மகாபாரதம்-அறத்தின் குரல்/10. துரோணர் முடிவு

விக்கிமூலம் இலிருந்து

10. துரோணர் முடிவு

துரோணருக்கும் குந்தி போஜராஜனுக்கும் போர் நிகழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில் களத்தின் மற்றொரு பகுதியில் சல்லியனுக்கும் நகுவனுக்கும், மாளவராசனுக்கும் வீமனுக்கும் சாத்தகிக்கும் கர்ணனுக்கும், சகுனிக்கும் பாண்டியனுக்கும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு போரிலும் வெற்றியும், தோல்வியும் யார், யார், பக்கம் ஏற்படும் என்று கண்டுபிடிக்க இயலாமல் கடுமை எதிர்ப்பு இருபுறமும் நிறைந்திருந்தது. இருபுறத்துப் படைகளிலும் பொறுக்கியெடுத்து நிறுத்தி வைத்தாற்போல் வீரர்களே நிறைந்திருந்தனர். ஆயுதங்களைப் பிரயோகம் செய்வதில் வல்லவர்களாகிய இருசாராரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் யுத்தம் செய்து கொண்டிருந்தனர். கடந்த பதினான்கு நாட்களாக இல்லாத கோபம் அன்று துரோணருக்கு ஏற்பட்டிருந்தது. அவர் முகத்தில் அவ்வளவு ஆத்திரத்தின் நிழல் படிந்ததை அதற்கு முன்பு யாரும் கண்டதே இல்லை. என் எதிரிகளின் வாழ்வை நான் முடிக்க வேண்டும், அல்லது என் வாழ்வை நான் முடிக்க வேண்டும் அல்லது என் வாழ்வை என் எதிரிகள் முடிக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு போருக்கு வந்ததைப் போல இருந்தது அவருடைய தோற்றம். பிரம்ம தேஜஸும் ஒழுக்கமும், கருணையும், தவழும் அந்த முகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் கூடத் திடுக்கிட்டனர். திடீரென்று போர்க் களத்தில் துரோணருடைய தேருக்கு முன்னால் மரீசி முனிவர், அகத்திய முனிவர் முதலிய பெருந்தவச் செல்வர்கள் தோன்றினர். எதிர்பாராத நிலையில், எதிர்பாராத விதத்தில் அவர்கள் வரவு கண்ட துரோணர் ஸ்தம்பித்துப் போய்விட்டார். உடனே வில்லை மடக்கி வைத்துக் கொண்டு போரை நிறுத்திவிட்டு அவர்களை வணங்கி வரவேற்றார்.

“துரோணா! உனக்கு ஓர் உண்மையை அறிவுறுத்தி விட்டுச் செல்வதற்காக நாங்கள் வந்திருக்கின்றோம். நீ ஓர் அந்தணன் சாந்த குணத்தினால் சத்தியச் செயல்களைச் செய்து உண்மையின் வழியில் வெற்றியைப் பெற வேண்டியது உன் குல தருமம். தத்துவத்தையும் யோக ஞானங்களையும் மறந்து இப்படி மறப்போரில் இறங்குவது உன் போன்றவர்களுக்கு அழகு இல்லை . நாசக் கருவிகளான இந்த ஆயுதங்களையும், இந்தப் போரையும் விட்டுவிட்டுச் சத்திய சிந்தனையில் இறங்க வேண்டும் நீ . இதை உனக்கு நினைவூட்டிவிட்டுப் போவதற்காகவே நாங்கள் வந்தோம்” என்று கூறித் துரோணரை வாழ்த்திவிட்டுச் சென்றனர். துரோணருடைய மனம் அந்த முனிவர்களின் வார்த்தையால் மாறிவிட்டது. தான் வழி விலக இருந்தபோது தன்னை வலுவில் தடுத்தாட்கொண்டதற்காக அந்த முனிவர்களுக்கு நன்றி செலுத்திவிட்டு ஆயுதங்களைக் கீழே வைத்தார் துரோணர். இதே சமயத்தில் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்ணபிரான் ஒரு தந்திரம் செய்தார். ‘துரோணர் மோட்ச பதவி அடைய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அதை அவர் தவறாமல் அடைவதற்கு ஏற்பாடு செய்வோம்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். துட்டத்துய்ம்மனை அருகில் அழைத்தான்.

