உள்ளடக்கத்துக்குச் செல்

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/சோறளித்த சேரன்

விக்கிமூலம் இலிருந்து


8. சோறளித்த சேரன்



மிழ்நாட்டில் வடமொழியிலிருந்து வந்து வழங்கும் கதைகள் இரண்டு : ஒன்று. இராமாயணம்; மற்றொன்று, மகாபாரதம். இராமாயணமும் பாரதமும் தமிழில் முற்றும் மொழிபெயர்க்கப்பட்ட காலம் பிந்தியது என்றாலும், அக்கதை பற்றிய பல குறிப்புக்கள் சங்க காலத்திலும் அதற்கு முன்னும் தமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ள்ன என்பது இலக்கியங்களால் நன்கு தெரிகின்றது. இரண்டு கதைகளும் நடைபெற்றனவா அன்றிக் கற்பனையா என்பதை நாம் இங்கே எண்ணிப் பார்க்கவேண்டா. நூல்களைக் கொண்டு நோக்கின், அவற்றால் அக்காலத்திலேயே வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் தொடர்பு உண்டு என்பதைக் காணலே இன்றியமையாததாகும்.

சங்க இலக்கியங்களில் பல கடைச்சங்க காலத்தனவேயாயினும், ஒருசில இடைச்சங்க காலத்துப் பாடல்களெனவும், கடல் கோள்களுக்கு முற்பட்டன எனவும் கொள்ள இடமுண்டு. புறநானூறு போன்ற சங்க இலக்கியத் தொகுப்புக்களைப் பின்னால் தொகுத்தனர். அவர்கள் எந்த அடிப்படையில் தொகுத்தார்கள் என்பதை நம்மால் அறிய முடியவில்லை. தொகுத்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனவும், அவர் தாமே கடவுள் வாழ்த்து ஒன்று பாடி அதையே முதலாகக் கொண்டு நூலைத் தொகுத்தார் எனவும் அறிஞர் கூறுவர். அவ்வாறு அவர் பாடிய கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக உள்ள பாடல் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியதாகும். இப் பாட்டைப் பாரத காலத்துப் பாடல் என்பர் ஆய்வாளர். இதில் வருகின்ற ஒருசில அடிகள் பாரதக் கதையைக் குறிக்கின்றன என்பது அவர் கொள்கைக்கு அரண் செய்கின்றது.

"அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
கிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!"
                              - (புறம். 2: 13-16)

என்னும் அடிகளுக்கு உரைகண்ட ஆசிரியர், பாண்டவரும் நூற்றுவரும் செய்த குருசேத்திரப் போரில் சேரன் இரு படைக்கும் இறுதி வரையில் உணவளித்துக் காத்தான் என்று பொருள் கொள்ளுகின்றனர். இக்கருத்தே ஆராய்தற்குரியாக நாம் இங்கே கொண்டதாகும். பாரத காலத்தில் தமிழ்நாட்டு வேந்தன் அங்குச் சென்று உணவிட்டானா? என்பதே கேள்வி!

பாரதம் வரலாற்றுக்கு அத்துணை உதவி செய்யாது எனப் பலர் கூறினும். வரலாற்றறிஞர் சிலர் அதன் காலத்தை நன்கு துருவித்துருவி ஆராய்ந்திருக்கின்றனர். அவருள் ஒருவர் ஹேம் சந்திர ராய்சவுத்திரி[1] என்ற வரலாற்றுப் பேராசிரிராவர். அவர் தமது நூலில்[2] பாரதப் போர் நடைபெற்ற நாளைக் கணக்கிட்டிருக்கிறார். பரீட்சித்து மன்னனது ஆட்சிக் காலத்தை ஒட்டி அவர் ஆராய்ச்சி அமைகின்றது. கிறிஸ்து பிறப்பதற்கு முந்திய 14-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பரீட்சித்து இருந்தானென்பதும், அக்காலத்தை ஒட்டியே பாரதப்போர் நடைப்பெற்றிருக்க வேண்டுமென்பதும் அவர் தூல்வழி காணப் பெறுகின்றன.[3] எனவே, பாரதப் போர் சுமார் இன்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றிருக்கவேண்டும் எனக் கொள்ளல் பொருந்தும். அறிஞர் பலரும் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளுகின்றனர். நாமும் இதன்வழிக் காணின், பெருஞ்சோற்றுதியன் இன்றைக்கு மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவனாய் இருத்தல் வேண்டும் எனக் கருதலாம். ஸ்மித்து அவர்கள் அப் பாரதப் போரில் தென்னாட்டவர்களும் கலந்திருக்க வேண்டும் என எண்ணுகிறார்.[4]

