்ல நினைக்கிறான். விலகிச் சென்றால் உரிய முறையில் மணந்து இவளையும் அழைத்துச் செல்க என்று தோழி தலைவனை வற்புறுத்துகிறாள்.
அவன் புலம்பு(நாடு) - கடலில் மழை பெய்யும்போது மழைத்துளியை அருந்த மீன்கள் தலைதூக்கும். அது புன்னைப் பூக்கள் உதிர்வது போல இருக்கும். மீன்களை அருந்த அந்தப் புன்னை மரத்தில் பறவைகள் அமர்ந்திருக்கும். இப்படிப்பட்ட புலம்புநாட்டின் தலைவன் அவன்.
அவள் தொண்டித் துறைமுகம் போன்ற அழகுள்ளவள். தொண்டியில் உள்ள பரதவர் கொண்டல் என்னும் கீழைக்காற்று அடிக்கும்போது தம் பழைய திமில்படகுகளைப் புதிதாக்கிக்கொள்வர். தாம் பிடித்துவந்த மீன்களை மணல் மேட்டில் விரித்து ஊர்மக்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள்.