“நேற்றிரவு உன் தகப்பனாரைக் கொன்ற துரோணரை நீ பழிவாங்குவதற்கு இதுவே சரியான நேரம் போ போய்த் துரோணரோடு போர் செய்” என்று அவனை அனுப்பினான். துட்டத்துய்ம்மன் கண்ணன் ஏவலின் படி துரோணரோடு போருக்குச் சென்றான். துரோணரை மரணமடையச் செய்வதற்குத் தந்திரமான ஏற்பாடு ஒன்றைத் தீர்மானித்துக் கொள்வதற்காகக் கண்ணன் தருமர் இருந்த இடத்துக்குச் சென்றான்.

“தருமா! இப்போது நான் கூறப்போகிற தந்திரம் உன் மனத்துக்குப் பிடித்ததனாலும் பிடிக்காத்தானாலும் நீ அதை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். மாளவ தேசத்தரசனும் வீமனும் சண்டை செய்து கொண்டிருக்கும் போது வீமன் மாளவனுடைய யானையைக் கொன்று விட்டான். அதிர்ஷ்ட வசமாக அந்த யானையின் பெயரும் ‘அசுவத்தாமன்’ என்பதுதான். துரோணருடைய புதல்வன் பெயரும் மாளவமன்னனுடைய பட்டத்து யானையின் பெயரும் ஒன்றாக இருப்பதனால் நமக்கு ஒரு செளகரியம் இருக்கிறது. “வீமன் அசுவத்தாமாவைக் கொன்று விட்டான்” என்று நீயே இரைந்த குரலில் கூறிவிடும். அதைக் கேட்ட துரோணர் தன் மகனாகிய அசுவத்தாமன் இறந்து விட்டதாக எண்ணி மகனை இழந்த துயரத்தால் வருந்திப் பேசாமல் மலைத்து நின்றுவிடுவார். அவர் மலைத்து நிற்கும் அந்த சமயத்தில் துட்டத்துய்ம்மன் அம்பு எய்து உயிரைப் பறித்து விடுவான். யோசிக்க நேரமில்லை. உடனே நான் கூறியபடி செய். இது பொய்யும் ஆகாது. ஓரளவு உண்மை பேசுவது போலத்தான் ஆகிறது!” - கண்ணன் கூறிய சூழ்ச்சியைக் கேட்டு மனம் மயங்கிய தருமன் முதலில் அதற்கு இணக்க மறுத்தான்.

“தருமா! தயங்காதே. முதல் நாள் போரில் துரோணரே தன்னை வெல்லுவதற்குரிய தந்திரமாக இதனைத் தானே கூறியிருக்கிறார்? தவிர நீ செய்கிற காரியத்தால் துரோணருக்கு வஞ்சகம் செய்வதாக நீ நினைக்காதே. துரோணருடைய சீடனாகிய நீ அவர் மரணத்தின் மூலமாக மோட்சத்தை அடைவதற்குக் கூடவா உதவி செய்யக்கூடாது?” - கண்ணன் மீண்டும் தருமனை நோக்கிக் கூறினான்;

“பரமாத்மாவின் அம்சமாகிய நீயே இப்படிக் கூறலாமா? பொய் சொல்லிப் பெற்ற வெற்றியினால் தானா நான் இந்த உலகத்தை ஆளவேண்டும்? குருவிடம் வஞ்சகம் செய்து பெறும் வெற்றி எனக்கு வேண்டாம். கல்வி, செல்வம், பாசம், உறவு, அன்பு யாவற்றையும் அழித்தொழிக்கக் கூடிய பொய்யை நான் சொல்ல மாட்டேன்” தருமர் இவ்வாறு கூறவும், கண்ணன் மேலும் சில நியாயங்களைக் கூறி அவன் மனத்தைத் தெளிவடையச் செய்ய முயன்றான்.

