இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/சீதையின் கதை
ருக்வேதம் நான்காம் மண்டலத்தில் (IV-5-12) ஸீதா என்ற தேவதை துதிக்கப்படுகிறாள். மக்கள் நிலத்தை உழுது பண்படுத்தி, தானியம் விளைவித்து உண்டு வாழும் நாகரிகம் சமுதாயத்தில் வந்துவிட்டதை இப்பாடல்கள் பிரதி பலிக்கின்றன.
இங்கே ஸீதை என்ற சொல்லுக்கு, கலப்பை என்ற பொருள் கொள்ளலாம்.“மங்களமான ஸீதையே! உன்னைப் போற்றுகிறோம்! இந்திரன் ஸீதையைக் கொள்ளட்டும்! பூஷான் வழிநடத்திச் செல்லட்டும்!... உழுமுனைகள் நிலத்தில் பதிந்து கிளர்த்தட்டும்! வானம் மழை பொழியட்டும்!” என்றெல்லாம் அருள் வேண்டப்படுகிறது.
இராமாயண இதிகாசம், இந்த நாகரிக மேம்பாட்டை அடிப்படையாக்கி, சீதையை நாயகியாக்கிப் புதிய மானிட தருமங்களை நிலைநிறுத்துகின்றது. இந்தத் தருமம், நிலவுடைமைச் சமுதாயத்தின் ஆணாதிக்க நீதியாகி பெண்ணின் அடிப்படை மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றது.
சீதையும் நிச்சயமாக ஒரு தாயின் வயிற்றில்தான் உதித்திருக்க வேண்டும். பூமியில் கிடைத்தாள் என்றால், பூமி நஞ்சுக் கொடியும் நிணமும் குருதியுமாக மகவை பிரசவித்ததா? எனவே அறிவுக்குப் பொருந்தும் வகையில் பார்க்க வேண்டியிருக்கிறது, குந்தியைப்போல் கன்னி கழியுமுன் கருப்பமாகி, சமுதாய நிர்ப்பந்தத்தின் காரணமாக கானகத்தில் கிடத்திவிடும் தாய் ஒருத்தியின் மகளா?
உயர் வருக்கத்து ஆண், கானகத்தில் வாழ்ந்த திருந்தா மக்களிடையே பிறந்த ஒத்தியுடன் கூடி, பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பயனாகப் பூமிக்கு மகளானாளா?
எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உலகில் முதன்முதலில் கற்பிற்கணிகலமாகக் கருதப்பட்டவளும், நிலவுடைமைச் சமுதாயத்தின் இலட்சிய நாயகியாக விளங்கியவளும், தீச்சோதனையில் குளித்தெழுந்தவளுமான பொற்புடைச் செல்வியின் பாரம்பரியம் மொட்டையாகவே விடப்பட்டிருக்கிறது.
ரேணுகையைப் போல் தாயாண்குடிப் பாரம்பரியம் இவளுக்கும் கொடுக்கப்படவில்லை. திரெளபதையைப் போல் தந்தையின் மகளாக, சானகியாக ஆகிறாள். குந்தி கைவிட்ட கர்ணன் 'ராதேயன்’ என்று வளர்ப்புத் தாயின் பெயரைக் கொண்டதுபோல் இவர்கள் தாய்ப்பெயரை ஏற்றிருக்கவில்லை. சனகனின் மகள் சானகி-மிதிலை நகர் அதிபனின் மகள் மைதிலி-விதேக நாட்டு மன்னன் மகள் வைதேகி என்ற பெயரையே பெற்றுத் திகழ்ந்தாள்.
வில் அம்பு கொண்டு வேட்டையாடி வாழ்ந்த நிலையைப் பின்தள்ளி, காடுகளை அழித்து, விளைநிலமாக்கும் வேள்விகள் செய்யப்படுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்ப்பவர்கள், இந்த நாகரிகத்தை ஏற்கமுடியாத அரக்கர்கள். பண்படாத மரபினர்; நரமாமிசம் கொள்ளும் மரபிலிருந்து முன்னேறாதவர்கள். இவர்கள் தாயாண் குடி மரபினர் என்றும் கொள்ளலாம்.
