வெற்றி முழக்கம்/50. பதுமையின் பாக்கியம்
உதயணன் இசைச்சனை அழைத்துப் பேசிய அந்தக் குரலைக் கேட்டதும் அவன் எதிர்பார்த்தது போலவே யாப்பியாயினி உடனே ஆவலோடு அவன் பக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். உதயணன்மீது சில விநாடி நேரம் அவளது பார்வை நிலைத்தது.
‘இந்தக் குரல் இதற்கு முன்பே எங்கோ கேட்டுப் பழகிய குரலைப்போல் அல்லவா இருக்கிறது? ஆம்! இப்போது நினைவு வருகிறது! சந்தேகம் இல்லாமல் இது மாணகனுடைய குரலேதான்' என்று யாப்பியாயினி இவ்வாறு எண்ணமிடலானாள். தான் ஏற்கெனவே கண்டிருந்த மாணகனுடைய முகச்சாயலோடு இப்போது கண்ணெதிரே காணும் உதயணனை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள் அவள். உண்மை அவளுக்கும் புரிந்தது. ‘உதயணனும் மாணகனும் ஒருவரே’ என்பதை அவள் அறிந்துகொண்டாள். நெஞ்சங்கள் உறவுகொண்டு காதலிக்கும்போது அந்த உறவு இயற்கையாகவே எவ்வகையிலும் ஒத்த இரண்டிடங்களிலேயே ஏற்படுகிறது. ‘பதுமையை மாணகனாக மாறி இருந்து காதலித்தவன் உதயணனே’ என்று அறிந்துகொண்ட பின் இந்த ஒற்றுமை இயல்பை எண்ணிப் பார்த்தாள் யாப்பியாயினி. வியப்புக்குரிய இந்த உண்மையை விரைவாகப் பதுமைக்குக் கூறி அவளை மகிழ்விக்க வேண்டும் என்றும் ஆர்வமுற்றாள் அவள். ‘பதுமை! நீ காதலித்த அந்தண இளைஞன் மாணகன், உண்மையில் யார் என்று தெரியுமோ உனக்கு? அவன்தான் உதயணன். நீ கொடுத்து வைத்தவள்! எல்லா வகையிலும் சிறந்த பேரரசனாகிய உதயணனை உன் காதலனாகக் கொண்டுவந்து சேர்த்த விதியை அதற்காக வாழ்த்தத்தான் வேண்டும்’ என்று அப்போதே பதுமையைத் தனியே அழைத்துச் சென்று கூறவேண்டும் என்ற ஆசைத் துடிப்பை எய்தினாள் யாப்பியாயினி. அவள் அறிந்துகொண்ட உண்மை அத்தகையதாகவே இருந்தது.
ஆனால், ‘உதயணனே மாணகன், என்ற செய்தியைப் பதுமைக்குச் சொல்ல வேண்டும்’ என்று யாப்பியாயினி கொண்ட ஆர்வத்தை, ஏழு நாள்கள் அடக்கிக் கொள்ள வேண்டியதாகப் போயிற்று. திருமண நிகழ்ச்சிக்கு உரிய ஏழு நாள்களிலும் யாப்பியாயினி, பதுமையைச் சந்திக்கவே முடியவில்லை. எட்டாவது நாள் காலையில் பதுமையே யாப்பியாயினியைக் காணும் விருப்பத்தோடு அவளை அழைத்துக் கொண்டு வருமாறு சிவிகையையும் ஆட்களையும் அனுப்பிவிட்டாள். யாப்பியாயினியை அதுவரை முழுமையாக ஒரு நாள் கூடப் பிரிந்து தனிமையுறாத பதுமைக்கு அந்த ஏழு நாள் பிரிவு, ஏழாண்டுப் பிரிவுபோல இருந்தது. யாப்பியாயினி புதுமணக் கோலத்தின் அழகுப் பொலிவோடு, ஆர்வமும் முந்திடச் சிவிகை ஏறிப் பதுமையைக் காண்பதற்கு வந்தாள். சந்தித்த உடனேயே, தான் அறிந்துகொண்டிருந்த உண்மையைப் பதுமைக்கு மகிழ்ச்சியோடு கூறினாள் அவள். பதுமையும் அவளும் ஒருவரை யொருவர் தழுவிக் கொண்டனர். “பதுமை! காமன் கோட்டத்தில் மாணகன் என்னும் அந்தண இளைஞனாக மாறுவேடங்கொண்டு உன் உள்ளத்தைக் கவர்ந்த காதலன் வேறு யாறுமில்லை! உதயணனேதான். இனி நீ கவலையுறுவதைத் தவிர்க” என்றாள் யாப்பியாயினி.
