உள்ளடக்கத்துக்குச் செல்

சேரமன்னர் வரலாறு/6. பல்யானைச் செல்கெழு குட்டுவன்

விக்கிமூலம் இலிருந்து

6. பல்யானைச் செல்கெழு குட்டுவன்

குட நாட்டின்கண் மாந்தை நகர்க்கண் இருந்து இமயவரம்பன் ஆட்சி புரிந்து வருகையில் குட்ட நாட்டில் வஞ்சி நகர்க்கண் இருந்து பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். இக் குட்டுவன் இமயவரம்பனுக்கு இளையனாதலின், இளமை வளத்தால் இவன் போர்ப்புகழ் பெறுவதில் தணியா வேட்கையுடையவனாய் இருந்தான். குட்ட நாட்டுக்குக் கிழக்கில் தென்மலைத் தொடரின் மேற்கில் பரந்திருக்கும் மணல் பரந்த நாட்டுக்குப் பூழி நாடு என்று அந் நாளில் பெயர் வழங்கிற்று[1]. அந் நாட்டவர் பூழியர் எனப்படுவர். பூழி நாட்டவர் தமக்கு அம்மையில் நிற்கும் தென்மலைக் காட்டில் வாழும் யானைகளைப் பிடித்துப் பற்றுவதில் தலைசிறந்தவர். அவர்கள் குட்டநாட்டுக் குட்டுவரது ஆட்சியின் கீழிருந்து அவர்கட்குப் பெருந் துணை புரிந்தனர். அதனால் குட்டுவன் படையில் ஏனைப் படைவகை பலவற்றிலும் யானைப்படையே சிறந்திருந்தது. அச் சிறப்புப் பற்றிக் குட்டுவன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று சான்றோர் வழங்கும் சால்பு பெற்றான்.

குட்ட நாட்டின் வட பகுதிக்கு நேர் கிழக்கில் நிற்கும் வடமலைத் தொடரின் மலைமிசைப் பகுதிக்குப் பாயல் நாடு என்பது அந் நாளில் வழங்கிய பெயர். அப் பாயல் நாட்டின் கீழ்ப் பகுதியில் இப்போது நும்பற்காடு என வழங்கும் உம்பற்காட்டில் குறுநிலத் தலைவர் சிலர் வாழ்ந்துவந்தனர். வடக்கே இமய வரம்பனது புகழ் மிகுவது கண்டு, அவர்கள் பொறாமை மிகுந்து குட்ட நாட்டிற் புகுந்து குறும்பு செய்தனர். அக் காலத்தே இப்போது ஆணைமலைத் தொடர் என வழங்கும் தென்மலைப் பகுதியில் முதியர் என்பார் வாழ்ந்து வந்தனர் உம்பற்காட்டுக் குறுநிலத் தலைவரது குறும்பு அவர் கட்கும் இடுக்கண் விளைத்து வந்தது.

உம்பற்காட்டின் வட பகுதியில் அகப்பா என்பது அதற்குத் தலையிடமாக இருந்தது. உம்பற்காட்டு வேந்தர் அகப்பாவில் இருந்து கொண்டு குட்டுவனுக்கு மாறுபட் டொழுகினர். இமயவரம்பன் வடவாரியரோடும் கடற்கடம்பரோடும் போரிட்டு ஒழிக்க வேண்டியிருந் தமையால், குட்டுவனே போர் மேற்கொண்டு உம்பற் காட்டுக் குறும்பரை வலியழிக்க வேண்டியவனானான். உம்பற்காட்டுக்குத் தலைநகரான அகப்பா, இப்போது குறும்பர்நாடு வட்டத்திலுள்ள மீப்பா யூர்க்குக் கிழக்கில் இருந்திருக்குமெனக் கருதப்படுகிறது. இப் பகுதி இடைக் காலத்தே பாமலை நாடு என்றும் பாநாடு என்றும் வழங்கியிருந்து, பாயூர் மலைநாடென்று பின்னர் விளங்கிற்று. குறும்பர் நாடு வட்டத்தில் பாயூர் மலைநாடு ஒரு பகுதியாகவே இன்றும் உள்ளது. இப் பகுதியை மேலை நாட்டு யவனர் குறிப்பு பம்மலா (Bamnnala) என்று குறிக்கின்றது. இது வடக்கில் சிறைக்கல் வட்டம் வரையில் பரந்திருந்தது. அப் பகுதியில் இப்போது இரண்டு தரா நாடு எனப்படும் பகுதிக்குப் பழம் பெயர் பாநாடு என்று வழங்கின்று எனச் சிறைக்கல் வரலாற்றுக் குறிப்பில் வில்லியம் லோகன் என்பாரும் உரைக்கின்றார்.

அந் நாளில் அகப்பா என்னும் நகரம் உயரிய மதிலும் பெருங்காடும் அரணாகக் கொண்டு சிறந்து விளங்கிற்று. மிகப் பலவாய்த் திரண்ட யானைப் படையும் பிற படைகளும் உடன்வர , குட்டுவன் உம்பற் காட்டிற்குட் புகுந்தான். அவனது படைப் பெருமை அறியாது எதிர்த்த குறுநிலத் தலைவர் எளிதில் அவன் படைக்குத் தோற்றனர். அவர்களுட் பலர் குட்டுவன் அருள் வேண்டிப் பணிந்து திறை தந்து அவன் ஆணைவழி நிற்பாராயினர். ஆங்கு வாழ்ந்த முதியர் அவனுக்குப் பெருந்துணை புரிந்தனர். உம்பற் காட்டில் சேரரது ஆட்சி நடைபெறுவதாயிற்று.