பெண் தன் கூடல் விருப்பத்தை ஆணிடம் கோரினால், அதை நிறைவேற்றுவது அவன் கடமையாக இருந்தது. அவளுடைய விருப்பமும் இணக்கமும் இன்றி ஆண் அவளைத் தொடமாட்டான் என்ற நிலை இராமாயணத்தில் போராட்டமாகிறது.
சூர்ப்பனகை அரக்கர் குலத்தினள். இராம லட்சுமணர்களால் அவமானம் செய்யப்படுகிறாள். ஆனால் இராவணன் சீதையைப் பலவந்தமாகச் சேரத் துணியவில்லை.
சீதையின் நிமித்தமாக, பண்டைய வேட்டையாடி வாழும் வாழ்வின் சின்னமான வில்லே இராமனால் ஒடிக்கப் பெறுகிறது. சீதைக்கு, நிலவுடைமைச் சமுதாயத்துக்கு இன்றியமையாத கற்பொழுக்கம் வலியுறுத்தப்படுகிறது.
இராமகதையின் முக்கியத்துவமே, பெண்ணுக்குக் கற்பு என்றதோர் அணிகலத்தை நெறியாக்குவதில் மையம் கொண்டிருக்கிறது. பளிங்கு போன்ற கண்ணாடித் துண்டை மெழுகுபோல் அனலில் காட்டி, வளைப்பதுபோல், பெண்ணை ஆண் நாயகச் சமுதாயத்துக்கு உகந்தவளாக்கும் நெறியாக, ‘கற்பியல்’ முழுமையாக்கப்படுகிறது.
இராமாயணம் பிறந்த வரலாற்றைச் சிறிது கூர்ந்து நோக்கலாம். வால்மீகி முனிவர், கங்கையில் நீராடுவதற்காக, நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னே இரு அழகிய ‘க்ரௌஞ்ச’ (நாரை இனம்) பறவைகள் ஆணும் பெண்ணுமாக உலகின் தலையாய இன்பத்தில் மயங்கி இருந்தன. அப்போது ஒரு வேடன் அம்பெய்து, ஆண் பட்சியைக் கொன்று விட்டான். பெண் பறவை பரிதாபத்துக்குரிய குரலில் துடிதுடித்து வீழ்ந்த காட்சியே கவி இதயத்தில் பதிந்து பாதிப்புக்குள்ளாக்கியது. இந்த மாபெரும் காவியத்தை இயற்ற, உள்ளார்ந்த கிளர்ச்சி பொங்கி வர அதுவே காரணமாயிற்று.
காதல் என்ற உன்னதமான ஆண்-பெண் தொடர்பு, வெறும் உடல்பரமானதல்ல. கூடல் தலையாய இன்பம் என்றால், பிரிதல் உலகத்துச் சோகங்களனைத்தையும் உள்ளடக்கியதாகும் என்று கூறப்படுகிறது. ஆண் பறவை வீழ்ந்ததும், பெண் வேறு துணை நாடியோ, விடுபட்ட நிலையிலோ பறந்து செல்லவில்லை.
இராமன்-சீதை பந்தம், முன் எப்போதும் சமுதாயத்தில் இருந்திருராத வகையில் ஆண்-பெண் தொடர்பாக வரையறுக்கப்படுகிறது. கற்பென்னும் நெறிக்கு இதுவே அடி நிலையாகிறது.
சீதை புதிய யுகத்து நாயகி.
இராமர், இராமருடன் சேர்ந்தவர்கள், முனிவர்கள் ஆகியோர் உயர்ந்த மனிதர்களாகவும், இராவணனுடன் சேர்ந்தவர்கள் அரக்கர்களாகவும் காட்டப்படுகிறார்கள். புராண காவியங்களில் இவர்களுக்குப் பயங்கர உருவங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
அக்காலத்தில், ஷத்திரியரும், பிராம்மணரும் மாமிசம் புசிக்காதவர்களல்ல; மதுவருந்தாதவர்களல்ல. ஏன்? வரலாற்றுத் துவக்கக் காலத்தில், அகத்திய முனிவர். ‘வாதாபி’ என்ற அரக்கனைப் புசித்துச் சீரணம் செய்த வரலாறும் நரமாமிசம் விலக்கல்ல என்பதையே காட்டுகிறது. சமணசமயம் தலைதூக்கிய காலத்தில்தான் துறவும், புலாலுண்ணாமையும் இந்திய சமுதாயத்தில் இசைந்தன எனலாம்.
