இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை/விருந்தோம்பல் பண்பாடு

விக்கிமூலம் இலிருந்து


2.விருந்தோம்பல் பண்பாடு


ந்தையாதிக்கம் நிலைப்படுவதற்கு முன் திருமண முறை ஒழுக்கமான வழக்கில் வரவில்லை என்பதை மராத்திய வரலாற்றறிஞர் காலஞ்சென்ற ராஜ்வாடே தம் ‘பாரதியத் திருமண முறைகளின் வராலாறு’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். வேறு குழுக்களில் இருந்து பெண்கள் கட்டாயமாகத் துாக்கி வரப்பட்டனர் என்ற வகையில் இவருடைய ஆய்வு சொற்களின் மூலங்களில் இருந்து சான்றுகளை வெளிப்படுவத்துவதாக இருக்கிறது.

இச்சொற்களின் மூலப்பொருளைப் பார்க்கலாம்-

1. பித்ரு-அல்லது பிதா.

பா-என்ற சொல் மூலமாக விளங்குகிறது. பா என்றால் பாலித்தல், அல்லது, குழுவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றல் - அதற்காகப் போராடக் கூடியவர்.

2. மாத்ரு அல்லது மாதா. ‘மா’ என்ற சொல், உணவைக் குறிக்கிறது. ஒரு தாய் தன்னிலிருந்தே பெற்ற சேய்க்கு உணவைக் கொடுக்கிறாள். தாயின் மார்பில் சுரக்கும் பாலை, ‘மம்மம்’ என்றே இன்றளவும் குழந்தைகள் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம். அம்மா, மாதா, மாம்மா போன்று, உலகின் மொழிகளில் எல்லாம் ‘மா’ என்ற சொல், உணவாக வியாபித்து, அந்த உணவை அளிக்கும் முதல்வியாக அன்னையைக் குறிக்கிறது எனலாம். எனவே, இவள் தானிய உணவோ, இறைச்சி உணவோ, எதுவானாலும் குழுவினருக்குப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறாள்.

3. ப்ராத்ரு-அல்லது ப்ராதா-குழுவுக்குத் தேவையான பொருட்களைப் பெற்று ஆதரிப்பவன். 4. பர்த்ரு அல்லது பர்த்தா-பெண்களை வேறு குழுக்களில் இருந்து பலவந்தமாகக் கடத்தி வருபவன்.

5. துஹித்ரு-துஹிதா (Daughter என்ற ஆங்கிலச் சொல்லின் எழுத்துக்கள் இந்த மூலத்தில் நிலை கொண்டதே) பால் கறக்கும் பெண். குழுவுக்கான மந்தையில் பால் கறக்கும் செயலை இவள் மேற்கொள்கிறாள்.

6. பதி - தனியாக ஒரு வீடமைப்பவன். சுதந்தரமாக வாழ முற்படுபவன்.

பத்னி அந்த வீட்டை ஒழுங்குபடுத்துபவள்.

இந்த இரு சொற்களும் குழுவாழ்க்கையை விடுத்துத் தனிக் குடும்பமாக வாழத் தொடங்கிய பின்னரே பிறந்தவை.

பார்யா என்ற சொல்லுக்குக் கடத்திக் கொண்டு வரப் பட்டவள் என்பதே பொருள்.

பதி-பத்னி பதி-தனிக்குடும்பக்காரன். பத்னி-பதியை உடைய ஒரு பெண்.

(பத்தினி என்று இந்நாட்களில் குறிக்கப்படும் கற்புப் பொருளுக்கும் இந்த மூலத்துக்கும் தொடர்பே இல்லை)

இவ்வாறாக, தந்தையாதிக்கம் நிலைப்படுவதற்கு ஆண்-பெண் உழைப்பு பிரிவினை அடித்தளம் அமைத்தது.