பாரத காலத்தில் தமிழ்நாட்டுக்கும் வட நாட்டுக்கும் தொடர்பு உண்டா என்னும் ஐயம் ஒரு சிலர் மனத்தில் எழலாம். மற்றும் அக்காலத்திலேயே இவ்வளவு தெளிவாக நல்ல பாடல்களைப் பாடும் தமிழ்க் கவிஞர்களும் அவர்களைப் பாராட்டும் மன்னர்களும் இருந்தார்களா என்னும் ஐயம் சிலருக்கு எழுதல் உண்டு. தொல்காப்பியர் காலத்தை இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர் ஆய்வாளர். அவர் காலத்தில் அத்தகைய சிறந்த இலக்கண நூல் எழுதப்பெற வேண்டுமானால், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நல்ல இலக்கியங்கள் நாட்டில் உருப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஒருதலை. அவர் கூறும் பல சூத்திரங்களில் 'என்ப', 'என்மனார் புலவர்' எனக் கூறுகின்றமையின், அவருக்கு முன்பே இலக்கியப் புலவர் மட்டுமன்றி, இலக்கணப் புலவரும் இருந்திருப்பர் என்பது தேற்றம். எனவே, 3,500 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சிறந்த இலக்கியம் தமிழில் எழுதப்பெற்றது என்று கொள்வதில் இழுக்கு ஒன்றும் இல்லை. இக் காலத்தையே இடைச்சங்க காலமெனக் கூறினர் எனக் கொள்ளலாம்.

பாரத காலம் பெரும்பாலும் கி.மு. 1,400 என்று கூறுவர். ஆரியர் இந்தியாவுக்கு வந்த சிறிது காலத்துக்குப் பின் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கலாம் என்பதை ஆராய்ச்சி வல்லுனர் பலர் ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து பஞ்சாபுப் பகுதியில் வாழத் தொடங்கிய காலத்து, திராவிடர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தார்கள் என்றும், அவர்களுடைய அரசுகள் பல இடங்களில் நிலைத்திருந்தன என்றும், அவற்றுள் வடக்கில் மகதமும் காமரூபமும் சிறந்திருந்தன என்றும், தெற்கில் கலிங்க, சோழ, சேர, பாண்டி நாடுகள் சிறந்திருந்தன என்றும் திரு. R.D. பானர்ஜி அவர்கள் தம் ஆராய்ச்சியின் முடிவை நன்கு எடுத்துக் காட்டுகின்றார்[5]. இவர்தம் ஆராய்ச்சியின் வழியில் ஆராய்ந்தால் பாரத காலத்தில் இந்தியா முழுவதும் சிறந்திருந்தவர் திராவிடர் என்பதும், அவருள் சிறந்த மன்னராய் வைத்து எண்ணப்பட்ட சேரர் பரம்பரையில் ஒரு மன்னன் அப் பாரதப் போரில் நடுவுநிலையில் நின்று அவர்தம் இரு படைகளுக்கும் சோறு அளித்தான் என்று கொள்வதும் தவறு இல்லை எனவே எண்ணுகின்றேன்.