இராமயணத்து மனிதர்கள், நரமாமிசம் புசிப்பதிலிருந்து விடுபட்ட நாகரிகம் கொண்டவர்கள் எனலாம்.
கானகத்தில் சீதையைத் தேடி வருந்திய ராமனின் நிலை பற்றி, அனுமன் அசோகவனத்துச் சீதையிடம் தெரிவிக்கும் போது,
‘ந மாம்ஸம் ராகவோ புங்க்தே, நசாபி மது ஸே வதே!’ என்று கூறுகிறான். இராமன் மது, மாமிசம் இரண்டையும் தவிர்த்து விட்டான் என்பதே இதற்குப் பொருள்.
ஆனால் மதுவும் மாமிசமும் அறவாழ்வுக்கு உகந்ததல்ல என்ற கோட்பாடு வந்துவிட்ட காலத்தில், இராமரை, மாமிசம் உண்பவராகவோ, மது அருந்துபவராகவோ காட்டலாகாதல்லவா?
‘மாம்சம் என்றால் மாம்பழத்தின் கதுப்பு: மது என்றால் தேன்; இவ்விரண்டையும் எம்பெருமான் தவிர்க்கிறார்’ என்று புராண உரையாசிரியர்கள் பொருள் கூறுவதாக, காவ்ய இராமாயணம் என்ற நூலின் ஆசிரியர் திரு.கே.எஸ். ஸ்ரீனிவாசன் விளக்குவது இங்குக் கருதத்தக்கது.
இதிகாச புராணங்கள், இலக்கியங்கள் எல்லாமே இயற்கை நியதிகளையும், மானிட இயல்புகளையும், உலக உண்மைகளையும் ஆதாரமாகக் கொண்டே உருவாயின என்பதுதான் மெய். என்றாலும் உண்மையான மனிதகுல வரலாறுதான் கற்பனைகளுக்கும் கற்பிதங்களுக்கும் உடலும் உயிரும் அளிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
கைகேயி, தாயாண் சமுதாயத்திலிருந்து தயரதனால் கொண்டு வரப்பட்டவள். கைகேயி அறிவிற் சிறந்தவள். தயரதன் மேற் கொண்ட சம்பராசுரன் போரில், முன் நின்று தேரோட்டி அவனை வெற்றி பெறச் செய்கிறாள். தயரதனின் உளம் கவர்ந்த நாயகியாகிறாள். எனவே, தன் மகனுக்குத் தான் பட்டம் என்ற உரிமையை வைத்திருக்கிறாள். இது தசரதனுக்கும் உறுத்துகிறது. எனவே தான் கைகேயியின் மைந்தனைத் தாய் மாமன் வீட்டுக்கு அனுப்பி விட்டு உடனே மனைவியரைக் கூடக் கலந்தாலோசிக்காமல் இராமனுக்கு இராச்சியாபிடேகம் செய்ய முனைகிறான் தசரதன்.
கைகேயி, தன் உரிமையைக் கோரும் போது, தசரதன் பரிதாபத்துக்குரிய நியாயவானாகவும் கைகேயி மிகக் கொடியவளாகவும் உருவகப்படுத்தப்படுகின்றனர். உண்மையில் இது ‘மாத்ரு வாக்கிய பரிபாலன’மாகவே இருந்தாலும் இராமன் ‘பித்ரு வாக்கிய பரிபாலனம்’ செய்யவே காட்டுக்குச் செல்வதாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது.
பதினாறு வயது நிரம்பப் பெறாத ராமனுக்கு, சின்னஞ் சிறுமியான விளையாட்டுப் பருவச் சீதை மனவாட்டியாகிறாள். வில் அதற்கு ஒரு சாக்காகிறது.
இந்தப் பெண்ணுக்கு, தந்தையாதிக்கத்தின் விளைவான பெற்றவர் பாசம், பழகிய இடத்திலிருந்து பெயர்த்தெடுத்தல் என்ற துன்பம் இயற்கையானதாக இல்லை. கணவன் கிடைத்த பிறகு, ‘அவனே சகலமும்’ என்று ஐக்கியமாகி விடுகிறாள்.