ஆடவர் வெளியே சென்று வேட்டையாடினர்; விலங்குகளை உயிருடன் பிடித்துப் பழக்கினர். கொட்டிலில் கொண்டு வந்து கட்டினர். காடுகளை அழித்து நிலம் சீராக்கி, விளை நிலமாக்கியும், நீர் பாய்ச்சியும் தானிய உற்பத்தியிலும் ஈடுபட்டனர். பெண் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி நெருப்பைக் காத்தாள். கன்று காலிகளைப் பேணினாள். நீர் கொண்டு வந்து உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றாள். கன்னிப் பெண்டிர் பால்கறந்து தயிர் மோர் தயாரித்தனர். குழுவினருக்கான தோல், கம்பளி ஆடைகளைத் தயாரித்தனர். இந்தத் துவக்கம், பின்னர் பருத்தி பட்டு நெசவு வேலையே பெண்களுக்குரியதாக ஆயிற்று எனலாம். அடுப்பும், பாண்டங்களும் இவள் கைகளினால் உருவாயின.

இல்லத்தில் இருந்தபடி செய்யும் பணிகளனைத்தும் இவள் செய்தாள். தந்தையாண் சமுதாயம், பெண்ணைத் தாய் மக்களிடம் இருந்து பிரித்து, தங்களிடையே ஊன்றச் செய்வதையே திருமண சடங்காக உறுதிப்படுத்தியது. பலவந்தமாகப்பற்றிக் கொண்டுவராமல், அன்போடு அணி கலன்களும், பரிசில்களும் வழங்கி, மகளுக்குப் பிரியா விடை கொடுத்துத் தாய்வீட்டு மக்கள் அனுப்ப, மணமகன் தன் இல்லம் கூட்டி வந்தான். ஓ, இங்கு நீ இந்த இல்லத்தின் அரசியாக வாழ்வாயாக! இந்த இல்லத்துக்குச் சொந்தமான கன்று காலிகளுக்கு நீயே எஜமானி! இந்த வீடே, இந்தச் சுற்றமே, இந்த வண்மைகளே உனக்கு உரியவை! என்று புதிய வீட்டுக்கு அவளைப் பொற்றோரணங்கள் வளைத்து வர வேற்றார்கள். ருக்வேதம் காட்டும் திருமணத்தின் சாரம் இதுவே.

பிறந்த மண்ணிலிருந்து பிரிக்கப்பட்ட இவள், இப்படிப் பூவாரங்கள், பொன்னாபரணங்களினால் போற்றப் பட்டாலும் இவளுக்கும் இவள் உடமைகளுக்கும் உரியவன் ஆண் என்று தீர்ந்தது. மண்ணும், பெண்ணும் உடமைகள் என்றான பின் மனித வாழ்க்கையில் இனக் குழுக்களிடையே மோதலும், போர்களும், கொடுக்கல் வாங்கல் சமரசங்களும் விரிவு பெறலாயின.

கொடுக்கல் வாங்கல் சமரசங்கள், 'பெண்' அடிமைகளாக இருந்த நிலையிலும், அரசிளங்குமரிகளாக இருந்த நிலையிலும், எந்த வேற்றுமையும் இல்லாமலே பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டனர்.

தாழ்ந்த குல அடிமைகளும், யவனம், மிகிரம் போன்ற நாடுகளில் இருந்து வந்த அரசிளங்குமரிகளும், இந்தியக் கலப்பினத்துக்குத்தங்கள் வண்ணங்களையும் வனப்பையும் நல்கியிருக்கிறார்கள்.

இத்தகைய சமுதாய முன்னேற்றம் ஒருபுறம் இருக்கையில், இன்னொரு மரபும் தோன்றி வந்து இணைந்தது. இனக்குழுக்களிடையே, ஒரு பெண்ணைத் தன் வாழ்க்கைக்கு உரிமையாக்கிக் கொண்டு ஒவ்வொருவரும் பயனடைய முடியாத நிலையும் இருந்தது. உடல்வலிமை, பொருள் வலிமை இரண்டும் இல்லாத சிலர், போருக்கும் மோதலுக்கும் வாழ்க்கையில் இடமில்லை என்று முடிவு செய்தனர். கானகங்களில் தனியிடங்களை நாடிச்சென்றனர். மனித வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளைச் சிந்தித்தனர். மனதை ஒடுக்கி, மேலாம் அறிவொளியைப் பெறச் சிந்தனை செய்தனர். புதிய தத்துவங்களைக் கண்டனர். இவர்களின் படைப் பாற்றல், கவினுறு ஒலிக்கோவைகளாக, அற்புதப் பாடல்களாக வெளிப்பட்டன.

