இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/கடவுளின் மணவாட்டி

விக்கிமூலம் இலிருந்து
6. கடவுளின் மணவாட்டி


னித சமுதாய வரலாற்றின் படி பார்த்தால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நாகரிகம் பல படிகளைக் கடந்த பின்னரே வந்திருக்கிறது. இது ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒரே நிலையில் கற்பு வளையமாக மாறிவிட்ட நெறியில் நின்றிருக்கிறது. ஆனால், தாய்மை என்ற மேலாம் ஆற்றல், வெறும் போகத்துக்கு இழிந்தபின், அதற்காகவே ஒரு வருக்கத்தைச் சமுதாயம் நியாயப்படுத்தி வந்திருக்கிறது. கற்பு நெறி ஒரு பெண்ணின் ஆளுமையில் எவ்வாறு பதிந்து அவளை முடக்கி விடுகிறதோ, அதேபோல், ஒரு பெண் தன் உடலினால் மட்டுமே பிழைக்கும் மரபில் வந்திருப்பதாகவும், அதற்குரிய நெறிகளில் ஒழுகுவதே தருமம் என்றும் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இப்படி விலைமகளிருக்கான வாழ்வின் தோற்றுவாய், அன்றைய புராணங்களில் இருந்து இன்றைய பாலியல் வன்முறை அநீதிகள் வரையிலும் ஒரேவிதமாக நியாயப் படுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு பெண், கற்பு நெறியிலிருந்து வழுவி விட்டால், பிறகு அவள் உடல், பொதுவான போகத்துக்கு உரியதாகிறது என்பதே நீதி.

மகாபாரதம் ஆதி பருவத்தில் வரும் ஒரு வரலாற்றைப் பார்ப்போம். தீர்க்கதமஸ் என்ற ஒரு ரிஷி-கண்ணற்றவர்- இவர் தம் மனைவியுடன் இன்பம் துய்ப்பதில் எந்த ஒரு வரன் முறையும் பாலிக்காதவராக இருந்தார். மற்ற முனிவர்களுக்கும், இது தூண்டுதலளிக்கக் கூடியதாக இருந்தது. தீர்க்கதமஸின் மனைவி வெறுப்படைந்தாள். அவரை விட்டகல முயன்றாள். அப்போது அவர் ஒரு விதி செய்தார்.

“இன்றிலிருந்து ஒரு பெண்ணுக்கு, கணவனாகிய ஒரே ஆண்தான் எல்லாமும். அவன் உயிருடன் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவள் மாற்றானை நாடலாகாது. இந்த விதியை அவள் மீறினால், குலத்தில் இருந்து விலக்கப் படுவாள். இவள் திருமணமாகாத கன்னியாக இருந்தாலும் கூட ஒருவனை முறையின்றிச் சேரலாகாது. அப்படி நடந்து கொண்டால், அவள் குலத்திலிருந்து விலக்கப்படுவது மட்டுமின்றி, அவளைச் சேருபவர்கள் எவரும் பணம் கொடுத்துப் பெறலாம். உடலின்பத்துக்கு விலை பெற்று என்றென்றுமாக வெட்கக் கேட்டுக்கும் அவமானத்துக்கும் உரியவளாக அவள் வாழ்வாள்”. கணவன்-மனைவி என்ற உறவில், ஆணின் ஆதிக்கத்தைப் பெண் பொறுத்துத்தானாக வேண்டும். இல்லையேல் சபிக்கப்படுவது உறுதி என்ற அவலத்தை விள்ளுகிறது இந்தப் புராண வரலாறு. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நியாயம் என்று அவர்களையே கருதச் செய்யுமளவுக்கு அவர்கள் மனங்களை மெழுகுபதத்தில் வளைத்து முடமாக்க எத்தனை புராண நீதிகள்?

மத்ஸ்ய புராணம் கூறும் வரலாறு இது.

