ஈரோட்டுத் தாத்தா/வாழ்வளிக்க வந்தார்

விக்கிமூலம் இலிருந்து

ஈரோட்டுத் தாத்தா




வாழ்வளிக்க வந்தார்

உலகெலாம் இன்பம் உற்றிடத் தமிழகத்து
இலகுநா கரிகம் எங்கணும் பரப்பி

வாழ்ந்தநாள் யாவும் வீழ்ந்தன! தமிழகம்
தாழ்ந்தது, துயரே தழைத்தது! எங்கணும்

குறுகிய மார்பும் குனிந்த தலையும்
சிறுமனப் பான்மையும் நிறைந்து விளங்கத்

தமிழர்கள் யாரும் தளைப்பட் டாராய்
அமைதியில் லாத அடிமை மாக்களாய்

இலங்கினர் அறிவில் ஏற்றம் இன்றிக்
கலங்கினர்! ஏறக் கருதிய துறைஎலாம்

பிறவிப் பகைவர்கள் பெருமையோ டிருந்து
முறைசெயும் அரசியல், மொழி, மதம், கல்வி

எனுமித் துறைகள் எவற்றினும் மேலாய்த்
தனியர சோச்சித் தமிழர் முன்னேற்றம்

எளிதடை யாமல் இயன்றவா றெல்லாம்
வழியடைத் திருந்தார் வஞ்சனை பெருகவும்

தமிழரில் சாதி வகுப்புகள் நாட்டித்
தமையுயர்ந் தோராய் அமைத்துக் கொண்டார்!


ஒருவரை யொருவர் தாழ்த்திப் பேசியும்
பொருதும், வாயாற் பொல்லாங் குரைத்தும்

ஆரிய நாடுவிட் டழகுறு தமிழகத்
தேறிய பார்ப்பனர் எதிர்வரக் கண்டால்

‘சாமி!’ எனத்தலை தாழ்த்தி வணங்கியும்,
ஊமைகள் போல ஒதுங்கி நடந்தும்,

தன்மதிப் பிழந்தும் புன்மதி கொண்டும்
தன்னிலை குன்றி நாய்போல் உழன்றும்,

வாடும்நாள், வாழும் வகையினை அறிஞர்
தேடும்நாள் அறிஞரைத் தேற்றுதற் கென்று,

தமிழறம் பேணும் தகைமை யாளர்!
அமைதியாய்ச் சிந்தித் தறியும் மாண்பினர்!

வள்ளுவர் நெறியை வாழ்க்கையிற் காட்டும்
தெள்ளிய உள்ளச் செவ்வி யுடையார்!

உளம்சொல் உடலால் உவப்புறும் பணியை
இளமைப் பொழுதிலும் வளர்தமிழ் நாட்டுக்கு
 
அளித்த வள்ளல்! அஞ்சாச் சிங்கம்!
உழைப்பின் பயனை விழையாச் செல்வன்!

சிந்தனைச் சிற்பி! திராவிடத் தந்தை!
வந்தனைக் குரிய வடிவிற் பிறந்தார்!

ஈரோட்டுத் தாத்தா! தமிழர்
பாராட்டும் பெரியார் இராம சாமியே!