உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/ஐவரின் தேவி

விக்கிமூலம் இலிருந்து
4.ஐவரின் தேவி


திராவிட மக்களின் வெற்றித் தெய்வமாகக் ‘கொற்றவை’ என்னும் தாய்த் தெய்வம் கொண்டாடப் பெற்றிருக்கிறாள்.

இவளை, முருகனுடைய தாய் என்று திருமுருகாற்றுப் படை-(258) (வெல் போர் கொற்றவைச் சிறுவ!) குறிக்கிறது. இவளுடைய வழிபாட்டைச் சித்திரிக்கும் நூற்பகுதிகளில் இருந்து, இவள் வழிபாடு வெறியாட்டுடன் நடைபெற்றதென்று அறிகிறோம்.

நெடுநல்வாடையில், போருக்குத் தலைவனைச் செலவு விடுத்த தலைவியின் தோழியர், தலைவன் வெற்றியுடன் மீள வேண்டும் என்று வெற்றித் தெய்வத்தை வணங்குகிறார்கள். வணக்கத்தைப் பெறும் அவ்வெற்றித் தெய்வம் கொற்றவையே. கொற்றவைக்குப் பலி கொடுத்து வாழ்த்துதலைக் கொற்றவை நிலை-(தொல்-பொருள்-26) என்று தொல்காப்பியம் குறிக்கிறது.

இதோபோல் கொற்றவை வழிபாடு, பதிற்றுப்பத்து 79ம் பாடலிலும் குறுந்தொகை 218ம் பாடலிலும் காணப்பெறுகிறது.

இந்தக் கொற்றவைத் தெய்வத்துக்கு நாயகன் குறிக்கப் பெற்றிருக்கவில்லை. எவ்வாறு, ருக்வேதம் கூறும் துவக்க கால சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் “அதிதி”யாம் தாய்க்கு நாயகர் வரையறுக்கப்படவில்லையோ, அவ்வாறே, இங்கு கொற்றவை தனித் தெய்வமாகவே விளங்குகிறாள்.

அதிதி, எல்லையற்ற கருணையும் அருளும், வண்மைகளும் உரிய தெய்வமாக வழிபடப் பெறுகிறாள். கொற்றவையோ, நேர்மாறாக, போரில் வெற்றி காண்பதற்காக, வெறியாட்டம், குருதிப்பலி என்ற பயங்கரங்களுடன் வழிபடப்பெறுகிறாள்.

எனவே கொற்றவை, தாய்ச் சமுதாயம் வீழ்த்தப்பட்ட காலத்தில் எழுச்சி பெற்ற மக்கள் தெய்வம் என்று கொள்ளலாம்.

தந்தை நாயகம், அதிதியைக் கச்யபரின் மனைவியாக்குகிறது. இங்கும் முருகனின் தாயாகிய கொற்றவை, சிவனின் மனைவியாக, உமா, காளி, மாதங்கி என்றெல்லாம் அறியப்படுகிறாள்.

சங்க இலக்கியத்தில், ‘மாதங்கி’ என்ற மரபினர் பற்றிய குறிப்பு வருகிறது.

விறலியர் எனப்படும் மக்கள், இசை, கூத்து ஆகிய மனங்கவர் கலைகளில் சிறந்த நாடோடிகளாவர். இவர்களை பாண்மகள், மாதங்கி என்றும் வழங்கக் காண்கிறோம்.

சிலப்பதிகாரத்தில், இந்திர விழாவை விவரிக்கும் பகுதியில் காணப்படும் கண்ணுளாளர் என்பார், மாதங்கர், பாணர், கூத்தர் என்றே அடியார்க்கு நல்லார் உரையில் விவரிக்கப்படுகிறார்.

