அகநானூறு/211 முதல் 220 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


2. மணிமிடை பவளம்[தொகு]

211 கேளாய், எல்ல! தோழி - வாலிய
சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்
திண்நிலை மருப்பின் வயக்களிறு உரிஞுதொறும்,
தண்மழை ஆலியின் தாஅய், உழவர் 5
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்-
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை
பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக், 10
கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல்லெறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல்கெழுப் பனித்துறை, 15
நீர்ஒலித் தன்ன பேஎர்
அலர்நமக்கு ஒழிய, அழப்பிரிந் தோரே. 17

212 தாஇல் நன்பொன் தைஇய பாவை
விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன,
மிகுகவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
முளைஓ ரன்ன மின்எயிற்றுத் துவர் வாய், 5
நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ்
இசைஓர்த் தன்ன இன்தீங் கிளவி,
அணங்குசால் அரிவையை நசைஇப், பெருங்களிற்று
இனம்படி நீரின் கலங்கிய பொழுதில்,
பெறலருங் குரையள் என்னாய், வைகலும், 10
இன்னா அருஞ்சுரம் நீந்தி, நீயே
என்னை இன்னற் படுத்தனை; மின்னுவசிபு
உரவுக்கார் கடுப்ப மறலி மைந்துற்று,
விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
படைநிலா இலங்கும் கடல்மருள் தானை 15
மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து,
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர்மாண் எஃகம் நிறத்துச்சென்று அழுந்தக் 20
கூர்மதன் அழியரோ- நெஞ்சே!- ஆனாது
எளியள் அல்லோட் கருதி,
விளியா எவ்வம் தலைத் தந்தோயே. 23

213 வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் அருவி வேங்கடத்து உம்பர்க்,
கொய்குழை அதிரல் வைகுபுலர் அலரி
சுரிஇரும் பித்தை சுரும்புபடச் சூடி, 5
இகல்முனைத் தரீஇய ஏருடைப் பெருநிரை
நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும்
வால்நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
நிழற்கவின் இழந்த நீர்இல் நீள்இடை
அழலவிர் அருஞ்சுரம் நெடிய என்னாது 10
அகறல் ஆய்ந்தனர் ஆயினும், பகல்செலப்
பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப்
பெருமரம் கொன்ற கால்புகு வியன்புனத்து,
எரிமருள் கதிர திருமணி இமைக்கும்
வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை 15
வேய்ஒழுக்கு அன்ன, சாய்இறைப் பணைத்தோள்
பெருங்கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
அரும்பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்
சென்று, தாம் நீடலோ இலரே: என்றும்
கலம்பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக்கை, 20
வலம்படு வென்றி வாய்வாள், சோழர்
இலங்குநீர்க் காவிரி இழிபுனல் வரித்த
அறலென நெறிந்த கூந்தல்,
உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. 24

214 அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்,
பகலுடன் கரந்த, பல்கதிர் வானம்
இருங்களிற்று இனநிரை குளிர்ப்ப வீசிப்,
பெரும்பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது,
வேந்தனும் வெம்பகை முரணி, ஏந்திலை, 5
விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை,
அடுபுகழ் மேவலொடு கண்படை இலனே;
அமரும் நம்வயி னதுவே; நமர்என
நம்மறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்குஆ குவள்கொள் தானே -- ஓங்குவிடைப் 10
படுசுவற் கொண்ட பகுவாய்த் தெள்மணி
ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளஇப்,
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப,
ஆருயிர் அணங்கும் தெள்இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே? 15

215 'விலங்குருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறுபன் மொழிய தேஎம் முன்னி,
வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
புனைமாண் எஃகம் வலவயின் ஏந்தி,
செலல்மாண்பு உற்ற நும்வயின், வல்லே, 5
வலன்ஆகு! என்றலும் நன்றுமன் தில்ல
கடுத்தது பிழைக்குவது ஆயின், தொடுத்த
கைவிரல் கவ்வும் கல்லாக் காட்சிக்,
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
வடிநவில் அம்பின் ஏவல் ஆடவர், 10
ஆளழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக்,
கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல்
படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ,
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணிகொண்டு,
வல்வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், 15
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்திவண் உறைதல் ஆற்று வோர்க்கே. 17

216 நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்-
தாளபுனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
தண்துறை ஊரன் பெண்டிர் எம்மைப் 5
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ்வலர்
பட்டனம் ஆயின், இனியெவன் ஆகியர்;
கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
கடிமிளைப் புறவின் பூத்த முல்லையொடு, 10
பல்லிளங் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறிசுரை வெள்வேல்
ஆதன் எழினி அருநிறத்து அழுத்திய
பெருங்களிற்று எவ்வம் போல
வருந்துப மாதுஅவர் சேரியாம் செலினே! . 16