மற்றும் இந்த அடிகளில் பாரதப் போரில் இரு படைகட்கும் இறுதி வரைக்கும் வரையாது சோறு வழங்கினவன் இவன் எனக் குறிக்கப்பெறுகிறான். இதனால், நாம் மற்றொன்றும் காணமுடிகின்றது. வடநாட்டில் நடந்த ஒரு குடிப் போரில் தமிழர் யார் பக்கமும் சேரவில்லை என்பதும், அவர்தம் போரில் துன்பமுற்றார்க்கு உற்றுழி உதவினர் என்பதும் தெரியவரும். இன்றும் பெரும் போர்க்களங்களில் நாட்டு வேறுபாடு அற்றுச் செஞ்சிலுவைச் சங்கத்தார் (Red Cross Society) அடிபட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவுவதை அறிகிறோம். இதே நிலையில் அன்று மாறுபட்ட போர்க்களத்தே நடுவுநிலையாளராயிருந்து, இன்னார் இனியார் என்னாது, உற்றார் அற்றார் என்னாது உதவிய பெருமை தமிழ் மன்னரைச் சார்ந்ததாகும். அக்காலத்து வாழ்ந்த பாண்டியர் மரபில் அருச்சுனன் பெண் கொண்டான் என்றும் கூறுவர். எனினும், தமிழர் தமக்கு வேண்டியவர் வேண்டாதார் என்று வேறுபாடு காட்டாது, அனைவருக்கும் போர்க்களத்தில் உதவினர் எனக் கொள்ள வேண்டும்.

இனி, இக் கருத்துக்குச் சிலர் மாறுபட்டு இந்த அடிகளுக்குப் புது உரை கற்பிக்கின்றனர். அது பொருந்துமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். இதில் வரும் 'ஐவர்' என்னும் சொல் பாண்டவர்களைக் குறியாது. பாண்டியரைக் குறித்ததெனவும், பாண்டியருக்கும் பஞ்சபாண்டியர் என்ற பெயர் வழங்கி வந்ததெனவும் அறிஞர் கருதுகின்றனர். அந்த நிலையில் ஐந்து பாண்டியர் பரம்பரை பரம்பரையாய் நெடுங்காலம் பாண்டிநாட்டை ஆண்டவர் எனவும் குறிக்கின்றனர். ஒரே காலத்தில் வெவ்வேறு ஊர்களிலிருந்து ஐவர் பாண்டியர் ஆண்டனர் எனக் காட்டுகின்றனர். தலைமைப்பாண்டியன் மதுரையிலும், இளவரசன் கொற்கையிலும், பிறர் வெவ்வேறு இடங்களிலும் இருந்து ஆண்டனர் என்பர். இவற்றிற்கு ஆதாரங்கள் இல்லை. பின்னால், பதின்மூன்றாம் நூற்றாண்டில் மார்க்கோபோலோ, வாசபு போன்ற பிற நாட்டு யாத்திரிகர்கள் வந்த காலத்தில் நாட்டில் உண்டான குழப்பம் காரணமாக நாடு பலவகையில் துண்டாக்கப்பட்டுப் பாண்டி நாட்டை ஐவர் ஆண்டனர் என்பதை அவர்கள் காட்டும் குறிப்பின்வழிக் காண்கின்றோம் அவர்தம் வேறுபாடே, அவர்வழித் தமிழ்நாட்டில் மற்றவரை ஆணை செலுத்த வழி உண்டாக்கித் தந்தது. இந்தக் காலம் தவிர்த்துப் பாண்டிநாட்டில் ஐவர் பாண்டியர் சங்க காலத்தோ அதற்கு முன்னோ ஆண்டதாகக் குறிப்பு நாம் காணவில்லை. கொற்கையில் இளவரசன் ஆண்டான் என்பது உண்மை. அது சிலப்பதிகாரத்தாலும் தெரிகிறது. ஆனால், அவன் தனி அரசனாய் இல்லை. அரசன் தன் மக்கள் அரசியல் அறிவுபெற அவர்களை இளவரசராக்கி அமர்த்தும் வழக்கம் உண்டல்லவா? “வேல்ஸ் இளவரசர்” (Prince of Wales) இருந்ததை நாம் அறிவோம். பிற்காலச் சோழர் காலத்தில் தந்தை அரசாளும்போதே மகனை இளவரசனாக்கியிருப்பதைத் தொடர்ந்து காண்கின்றோம். இவ்வாறு ஒரே அரசாகப் பாண்டியர் இருந்தனரே அன்றி, ஐவர் பாண்டியராய் அந்தப் பழங்காலத்தில் இருந்ததற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. சேரன் செங்குட்டுவன் காலத்தில் சோழ நாட்டில் ஒன்பது மன்னர் இருந்ததாகக் காண்கின்றோம். சேரர் மாபெரிய இரு கிளையாய் இருந்ததை அறிகிறோம். எனினும், ‘மார்க்கோபோலோ’ காலம் தவிர்த்து வேறு எக்காலத்தும் பாண்டியர் ஐவராய் இருந்ததில்லை.