அவள் கூறியதைக் கேட்டதும் பதுமையின் கண்கள் வியப்பால் மலர்ந்தன. அந்த மலர்ச்சி நிலைத்த நேரம் ஒரு நொடிதான். உதடுகளில் நாணப் புன்னகை ஒன்று தோன்றி நிலவியது. கன்னங்களில் செம்மை படர்ந்து பரவியது. பதுமை நாணமுற்று நின்றாள். ‘அவருக்கு ஆட்பட்ட நெஞ்சம் இனி நான் மீட்க முடியாத அளவில் உறவுகொண்டு விட்டது.’ என எண்ணினாள். ‘தங்கைக்கு மணம் புரிகிறேன் என்ற கடமையைக் காட்டித் தமையன், என்னை உதயணனுக்கு உரிமையாக்க ஏற்பாடு செய்கின்றானே’ என்று முன்பு கலங்கியிருந்த பதுமையின் உள்ளம் இப்போது, ‘அவரேதான் இவர்! இவரே தான் அவர் !அவரும் இவரும் ஒருவரே’ என்பதை அறிந்து நிறைவு கொண்டது. ஆனாலும் தனது மனக்களிப்பை யாப்பியாயினி அறிந்து கொள்ளும்படியாக வெளிப்படுத்த விரும்பவில்லை அவள். தான் கேள்வியுற்ற அந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே திருப்தி அடையலாம் என்று அவள் தயங்கினாள்.
“தோழி! உன் கணவனாகிய இசைச்சன்கூட அவருக்குத் தோழன்தான் என்று கேள்வியுற்றேன். நீ கூறும் இந்த நல்ல செய்தியை என் மனம் எவ்வளவு மகிழ்ச்சியோடு வரவேற்கிறது தெரியுமா? ஆனால், இதை எந்தச் சான்றுகொண்டு நான் உறுதியாய் நம்ப முடியும்? என் மனம் உறுதியாக இதை ஏற்றுக் கொள்வதற்கும் நீயே ஏதாவது உதவி செய்ய வேண்டும்” என்று பதுமை தணிந்த குரலில் யாப்பியாயினியிடம் வேண்டினாள். “இதை உறுதிப்படுத்திக் கொள்ள இன்னும் என்னென்ன சான்றுகள் வேண்டுமோ அவற்றை அறிய என்னால் ஆனமட்டும் முயலுவேன். பதுமை! நீ என்னைத் துணிந்து நம்பலாம்?” என்று கூறி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் யாப்பியாயினி. நேரே உதயணனைக் காணக்கருதி அவனிருப்பிடத்தை அடைந்தாள். இசைச்சனோடு தான் பேசிய குரலை யாப்பியாயினி கேட்டுத் திரும்பியதையும், அப்போது அவளது வியப்போடு கூடிய பார்வை தன்மேல் நிலைத்ததையும் கண்டிருந்த உதயணன், அவள் தன்னைப் புரிந்துகொண்டு விட்டாள் என அநுமானித்துக் கொண்டான். ‘என் கருத்து வெற்றி பெற்றுவிட்டது. யாப்பியாயினி எப்படியும் தன் சந்தேகத்தைப் பதுமையிடம் கூறாமல் இருக்கமாட்டாள்’ என்று எண்ணிக்கொண்டு மனம் அமைந்தான் அவன்.