217 பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை,
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன,
துவலை தூவல் கழிய, அகல்வயல்
நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக்
கோடைப் பூளையின் வரடையொடு துயல்வர, 5
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல்உண் பச்சை நிறமறைத்து அடைச்சிய
'தோலெறி பாண்டிலின் வாலிய மலரக்
கோழிலை அவரைக் கொழுமுகை அவிழ,
ஊழுறு தோன்றி ஒண்பூத் தளைவிட, 10
புலம்தொறும் குருகினம் நரலக் கல்லென
அகன்றுறை மகளிர் அணிதுறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இதுவென,
எப்பொருள் பெறினும், பிரியன்மினோ, எனச்
செப்புவல் வாழியோ, துணையடை யீர்க்கே; 15
நல்காக் காதலர் நலன்உண்டு துறந்த
பாழ்படு மேனி நோக்கி நோய்பொர,
இணர்இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
எயிறுதீப் பிறப்பத் திருகி
நடுங்குதும் - பிரியின்யாம் கடும்பனி உழந்தே. 20

218 'கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு
முளைதருபு ஊட்டி, வேண்டுகுளகு அருத்த,
வாள்நிற உருவின் ஒளிறுபு மின்னி,
பரூஉஉறைப் பல்துளி சிதறி, வான் நாவின்று,
பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப் 5
புயலேறு உறைஇய வியலிருள் நடுநாள்,
விறலிழைப் பொலிந்த காண்பின் சாயல்,
தடைஇத் திரண்டநின் தோள்சேர்பு அல்லதை
படாஅ வாகும், எம் கண் என, நீயும்
இருள்மயங்கு யாமத்து இயவுக்கெட விலங்கி, 10
வரிவயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வர அரிது; என்னாய்,
வரவெளி தாக எண்ணுதி, அதனால்,
நுண்ணிதின் கூட்டிய படுமாண் ஆரம்
தண்ணிது கமழும்நின் மார்பு, ஒருநாள் 15
அடைய முயங்கேம் ஆயின், யாமும்
விறலிழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
அன்னை அறியினும் அறிக! அலர்வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
வண்டிறை கொண்ட எரிமருள் தோன்றியொடு. 20
ஒண்பூ வேங்கை கமழும்
தண்பெருஞ் சாரல் பகல்வந் தீமே! 22

219 சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி.
ஓரை ஆயமொடு பந்துசிறிது எறியினும்,
'வாராயோ!' என்று ஏத்திப் பேர்இலைப்
பகன்றை வான்மலர் பனிநிறைந் ததுபோல்
பால்பெய் வள்ளம் சால்கை பற்றி, 5
'என்பாடு உண்டனை ஆயின் ஒருகால்
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டிப்,
'பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான்,
நலம்புனைந்து எடுத்தஎன் பொலந்தொடிக் குறுமகள்
அறனி லாளனொடு இறந்தனள் இனி' என, 10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்-
பொன்வார்ந் தன்ன வைவால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர்உழை ஒருத்தல்;
பொரிஅரை விளவின் புன்புற விளைபுழல்,
அழல்எறி கோடை தூக்கலின், கோவலர், 15
குழல்என நினையும் நீர்இல் நீள்இடை,
மடத்தகை மெலியச் சாஅய்,
நடக்கும் கொல்?" என, நோவல் யானே. 18

220 ஊருஞ் சேரியும் உடன்இயைந்து அலர்எழத்,
தேரொடு மறுகியும், பணிமொழி பயிற்றியும்,
கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்,
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் 5
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறுஅரை யாத்த காண்தகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல, யாவரும்
காண லாகா மாண் எழில் ஆகம்
உள்ளுதொறும் பனிக்கும் நெடுஞ்சினை, நீயே 10
நெடும்புற நிலையினை, வருந்தினை ஆயின்,
முழங்குகடல் ஓதம் காலைக் கொட்கும்,
பழம்பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும்புள் போல, நெஞ்சு அமர்ந்து,
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், 15
இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை
முடங்குபுற இறவொடு இனமீன் செறிக்கும்
நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானத்து
யாணர்த் தண்பணை உறும் எனக் கானல்
ஆயம் ஆய்ந்த சாய்இறைப் பணைத்தோள் 20
நல்எழில் சிதையா ஏமம்
சொல்லினித் தெய்ய, யாம் தெளியு மாறே. 22

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/211_முதல்_220_முடிய&oldid=480928" இலிருந்து மீள்விக்கப்பட்டது