இராமன் கானகம் புகும் நிலை வந்ததும், கானகக் கொடுமைகளை அவளிடம் பலவாறாக எடுத்துச் சொன்ன போதிலும், அவள் அவனுடன் செல்வதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கணவனே தனக்கு இனி எல்லாம் என்ற நெறி அவ்வளவுக்கு அவளுள் ஊறிவிட்டது.
‘என்னை உடனழைத்துச் செல்லத் துணிவில்லாமல் நீர் மட்டும் வனத்துக்கு ஏகினால், தந்தை ஜனகர் என்ன நினைப்பார்?’ என்று கேட்கிறாள். ‘மனைவியைப் பிறரிடம் ஒப்படைந்து விட்டுச் செல்லும் கூத்தாடியைப் போன்றவனென்று மருமகனை நினைத்து விட மாட்டாரா?’ என்று அவளே சொல்கிறாள். இராமர் இருக்குமிடம் கானகமானாலும், அதுவே அயோத்தியாம் அவளுக்கு...
இந்த வசனம், இன்றும் உயிருடன் தெய்வீக வசனமாக வாழ்கிறது. இந்தக் கற்புநெறி உபதேசம் இன்னமும் அழுத்தமாக, கானகத்தில் அத்ரி முனிவரின் மனைவி அநுசுயையினால் வயதில் இளைய சீதைக்கு அறிவுறுத்தப்படுகிறது. கற்பரசிகளின் புராணங்களில் நிலையாக வாழும் முனிபத்தினி அநுசுயை மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியவள் வானத்துச் சூரியனுக்கும் ஆணையிடும் ஆற்றல் படைத்த மாதரசி அவள். இளையவளான சீதையை, ‘கானகம் வந்து விட்டாய், தர்மத்தை உணர்ந்து விட்டாய். எப்போதும், அந்தக் கணவரைக் கை விடாமல் இரு!’ என்று வாழ்த்துகிறாளாம். அப்போது சீதை, மிகுந்த உற்சாகத்துடன் தன் திருமண வரலாற்றை அந்த மூதாட்டியிடம் சொல்கிறாளாம். முக்கியமான செய்தி யாது?
உழுநிலத்தில் அவளைக் கண்டெடுத்த சனகர், மகளாக வளர்த்தார். அரசிளாங் குமரியாகவே வளர்க்கப்பட்டாலும், ஒரு தாயின் வயிற்றில் பிறந்த விவரங்கள் தெரியாமல் இருக்கையில், அவளுக்குத் தக்கதொரு கணவரை எப்படித் தேடித் தேர்ந்தெடுப்பார்?
பின்னரே வில்லை வளைத்து நாணேற்றுபவருக்கு அவள் மாலையிடுவாள் என்று முடிவு செய்தார்...
‘தாய் தகப்பன் தெரியாத பெண்ணை எவன் கட்டுவான்?’...இந்த நியதி இன்றும் நிலைத்திருக்கிறது.
பதினான்காண்டுகள் காடுகளில் அலைந்து திரிந்த வாழ்க்கை, ஒரு சகாப்தத்துக்கும் அடுத்த சகாப்தத்துக்குமான இடைநிலையை விள்ளுகிறது எனலாம். இராமன் மானின் பின் சென்ற போது, காவலிலிருந்த இலக்குவனைச் சீதை சந்தேகிக்கிறாள். இராமனின் அபயக் குரல் கேட்டும் அகலாத அவன் உள்ளக் கிடக்கையின் மீது ஐயங் கொண்டு பழிச் சொல்லை வீசுகிறாள்.
இது, தமையன் மனைவியின் மீது உரிமை கொண்டாடும் ஒரு சமூக நிலையைக் குறிக்கிறதென்று ராகுல் ஸாங்க்ருத்யாயன் தம், மானவ சமாஜ் நூலில் தெளிவாக்குகிறார்.
இத்தகைய சீதை, இராவணனின் எல்லைக்குள் அசோக வனத்தில் சிறை இருக்கும் நாட்களில், இராமன் வருவான், தன்னை மீட்டுச் செல்வான் என்று உயிரை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள்.
அவளைச் சுற்றிய அரக்கியர்...