உம்பற்காட்டைத் தன் குடைக்கீழ்க் கொணர்ந்து நிறுத்திச் சிறந்த குட்டுவற்கு அந் நாட்டுக் குறுநிலத் தலைவரும் முதியரும் துணைபுரிய, அவன் அதற்கு வடபாலில் உள்ள அகப்பா நோக்கிச் சென்றான். அகப்பாவிலிருந்து பகை செய்தொழுகிய வேந்தர் கடும்போர் உடற்றினர். குட்டுவன் உழிஞை சூடிச் சென்று அகப்பாவின் கடிமிளையும் கிடங்கும் நெடுமதிலும் பதணமும் சீர்குலைந்து அழியக் கெடுத்துப் பகை புரிந்தொழுகிய தலைவர் பலரைக் கொன்று வெற்றி கொண்டான். நாட்டின் பல பகுதிகள் குட்டுவன் படைத் திரளால் அழிவுற்றன. ஊர்கள் தீக்கிரையாயின்; அகப்பா நகரும் சீர்குலைந்தது. முடிவில் குட்டுவன், அப் பகுதியை முதியர் காவலில் வைத்துத் தன் கோற் கீழிருந்து ஆட்சி புரியுமாறு ஏற்பாடு செய்தான். இதனை மூன்றாம்பத்தின் பதிகம்,

“உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகற்றீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து”

என்று குறிக்கின்றது.

இவ் வண்ணம் வென்றி மேம்பாட்டுச் சிறந்த குட்டுவன், வாகை சூடித் தன் நாடு திரும்பிப் போந்து, தான் பெற்ற வெற்றிக்காகப் பெருஞ்சோற்று விழாவைச் செய்தான், அப்போது சான்றோர் பலர் வந்தனர். குட்டுவனது அரசியற் சுற்றத்தாருள் நெடும்பாரதாயனார் என்ற சான்றோர் ஒருவர், அவ்வப்போது அவனுக்கு அரசியலறிவு நல்கி வந்தார். அவர் சிறந்த நல்லிசைப் புலமையும் உயர்ந்த கேள்வி நலமும் உடையவர். அவர் அவ் விழாவினை முன்னின்று நடத்தினார். அப்போது கோதமனார் என்னும் மற்றொரு சான்றோர் குட்டுவன்பால் வந்தார்.

இக் கோதமனார் பாலையூர் என்னும் ஊரினர்: அவ்வூர் குட்ட நாட்டில் இப்போது பொன்னானி வட்டத்தில் சாவக்காடு என்ற பகுதியில் இனிதே உளது. கோதமனார் பாலையூரில்[2] வேதியர் குடியில் தோன்றி நல்லிசைப் புலமைப் பெற்று விளங்கினார்.

அந் நாளில், குட்டுவன் உம்பற்காட்டைக் கைப்பற்றி, அகப்பாவை நூறிக் கொங்கு நாட்டை வென்று சிறந்து விளங்கியது, அவர்க்கு மிக்க மகிழ்ச்சி தந்தது. அவர் குட்டுவனைக் கண்டு, “வேந்தே, கழி சினம், கழி காமம், கழி கண்ணோட்டம், அச்ச மிகுதி, பொய் மிகுதி, அன்பு மிகவுடைமை, கையிகந்த தண்டம் என்பன நல்லரசர்க்கு ஆகா என விலக்கப்பட்ட குற்றங்களாகும்; இவற்றை முற்றவும் கடிந்து, தன் நாட்டவர், பிறரை நலிவதும் பிறரால் நலிவுறுவதும் இன்றி, பிறர் பொருளை வெஃகாமல், குற்றமில்லாத அறிவு கொண்டு, துணை வரைப் பிரியாமல், நோயும் பசியுமில்லாமல் இனிது வாழவும், கடலும் கானும் வேண்டும் பயன்களை உதவவும் நன்கு அரசு புரிந்த உரவோர் நின் முன்னோர்; நீ அவர் வழி வந்த செம்மல்; கயிறு குறு முகவையை ஆனினம் மொய்க்கும் கொங்கு நாட்டை வென்று கொண்டாய்; ஐயவித்துலாமும் நெடுமதிலும் கடிமிளை யும் ஆழ்கிடங்கும் அரும் பணமும் பொருந்திய அகப்பாவை உழிஞைப் போர் செய்து வென்று கைப்பற்றி நூறினாய்; வருபுனலை அடைப்பவரும், நீர் விளையாடுபவரும், வில்விழாச் செய்பவருமாய்

(Upload an image to replace this placeholder.)

இன்புற்று வாழும் மக்கள் நிறைந்த மருதவளம் பெற்றுச் செருக்கிய பகைநாட்டவர், நீ சீறியபடியால், வலி அழிந்து ஒடுங்குவது ஒருதலை; அவர் நாடுகள் நண்பகல் போதிலே குறுநரிகள் கூவ, கோட்டான்கள் குழற, பேய்மகள் கூத்தாடுமாறு பாழாவது திண்ணம்[3] என்று குட்டுவனுடைய தொல்வரவும் ஆள்வினைச் சிறப்பும் போர் வென்றியும் பாராட்டிப் பாடினார். அது கேட்டுப் பேருவகை கொண்ட குட்டுவன் அவரைத் தன் அரசியற் சுற்றத்தாருள் ஒருவராகக் கொண்டான்.

குட்டுவனுக்கு அரசியல் ஆசிரியரான நெடும்பார் தாதயனார் முன்னின்று புரோகிதம் செய்ய, பாலைக் கோதமனார் உரிய துணைபுரியப் பெருஞ்சோற்றுவிழா நடைபெற்றது. போர்முரசு எண்டிசையும் எதிரொலிக்க முழங்கிற்று; முரசுக்குக் குருதியூட்டிப் பலிதருவோன் கையில் பிண்டத்தை ஏந்தினான்; அதுகண்டு பேய் மகளிர் கை கொட்டிக் கூத்தாடினர். அக் குருதி கலந்த சோற்றை எறிந்தபோது சிற்றெறும்பும் அவற்றை மொய்த்தற்கு அஞ்சின; அவற்றைக் காக்கையும் பருந்துமே உண்டன. பின்னர், கொடைமுரசு முழங்கிற்று. போர் மறவரும் பரிசிலரும் அம் முரசின் ஓசை கேட்டு வந்து கூடினர். அப்போது இயவர் இனிய இசைவிருந்து நல்க, போர்மறவர்க்குப் பெருஞ்சோறு வழங்கப்பெற்றது.