இனி ஐவரைப் பாண்டிராக்கி, ஈரைம்பதின்மரை நூறு சேனைத் தலைவர் எனவும் கொள்கின்றனர். மற்றும், ஈரைம்பதின்மர் ஈரொன்பதின்மராக இருக்கலாம் என எண்ணிப் பதினெட்டுச் சேனைத் தலைவர் எனவும் கொள்கின்றனர். இவ்வாறு கொண்டு ஐவர் பாண்டியருடனே சினம் கொண்டு, அவர்தம் பதினெட்டுச் சேனைத் தலைவரும் படும்படி பெருஞ்சோறு அளித்தவன் உதியன் எனக் காட்டுகின்றனர். இது பொருந்துமா? ஐவர் பாண்டியர் என்பது பொருந்தாது என்பதைக் கண்டோம். அவர்களுக்குப் பதினெண்மரோ அன்றி நூற்றுவரோ சேனைத் தலைவர் இருந்தார்களென்றோ, அவர்களை வென்ற படை என்றோ, பொருள் கொள்வது சிறவாதன்றோ? தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் மன்னரோடு நேர்நின்று அம் மன்னர்களை வெற்றி கொள்வதையும், அவர்தம் நாட்டை எரியூட்டுவதையுமே பெருமையாகப் புலவர்கள் பாடியிருக்கிறார்களே ஒழிய, அவர்தம் சேனைத் தலைவரை வென்ற பெருமையைப் பேசவில்லை. அப்படிப் பேசுவதும் அவர்தம் புகழுக்கு இழுக்கே யாகும். எனவே, சேனைத் தலைவரை வென்றவருக்குச் சோறு அளித்தான் என்பது பொருந்தாது. மற்றும் இதில் யாருக்கு அளித்தான் என்பது விளக்கமாகவில்லை. தனது சேனைக்கு அளித்தான் என்றே கொள்ளவேண்டும் போலும்! ஆம்! அதற்காகத்தான் தொல்காப்பியப் பெருஞ்சோற்று நிலையும், புறம் பொருள் வெண்பா மாலையும் மேற்கோளாகக் கொண்டு காட்டப்பெறுகின்றன. அவற்றையும் பொருந்துமா என ஆராயலாம்.

தொல்காப்பியத்திலும், புறப்பொருள் வெண்பா மாலையிலும் வரும் பெருஞ்சோற்றுநிலை, வஞ்சித்திணையில் இடம் பெற்றுள்ளது. சேனை போர்மேல் மண் குறித்துப் புறப்படுமுன் அதைச் சிறப்புப்படுத்தவும், அச்சேனை சிறக்கச் செயலாற்றவும் கருதி அதற்குச் சோறு இட்டுச் சிறப்பித்துப் போற்றிப்புகழ்ந்து வாழ்த்தி அனுப்புதல் மன்னர்தம் கடனும் முறையுமாகும். இதைத்தான் இரு நூல்களும் குறிக்கின்றன. அன்றித் தும்பைத் திணையில் பெருஞ்சோற்று நிலை இல்லை. நம் புறநானூற்று அடியிலோ பொலம்பூந்தும்பை என்றே குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, தும்பை சூடிப் போர் செய்வார் இடையில் வழங்கிய சோறுதான் இதில் குறிக்கப் பெறுவது. ஆக, பாண்டவரும் கெளரவரும் செய்த போருக்கு இடையில் யாதொரு வேறுபாடும் இன்றி இருவருக்கும் உணவு வழங்கினவன் உதயன் சேரலாகும். இருவருக்கும் சோறு வழகுவது பொருந்தாது என்பர் சிலர். அதுவே பொருந்துகின்றது என்பது நான் முன் விளக்கிய செஞ்சிலுவைச் சங்கத் தொண்டின் மேற்கோளால் நன்கு விளங்கும். போர்க்களத்தில் நடுவுநின்று இரு சாராரிலும் அற்றார்க்கும் அலந்தார்க்கும் உற்றுழி உதவுதல் மிகச் சிறந்த அறமல்லவோ!