ஒருமுறை பிரும்மா சிவனிடம் விலைமகளிருக்கான ஏதேனும் காரணமும் நெறிகளும் உள்ளனவா என்று வினவினாராம். சிவன் கூறிய வரலாறு கண்ணனையும் அவனைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கோபிகைகளையும் மையமாக்கியது. ஒருமுறை, வசந்த காலத்தில், குயில்கள் கூவும் மாந்தோப்பில், தாமரைக் குளத்தருகே கண்ணன் தன் மனைவியருடன் மதுவுண்டு ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தான். அப்போது, அந்தப்பக்கம் ‘சம்பா’ என்ற வலிய தோற்றமுடைய காட்டான் சென்று கொண்டிருந்தான். மனைவியரின் கவனம் அவன் மீது சென்றது.

கண்ணன் அது கண்டு வெகுண்டு, ‘நீங்கள் கொள்ளையரால் கற்பழிக்கப்படுவீர்கள்! பிறகு அடிமைகளாக உழல்வீர்கள்!’ என்று சபித்தான்.

மனம் வருந்திய அவர்கள், ‘கண்ணா! தவறு செய்து விட்டோம்! எங்களுக்கு விமோசனம் உண்டா’ என்று இறைஞ்சினார்கள். ‘தல்ப்ய ருஷியிடம் போய்க் கேளுங்கள்!’ என்றானாம் கண்ணன். கதைக்குள் கதையாக, அவர் இன்னொரு கதையை விடையாகக் கூறினாராம்.

மானஸா ஏரியில் ஸுதாஸனின் பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனராம். தற்செயலாக அங்கு நாரதர் வந்தாராம். பெண்கள் அவரை மரியாதையுடன் வணங்காமலே. ‘நாராயணனைக் கணவனாக அடைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்களாம். நாரதர் மனதில் கோபம் கொண்டாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், ‘இளவேனில் மாதங்களின் பிற்பகுதியில் உயர் வருணத்தோனுக்குப் பொற்கட்டில் தானம் செய்தால் நாராயணன் கணவனாக வாய்ப்பான்’ என்று கூறினாராம். ஆனால் உள்ளுற ‘விலைமகளிராவீர்’ என்று சபித்தாராம்.

இந்த இரண்டு வரலாறுகளும் ஒரே கருத்தை அடிப்படை யாக்குகின்றன.

கணவன் என்று உரிமை கொண்டவனுக்கு அவள் ஒரு கருவி;பொம்மை. அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இவளுக்கு உயிரும் உணர்வுகளும் தனியாக இருக்கலாகாது. மீறிவிட்டால், அதிகபட்சமான தண்டனை, அவள் உடலே பொதுச் சொத்தாவது தான்.

இப்படிச் சபிக்கப்பட்ட ஒரு குலம் இந்திய மரபில், ஆணாதிக்க சமுதாயத்தில் நியாயப்படுத்தப்பட்டு மீள முடியாத தளைகளுக்குட்படுத்தப்பட்டது. ஆணாதிக்கத்துடன் போர் தொடுத்த தாய்ச் சமுதாயத்தினர், தாசிகளாக்கப்பட்டனர். பண்டைய தமிழ்ச் சமுதாயம் கண்டிருந்த விறலியர், பாணர் மரபினர் இப்படி ஒரு நாகரிகத்துக்குள் நெறிப்படுத்தப்பட்டனர். 

தெய்வீகத்தைத் தொடர்பாக்கி, இந்த வாணிபம் வளர, ஆடல், பாடல், தத்துவ விளக்கங்கள் என்று அரிய கலைகள் மேல் வருணத்தாரால் வளர்க்கப்பட்டன. சபிக்கப்பட்ட குலம் தன்னைத்தான் தோற்றிக்கொள்ள இணைக்கப்பட்ட பட்டுக் குஞ்சலங்கள் பல.