“தருமா! நன்மையைத் தருமானால் பொய்யைத் கூறுவதும் மெய் கூறுவது போலவே ஆகும். நன்மைக்காகப் பொய் சொல்லலாம் என்பதை நம்முடைய அறநூல்களே விளக்குகின்றன. தீமையைக் கொடுக்கின்ற உண்மையைக் கூறினால் அது பொய்க்குச் சமம். நன்மையைக் கொடுக்கின்ற பொய்யைக் கூறினால் அது மெய்க்குச் சமம். சகல நியாயங்களையும் உணர்ந்து கொண்டு நீதியும், நியாயமும் நிலவுவதற்குக் காரணமும் காரியமுமாக விளங்குகிற நான் சொல்வதில் கூடவா உனக்கு நம்பிக்கை இல்லை? அன்றியும் தன்னைச் சூழ்ச்சியால் வென்று கொள்ளலாம் என்று அனுமானித்து அதற்குரிய வழியையும் துரோணரே உனக்குக் கூறியிருக்கிறாரே! துருபத மன்னன் சொன்ன சொல் தவறி அவமானப் படுத்தியதற்காக அவனைப் பழி வாங்க வேண்டும் என்று தானே துரோணர் இல்லற வாழ்வையே மேற்கொண்டார்? அவருடைய வாழ்வின் இலட்சியமான அந்தப் பழி வாங்குதல் தான் இனிது நிறை வேறிவிட்டதே! இனிமேல் துரோணருக்குக் கிட்ட வேண்டிய இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அந்த இலட்சியம் தான் அவர் பரமபதம் அடைய வேண்டியதாகும். உன் வாயால் நான் கூறிய இந்தப் பொய் போன்ற மெய்யை ஒரே ஒரு முறை கூறினால் துரோணருடைய பரமபத இலட்சியமும் அவனுக்கு இப்போதே கிடைத்துவிடும். ஆகவே மறுக்காமல் தயங்காமல் இப்போதே நான் கூறியபடி செய்.” கண்ணன் இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்பே துரோணர் காதில் விழுமாறு அதைச் சொல்ல இணங்கினான் தருமன்.

“அசுவத்தாமன் என்னும் ஆண்மையிற் சிறந்த யானையை வீமன் என்னும் பலம் பொருந்திய சிங்கம் கொன்றுவிட்டது!” என்று துரோணருடைய செவிகளில் தெளிவாகக் கேட்குமாறு தருமன் உரத்த குரலில் கூறினான். இச்சொற்களைச் செவியுற்ற துரோணர் தன் மகன் அசுவத்தாமனைத்தான் வீமன் கொன்றுவிட்டானென்று எண்ணிக் கொண்டார். உடனே நெஞ்சங் கலங்கி வலது கையிலிருந்த வில்லையும் தோளிலிருந்த அம்பாறாத் தூணியையும் கீழே எறிந்து விட்டான். அதே சமயத்தில் அவனைப் பழி வாங்குவதற்கென்றே வில்லும் கையுமாக நின்று கொண்டிருந்த துட்டத்துய்ம்மன் துரோணர் மார்பில் அம்புகளைச் செலுத்தி விட்டான். துரோணர் தேர்த் தட்டிலேயே ‘ஆ’ என்று அலறியவாறு விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் அவருடைய உயிரும் உடலிலிருந்து பிரிந்தது. கண்ணபிரானின் சூழ்ச்சி பூரணமாகச் சிறிதளவு மாறுதலுமின்றி நிறைவேறிவிட்டது. கண் இமைத்துத் திறக்கும் நேரத்திற்குள் துரோணரின் மரணச் செய்தி போர்க்களம் எங்கும் பரவி விட்டது. களத்தின் வேறோர் பகுதியில் போர் செய்து கொண்டிருந்த அசுவத்தாமனுக்கும் தந்தை இறந்த செய்தி எட்டி விட்டது. அவன் ஓடோடி வந்தான். இறந்து கிடந்த தந்தையின் உடலைக் கண்டு மனம் வெதும்பி அழுதான். தந்தையின் பாதங்களைக் கைகளால் பற்றிக் கொண்டே அழுதான்.