மற்றும் தொல்காப்பியமும் வெண்பாமாலையும் அரசன் தன் சேனைக்குச் சோறு அளித்தலையே குறிக்கின்றன. ஆனால், அதை ஒரு மன்னன் பெருமையாகக் கருதிக் கொள்வதும், அந்தப் பெருமையை ஒரு புலவர் பாட்டாகப் பாராட்டுவதும் மரபு அல்ல. தனது சேனைக்கு உணவு அளித்தல் அரசன் கடன். இன்றும் நம் நாடு உட்பட உலகில் பாதுகாப்புப் படைக்குச் செலவு செய்வதுதானே நீதியாகக் காண்கின்றோம்? அதிலும் வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போருக்குப் புறப்படும்போது—அவன் வாழ அவர்கள் மடியப் புறப்படும் போது—எல்லா வகையான சிறப்புக்களையும் செய்து அவர்களை வழி அனுப்புவது மன்னன் கடமையாகும—தலை சிறந்த கடமையாகும். அந்தக் கடமையைத் தன் புகழாக ஒருவன் கருதுவானாயின், அவன் புலவரால் போற்றப் படுவானோ? அவ்வாறு அவனைப் போற்றும் புலவரும் புலவராவாரோ? அப்படிப் போற்றினாலும், அப்பாடல் கால வெள்ளத்தைக் கடந்து இத்துணை நாளும் வாழுமோ? எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் கைம்மாறு கருதாது. போர்க் காலத்து வாடுபவருக்கு உதவ வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு, பாரதப் போரில் நின்று, இரு திறப் படைகளுக்கும் இறுதி வரையில் சோறு அளித்துச் சிறந்தான் என்று சொல்வதில் தவறு ஒன்று மில்லையன்றோ! தன் சேனைக்குக் கொடுப்பதினும் மற்றவர் சேனைக்கு - மாறுபாடு இல்லாத வகையில் இருவருக்கும் - வரையாது கொடுத்தல் சிறந்த செயல் அன்றோ? அச்செயலே அவனை இன்றளவும், எத்தனையோ மக்கள் இறந்தும்—அவன் பின் வந்த பெருமன்னர் மறைந்தும்—வாழ வைக்கின்றது, அவன் வாழ்க!’ என்று நாமும் வாழ்த்துவோம்.

இனிப் பாண்டியருடன் போர் நேர்ந்ததற்குக் காட்டும் காரணம் எண்ணிப் பார்க்க வேண்டுவதாகும். இவன் முதலில் சோழனை வென்றானாம் அது கண்ட பாண்டியர் தம் நாட்டுக்கு நலிவு வரும் என அஞ்சி, ஒன்றுசேர்ந்து இவனை எதிர்த்தார்களாம். இது எப்படிப் பொருந்தும்? இவன் அரசியல் அறிவு பெற்றவனாயின், சிறுசிறு நிலப்பகுதி களை ஆண்ட பாண்டியரைத் தனித்தனி பொருது வெற்றி கொண்டபின் அல்லவா பெருஞ்சோழனை எதிர்க்கச் சென்றிருப்பான்? இந்த நூற்றாண்டில் ஹிட்லர் சிறுசிறு நாடுகளை வென்ற பிறகுதானே ரஷ்யா மீது திரும்பினான்? இதுதான் அரசியல் தந்திரமும் முறையும். இந்த உண்மை கூட அறியாத இவன் எப்படிப் பெருமன்னனாக முடியும்? மற்றும் இவன் சோழனை வென்றதற்கு அறிஞர் காட்டும் சான்று இப்பாடலில் வரும் அடிகளாகும்.

'நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
(2: 9-11)

என்பன அவை. இவற்றில் சூரியன் அவன் கடலிலே பிறந்து, அவன் கடலிலே மறைகின்றது என்கின்றார். உண்மைதான். இதற்குச் சோழநாட்டுக் கரைக்கு வர வேண்டுவதில்லையே! குமரி முனையில் நாள்தோறும் இக்காட்சியை இன்றும் நாம் காண்கிறோம் குமரி முனை சில காலம் பாண்டியரிடமும் சில காலம் சேரரிடமும் இருந்தது என்பதை வரலாறு காட்டுகின்றது. எனவே, இவன் காலத்தில் குமரிமுனை சேரர் ஆணையின்கீழ் இருந்திருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னரே, நம் கண் முன்னேயே அது சேர நாட்டோடு சேர்ந்து இருந்ததைக் கண்டோமல்லவா? எனவே, இதைக் கொண்டே இவன் சோழனை வென்றான் என்றும், அதனால் பாண்டியர் மாறுபட அவரை வென்ற படைக்குச் சோற்றளித்தான் என்றும் கூறுதல் எவ்வாறு பொருந்தும்? ஒரு கருத்தை முடிவு செய்துவிட்டு அதற்கேற்பப் பிற கருத்துக்களை மாற்றிக் கொண்டு போவது பொருந்துவதன்றே!

இவ்வாறு வேற்றுப் பொருள் கொள்வதற்கு அவர்கள் ஓரிரு காரணங்களைக் கொள்ளலாம். ஒன்று 3,500 ஆண்டுகளுக்கு முன் இம்மன்னனும் புலவரும் இருந்திருக்க முடியாது என்பது. அவர்கள் கடைச்சங்க காலத்தவர்களே என்பர். அவர்கள் கடைச்சங்க காலத்தவர் என்பதற்குச் சான்று எங்கே உள்ளது? அப்படியே அப் பெயர் கொண்ட மன்னன் ஒருவேளை கடைச்சங்க காலத்தில் இருந்ததாக வைத்துக்கொண்டாலும், அப்பெயருடனே அவருக்கு முன் அக்குடும்பத்தில் வேறு ஒருவரும் இல்லை என்று சொல்ல முடியுமா? வரலாற்றில் இந்த முறை எங்கெங்கும் காணும் ஒன்றல்லவா? சேரமான்கள் பலர் சங்ககாலத்தில் வருகின்றனர். இவனுடைய சோறு இட்ட சிறப்பைக் கருதியே இவன் 'சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என வழங்கப்பெறுகின்றான். இவனுக்கு உரிய பாடல்களும் இல்லை. அதுபோன்று முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் இந்த ஒரே பாடலைத் தவிர வேறு பாடலும் பாடவில்லை; எனவே, இது காலத்தால் முந்திய பாடல் என்று கொள்வ தில் தவறு இல்லை. தொகுத்த புலவர் தமது கடவுள் வாழ்த்துக்குப் பின் காலத்தால் முந்தியதாகிய இப் பழம் பெரும் பாடலையே தேர்ந்தெடுத்திருப்பார் எனக் கொள்வது சிறந்ததன்றோ! இம்மன்னனை ஒத்த பேரும் புகழும் பெற்ற பழம்பெரு மன்னரைப் பற்றிய பாடல்களுட் சில அடுத்து வருவதும் எண்ணத்தக்கது

இந்த ஆசிரியர் பெயர் ‘முடிநாகராயர்’ என இராது என்றும், ‘முடிநாகரியர்’ என இருக்கும் என்றும் காட்டும் முறைபற்றி நாம் கவலை கொள்ளவேண்டா. எத்தனையோ பெயர்கள் காலப்போக்கில் சிதைவதும் கெடுவதும் உண்டு. இப்பெயர் அவற்றுள் ஒன்றா அல்லவா என்பது பற்றி இங்கே நாம் ஆராயத் தேவையில்லை. இரண்டும் பொருந்து வனவே! பலர் 'முடிநாகராயர்’ எனவே கொள்கின்றனர் என்ற முடிவோடு நாம் அமைவோம்.

