உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு/331 முதல் 340 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


3.நித்திலக் கோவை

[தொகு]

பாடல்:331 (நீடுநிலை)

[தொகு]

நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக் கோடுகடைந் தன்ன கொள்ளை வான்பூ ஆடுபரந் தன்ன ஈனல் எண்கின் சேடுசினை உரீஇ உண்ட மிச்சில் பைங்குழை தழையர் பழையர் மகளிர் 5 கண்திரள் நீள்அமைக் கடிப்பிற் றொகுத்து குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் சீறூர் நாடு பலபிறக் கெரழியச் சென்றோர் அன்பிலர்- தோழி!- என்றும் அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப் 10 பாணர் ஆர்ப்பப் பல்கலம் உதவி நாளவை இருந்த நனைமகிழ் திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே! 14

பாடல்:332 (முளைவளர்)

[தொகு]
முளைவளர் முதல மூங்கில் முருக்கிக்

கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை நீர்நசை மருங்கின் நிறம்பார்த்து ஒடுங்கிய பொருமுரண் உழுவை தொலைச்சிக் கூர்நுனைக் குருதிச் செங்கோட்டு அழிதுளி கழாஅக் 5 கன்முகை அடுக்கத்து மென்மெல இயலிச் செறுபகை வாட்டிய செம்மலொடு அறுகால் யாழிசைப் பறவை இமிரப் பிடிபுணர்ந்து வாழையம் சிலம்பில் துஞ்சும் நாடன் நின்புரைத் தக்க சாயலன் எனநீ 10 அன்புரைத் தடங்கக் கூறிய இன்சொல் வாய்த்தன- வாழி, தோழி!- வேட்டோ ர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ்தார் மார்பின் வண்டிடைப் படாஅ முயக்கமும் தண்டாக் காதலும் தலைநாள் போன்மே! 15

பாடல்:333 (யாஅஒண்தளி்ர்)

[தொகு]
'யாஅ ஒண்தளிர் அரக்குவிதிர்த் தன்னநின்

ஆக மேனி அம்பசப்பு ஊர அழிவுபெரிது உடையை யாகி அவர்வயின் பழிதலைத் தருதல் வேண்டுதி மொழிகொண்டு தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்குநின் 5 எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள் வயங்காது ஆயினும் பயம்கெடத் தூக்கி நீடலர்- வாழி, தோழி!- கோடையிற் குருத்திறுபு உக்க வருத்தம் சொலாது தூம்புடைத் துய்த்தலைக் கூம்புபு திரங்கிய 10 வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து யானைப் பெருநிரை வானம் பயிரும் மலைச்சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து நாள்இடைப் படாமை வருவர் நமர்எனப் பயம்தரு கொள்கையின் நயம்தலை திரியாது 15 நின்வாய் இன்மொழி நன்வா யாக வருவர் ஆயினோ நன்றே வாராது அவணர் காதலர் ஆயினும் இவண்நம் பசலை மாய்தல் எளிதுமன் தில்ல சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி 20 மறுதரல் உள்ளத்தர் எனினும் குறுகுபெரு நசையொடு தூதுவரப் பெறினே. 22

பாடல்:334 (ஓடாநல்லேற்று)

[தொகு]
ஓடா நல்லேற்று உரிவை தைஇய

ஆடுகொள் முரசம் இழுமென முழங்க நாடுதிறை கொண்டனம் ஆயின் பாக! பாடுஇமிழ் கடலின் எழுந்த சும்மையொடு பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால்வீழ்த்து 5 இரும்பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ வணங்கிறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்குறழ் ஆலியொடு கதழுறை சிதறிப் பெயல்தொடங் கின்றால் வானம் வானின் வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப 10 நால்குடன் பூண்ட கால்நவில் புரவிக் கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது இனமயில் அகவும் கார்கொள் வியன்புனத்து நோன்சூட்டு ஆழி ஈர்நிலம் துமிப்ப ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப் 15 பொலிவன அமர்த்த உண்கண் ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே! 17

பாடல்:335 (இருள்படு)

[தொகு]
இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்

அருள்நன்கு உடையர் ஆயினும், ஈதல் பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் யானும் அறிவென் மன்னே யானைதன் கொன்மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து 5 இன்னா வேனில் இன்றுணை ஆர முளிசினை மராஅத்துக் பொளிபிளந்து ஊட்ட புலம்புவீற் றிருந்த நிலம்பகு- வெஞ்சுரம் அரிய அல்லமன் நமக்கே- விரிதார் ஆடுகொள் முரசின் அடுபோர்ச் செழியன் 10 மாட மூதூர் மதிற்புறம் தழீஇ நீடுவெயில் உழந்த குறியிறைக் கணைக்கால் தொடைஅமை பன்மலர்த் தோடு பொதிந்து யாத்த குடைஓ ரன்ன கோள்அமை எருத்திற் பாளை பற்றிழிந்து ஒழியப் புறம் சேர்பு 15 வாள்வடித் தன்ன வயிறுடைப் பொதிய நாளுறத் தோன்றிய நயவரு வனப்பின் ஆரத்து அன்ன அணிகிளர் புதுப்பூ வாருறு கவரியின் வண்டுண விரிய முத்தின் அன்ன வெள்வீ தாஅய் 20 அலகின் அன்ன அரிநிறத்து ஆலி நகைநனி வளர்க்குஞ் சிறப்பின் தகைமிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய் நீரினும் இனிய ஆகிக் கூர்எயிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய் ஒண்தொடிக் குறுமகட் கொண்டனம் செலினே! 26

பாடல்:336 (குழற்காற்)

