வெற்றி முழக்கம்/53. புதியதொரு சூழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து
53. புதியதொரு சூழ்ச்சி

ற்றர்கள் சமயமறிந்து தெரிந்து வந்து உரைத்த மேற்கூறிய செய்திகள் உதயணனுக்குப் பெரிதும் பயன்பட்டன. மதிநுட்பமுள்ள எந்த அரசனும், ஒற்றர்கள் தனக்கு மிகவும் வேண்டியவர்களே ஆனாலும் அவர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிடுதல் கூடாது. உதயணன் தன்னைத் தவிரப் பிறர் யாருக்கும் தெரியாதவாறு வேறு சில ஒற்றர்களையும் ஆருணியின் கோட்டைக்கு அனுப்பியிருந்தான். அந்த ஒற்றர்கள் செல்வது இந்த ஒற்றர்களுக்குத் தெரியாது. இந்த ஒற்றர்களைப் பற்றி அந்த ஒற்றர்களுக்குத் தெரியாது. தனியே அவர்களையும் அழைத்துக் கேட்டபின் இருவர் கூறியதும் ஒத்திருந்தது கண்டு, அதன் பின்பே இவை யாவும் உண்மைதான் என்று உதயணன் நம்பினான். கோசாம்பி நகரத்துக் கோட்டையில் ஆருணி புதிதாகச் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மற்ற விவரங்களையும் ஒற்றர்கள் சொல்லக் கேட்டபின், நள்ளிரவில் கோட்டைக்குள் நுழைந்து கலகம் விளைவிக்கும் திட்டம் ஒத்துவராது என்பது உதயணன் முதலிய மூவருக்கும் தெரிந்தது. உதயணன் ஆழ்ந்து சிந்தித்தான்; ‘வேறு எந்த வகையில் இந்த ஆருணியை வெல்லலாம்?’ என்று பல விதமான எண்ணங்களால் சூழ்ந்து எண்ணினான். முடிவில் அவனுக்கு ஒன்று தோன்றியது!

“இரவில் அரண்மனைக்குள் நம்மவர்களை அனுப்பி வெளியே படைகளுடனே வளைத்திருந்து வென்றுவிடலாம் என்று நாம் எண்ணியிருந்தது இனிமேற் பயன் பெறாது! ஆருணி, இப்போது இருக்கும் சூழ்நிலையில் அரண்மனை, கோட்டை முதலியவற்றில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிகிறது. நாம் படையோடு அவனை வளைக்கத் தொடங்கும் நேரத்தில், அவன் உதவி வேண்டித் திருமுகம் அனுப்பியிருக்கும் சங்க மன்னர்களில் யாராவது துணைக்கு வந்து அவன் பக்கம் சேர்ந்து கொண்டால், நமது நினைவு சித்தியடைவதற்கும் வழியே இல்லை. எனவே, இப்போது வேறோர் புதிய சூழ்ச்சியை நாம் மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்” என்று கூறிவிட்டு, எதிரே அமர்ந்திருந்த வருடகாரனையும் இடவகனையும் அவர்கள் கருத்தை முகக் குறிப்பால் அறியும் நோக்கத்தோடு பார்த்தான் உதயணன்.