இவ் விழாவினைச் சிறப்பித்துக் கோதமனார் இனிய பாட்டொன்றைப் பாடினர். அப் பாட்டின்கண் நாட்டின் பல்வகைத் திணை வளங்களையும் எடுத்தோதினார். நெய்தற் பகுதியில் கடற்கரையை ஒட்டிக் கழிகள் உள்ளன; அவற்றில் நெய்தல்கள் மலர்ந்திருக்கும்; கரையோரங்களில் ஞாழல் மரங்கள் நிற்கின்றன; கழியில் மீன் வேட்டம் ஆடிய புள்ளினம் கழிக்கானலில் நிற்கும் புன்னையில் வந்து தங்குகின்றன. கடலலைகள் கரையில் சங்குகளையும் பவளக்கொடிகளையும் கொணர்ந்து ஒதுக்குகின்றன; சங்குகள் ஒலிக்க அவற்றின் முத்துக் களையும் பவளக்கொடிகளையும் நெய்தலில் வாழ்வோர் எடுத்துக்கொள்ளுகின்றனர்; ஒருபால், குறிஞ்சி நிலத்து ஊர்கள் உள்ளன; அங்கே அழகிய கடைத் தெருக்கள் காணப்படுகின்றன ; கடைகளில் காந்தட் கண்ணி சூடிவரும் கொலைவில் வேட்டுவர், தாம் கொணரும் ஆமான் இறைச்சி, யானைக்கோடு ஆகியவற்றைத் தந்து அவற்றின் விலைக்கீடாகக் கள்ளைப் பெறுகின்றனர்; கடைக்காரர் அவற்றைப் பிற நாட்டவர்க்குப் பொன்னுக்கு மாறுதலால், கடைத்தெழு பொன் மிகுந்து பொலிகின்றது. மற்றொருபால் மருத நிலத்தில் காணப்படுகிறது; அங்குள்ள ஊர்களில் மருத மரங்கள் வேரோடு சாய்த்துவரும் புது வெள்ளத்தை மணல் மூடைகளைப் பெய்து அணை கட்டும் மக்கள் மணற்கரைப் பகுதி நீர்ப் பெருக்கால் கரைந்து உருகுவது கண்கள் ஆரவாரித்து அடைக்கின்றனர்; ஒருபால், ஊர்களில் விழாக்கள் நடக்கின்றன; மக்கள் பலர் விழாப்பொலிவு கண்டு தம் சீறூர்க்குச் செல்கின்றனர்; அவ் விழாக் காலத்தில், கரும்பின் அரிகாலில், காலமல்லாக் காலத்துப் பூக்கும் பூக்கள் மலிந்துள்ளன. மற்றொருபால், வரகின் வைக்கோலால் கூரை வேய்ந்த வீடுகள் நிறைந்த புன்செய்க் கொல்லைகள் உள்ளன. அங்கு வாழ்பவர், வரும் விருந்தினர்க்குத் தினைமாவைத் தந்து விருந்தோம்புகின்றனர்; ஒருபால், ஈரமின்மையால் பூக்கள் வாடி உதிர்ந்து நிலமும் பயன்படும் தன்மை திரிந்து மணல் பரந்து பொலிவு இன்றி இருக்கிறது; எங்கும் மணலும் பரல்களும் பரந்து பூழி நிறைந்திருக்கும் இப் பகுதியில், மகளிர் காலில் செருப்பணிந்து திரிகின்றனர். இந் நிலங்களில் வாழும் வேந்தரும் குறுநிலத் தலைவரும், நின் பெருஞ்சோற்று விழாவில் எழும் முரசு முழக்கம் கேட்டு, உள்ளம் துளங்கி உலமருகின்றனர்; வலிய அரண் பெற்றும், மனத் திண்மை இன்மையால், அவர்கட்கு நின் விழாவொலி பேரச்சத்தைத் தருகிறது[4] என்று இவ்வாறு கோதமனார் கூறினார்.

அகப்பாவை வென்றது முதல் குட்டுவனது புகழ் நாடெங்கும் பரவியிருந்தமையின் நாட்டில் மக்கள் வாழ்வு இனிது இயங்கிற்று. போர் இல்லாமையால் மறவர் தத்தம் மனைகளில் இருந்து தமக்குரிய தொழில் செய்து வந்தனர்; வினை கருதியும் பொருள் கருதியும் பிரியும் பிரிவு, அவர்தம் வாழ்க்கையில் நிகழாமையால், ‘புலம்பா உறையுள்’ வாழ்க்கையே மலிந்திருந்தது. தானை மறவர் சிலர் வெறிதே மடிந்திருந்தனர். பிற நாடுகள் பெருவறம் கூர்ந்து வருந்துங் காலத்தும், குட்ட நாட்டிற் பாயும் பேரியாறு, விடரளை நிறையப் பெருகிப் புலங்களில் பரந்து நீர் நிரம்புமாறு காட்டுப்பூக்களைச் சுமந்து வந்து பாய்வதில் தப்பாதாயிற்று. அதனைத் தடுத்து நிறுத்தி வயல்களில் தேக்குங்காலத்து, உழவர் செய்யும் பூசல் ஒன்றே நாடு எங்கணும் விளங்கித் தோன்றிற்று. இதனால் குட்டுவன் நாடே திருவுடையது எனப்படுவதாயிற்று. கோதமனார் இந்த நலத்தை அழகியதொரு பாட்டாகப்[5] பாடி வேந்தனை இன்புறுத்தினார்.

