இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/தாய்மையின் வீழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

3. தாய்மையின் வீழ்ச்சி


னித சமுதாயத்தின் மிகத் தொன்மையான இலக்கியச் சான்றாகக் கருதப்படுகிறது ருக்வேதம். இராமாயண, மகாபாரத இதிகாசங்களுக்கான பல்வேறு மூலக்கூறுகள் இந்த மாபெரும் தொகுப்பில் இருந்தே பெற்றிருக்கப் பட்டிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.

ஆதிமனிதர் வாழ்விலிருந்து தந்தையாதிக்கச் சமுதாயம் நிலை பெற்று வாழும் வாழ்வு வரையிலான பல அம்சங்களைப் பளிச்சென்று காணமுடிகிறது.

ஒருவகையில் இப்பாடல்களின் பல அம்சங்களும், இயற்கைச் சக்திகளின் இயக்கங்களை விளக்கும் உண்மைகள் என்று கொள்ளப்படுகிறது என்றாலும், பாடல் வரிகளில் பிரதிபலிக்கும் நேர்ப்பொருள், அக்கால சமுதாய மாந்தர் வாழ்நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கிறது.

ருக்வேதம் காட்டும் முதல் ஆதாரமான பெண்கொலை, இந்திரன் விருத்திராசுரனின் அன்னை தனுவை, தன் வச்சிரா யுதத்தால் அடித்துக் கொன்ற செயலாகும்.

இந்த வரலாற்றில், தனுவாகிய அசுர அன்னை, தன் மகன் விருத்திரனைத் தன் கீழ்நிறுத்திக் கொண்டு, தாய்ப்பசு தன் கன்றைப் பாதுகாப்பதுபோல் பாதுகாத்ததாகச் சொல்லப் படுகிறது. இந்திரன், அவளைத் தாய், பெண் என்று கூடப்பாராமல் தன் வச்சிராயுதத்தால் அடித்து வீழ்த்தினான். இது பாவம் என்றே கருதப்படுகிறது.

இந்தப் பாவத்தை அவன் உலக நன்மைக்காகச் செய்தானாம். அந்த வச்சிராயுதத்தைத் தயாரிக்க, ததீசி முனி தம் முதுகெலும்பையே ஈந்தார் என்று புராணங்கள் விளக்குகின்றன.

தனு தாய்த்தலைவி, தாய்ச்சமுதாயங்கள் அசுர சமுதாயம் என்றும் தந்தை நாயகச் சமுதாயத்தினர் நாகரிகம் அடைந்தவர் என்றும் பிற்காலங்களில் கொள்ளும்படி, இதிகாச புராணங்கள் தேவர் அசுரர் என்றும், நல்லவர் தீயவர் என்றும் வரையறுக்கின்றன.

தனு வதம், தாயாண்மைச் சமுதாயம் வீழ்ச்சி பெற்றதன் அடையாளமாக, இப்படியும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்திரனின் வச்சிராயுத அடி, நீரைத்தடை கட்டிய (அணை) பந்தங்களை உடைக்கும் செயலாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. பொது நன்மைக்குப் பாயக்கூடிய நீரை விடாமல் தேக்கி வைத்ததை, விடுவிப்பது ஒரு நல்ல செயல். தனு வதம் அப்படி ஒரு நல்ல செயலாம். மேகங்களின் சூல் கொண்ட நீரை விடுவிக்கும் இடி - மின்னலாக, இந்திரனின் வச்சிராயுதம் கருதப்பட்டிருக்கிறது.

உழவுக்கும் பயிர்த்தொழிலுக்கும் இன்றியமையாத நீர், தாயாண்மைக் குழுக்களால் (விரோதிகளால்) தடுக்கப் பெறுவதும், அவை தகர்க்கப்படுவதும், ஆநிரைகள் ஒளித்து வைக்கப் பெறுவதும், கவர்ந்து செல்லப்படுதலும் தொன்மைச் சமுதாயக் குழுக்களிடையே போரைத் தோற்று வித்திருக்கிறதென்பதில் ஐயமில்லை.

ருக்வேதம் (முதல் மண்டலம் 17-2) காட்டும் தனு விருத்திராசுரனின் அன்னை பற்றிய குறிப்பு, அவளைத் தாயாண்மைச் சமுதாயத்தலைவி என்பதைத் தெளிவாக்குகிறது. அப்போது பெண் படைகள் இருந்தன வென்றும் தெரிய வருகிறது.