வருடகாரனும் இடவகனும் சம்மதத்திற்கு அறிகுறியாகத் தலையசைத்தனர். உதயணன் வருடகாரனைக் குறிப்பாகத் தன் அருகில் நெருங்கி வருமாறு கூறினான். அவன் வந்ததும் தன் கருத்தை அவனிடம் விவரிக்கலானான். “வருடகார! இப்போது உன்னை அடிப்படையாகக் கொண்டே என் மனத்தில் இந்தப் புதிய சூழ்ச்சியை உருவாக்கியிருக்கிறேன். இந்தப் புதிய சூழ்ச்சியும் உன்னுடைய திறன்மிக்க செயலாற்றலைக் கொண்டுதான் வெற்றிபெற வேண்டும். இப்போதே இந்த நொடியிலிருந்து நீ என்னுடைய பகைவனாக மாறி நடித்தால், ஆருணியின் நட்பு எளிதில் உனக்குக் கிடைத்துவிடும். பகையாளி குடியை உறவாடித்தான் கெடுக்க வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்கள் கூட நீ உண்மையாகவே எனக்குப் பகைவனாக மாறிவிட்டாய் என்று நம்பிவிடுமாறு அவ்வளவு பொருத்தமாக இந்தச் சூழ்ச்சியை நீ ஏற்று நடிக்க வேண்டும்! ஆருணிக்கு வேண்டியவர்களை ஒருவர் விடாமல் நீ சந்தித்து என்னை வெறுத்துப் பேசி ‘ஆருணியோடு இப்போதே நான் சேர்ந்து கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்’ என்று கூறி, அவர்கள் ஆதரவை முதலில் பெற்றுக்கொள். ஆருணியோடு உனக்கு உறவு ஏற்படுத்திக் கொள்வதற்கு இதுவே தகுந்த வழி. அவர்களிடம் எப்போதும் என்னைப் பற்றி இகழ்ந்தே பேசிக்கொண்டிருக்க வேண்டும். ‘உதயணனுக்குத் தன் புகழைப் பேணும் விருப்பமே இல்லை. போர் செய்வதற்கு ஆசையோ, ஆற்றலோ அவனிடம் இப்போது கிடையாது. ஏதோ மகத மன்னனுடைய வார்த்தையைத் தட்ட முடியாமல் இங்கே படையெடுத்து வந்திருக்கிறான். உறுதியாக இப்போது அவன் சிறிதும் ஆற்றல் இல்லாதவனாகவே இருக்கிறான்’ என்று என்னைப் பற்றிப் பலவாறாகக் கூறி இகழ்ந்து பேசு. பின்பு அவர்கள் மூலம் ஆருணியை நண்பனாக அடைந்து, எனக்கு அஞ்சி அவன் புதிய புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதபடி என்னைப் பற்றி அவனிடம் எளிமையாகச் சொல். இவ்வாறு நீ சொல்வதனால் ஆருணி புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைப்பதோடு வேறு அரசர்களைத் துணைக்கு அழைத்தலையும் நிறுத்திவிட்டு, முன்பிருந்தே எனக்கு அஞ்சி வந்தததற்கு எண்ணி நாணி எப்போதும்போல இயல்பாக இருக்கத் தொடங்குவான். நான் இப்போது பலத்தில் குறைந்தவனாக இருக்கிறேன் என்று ஆருணியை நம்பும்படி செய். அதற்குமேல் என்ன செய்து அவனை எப்படி வெல்வது என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று உதயணன் கூறி முடித்தான். வருடகாரன் மனத்திற்கும் இந்த ஏற்பாடு சரி என்றே தோன்றியது. “தாங்கள் கூறியபடியே சூழ்ச்சி புரிகிறேன். எல்லாம் நம்முடைய வெற்றிக்கு ஏற்றபடி நடக்க என்னால் இயன்ற மட்டும் செயல் புரிய முற்படுகிறேன்” என்று கூறி விட்டுப் புறப்பட்டான் வருடகாரன், வருடகாரன் கோசாம்பி நகரத்துக் கோட்டைக்குள் செல்வதற்குமுன் தன்னைச் சேர்ந்த படை வீரர்களில் நம்பிக்கை வாய்ந்த சிலரை அழைத்து, “உதயணனுக்கு எந்தவிதமான அல்லலும் ஏற்படாமல், இரவோ பகலோ, எந்த நேரமும் காத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று கூறிவிட்டுச் சென்றான். தான் அருகில் இல்லாத நேரத்தில் ‘எவர் செய்யும் சூழ்ச்சிக்காவது உதயணன் ஆட்பட்டுவிடக் கூடாதே!’ என்று வருடகாரனுக்கு ஓர் அச்சம். கோட்டைக்குள் சென்ற வருடகாரன், முதல் தந்திரமாக ஆருணியின் சேனாபதி மகனைத் தன்னுடைய நெருக்கமான நண்பனாகச் செய்து கொண்டான். இளைஞனாகிய சேனாபதி மகன் மூலம், அவனுக்குப் பல இரகசியச் செய்திகள் தெரியலாயின. தான் உதயணனை வெறுத்து அவனோடு கடும்பகை கொண்டிருப்பதாக வருடகாரன் அங்கே கூறியிருந்ததனால், ஒருநாள் அவன் எதிர்பார்த்த விளைவு அவனைத் தேடிவந்தது. “எங்கள் அரசன் ஆருணியோடு நீ சேர்ந்து கொள்வதாக இருந்தால், உனக்கு எவ்வளவோ பயன்கள் எய்தும்! இருநூறு யானையும் ஐந்து தேரும், இன்னும் பல பெரிய சிறப்புக்களும் உனக்குக் கிடைக்குமாறு செய்வேன் நான்” என்று சேனாபதி மகன் வருடகாரனிடம் கூறினான். அவன் வேண்டுகோளுக்கு உடன்படுவது தன் காரியத்திற்கும் சாதகமாக அமையும்போலத் தோன்றியது வருடகாரனுக்கு. எனவே அவன் சேனாதிபதி மகனிடம் தான் அதற்குச் சம்மதிப்பதாகவும், தன் சம்மதத்தை அரசனிடம் சென்று கூறிவிடுமாறும் கேட்டுக்கொண்டான். உடனே சேனாபதி மகன் மகிழ்ச்சியோடு ஆருணியைக் காணச் சென்றான்.

வருடகாரன் தங்கள் பக்கம் சேரச் சம்மதிப்பதாக ஆருணியிடம் கூறிவிட்டு, அதனால் தங்களுக்கு என்னென்ன நன்மைகள் விளையும் என்பதைப் பற்றியும் விவரித்தான். ஆருணியின் கேடுகாலம் அவனுக்கு அருகில் நெருங்கி வந்து கொண்டிருந்ததோ என்னவோ, சேனாபதி மகன் கூறியவுடனே ஆருணி அதற்கு மகிழ்ச்சியுடனே சம்மதித்து விட்டான். உடனே ஆருணி, தன் அரசவையைச் சேர்ந்த சகுனி கெளசிகன் என்னும் பெயரையுடைய அமைச்சன் ஒருவனையும் வேறு மூவரையும் அழைத்து உதயணனோடு வருடகாரன் பகைத்துக் கொண்டு தங்கள் பக்கம் சேர இருப்பதைக் கூறி, அவனுடைய மனக் கருத்தை அறிந்து அவனை அழைத்து வருமாறு ஆணையிட்டான். அவர்கள் தங்கள் அரசனின் ஆணையை மேற்கொண்டு சேனாபதி மகனுடன் வருடகாரனைக் காண்பதற்குப் புறப்பட்டனர்.