‘எங்கள் அரசனுக்கு உகந்தவளாகி விடு... இல்லையேல் உன்னைப் புசித்து விடுவது எங்களுக்குப் பெரிதல்ல’ என்ற அச்சுறுத்தலில் அவர்கள் தன்மை கொடூரமாக்கப்படுகிறது. இராவணன் அவளைப் பலவந்தம் செய்யாமலே அச்சுறுத்திப் பணிய வைக்க முயலுகிறான். மெல்லியளான சீதை, ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டு, அதற்குச் சமமாக அவனை மதித்துப் பேசுவதாக விவரிக்கப்படுகிறது.
இது சோக சிகரம்தான்.
இத்தகைய நாயகியை இராமன் சந்தேகப்பட்டானே?
அப்போதைய சீதையின் மனோ நிலையாது? அது சோக சிகரமில்லையா? அக்கினியில் புகுந்து தன் தூய்மையை நிரூபித்த பின்னரும், குடிமக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்று, பூரண கருப்பிணியான மனைவியைக் கானகத்துக்கு அனுப்பித் தன் அரச குல நியாயத்தை நிலை நாட்டிக் கொள்கிறானே, அது சோகத்தின் நெடு முடியல்லவோ?
இன்னும், அவன் உருவாகவே இரண்டு பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டு உணர்ந்த பின்னரும், முனிவர், அவர்கள் சீதையின் புதல்வர்கள், அவள் உத்தமி என்று நற்சான்று அளித்த பின்னரும், அந்த ஆண் ஆதிக்கம் கனிந்து கொடுக்கவில்லை...
அவள் எப்படி இன்னும் தன் உள்ளத்தை நிரூபிப்பாள்?
பூமி பிளந்தது; அவள் தாயின் மடியில் ஐக்கியமானாள்.
ஆணாதிக்கம் பெண்ணுக்குப் பூட்டிய விலக்க முடியாத தளையாக இன்றும் இந்த நெறி இறுக்கிக் கொண்டிருக்கிறது.
சொந்த மண்ணிலிருந்து பெயர்த்து எடுத்து வந்து அறிவு வெளிச்சமும் சுதந்தரக் காற்றும் புகாத சூனியத்தால் அவள் உழைப்பையும் பிள்ளை பெறும் புனித ஆற்றலையும் கொச்சைப்படுத்தி ஆளும் ஆணாதிக்க வரலாறுதான் இந்தியப் பெண்ணின் சமூக வரலாறு. இராமாயணத்தில் பூரணமான கற்புநெறி, புளுகுப் புராணங்களில், எத்தனை நூற்றாண்டுகள் தேய்ந்த போதிலும், புதிய வடிவங்களில் அவளை மட்டும் பிணிக்கும் நெறியாக வலிமை பெற்றிருக்கிறது. தாயாகி நின்ற பெண், வெறும் உடைமைப் பொருளாக, களங்கத்தைக் குத்தி வீசியெறியப்படும் நிலைக்கு இழிந்து போனாள்.
இந்த இரண்டாம் நிலை நிராகரிப்பு, கருப்பிணியாகச் சீதை நடுக்காட்டில் விடப்படும் கொடுமை, அரசு, ஏகாதி பத்தியம் என்ற விரிந்த நிலையில் குன்றேறி நின்ற தந்தை நாயகத்தின் உச்சகட்டத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த நிராகரிப்பு, எந்த வருக்கத்தினராலும் நியாயப் படுத்தப்பட்டிருக்கவில்லை.
இராம கதை உண்மையில் வரலாற்று நிகழ்ச்சியா, கற்பனையா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், நடைபெற்ற சில கூறுகள் இதற்கு ஆதாரங்களாக உதவியிருக்கலாம்.
இந்த மூல இராமாயணக் கதையைப் பின்பற்றி, பல மொழிகளில், பல பிரதேசங்களில் காலந்தோறும் இராம கதைகள் புனையப் பெற்றிருக்கின்றன.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், கம்பர் தமிழில் இக்கதையைத் தென் தமிழ்நாட்டுக்கே உரித்தாக்கியுள்ளார்.