இந்த நாடோடி மக்கள், அரசரைப் புகழ்ந்தும் வாழ்த்தியும் பல பிரதேசங்களிலும் திரிந்தனர். இவர்கள் மக்கள் கலைஞராக விளங்கியதுமன்றி நிமித்தங்கள் கணித்துச் சொல்லும் சோதிடராகவும் விளங்கினர். ஆண் நாயகத்துக்கு கட்டுப்பட்டிராத இந்தச் சமுதாயத்தினர் (ஆண் - பெண் உட்பட) கூத்தர்-விறலியர் குழுக்களாகத் திரிந்தனர் என்றும் கொள்ளலாம்.

செளதத்திக் குன்றில், ‘எல்லம்மை’க்கே தாசிகள் என்று தங்களை விளக்கிக் கொண்ட பெண்கள், தந்தையாதிக்கச் சமுதாயத்தினரால், ஒட்டு மொத்தமாகப் பரத்தையராக ஒடுக்கப்பட்டனர் என்பதே வரலாறு. பெண் தெய்வத்துக்குத் தாசியா?

‘ஆண்களுக்கு, ஆண் தெய்வங்களுக்குத் தாசியாகுங்கள்’ - என்று வீழ்த்தப்பட்டனர்.

அரசவைகளில் இன்றியமையாத பொறுப்பேற்றிருந்த பாணர்-பாண்மகள் தேவதாசியாக மறுபிறப்பெடுத்தாள்.

மேல் வருணத்தினரால் ஒடுக்கப்பட்டும் வீழ்த்தப்பட்டும் குலைக்கப்பட்ட சக்திகள், சிதறுண்ட மக்களின் சிறு தெய்வங்களாக உருப்பெற்றன. அதே மேல் வருக்கத்தினர், அச்சம் மேலிட வழிபடக்கூடிய சடங்குகளில், அச்சக்திகள் காலத்தை வென்று ‘வாழ்ந்து' வருகின்றன.

தாயாண் மரபு ஒடுக்கப்பட்டு தந்தையாதிக்கம் மேல் நிலையாக்கமாக நாடு முழுதும் ஒப்புக் கொள்ளப்பட்டது. கூர்ந்து நோக்கினால் இதற்கு ஒரு முக்கிய காரணம் புலப்படுகிறது.

ஆதிமரபில், மானுடம் பண்படையாத சில கூறுகள் தெரிய வருகின்றன. முக்கியமாக, நரமாமிசம் கொள்ளல், குருதிப்பலி ஆகிய வழக்கங்களைக் குறிப்பிடலாம்.

‘பேய் மகளிர்’ என்பவர்களைப் பற்றிய விவரங்களைச் சங்க இலக்கியங்களில் பார்க்கும்போது, நரமாமிசம் புசிக்கும் ஒரு கூட்டத்தார் சமுதாயத்தில் வாழ்ந்திருந்ததை ஊகிக்கத் தோன்றுகிறது.

இறந்து போன போர் வீரரின் புலாலை, போர்க் களத்தில் வந்து இந்தப் பேய் மகளிர் உண்ணுகிறார்கள். இந்தக் கூட்டத்தினரைப் பெண்களாகவே குறிப்பிடுவதும், இவர்கள் பிணங்களைத் தின்று கூத்தாடும் விவரங்களை விரிப்பதும், அச்சம், அருவருப்பு இரண்டையும் ஊட்டுவதாக இருக்கின்றன. பேய் மகளிர் பிணக்குவியலைச் சூழ்ந்து நிற்பர்... (புறநானூறு-359:1-8) என்று வருணிக்கப்படுகிறது.

போர்க்களத்தில் பிதுங்கிய கண்ணையுடைய கோட்டான்கள் குழறும் குரலாகிய தாள-இசைக்கு ஏற்ப, கொடிய கண்கள் உடைய பேய் மகள் ஆடுவாள் என்று பதிற்றுப் பத்து விவரிக்கிறது.

இது போன்ற விவரங்களும், கொற்றவை வழிபாட்டு வெறியாட்டங்களும் தாயாண் சமுதாயத்துக்கும் தந்தையாதிக்கச் சமுதாயத்துக்குமிடையே தோன்றிய போராட்டங்களையும் முரண்பாடுகளையும் குறிப்பவை யாகவே ஊகிக்கலாம்.