பல்லாண்டுகள், இயற்கையின் மடியிலே உள்ளொளி காணப்பயின்ற இப் பெரியோர், தாம் பெற்ற அநுபவங்களை, அறிவை, குழுமக்களுடன் பகிர்ந்து கொண்டு பயன் பெற முன் வந்தனர். இவர்கள் தலைமையில் குரு குலங்கள் தோன்றின. இவர்களே ருஷீ, முனி என்ற சிறப்புச் சொற்களால் வழங்கப் பெற்றனர். இவர்கள் துறவிகள் அல்லர். இத்தகைய சான்றோருக்குப் பெண்களைக் கொடுத்து அவர்கள் வாயிலாகச் சந்ததி பெறச் செய்வது மேலாம் புண்ணியமாகக் கருதப்பட்டது. ‘கன்யா தானம்’ என்ற சொல்லே இந்த மேன்மையைக் குறிக்கிறது. பிரும்ம முறை, தெய்வமுறை, பிரஜாபத்திய முறை, அர்ஷமுறை, ஆகிய திருமண முறைகள் எல்லாமே, ஓர் ஆணுக்கு இல்லறம் நடத்தி சந்ததி பெருக்குவதற்காக, வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்ணை அளிப்பதாகவே உணர்த்துகின்றன.

இந்தத் திருமண முறைகளில் சிற்சில வேற்றுமைகள் இருக்கலாம். அர்ஷ ‘திருமணம் ஒரு பெண்ணைத் தானம்’ என்று வழங்காமல், பதிலாக, ஒரு பசு, ஒரு காளை இரண்டையும் மணமகனிடமிருந்து பெறலாம் என்று விட்டுக் கொடுக்கிறது. என்றாலும், இந்த-பரிசம், கண்டனத்துக்குரியதாகவே கருதப்பட்டிருக்கிறது.

தந்தையாதிக்கம், துவக்க காலங்களில் பெண்ணைச் சுதந்தரம் உடையவளாகவே வைத்திருக்கிறது. என்றாலும், பெண் மனையறம் பேணி மக்களைப் பெற்றுச் சமுதாய உற்பத்திக்கு இன்றியாமையாதவளாக இருந்ததால், விருந்தினருக்கும் வேண்டப்பட்டவருக்கும் இவள் சந்ததிக்காக வழங்கப்பட்டாள். தாய்மை நோக்கம், மனித வாழ்க்கையில் சாதனங்களும் பயன்படு பொருட்களும் கூடிய பிறகு, இழிந்து போய், போகம் என்று கூறு தலை தூக்கியது.

இந்த நிலையை மகாபாரத இதிகாசத்தில் வரும் பல வரலாறுகள் விளக்குகின்றன. அனுசாஸன பர்வம் இரண்டாம் அத்தியாயத்தில் சுதர்சனன் வரலாறு காணப்படுகிறது.

இல்லற தருமத்தில் முக்கியமான பண்பாடு விருந்தோம்பலாகும். சுதர்சன முனிவர் தம் மனைவி ஓகவதியிடம் இக்கடமையை வலியுறுத்துகிறார். இந்தத் தருமம் எப்போதும் எந்த நிலையிலும் பாலிப்பதற்குரியதாகும். உன் உடலையும் கூட விருந்தினருக்கு அளிக்க நீ தயங்கலாகாது என்று அறிவுறுத்துகிறார்.

சோதனைக்காலமும் வருகிறது. முனிவர் வெளியே சென்றிருக்கிறார். அப்போது ஒரு விருந்தினர் ஆசிரமத்துக்கு வருகிறார். விருந்தினருக்குரிய அனைத்து மரியாதைகளையும், உபசாரங்களையும் அவள் அளிக்கிறாள். அவரோ, அவளுடைய உடல் போகத்தை வேண்டுகிறார். கணவரின் சொற்களைச் சிரமேற்றாங்கிய ஓகவதி விருந்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாள்.