இவ்வாறு இருக்கையில் சேர நாட்டுக்குக் கிழக்கில் உள்ள கொங்கு நாடு குட்டுவனது முன்னோர் காலத்தே சேர வேந்தர் ஆட்சியில் இருந்த தெனினும், அங்கே இருந்து நாடு காவல் புரிந்த வேந்தர் சிலர், அயலில் இருந்த குறுநிலத்தவர் சிலரைத் துணையாகக் கொண்டு பாலைக்காட்டு வழியாகக் குட்ட நாட்டிற் புகுந்து குறும்பு செய்தனர். குட்டுவரும் பூழியரும் நிறைந்த பெரும்படை யொன்றைக் கொண்டு குறும்பு செய்து போந்த கொங்கரைக் குட்டுவன் வெருட்டிச் சென்று, மேல் கொங்கு கீழ் கொங்கு எனப்படும் இரு கொங்கினையும் கைப்பற்றித் தன் அரசியல் ஆணைவழி நிற்கச் செய்தான். அப்போது கீழ் கொங்கு நாட்டில் இப்போது தாராபுரம் எனப்படும் ஊர் வஞ்சி என்ற பெயருடன் சிறப்புறுவதாயிற்று. அந் நாளில் கொங்கு நாடு நீர் வளங்குன்றி முல்லை வளமே சிறந்து நின்றது. அதனால், அங்கு வாழ்ந்தவர் அனைவரும் ஆ காத்து ஓம்பும் ஆயர்களாகவே இருந்தனர். கொங்கு நாட்டில் காவிரியின் வடகரையில் வாழ்ந்த மழவர் பலர் தெற்கில் கீழ் கொங்கு நாட்டில் வந்து குடியேறியிருந்தனர் அவர்கள் மறப்பண்பு சிறந்து நின்றமை அறிந்து, கீழ் கொங்கு நாட்டில் வாழ்ந்த வேளிர் பலர், அவர்களைத் தமது படை மறவராகக் கொண்டிருந்தனர். கொங்கு நாட்டைக் குட்டுவன் அகப்படுத்தி, அங்கு வாழ்ந்த மழவரும் அவன் ஆணை வழி நிற்பாராயினர். அவர்கள் போர்த்துறையில் சிறந்து குட்டுவன் பாராட்டும் சிறப்பு எய்தியதனால் குட்டுவன் “குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை[6]” என்ற சிறப்பை எய்தினான்.

இவ்வாறு குட்டுவரும் பூமியரும் கொங்கரும் மழவரும் ஆகிய பலவகை மறவர், தானை வீரராக மலிந்த பெரும்படை கொண்டு குட்டுவன் விளக்க முறுகையில் ஆங்காங்குச் சிற்சில தலைவர்கள் நின்று சிறு குறும்பு செய்தனர். அறியாமை காரணமாக அவர்கள் போர் தொடுத்தாராயினும், குட்டுவன், தன் பெரும் படை கொண்டு அவர்களை வலியழிப்பதில் சிறிதும் தாழாது ஒழுகினான். ஒருகால் குறுநிலத் தலைவன் ஒருவன் குட்டுவனைப் பணிந்தொழுகாது பகைத்தான். குட்டுவன் விடுத்த படை அவனது நாடு நோக்கிச் சென்றது. தூசிப்படை முற்படச் சென்று பகை வேந்தனது அரண்களை அழித்துச் செல்ல, குட்டுவன் அதன்பின் அணிவகுத்துச் செல்லும் தானைக்குத் தலைமை தாங்கிச் சென்றான். பகைவன் படைத்திரள், குட்டுவனது தூசிப் படைக்கு எதிர் நிற்கமாட்டாது உடைந்து கெட்டது; அப் பகைவர் நாட்டில் வாழ்ந்த மக்களும் படைவரவு கண்டு அஞ்சி வேறு இடங்கட்கு ஓடிவிட்டனர்; ஊர்கள் பல அழிந்தன; அழிந்த இடங்களில் காட்டு விலங்குகள் வாழலுற்றன. பகைவர் செய்த குறும்பினை அடக்கி வெற்றி காணும்போதெல்லாம் குட்டுவன் தன் தானை வீரரைக் கூட்டி விழாக் கொண்டாடித் தானை மறவர்க்கும் பிறருக்கும் பெருங்கொடை வழங்கினன்.

சிற்றரசன் ஒருவனை வென்றவிடத்துச் சிறுவிழா நிகழினும் அதனைச் சிறப்பாகக் கொண்டாடுவது குட்டுவனுக்கு இயல்பு. ஒருகால், அத்தகைய சிறுவிழா ஒன்று நிகழ்ந்தபோது, பாலைக் கோதமனார் கலை வல்ல இரவலர் சுற்றம் உடன்வர வந்தார். விழா நிகழும் இடத்தருகே இருந்த வயல் வரம்புகளில் உன்னமரங்கள் நின்றன; அவற்றின் கவடுகளில் சிள் வீடு என்னும் வண்டுகள் தங்கிக் கறங்கின ; ஊர் மன்றங்களில் தங்கித் தெருக்களிற் பாடிச் செல்லும் பரிசிலர் போந்து உண்பவுண்டு, இழையணிந்து உவகை மலிந்து கூத்தாடினர். அவர்கட்குக் குட்டுவன் பெரு விலையை யுடைய நன்கலங்களைப் பரிசில் வழங்கினான். அக்காலை அவ்விடம் போந்த கோதமனாரைக் குட்டுவன் கண்டு அன்போடு வரவேற்றுச் சிறப்பித்தான். அப்போது அவன், நாட்டின் நலம் கூறுமாறு கோதமனாரை வினவினான். அவனுக்கு அவர் நாட்டின் நலத்தை எடுத்துரைத்து முடிவில் தான் வழியில் கண்ட காட்சியை விளக்கினர்; “வேந்தே, சிறுமகிழ்வு நிகழினும் பெருங்கொடை புரிவது உனது இயல்பு; உனது இப்பண்பை அறியாது பகைத்துக் கெட்ட வேந்தர் நிலை நினைத்தற்கு மிக்க இரங்கத்தக்க தாய் உளது. இப்போது உன்னோடு பகைத்துப் பொருது கெட்டோருடைய நாடுகளில் பெருந்துறைகள் பல உண்டு. அவற்றின் கரையில் மருதமரங்களும் காஞ்சி முருக்கு முதலிய மரங்களும் நிற்கும்; அவற்றின் பூக்கள் சொரிந்துகிடக்கும் அடைகரையில் நந்தும் நாரையும் செவ்வரியும் உலாவும்; நீர்நிலைகளில் தாமரையும் ஆம்பலும் பெருகியிருக்கும்; இத்தகைய நாடுகள் இப்போது பாழ்பட்டுப் பல்லும் முள்ளும் நிரம்பிப் பொலிவிழந்து விட்டன[7]” என்று பாடி, அவனது வெற்றிச் சிறப்பை எடுத்துரைத்தார்.