இவள் நித்ய சுமங்கலி. இவள் இருப்பிடமே மங்களமானது. இறைவனுக்கு ஆடிப்பாடி, மங்கள ஆரத்தி எடுத்து ஊழியம் செய்வது போல், இவளை ஆதரிக்கும் பெருங்குடி மக்களுக்கும் இவள் இதே ஊழியங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில், ‘கல்லாகிய தெய்வம் இவளுக்குப் பொன்னும் பொருளும் தருமா? அப்படி இவளை ஆதரிப்பவர்கள் இவளுக்குத் தெய்வம் போன்றவர். அவர்கள் இல்லங்களில் இவள் எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் ‘நித்ய சுமங்கலி’யாக இருந்து வாழ்த்து வசனங்களைச் சொல்வாள். தன் உடல் பொதுச் சொத்து என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் அவர்கள் அந்த ஆண்கள் தங்கள் பொருள் ஆடம்பர அதிகாரங்களை அவள் மீது செலுத்தத் தலை வணங்கி உடன் படுவாள்.

இதுவே தாசியின் தருமமாக இருந்தது.

இவளுடைய ‘பொதுமகள்’ மரபு, உடைக்க முடியாத தெய்வீக ஆணை பெற்றது என்று பல நூற்றாண்டுக்காலம் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது. அமரகவி பாரதியின் காலத்தில் வாழ்ந்த எட்டயபுரம் அரண்மனைத் தேவதாசி, வள்ளிக் கண்ணம்மாளின் மகள் கூறினாள்-

முப்பத்தைந்து வயசுக்குப் பிறகு, பாரதி சொன்னார்களென்று, என் அம்மா ஈசுவரனுக்கு வரித்துக் கட்டிக் கொண்ட பொட்டுத் தாலியை அவிழ்ந்து விட்டுக் கல்யாணம் செய்து கொண்டார்...

'ஆனால் கடைசியில் சந்ததி வறுமையினால் கஷ்டப்படுவதைப் பார்த்துச் சங்கடப்பட்டார். நூறு வருசம் இதைப் பார்க்கவா வாழுகிறேன்-ஈசுவரனுக்குக் கட்டிக் கொண்ட தாலியை எடுத்துவிட்டு மனிதனுக்கு மனைவியானது பாவமோ’ என்று சங்கடப்பட்டார்.

தேவதாசிமுறை என்பது, கற்பியலைப்போல் பெண்களின் ஆளுமையில், ‘உன் உடலை ஒருவருக்கு உரிமையாக்குவதைவிட இது உயர்ந்தது; ‘இறைவனுக்கே நாயகி; இறை பணியே உன் பெருமை’ என்றெல்லாம் பதிக்கிறது. இறைவனுக்கு நாயகி நான். கடவுளைத் தொட்டுப் பூசை செய்யும் நீயும் என்னைப்போல் ஒருவன். நீயே கடவுளாக முடியுமா?’ என்று எந்த ஒரு தேவதாசிப் பெண்ணும் இரவில் அதே மலர்மாலையுடன் மஞ்சத்துக்கு வரும் பூசாரிப் பிராம்மணனையும் ஒதுக்கியதாக வரலாறே இல்லை. அவன்தான் முதல் உரிமைக்காரன். உயர்வருணம் குருசுவாமி ‘ஓ, இவன் உறவு கடவுள் உறவே போன்றது; கடவுளின் பிரதிநிதி’ என்று தேவதாசியானவள் உருவேற்றப் பட்டிருக்கிறாள்.