முனிவர் ஆசிரமம் திரும்பியதும் நடந்தவற்றைச் செவியுற்று, மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார். இத்தகைய விருந்தோம்பல் மேன்மையினால் சுதர்சன முனியின் புகழ் மூவுலகுக்கும் பரவியதாம்!

ஆனால், சாந்திபர்வம் 266ம் அத்தியாயத்தில் சிரகாரி என்பவரின் வரலாறு வருகிறது. சிரகாரியின் தந்தை கோதமர். ஒரு சமயம் அவர் ஏதோ பணி நிமித்தம் வெளியே சென்றிருந்தார். அப்போது இந்திரன் விருந்தினர் வடிவில் ஆசிரமத்துக்கு வருகிறான். சிரகாரியிடம், அவன் அன்னையைத் தாம் அநுபவிக்க விரும்புவதாகத் தெரிவிக்கிறான். விருந்தோம்பல் பண்பாட்டின் மேன்மை கருதி, சிரகாரி அன்னையை விருந்தினருக்கு அளிக்கிறான். (இந்த இடத்தில், பெண், வெறும் சடப்பொருள் போல் கருதப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்)

கோதமர் ஆசிரமம் திரும்புகிறார். இதைக் கேள்விப் பட்டதும் சினம் ஏறுகிறது. சிரகாரியை விளித்து, அன்னையை உடனே கொன்று விடும்படி பணிக்கிறார். மன அமைதி நாடி வெளியேறுகிறார். தனிமையில் சென்றமர்ந்து ஆற அமர யோசனை செய்கிறார். சிரகாரி விருந்தோம்பல் தருமத்தையன்றோ பாலித்தான்! இதில் ஒரு தவறும் இல்லையே? சினத்தினால் குருடாகி, ஒரு தாய்க் கொலை நிகழ இடமளித்து விட்டாரே?...

வருந்திய முனிவர் விரைந்து ஆசிரமம் திரும்புகிறார். சிரகாரி அன்னையைக் கொலை செய்திருக்க வில்லை. அன்னை நின்ற இடத்திலேயே நிற்க, அவனும் தாயைக் கொல்லத் துணியாமல் நிற்கிறான்.

கோதமர் மனமகிழ்ந்து அகம் குளிர்ந்து இருவரையும் வாழ்த்துகிறார். சிரகாரியின் புகழ் இதனால் ஓங்குகிறது- என்று இந்த வரலாறு கூறுகிறது. இதே மகாபாரதத்தில், வரும் ஒரு வரலாற்றுக்குறிப்பை, ராஹூல் சாங்க்ருத்யாயன் தம் “மானவசமாஜ்” நூலில் (பக்23)இல் குறிப்பிடுகிறார். திருமணம் என்று நெறிப்படாவிட்டாலும், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இச்சை கொண்டு, வாழத் தலைப்படத் தொடங்கியதும், ஓரளவில் அது ஒருவன்-ஒருத்தி என்ற ஒழுங்கில் வரலாயிற்று. ஆனால் திருமணம் என்ற அழுத்தமான வரையறை இல்லை.

மகாபாரதத்தில், ‘சுவேத கேது’ என்பவரால் திருமண நெறி அழுத்தமாக்கப்பட்டதாக வரலாற்றைக் குறிக்கிறார்.

சுவேதகேதுவின் அன்னையை, ஒரு ருஷி விரும்பி உறவு கொள்ள அழைத்துச் சென்றார். இது, சுவேதகேதுவின் தந்தையின் முன்னிலையில் நடந்தது. ஆனால் தந்தைக்கு இது விரோதமாகப் படவில்லை. விரும்பியவர் கூடலுக்கு அழைத்துச் செல்லலாம் என்பது சமுதாயம் ஒப்புக் கொண்ட தர்மமாக இருந்தது.

அப்போது, சுவேதகேது, இத்தகைய நடைமுறைக்கு முடிவு கட்டுவதாக உறுதி பூண்டார். பின்னர், அவர் ருஷி என்ற நிலைக்கு ஏற்றம் கண்டு, புதிய முறையான ‘திருமணம்’ என்ற நடை முறையைக் கொண்டு வந்தார் என்பதேயாம்.