இதுகேட்ட வேந்தனுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்றா யினும், தன் நாட்டின் நலம் அறிதற்கண் பிறந்த வேட்கை அடங்கவில்லை. அதனைக் கோதமனார் அறிந்து கொண்டார். “வேந்தே, நின்படையின் தூசிப் படை முன்னுறச் சென்று பகைவர் அரண்களை அழித்தேக, நின் தானைத் தலைவரும் மறச் சான்றோரும் கூடிய பெரும்படை, புலியுறை கழித்த வாளை ஏந்திக் கொண்டு அதன் பின்னே சென்று பகைவர் படையகம் கூடிய பெரும்படை, புகுந்து பொருகின்றதோர் பொற்புடையது; நீ அப்பொரு படைக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றாய்; நின் பாசறை யிருக்கையில் வில்வீரர் செறிந்து போர்வேட்கை மிகுந்து விரைகின்றனர்; நீ அவர்கள் இடையே இருந்து போர்க்குரிய செயல் முறைகளை ஆராய்ந்து உரைக்கின்றாய்; நீ அந்தணரை வழிபட்டு அவரால் உலகு பரவும் ஒளியும் புலவர் பாடும் புகழும் பெறுகின்றாய்; நிலமுதலிய ஐந்தும் போல அளப்பரிய வளமுடையவனாகிய உன் பெருக்கத்தை யாங்கள் நன்கு கண்டோம்; உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமாயினும் வருவோர்க்கு வரையாது வழங்கும் சோற்றால் வாடா வளமுடையது நின்நாடு: நின்வளன் வாழ்க[8]” என்று இயம்பினார்.

எதிர்ந்த வேந்தர் ஈடழிந்து கெடுவதும், தனது நாடு வளமிகுந்து சிறப்பதும் கண்ட குட்டுவனுக்குப் பகைமை அழிக்கும் போர்வினையிலே விருப்பம் மிகுந்தது. ஒருசில வேந்தர் அவனது படைப் பெருமை அறியாது போர் தொடுத்தனர்; அவரும் அழிந்தனர். அவர்களுடைய நாடுகளும் யானை புக்க புலம்போலப் பெரும் பாழாயின். பகையிருளைக் கடிந்து நாட்டில் வளம் பெருகச் செய்வது ஒன்றுதான் வேந்தர் செயல் என்று அறிஞர் கூறமாட்டார்; நாட்டு மக்கட்கு வேண்டிய நலம் புரிந்து இம்மை மாறி மறுமையில், செல்லும் உலகத்துச் சிறப்பெய்த வேண்டி அறம் புரிவதும் வேந்தர் செய்யத்தக்க கடனாம் என்பதையும் உணர்த்துவர்; அதுவே தமக்கு முறை என்று கோதமனார் கண்டார். அவன் உள்ளத்தில் அருளறம் தோன்றி நிலைபெறல் வேண்டும் எனக் கருதி ஒரு சூழ்ச்சி செய்தார்.

குட்டுவன் அமைதியோடு இருக்கும் செவ்வி நோக்கி, அவனுக்கு அவன் செய்த போர் நலத்தை எடுத்தோதி இன்புறுத்துவார் போலப் பகைவரது நாடு அழிந்த திறத்தை விரித்துக் கூறலுற்றார். “வேந்தே, நீ போருக்குப் புறப்படுவாயாயின், போர்முரசம் இடிபோல் முழங்கும்; வானளாவ எடுத்த கொடிகள் அருவி போல் அசையும்; தேரிற் பூண்ட குதிரைகள் புள்ளினம் போலப் பறந்தோடும்; இப்படை புகுந்து அழிப்பதால் பகைவர் நாடுகள் கெடும் திறம் கூறுவேன்; குதிரைப்படை சென்ற புலங்களில் கலப்பை செல்லாது; யானைப்படை புக்க புலம் வளம் பயப்பதில்லை; படை மறவர் சேர்ந்த மன்றங்கள் கழுதையேர் பூட்டிப் பாழ் செய்யப்பட்டன; பகையரசர் எயில்கள் தோட்டி வைக்கப் பெறாவாயின; நின் படையினர் அந்த நாடுகளில் வைத்த தீ காற்றொடு கலந்து ஊரை அழித்தமையின், வெந்து பாழ்பட்ட இடங்கள் காட்டுக் கோழியும் ஆறலை கள்வரும் வாழும் பாழிடங்களாயின, காண்[9]” என்றார்.

பின்பொருகால் செல்கெழுகுட்டுவன் நாடு காணும் கருத்துடையனாய்ப் புறப்பட்டான். அவனுடன் கோதமனாரும் சென்றார். வழியில் நாடுகள் பலவற்றைக் கடந்து செல்லும்போது, பாழுற்றுக் கிடந்த நாடு ஒன்றைக் கண்டனர். அப்போது மறம் மிகுந்து மறலும் குட்டுவனது மனத்தை மாற்றும் கருத்தினரான கோதமனார், “இந்த நாடு பாழாய்க் கிடப்பதன் காரணத்தை யான் அறிவேன். இது முன்னாளில் வளம் சிறந்து விளங்கிற்று; இளமகளிர் குவளையும் ஆம்பலும் விரவித்தொடுத்த தழையுடை உடுத்துத் தலையில் கண்ணி சூடி மரத்தின்மேல் ஏறியிருந்து வயல்களில் நெற்கதிரைக் கவரும் கிளி முதலியவற்றை ஓப்பதற்காக விளிக்குரல் எடுத்து இசைப்பர்; அப்போது பழனக் காவில் உறையும் மயில்கள், மகளிர் பாட்டிசைக்கு ஒப்ப ஆடும் ஆரவாரம் ஒருபால் எழும்; ஒருபால் பொய்கை களினின்றும் செல்லும் கால்களில் பூத்த நெய்தலை ஊதும் வண்டினம் எங்கு மொய்த்துக் கொண்டிருக்கும்; நன்செய்களின் விளைவை வண்டியில் ஏற்றிச் செல்வர்; அப்போது வண்டியின் சகடம் சேற்றிற் புதையும்; அதனைக் கிளப்பிச் செலுத்தும் வண்டிக்காரர் செய்கிற ஆரவாரம் ஒருபால் எழும்; இந்த நாடு இத்தகைய ஆரவாரங்களைக் கேட்டது உண்டேயன்றிப் போரார வாரம் கேட்டதில்லை; இப்போது நீ சிவந்து நோக்கிய தனால் இந்த அழி நிலையை எய்துவதாயிற்று[10]” என்றார்.