உயர் வருணம். அடுத்து, பொருளும் அதிகாரமுமாக ஆளும் வருக்கம். மன்னர்களுக்கு அவள் உரிமைப் பொருள் ஏனெனில் மன்னரின் ஆதரவில்தான் அவள் வாழ முடியும். பொருள்... அது ஒன்றே குறிக்கோள். ஓர் ஆடவனை மகிழ்விக்கக் கூடிய கலைகள் அனைத்தும் அவள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆடிப்பாடி அவன் மகிழ அனைத்து உபசாரங்களையும் செய்வாள். அதற்குகந்த அணிமணிகள், ஆடைகள் அனைத்தும் தொழிலுக்கு இன்றியமையாதவை. வாழ்வுக்கு உடலை முதலாக்கி, ஒரு வாணிபம் செய்யும் கட்டாயத்துக்குப் பெண்ணைத் தள்ளிவிட்ட ஓர் ஒழுங்கு தான் தேவதாசி முறை. ஆடற், பாடற் கலைகள், மேலாம் ஆன்மீக விடுதலையைக் குறிப்பாக்குவதாகும் என்றும் நாட்டிய சாத்திரத்தின் உள்ளார்ந்த தத்துவமும் அதுதான் என்று பக்கம் பக்கமாக விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றன. ஆனால், பெண்ணுடன் தொடர்பு படுத்தப்பட்ட இக்கலைகள், அந்த வகையில் தான் விளக்கப்படுகின்றனவா? நம் புராணக் கதைகள்-இந்திரனின் ஆதிக்கத்தில் இருந்த அரம்பை-ஊர்வசி-மேனகை ஆகியோர் ஆன்மீக விடுதலையைக் குறிப்பாக்கித் தம் கலையை மேன்மைப்படுத்திய விவரங்கள் இருக்கின்றனவா? அவர்கள் தவமுனிவர்களின் தவங்களைக் கலைக்கத்தானே பயன் படுத்தப்பட்டனர்?

ருக்வேதம்-முதல் மண்டலத்தில் (1-20-6) காணப்படும் பாடல் இந்திரன், வருணன் முதலிய தேவர்களைப் புகழ்ந்து பாடும் பாடல்களை யாத்தவர், தேவதாசியின் மகன் பருச்சேபன் என்ற குறிப்பு காணப்படுகிறது. சாதாரணமாக, தந்தைவழிப் பெயரே குறிப்பிடப்படும் வழக்கிலிருந்து இந்தக் குறிப்பு வேறுபட்டிருக்கிறது. அக்காலத்திலேயே, கடவுளருக்கு தாஸி என்ற பிரிவு ஏற்பட்டிருந்ததா-என்பது ஆய்வுக்குரியதாகும்.

அப்ஸரஸ்-கந்தருவர் என்று வேதப்பாடல்களில் காணப்படும் இனத்தினர் பற்றியும்- இயற்கையின் பல கூறுகளை உள்ளடக்கிய உருவாக்கங்களா -(ஸவிதாவின் மகள் சூரியா - சூரியக் கதிர் - ஸோமன் சந்திரன் - அசுவினி தேவர்-காலை-மாலைச் சந்திகள் -சூரியக்கதிர் சந்திரனில் படிவதே திருமணம்) என்பதை அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை. அப்ஸரஸ்-என்றால் நீரில் உலாவுபவர் என்ற பொருள் கிடைக்கிறது. மேகங்களை, வசந்த காலங்களைக் குறிக்கும் கற்பனையாக இருக்கலாம்.

ஆனால், வருண பேதங்கள் ஆழ்ந்து நீ பெரியவன் நான் பெரியவன் என்ற தகராறுகள் முற்றும் போது, உண்மைப் பிரதிபலிப்புகள் அறவே அழிந்து போகின்றன.

அப்படி அப்ஸரஸ்கள் தேவலோக மாதராகியிருக்கலாம். இந்திரனின் ஆளுகையில் பரத்தையராகியிருக்கலாம். அவனை மீறிப் புகழ்பெற, எந்த முனியேனும் மூச்சடக்கித் தவம் செய்தால், உடனே அவர் தவத்தைக் கலைத்து வர அப்பொது மகளுக்கு ஆணையிடப்படுகிறது. தவத்தைக் கலைக்க, ஆன்மீக ஏற்றத்தில் இருந்து கொக்கிப் பிடி போட்டு இழுக்க அவள் கலைத்திறன், உடல் இரண்டு பயன்படுத்தப்படும். உடலைக் கொடுத்தால் விளைவு பிள்ளைப் பேறுதான்.

