மகாபாரதம்-அறத்தின் குரல்/5. சோதரர் சூழ்ச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

5. சோதரர் சூழ்ச்சிகள்

இளமைப் பருவத்துப் பழக்க வழக்கங்கள், நட்பு முதலியன யாவும் அடியிலிருந்து கரும்பு தின்பதைப் போன்றவை. அடிக்கரும்பின் கணுக்களிலிருந்து மேலே மேலே சுவைக்கும் போது உவர்ப்புத் தென்படுகிறதல்லவா? தந்தையின் மரணத்திற்குப் பின்பு பாண்டவர்கள் அத்தினாபுரிக்கு வந்து துரியோதனாதியர்களுடன் கலந்து பழகிய நட்பும் வளர வளரக் கசப்பையே அளித்தது. தேர்ப்பாகன் சூதநாயகன் ஆற்றில் கண்டெடுத்து வளர்த்து வந்த கர்ணனும் துரியோதனாதியர்களோடு சேர்ந்து அவர்கட்கு உயிர் நண்பனானான். சுபல நாட்டு மன்னன் துரியோதனாதியர் தாயாகிய காந்தாரிக்கு உறவினன். எனவே சுபல் மன்னனின் புதல்வன் சகுனியும் அத்தினபுரியில் வந்து தங்கித் துரியோதனாதியரோடு நெருங்கிப் பழகலானான்.

கர்ணன், சகுனி என்ற இவ்விருவரது புதிய பழக்கத்தால் தான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுவே பொறாமை தலைப்பட்டது. நட்பிலே பிளவு என்பது பொறாமை பகைமை இவைகளின் பிறப்பு ஆகும். மாங்காய் காம்போடு பொருந்தியிருக்கும் போது பால் வடிவதில்லை. காம்பிலிருந்து அதைத் தனியே பிரிக்கும் போது பால் வடியாமலிருப்பதில்லை. பொறாமைக்கும் பிளவுதான் காரணம். சகுனியும் கர்ணனுமாக நூற்றுவர் மனத்தைப் பாண்டவர்களிடமிருந்து தனியே பிரித்து விட்டனர். மனங்களின் இந்தப் பிரிவில் எழுந்த குரூரமான சூழ்ச்சிகள் ஒன்றா இரண்டா? பல சூழ்ச்சிகள் எழுந்தன. வானவிளிம்பை அளாவி நிற்கும் உயரமான மலைச்சிகரம் போலச் சத்தியத்தையும், தருமத்தையும் போற்றி உயர்வு பெற்று விளங்கும் தருமன், வல்லமையால் உலகையே வெல்லும் உடலும், உள்ளமும் ஊக்கமும் பெற்ற வீமன், சிந்தனை, செயல், அழகு, ஆண்மை, இவற்றில் நிகரின்றி நிற்கும் விஜயன் என இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் உன்னத நிலை பெற்றுத் தோன்றும் பாண்டவர்களை எதிர்த்துப் பொறாமை கொள்வது கெளரவர்களுக்கு எளிமையான இயல்பாகத் தோற்றியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தை தோற்றுவித்தவன் கர்ணன் வளர்த்து முதிரச் செய்தவன் சகுனி. இதன் விளைவு?... பாண்டவர்களை எந்தெந்த வழியில் எல்லாம் துன்புறுத்த முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் துன்புறுத்துவது என்ற பகைமை எண்ணம் கெளரவர் மனத்தில் எழுந்தது. ‘காளான்‘ ஒரே நாளில் முளைத்து வளர்ந்து முழு வளர்ச்சியும் பெற்று விடுகிறது. ஆனால் கடம்ப மரம் அப்படி வளர முடிகின்றதா என்ன? நல்ல எண்ணங்களைக் காட்டிலும் தீய எண்ணங்களே விரைவில் வளர்ந்து வளம் பெற்று விடுகின்றன. இது உலகியல்பு.