இவ்வாறு நாடுகள் சில அழிந்திருப்பது கண்ட குட்டுவனுக்கு நெஞ்சில் அசைவு பிறந்தது. “இந்த நாட்டு வேந்தர், போர் விளைந்தால் இத்தகைய அழிவு நேர்வதை அறியாது பகைத்துப் போர் தொடுத்தது பெருங் குற்றம்; வீடிழந்தும் விளைநிலங்களை இழந்தும் எத்தனையோ மக்கள் வருத்தம் எய்தினர்; இக் கேடு எய்தக்கண்டு மக்கள் மனம் கொதித்து வருந்தும் வருத்தத்தை நினைத்தால் கன்னெஞ்சமுடையாரும் கசிந்துருகுவர்” என்ற கட்டுரையும் இப் பேச்சிடையே பிறந்தது. “அரசியற் செல்வம் சிறந்தது என்பது பொருந்தாது. நாட்டு மக்கட்கு இவ்வாறு துன்பம் எய்துவது அந்நாட்டு வேந்தர்க்குத் தீராக் களங்கமாகும்; அந்த நாட்டவர் வேந்தர்களை எவ்வளவில் வெறுப்பார் என்பது எண்ண முடியாத ஒன்று” எனக் குட்டுவன் வாய்விட்டுக் கூறி வருந்தினான்.

இவ் வண்ணமே இருவரும் சொல்லிக்கொண்டே செல்லுங்கால், மிக்க கேடடைந்த நாடு ஒன்றைக் கண்டனர். அதனைப் பார்த்த குட்டுவன் “இதுவும் பகை வேந்தர்பால் பொருது வென்ற நாடுதானே” என்றான்; “ஆம்” எனத் தலையசைத்த கோதமனார், “வேந்தே, இந்த நாடு யான் அறிந்த நாடுகளில் ஒன்று; நின் படைமறவர் புகுந்து போர் உடற்றிக் கைப்பற்றியதற்கு முன்னும் யான் இதனைக் கண்டிருக்கிறேன்; தேர்கள் இயங்குவதால் ஏரால் உழுவதை வேண்டாதே சேறுபடும் வயல்களும், பன்றிகள் உழுவத்தால் கலப்பையால் உழுவதை வேண்டாது புழுதிபடும் புன்செய்க் கொல்லைகளும், மத்து உரறுவதால் இன்னியம் இயம்ப வேண்டாத மனைகளும் பொருந்திய இதன் நலத்தைப் பண்டு நன்கு அறிந்தவர், அப்போது கண்பாராயின், பெரிதும் நெஞ்சு நொந்து வருந்துவர்; இந்த நாட்டு மக்கள் நல்ல மனப்பண்பு அமைந்தவர்; முருகன் வெகுண்டு அழித்ததால் செல்வக் களிப்பை இழந்த மூதூர்போல், நின் வீரர் சீறி அழித்ததால் இந் நாட்டில் மழையும் செவ்வே பெய்யாதாக, வெயிலின் வெம்மை மிகுவதாயிற்று; நாடும் நலம் பயவா தொழிந்தது; இங்கே வாழ்பவர், சீறி யழித்த நின்னையோ, நின் சீற்றத்துக்குரிய காரணத்தை உண்டுபண்ணிய தம் நாட்டுத் தலைவர் களையோ நோவாமல், இஃது அல்லற் காலத்துப் பண்பு என்று சொல்லிக் கண்ணீர் சொரிந்து கையைப் புடைத்துப் பிசைந்து வருந்துகின்றனர். மனைகள் பீர்க்குப் படர்ந்து நெருஞ்சி மலிந்து பாழ்பட்டுக் கிடப்பன, காண்[11]” என்றார்.

இத்தகைய சொற்களால் குட்டுவன் மனத்தே மாறுதலொன்று உண்டாயிற்று. போர் நிகழாமல் தடுத்து, நாட்டு மக்களது வாழ்வு அமைதியோடு இயலுமாறு செய்வதில் அவன் கருத்துடையனானான். அக்காலத்தே இப்போது திருவாங்கூர் நாட்டில் உள்ள கோட்டயம் பகுதியில் வாழ்ந்த வேந்தர் சிலர் பகைத்துப் போர் தொடுத்தனர். வேந்தனுடைய தானைத் தலைவர் போர்க்குப் புறப்பட்டனர். இச் செய்தி குட்டுவனுடைய படைப்பெருமையைக் கண்டு தங்கள் நாடு எய்த விருக்கும் அழிவையும் நினைந்து வருந்தினர். அப் பகுதியில் வாழ்ந்த முதியருட் சிலர் குட்ட நாட்டுப் பாலையூரினரான கோதமனாரைக் கண்டு போரை விலக்குதற்கு ஏற்ற முயற்சி செய்யுமாறு வேண்டினர்.

கோதமனார் குட்டுவனைக் கண்டு, “வேந்தே, நினது பெரும்படை சென்று பரவுதற்கு முன் இந்த நாடு இருந்த சிறப்பைச் சொல்வேன், கேள்; வளையணிந்த இளமகளிர் வயலில் விளைந்திருக்கும். நெற்கதிரைப் பிசைந்து நெல்மணிகளைக் கொண்டு அவல் இடிப்பர்; பின்பு, அவலிடத்த உலக்கையை அருகே நிற்கும் வாழை மரத்தில் சார்த்திவிட்டு வயல்களில் மலர்ந்திருக்கும் வள்ளைப் பூக்களைக் கொய்து விளையாடுவர்; வயல்களில் மீனினங்களை மேய்ந்துண்ணும் நாரை முதலிய குருகுகளும், வயல் வரம்பில் தங்கியிருக்கும் ஏனைப் புள்ளினங்களும் நீங்குமாறு அம்மகளிர் அவற்றை ஓப்புவர்; இசைச்சுவை நல்கும் இசைவாணர், ஊர் மன்றத்தில் தங்கியிருந்து, மனைதோறும் போந்து யாழை இசைத்து இனிய பாட்டுகளைப் பாடி இன்புறுத்துவர். இத்தகைய வளஞ்சிறந்த நாடு இனி இரங்கத்தக்க அழிவெய்தும் போலும்[12]” என்று பாடினர்.