ஆனால் தாயுரிமை உண்டா?

‘எனக்கிட்ட பணியை நிறைவேற்றி விட்டேன். இந்தாரும் குழந்தை’ என்று மகவைக் கையிலேந்தி அதைத் தேவேந்திரனிடம் சமர்ப்பிக்க முடியுமா? அதன் தந்தையிடமே நீட்டினாள் மேனகை

‘உன்னால்தான் தவம் போயிற்று! உன்னால் வந்த விளைவு! நீயே வைத்துக் கொள்’ என்று மறுத்துவிட்டுப் போகிறார் ‘பிராம்மண’ மதிப்புக்காகத் தவமியற்றிய அந்த க்ஷத்திரியர்.

இவளால் குழந்தையுடன் ஆண்டையிடம் போக முடியாது.

குழந்தை அநாதையாகிறது.

அன்றிலிருந்து இன்று வரையிலும் திருமண முத்திரையில்லத பெற்றோரின் வாரிசுகள் அநாதைகளே.

பெண் உடல் வாணிபத்துக்குத் தெய்வீக மதிப்பளித்த வருண சமுதாயம், அதை மையமாகக் கொண்டு எத்தனை மரபுகளை வளர்த்தன! அந்த வகையில் ஈசனுக்கு என்று பொட்டுக் கட்டிக் கொண்ட மரபினர், ஒருவனுக்கு ஒருத்தியாக இருக்கலாகாது என்பதும் ஒரு கண்டிப்பான விதியாக இருந்தது. இந்த வருக்கத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் உடல் வாணிபத்துக்கு வாரிசாகும். ஆண் மதிப்பற்றுப் போவான். தன் மதிப்பைத் தேடிக் கொள்ள அவன் அந்தக் குடும்ப நிழலை விட்டே செல்ல வேண்டும்.

பெண் கண் விழித்த நேரத்தில் இருந்து, ‘இந்த உடல் தான் உனக்குச் சொத்து; இதை வைத்துக் கொண்டு நீ மேலும் பொன்னும் பொருளும் போகமுமாக வாழ்வதே இலட்சியம்’ என்று அறிவுறுத்தப்படுவாள்.

தாயாகி, குடும்ப நிழலில் ஒருவனுக்கு மட்டுமாகப் பெண்டாக இருக்கும் உரிமையின்றி எத்தனை பெண்கள் புழுங்கிச் செத்திருப்பார்கள்? உடலை விற்பவள் பாவி என்று சொல்லிக் கொண்டே உயர் வருக்கம் அந்த உடலை உறிஞ்சி உயிர் குடித்தது கேட்கப்படவேயில்லை. ‘உங்களில் பாவம் செய்யாதவர் எவரோ அவரே இந்தப் பெண்ணின் மீது கல் எறியலாம்’ என்ற வாசகம், எவ்வளவு உண்மையானது? ஆனாலும் அந்த உண்மையை மறைத்துக் கொண்டு, உடலால் கெட்டவள் பாவி, பாவி என்று உலகம் இன்னும் கல்லெறிந்து கொண்டு தான் இருக்கிறது. புராண மரபுகள் பெண்ணின் விஷயத்தில் சிறிது கூட மங்காமல் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன. டாக்டர் முத்துலட்சுமி அம்மை, இந்த மரபுகளை அழிக்கப் படாதபாடுபட்டார். இவருக்கு உயர்கல்வி கற்பதும் ஓர் அறை கூவலாக இருந்தது. முதல் மருத்துவப் பட்டதாரி என்ற அறிவுப்படியில் வெற்றிக் கொடியுடன் அடிவைத்தார். மேல்நாடு சென்று மருத்துவக் கல்வியில் இன்னமும் விரிவு கண்டதுடன் சமூக இயலில் தன்னை முழுமையாக்கிக் கொண்டார். ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்’ எங்களுக்குரியதே என்று பாரதியின் வாக்கை நிரூபித்தார். அந்தக் காலத்தில் ‘தேசிய’த் தீவிரவாதி என்று பெயரும் புகழும் பெற்ற தலைவர்கள்தாம் பெண்களின் சமூக முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள் என்றால் வியப்பாக இல்லை?