இனி, இப்பாடல் பொருள் மாற்றம் காண்பதற்கு மற்றொரு காரணம் அக்காலத்தில் வடநாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் தொடர்பு இருந்திருக்குமா என்ற ஐயமாகலாம். ஆனால் வரலாற்று வழியும் இப்பாட்டின் வழியும் அது இயல்வதே என்று கொள்ளல் பொருந்தும். சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே எனவும், பல தமிழ்நாட்டு அமைப்பு முறைகளை இங்கே காண இயலும் எனவும் அறிஞர் அறுதியிடுகின்றனர். 5000 ஆண்டுகளுக்கு முன் அங்கெல்லாம் பரவியிருந்த திராவிடர், பின்வந்த ஆரியருக்கு மெள்ள மெள்ள இடங்கொடுத்துத் தெற்கு நோக்கி வந்தனர் என்பதையும் வரலாறு காட்டுகின்றது. தம் பண்பாடும் பிறவும் கெடாதபடி மெள்ள மெள்ளத் தெற்கே வந்தார்களாயினும், அவர்தம் தொடர்பு வடநாட்டுடன் அடியோடு அற்றுவிடவில்லை என்பது துணிபு. எனவே, பாரதப் போர்க் காலத்தில் தமிழ்நாட்டார் அங்குச் செல்லவில்லை என்றோ, அவர்களுக்கு உதவவில்லை என்றோ கூறமுடியுமா? இப் பாண்டியர் பரம்பரை பற்றிய குறிப்புக்கள் வடநாட்டு வியாச பாரதத்திலும் பிறவற்றிலும் இருந்தன என்பதன்றி, நெடுந்தொலைவில் இருந்த சாவக நாட்டுக் குறிப்பிலும், வீர சோழனது காக்கிநாடாக் கல்வெட்டிலுங்கூட உள்ளன என்பதைக் கல்வெட்டு ஆராய்ச்சிகள் நன்கு காட்டுகின்றன அல்லவா? [6] எனவே, மிகு பழங்காலந்தொட்டுப் பிற தொடர்புகள் இல்லையெனினும், அரசியல் கலாசாரத் தொடர்பு கொண்டு தெற்கும் வடக்கும் வாழ்ந்தன என்றும், அதன் வழியில் பாரத காலத்தில் உதியன் பெருஞ்சோறு அளித்துப் போர்க்களத்தில் உதவினான் என்றும் கொள்ளல் தகும். இவன் காலத்தில் வட இமயம் அறிந்த ஒன்று என்பதும், அதைக் கொண்டே அரசரை நெடுங் காலம் வாழ்க என்று வாழ்த்தும் வழக்கம் உண்டென்பதும், பொதியில் தெற்கிலும் இமயம் வடக்கிலும் சிறந்திருந்தன என்பதும், இவற்றின் இடையில் தமிழர் தம் பண்பாடு கெடாத வகையில் மக்கட்பணி புரிந்துவந்தனர் என்பதும் இப்பாடல் ஒன்றாலேயே நன்கு விளங்கும்.


'பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நா அல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி கிலியரோ அத்தை—அடுக்கத்துச்
சிறுதலை கவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கின துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே!
(17.24)

என்று வாழ்த்துகிறார் புலவர்; மன்னன் இமயத்தையும் பொதியிலினையும் ஒத்து வாழ வேண்டும் என்கின்றார். ஆம்! அவன் வாழ்கின்றான்; இன்னும் அவை வாழும் வரையில் வாழ்வான் என்பது உறுதி. உலகம் நிலை கெட்டு ஒழுகலாறு நிலைகெடினும் அவன் சுற்றத்தோடு நெடுந்தொலைவு புகழ்பெற்று விளங்க வேண்டுமென வாழ்த்து கின்றார் புலவர். அக்காலத்தில் இமயமும் பொதியிலும் தமிழருக்கு ஒன்றாகவே காட்சி தருகின்றன. இமயத்து அந்தணர் அருங்கடனும், அருகே மான் துஞ்சும் இயற்கையும் அவர் உள்ளத்தைப் பிணிக்கின்றன. ஆம்! அப்புலவர் அவனுடன் அங்கே சென்று உடனிருந்து ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் கண்டு, அவன் சோறிட்ட ஏற்றத்தையும் கண்டு பாராட்டியவராதல் வேண்டும் எனக் கொள்வது மிகவும் பொருந்துவதாகும்.

