வெற்றி முழக்கம்/52. ஒற்றர் உரைத்தவை

விக்கிமூலம் இலிருந்து

52. ஒற்றர் உரைத்தவை

ருடகாரன் முதலிய அமைச்சர்களை அழைத்துத் தம்பியர்களையும் உடன் வைத்துக்கொண்டு, சில முக்கியமான திட்டங்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு விட்டால் முன்னேற்பாடு நலமாக அமையும் என்று தோன்றியது உதயணனுக்கு. இந்த எண்ணம் தோன்றியவுடனே ஒரு காவலனை அழைத்து, வருடகாரனையும் இடவகனையும் கூப்பிட்டு வருமாறு அனுப்பினான் உதயணன். தன்னுடைய செல்வத் தம்பியர்களாகிய பிங்கல கடகர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றியபின், ஆருணியை வென்று அவனிடமிருந்து தங்கள் நாட்டை மீட்கும் வழியைச் சிந்திக்கத் தொடங்கினான் உதயணன. அந்தச் சிந்தனையில் கலந்து கொள்வதற்காக அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டு வருடகாரனும் இடவகனும் வந்திருந்தனர். மூவரும் கூடி, ஆருணியை வெல்லும் வழியை ஆலோசிக்கலாயினர். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் வருடகாரன் தன் மனத்தில் தோன்றிய வழியைக் கூறினான்.

உதயணனும் இடவகனும் அதைக் கூர்ந்து செவி மடுத்துக் கொண்டிருந்தனர். “அரசர் பெருந்தகையே! ஆருணியை வெல்ல முயலும் இந்த முயற்சியில் நாம் சாதாரண ஆற்றலை மட்டுமே செலவிடக் கருதினோமானால் அது போதாது. பயங்கரமான சூழ்நிலையை உண்டாக்குவதற்கு உரிய சில சூழ்ச்சிகளையும் சற்றும் தயங்காமல் செய்ய முற்பட வேண்டும். நம்முடைய ஒற்றர்கள் ஏற்கெனவே கோட்டைக்குள்ளும் அரண்மனையிலும் சென்று வந்து, நமக்கு எவ்வளவோ பயன்படத்தக்க விவரங்களைக் கூறியிருக்கின்றனர். கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரணின் நிலையும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த நல்ல வாய்ப்பைத் துணையாகக் கொண்டு நம்முடைய வீரர்களிற் சிலரைக் கோட்டைக்குள் அனுப்பி, ஆருணி அஞ்சி நடுங்கத் தக்க இரகசியக் கலகம் ஒன்றைச் செய்ய வேண்டும். பகல் நேரத்தில் இந்த ஏற்பாடு சாத்தியமாகாது. எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான நேரம் நடு இரவுதான். நடு இரவில் கோட்டை வாயிலின் எல்லாக் கதவுகளையும் அடைத்து விடுவார்கள். ஆகையால் கயிற்று ஏணிகளின் மூலமாகவே தந்திரமாக நம் வீரர்களைக் கோட்டைக்குள் அனுப்பவேண்டும். மதில்களின் பிரம்மாண்டமான சுவர்களைக் கடந்து கோட்டைக்குள் நுழைவதற்கு இதைத் தவிர வேறு வழிகளே இல்லை. இந்த வழியை மேற்கொண்டு உட்புகுந்த நம் வீரர்கள், எதிர்பாராத விதமாகப் பொங்கிக் கரையருகே உள்ள ஊர்களை அழிக்கும் கடலைப் போல அமைதியான துயிலில் ஆழ்ந்திருக்கும் அரண்மனையிற் கலகம் புரிந்து குழப்பத்தை விளைவிக்க வேண்டும்! அதே நேரத்தில் தாங்கள் கோட்டைக்கு வெளியே போருக்கு ஆயத்தமாக அணிவகுத்த படைகளோடு காத்திருப்பது அவசியம். உள்ளே புகுத்த வீரர்கள் இரவோடிரவாக அரண்மனையிலும், போர் வீரர்கள் வசிக்கும் படைச் சாலைகளிலும் எவ்வளவு அழிவு செய்ய முடிகிறதோ அவ்வளவு அழிவைத் தங்கள் கலகத்தின்மூலம் செய்வார்கள். இன்னும் ஒரு செய்தி! கோட்டைக்குள் இருக்கும் மக்கள் யாவரும் தங்கள் பழை மன்னனாகிய உங்கள்மேல்தான் அந்தரங்கமான பற்றும் விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். ஆருணி, வன்முறை ஆட்சியால் அவர்களை அடக்கி ஆண்டு வருகிறான். நம் வீரர்கள், ‘உதயணன் வாழ்க’ என்ற வாழ்த்தொலி மூலம் தங்கள் வரவைக் கோசாம்பி நகர மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் ஆதரவும் நமக்குக் கிடைக்கும். இவற்றையெல்லாம் திட்டம் பிறழாமல் நாம் செய்து முடித்தால், ஆருணிக்கு அதோ கதிதான். இருளில் பெரிய மழையிலே தனியாக அகப்பட்டுக் கொண்ட ஆண் குரங்கைப் போலத் திகைத்துத் திண்டாடுவான் அவன். நகர மக்கள் நமது வரவைத் தெரிந்துகொண்டு விட்டால் நம்மைப் பாராட்டி வாழ்த்தி வரவேற்பர். அவர்களாகவே ஒருபடை போலத் திரண்டு நம்மோடு வந்து சேர்ந்து கொள்ளுவார்கள். இந்தத் திட்டத்தை நீங்கள் ஒப்புக் கொண்டால், ஆருணியைத் தோல்வியுறச் செய்து சுலபமாக அவன் உயிரையும் வாங்கி விடலாம்” என்று இவ்வாறு தான் கருதிய வழியைக் கூறி முடித்தான் வருடகாரன்.