பாண்டவர்களின் முழு ஆற்றலும் பொருந்தி நிறைந்திருப்பது வீமனிடத்தில் தான் என்பதை நன்கு அறிந்து கொண்ட துரியோதனாதியர் தங்கள் சூழ்ச்சி வலையை எடுத்த எடுப்பில் வீமன் மேலே விரித்தனர். கெளரவர்கள் மனத்தில் அமைதியும் இன்பமும் நிரம்பியிருந்த ஒரு நாள் இது நிகழ்ந்தது. புயலை எதிர்பார்த்து நின்ற அமைதி அது! அழிவை எண்ணி இறுமாந்து கொண்ட இன்பம் அது! அவர்கள் பாண்டவர்களை அணுகி, “இன்றைய பொழுதை இன்பமாகக் கழிப்போம் ... கங்கையாற்றின் மனோரம்மியமான நீரலைகளில் நாம் நீந்தி விளையாடி மகிழலாம்! நீங்களும் வரவேண்டும் சோதரர்களே! என்று அன்பொழுகப் பேசுவது போல் நடித்து அழைத்தனர். வஞ்சகம் அறியாத பாண்டவர்கள் வருவதற்கு மனமிசைந்து கெளரவர்களோடு கங்கைக் கரைக்குப் புறப்பட்டனர். கங்கைக்கரை.. பனிமலைப் படிவங்களிலே தவழ்ந்து வளர்ந்து கன்னிப்பருவ மெய்திய கங்கைச் செல்வி கடலாகிய காதலனை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். மோகனமான நீள அலைக்கரங்களை நீட்டிப் பாவசரீரங்களை நீராட அழைப்பது போல இருந்தது, தன்னுடைய நீர்த்தரங் கங்களால் அவள் செய்து கொண்டிருந்த சலனம். கெளரவர்களும் பாண்டவர்களும் நீர் விளையாடலுக்காக நதியில் இறங்கினார்கள்.

தொடக்கத்திலேயே துரியோதனனுக்கும் வீமனுக்கும் நீந்துவதில் போட்டி ஏற்பட்டது. தங்களுக்குள் செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின் படி பாண்டவர்களை அன்று எப்படியும் துன்பமும் அவமானமும் அடையும் படி செய்ய வேண்டும் - என்று முனைந்தனர் துரியோதனாதியர். சுழித்துச் சுழித்து ஓடிய கங்கை நங்கை அவர்களுடைய இந்த நிறைவேற முடியாத முயற்சியைக் கண்டு தனக்குள் மோனப் புன்னகை செய்து கொண்டிருப்பது போலத் தோன்றியது. விதி என்பதோ அல்லது இயற்கை என்பதோ, தவறிக் கூட அநீதிக்குத் துணை செய்வதில்லை. நீதிக்கும் அநீதிக்கும் கங்கையாற்றிலேயே ஒரு போராட்டம் ஏற்பட்டுவிட்டதோ? என்று சொல்லும்படி வெகுநேரம் கெளரவர்களும் பாண்டவர்களும் ‘நீந்துதல்’ என்ற போரை நடத்தினர். தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதிபதியைப் போல அமைதியாக இந்தப் பொறாமைப் போரைக் கண்டுகொண்டிருந்தாள் கங்கை நங்கை. உலகில் அறத்தின் துணை யார் பக்கமோ அங்கே தான் வெற்றியின் துணையும் இருக்கும். அவமதிப்பைச் செய்ய நினைத்தவர்கள் அவமதிப்பை அடைந்தார்கள். தோல்வியைப் பாண்டவர்களுக்கு உண்டாக்கத் திட்டமிட்டவர்கள் தாமே அதை அடைந்தனர். வீமனைத் தலைகுனியச் செய்ய வேண்டும் என்று கருதிய துரியோதனன் தானே தலைகுனியும்படி ஆகியது.

