அகநானூறு/351 முதல் 360 முடிய
Appearance
< அகநானூறு
அகநானூறு பக்கங்கள்
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
அகநானூறு
[தொகு]பாடல் 351 (வேற்றுநாட்டு)
[தொகு]- வேற்றுநாட்டு உறையுள் விருப்புறப் பேணி
- பெறல்அருங் கேளிர் பின்வந்து விடுப்ப
- பொருள்அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு
- குறைவினை முடித்த நிறைவின் இயக்கம்
- அறிவுறூஉம் கொல்லோ தானே- கதிர்தெற 5
- கழலிலை உகுத்த கால்பொரு தாழ்சினை
- அழல் அகைந் தன்ன அம்குழைப் பொதும்பில்
- புழல்வீ இருப்பைப் புன்காட்டு அத்தம்
- மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
- செய்குறி ஆழி வைகல்தோறு எண்ணி 10
- எழுதுசுவர் நினைந்த அழுதுவார் மழைக்கண்
- விலங்குவீழ் அரிப்பனி பொலங்குழைத் தெறிப்ப
- திருந்திழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
- இருந்துஅணை மீது பொருந்துவீக் கிடக்கை
- வருந்துதோள் பூசல் களையும் மருந்தென 15
- உள்ளுதொறு படூஉம் பல்லி
- புள்ளுத்தொழுது உறைவி செவிமுத லானே? 17
பாடல் 352 (முடவுமுதிர்)
[தொகு]- 'முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
- பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
- பாடிமிழ் அருவிப் பாறை மருங்கின்
- ஆடுமயில் முன்னது ஆகக் கோடியர்
- விழவுகொள் மூதூர் விறலி பின்றை 5
- முழவன் போல அகப்படத் தழீஇ
- இன்துணைப் பயிரும் குன்ற நாடன்
- குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன்
- கெடுநா மொழியலன் அன்பினன்' என நீ
- வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் 10
- நல்லை காண் இனிக்- காதல் அம்தோழீஇ!-
- கடும்பரி புரவி நெடுந்தேர் அஞ்சி
- நல்லிசை நிறுத்த நயம்வரு பனுவல்
- தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்
- எண்ணுமுறை நிறுத்த பண்ணின் னுள்ளும் 15
- புதுவது புனைந்த திறத்தினும்
- வதுவை நாளினும் இனியனால் எமக்கே. 17
பாடல் 353 (ஆள்வினைப்)
[தொகு]- ஆள்வினைப் பிரிதலும் உண்டோ ? பிரியினும்
- கேளினி- வாழிய நெஞ்சே!- நாளும்
- கனவுக்கழிந் தனைய வாகி நனவின்
- நாளது செலவும் மூப்பினது வரவும்
- அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும் 5
- இந்நிலை அறியாய் ஆயினும் செந்நிலை
- அமைஆடு அங்கழை தீண்டிக் கல்லென
- ஞெமைஇலை உதிர்த்த எரிவாய்க் கோடை
- நெடுவெண் களரி நீறுமுகந்து சுழலக்
- கடுவெயில் திருகிய வேனில்வெங் காட்டு 10
- உயங்குநடை மடப்பிணை தழீஇய வயங்குபொறி
- அறுகோட்டு எழிற்கலை அறுகயம் நோக்கித்
- தெண்நீர் வேட்ட சிறுமையின் தழைமறந்து
- உண்நீர் இன்மையின் ஒல்குவன தளர
- மரம்நிழல் அற்ற இயவின் சுரனிறந்து 15
- உள்ளுவை அல்லையோ மற்றே- உள்ளிய
- விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர்
- வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத்
- தாதுதுகள் உதிர்த்த தாழைஅம் கூந்தல்
- வீழ்இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி 20
- மகிழ்அணி முறுவல் மாண்ட சேக்கை
- நம்மொடு நன்மொழி நவிலும்
- பொம்மல் ஓதிப் புனையிழை குணனே? 23
பாடல் 354 (மதவலியானை)
[தொகு]- மதவலி யானை மறலிய பாசறை
- இடிஉமிழ் முரசம் பொருகளத்து இயம்ப
- வென்றுகொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
- கறவைப் பல்லினம் புறவுதொறு உகளக்
- குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்து 5
- இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக்
- கடுநடைப் புரவி வழிவாய் ஓட
- வலவன் வள்புவலி உறுப்பப் புலவர்
- புகழ்குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
- தண்கமழ் சாந்தம் நுண்துகள் அணிய 10
- வென்றிகொள் உவகையொடு புகுதல் வேண்டின்
- யாண்டுஉறை வதுகொல் தானே...மாண்ட
- போதுஉறழ் கொண்ட உண்கண்
- தீதிலாட்டி திருநுதற் பசப்பே? 14
பாடல் 355 (மாவும்வண்தளிர்)
[தொகு]- மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்
- இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும்
- மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை
- வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை
- நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும் 5
- துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த்
- தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர்
- செழுமனை மறக்கும் செவ்விவேனில்
- தானே வந்தன்று ஆயின் ஆனாது
- இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் 10
- புலந்தனம் வருகம் சென்மோ- தோழி!