உயிர்ப்பலி-நரமாமிசம்-கொடுக்கும் வழக்கம் ருக்வேதப் பாடல்களிலும் காணப்படுகிறது.

சுனச்சேபன் அஜிகர்த்தன் என்ற ருஷியின் புதல்வன். இவனை, நரபலிக்காக, தந்தை விற்றுவிடுகிறார். ஏனைய மக்களைக் காப்பாற்ற முடியாத வறுமை, ஒரு சில பசுக்களைப் பெற்று, இரண்டாவது மகனான கனச்சேபனை விற்றுவிடச் செய்கிறது.

இராமாயணத்திலும் ஐதரேயப் பிராம்மணத்திலும் காணப்படும் இவ்வரலாறு, அரிச்சந்திர மாமன்னனையும் இதில் தொடர்புபடுத்துகிறது.

அரிச்சந்திரன், தனக்குப் பிள்ளை இல்லை என்ற குறை தீர்க்க, வருணனை வேண்டித் தவமியற்றினான். முதல் பிள்ளையைத் தெய்வத்துக்குப் பலி கொடுப்பதாகவும் நேர்ந்து கொண்டான்.

பிள்ளை பிறந்தது; ரோஹிதன் என்று பெயரிட்டான். ஆனால் இந்தத் தலைப் பிள்ளையைப் பலி கொடுக்க மனம் வரவில்லை.

ரோஹிதன் பிள்ளைப் பருவம் கடந்ததும், தந்தை அவனிடம் வருத்தத்துடன், தெய்வத்துக்கு அவன் பலியாக வேண்டியவன் என்பதை அறிவுறுத்தினான். ரோஹிதனால் இதை ஏற்க முடியவில்லை.

வறுமையினால் தவித்த அஜிகர்த்தருஷி குடும்பத்தினரைக் கண்டான். நூறு பசுக்கள் கொடுத்து, சுனச் சேபனைத் தனக்குப் பதிலாக பலி பீடத்தில் பிணிக்கப்பெற்றான்.

அப்போது விசுவாமித்திரமுனி, குருபீடத்தை அலங்கரித்தவராக இருந்தார். சுனச்சேபன் அவரைத் தொழுது, “இந்தப் பலிபீடத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவேன் ஐயனே!” என்று வருந்தியழுதான்.

முனிவர், அவனுக்குச் சில மந்திரங்களை உபதேசித்தார். அந்த மந்திரப் பாடல்கள் ருக்வேதம் முதல் மண்டலத்தில் (1-6-1) காணப்படுகின்றன. அதிதியாம் பெருந்தாயின் கருணை, முதல் தேவனான அக்னி, ஸாவித்ரி என்ற சூரியன், வருணன் ஆகியோரின் பேரருள் வேண்டப்படுகிறது. பரிதாபமாகப் பலிபீடத்தில் பிணிக்கப்பட்ட சுனச்சேபனிைன் மன்றாட்டாக விரியும் இப்பாடல்கள், அதிதியின் மைந்தர்களை, ஆதித்தேவர்களைக் குருதி வழிபாட்டுக்குரியவர்களல்ல என்று தெளிவிக்கிறது,

நரபலி வேள்வியைச் செய்ய வேண்டிய புரோகித விசுவாமித்திரர், அந்தப் பலிபீடத்திலிருந்து அவனை விடுவிக்கிறார்.

எனவே, நரபலியை எதிர்த்த புரட்சியாளராகவும் விசுவாமித்திரர் குறிப்பிடப்படுகிறார்.

இந்த விவரங்கள், மானுட சமுதாயம், தந்தை நாகரிகத்தில் மேல் நிலையாக்க நாகரிகம் கண்டதைக் குறிப்பாக்குகின்றன.