பொறாமைக்காரர்களின் தோல்வியால் பொறாமை தானே வளரும்? கங்கைக் கரையில் நீர் விளையாட்டு முடிந்ததும் யாவரும் பசி தீர உண்டனர். பின் ஓய்வு கொண்டனர். மாலையில் மாளிகைகளுக்குத் திரும்பினர். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி என்னும் நால்வருக்கு மட்டும் தோல்வியால் விளைந்த மனத் தவிப்பு அடக்க முடியாமல் குமுறிக் கொண்டிருந்தது. இருண்டு குமுறிய அவர்கள் இதயத்தின் இருட்டைத் தன்னோடு ஒப்பு நோக்கிக் காண வந்தது போல இரவும் வந்தது. பகலில் மிகுந்த நேரம் நீரில் விளையாடிக் களைத்துப் போயிருந்ததனால் பாண்டவர்கள் முன்பே உறங்கச் சென்றுவிட்டார்கள். கெளரவர்களிலும் துரியோதனன் முதலிய நான்கு பேர்களைத் தவிர ஏனையோர் உறங்கச் சென்றிருந்தனர். பொறாமையாலும் பழிவாங்கும் எண்ணத்தினாலும் இந்த நால்வருக்கும் மட்டும் உறக்கம் வரவில்லை. “வீமனை எந்தவிதத்திலாவது பழி தீர்த்துக் கொண்டாலொழிய என் மனத்திற்கு அமைதி இல்லை“ - என்றான் துரியோதனன்.

“அது தான் அண்ணா என் எண்ணமும் அந்த முரடனுக்குச் சரியானபடி பாடங்கற்பிக்க வேண்டும்” - என்றான் துச்சாதனன். “இன்றே இப்போதே இந்த இருளிலேயே அந்தப் பழியை நாம் தீர்த்துக் கொள்ளத் தவறக் கூடாது” - என்றான் கர்ணன். அதுவரை சிந்தனையில் ஆழ்ந்திருந்த சகுனி அவர்கள் மூவரையும் அருகில் அழைத்து, “வீமனைப் பழிவாங்குவதற்கு நான் இதுவரை எண்ணி முடிவு செய்த திட்டம் இது” - என்று அதை அவர்களிடம் காதோடு காதாகக் கூறினான். சகுனி கூறிய சூழ்ச்சியைக் கேட்டதும் மற்ற மூவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். உடனே அதை நிறைவேற்றி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டார்கள் அவர்கள்.

சலனமற்று அமைதி திகழும் இரவு. எங்கும் செறிந்த கருக்கிருட்டு. வீமனின் பள்ளியறை, பகலிலே கங்கை நீரில் ஆடி விளையாடிய அலுப்புத் தீர ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தான் வீமன். கட்டிலில் படுத்திருந்த அவள் மூச்சுவிடும் ஒலியைத் தவிர வேறு ஒலி அங்கே இல்லை . தன் குகையிலே சுதந்திரமாக உறங்குகிற சிங்கத்தோடு ஒப்பிடும்படியாகத் தோன்றியது அவன் உறங்கும் நிலை. உறங்கும் சிங்கத்தின் குகைக்குள்ளே பதுங்கிப் பதுங்கி நுழையும் குள்ளநரிகளைப் போலத் துரியோதனன் முதலிய நால்வரும் கையில் கயிற்றுச் சுருள்களுடன் வீமனின் பள்ளியறைக்குள் நுழைந்தனர். வீமனோ தன்னை மறந்து உறக்கத்தில் ஆழமாக இலயித்துப் போயிருந்தான். வந்த நால்வரும் தாங்கள் கொண்டு வந்திருந்த கயிறுகளால் கட்டி லோடு கட்டிலாக வீமனை இறுக்கிக் பிணித்தனர். அவன் அப்போதும் உறக்கம் நீங்கி விழித்துக் கொள்ளவில்லை. கட்டிலோடு அவனைத் தூக்கிக் கொண்டு கங்கையை நோக்கி நடந்தனர். அவர்களுடைய இந்த வஞ்சகச் செயலுக்குத் துணை செய்வது போல இரவின் தனிமையும் அமைதியும் வேறு பொருந்தியிருந்தன. தடுப்பதற்கு எவருமில்லை. சதி செய்யும் நினைவோடு விரைந்தனர்.