சீதை இங்கு அறியாச் சிறுமியல்லள், மங்கைப் பருவமடைந்து அவன் வடிவிலே தன்னைப் பறிகொடுக்கும் நிலையிலிருக்கிறாள். பெண்ணின் சமுதாய நிலை, இவ்வாறு பல பாத்திரங்களில் பிரதிபலிக்கக் காணலாம். குறிப்பாக, அகலிகை வரலாற்றை எடுத்துக் காட்டாகப் பார்க்கலாம். மூலக்கதையில், இராமலட்சுமணர்களை, கோசிக முனிவர் வேள்வி முடித்து மிதிலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அகலிகை வரலாறு கூறப்படுகிறது.
வழியில் கோதமர் ஆசிரமம் இருக்கிறது. அங்கு பிறர் கண்களில் படாமல் தூய தவ வாழ்வு வாழ்ந்து, முன்பு செய்த தவறுக்குப் பரிகாரம் தேடும் அகலிகையைப் பற்றி அவர்களுக்கு முனிவர் கூறுகிறார். அப்போது குடிலிலிருந்து அகலிகை வெளிப்பட்டு, இராமனையும் முனிவரையும் வணங்குகிறாள். அவளுடைய மேனி, கடும் விரதங்களினால் மெலிந்து சுருங்கி, ‘அந்தப் பேரழகி அகலிகையா, இவள்?’ என்று சொல்லும்படி மாறி இருக்கிறது.
இவர்களைக் கண்டதனால், பாவமாகிய மாசுகள் நீங்க, அவள் கண்ணிர் மல்கத் துதிக்கையில், அவளைக் கைவிட்டிருந்த கணவர் கோதம முனி அங்கே வருகிறார். இருவரும் தம்பதியாகத் திரும்பினர் என்பது மூலக்கதை. பின்னர், பத்மபுராணத்தில், அகலிகை தவறிழைத்ததினால் கல்லாகும்படி கணவராகிய கோதம முனியினால் சபிக்கப் பெறுகிறாள். ஆண்டாண்டுக்காலம் கல்லாகிக் கிடந்த அவள், இராமனின் பாததுளி பட்டதும் மீண்டும் பெண்ணாகிறாள் என்று மாற்றப்படுகிறது.
இதை ஒட்டியே, கம்பரும் தையலைக் கல்லாக்கி விடுகிறார். இந்தக் ‘கல்’ மகத்துவம், இராமனின் கால் மகத்துவமாகி எத்தனை எத்தனை கற்பனைகளுக்கும் விளக்கங்களுக்கும் இடம் கொடுத்திருக்கின்றன? இன்றும் திருமண வைபவங்களில் அம்மி மிதிக்கும் சடங்கில், ‘பெண்ணே! நீ மனதிலும் துரோகம் இழைக்கலாகாது! அப்படிச் செய்தால், அகலிகையின் கதிதான்! நீ கல்லாவாய்!’என்று சூக்குமமாக உணர்த்தப்படுகிறது.
‘கற்பு நெறி காத்தால் இறந்தபின் வானத்து ‘அருந்ததி’ போல் தாரகையாகச் சுடர் விடுவாய்!’ என்றும் உணர்த்தப் படுகிறது. காவிய நாயகன் மீது எந்த ஒரு கரும்புள்ளியும் விழலாகாது. எனவே, கம்பர், இராமபட்டாபிஷேகத்துடன் கதையை முடித்து விட்டார்.
ஆனால், இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், நவீன மின்னணு இயல் சாதன வடிவில் இராமாயணம் உயிர் பெற்ற நிலையில், சீதை, பூரண கருப்பிணியாக, இராமனிடம் தானே அவன் நிராகரிப்பை வேண்டி விழைந்து மன்றாடிப் பெற்றாள். இராமன் அது தாளாமல் தானே ஒடுங்கிப் போனதாகச் சித்திரிக்கப் பெற்றது.
இந்தக் காவிய நாயகனின் மீது எந்த ஓர் ஆணாதிக்கப் பழி நிழலும் விழக்கூடாது என்று, சீதை தானே வலிய வந்து காட்டுக்குப் போனதாகத் தட்டை மாற்றிப் போட்ட விந்தையை என்னவென்று சொல்ல? இது... இன்றைய ஆணாதிக்கம் காட்டும் மாயமல்லாமல் வேறென்ன?