மகாபாரத இதிகாசம் காட்டும் மானுட சமுதாய மேம்பாட்டில், பல்வேறு நிலைகளில் மகளிர் சுதந்தரங்கள் கட்டுப்படுத்தப்படுவதே பிரதிபலிக்கிறது. மகாபாரதம், ஏராளமான கதைகளையும் துணைக் கதைகளையும் உள்ளடக்கிய ஒரு பெருங்கடல் எனலாம். மனித இயல்புகளை ஒவ்வொரு கோணத்திலும் தெளிவாக்கும் இந்த இதிகாசத்தில், சத்தியவதி - பராசரர் - வியாசர்; சத்யவதி-சந்தனு, குந்தி என்னும் ப்ருதா, பாண்டவர்கள்-காந்தாரி-திருதராஷ்டிரன்-துரியோதனர்கள் என்ற தலை முறை மாற்றங்களில் பெண்களின் தனித்துவமான சுதந்தரங்கள் படிப்படியாக ஒடுக்கப்பட்டு வந்திருப்பதைக் காண்கிறோம். என்றாலும், அவர்கள் ‘தாய்’ என்ற முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். அந்த மேன்மை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் மகாபாரதப் போருக்குக் காரணியாக விளங்கும் துரௌபதை, ‘தாய்’ என்ற மேன்மைக்குரியவளாகவே போற்றப்படாமல் இழிந்துவிட்ட நிலையைக் காண்கிறோம்.

துரெளபதை, “அயோனிஜா” என்று குறிக்கப்படுகிறாள். ஒரு தாயின் யோனியில் உதித்தவளல்ல என்று பொருள்படுகிறது. சீதை பூமியில் கிடைத்தாள்; இவள் யாககுண்டத்தில் கிடைத்தாள். துருபத மன்னன், தன்னை அவமானம் செய்தவரைப் பழிவாங்க, அருச்சுனனுக்கு மாலையிட, ஒரு பெண்ணை வேண்டி வேள்வி செய்தான். அதன் பயனாக இவள் அக்கினியில் தோன்றினாள் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து, மராத்திய வரலாற்றறிஞர் ராஜ்வாடே தம் ‘பாரதியத் திருமண முறைகளின் வரலாறு’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்.

“யோனிஜ என்ற சொல்தாயின் கருவறையைக் குறிப்பதாகக் கொண்டாலும், பண்டைய வேத மொழியில், அது ‘இல்லம்’ என்ற பொருளையும் குறிக்கிறது. அதாவது, இவளுடைய தாய், இவர்களுடைய இல்லமாகிய உறைவிடத்தில் உரியவரால் கருவுறவில்லை. யாக சாலையில்-கருவுற்றாள் என்பதே பொருள்.”

இந்த வகையில், காந்தாரி நூறு மைந்தர்களைப் பெற்றாள் என்பதற்கும் உரிய பொருளை இந்த நூலில் அவர் விளக்குகிறார்.

“உயிர் வித்துக்கள் நூறு கும்பங்களில் வைக்கப்பட்டன. அக்கும்பங்களில் இருந்து நூறுபுதல்வர்கள் தோன்றினார்கள் என்ற கூற்றும் அப்படியே பொருள் கொள்ள முடியாததாகும். திருதராஷ்டிரனுக்கு நூறு இல்லங்களில் நூறு பெண்கள் அவன் வித்தைச் சுமந்து பெற்றார்கள். அந்தப் பிள்ளைகள், பட்ட மகிஷியான காந்தாரியின் மைந்தர் களானார்கள் என்பதேயாம் அது.

பாண்டவர்கள் இன்றைய திபெத்தைத் தாயகமாகக் கொண்ட தாய்வழி மரபினர். கெளரவர்களோ, காச்மீரத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள். முன்னவர்களிடையே பல நாயக மணம் (Poliyandry) தடை யில்லை. பின்னவரிடையே பலதாரமணம் (Polygamy) தடையில்லை. இது அணிமைக்காலம் வரை நிலவும் வழக்கம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

குந்தி, பல நாயகர்களின் தொடர்பில் தன் மைந்தர்களைப் பெற்றெடுத்தாள். இவள் தாயாண்மைச் சுதந்தரம் பெற்றவள் என்று சொல்லி விடுவதற்கில்லை. ஆண்மையில்லாத நாயகனுக்காக, மைந்தர்களைப் பெறுகிறாள். அவர்கள் பாண்டவர்கள் என்றே அறியப்படுகிறார்கள். ஆனால், துரியோதனனும் தம்பியரும் அவ்வாறு அறியப்படாமல், குருதேசத்தை முதன்மைப்படுத்தி ‘கெளரவர்கள்’ என்று குறிக்கப்படுகிறார்கள். குந்தி ஆண்நாயக மாற்றக் கூறுகளை, தாய்த் தன்மைத் தண்டனையாகச் சுமக்கிறாள்.