“அப்பா! உலகையெல்லாம் கட்டி ஆண்டு உயர்வும் புகழும் பெறவேண்டும், என்று ஆசீர்வதித்துவிட்டு உங்களிடம் வீட்டுமர் இந்தப் படைத் தலைமையை ஒப்புவித்து விட்டுச் சென்றார். நீங்களோ யாரிடமும் ஒப்புவிக்காமலே உறக்கம் எய்திவிட்டீர்கள்” என்று கண்ணீருக்கு நடுவே உருக்கமான குரலில் கதறினான். பின்பு தந்தை எப்படி இறக்க நேர்ந்தது? என்ற விவரங்களை அங்கே தனக்கருகில் இருந்தவர்களைக் கேட்டு அறிந்து கொண்டான். கண்ணனின் சூழ்ச்சியும் துட்டத்துய்ம்மனின் பழிவாங்கும் எண்ணமும் யாவற்றுக்கும் காரணம் என்று அறிந்த போது அசுவத்தாமன் ஆத்திரத்தோடு குமுறி எழுந்து விட்டான். “கண்ணபிரானின் சூழ்ச்சியால் தருமர் நான் இறந்து விட்டதாகப் பொய் சொன்னார். அந்தப் பொய்யைச் செவியுற்றதும் உண்மையாகவே நான் இறந்து விட்டதாக நம்பிய என் தந்தை திகைத்து நின்றிருக்கிறார். அவர் அப்படித் திகைத்து நிற்கும்போது துட்டத்துய்ம்மன் அம்பு எய்து கொன்றிருக்கிறான். இது நியாயமில்லை, வஞ்சகம்! அக்கிரமம், நேருக்கு நேர் என் தகப்பனாரோடு வாட்போரோ, விற்போரோ, செய்திருந்தால் உங்களால் அவரை வென்றிருக்க முடியுமா? துட்டத்துய்ம்மன் என் தந்தையிடமே விற்கலை கற்றான். அந்தத் துரோகியோ, இப்போது சிறிதளவும் நன்றியுணர்வின்றி என் தந்தையையே வஞ்சகமாகக் கொன்று விட்டான். ஆனாலும் துட்டத்துய்ம்மன் மட்டும் இதற்கு முழுப்பொறுப்பாளி இல்லை. எல்லா வஞ்சகத்துக்கும் காரணமானவர்கள் பாண்டவர்களே. நான் அவர்களைச் சும்மா விடப் போவதில்லை. இதோ என்னிடமிருக்கும் இந்த நாராயணாஸ்திரத்தை எய்து அவர்களை சர்வ நாசம் செய்து விடுகிறேன்” என்று கூறிக்கொண்டே விழிகள் சிவக்கப் புருவம் வளைய நாராயணாஸ்திரத்தை கையிலெடுத்து விட்டான் அசுவத்தாமன். நாராயணாஸ்திரத்தை எடுத்தவுடன் கண்ணனுக்குப் பகீரென்றது. அந்த அஸ்திரத்தை அவன் பாண்டவர்கள் மேல் எய்துவிட்டால் பாண்டவர்கள் பூண்டோடு அழிந்துவிடுவார்கள் என்பதில் ஐயமே இல்லை. கையில் ஆயுதங்களின்றி முனிவர்களைப் போல அமைதியாக நிற்பவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் கொல்லும் சக்தி வாய்ந்தது அந்த அஸ்திரம், பாண்டவர்களைக் காப்பற்ற வேண்டுமானால் அவர்கள் எல்லோரையும் வெறுங்கையர்களாய் ஆயுதமின்றி நிற்கச் செய்ய வேண்டுமென்று நினைத்தான் கண்ணன். உடனே பாண்டவர்களை அழைத்து யோகியர்களைப் போலச் சாந்தமாக வெறுங்கையுடன் நிற்குமாறு கூறினான் வீமன் ஒருவனை மட்டும் ஆயுதத்தோடு இருக்கச் செய்தான். வீமனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆயுதங்களின்றி அமைதியாக நின்றனர். அசுவத்தாமன் கோபம் பொங்க வில்லை வளைத்து அதில் நாராயணாஸ்திரத்தைப் பொருத்தித் தொடுத்தான். அந்த அஸ்திரம் ஆயுதமில்லாமல் வெறுங்கையோடு நின்றவர்களையெல்லாம் விட்டு விட்டு வீமன் மேல் பாய்ந்தது. நாராயணாஸ்திரம் வில்லிலிருந்து கிளம்பும்போது ஒன்றாகத் தோன்றினாலும் வீமனை நெருங்கும் போது நூற்றுக் கணக்கான அஸ்திரங்களாகப் பெருகி அவனை மிரளச் செய்தது. ஒரு கணம் சற்றே மிரண்டாலும் அடுத்த விநாடியே தன்னைச் சமாளித்துக் கொண்டான் வீமன். தன் கையிலிருந்த வில்லினால் பல அம்புகளைத் தொடுத்து நாராயணாஸ்திரத்தையும் அதில் தோன்றிய கிளை அஸ்திரங்களையும் துண்டித்து எறிந்தான், தோல்வியினால் முடக்கப்பட்ட நாராயணாபதிரம் திரும்பி வந்து பயனற்ற பொருளாக அசுவத்தாமனையே அடைந்தது. தோல்வியடைந்த உள்ளம் எரிமலைபோல குமுறியது. நாராயணாஸ்திரத்தை விட வலிமையான பாசுபதாஸ்திரத்தைக் கையிலெடுத்தான் அசுவத்தாமன். அதை அவன் வில்லில் தொடுத்து எய்வதற்காக வளைத்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக வியாச முனிவர் அவன் முன்பு தோன்றினார்.

