அகநானூறு/21 முதல் 30 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


1.களிற்றியானை நிரை[தொகு]

பாடல்: 21 (மனையிள)[தொகு]

'மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத்
துணை நிரைத்தன்ன; மாவீழ் வெண்பல்,
அவ்வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ்மென் கூந்தல், தடமென் பணைத்தோள்
மடந்தை மாண்நலம் புலம்பச், சேய்நாட்டுச் 5
செல்லல் என்று யான் சொல்லவும், ஒல்லாய்
வினைநயந்து அமைந்தனை ஆயினை ; மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம்- வல்லே,
எழுஇனி, வாழி என் நெஞ்சே!- புரி இணர்
மெல்அவிழ் அம்சினை புலம்ப; வல்லோன் 10
கோடுஅறை கொம்பின் வீஉகத் தீண்டி
மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல்,
சுரம்செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஓமை 15
இருங்கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட
மென்புனிற்று அம்பிணவு பசித்தெனப், பைங்கட்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலில், பரீஇச்
செங்காய் உதிர்த்த பைங்குலை ஈந்தின் 20
பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சி, கூழார், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
இகழ்ந்தியங்கு இயவின் அகழ்ந்தகுழி செத்து, 25
இருங்களிற்று இனநிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விலங்கிய காடே . 27

பாடல்:22 (அணங்குடை)[தொகு]

அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்
இதுஎன அறியா மறுவரற் பொழுதில்
'படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை 5
நெடுவேட் பேண தணிகுவள் இவள்' என,
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 10
முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த் ததைந்த
சாரல் பல்பூ வண்டுபடச் சூடி,
களிற்று - இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப்புலி போல, 15
நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை
தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே - எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? 21

பாடல்: 23 (மண்கண்)[தொகு]

மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக்குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்குபிணி அவிழக்
காடே கம்மென் றன்றே; அவல, 5
கோடு உடைந்தன்ன கோடற் பைம்பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவுநடை
அண்ணல்இரலை அமர்பிணை தழீஇத்,
தண்அறல் பருகித் தாழ்ந்துபட் டனவே;
அனையகொல் - வாழி, தோழி!- மனைய 10
தாழ்வின் நொச்சி. சூழ்வன மலரும்
மௌவல். மாச்சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச்செய் பொருளே! . 13

பாடல்: 24 (வேளாப்பார்ப்)[தொகு]

வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தலைபிணி அவிழா, சுரிமுகப் பகன்றை
சிதரல்அம் துவலை தூவலின், மலரும்
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள், 5
வயங்குகதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவதுபோல், வியல்இடத்து ஒழுகி,
மங்குல் மாமழை, தென்புலம் படரும்
பனிஇருங் கங்குலும் தமியள் நீந்தி,
தம்ஊ ரோளே, நன்னுதல்; யாமே 10
கடிமதில் கதவம் பாய்தலின், தொடிபிளந்து
நுதிமுகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச்,
சிறுகண் யானை நெடுநா ஒண் மணி,
கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை உதைப்பு,
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, . 15
கழித்துஉறை செறியா வாளுடை எறுழ்த்தோள்,
இரவு துயில் மடிந்த தானை,
உரவுச்சின வேந்தன் பாசறை யேமே! 18

பாடல்: 25 (நெடுங்கரை)[தொகு]

"நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய,
அவிர்அறல் கொண்ட விரவுமணல் அகன்துறைத்
தண்கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந்தாது அணிந்த போதுமலி எக்கர்,
வதுவை நாற்றம் புதுவது கஞல, 5
மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில்
படுநா விளியா னடுநின்று, அல்கலும்,
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் 10
பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன,
இகழுநர் இகழா இளநாள் அமையம்
செய்தோர் மன்ற குறி" என, நீநின்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
வாரா மையின் புலர்ந்த நெஞ்சமொடு, 15
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!" என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி - தோழி - பொருநர்
செல்சமம் கடந்த வில்கெழு தடக்கைப்
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன் 20
இன்இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு இறந்தோரோ! 22

பாடல்: 26 (கூன்முள்)[தொகு]

கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
மீன்முள் அன்ன, வெண்கால் மாமலர்
பொய்தல் மகளிர் விழவுஅணி கூட்டும்
அவ்வயல் தண்ணிய வளம்கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ - தோழி! - அல்கல் 5
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்புசெய் தொடியின் ஏர ஆகி,
'மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம்மற்று 10
இவை பாராட்டிய பருவமும் உளவே ; இனியே
புதல்வற் றடுத்த பாலொடு தடஇத்
திதலை அணிந்த தேம்கொள் மென்முலை
நறுஞ் சாந்து அணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே 15
தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி, மதவுநடைச்
செவிலி கைஎன் புதல்வனை நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் ; இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம்' என, மெல்லஎன் 20
மகன் வயின் பெயர்தந் தேனே; அதுகண்டு
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்
சிறுபுறம் கவையின னாக, உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பலஉழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து, அவன் கலுழ்ந்தே .
நெஞ்சுஅறை போகிய அறிவி னேற்கே? 26

பாடல்: 27 (கொடுவரி)[தொகு]

"கொடுவரி இரும்புலி தயங்க, நெடுவரை
ஆடுகழை இருவெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம்அழ,
நின்றதுஇல் பொருட்பிணிச் சென்றுஇவண் தருமார்,
செல்ப" என்ப, என்போய்! நல்ல 5
மடவை மன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை,
மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கைஅம் பெருந்துறை முத்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய் 10
தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே - தேம்படத்
தெள்நீர்க்கு ஏற்ற திரள்காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா பருந்துபட
வேந்துஅமர்க் கடந்த வென்றி நல்வேல் 15
குருதியொடு துயல்வந் தன்னநின்
அரிவேய் உண்கண் அமர்த்த நோக்கே? 17

பாடல்: 28 (மெய்யின்)[தொகு]

மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல் - தோழி!
கொய்யா முன்னும், குரல்வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே; நீயே, 5
முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணி,
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள்விளி இடைஇடை பயிற்றி 10
ஆங்காங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
'சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள்' எனப்,
பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே! 14

பாடல்:29 (தொடங்குவினை)[தொகு]

"தொடங்கு வினை தவிர, அசைவில் நோன்தாள்,
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும், இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வுஇல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பப்
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று 5
இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக், காண்தொறும்
மேவல் தண்டா மகிழ்நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்
வாழலென் யான்" எனத் தேற்றிப், "பல்மாண் 10
தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்தநின்
எயிறுகெழு துவர்வாய் இன்நகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை!- கேள்இனி-
வெம்மை தண்டா எரிஉகு பறந்தலை, 15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங்கு அறியாது, தேர்மருங்கு ஓடி,
அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு 20
நாணுத் தளைஆக வைகி, மாண்வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம்கெழு நெஞ்சம் நின் உழை யதுவே! 23

பாடல்: 30 (நெடுங்கயிறு)[தொகு]

நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை,
கடல்பாடு அழிய, இனமீன் முகந்து,
துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்புஒய் உமணர் அருந்துறை போக்கும் 5
ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ
அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்,
பெருங்களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி,
பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக் 10
கோடுஉயர் திணிமணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ - ஒருநாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண்நறுங் கானல் வந்து "நும்
வண்ணம் எவனோ?" என்றனிர் செலினே? 15
அகநானூறு
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/21_முதல்_30_முடிய&oldid=480929" இலிருந்து மீள்விக்கப்பட்டது