திரெளபதையின் பிறப்பே, நிபந்தனை நிமித்தத்துக்கு உட்பட்டதாகிறது. அருச்சுனனுக்கு அவள் மாலையிட வேண்டும் என்பதற்காக, அருச்சுனனைக் கண்டு பிடிக்க, சுயம்வரம் என்ற பெயரில், சுழலும் மச்ச யந்திரம் நிறுவப் படுகிறது

துரௌபதை, கர்ணனின் மீது ஆசைப்பட்டாள் என்றும், அவன் போட்டியில் தோல்வியுற்றதால் அருச்சுனனுக்கு மாலையிட்டாள் என்றும் சொல்லப் படுகிறது. அப்படியானாலும் அவள் அருச்சுனனுக்கு மட்டும் தானே உரியவள்?

பலநாயகர் மரபைக் குந்தி தொடரச் செய்கிறாள். எப்படி?

வெளிக்குத் தெரியாத முரண்பாடுகளில் பெற்ற மகனைச் சீராட்ட முடியாமல் தவித்த அவள், வெளிப்படையாக, “கன்னியை ஐவரும் ஏற்பீர்கள்” கூறிவிடுகிறாள்.

இந்தக் கூற்று, பெண்ணின் தாய்த் தன்மையிலேயே ஓர் அடிபோல் வீழ்கிறது. ஐவரும் உண்ணத்தக்க ஒரு கனி. ஐந்து சகோதரர்களும் அநுபவிக்க உரிமை கொண்ட பெண்.

துரௌபதையின் புத்திரர்களைப் பற்றிய குறிப்புக்கள் இந்த இதிகாசத்தில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவர்கள் உபபாண்டவர்கள் என்று மட்டுமே குறிப்பிடப் படுகிறார்கள். குறிப்பான பெயர்கள் கூட இல்லை.

ஆனால், கள்ளங்கபடமற்ற திரௌபதையின் பெண்மை இந்த மாக்கதை முழுவதும் சோதனைக்குள்ளாக்கப்படும் சந்தர்ப்பங்களே வருகின்றன.

இவள் சிரித்ததால் துரியோதனன் மனதுள் மூண்ட பழி வாங்கும் வெறி கிளர்ந்தது. அதன் எதிரொலியாக இவளை நடுச்சபையில் அவமானப்படுத்தத் துணிந்தான். தேர்ப் பாகனை அழைத்து அவளைச் சபைக்கு அழைத்துவர ஏவினான்.

நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் என்னை
நல்குமுரிமை அவர்க்கில்லை-புலைத்
தாயத்திலே விலைப்பட்டயின்-என்ன
சாத்திரத்தா லெனைத் தோற்றிட்டார்?-அவர்
தாயத்திலே விலைப்பட்டவர்;-புவி
தாங்குந்துருபதன் கன்னி நான்-நிலை
சாயப்புலைத்தொண்டு சார்ந்திட்டால்-பின்பு
தாரமுடைமை அவர்க்குண்டோ?

அமரகவி பாரதியின் வரிகள் இவை. மூல பாரதக் கதையை ஒட்டிப் படைக்கப்பட்ட இக்காவியத்தில், துரெளபதை, தன் கணவர்களின் உரிமை பற்றிக் கேட்கும் அற்புதமான வரிகைள் இவை.