“அசுவத்தாமா! நிறுத்து.” முனிவரின் குரல் அவன் கைகளைக் கட்டிப்போட்டது.

“சுவாமி, வணங்குகிறேன்! தங்களுடைய எதிர்பாராத வரவின் பொருள் அடியேனுக்கு விளங்கவில்லையே?” அசுவத்தாமன் வியாச முனிவரை வணங்கிக் கூறினான்.

“அசுவத்தாமா? இன்றைக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோபம்? உன் தந்தை இறந்துவிட்டார் என்பதற்காகத் தானே? ஆத்திரத்தைத் தணித்துக்கொள். வில்லை மடக்கிவை. உன் தந்தை இறந்தார் என்றால் அதற்கு இவர்களுடைய சூழ்ச்சி மட்டும்தானா காரணம்? துருபத மன்னன் துட்டத்துய்ம்மனைப் பெறுவதற்காக யாகம் செய்த போதே உன் தந்தையின் மரணத்துக்கும் வரம் பெற்று விட்டான். துட்டத்துய்ம்மன் கையால்தான் உன் தந்தை இறக்க வேண்டுமென்று நியதி. இறப்பு மனிதனுக்கு இயற்கை விதிப்படி நேருவது. அதற்கு யாரும் எப்போதும் காரணமாக முடியாது. இதை நீ அறியாதவன் அல்லவே? இவர்களைப் பாசுபதாஸ்திரத்தை எய்து விட்டதனால் உன் தந்தைக்குத் திரும்ப உயிர் கிடைத்துவிடப் போகிறதா?” வியாசர் கூறிய சொற்களால் மனம் தெளிந்த அசுவத்தாமன் பாசுபதாஸ்திரத்தை உபயோகிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டான். இவ்வளவில் போர் நேரமும் முடிந்துவிட்டது. சூரியன் அஸ்தமித்து விட்டான். இருசாராரும் பாசறைக்குத் திரும்பி விட்டனர்.