இனி, இமயம் பற்றி எண்ணும்போது, மற்றொன்றும் தோன்றுகிறது; சேரர்களுக்கு இமயவரம்பன்', 'வான வரம்பன்' என்னும் பெயர்கள் இருப்பதைப் பற்றியும் அறிஞர் ஐயம் கொள்ளுகின்றனர்; 'இமயத்தை எல்லையாக உடையவன்', 'வானத்தை எல்லையாக உடையவன்' எனப் பொருள் கொள்ளுதல் தவறு என்கின்றனர். இது எப்படி பொருந்தும்? அவ்வாறு அரசாண்ட மன்னரே இல்லை என்கின்றனர். 'குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதன்' என்ற இளங்கோவடிகளின் உரை பொருளுரை அன்றோ! கயலெழுதிய இமய நெற்றியில் அயல் எழுதிய புலியும் வில்லும்’ என்ற அடிகள் வெறுங் கற்பனைதானா? தமிழ் வேந்தர் இமயம் வரை சென்றதையும், வடவேந்தர் பொதிகை வரை வந்ததையும், இந்திய வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களே! இனி 'வானவரம்பன்’ என்பதற்கு வானத்தை எல்லையாக உடையவன்’ என்று பொருள் கொண்டாலும் தவறு என்ன? இப் பெயர் சேரனுக்கு உரியது. அவன் நாடு வானோங்கிய மலைகளைக் கொண்டது. வான முகட்டைத் தொடுவன என அஞ்சக் கூடியவை அவை. அவற்றின் உயர்ச்சியாலே அவ்வாறு வழங்கலாம். மற்றும் நான் முன்காட்டியபடி குமரிமுனையில் இருந்து நோக்கின், கடல் வானொடு கவிந்து வானமுகட்டைத் தழுவிய காட்சியில் அவனை வானவரம்பன் என வாயாரப் பாடுவதும் தவறு இல்லையே! தரை ஆதிக்கமும் அதைச் சூழ்ந்த கடலாதிக்கமும் அவனிடம் இருந்தனவல்லவா? எனவே, இரண்டும் அச்சேர மன்னனுக்கு ஏற்ற பெயர்களே என்று கொள்ளுவதில் தவறு ஒன்றும் இல்லை. எனவே, ‘வானவரம்பன்’ என்ற பெயர் சேரர்களுக்கு நன்கு பொருந்துவதேயாம். அவர்தம் வானோங்கிய மலை எல்லையும், வற்றாத கடல் எல்லையும் அவர்களுக்கு என்றென்றும் அப்பெயரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் என்பது உறுதி.

இவ்வாறு எண்ணிப் பார்ப்பின், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே—எண்ண எல்லைக்கு அப்பாற்பட்ட நாளிலிருந்தே—இமயம் வரையில் தமிழர்தம் வாழ்வும் வளமும் பண்பாடும் பிறவும் சிறந்து ஓங்கியிருந்தன என்பது நன்கு தெளிவுறும். மற்றும், இங்கே நான் காட்டியவைதாம் முடிந்த முடிபுகள் என்றோ, இவற்றினும் வேறு முடிபுகள் இல்லை என்றோ நான் எல்லை கோலவில்லை. அறிஞர்கள் இத்துறையில் இன்னும் நன்கு ஆராய்ந்து இதுபோன்ற பாடல்களுக்கு மாறுபாடற்ற சிறந்த உரை நலங்களைக் கண்டு உணர்த்துவதோடு, அவற்றால் தமிழர்தம் பண்பாட்டு நெறியும் புகழும் சிறக்க வழி காணவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

  1. Hamchandra Raychaudhri, M.A. Ph. D.
  2. Political History of Ancient India (Published) by Calcutta university.
  3. Political History of Ancient India 20.
  4. Oxford History of India, p. 6.
  5. Pre-Historic, Ancient and Hindu India, by R. D. Banerji p. 30.
  6. (a) S.I.I. Vol. I, p. 59
    (b) Hulzack, Political History of Ancient India, p. 11.