உதயணன் தன்னளவில் அநுமானித்துக் கொண்ட வெற்றியை நிச்சயப்படுத்துவதுபோல யாப்பியாயினி தனிமையில் அவன் முன் தோன்றினாள். நடந்ததை எல்லாம் அவள் மூலம் அறிந்து கொண்டான் உதயணன். அவள் கூறியதிலிருந்து பதுமையின் சந்தேகத்தைப் போக்கித் தானே மாணகனாக இருந்ததை உறுதிப் படுத்த வேண்டியது அவசியம் என்பதையும் அவன் உணர்ந்தான். காமன் கோட்டத்தில் தனக்கும் அவளுக்கும் ஏற்பட்ட காதலில் தொடங்கி ஒன்று விடாமல் எல்லா நிகழ்ச்சிகளையும், அவளையும் சித்திரமாக வரைந்து, அதை யாப்பியாயினியிடம் அளித்தான். தானும் பதுமையும் மாத்திரமே அறிந்த பல மறைவுக் குறிப்புக்கள் அந்தச் சித்திரத்தில் இடம் பெறுமாறு செய்திருந்தான் அவன். அவற்றைக் கண்டபின்பாவது தான் வேறு. மாணகன் வேறு அல்ல, இருவரும் ஒருவரே என்பதைப் பதுமை புரிந்துகொள்ள முடியும் என்பதாக, அவன் நம்பினான். கடைசியில் வேறோர் முக்கிய அடையாளத்தையும் யாப்பியாயினியிடம் கூறினான்.
கன்னிமாடத்தில் ஒருநாள் இரவில் கோட்டான் பயங்கரமாக அலறியதையும், அதைக் கேட்டு அஞ்சிப் பதுமை தன்னைத் தழுவிக் கொண்டதையும், அதனால் ஊடல் தீர்ந்ததையும் - அவளால் எப்படியும் மறுக்க முடியாது என்றெண்ணி அந்த இரகசிய நிகழ்ச்சியையே யாப்பியாயினியிடம் இறுதியில் சொல்லி அனுப்பினான். தான் எழுதிக் கொடுத்திருக்கும் சித்திரக் குறிப்புகளையும் உருவத்தையும் கூட அவள் நம்ப மறுக்கலாம். ஆனால் இறுதியாகக் கூறி விட்டிருக்கும் இந்தச் சம்பவத்தை ஒப்புக்கொண்டு நம்பித் தான் ஆகவேண்டும் என்ற தீர்மானத்தோடு தனியாக யாப்பியாயினியிடம் அதையும் கூறியிருந்தான் உதயணன்.
உதயணன் அளித்த சான்றுகளோடு மீண்டும் யாப்பியாயினி பதுமையின் கன்னிமாடத்துக்குச் சென்றாள். உதயணன் கொடுத்து அனுப்பிய சித்திரங்களை யெல்லாம் கண்டு, ‘இவற்றை எழுதவல்லார் மாணகனை அன்றி வேறெவரும் இல்லை’ என்று பதுமை தனக்குள் எண்ணிக் கொண்டாள். அவன் எழுதிக் கொடுத்திருந்த தனது வடிவத்தைக் கண்டபோது, ‘தன்னோடு நெருங்கிப் பழகிய ஒருவரைத் தவிர வேறு யாரும் அதை அப்படி எழுதியிருக்க இயலாது. அந்த ஒருவர் மாணகனே! எனவே, மாணகனும் உதயணனும் ஒருவராக இருக்கலாம்’ என்று இவ்வாறு நினைவுகள் அவள் உள்ளத்தில் தோன்றினாலும், அதே நெஞ்சத்தின் ஒரு கோடியில் இனம்புரியாத கலக்கமும் ஐயமும் இருந்துகொண்டே அவளை வருத்தின. அந்த வருத்தம் தூண்டிடப் பதுமை மீண்டும் தயக்கத்துடனேயே யாப்பியாயினிக்கு மறுமொழி கூறினாள்.
இந்த மறுமொழியிலும் பதுமையின் பூரண நம்பிக்கைக்கு உரிய எந்த அம்சமும் பிரதிபலிக்கக் காணோம். “தோழீ! இவைகளை எல்லாம் மாணகன் ஒருவன்தான் எழுத முடியும் அதைப் பொறுத்தவரையில் எனக்கும் அவ நம்பிக்கையோ மனவேறுபாடோ சிறிதளவும் கிடையாது. இதோ இந்த உருவங்களையும் குறை சொல்வதற்கு இல்லை. என்னோடு நெருங்கிப் பழகிய காதலர் எழுதியவைதாம் என்பதை மறுக்க முடியாதபடி இவை அமைந்துள்ளன. ஆயினும் இவற்றை நன்றாக ஆராய்ந்த பின்பல்லாது, இவற்றை நம்பிவிடல் ஆகாது. ஆராயாமல் ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்மனம்” என்று பதுமை கூறினாள். பதுமையின் இந்த மறுமொழியைக் கேட்ட யாப்பியாயினி அதிர்ச்சி யுற்றாள்.