- 'யாமே எமியம் ஆக நீயே
- பொன்நயந்து அருள்இலை யாகி
- இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே. 14
பாடல் 356 (மேல்துறைக்)
[தொகு]- மேல்துறைக் கொளீஇய கழாலின் கீழ்த்துறை
- உகுவார் அருந்தப் பகுவாய் யாமை
- கம்புள் இயவன் ஆக விசிபிணித்
- தெண்கண் கிணையின் பிறழும் ஊரன்
- இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென் 5
- பொற்றெடி முன்கை பற்றின னாக
- 'அன்னாய்!' என்றனென் அவன்கைவிட் டனனே
- தொன்னசை சாலாமை நன்னன் பறம்பில்
- சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
- கற்போல் நாவினே னாகி மற்றுது 10
- செப்பலென் மன்னால் யாய்க்கே நல்தேர்க்
- கடும்பகட்டு யானைச் சோழர் மருகன்
- நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
- நல்லடி உள்ளா னாகவும் ஒல்லார்
- கதவ முயறலும் முயல்ப அதாஅன்று 15
- ஒலிபல் கூந்தல் நம்வயின் அருளாது
- கொன்றனன் ஆயினும் கொலைபழுது அன்றே
- அருவி ஆம்பல் கலித்த முன்துறை
- நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
- மின்னீர் ஓதி!- என்னைநின் குறிப்பே? 20
பாடல் 357 (கொடுமுள்)
[தொகு]- கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
- வான்முகை இறும்பின் வயவொடு வதிந்த
- உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
- தடமருப்பு யானை வலம்படத் தொலைச்சி
- வியலறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து 5
- புலவுப்புலி புரண்ட புல்சாய் சிறுநெறி
- பயில்இருங் கானத்து வழங்கல் செல்லாது
- பெருங்களிற்று இனநிரை கைதொடூஉப் பெயரும்
- தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பற்
- பெருங்காடு இறந்தனர் ஆயினும் யாழநின் 10
- திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி
- உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
- மிகுபெயல் நிலைஇய தீநீர்ப் பொய்கை
- அடைஇறந்து அவிழ்ந்த தண்கமழ் நீலம்
- காலொடு துயல்வந் தன்னநின்
- ஆய்இதழ் மழைக்கண் அமர்த்த நோக்கே. 16
பாடல் 358 (நீலத்தன்ன)
[தொகு]- நீலத்து அன்ன நிறம்கிளர் எருத்தின்
- காமர் பீலி ஆய்மயில் தோகை
- இன்தீம் குரல துவன்றி மென்சீர்
- ஆடுதகை எழில்நலம் கடுப்பக் கூடி
- கண்ணேர் இதழ தண்நறுங் குவளை . 5
- குறுந்தொடர் அடைச்சிய நறும்பல் கூழை
- நீடுநீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய்
- உயங்கிய மனத்தை யாகிப் புலம்புகொண்டு
- இன்னை ஆகிய நின்நிறம் நோக்கி
- அன்னை வினவினள் ஆயின், அன்னோ! 10
- என்னென உரைக்கோ யானே- துன்னிய
- பெருவரை இழிதரும் நெடுவெள் அருவி
- ஓடை யானை உயர்மிசை எடுத்த
- ஆடுகொடி கடுப்பத் தோன்றும்
- கோடுயர் வெற்பன் உறீஇய நோயே? 15
பாடல் 359 (பனிவார்உண்)
[தொகு]- 'பனிவார் உண்கணும் பசந்த தோளும்
- நனிபிறர் அறியச் சாஅய நாளும்
- கரந்தனம் உறையும் நம்பண்பு அறியார்
- நீடினர் மன்னோ காதலர்' எனநீ
- எவன்கை யற்றனை?- இகுளை!- அவரே 5
- வான வரம்பன் வெளியத்து அன்னநம்
- மாணலம் தம்மொடு கொண்டனர்- முனாஅது
- அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர்
- பெருங்கல் மீமிசை இயம்எழுந் தாங்கு
- வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை 10
- சூர்புகல் அடுக்கத்து மழைமாறு முழங்கும்
- பொய்யா நல்லிசை மாவண் புல்லி
- கவைக்கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்
- முதைச்சுவல் மூழ்கிய கான்சுடு குரூஉப்புகை
- அருவித் துவலையொடு மயங்கும்
- பெருவரை அத்தம் இயங்கி யோரே! 16
பாடல் 360 (பல்பூந்தண்பொழில்)
[தொகு]- பல்பூந் தண்பொழில் பகல்உடன் கழிப்பி
- ஒருகால் ஊர்திப் பருதிஅம் செல்வன்
- குடவயின் மாமலை மறையக் கொடுங்கழித்
- தண்சேற்று அடைஇய கணைக்கால் நெய்தல்
- நுண்தாது உண்டு வண்டினம் துறப்ப 5
- வெருவரு கடுந்திறல் இருபெரும் தெய்வத்து
- உருவுடன் இயைந்த தோற்றம் போல
- அந்தி வானமொடு கடலணி கொளாஅ
- வந்த மாலை பெயரின் மற்றிவள்
- பெரும்புலம் பினளே தெய்ய அதனால் 10
- பாணி பிழையா மாண்வினைக் கலிமா
- துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி
- நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
- குன்றுஇழி களிற்றின் குவவுமணல் நந்தி
- இரவின் வம்மோ- உரவுநீர்ச் சேர்ப்ப!- 15
- இனமீன் அருந்து நாரையொடு பனைமிசை
- அன்றில் சேக்கும் முன்றில் பொன்னென
- நன்மலர் நறுவீ தாஅம்
- புன்னை நறும்பொழில் செய்தநம் குறியே 19