ஆங்கில அரசு காட்டிய அக்கறையைக் கூட இந்தத் தேசியத் தலைவர்கள் எதிர்த்தார்கள். திலகர் தம் மகளுக்குச் சட்டத்துக்கு உட்பட்ட இளம் வயதில் திருமணம் செய்தார். ‘தேவதாசி ஒழிப்பு’ வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அந்நாள் சட்டசபையில் பல தேசியவாதிகள் - குறிப்பாகச் சத்தியமூர்த்தி, சீனிவாச சாஸ்திரி - ஆகியோர் கூச்சல் போட்டதாக, மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் தம் ‘தாசிகள் மோச வலை’ என்ற நாவலில் எழுதியுள்ளார். இது உண்மையே. இந்த ஆசிரியை, தன் நாவலின் வாயிலாக, ஆங்காங்கு பொட்டறுப்புச் சங்கங்களை ஏற்படுத்திப் பிரசாரம் செய்ததாகத் தகவல் தெரிகிறது. எதிர்ப்பு இல்லாமலிருக்குமா?

எட்டயபுரத்து வள்ளிக்கண்ணம்மாள், 1930களில் முத்துலட்சுமி அம்மையும், மூவலூர் அம்மையும் செயல்படு முன்பே, பாரதியார் அறிவுரையின்படி பொட்டறுத்துத் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் மரபுப் பிடிகள் பதித்த குற்ற உணர்வுகள் கடைசி வரையிலும் அப்பெருமாட்டியை விடவில்லை.

“உடலால் நீ ஒருமுறை கெடுக்கப்பட்டவள். உனக்கு ஒழுங்கான இல்லறத்துக்கு ஏது உரிமை?”

இந்த மரபு, இன்றும் சினிமாக் கதைகள்,தொலைக்காட்சித் தொடர்கள் வாயிலாக மிகவும் சக்தி வாய்ந்த சாதனங்களால் சமூகத்துக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஒரு முறை குலைத்து விடு. பிறது அவளுக்கு அதுவே வாழ்க்கையாகி விடும் என்பது தான் கொள்கை.

வறுமையை ஒழிக்க நீ உழைப்பானேன்? உடல் இருக்கிறதே? அது உனக்குச் சோறு மட்டுமா போடும்? ஆகா! நீயே பெருமாட்டி!

தன் குடும்பத்தை வாழவைக்க அவள் விடுதியில் உடல் வாணிபம் செய்தாள். ‘தன்னை விற்றுக் கட்டிய கணவரைக் காப்பாற்றிய பத்தினி’ - என்றெல்லாம் மறைமுகக் குத்தல்களை வழங்கும் நியாயங்கள் எத்தனை?

தேவதாசி முறை ஒழிந்து விட்டது. ஆனால் உடல் வாணிபத்தை எத்தனை பரிமாணங்களில் பெருக்கியிருக்கிறது, இந்த அறிவியல் வாணிப சமுதாயம்.

பெண்ணுக்கு வேலை வாய்ப்பு என்ற தூண்டிலில், அவளுடைய உடலைக் கண்ணாக்கித் தடவப்பட்ட ‘தேன்’ கவர்ச்சி என்ற மாயம்தான். புருவத்தை வளை; முகத்துக்குச் சாயமிடு; உறுப்புக்களின் கவர்ச்சியைக் காட்டும் உடைகளாகத் தேர்ந்தெடு; பொம்மைபோல் நில், குற்றேவல் செய்யும் போது, நெஞ்சம் கொள்ளை கொள்ள மோகனமாகச் சிரி; சிறு சிறு உரிமைகளை ஏற்றுப் பின்னும் தள்ளி மோக வெறியை ஏற்று, என்பதெல்லாம் ஆளுமைப் பயிற்சிக்கான பாடங்கள்.