இவளுக்கு நம்பிக்கை யூட்டுவது அவ்வளவு எளிய காரியமில்லை என்று யாப்பியாயினி நினைத்துக் கொண்டாள். இறுதியாக உதயணன் கூறியனுப்பிய அந்த இரகசியச் செய்தியைக் கேட்ட பின்பாவது பதுமையின் நெஞ்சம் நெகிழ்கின்றதா பார்ப்போம் என்று கருதி அவளை நெருங்கிக்காதருகே அந்தச் செய்தியை மெல்லக் கூறினாள். பதுமையின் அவநம்பிக்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. யாப்பியாயினி கூறிய அந்தச் செய்தியால், அவள் மனத்திலிருந்த சிறிதளவு சந்தேகமும் நீங்கிப் போயிற்று. இறந்துபோன கணவனின் இன்னுயிரைக் கூற்றுவனிடமிருந்து மீண்டும் பெற்றபோது சாவித்திரிக்கு எத்தகைய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமோ அத்தகைய மகிழ்ச்சி பதுமைக்கு இப்போது ஏற்பட்டது. இது வெறும் காதல் மகிழ்ச்சி மட்டும் அல்ல. காதலனின் மாறு வேடத் திறமையை எண்ணிக்களிக்கிற களிப்பும் கலந்த மகிழ்ச்சியாகும்.
மகிழ்ச்சிப் பித்தேறிய பதுமைக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாப்பியாயினியோடு கை கோத்து ஆடினாள். உதயணன் எழுதிக் கொடுத்திருந்த சித்திரங்களை எடுத்து மார்புறத் தழுவிக் கொண்டாள். அந்தச் சித்திரங்களுள் ஒன்றில் உதயணன் பதுமை ஆகிய இருவர் உருவமும் வரையப் பெற்றிருந்தன. அதிலிருந்த உதயணன் வடிவத்தை நோக்கி, “என் நெஞ்சைக் கவர்ந்த காதலரே! நீங்கள் வஞ்சகத்தில் கைதேர்ந்தவராக இருப்பீர்கள் போலத் தெரிகிறதே! மாறுவேடத்தால்தான் இந்தப் பேதையின் நெஞ்சத்தைத் திருட முடியும் என்பது உம் கருத்தோ?” என்று அந்தச் சித்திரத்தோடு நேரில் உரையாடுவது போலப் பேசினாள். பதுமையின் இத்தகைய செயல்களால் அவளது மனப்பூர்வமான நம்பிக்கையையும் உடன்பாட்டையும் யாப்பியாயினி அறிந்து கொண்டாள். இவ்வாறே சில நாள்கள் கழிந்தன. இதற்குள் உதயணன், பதுமை திருமணத்திற்குத் தருசக மன்னன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.
அரண்மனைச் சேனைப்பெருங்கணியார், திருமணத்திற்கென நல்ல நாள் ஒன்றைக் குறிப்பிட்டுக் கூறியிருந்தார். வழக்கத்தின்படியே மகதவேந்தனின் தங்கைக்குத் திருமணம் நிகழ இருக்கும் அந்தச் செய்தி, நகர் எங்கும் வள்ளுவர்களால் அறிவிக்கப் பெற்றது. பிறநாட்டு மன்னர்களுக்கு மணத் தூதுவர்கள் போக்கப் பெற்றனர். இராசகிரிய நகரம் கோலாகலமான அலங்காரச் சிறப்புக்களை அடைந்து பொலிவு பெற்றது. அங்கங்கே நகரில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதை அறிவிக்கும் மங்கலக் கொடிகள் உயர்ந்து தோன்றின. குறித்த நாளில் எல்லா வகைச் சிறப்புக்களோடும் பதுமை-உதயணன் திருமணம் நிகழ்ந்தது. அவர்கள் இருவரும் உலகறிய மணம் புரிந்துகொண்ட காதலர்களாயினர். திருமணம் முடிந்தபின் பதுமைக்கும் உதயணனுக்கும் நாள்கள் களிப்பு மயமாகக் கழிந்தன. பதுமையும் உதயணனும் ஒருவருக்கொருவர் புதியவர்கள் அல்லர். அவர்கள் காதல் கொண்டதும் மனம் கலந்ததும் ஆகியவை கூட முன்னைய நிகழ்ச்சிகளே! ஆனால், உலகறியாதவை அவை. அவர்களது உள்ளங்கள் மாத்திரமே அறிந்தவை! ஆனால் இப்போது அவர்கள் மணமானவர்கள். திருமண உரிமையோடு நுகர்கின்ற வாழ்வு இது. இந்த இன்பமயமான பொழுதின் இடையே, துன்பமுற்றிருக்கும் நண்பனை அவன் மறக்க முடியவில்லை. அதையும் நினைத்து வேதனைப்பட்டான் உதயணன்.