வீமன் கட்டிலோடு, பொங்கி நுரைத்துப் பாயும் கங்கை வெள்ளத்தில் வீழ்த்தப்பட்டான். அமுதம் கடையக் கடல் புகுந்த மந்தர மலையோ என்றெண்ணும்படி இருந்தது, வீமனை அவர்கள் கங்கையில் இட்ட காரியம். வீமனை இவ்வாறு வீழ்த்திவிட்டுப் போகும் போதே துரியோதனன் முதலியோர்க்கு வேறு ஒரு சந்தேகமும் உடனெழுந்தது. ஒரு வேளை வீமன் பிழைத்தெழுந்து வந்துவிட்டால் என்ன செய்வது?’ - என்று அஞ்சினர். அவன் பிழைத்துக் கரையேறி வந்தாலும் அவனை அடித்துப் புடைத்துக் கொன்றுவிட வேண்டுமென்று நான்கு கொழுத்த வீரர்களையும் கங்கைக் கரையில் இருளில் ஒளிந்திருக்குமாறு செய்து விட்டு அதன் பின்பே அரண்மனைக்குத் திரும்பினர். அவர்கள் நினைத்தபடியே வீமன் கரையேறிப் பிழைத்து வந்தது மெய்தான்! தண்ணீரின் குளிர்ச்சி அவனுடைய உறக்கத்தைக் சுலைத்தது. உடல் கட்டிலுடனே பிணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து மூச்சை அடக்கி அழுத்தமாக வெளியிட்டான் வீமன், கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்து சிதறின. வீமன் நீந்திக் கரையேறினான். கரையில் துரியோதனன் முதலியோரால் ஏவப்பட்டிருந்த தடியர்கள் நாலு பேரும் வீமன் மேல் பாய்ந்தனர். வீமனை அவர்கள் புடைத்துக் கொல்ல வேண்டுமென்பது துரியோதனனுடைய ஏற்பாடு. ஆனால் நிகழ்ந்தது என்னவோ நேர்மாறான நிகழ்ச்சி. வீமன்தான் அவர்களை அடித்துப் புடைத்து வீழ்த்திவிட்டு இரவோடு இரவாக மாளிகைக்கு திரும்பினான். தன்னைக் கொல்லுவதற்கு முயலும் சூழ்ச்சிக்காரர்கள் யாவர் என்பதை அவன் அறிந்து கொண்டான்.