ஆனால், பின்னர் இதே ருக்வேதத்தில், தனுவைக் கச்யபரின் மனைவியாகக் காட்டுகிறது. இவள் தானவர்களின் தாய் - தானவர் அசுரர்கள் என்றும் சுட்டுகிறது. கச்யபரின் இன்னொரு மனைவியாக அதிதி என்ற தாயும் குறிப்பிடப்படுகிறாள். இந்த அதிதியின் மைந்தர்கள் தேவர்களாகிய ஆதித்யர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தக் குறிப்புக்கள் எல்லாமே, தாயாண் சமுதாயம் தந்தையாதிக்க மாற்றத்துக்கு உட்பட்டதைச் சுட்டுவதாகவே தோன்றுகின்றன. பல இடங்களில் அதிதி என்ற தாய் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவருடைய மைந்தர்களுடன், இவள் எல்லையற்ற வண்மை, செல்வங்கள் அன்பு எல்லாவற்றையும் பொழிபவளாகத் துதிக்கப்படுகிறாள். அவற்றில் இவளுடைய கணவர் என்ற தந்தை நாயகக் குறிப்பு இல்லை.

ஒடுக்குவதற்கு இடமில்லாமலே தம்மினத்தாய்ப் பிரதிநிதியாகி விட்ட அதிதியும் எழும்பி நின்று போராடிய தாயாண்மைத் தலைமை ஒடுக்கப்பட்ட வரலாற்றுக்குரியவளாகத் தனுவும் இந்தப் பாடல்களில் இடம் பெற்றுத் திகழ்கின்றனர்.

அசுர இனத்தார் தீயவர், தீமைகளுக்கே உருவகமானவர் என்று சித்திகரிக்கப்பெற்று, காலம் காலமாக நிலை நிறுத்தப் பட்டு வந்திருக்கிறது.

இந்திய சமுதாயக் கலாசார வரலாறு, எத்தனையோ முரண்பாடுகளைச் சீரணம் செய்திருக்கிறது. ஆனால் பரசுராமன் செய்த தாய்க்கொலை இந்திய மண்ணில், இன்றளவும் சீரணம் செய்யப்பட்டிருக்கவில்லை.

புராணங்கள் வாயிலாகவும், நாடோடிக்கதைகள், இலக்கியங்கள் வாயிலாகவும், தொன்னாடெங்கும் குடி கொண்டுள்ள கிராம தேவதைகளின் வாயிலாகவும் நிலை நிறுத்தப்பட்ட பரசுராமர்-ஜமதக்கினி-ரேணுகா வரலாறு, இந்தியப் பெண் தொடர்பான சமூக வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக நிலை பெறுகிறது.

தாயாண்குடி மரபில் வந்த ரேணுகை, தந்தை நாயக முனிவரின் மனைவியாகிறாள்.

பெண் தன் கருப்பை உடைமையினால் தாய்த்தன்மை இயல்பினால், ஒரு சமுதாயத்தின் இன்றியமையாத மூல காரணியாகிறாள். அவளுடைய பரிபூரண சுதந்தரம் இந்த இயல்பைத் தன் ஆளுகைக்குள் வைத்திருப்பதனாலேயே உறுதியாகிறது. ஆனால், தந்தைநாயக மரபு, இந்தச் சுதந்தரத்தை அவளுக்கு வழங்க இடம் கொடுக்கவில்லை.

நில உடமையின் அடித்தளத்தில் இந்த மரபு, அழுத்தம் பெறப் பெற, பெண்ணின் மீது அவர்கள் செலுத்திய ஆதிக்கமும் இறுகலாயிற்று. இராமாயணம் கொண்டுவரும் கற்புநெறி. அறங்கேற்றமாகுமுன், அதற்குரிய அரங்கு ஒழுங்கு செய்யப்படுகிறது. பரசுராமர், ஜமதக்னி, ரேணுகை வரலாறு அத்தகைய முன்கட்ட உச்ச நிகழ்வாகிறது.

‘மாத்ரு ஹத்தி’ அல்லது தாய்க்கொலை, பெண்ணைத் தாயாகப் போற்றவேண்டும் என்ற இந்தியக் கலாசார, மரபுக்கு முள்ளான முரண்பாடாக இருக்கிறது. இந்தக் கலாசார மரபில் இத்தகைய தாய்க்கொலைக்கு ஒத்த முள் போன்ற முரண்பாடாகக் கூறத்தகுந்த நிகழ்வு எதையும் குறிப்பிடமுடியாமல் இருக்கிறது.