வருடகாரன் கூறிய இந்தத் திட்டம் இடவகனுக்கும் உதயணனுக்கும் பொருத்தமுடையதாகவே தோன்றியது. அவ்வாறே செய்ய உடன்பட்டு வருடகாரனைப் பாராட்டி நன்றி கூறினான் உதயணன். மேலே நடத்த வேண்டிய செயல்களை ஒரு பளிங்கு அறைக்குச் சென்று மிக இரகசியமாக நடத்தினர். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எல்லாத் திட்டங்களுக்கும் சூழ்ச்சிகளுக்குமே பொதுவான நியதி ஒன்றுண்டு. அதுதான் நினைப்பளவிலும் பேச்சளவிலும் கவர்ச்சியுடையதாக இருத்தல், செயலில் இறங்கும்போது தான் எண்ணமும் சொல்லும் எவ்வளவிற்கு எளிமையானவை என்று தோன்றும். பளிங்கு அறையிலே இரகசியத் தனிமையில் மூவரும் கூடிச் சிந்தித்தபோது சற்றே மலைப்புத் தென்பட்டது! சொல்லும்போது சாதுரியத்தோடு திட்டத்தைச் சொல்லி விவரித்த வருடகாரனுக்கே ‘தான் கூறியவைகள் செயலுக்கு வருவது இவ்வளவு கடினமா!’ என்ற வியப்பு உண்டானது. ஆயினும் திட்டத்தை எவ்வகையிலேனும் நடத்தியே தீருவது என்ற முடிவு மூன்று பேருக்கும் உறுதியாக இருந்தது. இந்த நிலையில் ஆருணியை ஒற்றறிதற்குக் கோட்டைக்குள்ளே மாறுவேடத்தோடு சென்றிருந்த சில ஒற்றர்கள் ‘அவசரமாக அரசனைக் காணவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே திரும்பி அங்கே வந்தனர். ஒரு சேவகன் இந்தச் செய்தியை உள்ளே வந்து உதயணனிடம் கூறினான். உதயணனுக்கு வியப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை உள்ளே வரச்சொல்லி உரைக்குமாறு சேவகனை அனுப்பி னான். சேவகன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஒற்றர்கள் உள்ளே நுழைந்து மூவரையும் வணங்கினர். வணங்கியபின் ஒற்றர்கள் செய்தியைக் கூற, மூவரும் ஆவலோடு அதைக் கேட்டனர். அந்த ஒற்றர்கள் படையெடுப்புக்கு வேண்டிய ஒற்றுச் செய்திகளையும் அறிந்து வந்திருந்தனர்.