இவன் உடல் அன்றாடம் சோப்புக்காகவும், சமையல் சாதனங்களுக்காகவும் பல பரிமாணங்களில் விலை பேசப்படுகிறது. அதே சமயத்தில் விளம்பர மாடலாக இருக்கக் கூடிய ஒரு பெண், ஓர் ஆணுக்கு வாழ்க்கைத் துணைவி என்ற உன்னதப் பதவிக்குக் கனவு காணவும் முடியாது.

விளம்பரப் பெண் அதிர்ஷ்டக் காரியாக இருந்தால் சினிமா நடிகை என்ற உச்ச கட்டத்தை அடையலாம். பணமும் பொருளும் சம்பாதிக்கலாம். இந்த ஒளி வட்டத்தின் மறுபக்க நிழலில், சுதந்திரமற்ற ஒரு இழிவு வளையத்தில் சிக்கி, மன உளைச்சலையும் நோவையும் ஏற்றாக வேண்டும். இத்தகைய அபாக்கிய வதிகளுக்கு, போலியான புகழாரமும், பளபளப்பு தான் சிறிதே கிடைக்கும் மன ஆறுதல். இந்த உச்ச கட்டத்துக்கும் ஏற முடியாமல் வெறும் துணை அல்லது குழு நடிகை என்று முகமறியாத அடித்தளத்தில் மாய்ந்து நோயுடன் மடியும் பெண்கள் எத்தனை பேர்?

உழைப்பாளிப் பெண்களுக்கு, அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்களை அமைத்திருக்கின்றன. ஆனால், இந்த

சட்டபூர்வமாக்கப்படாது, ஆனால் பல பரிமாணங்களில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்து, பொருளாதார அடிப்படையையே ஆட்டிப் படைக்கும் பெண்ணுடல் வாணிபத்தில் சீர்குலைக்கப்படும் அபாக்கிய வதிகளை, எந்தத் தொழிற்சங்கமும் கணக்காக்குவதில்லை.

இவர்கள் ஓசைப்படாமல் உருக்குலைக்கப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள் கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள் தங்கள் படைப்புத்திறனுக்காக, கலை ஆற்றலுக்காக, தேசிய அரசினால் கவுரவிக்கப்பட்டுப் புகழுக்கும் பதவிகளுக்கும் உரியவர்களாகிறார்கள்.

அந்நாள் மரியா மக்தலேனாவுக்கு இறையருள் கிடைத்தது. புத்தர் காலத்தில், உடலால் அழிந்த அபாக்கிய வதிகள் பிக்குணிகளாகக் கடைத்தேறும் உய்வு கிடைத்தது. ஆம்ரபாலி, ஆனந்தரால் ஆன்மீகப்படி ஏறினாள்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டை எட்டிப் பிடிக்கும் இந்த யுகத்தில், 'ஆன்மீகம்' என்று ஒன்றே சுயநல ஆதிக்கங்களால் விழுங்கப்பட்டு விட்டன. கணவனும் மனைவியுமாக வெளியே சென்று திரும்புகையில் மனைவி முரடர்களால் குலைக்கப்படுகிறாள். அது அவள் குற்ற மாகிறது; பதிதையாகிறாள்; கணவனால் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.

அரசியல் அடிதடிகளோ, சமயக்கலவரங்களோ எது நிகழ்ந்தாலும் பெண்ணின், மீதுதான் அது விடிகிறது. கற்பழிப்புக் குற்றத்துக்கான சட்டங்களில், இவளுக்கு நியாயம் என்பது குதிரைக்கொம்பாக இருப்பதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கற்பு, கற்பின்மை என்ற விவகாரத்தில், பெண் இன்னமும் தெளிவில்லாத நியதிகளிலேயே தன்னைப் பறி கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதே உண்மை.