துரோணர் தங்களுக்கு எதிரியானாலும் பாண்டவர்கள் உண்மையாகவே அவருடைய மரணத்துக்காக அனுதாபப் பட்டனர். ‘தங்களுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்த ஆசிரியன் மறைந்துவிட்டானே’ என்ற மெய்யான சோகம் அவர்கள் மனத்தில் நிரம்பியிருந்தது. வீட்டுமருக்குப் பின் தங்களுக்கு வாய்த்திருந்த படைத் தலைவர் போரில் மரணமடைந்துவிட்டாரே என்ற மனத் துயரத்தோடு கெளரவர்களும் போர்க்களத்தை விட்டுத் திரும்பிச் சென்றனர். நாளைப் போருக்கு என்ன செய்து யாரைத் தலைவராக்குவது என்ற கவலை துரியோதனனைப் பிடித்துக்கொண்டது. தன் தகப்பன் திருதராட்டிரனுக்குத் துரோணருடைய மரணச் செய்தியை அறிவிப்பதற்காகச் சஞ்சயனைத் தூதனுப்பினான். ‘கண்ணனும் தருமனும் சேர்ந்து சூழ்ச்சி செய்து பொய் கூறித் துரோணரை வஞ்சகத்தால் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தியைப் போய்த் தகப்பனாரிடம் கூறி விட்டு நாளைப் பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடு!’ என்று கூறிச்சஞ்சயனை அனுப்பினான். சஞ்சயனும் அதற்கு இணங்கி அத்தினாபுரத்திற்குப் புறப்பட்டான், சஞ்சயன் சென்றபின் மறுநாள் முதல் படைத் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முக்கியமானவர்களோடு கலந்தாலோசித்தான் துரியோதனன். எல்லோரும் ஏகமனதாகக் கர்ணனை நியமிக்க வேண்டுமென்றனர். துரியோதனனுடைய அந்தரங்கமும் கர்ணனை நியமிக்க வேண்டுமென்றே விரும்பியது. எல்லோரும் அதையே கூறவே கர்ணனைப் படைத் தலைவனாகப் பிரகடனம் செய்தான். கர்ணனும் உள்ள நிறைவோடு அதை ஏற்றுக் கொண்டான். மறுநாள் பொழுது புலர்ந்தது. பதினாறாம் நாள் போர் தொடங்குவதற்குரிய நேரமும் வந்தது. கௌரவர்கள் படையைக் கர்ணனும், பாண்டவர்கள் படையைத் துட்டத்துய்ம்மனும் போர்க்களத்தில் அணிவகுத்துத் தலைமை தாங்கிக் கொண்டு வந்து நிறுத்தினர். கர்ணனுடைய படை வீரர்கள் மகரமீனைப் போன்ற வியூகத்திலும், துட்டத்துய்ம்மனுடைய படை வீரர்கள் சக்கரவியூகத்திலும் நின்றனர். விரைவில் இருசாரார் படைகளும் கலந்து போரில் ஈடுபட்டன. அன்றைய போரில் அத்தனை நாளும் ஏற்படாத ஓர் ஆசை வீமனுக்கு ஏற்பட்டது. அதுதான் யானை மேலேறிப் போர் செய்ய வேண்டும் என்ற ஆசை. அதனால் அவன் ஒரு பெரிய யானை மேல் ஏறிக் கொண்டு போருக்குத் தயாராக இருந்தான். அப்போது காசிமன்னனான ‘கோமதூர்த்தி’ ஒரு யானைமேல் ஏறித்தயாராக இருந்த வீமனுடன் போருக்கு வந்தான். இவருடைய யானைகளும் கொம்போடு கொம்புகள் மோதிப் போர் செய்தன. யானை மேலிருந்தவர்களும் யானைகளுமாக மோதிக் கொண்டு போர் செய்த அந்த நிலை இருகுன்றுகள் முட்டி மோதிக் கொள்வது போல் காட்சியளித்தது.

{வியாச பருவம் முற்றும்)