கோட்டைக்குள்ளே சென்று ஒற்றறிந்து வந்த அந்த வீரர்களிற் சிலர், மகத நாட்டிலிருந்து உதயணனோடு வந்திருந்தவர்கள். சிலர் உதயணனைச் சேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் அறிந்து வந்து கூறிய செய்தியிலிருந்து தாங்கள் ஏற்கெனவே கருதி முடிந்திருந்த திட்டத்தைக் கைவிட வேண்டி நேர்கிறது என்பதை மூவரும் உணர்ந்தனர். இங்ஙனம் திட்டமே மாறிப் போகும்படியாக ஒற்றர்கள் கூறிய செய்திதான் என்ன? “ஆருணி, கோட்டை மதில்களையும் அரணிலுள்ள மற்ற உறுப்புக்களையும் பழுது நேர்ந்த இடங்களிற் செப்பனிட்டுள்ளான். இரவிலும் பகலிலும் கோட்டைப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை முன்னிருந்ததைக் காட்டிலும் மிகுதிப்படுத்தியிருக்கிறான். மதில்களின் விளிம்பிலமைந்த ஆளோடிகள் சிதைந்து போயிருந்த பகுதிகளில், அவற்றை மீண்டும் புதிதாகக் கட்டச் செய்திருக்கிறான். கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழியை அது முன்பிருந்ததைக் காட்டிலும் பயங்கரமான முறையில் மாற்றி அமைத்திருக்கிறான். கற்களைப் பதித்து ஆற்றுக்கும் அகழிக்கும் ஒரு சுரங்கக் கால்வாய் மூலமாக இணைப்புச் செய்திருப்பதனால், அகழியில் ஆள் இறங்க முடியாதபடி நீரின் ஆழம் மிகுந்திருக்கிறது. கோட்டையைச் சேர்ந்தவர்கள் அகழியில் தோணிகளை மிதக்க விட்டுக்கொண்டு ஓரத்து மதிற் சுவர்களில் ஏற முடியாதபடி பல இயந்திரப் பொறிகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடக்க முடியாத அகழியை எவ்வாறேனும் கடந்து சென்றுவிட்டால், மதிற் சுவர்களை நெருங்கவும் இயலாதவண்ணம் நுணுக்கமான விசைப் பொறிகள் பல பொருத்தப்பட்டு இருக்கின்றன. முற்றத்துறந்த முனிவர்களே வந்தாலும் சரி, அவர்களை நன்றாக ஆராய்ந்து தெளிந்து ஐயந்தீர்ந்த பின்புதான் கோட்டை வாயிலுக்குள் நுழைய விடுகின்றார்கள். நாட்டில் அங்கங்கே இருந்த படைத்தலைவர்கள் யாவரும் அரசன் ஏவலால், கோட்டைக்குள்ளே இருந்தவர்களில் தனக்குப் பயன்படாத சாதாரண மக்களை எல்லாம் வெளியே காடுகளின் புறத்தே சென்று வசிக்குமாறு துரத்திவிட்டான் ஆருணி, ‘எங்கள் பழைய மன்னன் உதயணன்தான் எங்களை ஆளவேண்டும்’ என்று எவரெவர் ஆர்வத்தோடு கலகம் செய்தார்களோ, அவர்களை யெல்லாம் சிறையில் அடைத்து விட்டனர். இன்னும் சில முக்கியமான செய்திகள்: ‘உதயணன் படையெடுத்து வருவான்’ என்பதை ஆருணி எவ்வகையிலோ முன்பே அறிந்து கொண்டிருக்கிறான். ‘உன் மகளை வலிய தூக்கிச்சென்று மணந்துகொண்ட உதயணனைப் பழிவாங்க ஒரு நல்ல வாய்ப்பு! அந்த உதயணன் என்னுடன் போருக்கு வருகிறான். நீயும் உன் படையோடு எனக்குத் துணையாக இங்கே கோசாம்பி நகரத்துக்கு வந்து சேர்க!” என்று பிரச்சோதன மன்னனுக்கும், ‘இராசகிரிய நகரத்தில் உங்களைச் சூழ்ச்சியால் வென்ற உதயணன் இங்கே என்மீது படையெடுத்து வருகின்றான். துணையாக நீங்களும் வந்து, என் பக்கம் சேர்ந்தால் அவனை இங்கே அழித்து விடலாம்’ என்று வேசாலி, எலிச்செவி முதலிய சங்க மன்னர்களுக்கும், அவசரமாகத் திருமுகங்கள் அனுப்பியிருக்கிறான் ஆருணி. அன்றியும் மகத மன்னன் தருசகன், நமக்குத் துணையாக இருக்கிறான் என்ற செய்தியையும் ஆருணி எவ்வாறோ அறிந்து கொண்டிருக்கின்றான். அதனால், ‘உதயணனுக்குத் துணை செய்வதை உடனே நிறுத்திவிட்டு என்னோடு சேர்ந்து கொண்டால் உனக்கு நீ வேண்டும் பொருளைக் கைம்மாறாக வழங்குகிறேன்’ என்று பொருளாசையைக் காட்டித் தருசக மன்னனுக்கும் ஆருணி ஒரு திருமுகம் அனுப்பியிருக்கிறான். திருமுகம் போதாதென்று மகத மன்னனோடு நன்கு பழக்கமுள்ள நண்பர் சிலரை மகத நாட்டுத் தலைநகருக்குத் தூது அனுப்பியிருப்பதாகவும் தெரிகின்றது” என்று ஒற்றர்கள் உதயணனிடம் வந்து தெரிவித்தனர்.