போரில் எலிச்செவியரசனிடம் சிறைப்பட்ட உருமண்ணுவாவை எவ்வளவு விரைவில் அங்கிருந்து மீட்க முடியுமோ அவ்வளவு விரைவில் மீட்க வேண்டும் என்று நினைத்து அதற்கான திட்டங்களை இடையறாது எண்ணிக் கொண்டிருந்தான். இவ்வாறு இருக்கையில் தருசகனோடு உரையாடும் சந்தர்ப்பம் ஒன்று அவனுக்கு ஏற்பட்டது. அப்போது உருமண்ணுவாவை விடுவித்துக் கொண்டு வர வேண்டிய அவசியத்தைப் பற்றிக் குறிப்பாகத் தருசகனிடம் கூறினான் அவன். தருசகனும் அதை உணர்ந்துகொண்டு உருமண்ணுவாவை விடுவிக்கத் தன்னால் இயன்றவரை முயல்வதாக ஒப்புக் கொண்டான்.
உதயணனுடைய இந்த வேண்டுகோளைக் கேட்டபின், தருசகனுக்குத் தனிமையில் உதயணனைப் பற்றிச் சிந்திக்க அவகாசம் ஏற்பட்டது, உதயணன் எதிர்பாராத விதமாக வந்து தனக்கு உதவிசெய்து தன்னோடு பழகியதிலிருந்து பதுமைக்கும் அவனுக்கும் திருமணம் நடந்ததுவரை யாவற்றையும் ஒருமுறை ஆழ்ந்து எண்ணிப்பார்த்தான். அதன் விளைவாக உதயணனின் அப்போதுள்ள நிலை, இவன் நாடு பிறருடைய கையில் இருப்பது ஆகிய எல்லாம் தருசகனுக்கு நினைவு வந்தன. உதயணனுக்கு தன்னால் எந்த வகையில் எல்லாம் உதவி செய்ய முடியுமோ, அந்த வகையில் எல்லாம் உதவி செய்து அவனை உயர்வுறச் செய்ய வேண்டிய உறவு முறையும் கடமையும் இப்போது தனக்கு இருப்பதைத் தருசகன் உணர்ந்தான்.
‘பாஞ்சால ராசனாகிய ஆருணி, உதயணன் இல்லாத நேரத்தில் அவனுடைய சோர்வைப் பயன்படுத்திக்கொண்டு அவன் நாட்டைக் கைப்பற்றி ஆண்டு வருகிறான். அவனிடமிருந்து நாட்டை மீட்டு உதயணனுக்கு அளிக்க வேண்டும். நமக்கு உதயணன் செய்திருக்கும் கைம்மாறு கருதாத பேருதவிக்கும் நம் தங்கையை மறுக்காமல் மணம்புரிந்து கொண்டதற்கும் நாம் அவனுக்குப் பட்டிருக்கும் நன்றிக் கடன் மிகப் பெரியது’ என்று உதயணனுக்கு உதவும் ஆர்வமும் நன்றியும் தருசகன் உள்ளத்தில் பெருகி வளர்ந்தன. இத்தகைய தனிமைச் சிந்தனையின் முடிவாகத் தருசகன், உதயணன் நாட்டை அவன் திரும்பவும் பெறுவதற்கு உடனடியாக ஓர் ஏற்பாட்டைச் செய்ய முற்பட்டான். தன் அமைச்சர்களில் சிறந்தவர்களாகிய, வருடகாரன், தாரகாரி, தருமதத்தன், சத்தியகாமன் என்னும் நால்வரையும் அழைத்து உதயணனுக்குப் படை உதவி செய்வது பற்றி அவர்களிடம் கலந்தாலோசித்தான் தருசகன்.