ஆயினும் சூழ்ச்சிக்கு ஆளாவது போல நடித்து அதை வெல்லுவது தான் உண்மையான திறமை என்று தெரிந்து கொண்ட வீமன் வெளிப்படையாக ஏதுமறியாதவன் போல அமைதியாக இருந்தான். மற்றோர் நாள் வீமனைக் கொல்வதற்காக அவன் இருக்குமிடத்தில் அவனுக்குத் தெரியாமல் நச்சுப் பாம்புகளை நிறைத்து வைத்திருந்தனர். வீமன் இந்த சூழ்ச்சியை அறிந்தும் தன் இருக்கையை அடைந்தான். முசுட்டுப் பூச்சிகளைக் கையால் நசுக்கிக் கொல்லுவது போல் வஞ்சகர்கள் இட்டுவைத்த நச்சுப் பாம்புகளைச் சிதைத்துக் கொன்றான். இதன் பின் மீண்டும் வீமனையும் மற்றவர்களையும் கங்கைக்கு நீராட வருமாறு ஒரு நாள் துரியோதனாதியர்கள் அழைத்தனர். கங்கையாற்றில் இடையிடையே கழுக்களை (ஈட்டிகளைப் போவ நுனிப் பகுதி கூர்மையான ஒரு வகை ஆயுதங்கள்) இட்டு வைத்து வீமனை அந்த இடங்களிலே பாயுமாறு செய்து, கொல்ல வேண்டுமென்று இம் முறை துரியோதனாதியர் சூழ்ச்சி செய்திருந்தனர். இதற்குப் பாண்டவர்களை அழைத்தபோதே ‘வீமனின் அழிவு’ ஒன்றே துரியோதனாதியர்களின் நோக்கமாக இருந்தது. சூதுவாதறியாத பாண்டவர் சம்மதித்து நீராடச் சென்றனர். நீராடும் போது கழுக்களை நட்டுவைத்த இடங்களை முன்பே தெரிந்து கொண்டிருந்த கெளரவர்கள் ஜாக்கிரதையாக வேறு பகுதிகளில் ஒதுங்கி நீராடினர், வீமன் கழுக்களில் பாய்ந்து அழிந்து விடுவானோ என்று அஞ்சத்தக்க நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல வேளையாக இறையருள் துணை செய்தது. எந்தெந்த இடங்களில் கழுக்கள் நாட்டப்பட்டி ருந்தனவோ, அங்கே கண்ணபிரான் வண்டுகளாகத் தோன்றி வீமனைக் காப்பாற்றினார். வீமன் கழுக்கள் இருந்த இடங்களை விலக்கி விட்டுத் திறமாக நீராடிக் கரையேறினான். தீய உள்ளம் படைத்த துரியோதனாதியர் இம்முறையும் ஏமாற்றமே அடைந்தனர்.

வஞ்சகர்களைப் பொருத்தமட்டில் ஏமாற்றம் என்பது குரூரத்தை மேலும் மேலும் வளர்க்கின்ற சாதனமாகப் பயன்படுகிறது. அடுத்த முயற்சியாக, வீமனை விருந்துக்கு அழைத்து நஞ்சு கலக்கப் பெற்ற உணவு வகைகளைப் பரிமாறிக் கொன்று விடுவதென்று தீர்மானித்தனர். இம்முறை வீமனின் உயிர் எப்படியும் தங்களுடைய வஞ்சகத்திற்குத் தப்ப முடியாதென்பது அவர்களது திடமான எண்ணம். ஆனால் வாழ்க்கையின் முதல் முடிவு என்பது மனித சித்தத்திற்கு மீறிய செயல் என்பதை அவர்கள் சற்றே சிந்தித்து உணர முற்பட்டிருந்தால் இவ்வளவு திடமாக எண்ணியிருக்க மாட்டார்கள்! துரியோதனாதியர் ஏற்படுத்திய விருந்துக்கு வீமன் வந்தான். உணவுகளில் நஞ்சு கலக்கப் பெற்றிருப்பதை அறியாமலே உண்டான். எதிர்பார்த்தபடி உணவு உண்டு. முடிந்த சிறிது நேரத்திலேயே மயங்கி வீழ்ந்தான். துரியோதனாதியர் தங்கள் ஏவலாட்களைக் கொண்டு மயங்கி விழுந்த வீமனின் உடலைக் கயிறுகளால் பிணித்து மீண்டும் கங்கையில் கொண்டு போய்த் தள்ளினர். பீமனுடைய உடல் கங்கையில் அமிழ்ந்து ஆழத்திற்குச் சென்றது. கங்கையில் வசித்து வந்த பாம்புகள் அவனுடைய உடலைக் கடித்தன. ஏற்கனவே நஞ்சு கலந்த உணவை உண்டிருந்ததனால் பாம்புகளின் நஞ்சு அவனை ஒன்றும் துன்புறுத்த வில்லை. அதனுடன் மட்டுமின்றி வீமனுடலில் முன்பே ஏறியிருந்த நஞ்சையும் முறிவு செய்து போக்கி விட்டன இந்தப் பாம்புகள்.