எனவேதான், இன்றளவும் தாய்வழிபாடாக, ஒடுக்கப்பட்ட சமுதாயம் தலைதூக்கி நிற்கும் ஆங்காரப்பழிதீர்க்கும் வழிபாடாக இந்தத் தாய்க்கொலை நிகழ்ச்சி உயிர்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆந்திரத்தின் மாதங்கி வழிபாடு, கர்நாடகத்தின் எல்லம்ம வழிபாடு, தமிழ்நாட்டின் ரேணுகாதேவி, எல்லையம்மன் போன்ற பல்வேறு தேவதை வழிபாடுகள் எல்லாமே, இந்தத் தந்தையாதிக்கக் கொடூரக்கொலைகளின் மிச்ச சொச்சங்களின் வடிவு பெற்றவை எனலாம்.

வடகன்னடப் பிரதேசத்தில், சௌதத்திக் குன்றில் குடி கொண்டுள்ள எல்லம்மன் கோயில், பரசுராமன் செய்த தாய்க்கொலையை ஆதாரமாகக்கொண்ட தெய்வத்துக்குரியதாக இன்றளவும் புகழ்பெற்றிருக்கிறது. இத்தகைய புராண, நாடோடிக்கதை வரலாறுகள் மனித சமுதாயத்தை ஒரு காலத்தில் உலுக்கிய நிகழ்ச்சிகளிலேயே நிலை பெறுகிறது என்றால் தவறில்லை.

எல்லம்மனின் ஆதிப்பெயர் ரேணுகை. இவள் மாதங்கினி என்றும் வழங்கப்பெறுகிறாள், (மாதங்கினி-மாதாவின் அங்கங்களைப் பெற்றவள்)

ரேணுகை, தென்னகத்து, தாயாண் குழுவைச் சேர்ந்த மங்கை. இவளை வடக்கிலிருந்து, தந்தை நாயக மரபில் வந்த ஜமதக்கினிமுனிவர் உரிமையாக்கிக் கொள்கிறார்.

ஒருநாள் ஜமதக்கினி முனிவர் வெளியே சென்றிருந்தார். அப்போது கார்த்த வீரியார்ச்சுனன் இவர்கள் குடிலுக்கு விருந்தினனாக வந்தான். தங்கிச் சென்றான்.

(காலையில் முனிவரின் வழிபாட்டுக்கு ஆற்றுமணலில் லிங்கம் பிடித்துவைக்க ரேணுகை முனைகிறாள்) வரவில்லை. உள்ளத்தில், கற்பு மீறிய களங்கம் இருந்ததால் வரவில்லை என்பது உட்கருத்து. லிங்க வழிபாடே தந்தையாண் மரபு, தாயாண் மரபை மிதித்து மேலேறும் ஒரு செயலின் பிரதி பலிப்பு என்று கொள்ளலாமோ? முனிவர் உண்மையறிகிறார். சினம் கொழுந்துவிட்டெரிகிறது. மாற்றானை அவள் அனுமதியின்றி இருப்பிடத்தில் தங்கவைக்கலாமா? அவரே அநுமதித்து மனைவியை விருந்தினருக்கு அளிப்பது வேறு. ஆனால் விருப்பம் என்று உரிமைக்குத் துரோகம் செய்யலாமா? எனவே அவர் தம் புதல்வர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துத் தாயைக் கொல்ல ஆணை இடுகிறார்.

மூத்த புதல்வர்கள் ஒருவரும் இக்கொடிய செயலைச் செய்ய இணங்கவில்லை.

எல்லோரிலும் இளையவனான பரசுராமனை அழைக்கிறார். “உன் தாயைக் கொன்றுவிடு! அவள் பதிதை!” என்று ஆணை இடுகிறார். ரேணுகை நடுநடுங்கி, “விருந்தோம்பும் பண்பாட்டுக்கேற்ப நான் நடந்தது தவறா?” என்று இறைஞ்சுகிறாள்.

“ஆம்! நீ பதிதை; பாவி; உயிர்வாழத் தகுதியில்லாதவள்! பரசுராமா! இவளைக் கொள்!”

பரசுராமனுக்கும் தாயைக் கொல்ல மனம் வரத்தானில்லை. ஆனால் மூத்தவர்களான தமையன்மார், தந்தையின் சாபத்துக்கல்லவோ ஆளானார்கள்!

