நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/வரலாறு

விக்கிமூலம் இலிருந்து


1. வரலாறு

பிறந்த நாள் விழாக் கொண்டாடுகின்ற இந்தக் காலத்தில், பேசவேண்டிய பேச்சு அவருடைய வரலாறு ஒன்றுதான். வேறு எதையும் பேசுவதற்கு இந்த மேடையில் இடமில்லை. நாயகம் அவர்களுடைய வரலாற்றைக் கூறுவதற்கு ஒரு நிமிடம் போதும். இது நாள் வரை பேச்சாளர்கள் பலர் பேசியதையும், இப்போது இங்கு பேசப்பெற்ற நல்லறிஞர்கள் பேசிய பேச்சுகளையுமெல்லாம் தொகுத்தால், அவருடைய வரலாறு ஒரு நிமிடத்தில் முடிந்து விடும்.

நாம் போற்றுகிற எம்பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள், 1446 ஆண்டுகளுக்கு முன்னே, நாம் வாழுகின்ற இதே ஆசியாக் கண்டத்தின் மேலைக் கோடியில் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த நகரம், அவரைப் பெற்றதனால் பெயரும் புகழும் பெற்ற மக்கா நகரம். அவர்கள் பிறந்து 63 ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்தார்கள். பிறந்த ஆறு ஆண்டுக்குள்ளாகவே பெற்றோர் இருவரையும் இழந்தார்கள். பெரிய தந்தையாராலே வளர்க்கப் பெற்றார்கள். முன்னைய 40 ஆண்டுகள் குடும்பத்திற்காக, வணிகத்திற்காக என்றே கழிந்தன. அக்காலத்திலும் கூட, சாதாரண மக்களிடத்தில் காணப் பெறாத அரிய செயல்கள், அவர்களிடத்திலே காணப் பெற்றன. பின்னைய 23 ஆண்டுகள், உலக மக்களுக்காக என்றே வாழ்ந்தார்கள். இந்த 63 ஆண்டுகளிலே, அவர்கள் செயற்கரும் செயல்களைச் செய்து சீர்திருத்தத்தைப் புகுத்தி, தம் காலத்திலேயே வெற்றியும் பெற்றார்கள். பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து புனிதத் திருமறையை நமக்கு இறக்கித் தந்தார்கள்; நம்மைவிட்டு மறைந்தார்கள்; என்பதுதான் அவர் களுடைய வரலாறு. (கைதட்டல்). இது போதுமானது. அவர்களுடைய வரலாற்றைக் கூறுவதற்கு.

அரேபியா நாடு

ஒரு மணி நேரம் பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஒரு நிமிடத்தில் வரலாறு முடிந்தது. இன்னும் 59 நிமிடங்கட்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அவர் தொடர்பான செய்திகளைப் பேசுவதற்கு ஆண்டுக் கணக்காகும். அவர் பிறந்த நாடு அரேபியா நாடு. அவர்கள் பிறந்த காலத்தில், அந்நாட்டு மக்கள் குடி, கூத்தி, கொள்ளையிடுதல் ஆகியவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். மேல்நாட்டுப் பேரறிஞன் சொன்னான் "நாயகம் அவர்கள் பிறந்த பொழுது அராபிய நாடு கார்காலத்து இருளைப் போல் இருந்தது" என்று. என் உள்ளம் அதை ஒப்பவில்லை. கார்காலத்து இருளிலாவது அடிக்கடி மின்னல் தோன்றும். மக்கள் வழி நடக்க அது துணை செய்யும். அன்றைய அரேபிய மக்களிடத்தில், அந்த மின்னல் கூடத் தோன்றவில்லை. அவ்வளவு இருள் கவ்வி இருந்தது. அதற்கு ஒரு சான்று சொன்னால் போதுமானது. அடுத்த வீட்டுக்காரன் ஆடு வளர்த்தான். எதிர்த்த வீட்டுக்காரன் அவரைக் கொடி வளர்த்தான். அடுத்த வீட்டுக்காரனுடைய ஆடு எதிர் வீட்டு அவரைக் கொடியைத் தின்றுவிட்டது. அவ்வளவுதான் செய்தி. இதற்காக, அவரைக் கொடி வளர்த்தவர் ஆடு வளர்த்தவரையும், ஆடு வளர்த்தவர் அவரைக் கொடி வளர்த்தவரையும் ஏழு தலைமுறைகள் வரை வெட்டிக் கொண்டு மடிந்தார்கள். அவ்வளவு புத்திசாலித்தனம் அக்கால அரேபியர்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட மக்களின் நடுவில் பெருமானார் தோன்றி அவர்களைச் சீர்த்திருத்தினார்கள் என்றால், இது எந்த மக்களாலும் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு அருஞ்செயலும், பெருஞ்செயலும் ஆகும் எனக் கொள்ள வேண்டும். இன்றைய அரேபிய மக்கள் உலகத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். விஞ்ஞானிகளிலே மிகச் சிறந்த விஞ்ஞானிகள் இன்றைய அரேபியர்கள். அவ்வளவு இருள் கவ்விய அந்தச் சமூகம் இன்றைக்கு ஒளி வீசக் கூடிய அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால், இந்த நல்ல நாளில் அவர்கள் செய்த தொண்டு எவ்வளவு பெரியது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இஸ்லாமிய மாணிக்கம்

இதனால்தான் ஒரு மேலை நாட்டு அறிஞன் சொன்னான்! “உலகம் முழுவதும் ஒளி வீசக் கூடிய ஒரு இஸ்லாமிய மாணிக்கம் அரேபிய நாட்டில் கண்டெடுக்கப் பெற்றது” என்று. இந்தச் சொற்றொடருக்கு எவ்வளவு பொருள்! நாயகம் ஒரு மாணிக்கம் என்றும், அது இஸ்லாமிய மாணிக்கம் என்றும், அவருடைய போதனை உலகம் முழுதும் ஒளி வீசுகிறது என்றும், அது கண்டெடுக்கப்பட்ட நாடு அரேபிய நாடு என்றும் அவன் வர்ணித்தான். ஆகவே, இதை இஸ்லாமிய மக்கள் உள்ளத்தே வைத்து நாள் தோறும் பெருமைப்பட வேண்டும்.

இஸ்லாம்

நாயகம் அவர்கள்தாம் இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்தார்கள் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். அது தவறு. இஸ்லாம் என்றும் உள்ளது. அதை நாயகம் அவர்கள் சீர் திருத்தினார்கள். அவ்வளவுதான். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, முத்தி என்று பொருள்.