இத்துணை வளஞ் சிறந்த நாடு கெடுவது கூடாது என்ற கருத்துக் குட்டுவனுக்கும் தோன்றிற்று. நாட்டிற்குக் கேடு உண்டாகாத வகையில் போரை நடத்துமாறு தானைத் தலைவரைக் குட்டுவன் பணித்தான். கடல் போற் பெருகி வந்த படைத்திரளைக் கண்ட மாத்திரையே, பகை மன்னர் மனவலியழிந்து அடிபணிந்து அவன் ஆணைவழி நிற்கலுற்றனர். நாட்டு மக்கள் குட்டுவனை வாயார வாழ்த்தினர். நாட்டினில் நல்லரசு நிலவத் தொடங்கிற்று.

கோதமனார் உரைத்தவற்றால் குட்டுவன் மனம் மாறி அறமே நினைந்தொழுகும் அருள் வேந்த னாயினன். நெடும்பாரதாயனார் முதலிய சான் றோரைக் கொண்டு வேள்விகள் பல செய்தான். அறம் முதலிய உறுதிப் பொருள்களை எடுத்துரைக்கும் நூல்களைச் சான்றோர் விரித்துரைக்கக் கேட்டு இன்புற்றான். எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாத கொள்கையும், சீர்சான்ற வாய்மையுரையும் அவன்பால் சிறந்து விளங்கின. சொல்லாராய்ச்சி, பொருளாராய்ச்சி, சோதிட நூல் ஆராய்ச்சி வேதாமங்களைக் கேட்டல் முதலிய நெறிகளில் குட்டுவன் கருத்துப் பெரிதும் ஈடுபடுவதாயிற்று.

அன்பே நினைந்து ஒழுகும் முனிவர் உறவும், அறமே செய்தொழுகும் அந்தணர் கூட்டமும், வேள்வி வாயிலாகத் தேவரை இன்புறுத்தும் வேதியர் சுற்றமும் குட்டுவனைச் சூழ்ந்து நின்றன. அவனும் இம் முனிவர் முதலிய சான்றோர்களின் சிறந்த துணையை நயந்து வேள்விகள் பல செய்யலுற்றான். வேள்வித் தீயில் நெய் பெய்து எழுப்பும் ஆவுதிப் புகை அவனுக்கு மிக்க இன்பத்தைச் செய்தது. ஒருபால், தன்னை நாடி வருவோர்க்கு வரைவின்றிப் பெருஞ்சோறு வழங்கி விருந்தோம்புமாறு ஏற்பாடு செய்தான். வேள்வியில் எழும் ஆவுதிப் புகையும், விருந்தோம்புங்கால் சோற்றிடைப் பெய்யும் நெய்ப்புகையும், நறுமணங்கமழ விண்படர்ந்து வானுலகத்துத் தேவரை இன்புறுத்தின. அதனால், குட்டுவனது வாழ்க்கை வானுலகத்துத் தேவர் விரும்பும் சிறப்பு மிகுவதாயிற்று[13].

குட்டுவன்பால் நாடோறும் பரிசிலர் போந்து அவன் புகழைப் பாடினர்; அவர்கட்குப் பகைவர் நல்கிய நன்கலங்களை வழங்கி அவர்கள் உண்டு தெவிட்டு மளவும் கள்ளும் தேறலும் தந்து களிப்பித்தான். இவ்வகையால் அவனது புகழே நாடெங்கும் மிகுந்தது. அவன் மனப் பண்புக்கு ஏற்ற வகையில் அவன் மனைவியும் கற்பால் நாட்டவர் புகழும் நல்லிசை எய்தினாள். முல்லை மணம் கமழம் கூந்தலும், திருமுகத்தில் மலர் போல் அகன்று அழகுறத் திகழும் கண்களும், காந்தள் மலர்ந்ததொரு திப்பிய மூங்கில்வகை போலும் தோள்களும் உடைமையால், அவளது உருநலம் புலவர் பாடும் புகழ்மிக்கு விளங்கிற்று.

இத்தகைய நற்குண நற்செய்கைகளால் பாண்புற்ற மனைவியுடன் வாழ்ந்த குட்டுவனுக்கு ஆண்டு முதிரத் தொடங்கிற்று. அரசியற் புரோதிரான நெடும்பார தாயனார் உடன்வரக் குமரித் துறைக்குச் சென்று வல்லாரும் மாட்டாருமாகிய பல்வேறு இரவலர்க்கும் ஏனைப் பார்ப்பார்க்கும் அவன் பெரும் பொருளை வழங்கி “இரு கடல் நீரும் ஒரு பகலில்[14]” ஆடினான்.

அதன் முடிவில், வேளிரும் குட்டுவரும் பூழியரும் கொங்கரும் ஆகிய நாட்டுத் தலைவர் உடன்வர, அவன் குட்ட நாட்டில் உள்ள அயிரைமலைக்குச் சென்று, அங்கே கோயில் கொண்டிருக்கும் கொற்றவைக்குப் பரவுக்கடன் செய்தான்.