எனவே, தந்தை சொல்லை நிறைவேற்றுவதே தலையாய கடன் என்று அவன் வாளை வீசித் தாயைக் கொல்கிறான்.

மக்கள்-தாய்-என்ற பாசப்பிணைப்பில், சுதந்தரமான அன்பில் வீழ்ந்த வெட்டு அது.

இது அப்படியே ஒடுங்கிற்றா?

இல்லை. தாய், இவளில்லாமல் உலகில்லை. மண்ணிலும், கோடானு கோடி உயிர்க் குலங்களிலும் சக்தியாய் இயங்கும் தாய்.

இவளை அடியோடு வீழ்த்திவிட முடியுமா?

முனிவரைக் குற்ற உணர்வு குத்துகிறது. இவரைப் பெற்றவளும் ஒரு தாய் தானே? இவர் வித்தைச் சுமந்து மக்களுக்குப் பிறவி கொடுத்தவள் அவள். அவளையா கொலை செய்யச் சொன்னார்?

“மகனே! உன் செயல் கண்டு மனம் நெகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்!” என்று உருகுகிறார்.

“எந்தையே, என் அன்னை மீண்டும் உயிர் பெற்று வரச் செய்ய வேண்டும்!” என்று கோருகிறான் மைந்தன்.

உண்மையான துயரங்கள் வரலாறாக வடிவெடுக்கும் போது, அவை துயரங்களாக முடிவு பெறுவதில்லை.

திரைப்படங்களில், தற்கொலை செய்து கொண்ட காதலர்களை மேல் உலகில் இணைவதாகக் காட்டி விடுகிறார்கள்.

இவ்வாறே, இந்தப் பரசுராமர் வரலாற்றிலும், கொலைக்கான பரிகாரங்கள் பல வடிவங்களில் நிலைபெற்றிருக்கின்றன. இதிலிருந்து தாயாண் சமுதாயம் மிகக் குருரமாகப் பெண் கொலைகளினால் ஒடுக்கப்பட்டதென்று ஊகிக்கலாம். உயிரோடு கொளுத்தியும், வெட்டியும் அழித்துவிட்டு, நடுகற்களும்-பத்தினி வழிபாடுகளும் நிகழ்த்தப் பட்டன என்றாலும் சரியாகவே இருக்கும்.

எனவே, கதை இவ்வாறு தொடருகிறது.

முனிவர், உடனே பரசுராமரிடம், “நீ வெளியே சென்று முதலில் உன் கண்ணுக்குத் தென்பட்ட பெண் ஒருத்தியின் தலையைக் கொய்து கொண்டுவா!” என்று கட்டளை இடுகிறார்.

பரசுராமன் வெளியே வருகிறான். அவன் கண்களில் முதன்முதலில் தென்பட்டவள், ஓர் ஆதிவாசி அல்லது தாழ்ந்த குலத்தைச் சார்ந்த பெண். மையாங் இனம்; மடிக இனம் என்று சொல்லப்படுகிறது. அவளுடைய தலையைக் கொய்து வந்து முண்டமான தன் தாயின் தலையின் மீது பரசுராமன் வைத்ததும் ரேணுகை உயிர்பெற்றெழுகிறாள். தன் தாயை உயிர்த்தெழச் செய்வதற்காக, பரசுராமன் இன்னொரு பெண் கொலை செய்ததாக ஆகிறது. இது, முனிவர் ஆணையிட்ட கொலைக்குப் பிராயச்சித்தமானாலும், அந்தப் பெண்ணின் இனத்தாருக்கு, நிரபராதிகளுக்குச் செய்யப்பட்ட கொடுமையல்லவோ?

இந்தக் கருத்து, கர்நூல் மாவட்டத்து ஊர்களின் மாதங்கி வழிபாட்டில் பிரதிபலிக்கிறது. ‘மாதம்ம’ வழிபாடு என்றும் இது வழங்கப் பெறுகிறது.