[தொகு]
குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்

பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய் வாளையொடு உழப்பத் துறைகலுழ்ந் தமையின் 5 தெண்கட் டேறல் மாந்தி மகளிர் நுண்செயல் அம்குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழிணர்க் காஞ்சி நீழற் குரவை அயரும் தீம்பெரு பொய்கைத் துறைகேழ் ஊரன் 10 தேர்தர வந்த நேரிழை மகளிர் ஏசுப என்பவென் நலனே அதுவே பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக் கொல்களிற்று யானை நல்கல் மாறே தாமும் பிறரும் உளர்போல் சேறல் 15 முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின் யானவண் வாராமாறே வரினே வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல என்னொடு திரியான் ஆயின், வென்வேல் மாரி யம்பின் மழைத்தோற் சோழர் 20 வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைகவென் நேரிறை முன்கை வீங்கிய வளையே! 23

பாடல்:337 (சாரல்யாஅத்து)

[தொகு]
'சாரல் யாஅத்து உயர்சினை குழைத்த

மாரி ஈர்ந்தளிர் அன்ன மேனிப் பேர்அமர் மழைக்கண் புலம்புகொண்டு ஒழிய ஈங்குப்பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின் அவணதாகப் பொருள் என்று உமணர் 5 கணநிரை அன்ன பல்காற் குறும்பொறைத் தூதொய் பார்ப்பான் மடிவெள் ளோலைப் படையுடைக் கையர் வருதிறம் நோக்கி 'உண்ணா மருங்குல் இன்னோன் கையது பொன்னா குதலும் உண்டு' எனக் கொன்னே 10 தடிந்துஉடன் வீழ்த்த கடுங்கண் மழவர் திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கிச் செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக் கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ வரிமரல் இயவின் ஒருநரி ஏற்றை 15 வெண்பரல் இமைக்கும் கண்பறி கவலைக் கள்ளி நீழற் கதறுபு வதிய மழைகண் மாறிய வெங்காட்டு ஆர்இடை எமியம் கழிதந் தோயே- பனிஇருள் பெருங்கலி வானம் தலைஇய இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே. 21

பாடல்:338 (குன்றேங்கு)

[தொகு]
குன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்

மறம்கெழு தானை அரச ருள்ளும் அறம்கடைப் பிடித்த செங்கோ லுடன்அமர் மறம்சாய்த்து எழுந்த வலன்உயர் திணிதோள் பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன் 5 அணங்குடை உயர்நிலைப் பொறுப்பின் கவாஅன் 'சினையொண் காந்தள் நாறும் நறுநுதல் துணைஈர் ஓதி மாஅ யோள்வயின் நுண்கோல் அவிர்தொடி வண்புறஞ் சுற்ற முயங்கல் இயையாது ஆயினும் என்றும் 10 வயவுஉறு நெஞ்சத்து உயவுத்துணை யாக ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும் துன்னருந் துப்பின் வென்வேற் பொறையன் அகலிருங் கானத்துக் கொல்லி போலத் தவாஅ லியரே நட்பே அவள்வயின் 15 அறாஅ லியரே தூதே- பொறாஅர் விண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள் புனிற்றான் தரவின் இளையர் பெருமகன் தொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்து வழங்கல் ஆனாப் பெருந்துறை முழங்குஇரு முந்நீர்த் திரையினும் பலவே! 21

பாடல்:339 (வீங்குவிசைப்)

[தொகு]
வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர்

நோன்கதிர் சுமந்த ஆழிஆழ் மருங்கிற் பாம்புஎன முடுகுநீர் ஓடக் கூம்பிப் பற்றுவிடு விரலின் பயறுகாய் ஊழ்ப்ப அற்சிரம் நின்றன்றாற் பொழுதே முற்பட 5 ஆள்வினைக்கு எழுந்த அசைவில் உள்ளத்து ஆண்மை வாங்கக் காமம் தட்பக் கவைபடு நெஞ்சம் கட்கண் அகைய இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி ஒருதலைப் படாஅ உறவி போன்றனம் 10 நோம்கொல்? அளியள் தானே- யாக்கைக்கு உயிர்இயைந் தன்ன நட்பின் அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் சாதல் அன்ன பிரிவுஅரி யோளே. 14

பாடல்:340 (பன்னாள் )

[தொகு]
பன்னாள் எவ்வம் தீரப் பகல்வந்து

புன்னைஅம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி மாலை மால்கொள நோக்கிப் பண்ஆய்ந்து வலவன் வண்தேர் இயக்க நீயும் செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம- 5 'செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன் பல்பூங் கானற் பவத்திரி அனவிவள் நல்லெழில் இளநலம் தொலைய ஒல்லெனக் கழியே ஓதம் மல்கின்று வழியே வள்ளெயிற்று அரவொடு வயமீன் கொட்கும் 10 சென்றோர் மன்ற மான்றன்று பொழுது' என நின்திறத்து அவலம் வீட இன்றிவண் சேப்பின் எவனோ- பூக்கேழ் புலம்ப- பசுமீன் நொடுத்த வெந்நெல் மாஅத் தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே 15 வடவர் தந்த வான்கேழ் வட்டம் குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டிமிர் நறுஞ்சாந்து அணிகுவம்- திண்திமில் எல்லுத்தொழின் மடுத்த வல்வினைப் பரதவர் கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புடன் 20 கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு முன்றில் தாழைத் தூங்கும் தெண்கடற் பரப்பினெம் உறைவின் ஊர்க்கே. 24

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/331_முதல்_340_முடிய&oldid=480942" இலிருந்து மீள்விக்கப்பட்டது