அறிவு முடக்கப்பட்ட அந்தப்புரப் பெண்ணாக, போகக் கருவியாக தம் நாயகரின் ஏனைய பல நாயகிகளின் மீதான பொறாமையிலும், அழுத்தத்திலும் வெளி உலகம் அறியாமல் ஒடுங்கிவிட்ட பெண்ணில்லை இவள்; இவள் உரிமை பேசுகிறாள்; அவையில் அமர்ந்துள்ள மாபெரும் சான்றோரிடம் தருமநீதி கேட்கிறாள். அவர்கள் மனச் சாட்சிகளை உலுக்குகிறாள்.

எல்லோராலும் கைவிடப்பட்ட பின்னரும் அபலையாக அவள் முடிந்து விடவில்லை. ஒரு பெண் உரிமையாளனில்லாத ஒருவனைத் தோழனாக நெருங்க முடியும் என்பதைக் காட்டும்படி, உற்ற நண்பனாகக் கண்ணனைக் கூவி அழைக்கிறாள். உடுக்கை இழந்தவன் கைபோல் கண்ணன் அவள் மானம் காக்கிறான்.

தமிழ்நாட்டுக் கூத்துக்களிலும், நாடகங்களிலும் துரெளபதையைத் துகிலுரியும் வரலாறு மேடையேற்றப்படுவது வழக்கமாக இருந்தது. அமரகவி பாரதி இதையே அவள் ஆங்காரியாகக் கூந்தலை அவிழ்த்துவிட்டு, பாவித்துச்சாதனன் செந்நீரும் பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தமும் கலந்து குழலில் பூசிக்குளிப்பேன் என்று சூளுரைக்கும் காட்சியை முதன்மைப்படுத்தி, பாஞ்சாலி சபதம் என்ற ஒப்பற்ற காவியமாக்கினார்.

இந்தத் துரௌபதை, பஞ்சகன்னியரில் ஒருத்தியாகவும், இந்ததியக் கிராம தேவதையாகவும் வழிபடப் பெறுகிறாள். பாண்டவர் துணையில்லாத, தாய்த் தேவதையாக இவள் பாமரமக்கள் வழிபடும் தெய்வமாக விளங்குகிறாள். இவள் வழிபாட்டில், மக்கள் யாரோ செய்த கொடுமைக்குத் தாங்கள் பிராயச்சித்தம் செய்து கொள்வதுபோல் உடலை வருத்திக்கொள்ளும் நேர்ச்சைகளை மேற்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டில் முக்கியமானது தீமிதித்தல்.

ஐவருக்கு நாயகியாக்கப்பட்டதே கொடுமை. அதற்கும் அப்பால், அவளை மானபங்கம் செய்யத் துணிந்த ஆணாதிக்கத்தை அவள் எதிர்த்துக் கேட்ட நிலையில், அந்த ஐந்து கணவர்களும் அவளைக் காப்பாற்ற இயலாத ஒரு தருமம் பாலிக்கப்பட்டது அதைவிடக் கொடுமை.

அவர்கள் விராட நாட்டில் ஒளிந்து வாழநேர்ந்தபோது துரௌபதை அரசமாளிகைப் பணியாட்டியாக ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. அங்கும் மகாராணியின் சோதரன் கீசகன் அத்துமீறல் அவளைச் சோதனைக்குள்ளாக்கியது. கீசகன் பீமனால் கொல்லப்பட்ட பிறகும், மன்னன் இறந்த பிறகு மன்னனுக்குப் பிரியமானதனைத்தையும், பிரியமான பெண்ணையும்கூட அவனுடன் எரிக்க வேண்டும் என்ற வழக்கத்துக்குட்பட்டு, அவளையும் அவனுடன் எரிக்க வேண்டும் என்ற தருமத்தையும் அக்காலம் முன்வைக்கத் தயங்கவில்லை. பிறகு அது நிறைவேற்றப்படவில்லை.

அநியாய ஆணாதிக்கத் தருமங்களை எதிர்த்துக் குரலெழுப்பிய சக்தி-எழுச்சித் தெய்வமாக இன்னமும் பாமர மக்களின் துரௌபதையம்மன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.