பேரியாறு தோன்றும் ஏரிக்கு அண்மையில் நிற்கும் மலை முடிக்குப் பண்டை நாளில் அயிரை என்று பெயர் வழங்கிற்று. அதிலிருந்து தோன்றிவரும் அயிரையாறு இப்போது சவரிமலைப் பகுதியில் தோன்றிவரும் பம்பையாற்றோடு கூடிப் பெருந்தேனருவி என்று பெயர் பெற்று அயிரையூர் வழியாக ஓடுகிறது. அயிரையூர் இப்போது அயிரூர் என்று வழங்குகிறது. அயிரை மலையும் இப்போது அயிதைமலை யெனக் கூறப் படுகிறது. இந்த அயிதைமலையே சங்க நூல்கள் குறிக்கும் அயிரை மலையாம் என்று திரு. கே.ஜி. சேஷையவவர்களும்[15] கருதுகின்றார்கள். அதை யாறு பம்பையோடு கலந்து பெருந்தேன் அருவி எனப்படுவதற்கு முன்பு, அதன் கரையில் அயிதையூர் என்றோர் ஊர் இருப்பதும், அது பெருந்தேனருவியாகி மேலைக்கடலை நோக்கி ஒடுங்கால் அதன் கரையில் அயிரூர் என்றோர் ஊரிருப்பதும், பிற்காலத்தே “அயிரூர் சொரூபம்” என்றொரு வேந்தர் குடிக்கிளை இருந்திருப்பதும் மேலே கண்ட முடிபை வற்புறுத்துகின்றன.

பின்பு குட்டுவன், அரசியற் சுற்றத்தாரும் தானைத் தலைவரும் புடைவரத் தன் மனையாளுடன் வஞ்சிமா நகர் வந்து சேர்ந்தான்; இரப்போர் சுற்றமும் புரப்போர் கூட்டமும் அவனைப் பாராட்டி வாழ்த்தின. நெடும்பார தாயனார் அரசன்பால் விடை பெற்றுக் கொண்டு துறவு பூண்டு காடு சென்று சேர்ந்தார். சில ஆண்டுகட்குப் பின்பு, ஒருகால், பாலைக்கோதமனார், “வேந்தே, எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாக் கொள்கை யாலும், சீர் சான்ற வாய்மையுரையாலும், சொல்லும் பொருளும் சோதிடமும் வேதமும் ஆகமுமாகிய இவற்றால் எய்திய புலமையாலும், முனிவர் துணையாதல் வேண்டி எடுத்த வேள்வித் தீயிடை எழுந்த ஆவுதிப் புகையும், விருந்தினரை உண்பிக்குமிடத்து எழும் நெய்யாகிய ஆவுதிப் புகையுமாகிய இரண்டின் நறுமனத்தாலும், வானுலகத் தேவர் விரும்பும் சிறப்பும் செல்வங்களும் நீ பெற்றுள்ளாய்; மேலும், நீ செருப்புமலைக்குரிய பூழியர்கட்குத் தலைவன்; மழவராகிய சான்றோர்க்கு மெய்ம்மறை; அயிரை மலையையுடையவன்; யாண்டு தோறும் பருவம் தப்பாது நன்மழை பெய்வதால் வளம் மிகப்படைத்து நோயில்லாத வாழ்வு திகழ, இயல்பாகவே முல்லை மணம் கமழும் கூந்தலும் மழைக்கண்களும் மூங்கில் போலும் தோள்களுமுடைய நின் மனைவியுடன் பல்லாயிர வெள்ளம் ஆண்டுகள் வாழ்வாயாக[16] என்று வாழ்த்தினார்.

இவ்வாழ்த்துரையைக் கேட்ட குட்டுவன் பாலைக்கோதமனார்க்கு மிக்க பரிசில் நல்கிச் சிறப்பிக்க நினைத்தான். அவன் மனக்குறிப்பைக் கோதமனார் கண்டு கொண்டார். ஆயினும் அவரது உள்ளம் வேறொன்றை நாடிற்று. உடனே குட்டுவன் அவரை நோக்கிச் “சான்றீர், நீர் வேண்டுவதைக் கொண்மின்” என்றான். அவர் “வேந்தே , யான் இதுவரை நின்னோடே யிருந்து நீ தந்த பொருள்களால் செல்வ வாழ்வு பெற்றேன். இம்மை வாழ்வை இனிது கழித்த யான், மறுமையிலும் துறக்க இன்பம் பெற விழைகின்றேன்; அது குறித்து யான் என் பார்ப்பனியுடன் வேள்விகள் ஒரு பத்துச் செய்தல் வேண்டும்; அவ்வேள்விகட்கு வேண்டிய செல்வத்தை உதவுதல் வேண்டும்″ என்று தெரிவித்தார். அவருடைய உள்ளத்தின் உயர்வு கண்டு உவகை மிகுந்து, அவர் வேண்டியவாறே குட்டுவன், வேள்விகட்கு வேண்டும் பலவும் உவந்து அளித்தான். கோதமனாரும் இடையீடின்றி ஒன்பது வேள்விகளை முடித்துப் பத்தாம் வேள்வி நடைபெறுகையில் தன் பார்ப்பனியுடன் மறைந்து விட்டார்.

தன்னோடு துணைவராய் இருந்த நெடும் பாரதாயனார் துறவு பூண்டதும், கோதமனார் வேள்விக் காலத்தில் மறைந்ததும், குட்டுவன் உள்ளத்தில் நன்கு பதிந்து துறக்க வாழ்வில் அவனுக்குப் பெருவேட்கையை உண்டு பண்ணிவிட்டன. அரசியற் செல்வத்திலும், மறம் வீங்கு புகழிலும் அவனுக்கு உவர்ப்புப் பிறந்தன. அதன் மேல் அவனுக்கு மகப்பேறும் இல்லாதிருந்தது. அஃது, அவன் கருத்தை மேன்மேலும் ஊக்கவே, அவன் தானும் துறவு மேற்கொள்ளத் துணிந்து சான்றோர் சிலர் துணை செய்யத் தன் மனைவியுடன் துறவு பூண்டு காடு சென்று சேர்ந்தான்.


  1. Madras Manual Vo.iii.p. 283.
  2. S.I.I. Vol. V. No. 784.
  3. பதிற். 22.
  4. பதிற். 30.
  5. பதிற். 28.
  6. பதிற். 21.
  7. பதிற். 23.
  8. பதிற். 25.
  9. பதிற். 25.
  10. பதிற். 27.
  11. பதிற். 26.
  12. பதிற். 29.
  13. பதிற். 21.
  14. பதிற். : ii பதிகம்.
  15. Chera Kings p. 15.
  16. பதிற். 21.