வெற்றி முழக்கம்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
முன்னுரை


வெற்றி முழக்கம் ஓர் அழகிய பெருங்காப்பியத்தின் உரைநடைக் கதை. ஒரு நாவலைப்போன்ற சுவையான அமைப்பும், கதை நிகழ்ச்சிகளின் திருப்பமும், இந் நெடுங்கதை எந்த மூலத்திலிருந்து உரைநடை யாக்கப்பட்டதோ அந்த மூலக்காப்பியத்திலேயே செம்மையாக அமைந்துள்ளன. நான் செய்ததெல்லாம் அவற்றை நல்ல உரைநடையில் கதையாக்கிய வேலை ஒன்று மட்டும்தான்.

பாஸ கவியின் சொப்பன வாசவதத்தா, கொங்குவேளின் பெருங்கதை ஆகிய காவியங்கள் இந்தச் சுவையான கதையைக் கவிதையில் கூறுகின்றன. இவற்றில் தமிழிலுள்ள பெருங்கதை பிற்பகுதியில் சரியாக விளக்கம் பெறாததால் டாக்டர் உ.வே.சா. ஐயரவர்கள் எழுதியுள்ள உதயணன் சரிதச் சுருக்கத்திலிருந்து குறிப்பிட்ட பகுதிக்கான கதையை, நடைமாறாமல் அப்படியே இங்கு எடுத்து அளிக்க நேர்ந்தது.

இந்தக் கதையை ‘உதயணன்-வாசவதத்தை கதை’ என்ற பெயரில் சொன்னால் எல்லோருக்கும் புரியும். இதில் வருகிற யூகி, உருமண்ணுவா போன்ற உதயணனின் அமைச்சர்கள் புரிந்த அரசியல் சூழ்ச்சிகள் வியப்பையும் திகைப்பையும் ஊட்டுகின்றன. யூகியின் செயல்களையும் திட்டங்களையும், இந்தக் காவியக்கதையில் படிக்கும்போது சாணக்கியனை நினைவு கூர்கிறோம். வாசவதத்தை, பதுமாபதி, மதனமஞ்சிகை முதலான சிறந்த கதைத் தலைவியர்களை இந்தப் பெருங்கதையில் கண்டு மகிழ்கிறோம். கொங்குவேள் இயற்றிய காப்பியப் பெருங்கதையில் அழகும் ஆழமும் பொருந்திய நயமான உவமைகள் நிறைய வருகின்றன. அந்த உவகைகள் யாவும் உரைநடைக் கதையான இதிலும் உரிய பகுதிகளில் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிற்பகுதி விளக்கமான கதை அமைப்போடு இல்லாமைக்கு மூலக்காப்பியமே காரணம். சில ஆண்டுகளுக்கு முன்பு யான் இலங்கை வார இதழ் ஒன்றில் இக்காப்பியக் கதையை உரைநடையில் எழுதி வந்தேன். இப்போது உரிய மாறுதல்களுடன் அதுவே, ‘வெற்றி முழக்க’மாக வெளிவருகிறது.

இக்கதையின் தலைவன் உதயணனும் அவன் மகனாகிய நரவாணதத்தனும் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாள்களிலே போர்க்களங்களையும், எதிரிகளையும் வென்று வாகை சூடியதை மட்டும் வெற்றியாகக் கருதவில்லை. ஆனால், ஒரு காலத்தில் அந்த வெற்றிகள்தாம் ஓர் அரசனுடைய வாழ்க்கைக்குத் தேவையுள்ள மெய்யான வெற்றி என்று அவர்களும் எண்ணினார்கள்.

உலக வாழ்க்கையில் பற்றுகள் குறைந்து, மனத்தையும் ஆசைகளையும் வெற்றி கொள்ளுவதுதான் மெய்யான வெற்றி என்று அவர்கள் இந்தக் காப்பியத்தின் இறுதியில் உணர்வதாக வருகிறது. இந்த இரண்டு வகை நோக்கிலும் இந்நூலுக்கு, ‘வெற்றி முழக்கம்’ என்று பேர் வைத்தது பொருத்தமானதுதான். மூன்றாவதாக இந்தக் கதையில் வரும் அரசியல் வல்லுநனாகிய யூகி, எல்லாப் பிரச்சினைகளையும் மனத்தினாலேயே வென்று நிற்கிறான் என்பதும் ஒன்று.

மிகப் பழைய காப்பியக் கதை ஒன்றினை உரைநடையில் வழங்கினோம் என்ற பெருமை, அல்லது பணிக்காக உழைக்க வாய்ப்புக் கிடைத்ததுதான் இதை எழுதியதனால் எனக்கு உண்டான பயன்.

சுவை நிறைந்த இக் காப்பியக் கதையை வாசிக்கும் பயன் பெறுகிறவர்களுக்கு வணக்கமும் அன்பும் செலுத்தி விடைபெறுகிறேன்.

- நா. பார்த்தசாரதி

சென்னை.

20. 12. 1961