தாழ்ந்த குலப் பெண்களின் பிரதிநிதியான ஒரு பெண், ‘மாதங்கி’யாக வரிக்கப் பெறுகிறாள். இவள் ‘சாமி’ வந்து ஆடுகிறாள். ஏனைய நாட்களில், இந்தத் தாழ்ந்த குலத்தினர் உயர் குலத்தோர் அருகில் வந்து நின்றாலே சுட்டெரிக்கப் படும் கொடுமைக்குள்ளாவார்கள். ஆனால், இந்த வழிபாட்டு நாட்களில், பிராம்மணர் முதலிய உயர்குலத்தார், அன்று ‘மாதம்ம’ ஆவி வந்த பெண்ணின் வாயிலிருந்து துப்பப்படும் எச்சிலுக்காக வரிசை நிற்கிறார்கள்; அவர்கள் பாடும் பழி வசைப்பாடல்களை ஆசிகளாக ஏற்கிறார்கள். உயர்குல ஆண்கள் தம் முப்புரி நூலைக் கழற்றிக் கொடுக்கிறார்கள்; பெண்கள் தம் சேலை-ரவிக்கைகளை அவிழ்த்துக் கொடுக்கிறார்கள்.

இந்த வழிபாடு, ஒரு பழிவாங்கும் வடிவாகவே பிரதிபலிக்கிறது.

இந்த வரலாறு, தமிழ்நாட்டின் சில பகுதிகளில், இப்படியும் கூறப்படுகிறது.

பரசுராமன் தன் தாயை வெட்ட வாளுடன் ஓடிவந்த போது, ரேணுகை அஞ்சி நடுநடுங்கி வெளியே ஓடுகிறாள். காடு மலை என்று ஓடும்போது எதிர்ப்படும் தாழ்ந்த குலப் பெண்ணொருத்தியைக் கட்டிக் கொள்கிறாள். அப்படிக் கட்டிக் கொள்வதன் மூலம், இன்னொரு பெண்ணுக்கு ஊறு விளைவிக்கத் துணியாத பரசுராமன் தன்னை விட்டு விடுவான் என்று அவள் கருதியிருக்கிறாள். ஆனால், பரசுராமனின் வாள் இருவரையும் தலை வேறு முண்டம் வேறு என்று துணித்துவிடுகிறது.

பரசுராமன் தந்தையிடம் தாயை உயிர்த்தெழச் செய்ய வரம் பெற்றதும், அவர் சொற்படி, தாயின் தலையை அவள் முண்டத்தில் சேர்ப்பதற்குப் பதிலாக, பதற்றத்தில், தாழ்ந்த குலப்பெண்ணின் தலையைத் தாயின் முண்டத்தில் சேர்த்து விடுகிறான். ‘மாதங்கினி’ உருவாகிறாள்.

இனியும் பரசுராமன்-மாதங்கினி வரலாறு தொடருகிறது. உயிர்த்தெழுந்த மாதங்கினி அந்த இடத்தைவிட்டு நடக்கிறாள். அவளுடைய உருவத்தைத் தெய்வம்போல் கண்ட ஏனைய தாழ்ந்த குலப்பெண்கள், “எல்லம்மா?” என்று வினவுகிறார்கள்.

“எங்கேயம்மா போகிறாய்?” என்று அவர்கள் கேட்டதன் வடிவே 'எல்லம்மா' என்பதாயிற்று.

“இந்த மண்ணில் எனக்கு இடமில்லை; எனது உரிமைகளை இழந்து விடச் செய்த மண்ணாகி விட்டது இது. என்னோடு வர விரும்புகிறவர்கள் வரலாம்” என்று மொழிந்த மாதங்கினியாக ரேணுகா, விடுவிடென்று நடத்து செளதத்திக் குன்றில் இருந்து இறங்கிச் சென்று, ஒர் ஆணுக்கு உரியவளாகி அடிமைபோல் வாழும் வாழ்வை ஏற்கவில்லை. பல நாட்கள் போர், போர் என்று காலம் கழித்த இவர்கள் தங்கள் கூந்தலை வாரிக் கொள்ளவும் அழகு செய்து கொள்ளவும் மறந்து போனார்கள். அழகிய கூந்தல் பரந்து திரிந்து சடை விழுந்தது. இவர்கள் அனைவரும் ‘எல்லம்ம’ தெய்வத்துக்குத் தாசியாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

அறிவு பூர்வமாகப் பார்க்கும்போது, ஒரு முண்டமும் ஒரு தலையும் என்ற மாதங்கி உயிர் பெற்றிருக்க முடியாது. ஆனால் இந்தக் கருத்துடன் ஒரு வழிபாட்டுத் தெய்வம் உருவாயிற்று. ஆண் நாயகக் குழுவுக்கு அடிபணியாத இளங் குமரிகள்-கன்னியர், ‘எல்லம்ம’ தாசிகளாகி, செளதத்திக் குன்றில் ஒரு சமுதாயத்தையே தோற்றுவித்திருந்ததை இவ்வாறு கூறுகிறது. ஆனால்...