பின்பு ‘வாசுகி’ என்னும் பெயர் பெற்ற பாம்புகளின் தலைவனுக்கு வீமன் அறிமுகமானான். வீமன் வாயு புத்திரன் என்பதை அறிந்து கொண்ட வாசுகி அவனைப் பெரிதும் பாராட்டிப் போற்றினான். வாசுகியின் உதவியால் வீமனுக்கு அமுதம் கிடைத்தது. அமுதம் அருந்திய சிறப்பால் வீமன் நஞ்சுண்ட வேதனையும் சோர்வும் நீங்கிப் புதிய அழகும் உடல் நலமும் பெற்றான். மேலும் சில நாட்கள் வாசுகியுடன் அங்கே தங்கியிருந்தான். வீமன் திரும்பி வராததைக் கண்டு அவன் இறந்து போய்விட்டான் என்றே நினைத்து செருக்குற்று மகிழ்ந்தனர் துரியோதனாதியர். பாண்டவர்களும் குந்தி தேவியும் வீமனைக் காணாமல் கலங்கிப் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர். பாட்டனாராகிய வீட்டுமர் ஒருவர் மட்டுமே “நடந்தது யாது?” என்பதை அனுமானித்து உணர்ந்து கொண்டு பாண்டவர்களுக்கும் குந்திக்கும் ஆறுதல் கூறி “வீமனைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்! அவன் எப்படியும் நலமாக மீண்டும் திரும்பி வந்து விடுவான்” என்றார். எட்டு நாட்கள் சென்ற பின் வாசுகியின் உதவியால் கங்கைக் கரையை அடைந்து நகருக்குள் நுழைந்தான் வீமன். ஏதோ வேற்றூர் ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பு கிறவனைப் போலக் காணப்பட்டானே தவிர, வேறு சோர்வு ஏதும் அவனிடம் தெரியவில்லை . பாண்டவர்களும் குந்தியும் அன்போடு வரவேற்றனர். ‘வீமன் இறந்து போய் விட்டானோ?’ என்று எண்ணி மனம் துன்புற்றிருந்த நகரமக்களும் அவனைக் கண்டு துன்பம் நீங்கினர். சகோதரர்களாக இருந்தும் துரியோதனாதியர் பாண்டவர்களோடு முரணி, அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சிகளே செய்து வந்தனர். பாண்டவர்களில் வீமனின் வலிமை தங்களுக்கு அச்சத்தை விளைவிப்பதாக இருந்ததனால் அவனையே முதலில் அழிக்கக் கருதினர். ஆனால் விதியோ. இந்த வஞ்சகர்களின் கருத்துக்கு நேர் எதிராக இருந்தது.

‘நன்மையும் தீமையும், சத்தியமும் அசத்தியமும், தர்மமும் அதர்மமும் போராடுகின்ற நெருக்கடியான சந்தர்ப்பங்கள் உலக வாழ்வில் அடிக்கடி வருகின்றன. சத்தியம் தோற்று விடுவோ?’ - என்ற பயம் இம்மாதிரி நேரங்களில் காண்போர்க்கு ஏற்படத்தான் ஏற்படுகிறது! ஆனால் நன்மை, சத்தியம், தர்மம் முதலிய இவைகள் யாவும் பொறுத்து ஆற அமரவே வெற்றி பெறுகின்றன. வேகமாகச் செல்லும் தண்ணீர் வேகமாகவே வடிந்து விடுவது போல் தீமையும், அசத்தியமும், அதர்மமும் வேகமாக வளர்வது போலவே  வேகமாக அழிந்து விடுகின்றன. அதற்கு மாறாகச் சூழ்ச்சி செய்யும் மனிதர்கள், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஆகிய யாவும் விரைவாக முன்னேறி வெற்றியை நெருங்குவது போலத் தோன்றுவது இயற்கைதான். ஆனால் முடிவில் அழிவும் தோல்வியும் இவர்களுக்கே ஏற்படப் போவது உறுதி. உலக வாழ்வின் மிக நுணுக்கமாக உண்மை இது. இந்த உண்மையை முடிவில் விளக்குவது தான் காவியப் பயன்.